PDA

View Full Version : இவர்களே தியாகிகள்!



nambi
02-05-2010, 06:24 PM
http://3.bp.blogspot.com/_0VuPFtgKUhc/SykxNc8B4OI/AAAAAAAAAhk/sihpJ2tNbCg/s1600/Nadanthathu%20enna%2027.8.09%20on%20edited.jpg


ஒரு சில மாதங்களுக்கு முன் அதாவது 2009 ஆகஸ்டு மாதம் இருக்கும் ஒரு வருடைய பேட்டியை குற்றம் நடந்தது என்ன? என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பினார்கள். அவர் பெயரும் கோபிநாத். கடந்த 18 வருடங்களாக சென்னை பொது மருத்துவமனையில் சவப்பரிசோதனை அதிகாரியாக அங்கு பணிபுரிகின்றார். அங்கு அவர் இதுவரை பணியாற்றிய காலத்தில் அவர் சந்தித்திருக்கும் பிணங்களின் எண்ணிக்கை சுமார் 100000. (1 இலட்சம்). அவர் இதுவரை அந்த பிணவறையில் பணிபுரிவதை கண்டு எந்தவித அச்சமோ, அருவருப்போ கொண்டதில்லை. என்று தெரிவித்தார்.

கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி பிணவறை



இதற்கு முன் நானும் பிணவறைக்கு சென்று பார்த்திருக்கின்றேன் ஆனால் சென்னை பொது மருத்துவ மனையில் அல்ல கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிணவறை. அங்கு என் வகுப்பில் படித்த மாணவர் ஒருவர் விபத்தினால் மரணமடைந்து விட்டதால் அவரை பார்க்க வேண்டி நானும் என் நண்பரும் அந்த மருத்துவமனை நோக்கி சென்றோம். அவர் உடலை பிணவறையில் வைத்திருப்பதாக மருத்துவமனையாளர்கள் கூறியதால், நானும் என் தோழரும் அங்கு செல்ல முயற்சித்தோம். அங்கு எங்களை அனுமதிக்கவில்லை. அங்கு நெருங்கும் பொழுதே வாடைகள் வர ஆரம்பித்துவிட்டன. ஆனால் எங்களுக்கு அது குமட்டவில்லை (இதை எதிர்பார்த்ததினாலும், ஏற்கனவே பள்ளியில் விலங்கியல் கூறு ஆய்வின் போது, எலிகளை கூறு செய்யும் போது இந்த வாடைகள் வருவது வாடிக்கை). இருந்தாலும் சிறுஅச்சத்துடன் மனதை திடமாக்கிகொண்டு அவரை பார்க்கச் சென்றோம்.

எங்களுக்கு நம்பிக்கையில்லாமல் இறந்தது அவர்தானா? என்பதை அறிய. அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் அனுமதிக்குமாறு வேண்டினோம். அங்குள்ளவர்கள் அனுமதிக்க மறுத்தனர். நீங்கள் மயக்கமடைந்து விடுவீர்கள என்று எங்களுக்கு எவ்வளவு கூறியும் அவர்களை ஒருவாறு சமாளித்துவிட்டு உள்ளே சென்றோம். உள்ளே செல்ல செல்ல ஆச்சரியங்கலந்த, சிறு அச்சமும் எங்களை தொற்றிக்கொண்டது போகப்போக அது ஒரு அசாத்திய தைரியத்தையும் உருவாக்கிவிட்டது. அதற்கு காரணம் என்றாவது ஒரு நாள் இங்கு வந்தாகவேண்டும் என்ற எண்ணமாக கூட இருக்கலாம்.

அங்கு பேன்ட, சட்டை போட்டவர், போடாதவர், கொலையுண்டு குடல் சரிந்த பெண்கள், தீக்குளிப்பினால் உயிரிழந்தவர்கள் என்று அனைவரும் சாதி, மதம் பேதமின்றி ஒற்றுமையுடன், குறுக்கும் நெடுக்குமாக படுத்திருந்தனர்.(உடல்களை தாறுமாறாக தரையில் கிடத்தியிருந்தனர்) உள்ளே ஒரு லாரி இறந்த எலிகளை கொட்டினால் என்ன வீச்சம் வருமோ? அது போன்றதொரு வீச்சம், 100 அடி தூரம் வரை வீசிக் கொண்டிருந்தது. எங்களை அழைத்து சென்றவரோ, நாங்கள் நெளிவதை பார்த்து....

"நாங்கள் தான் சொன்னோமே இங்கு வர வேண்டாம் என்று இப்பொழுது பார்த்தீர்களா? "இது எங்களுக்கு தலையெழுத்து உங்களுக்கு என்ன?"...என்று சத்தம்போட்டபடி எங்களை கூட்டிச்சென்றார்.

''மூக்கை மூடிக்கொள்ளுங்கள்'' என்றார், நாங்கள் மூடவில்லை. அவரும் சிரித்து கொண்டே இன்னொரு அறைக்கதவை திறந்து அதனுள் கூட்டிச் சென்றார் அங்கு பழைய பாழடைந்த ஒரு குளிர் சாதன பெட்டியில் நண்பரின் வைத்திருந்தார்கள் ,அதை பாதி வரை இழுத்து ''இது தானா?'' என்ற பார்க்கச் சொன்னார். ஆமாம் என்றோம். நேற்று வரை பேசிக்கொண்டிருந்தவன் இன்று பெட்டியில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான் தலையில் ரத்தக் காயங்களுடன். (தலை மீது டிராக்டர் வாகனம் எறியதால் சிறிது நசுங்கியிருந்தது). மேலும் அவர் தொடர்ந்து...

"உங்களுக்கு நெஞ்சு தைரியம்யா!" என்று எங்களை திட்டினார் அந்த சகிப்புத் தன்மை கொண்ட பெரிய மனிதரான அந்த பிணவறை ஊழியர்.

பிறகு அங்கு அறையெங்கும் பரவி கிடந்த உடல்களை ஒரு முறை பார்த்து விட்டு அங்கிருந்து வெளியே வந்தோம். மறக்காமல் கை கால் முகங்களை நன்றாக கழுவிக் கொள்ளச் சொன்னார் அந்த ஊழியா. நாங்கள் வெளியில் வந்து தான் மூச்சு விட்டோம். ஒரு நாள் சகிப்புத்தனைமையுடன் அதுவும் சிறிது நேரம் இருப்பதற்கே சங்கடத்துடன் நெளிந்த எங்களுக்கு அவர்கள் மிகப்பெரிய தியாகிகளாக எங்கள் கண்களுக்கு தெரிந்தனர்.


http://4.bp.blogspot.com/_0VuPFtgKUhc/SyK7o1DtfQI/AAAAAAAAAag/KsEiF3jqNKo/s320/G.H.%20Mortuaty%20Gate.jpg


இதில் கோபிநாத் 18 வருடங்களாக இந்த (கீழ்பாக்கம்) பிணவறையைவிட பெரிய பிணவறையான சென்னை பொது மருத்துவமனையில் அவர் பணிபுரிந்ததாக கூறியபொழுது என்னை மேற்கூறிய நினைவுக்கு கொண்டு சென்றது.

http://3.bp.blogspot.com/_0VuPFtgKUhc/SyktpIvTfbI/AAAAAAAAAhY/u5MreuFZwbg/s1600/Nadanthathu%20enna%2027.8.09%20GH%20arranged%20corpses.jpg


ஆனால் சென்னை பொது மருத்துவமனை பிணவறை பல ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் சந்தித்த பிணவறை (அமரர் அறை)
(உயிரோடு எழுந்து வந்தவர்கள் எல்லாம் உண்டு, உடனே கண்ணை அகல விரிக்காதீர், மனிதத்தவறுகளால் ஏற்பட்டவைதான், இறந்து விட்டார் என தவறாக கணித்து அந்நோயாளிகளை அக்கிடங்கில் கிடத்தியதால்)

.அங்கேயேதான் பிரேத பரிசோதனையும் நடக்கும் இவர் (கோபிநாத்) தான் அதை செய்பவர். மருத்துவரும் பிரேத பரிசோதனை செய்வார்கள் ஆனால் சில அழுத்தமான எலும்புகள், மார்புக்கூடுகள் இவைகளை இந்த பரிசோதகர்களே பிளந்து கொடுப்பது என்பது முன்பே அறிந்திருந்த விஷயம் தான். பெண்களும் பிரேத பரிசோதனை மருத்துவர்களாக உள்ளனர் சமீபத்தில் அறிந்து கொண்டேன் தொலைக்காட்சியின் வாயிலாக. ஆனால் யாரும் சவங்களுடன் தங்குவதில்லை, அவைகளோடு உறங்குவதுமில்லை..

ஆனால் இவர் அங்கேயே தங்குகின்றார். பல நேரங்களில் அவர் சாப்பிடுவதில்லை. சாப்பாடு நொந்து போய்விடும். அங்கேயே படுத்துறங்குகின்றார். அந்த வீச்சத்துடனே வீட்டிற்கும் செல்கின்றார். இயற்கை பேரிடர் காலத்தில், விபத்துக்கள், நாசவேலைகள் போன்ற காரணங்களினால் ஏற்படும் உயிரிழப்புகள் என்றால் வீட்டிற்கே செல்லமுடியாது அத்தனை சவங்களையும் பரிசோதனை செய்து அனுப்பவேண்டும். இத்தனை கஷ்டங்களையும் தாங்கி கொண்டுதான் இவ்வளவு நாட்களுக்கு பணிபுரிந்து கொண்டிருக்கின்றார்.

அதற்கு பிறகு அவர் கூறிய தகவல்கள் என்னை களங்க வைத்துவிட்டன. இங்கு பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்கள் என்று யாரும் கிடையாது. பணிக்காலத்திலேயே சவங்களுக்கிடையே இருப்பதால்நோய் தாக்குதலுக்கு ஆளாகி இறந்து விடுவார்கள். ஆகையால் இந்த பணிக்கு யாரும் துணிந்து பணி செய்ய முன்வரமாட்டார்கள். ஆகையால் பல எதிர்ப்புகள் இருந்தாலும் இதை விட்டுப் போக மனமில்லை என்று கூறினார்.


சில அமானுஷ்யங்களை பற்றியும் கூறினார். ஒரு முறை சாமியாரை பிரேத பரிசோதனை செய்தபொழுது (அமானுஷ்ய சக்தி பிடிக்க வந்ததாகவும், அவர் குறிப்பிட்டது) இது நடந்ததாகவும் அன்று பாடிகாட் முனிஸ்வரர் வந்து தன்னை காப்பாற்றியதாகவும் கூறினார். அது முதல் அவரை வணங்குவதாகவும் அது தனது நம்பிக்கை என்று குறிப்பிட்டார்.
(சென்னை பழைய மத்திய சிறைச்சாலை பால இறக்கத்தில் உள்ளது, புது வண்டிகளுக்கு அங்குதான் பூஜை செய்வது வழக்கம்)

எந்த அச்சமும் இன்றி அந்த சவங்களினிடையே படுத்துறங்கி காலையில் எழுந்து செல்வேன். "உங்களுக்கு அச்சமில்லையா " என்று கேட்டத்றகு அவர் கூறிய பதில் தான் இது தான்.....

"இந்த கதவிற்க்கு அந்தப்பக்கம் இருப்பவர்களிடம் மட்டுமே (மனிதர்கள்) அஞ்சுகின்றேன், உள்ளே இருப்பவைகளுக்கு அல்ல". அவைகள் மேல் துளி கூட அச்சம் கிடையாது. உயிரோடு இருக்கும் மனிதர்களுக்கு தான் எல்லா அழிவுக் குணங்களும், வக்கிரக் குணங்களும் உண்டு."


எவ்வளவு சத்தியமான வார்த்தை.

இவர் சந்தித்த பிரபலமானவர்கள் (யாராயிருந்தாலும் இவரை சந்திக்க முடியாது என்று கூற முடியாது) முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி. நடிகை மோனல் என்று இன்னும் பல பிரபலங்களை அங்கே சந்தித்திருக்கின்றார் உயிரற்றவர்களாக. ராஜிவ் காந்தி மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சிதைந்த நிலையில் கொண்டுவரப்பட்டதாகவம் தெரிவித்திருந்தார். (பிரதே பரிசோதனை மிக துரிதமாகவும் செய்து முடித்திருக்கின்றார்) அது அவரை பாதித்த விஷயமாக அவர் தெரிவித்திருந்தார். 4 வயது குழந்தையின் இறப்பு மிக கொடூரமானதாக இருந்ததாகவும் அதை பரிசோதனை செய்ய அவர் கைகள் நடுங்கியதாகவும் கூறினார். (கத்தி பிடித்த கைக்கும் நடுக்கமா?, இங்கு நல்லவன் வேஷத்தில் இருக்கும் பஞ்சமா பாதக கொலைகாரர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை).

அவர் குடும்பத்தினர் முதலில் இந்த தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், பின்னாளில் அவரின் சேவையை மதிக்க ஆரம்பித்துவிட்டனர். இன்று பேரன் பேத்திகளுடன் எப்பொழுதும் போலவே இருக்கின்றார். எப்பொழுதும் போலவே இந்த சேவையையும் தொடர்கின்றார். அந்த தியாகி நீண்ட ஆயுளுடன் நலமுடன்அவர் குடும்பத்துடன் வாழ இயற்கை வழி செய்யவேண்டும் அதுபோலவே அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் நிறைந்த ஆயுளுடன் பணிபுரிய வேண்டும். அதுவே நமது விருப்பமாகட்டும். என்னைப் பொருத்தவரை (திரு.கோபிநாத்)அவரேத் தியாகி. அங்கு பணிபுரியும் அனைவருமே தியாகிகள் . இவர்களே சகிப்புத்தன்மையை போற்றும் மாமனிதர்கள்..



.....ஆதாரம் விஜய் தொலைக்காட்சி..27.08.2009

அன்புரசிகன்
03-05-2010, 02:59 AM
உண்மையிலேயே தியாகிகள் தான். அதுவும் சைவ முறைப்படி பார்த்தால் இவர்கள் சிவனுக்கு ஒப்பானவர்கள்...

அவர் பயப்படுவது பற்றி கூறியது சமூகத்தின் மீதான அவரது அனுபவ முதிர்ச்சி தெரிகிறது.

இந்த விடையங்களில் அரசு மற்றும் மருத்துவ அமைச்சு அவர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் வழங்கி அவர்களது சேவையை மேன்மையுறச்செய்ய வேண்டும்.

அவரகளது நீண்ட ஆயுளுக்கு என் பிரார்த்தனைகளும்.

கீதம்
03-05-2010, 04:08 AM
மனம் நெகிழச்செய்த பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி, நம்பி அவர்களே.

இவரைப்போன்ற எத்தனையோ தியாகிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று சுகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவருக்கு என் பணிவான வணக்கம்.

விகடன்
04-05-2010, 06:08 AM
உண்மையிலேயே அவர் தியாகிதான்.
எங்கு அதிகமாக சம்பாதிக்கலாம் என்று ஓடித்திரியும் நவீன உலகில், இத்தொழிலிற்கு பொதுவாக வர விரும்பமாட்டார்கள் என்பதாலோ என்னவோ மன நிறைவுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை எவ்வாறு சொல்வது.

இந்தியாவில் மாமனிதர் விருது என்றொன்றிருந்தால் அதை இவரைப்போன்றாரிற்கும் கொடுக்கவேண்டும்.

xavier_raja
05-05-2010, 07:14 AM
உண்மையில் இவர்களுக்கு மிக உயர்ந்த சம்பளமும் பற்பல சலுகைகளும் அரசாங்கம் கொடுக்கவேண்டும் என்பது என் கருத்து.. இந்த வேளைக்கு யாரும் வரவில்லை என்று சொல்லிவிட்டால் என்ன ஆவது என்று நினைக்கவே மனம் அஞ்சுகிறது..