PDA

View Full Version : குறட்டையில் கலையும் கவிதைகள்….செல்வா
02-05-2010, 06:55 AM
தாழிடப்படாமல் சாத்தப்பட்டிருந்த
கதவுக்குப் பின்னால்
அடைக்கப் பட்டிருந்த குளிருக்கு
நடுவே சன்னமாய் உறுமிக் கொண்டிருந்த
கணிணியில் முடக்கப்பட்டிருந்தன
என் கனவுகள்…

கவிழ்ந்திருந்த தலை கவிழ்ந்த படியேப்
பார்த்துக் கொண்டிருந்த அந்த மிகச்சிறு
கணப்பொழுதில் காலம்
அன்றைய இரவின் மணி ஒன்பதைக் கடந்தது

கணிணி மடிக்கப்பட்டது

கம்பிகள் சுருட்டப் பட்டன

பை சுமக்கப் பட்டது

சாவிகள் எடுக்கப் பட்டன

கதவு பூட்டப் பட்டது

கால்கள் தளர் தாளம் போடத் துவங்கின

பால் மழை வழிந்த
கறுப்பு வீதியில்
பாதம் பதிக்கையில்

முடித்தவைகளும்
முடியாதவைகளும்
முடிக்காதவைகளுமாகிய குப்பைகள் அத்தனையும்
துடைத்தெறியப் பட்டன

இருந்த பாரம் குறைந்ததும்
கொண்டு வந்து கொட்டப் பட்டன இன்னுமொரு
வண்டிக் குப்பைகள்…

மேலிருந்த குப்பையை விலக்கித் தேடிய கைகளுக்குச்
சட்டென்று கிடைத்தது…
“ஆமைக் கூட்டிற்குள் அடைக்கப்பட்ட தலையாய்
அவ்வப்போது எட்டிப் பார்த்த…”

‘ கண்காட்சி ஆமை எப்போதுமே தலையை வெளியே வைத்து சுற்றிக் கொண்டிருந்ததே…’
தட்டிப் பார்க்கையில் பொருள் உள்ளே உடைந்து போயிருக்க
ஓரம் வைத்துவிட்டு
கைவிட்டுத் துழாவிய போது
கிடைத்தது இன்னொன்று…

“நத்தைக் கூட்டின் ஓடுகளுக்குள்….
சிறைப்பட்ட …………..”
இழுக்கும் போதே கிழிந்து போனது
இற்றுப் போயிருந்த வார்த்தைகள்

“முழுமானை விழுங்கிய
மலைப்பாம்பின் பசியாக
எப்போதாவது வந்து
எட்டிப்பார்த்துப் போகும்
அவனுள்ளிருக்கும் கலை….”

உரசிப் பார்த்து தங்கமில்லை என்றாலும்
புதுச்சரக்கு என்றுப் பத்திரப் படுத்தியது மனது.

இதற்குள்ளேப் பாதங்கள் படியேறி
நின்றுவிட

சாவி நுழைக்கப்பட்டது

கதவு திறக்கப் பட்டது

விளக்கு எரிந்தது

வெள்ளுடை பறந்தது

அடுப்பின் ஓசையில்
அசுரன் விழித்தெழ
மட்கிய குப்பைகளுடன்
மண்மூடிப் போயின
புதிய சருகுகளும்

பசியாறி வந்து
படுத்துக் கிடக்கையில்
கிளறிய குப்பையின்
பொறுக்கிய வார்த்தைகள்
ஊரத் துவங்க

உதறிப் போர்த்திய போர்வைக்குள்
புரண்டு படுக்கையில்
கேட்கும் குறட்டையொலின்
அதிர்வில்

கலைந்து பறப்பவை காற்று மட்டுமல்ல
இறந்து போன என்
கவிதைக் கருக்களும் …!

சிவா.ஜி
02-05-2010, 07:17 AM
ரொம்ப ரொம்ப உண்மை செல்வா. கண்ணாபின்னான்னு வந்து குதிக்கிற வார்த்தைகளும், கருக்களும்....உறக்கத்தில் மூச்சுக்காற்றோடு வெளியேறிவிடுகிறது. அடுத்தநாள்....மீண்டும் பல வார்த்தைகளின் மூளைத் தாக்குதல்.....ஏதாவது சிலவைதான் முழுமையாகி பதிந்துவிடுகிறது.

ரொம்ப யோசிச்சா இதான் பிரச்சனையே.

நினைச்சதை சொன்னக் கவிதை நல்லாவே வந்திருக்கு செல்வா. வாழ்த்துக்கள்.

செல்வா
02-05-2010, 07:21 AM
முதல் பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி அண்ணா....

என்ன எழுதலாம்னு எழுதவாரம்பித்து

எழுதுறதையே எழுதிடலாம்னு எழுதிட்டேன் :)

கீதம்
02-05-2010, 11:41 AM
அற்புத கவி வரிகள். நாம் எழுத நினைப்பவையோ கடலளவு; எழுதி முடிப்பதோ பேனாவின் மையளவு. இப்படிதான் உதயமானது என் 'கண்ணாடிச் சட்டத்துக்குள் ஒரு கவிதாயினி'யும்.

பாராட்டுகள் செல்வா. குப்பையாய்த் தோன்றினாலும் கொடுத்துக்கொண்டே இருங்கள். நாங்கள் அதற்குள் மாணிக்கங்களைக் கண்டெடுப்போம்.

பாரதி
02-05-2010, 12:49 PM
பிறக்காத கவிதைகள் இறப்பதற்கு சாத்தியமில்லை.
குறட்டைச்சத்தமும் கும்மியடிப்பாட்டும் குலைக்காது;
நிலைக்காத மனமிருக்க, நிம்மதியாய் படுத்திருக்க
நிலவொளியில் சூரிய வெளிச்சம் தேடுவதும் சரியாகாது.

முடியும் என்றால் முடியும்.
விளையும் என்றால் விளையும்.

அவ்வப்போது கேட்கும் குறட்டையொலியாய் அன்றி ஆழ்ந்த தூக்கமாய் உங்கள் கவிதைகள் மன்றத்தில் தூங்க வேண்டும் செல்வா.

செல்வா
02-05-2010, 04:45 PM
பாராட்டுகள் செல்வா.

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி கீதம்...

செல்வா
02-05-2010, 04:50 PM
பிறக்காத கவிதைகள் இறப்பதற்கு சாத்தியமில்லை.

இறந்தேப் பிறக்கும் குழந்தைகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்...

என்றாலும் இங்கே இறந்து போனவை கருக்கள் குழந்தைகளல்ல.அவ்வப்போது கேட்கும் குறட்டையொலியாய் அன்றி ஆழ்ந்த தூக்கமாய் உங்கள் கவிதைகள் மன்றத்தில் தூங்க வேண்டும் செல்வா.

இதுல எதும் உள்குத்து இல்லியே.... :eek::eek:

பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றியண்ணா...

பாரதி
02-05-2010, 04:58 PM
குறட்டையொலி அவ்வப்போதுதான் வரும்.
ஆழ்ந்த தூக்கம் அடிக்கடி வரும்.
அவ்விதமாக உங்கள் படைப்புகள் மன்றத்தில் அடிக்கடி தடம் பதிக்க வேண்டும். எங்கள் மனதில் ஆழமான இடம் பெற்று உறங்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.
எவ்விதமான உள்குத்தும், உள்கூத்தும் இல்லை செல்வா.
நன்றி.

govindh
02-05-2010, 09:36 PM
என்ன எழுதலாம்னு எழுதவாரம்பித்து

எழுதுறதையே எழுதிடலாம்னு எழுதிட்டேன் :)[/QUOTE]


குறட்டையில் கலையும் கவிதைகள்...
மிக அற்புதம்...

கலைந்தவையே அற்புதமெனும் போது...
கலை வடிவம் பெறுபவை...
இன்னும் அற்புதம்...
மின்னும் அற்புதம்...

தொடர்ந்து எழுதுங்கள்....

செல்வா
04-05-2010, 07:21 AM
பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி கோவிந்த்.

ஆதவா
06-07-2010, 06:41 PM
வார்த்தைகள் ஒவ்வொன்றும் வன்மம் கலந்தவை, அவை சட்டென கர்ப்பம் தரித்து கலைந்து போகும். நினைவுகளின் நாவாயில் கசிந்து வாயுவாய் வெளியேறிவிடும். வார்த்தைகள் பெருங்காமப் புனலின் ஆழ்குழிகள். திரிந்து கொண்டிருக்கும் நிகழ்நிலை எண்ணங்களின் முதுகில் குத்தியே கொன்றுவிடும். இது யாவரும் நடக்கும் இயல்புதான்.

எத்தனை போர்வைக்குள் இப்படி காமம் செய்து கலைந்து போனதோ வார்த்தைகள் எனும் காந்தர்வ யுவதிகள்? (நீங்கள் குறட்டை நன்கு விடுபவர் என்று இக்கவிதையின் மூலம் உரைத்துவிட்டீர்! :D) இதன்காரணம் நான் செய்வது ஒரு சில யுக்திகள், அதிலொன்று அலைபேசியில் கருமுட்டையை மாத்திரம் பொத்திவிடுவேன். காலம் கைகூடும்பொழுது அடைகாத்து எழுதிக் கொள்ளலாம். அல்லது நீங்கள் காகிதமும் பேனாவுமாகவே திரியவேண்டும்.

இறந்தே பிறந்த குழந்தையைக் கண்டுவிடலாம்... கருவிலேயே இறந்துவிட்டால்?

உங்கள் நினைவுக் கோப்பையில் கவிதை நீர் அவ்வப்போது ஊற்றிக் கொண்டேயிருங்கள். துளையின் வாயிலாகவோ அல்லது வாயிலின் வாயிலாகவோ கசிந்து வரட்டும் கவிதைகள். நன்கு வடிகட்டிய தேநீர் போன்று!! (:)) பருகக் காத்திருக்கிறோம்.

அமரன்
06-07-2010, 08:14 PM
இந்த நிலையைக் கடந்து வராதோர் எவருமில்லை. நீயும் வரவைக்கப்படுவாய். அப்போது போர்வை அல்ல அது.. கூட்டுப்புழுக் கூடு என்பதை அறிவாய்.

ஆதவா சொன்னது போல குறிப்பெழுதி வைக்கலாம். சில சமயங்களில் அந்தக் குறிப்பே கவிதையாகிவிடுவதும் உண்டு.

nambi
06-07-2010, 09:33 PM
கவிதை நன்று! வரிகள் அருமை...பகிர்வுக்கு நன்றி!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
06-07-2010, 09:48 PM
எந்த தலைப்பும் சிக்காத தருணங்களில் கவிதையே தன்னை எழுத தீர்மானித்து விடுகின்றது. கனவிற்கான விதை மட்டுமல்ல கவிதை கவிதைக்கான விதையும் கவிதையே என்பதை சொல்லிடும் கவிதை. பாராட்டுக்கள் செல்வா.