PDA

View Full Version : முற்றல் வெண்டைக்காய்கள்

கீதம்
04-05-2010, 01:12 AM
"பரமு வந்தாச்சி"

யாரோ குரல் கொடுக்க, அமராவதி குடியிருப்பின் அத்தனைப் பெண்களும் கையில் ஒரு பிளாஸ்டிக் கூடையுடன் வெளியில் வந்து காய்கறி வண்டியைச் சூழ்ந்தனர். காய்கறி வாங்கும் சாக்கில் அன்றாடம் சிறு அரட்டை அரங்கம் நடந்தேறுவது ஒரு வாடிக்கையான செயல்.

"என்ன ராதா, உங்க வீட்டுக்காரர் மும்பையிலேர்ந்து என்ன வாங்கிட்டு வந்தார்?"

"என்ன, வழக்கம்போல வெறுங்கைதான்! அது சரி,மாமி, உங்க மருமகளுக்கு எப்ப சீமந்தம்?"

"இன்னும் தேதி முடிவாகலை. மாசம் இருக்கில்லே?"

"ரத்னா! கலையிலேயே உங்க வீட்டில கச்சேரி போலயிருக்கு. எங்க வீடு வரைக்கும் கேட்டுது?"

"என்ன பண்றது, மாமி? கொஞ்சம் லேட்டாயிடுச்சாம். அதுக்கு அப்படிக் கூப்பாடு போடறார். நானும் பதிலுக்கு கத்திட்டேன். கோபமா போயிருக்கார்."

"அப்போ சாயந்திரம் மல்லியப்பூவோடதான் வருவார்னு சொல்லு!"

எல்லோரும் சிரித்தனர்.

சரளா மற்றவர்களுக்கு இடம் விட்டு விலகி நின்றிருந்தாள்.

"சரளா, நீ காய் வாங்கலையா?"

"நீங்க எல்லாரும் எடுங்க, நான் அப்புறமா எடுத்துக்கறேன்"

"அதானே! உனக்கென்ன, புருஷனா? பிள்ளையா? எங்களை மாதிரி நேரத்துக்கு வகைவகையாய் சோறு குழம்பு ஆக்கிப்போட? அப்பா எதைப் போட்டாலும் சாப்பிடப்போறார். உனக்கென்ன அவசரம்? நீ பொறுமையாவே வாங்கு!"

வாய்ப்பேச்சு ஒருபுறமிருந்தாலும், கை கவனமாக காய்கறிகளைப் பொறுக்கிக்கொண்டு இருந்தது.

"ஏம்ப்பா, பரமு, வெண்டைக்காயெல்லாம் முத்தலா இருக்கு? நல்லதெல்லாம் எங்கேயாவது வித்திட்டு கடைசியில முத்தலும், சொத்தையுமா கொண்டுவந்து எங்க தலையில கட்டு!"

சரளாவுக்கு சுரீரென்றது. தானும் இந்த முற்றல் வெண்டைக்காய் போலத்தானே என்றொரு நினைவு வந்தது. கொள்வாரின்றிக் கொட்டிக்கிடக்கும் முற்றல் வெண்டைக்காய்களைக்கூட சற்று விலை குறைத்துக்கொடுத்தாலோ இலவசமாகக் கொடுத்தாலோ கொள்வதற்கு ஆளிருக்கிறது. தன் போன்ற முதிர்கன்னிகளின் நிலையோ......நேர் எதிர். வயது ஏற ஏற வரதட்சணையும் ஏறிக்கொண்டல்லவா போகிறது?

இவளுக்குக் கீழே பிறந்திருந்தாலும், அழகென்ற சிபாரிசால் தங்கைகள் இருவருக்கும் இவளுக்கு முன்னதாகவே இல்வாழ்க்கை என்னும் நல்வாழ்க்கை அமைந்து, தாய்மையை உடலிலும், மனதிலும் சுமக்க, இவள் மட்டும் இன்னமும் அந்தத்தாய்மையை மனதில் மட்டும் சுமந்தபடி காத்திருக்கிறாள்.

அண்ணன்கள் இருவர் இருந்தாலும் பெயருக்குதான். அவ்வப்போது வந்து தங்கையும் தந்தையும் உயிரோடு இருக்கின்றனரா என்று பார்த்துவிட்டுப்போவதுடன் கடமை முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஏதோ அவள் அப்பாவுக்கு ஓய்வூதியம் வருவதாலேயே அண்ணன்களிடம் கையேந்தும் நிலை அவருக்கு வரவில்லை. அவளுக்கும்தான்!

சரளா ஆச்சரியப்படும் விஷயம் ஒன்றுதான். அவள் அப்பா அடர்கருப்பு, பருமன், குள்ளம், போதாக்குறைக்கு எடுப்பான முன்பற்கள்! அம்மாவோ கோதுமை நிறம். களையான முகமும், உயரமும் அதற்கேற்றாற்போல் உடல்வாகும் கொண்டு ஒரு தேவதை போல் காட்சியளிப்பாள்.

கொள்ளை அழகான அம்மா எப்படி இப்படி சற்றும் பொருத்தமில்லாத அப்பாவைத் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தாள்? ஆமாம்! அந்தக்காலத்தில் யார் அவள் சம்மதத்தைக் கேட்டிருக்கப்போகிறார்கள்? மத்திய அரசுப்பணி ஒன்று போதாதா எல்லாக்குறைகளையும் மறைப்பதற்கு? இருந்தபோதும் அம்மா அவரோடு அந்நியோன்னிய வாழ்க்கை வாழ்ந்ததாகவே தெரிகிறது.

வரிசையாய் ஐந்து குழந்தைகள்! அண்ணன்களும் தங்கைகளும் அம்மாவின் சாயலில் அவதரித்திருக்க, இவள் மட்டும் அச்சு அசலாய் அப்படியே அப்பாவின் மறு அவதாரமெனப் பிறந்திருக்கிறாள்.

சிறுவயது முதலே அண்ணன் தங்கைகளின் உதாசீனம் தாழ்வுமனப்பான்மைக்குத் தூபமிட, ஒரு குறுகிய வட்டத்துக்குள் தன்னைத்தானே சிறைபடுத்திக்கொண்டாள்.மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான சரளா, பள்ளிப்படிப்பையும் முழுதாய் முடிக்க இயலாதவளானாள். மற்றக்குறைகளோடு படிப்பின்மையும் சேர்ந்துவிட, சரளாவின் வாழ்வில் திருமணம் என்பது கனவாகவே போனது. மற்றவர்களுக்கு எந்தத்தடையும் இன்றி திருமணம் முடிந்துவிட, இவள் விஷயத்தில் எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராயின.

சரளாவுக்குத் திருமணம் நடைபெறச் சாத்தியமே இல்லை என்று ஒருகட்டத்தில் உணர்ந்தபோது அம்மா மிகவும் உடைந்துபோனாள். மனவேதனையால் கொஞ்சங்கொஞ்சமாய் உருக்குலைந்த அவள் நோயோடு போராடித் தோற்றுப்போனள்.

அம்மா போனபிறகு அப்பா நடைப்பிணமாகிவிட்டார். நாளெல்லாம் தன்முன் வளையவரும் சரளாவைப் பார்த்துப் பார்த்து கலங்கினார். தான் ஏதோ குற்றம் புரிந்ததைப்போல் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கதறினார். சரளா அவரைத் தேற்ற இயலாமல் தவித்தாள்.

"காய் வேணாமா?"

பரமுவின் குரல் அவள் நினைவுகளைக் கலைத்தது.

அனைவரும் போய்விட்டிருந்தனர். சரளா தலைகுனிந்தவாறே,

"பரங்கிக்கீத்து ஒண்ணு குடுங்க!" என்றாள்.

"நான் சொன்னதை யோசித்துப் பாத்தியா?" அவன் கிசுகிசுத்தான்.

"ம்?" திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் என்ன சொல்வதென்று புரியாமல் மெளனித்தாள். ஒரு வாரமாய் இவள் சம்மதத்துக்காகக் காத்திருக்கிறான். தன்னையும் ஒருவன் துரத்தித் துரத்திக் காதலிப்பானா? அவளால் நம்பமுடியவில்லை. ஆனால்....இதோ.....எதிரிலேயே நிற்கிறானே!

"எங்க அப்பாகிட்டே வந்து பேசுங்க!"

"நீ முதலில் சொல்லு! அப்புறம் உங்கப்பாகிட்டே பேசுறேன்!"

"சரி!"

"சரின்னா என்ன அர்த்தம்?" அவன் புருவங்களை உயர்த்தினான்.

"சரின்னா……...நீங்க சொன்னது சரின்னு அர்த்தம்!" பெரும் பிரயத்தனத்துடன் சொல்லிமுடித்தாள்.

பரமு உதட்டு விளிம்புக்கு ஓடிவந்த புன்னகையை கஷ்டப்பட்டு உள்ளுக்குத் தள்ளினான்.

"ரொம்ப சந்தோஷம்! இன்னைக்கு சாயந்திரம் உங்கப்பாவை வேம்புலியம்மன் கோயிலுக்கு கூட்டிவா! நானும் எங்கப்பாவோடு வரேன்!"

"ம்"

அவன் ஆர்வம் பேச்சில் தெரிந்தது. பரங்கிக்கீற்றை கைகளைப் பிடித்துக் கொடுத்தான்.

சரளா புதுவித அனுபவங்கண்டாள். உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்ந்தாள். கண்கள் இருட்டுவதுபோல் இருந்தது. கால்கள் தள்ளாட வீட்டுக்குள் வந்தவளுக்கு எல்லாம் கனவோ என்று சந்தேகம் வர, இந்த சுகம் கனவிலாவது நீடிக்கட்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

முடிந்துபோய்விட்டது என்று நினைத்திருந்த தன் கதைக்கு புதியதொரு அத்தியாயமா? இது சாத்தியம்தானா? அவனை நம்பலாமா? நல்லெண்ணம் இல்லாவிடில் அவள் அப்பாவுடன் பேசமுனைவானா?

உழைத்து உரமேறியிருந்த அந்தக் கருத்த தேகத்துக்குள் இப்படியொரு கனிவான காதல் மனம் இருப்பது போனவாரம் வரை அவளுக்கும் தெரியாதுதான். அவனது வசீகரிக்கும் பார்வையும், பளீரென்ற புன்சிரிப்பும் அவளை நிலைகுலையச் செய்தது என்னவோ உண்மைதான் என்றாலும் அவளது வட்டம் அவளை வெளியேறவிடாமல் தடுத்தது. அவனோ, தன் கரங்களை நீட்டி அவளை அந்த வட்டத்தினின்று வெளியே வரச்சொல்லி அழைக்கிறான். கரம் பற்றலாமா? கூடாதா?

அப்பாவிடம் இது பற்றிப்பேசத் தயக்கமாயிருந்தது. இந்த வயதில் வெட்கம் பொருந்தாததுபோல் தோன்றியது. எத்தனை வயதானால் என்ன? பெண் பெண்தானே? ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு அப்பாவிடம் பரமுவைப் பற்றிப்பேசினாள்.

அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது, அமைதியாகக் கேட்டுக்கொண்டார். சரளாவுக்கு வியப்பாயிருந்தது. இந்த விஷயம் கேட்டால் அப்பா இன்ப அதிர்ச்சி அடைவார் என்ற எதிர்பார்ப்பில் அவர் முகத்தையே ஆராய்ந்தவளுக்கு, அதிர்ச்சியைத் தந்தது, அப்பாவின் கேள்வி.

"அவன் என்ன ஜாதியோ?"

ஏமாற்றத்தாலும் அவமானத்தாலும் அவளது கரிய முகம் மேலும் கறுக்க, அவள் அவரை ஒரு புழுவைப்போல் பார்த்தாள். அவரோ, எதையுமே கவனியாதவர்போல் இயல்பாய் இருக்க எண்ணி, செய்தித்தாளில் முகம் மறைத்துக்கொண்டார்.

அன்புரசிகன்
04-05-2010, 03:29 AM
இந்த கதையை படிக்கும் போது ஆரன் அண்ணாவின் ஒரு பகிர்வு ஞாபகம் வந்தது.

ஆரம்பத்தில் தாழ்வுமனப்பான்மை அவளை தாக்கியிருப்பதாக காட்டி இறுதியில் அவளுக்கு முதுகெலும்பும் இல்லை என்று காட்டுகிறது கதை.

இப்படிப்பட்ட பெண்ணை எந்த ஆண்மகனும் விரும்புவானா என தெரியவில்லை.

இயல்பாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். புதுமைப்பெண் சமூகத்தில் மட்டுமல்ல. வீட்டிலும் உருவாகவேண்டும்.

வாழ்த்துக்கள் கீதம்.

simariba
04-05-2010, 06:27 AM
நல்லாயிருக்கு கீதம்! தன்னம்பிக்கை இல்லாமல் துணிவும் இல்லாமல் இருக்கும் கதாநாயகிக்கு வாழ்க்கையும் ஏமாற்றத்தில்! எங்கு பிரச்சனை என்பதை அழகாக காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

குணமதி
04-05-2010, 07:40 AM
///"அவன் என்ன ஜாதியோ?"

ஏமாற்றத்தாலும் அவமானத்தாலும் அவளது கரிய முகம் மேலும் கறுக்க, அவள் அவரை ஒரு புழுவைப்போல் பார்த்தாள். அவரோ, எதையுமே கவனியாதவர்போல் இயல்பாய் இருக்க எண்ணி, செய்தித்தாளில் முகம் மறைத்துக்கொண்டார். ///

சரியான சவுக்கடி போலும் கருத்து வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் பேரெண்ணிக்கையிலான பல்வேறு எழுத்தாளர்களின் கதைகளைப் பபடித்திருக்கின்றேன். இப்போதெல்லாம், கதைகள் என்றாலே படிக்க மனமும் பொறுமையும் இருப்பதில்லை. கதை எழுதும் பொறுமையும் இருப்பதில்லை. பெரும்பாலும் கதைகள் பக்கமே போவதில்லை.

உங்கள் கதைகளில் சிலவற்றைப் பொறுமையோடு படித்திருக்கிறேன். வெற்றுக் கதைகளாக மட்டும் இல்லாமல், பல்வேறு சிறப்புகளுடன் எழுதுகிறீர்கள்.
மனமார்ந்த பாராட்டு.

கீதம்
04-05-2010, 07:53 AM
இந்த கதையை படிக்கும் போது ஆரன் அண்ணாவின் ஒரு பகிர்வு ஞாபகம் வந்தது.

ஆரம்பத்தில் தாழ்வுமனப்பான்மை அவளை தாக்கியிருப்பதாக காட்டி இறுதியில் அவளுக்கு முதுகெலும்பும் இல்லை என்று காட்டுகிறது கதை.

இப்படிப்பட்ட பெண்ணை எந்த ஆண்மகனும் விரும்புவானா என தெரியவில்லை.

இயல்பாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். புதுமைப்பெண் சமூகத்தில் மட்டுமல்ல. வீட்டிலும் உருவாகவேண்டும்.

வாழ்த்துக்கள் கீதம்.

தந்தையின் சுயரூபம் உணர்ந்துகொண்டாள். இனி அவரது சம்மதத்திற்காக காத்திருப்பாளா என்பது சந்தேகம்தான்.

வாழ்த்துக்கு நன்றி அன்புரசிகன் அவர்களே.

கீதம்
04-05-2010, 07:56 AM
நல்லாயிருக்கு கீதம்! தன்னம்பிக்கை இல்லாமல் துணிவும் இல்லாமல் இருக்கும் கதாநாயகிக்கு வாழ்க்கையும் ஏமாற்றத்தில்! எங்கு பிரச்சனை என்பதை அழகாக காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி அபி.

கீதம்
04-05-2010, 08:05 AM
///"அவன் என்ன ஜாதியோ?"

ஏமாற்றத்தாலும் அவமானத்தாலும் அவளது கரிய முகம் மேலும் கறுக்க, அவள் அவரை ஒரு புழுவைப்போல் பார்த்தாள். அவரோ, எதையுமே கவனியாதவர்போல் இயல்பாய் இருக்க எண்ணி, செய்தித்தாளில் முகம் மறைத்துக்கொண்டார். ///

சரியான சவுக்கடி போலும் கருத்து வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் பேரெண்ணிக்கையிலான பல்வேறு எழுத்தாளர்களின் கதைகளைப் பபடித்திருக்கின்றேன். இப்போதெல்லாம், கதைகள் என்றாலே படிக்க மனமும் பொறுமையும் இருப்பதில்லை. கதை எழுதும் பொறுமையும் இருப்பதில்லை. பெரும்பாலும் கதைகள் பக்கமே போவதில்லை.

உங்கள் கதைகளில் சிலவற்றைப் பொறுமையோடு படித்திருக்கிறேன். வெற்றுக் கதைகளாக மட்டும் இல்லாமல், பல்வேறு சிறப்புகளுடன் எழுதுகிறீர்கள்.
மனமார்ந்த பாராட்டு.

கதைகள் பக்கமே போகாத நீங்கள், என் கதைகளைப் பொறுமையுடன் படித்ததற்காக முதலில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இந்தக் கதையைச் சிலாகித்துப் பாராட்டியமைக்காக மற்றுமொரு நன்றி. உங்கள் பாராட்டும் ஊக்கமும் மேலும் என்னை எழுதவைக்கும்.

aren
04-05-2010, 08:35 AM
இந்த கதையை படிக்கும் போது ஆரன் அண்ணாவின் ஒரு பகிர்வு ஞாபகம் வந்தது.

நானே மறக்கலாம் என்று நினைத்தாலும் நீங்க அடிக்கடி இப்படி நினைவுப்படுத்திக்கிட்டேயிருக்கீங்க.

கீதம்
04-05-2010, 08:47 AM
இந்த கதையை படிக்கும் போது ஆரன் அண்ணாவின் ஒரு பகிர்வு ஞாபகம் வந்தது.

நானே மறக்கலாம் என்று நினைத்தாலும் நீங்க அடிக்கடி இப்படி நினைவுப்படுத்திக்கிட்டேயிருக்கீங்க.

அது என்ன பகிர்வு? சொன்னால் நாங்களும் படித்து ரசிப்போமில்லே....:)

மதி
04-05-2010, 08:47 AM
காலம் கழிந்தாலும் பரவாயில்லையென்று சாதீய பற்று இருக்கும் வரை முதிர்கன்னிகள் நிலை கஷ்டம் தான்.. கதை ஆரம்பமும் கதையோட்டமும் யதார்த்தமாய் இருந்தன.. பாராட்டுக்கள் கீதம்.

aren
04-05-2010, 09:03 AM
அது என்ன பகிர்வு? சொன்னால் நாங்களும் படித்து ரசிப்போமில்லே....:)

கீழேயுள்ள சுட்டியைச் சொடுக்கிப் பாருங்கள். வெண்டைக்காய் விஷயம் தெரியும்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14431

கலையரசி
04-05-2010, 02:35 PM
மக்ளுக்குக் கல்யாணம் ஆகாவிட்டாலும் பரவாயில்லை, ஜாதியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நினைக்கும் தந்தையின் ஜாதி வெறி கண்டு அவரை ஒரு புழு போலப் பார்க்கிறாள் சரளா. தம்மால் தான் மகளுக்கு ஒரு வாழ்வை அமைத்துத் தர முடியவில்லை, தானாக வரும் வாய்ப்பையாவது அவளுக்கு நல்கலாம் அல்லவா?

கதாசிரியர் முடிவைச் சொல்லாமல் விட்டு விட்டதால் தந்தையின் வார்த்தையை மீறி அவனைத் திருமணம் செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. எனவே அவளை முதுகெலும்பு இல்லாதவள் என்று நாம் நினைக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. காதல் திருமணம் பெருகி வரும் இந்நாளில் ஜாதி வெறி குறைய வாய்ப்பிருக்கிறது.

முக வசீகரம் இல்லாமையாலோ வரதட்சிணை கொடுக்க முடியாமையாலோ சரளாவைப் போல் திருமணம் ஆகாமல் முதிர் கன்னிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களை நினைக்கும் போது பாவமாகத் தான் இருக்கிறது.
மிகவும் யதார்த்தமான கதை. மீண்டும் நல்லதொரு கதையைக் கொடுத்த கீதத்திற்குப் பாராட்டு.

ஜனகன்
04-05-2010, 03:23 PM
வாழ்க்கை பாடங்களை கதையாக கொடுப்பதில் உங்களுக்கென ஒரு தனி இடம் உண்டு.
மிகவும் அருமையாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.
சரளாவின் முடிவை சொல்லாத படியால் , அவள்,அவனை திருமணம் செய்ய வாய்ப்புண்டு.அப்படி நடந்திருந்தால் சந்தோசம்.
வாழ்த்துக்கள் கீதம்.

சிவா.ஜி
04-05-2010, 03:27 PM
மீண்டும் ஒரு நல்ல கதை. சரளாவைப் பாவமென்றுதான் பார்க்கமுடிகிறது. எல்லா வழிகளும் அடைபட்டுப்போனால் என்னதான் செய்வாள்?

பரமுவின் பரந்த மனசைப் பாராட்ட தோன்றுகிறது. இப்படியும் சிலர் இருப்பதால் முற்றிய வெண்டைக்காய்களும் விலைபோய்விடுகின்றன.
சரளாவின் அப்பா....ஆரம்பத்தில் மகளைப் பற்றிக் கவலைப்பட்டவர்....இப்போது ஜாதியைக் காட்டுவதில் அவரது சுயநலம் தெரிகிறது. வயதானக் காலத்தில் சமைத்துப்போட ஒரு வேலைக்காரியாய் மகளை நினைக்கிறார் போலிருக்கிறது.

நிச்சயம் சரளா தந்தையை மீறி முடிவெடுப்பாளென்றே தோன்றுகிறது. மீறட்டும்....வாழட்டும்.
வாழ்த்துக்கள் கீதம் அவர்களே.

(ஆச்சர்யமாய் இருக்கிறது....இத்தனைக் கதைக்கான கருக்கள் உங்களுக்கு எப்படிக் கிடைக்கிறதென்று. சமூகத்தை நிறைய* கவனிப்பீர்களென நினைக்கிறேன். தொடர்ந்து எங்களுக்கு கதை விருந்து படத்து வாருங்கள்)

பா.ராஜேஷ்
04-05-2010, 07:22 PM
ரொம்ப அழகா தெளிவா எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்.

அமரன்
04-05-2010, 07:38 PM
லேடீஸ் ஃபிங்கர்..

வெண்டைக்காய்க்கு உள்நாட்டு ஆங்கிலம்.

தலைப்பைப் படித்ததும் கதையின் களத்தை அனுமானிக்கக் கூடியதாக இருந்தது.

கதையின் ஓட்டம் அனுமானத்தை உறுதிப்படுத்த இறுதி நேரத்தில் ஏமாற்றத்தைத் தந்தது அவன் என்ன சாதியோ என்ற கேள்வி.

அடியில் பருத்து நுனியில் சிறுத்த ஆணிக்கதை.

அப்பா மாதிரியானோரின் மயிரைப் பிடித்து புளிய மரத்தில் எத்தனை தடவை ஆணிகளை அடித்தாலும் சாதி முனிகள் அழிந்தபாடில்லை.

தொடர்ந்து அசத்துங்க கீதம்.

வெண்டைக்காய் என்றாலே ஒடித்துப் பார்க்கிறது மக்கள் வழக்கமாகிட்டுது.

govindh
04-05-2010, 11:08 PM
வெண்டைக்காயை ஒடிப்பதைப் போல் ஒரே ஒரு
கேள்வியால் சரளாவின் மனதை ஒடித்துப் போட்டு விட்டார்...
பரமுவிற்கும் வலித்திருக்கும்...அடுத்து என்ன நடந்திருக்கும்...? சுபம் தான்...!

சளைக்காமல்...அசத்தும் கீதம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

aren
05-05-2010, 01:46 AM
இந்தக் கதை என்னை கொஞ்சம் நெருட வைத்துவிட்டது.

அப்பா சந்தோஷப்படாமல் என்ன ஜாதி என்று கேட்பது இவளும் கல்யாணமாகி போய்விட்டால் என்னை யார் கவனிப்பார்கள் என்ற சுயநலனை எதிர்பார்த்தே வந்த கேள்வியாக நான் நினைக்கிறேன்.

அவர்களும் மகனும் மருமகளும் இருந்திருந்தால் அவர் உடனே இந்த கல்யாணத்திற்கு சம்மதிருத்திருபார் என்பதே என் கருத்து.

இன்னும் எழுதுங்கள்.

கீதம்
05-05-2010, 09:30 PM
காலம் கழிந்தாலும் பரவாயில்லையென்று சாதீய பற்று இருக்கும் வரை முதிர்கன்னிகள் நிலை கஷ்டம் தான்.. கதை ஆரம்பமும் கதையோட்டமும் யதார்த்தமாய் இருந்தன.. பாராட்டுக்கள் கீதம்.

மிக்க நன்றி மதி அவர்களே.

கீதம்
05-05-2010, 09:33 PM
மக்ளுக்குக் கல்யாணம் ஆகாவிட்டாலும் பரவாயில்லை, ஜாதியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நினைக்கும் தந்தையின் ஜாதி வெறி கண்டு அவரை ஒரு புழு போலப் பார்க்கிறாள் சரளா. தம்மால் தான் மகளுக்கு ஒரு வாழ்வை அமைத்துத் தர முடியவில்லை, தானாக வரும் வாய்ப்பையாவது அவளுக்கு நல்கலாம் அல்லவா?

கதாசிரியர் முடிவைச் சொல்லாமல் விட்டு விட்டதால் தந்தையின் வார்த்தையை மீறி அவனைத் திருமணம் செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. எனவே அவளை முதுகெலும்பு இல்லாதவள் என்று நாம் நினைக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. காதல் திருமணம் பெருகி வரும் இந்நாளில் ஜாதி வெறி குறைய வாய்ப்பிருக்கிறது.

முக வசீகரம் இல்லாமையாலோ வரதட்சிணை கொடுக்க முடியாமையாலோ சரளாவைப் போல் திருமணம் ஆகாமல் முதிர் கன்னிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களை நினைக்கும் போது பாவமாகத் தான் இருக்கிறது.
மிகவும் யதார்த்தமான கதை. மீண்டும் நல்லதொரு கதையைக் கொடுத்த கீதத்திற்குப் பாராட்டு.

இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்பதால் இக்கதையை எழுதினேன். எல்லாத் தந்தைகளும் இப்படி இருக்க வாய்ப்பில்லை.

இக்கதையைப் படித்து கருத்து கூறியமைக்கும் பாராட்டுக்கும் நன்றி, அக்கா.

கீதம்
05-05-2010, 09:35 PM
வாழ்க்கை பாடங்களை கதையாக கொடுப்பதில் உங்களுக்கென ஒரு தனி இடம் உண்டு.
மிகவும் அருமையாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.
சரளாவின் முடிவை சொல்லாத படியால் , அவள்,அவனை திருமணம் செய்ய வாய்ப்புண்டு.அப்படி நடந்திருந்தால் சந்தோசம்.
வாழ்த்துக்கள் கீதம்.

உங்கள் விருப்பப்படி சரளா முடிவெடுப்பாள் என்றே நானும் நம்புகிறேன். பின்னூட்டத்துக்கு நன்றி, ஜனகன் அவர்களே.

கீதம்
05-05-2010, 09:40 PM
மீண்டும் ஒரு நல்ல கதை.

நிச்சயம் சரளா தந்தையை மீறி முடிவெடுப்பாளென்றே தோன்றுகிறது. மீறட்டும்....வாழட்டும்.
வாழ்த்துக்கள் கீதம் அவர்களே.

(ஆச்சர்யமாய் இருக்கிறது....இத்தனைக் கதைக்கான கருக்கள் உங்களுக்கு எப்படிக் கிடைக்கிறதென்று. சமூகத்தை நிறைய* கவனிப்பீர்களென நினைக்கிறேன். தொடர்ந்து எங்களுக்கு கதை விருந்து படத்து வாருங்கள்)

உங்கள் மேலான விமர்சனத்துக்கும் மனந்திறந்த பாராட்டுக்கும் நன்றி சிவா.ஜி அவர்களே. உங்களிடமிருந்து பாராட்டு பெறுவதை பெருமையாய் நினைக்கிறேன்.

அரைகுறையாய் கவனித்த விஷயங்களைக் கொண்டுதான் எழுதுகிறேன். இனிமேல் முழுதாய்க் கவனித்து எழுத விழையவேண்டும்.

கீதம்
05-05-2010, 09:41 PM
ரொம்ப அழகா தெளிவா எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்.

மிகவும் நன்றி பா.ராஜேஷ் அவர்களே.

கீதம்
05-05-2010, 09:57 PM
தலைப்பைப் படித்ததும் கதையின் களத்தை அனுமானிக்கக் கூடியதாக இருந்தது.

கதையின் ஓட்டம் அனுமானத்தை உறுதிப்படுத்த இறுதி நேரத்தில் ஏமாற்றத்தைத் தந்தது அவன் என்ன சாதியோ என்ற கேள்வி.

அடியில் பருத்து நுனியில் சிறுத்த ஆணிக்கதை.

தொடர்ந்து அசத்துங்க கீதம்.

மிகவும் நன்றி அமரன்.

கீதம்
05-05-2010, 10:00 PM
சளைக்காமல்...அசத்தும் கீதம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

மிகவும் நன்றி கோவிந்த் அவர்களே.

(இப்போதைக்கு சளைக்கும் எண்ணமில்லை. உங்கள் அனைவருக்கும் சலிக்கும்வரை எழுதுவேன். உங்கள் பாடுதான் திண்டாட்டம்.:))

கீதம்
05-05-2010, 10:06 PM
இந்தக் கதை என்னை கொஞ்சம் நெருட வைத்துவிட்டது.

அப்பா சந்தோஷப்படாமல் என்ன ஜாதி என்று கேட்பது இவளும் கல்யாணமாகி போய்விட்டால் என்னை யார் கவனிப்பார்கள் என்ற சுயநலனை எதிர்பார்த்தே வந்த கேள்வியாக நான் நினைக்கிறேன்.

அவர்களும் மகனும் மருமகளும் இருந்திருந்தால் அவர் உடனே இந்த கல்யாணத்திற்கு சம்மதிருத்திருபார் என்பதே என் கருத்து.

இன்னும் எழுதுங்கள்.

உங்கள் விமர்சனம் கண்டு மகிழ்கிறேன், ஆரென் அவர்களே. நீங்கள் சொல்வது சரிதான். எல்லா அப்பாக்களும் தன் பெண் நன்றாய் வாழவேண்டுமென்றுதான் விரும்புவார்கள். ஆனால் விதிவிலக்காய் சிலர் இருக்கப்போய்த்தானே இன்னும் சில பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இந்தக்கதையில் அப்பாவின் போக்குக்கு சுயநலம், சாதீயப்பற்று இரண்டுமோ அல்லது இரண்டில் ஏதாவதொன்றோ காரணமாக இருக்கலாம் இல்லையா?

உங்கள் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி, ஆரென் அவர்களே.

govindh
05-05-2010, 10:13 PM
மிகவும் நன்றி கோவிந்த் அவர்களே.

(இப்போதைக்கு சளைக்கும் எண்ணமில்லை. உங்கள் அனைவருக்கும் சலிக்கும்வரை எழுதுவேன். உங்கள் பாடுதான் திண்டாட்டம்.:))

இல்லை..இல்லை..எங்கள் பாடு கொண்டாட்டம் தான்...உங்கள் படைப்புகளால்...!
என் மனைவியும், உங்கள் கதைகளின் தீவிர ரசிகை ஆகி விட்டாள்..!:icon_b:

கீதம்
05-05-2010, 10:15 PM
இல்லை..இல்லை..எங்கள் பாடு கொண்டாட்டம் தான்...உங்கள் படைப்புகளால்...!
என் மனைவியும்........உங்கள் கதைகளின் தீவிர ரசிகை ஆகி விட்டாள்..!:icon_b:

நீங்கள் சொல்வதைக் கேட்டு நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உங்கள் அனைவரின் ஊக்குவிப்புதான் எல்லாவற்றுக்கும் காரணம். உங்கள் மனைவிக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், கோவிந்த் அவர்களே.

ரங்கராஜன்
05-05-2010, 10:27 PM
பெரும்பாலும் பெண் படைப்பாளிகள் வெளியில் தெரிவதில்லை, அப்படி தெரிந்தாலும், அவர்களை முழுமையைகவும் சுதந்திரமாகவும் இந்த சமுதாயம் எழுதவோ, சிந்திக்கவோ விடுவதில்லை.

அவர்களுக்கு என்று ஒரு எல்லையை சமுதாயம் விதிக்கிறது. அதை தாண்டி அவர்கள் வர நினைத்தாலும், அவர்களை வரவிடுவது கிடையாது.....

ஏன் இப்படி சம்பந்தமில்லாமல் பேசுகிறேன் என்று நினைக்கிறீங்களா,,,,, நீங்கள் இந்த கட்டுக்குள் உங்களை அடக்கிக் கொள்ளாமல் சீறிக் கொண்டு வெளியே வாருங்கள் .................... அருமையாக இருக்கிறது உங்கள் கதை,

உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் முதலில் எழுத்து வடிவமாக எழுதி விடுங்கள், முடிவு செய்து விட்டு எழுதாதீர்கள் காரணம் பல நல்ல உணர்ச்சிகளை உங்களால் சில கட்டுக்கோப்புகளால் சொல்ல முடியாமல் போய்விடும்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணத்தால் சில கதைகளை படிக்க பிடிக்கும், ஆனால் முதலில் என்னை படிக்க தூண்டுவது கதையின் தலைப்பு........... அந்த வகையில் உங்கள் கதையின் தலைப்பு அபாரமாக இருக்கிறது..............

சன் டிவி டாப் டென் மூவிஸ் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால்

முற்றல் வெண்டைக்காய்கள்............. நல்ல ருசி............

கீதம்
05-05-2010, 10:33 PM
முதன்முறையாக என் கதைக்கு உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்கிறேன்.

நீங்கள் சொல்வது புரிகிறது. நான் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ள எழுத்தாளர். நான் இன்னும் வளரவேண்டும். அதற்கு உங்களைப்போன்றவர்கள் என் கதைக்கு செய்யும் விமர்சனங்கள் மிகவும் உதவும். தொடர்ந்து என்னை வழிநடத்தவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

நான் பரிமாறிய முற்றல் வெண்டைக்காய்களை சுவைத்ததோடு நில்லாமல் நல்ல ருசி என்று பாராட்டிய உங்களைப் பாராட்டியே ஆகவேண்டும் மனமார்ந்த நன்றி தக்ஸ்.

aren
14-05-2010, 03:36 AM
இந்தக்கதையில் அப்பாவின் போக்குக்கு சுயநலம், சாதீயப்பற்று இரண்டுமோ அல்லது இரண்டில் ஏதாவதொன்றோ காரணமாக இருக்கலாம் இல்லையா?

அப்பாவிற்கு சாதீயப்பற்று இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, காரணம் நீங்கள் அந்தப் பெண் முற்றிய வெண்டைக்காய் என்று சொல்லிவிட்டீர்கள். முற்றிய வெண்டைக்காயை வந்த விலைக்கே தள்ளிவிடப்பார்ப்பார்களே கடைக்காரர்கள். அதனால் இந்தக்கதையின் அப்பா ஒரு வடிகட்டிய சுயநலவாதி என்பதே என் கருத்து.

நீங்கள்தான் படைப்பாளி, அதனாலே நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதையே அனைவரும் ஒப்புக்கொண்டாகவேண்டும், ஆகையால் உங்கள் கருத்து என்னவோ, அதுதான் எங்களுடைய கருத்தும். நான் மேலே சொன்னது, என்னுடைய நினைவினில் வந்தவை மட்டுமே.

கீதம்
16-05-2010, 12:24 AM
இந்தக்கதையின் அப்பா ஒரு வடிகட்டிய சுயநலவாதி என்பதே என் கருத்து.

நீங்கள்தான் படைப்பாளி, அதனாலே நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதையே அனைவரும் ஒப்புக்கொண்டாகவேண்டும், ஆகையால் உங்கள் கருத்து என்னவோ, அதுதான் எங்களுடைய கருத்தும். நான் மேலே சொன்னது, என்னுடைய நினைவினில் வந்தவை மட்டுமே.

படைப்பாளி என்பதாலேயே அவர் கருத்துக்கு நாம் உடன்படவேண்டும் என்ற அவசியமில்லையே. எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன். வாசகர்கள் அந்தக் கருத்தில் உடன்படவும் உடன்படாமல் போகவும் வாய்ப்புண்டு. சில சமயம், நம்மைவிடவும், வாசகர்களே சரியான கோணத்தில் புரிந்துகொள்வதுமுண்டு.

தேர்ந்த படைப்பாளி நீங்கள். நீங்கள் சொல்வதை நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். இதுபோன்ற விமர்சனங்கள் என் எழுத்தைப் புடம்போடும்.

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஆரென் அவர்களே.

nellai tamilan
08-06-2010, 05:36 PM
முற்றல் கத்தரிக்காய்.

அழகான தலைப்பு..
முதிர்கன்னியை குறிப்பிடுவதற்கு சரியான தலைப்பைத்தான் தேர்ந்து எடுத்து இருக்கிறீர்கள்.

காட்சி அமைப்பில், இயல்பு வாழ்க்கையும், அதில் நடைபெறும் சம்பவத்தையும் அருமையாக கையாண்டு இருக்கிறீர்கள்.

தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்ணின் மனநிலையும்,
நல்ல வாழ்வு கிடைக்கப்போகிறது என்ற மனநிலையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

பெண்ணின் திருமணத்திற்கு ஜாதியும் ஒரு காரணம் என்பதையும் ஒரே வரியில் போட்டு உடைத்து இருக்றீர்கள்.

எழுத்து ஓட்டமும் அருமையாக அமைந்து இருக்கிறது.

இதைவிட ஒரு சிறுகதைக்கு என்ன தேவை?

நீங்கள் சொல்ல வந்த விசயத்தில் வெற்றி பெற்று விட்டீர்கள்

வாழ்த்துக்கள்.

ஒரு சின்ன வருத்தம்
முதிர்கன்னியை முற்றல் கத்தரிக்காய் என்று குறிப்பிட்டு அவர்களை நோகச்செய்தது

கீதம்
08-06-2010, 10:45 PM

உங்கள் நீண்ட பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி நெல்லை தமிழன் அவர்களே.

கதையை நன்றாகப் படித்து உள்வாங்கியிருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய பின்னூட்டத்தின்மூலம் அறிகிறேன். ஆனால் தலைப்பை சரியாகக் கவனிக்கவில்லை என்பது தெரிகிறது. கதையின் தலைப்பு முற்றல் வெண்டைக்காய்கள். முற்றல் கத்தரிக்காய் அல்ல. :)

இக்கதையில் நீங்கள் கூறியுள்ளபடி நான் முதிர்கன்னிகளை கேலியோ, கிண்டலோ செய்து எழுதியிருந்தால் அவர்கள் மனம் நோகும் என்பது நியாயம். ஆனால் பரிதாபத்துக்குரிய அவர்களுடைய நிலையை அவர்களின் கோணத்திலிருந்து எழுதியிருக்கிறேன். ஓரிடத்தில் அந்தப் பெண் தன்னை முற்றல் வெண்டைக்காயுடன் ஒப்பிடுவதாகவும் எழுதியுள்ளேன். அதனால் அந்தத் தலைப்பிட்டேன். உங்கள் விமர்சனத்தில் அந்தத்தலைப்பு மிகப்பொருத்தம் என்று நீங்களும் கூறியிருக்கிறீர்கள். பின் ஏன் கடைசியில் அப்படி?:confused:

இருப்பினும் மனதில் தோன்றியதை எழுதியதற்கு நன்றியும், பாராட்டும்.:icon_b:

nellai tamilan
09-06-2010, 08:51 PM
தலைப்பை சரியாகக் கவனிக்கவில்லை என்பது தெரிகிறது. கதையின் தலைப்பு முற்றல் வெண்டைக்காய்கள். முற்றல் கத்தரிக்காய் அல்ல. :)

கத்தரிக்காயோ வெண்டைக்காயோ...
மொத்தத்தில் முற்றல் தானே!

பின் ஏன் கடைசியில் அப்படி?:confused:

முற்றல் வெண்டைக்காய் என்று குறிப்பிட்டு முதிர்கன்னியை நீங்கள் மட்டும் நோகச்செய்து விட்டீர்கள் என்று குறிப்பிட வில்லை.
மாறாக நாம் எல்லோரும் அந்த தவறை செய்கிறோம் நான் உட்பட

இது மாற வேண்டும் என்று தான் ஆதங்கப்பட்டேனே தவிர... உங்களின் கருத்தை குறை கூற வரவில்லை.

வாழ்த்துக்கள் இது போல் தரமான வெண்டைக்காயை ச்சீ சீ... கதையை தருவதற்கு

Ravee
29-07-2010, 03:54 PM
:)

யதார்த்தம் ..... மிக யதார்த்தம் .... கொஞ்சமும் போலித்தனம் இல்லாமல் புதுமை என்று மீறாமல் சிலரின் மன நிலையை அவர்களின் நிலையிலேயே விட்டுச் சென்றது . கீதம் இங்கு காணமல் போய் சரளாவாக வாழ்ந்தால் மட்டுமே இவ்வாறு எழுத முடியும் - இது ரசிகனாக உங்களிடம் இருந்து கற்றுக்கொண்ட இன்னொரு விஷயம். வாழ்த்துக்கள் .

கீதம்
30-07-2010, 01:40 AM

உங்கள் வாழ்த்துக்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும் மிகவும் நன்றி ரவி அவர்களே.