PDA

View Full Version : வலி

மதி
30-04-2010, 09:33 AM
இருக்கும் ஒரு இருபத்தி அஞ்சு வருஷத்துக்கும் மேல இந்த கோயிலுக்குள்ள நுழைஞ்சு. வானுயர நிற்கும் கோபுரத்தையும் மாடவாசலையும் தாண்டிப் போனா நிறைய பிரகாரங்களா வரும். சின்ன வயசுல கோயில சுத்தறது தான் பொழுதுபோக்கே. இந்த அம்பத்தி எட்டு வருஷமா இந்த ஊர விட்டு எங்கேயும் போனதில்லை. தினமும் கோயில் கோபுரத்தை பார்ப்பேன். சின்ன வயசிலேர்ந்தே அப்பா புத்தியோட பக்தியும் சேர்த்து தான் சொல்லித் தந்தார். கடவுள சேவிச்சா அன்னிக்கு நாள் நல்லாயிருக்கும்னு. தினமும் கோபுரதரிசனம் முடிச்சதுக்கு அப்புறம் தான் மத்த வேலைகளே ஆரம்பிக்கும். எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு அந்த சம்பவத்துக்கு முன்னாடி வரை.

பையனுக்கு கல்யாண வயசாச்சுன்னு பொண்ணு தேட ஆரம்பிச்ச அப்பா அதே ஊர்லேயே பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வச்சுட்டார். கல்யாணம் முடிச்ச கையோட தன் வேலை முடிஞ்சுடுச்சுனு தோணுச்சோ என்னவோ எண்ணி பத்து மாசத்துலேயே போய் சேர்ந்துட்டார். அப்போ கல்யாணி நிறைமாச கர்ப்பிணி. அப்பா காரியமெல்லாம் முடிஞ்சு அடுத்த ஒரு வாரத்துலேயே வரது பொறந்தான். அப்பாவே வந்து பொறந்திருக்கான்னு எல்லோருக்கும் சந்தோஷம்.

சோகத்திலேயும் அம்மாக்கு ஒரு சந்தோஷம். சந்ததி தழைச்சுடுச்சே.. ஆத்துக்காரரே வந்து பேரனா பொறந்த மாதிரி. வரதுக்குட்டியை கொஞ்ச ஆரம்பிச்சா. நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரும்னு சொல்லுவாங்க. அப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டதுலேர்ந்து எங்கேயும் தனியா போனதில்லையாம். அது தான் முத வருஷ திதி வர்றதுக்குள்ளேயே தனியா இருக்க பயந்து அம்மாவையும் கூட்டிக்கிட்டார். பேரனைக் கொஞ்சிக்கிட்டு இருக்கறப்பவே நெஞ்சு வலின்னு படுத்தவ தான். கண்ணை அப்புறம் தொறக்கவே இல்ல.

அப்புறம் வாழ்க்கை போயிட்டு இருந்துச்சு. அதே ஊர்லேயே தாசில்தார் ஆபிஸ்ல வேலை. வாழ்க்கைக்கேற்ற வருமானம். கல்யாணியும் ரொம்ப ரொம்ப நல்லவ. புருஷங்காரன் கொண்டு வர்ற சம்பளத்துல கச்சிதமா குடும்பம் நடத்த தெரிஞ்சவ. வரதுக்கு அப்புறம் லக்ஷ்மி பொறந்தா. எல்லாம் நல்லபடியா தான் இருந்துச்சு அந்த நாள் வரைக்கும்.

வீட்ல ஒரே பையங்கறதால எப்பவுமே வரதுக்கு செல்லம் அதிகம். எப்பவுமே அவன் செட்டு பசங்களோட சுத்திக்கிட்டே இருப்பான். ஆனா ஒழுக்கந்தவறாதவன். சில சமயம் திட்டுனா மட்டும் அப்படி மொறச்சு பார்ப்பான். யாராச்சும் கொஞ்ச உதவி பண்ணுடான்னு சொன்னா மொத ஆளா போய் நிப்பான். அப்படியே அப்பா குணம்.

அன்னிக்கு ஆடிப் பெருக்கு. ஆத்துல தண்ணி நல்லா வந்துட்டு இருந்துச்சு. பசங்களோட சேர்ந்து குளிச்சுட்டு வர்றேன் கிளம்பிப் போனவன் தான். பையன ஆத்துத் தண்ணி அடிச்சுட்டு போச்சுனு தகவல் மட்டும் தான் வந்து சேந்துச்சு. அடிச்சுபுடிச்சு ஆத்துக்கு ஓடினா அவன மாதிரி இன்னும் ரெண்டு மூணு பேரும் போயிட்டாங்களாம். கண்டுபுடிக்க முடியலேன்னு சொன்னாங்க. கல்யாணி அழுது அரற்ற கோயிலுக்கு ஓடினேன்.

‘எப்பவுமே நல்லது கெட்டதுக்கெல்லாம் நீ தான் காரணம்னு அப்பா சொல்லுவார். இப்போ நடக்கறதுக்கும் நீ தானே காரணம். காரணமே இல்லாம அப்பாவ கொண்டு போய் வரதுவா பொறக்க வச்ச. இப்போ பத்து வயசு புள்ளைக்கு ஏன் இந்த கண்டம். கடவுளே..! நல்லபடியா என் புள்ளைய மட்டும் என்கிட்ட சேத்துடு. நான் காலம் முழுக்க உனக்கு கடமைப்பட்டிருப்பேன்…'

அடுத்த நாள் அஞ்சு கிலோமீட்டர் தள்ளி ஒரு புதர்ல வரது கிடைச்சான். அன்னிக்கு கடைசியா அந்த ஆத்துல முழுகினது தான். அப்புறம் அந்த கோயில் பக்கமும் போனதில்ல. ஆத்துக்கும் போனதில்ல. கல்யாணியும் லக்ஷ்மியும் எவ்ளோ கூப்பிட்டாலும் கோயிலுக்குள்ள போகக்கூடாதுங்கற வைராக்கியம் தான் ஜெயிச்சுக்கிட்டு இருந்துச்சு.

இதோ.. ரிட்டையர் ஆயாச்சு. லக்ஷ்மியும் நல்ல இடத்துல வாக்கப்பட்டு போயிட்டா. நேத்து தான் வேலைக்கு சேர்ந்த மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ள ரிட்டையர்மெண்ட் வயசாயிடுச்சு. கல்யாணிக்குத் தான் கவலை. ‘இனி எப்படி நான் இருக்கப் போறேன்’னு. ‘அடிப் பைத்தியமே. இவ்ளோ நாள் எனக்காக நம்ம குடும்பத்துக்காக இவ்ளோ தூரம் உழைச்சிருக்க. கொஞ்சம் ரெஸ்ட் எடு’. காலங்கார்த்தாலேயே எந்திரிச்சு பால் வாங்கிட்டு வந்து அவளை எழுப்பாம காபி போட்டு.. அட அவ எப்படிப்பட்ட காபி குடிப்பா.. சக்கர தூக்கலாவா கம்மியா வா.. தெரியலியே.. இதுகூட தெரியாத முட்டாளா நான். என்னைப்பத்தி எல்லா விஷயமும் அவளுக்குத் தெரியும்.. எனக்கு? என்னை நானே நொந்துக்கிட்டேன்.

அவளை எழுப்பிவிட்டதும் ஆச்சர்யமா மலங்க மலங்க முழிச்சா. பாக்கறதுக்கே சிரிப்பா இருந்துச்சு. என் கல்யாணி இவ்ளோ அழகா என்ன? கலைஞ்சு போன தலையில அங்கங்க நரைமுடி. கன்னத்துலேயும் நெத்தியிலேயும் சுருக்கங்கள். ம்ம். வயசாயிடுச்சு. ஆனாலும் கொள்ள அழகு. எனக்கும் தான் நரைவிழுந்து பாதி முடி காணாம போயிடுச்சு. இதுநாள் வரை சமையக்கட்டுக்குள்ளேயே வராத மனுஷன் காபி போட்டு எடுத்துட்டு வந்துட்டானேன்னு அவளுக்கு தலைகால் புரியல. மகளுக்கு போன போட்டு அப்படியே ஒப்பிக்க ஆரம்பிச்சுட்டா. சிரிப்பா தான் வந்துச்சு. அடியே இனி இருக்கற நாளெல்லாம் உன்கூடத் தான் உனக்காகத் தான்.

காலையிலே சாப்பிட்டு வெளியே வந்ததும் கோயில் கோபுரம் கண்ணுக்குத் தெரிஞ்சது. இத்தனை நாள் போகாதவன் இன்னிக்கு போய் தான் பார்ப்போமே எனத் தோண உள்ளே நுழைஞ்சேன். ரொம்பவே மாறிப்போச்சு. அதிசயமா இருந்துச்சு. பிரகாரங்கள தாண்டி அந்த ஆயிரங்கால் மண்டத்துல வந்து உட்காந்த போது மனசுக்கு இதமா இருந்துச்சு. நினைச்சுப் பாத்தே சிரிச்சுக்கிட்டேன். கடவுள்கிட்ட சண்ட போட்டத நெனச்சு. அப்போ தான் அந்த ஜோடி என்னைக் கடந்து போனாங்க. புதுசா கல்யாணம் ஆன ஜோடி போல. பையன் முகத்துல அப்படி ஒரு சந்தோஷம். வரது இருந்தா இந்நேரம் இவன மாதிரி தான் இருப்பான். கொஞ்ச நேரம் அப்படியே கண்ணசந்துட்டேன்.

யாரோ அழற சத்தம் கேட்டு திடுக்கிட்டு எந்திருச்சேன். நானிருப்பது தெரியாமல் ரெண்டு தூண் தள்ளி ஒருத்தன் அழுதுட்டு இருந்தான். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பாத்த பையன் தான்.

‘தம்பி.. ஏன்ப்பா அழற..?’

நிமிர்ந்து பாத்த அவன் அவசர அவசரமாய் கண்ணை துடைச்சுக்கிட்டான்.
‘ஒன்னுமில்லீங்க’.

‘சரிப்பா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஒரு பொண்ணோட சாமி கும்பிடப்போன. இப்போ தனியா அழறியே? என்னாச்சு?’ அவன் முகம் வாட்டத்துக்கு போச்சு.

‘ஒன்னுமில்லீங்க. அவ என் பொண்டாட்டி தான்.’

‘மங்களகரமான லட்சணமான பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு ஏன்ம்பா அழற?’

‘அது ஒன்னு தான் கொறச்சல். அத நம்பி தான் ஏமாந்தேன்.’

‘கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுப்பா’

‘போன வாரம் தான் சார் எனக்கு கல்யாணமாச்சு. நான் பெங்களூரில இஞ்சினியரா இருக்கேன்.’

‘ம்’

‘கல்யாணத்துக்கு முன்னாடி போன் பண்ணுறபோதெல்லாம் நல்லா தான் பேசிட்டு இருந்தா. கல்யாணம் முடிஞ்ச அன்னிக்கு என்ன தொடக்கூடாதுன்னுட்டா.. சரி. கூச்சப்படறா. சரியாயிடும்னு இருந்துட்டேன். இன்னிக்கு திடீர்னு கோவிலுக்குப் போலாம்னு சொன்னா. சரியாயிட்டா போலனு இங்க வந்து பாத்தா..’

‘ம்..ம்’

‘யாரோ ஒருத்தன காமிச்சு இவன தான் லவ் பண்றேன்னு சொல்றா. தலகால் புரியல. என்ன சொல்றேன்னு கேட்டா.. ரொம்ப நாளா ரெண்டு பேரும் லவ் பண்றோம். வீட்டுலேயும் தெரியும். இவர் வேலை விஷயமா வெளிநாடு போயிருந்தார். அப்போன்னு பாத்து கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ணிட்டாங்க. என்ன பண்றதுன்னு புரியல. இவருக்கும் வர முடியல. உங்ககிட்ட சொன்னா இவரை கொன்னுடுவோம்னு வீட்ல மிரட்டினாங்க.. எங்களுக்கும் என்ன பண்றதுனு புரியலன்னு சொன்னா சார்..’

‘என்ன தம்பி இவ்ளோ சாதாரணமா சொல்ற. அதுக்காக உன்னைய கல்யாணம் பண்ணி கழுத்தறுக்கறது எந்த விதத்துல நியாயம்?’

‘அதே தான். சார். நான் பாட்டுட்டு என் வேலைய பாத்துட்டு இருந்தேன். இதான் பொண்ணு புடிச்சிருக்கான்னு கேட்டுட்டு கல்யாணமும் பண்ணிவச்சுட்டு இப்போ அவ வேற ஒருத்தன காமிச்சு அவன் கூடத் தான் வாழப்போறேன்னு சொல்றா. நான் என்ன சார் தப்பு பண்ணினேன்? இவங்க காதலிச்சா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே.. என் லைஃப்ல ஏன் சார் விளையாடறாங்க…?’

‘புரியுது தம்பி. உன் கோவம் புரியுது. இப்போ அந்த பொண்ணு எங்க…?’

‘எல்லாத்தையும் பேசிட்டு இன்னிக்கு தான் இவர் வந்தார். இதுக்கு மேலயும் உங்கள நாங்க தொந்தரவு பண்ணல. மன்னிச்சுக்கோங்கனு கழுத்தில இருந்த தாலிய கழட்டி கையில குடுத்துட்டு அவன்கூட போயிட்டா சார்…’ சொல்லிட்டு இருக்கும்போதே அழ ஆரம்பிச்சான். என்ன சொல்றதுன்னே தெரியல. ஏன் எல்லோருக்கும் இப்படி கஷ்டம் வருது. இந்தப்பையன் என்ன பாவம் பண்ணினான். இந்த உலகத்துல கடவுளே இல்லியா.. இவ்ளோ பெரிசு பெரிசா கோவில்லாம் கட்டி வச்சிருக்காங்க. அப்ப கூட மக்களுக்கு நல்லது பண்ணணும்னு ஏன் கடவுளுக்கு தோண மாட்டேங்குது. அந்த பையனுக்காக மனசு கஷ்டப்பட்டது.

‘கவலைப்படாதப்பா. எல்லாம் நல்லபடியா நடக்கும். தைரியமா வீட்டுக்குப் போ. நடந்தத சொல்லு. எல்லா பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. மனசு வலிக்கத் தான் செய்யும். புரியுது. கொஞ்ச காலம் போனா குழம்பின குட்டை மாறி இருக்கிற மனசு தெளிவாயிடும்.’

அவன் முகம் மாறியது. தெளிவு கொஞ்சம் கண்ணில் தெரிஞ்சது.

‘சரி தான். என் பிரச்சனை.. என்னோட போகட்டும்.. வீட்ல போய் என்ன சொல்லப்போறேன்னே தெரியல..’

‘கவலையவிடுப்பா.. எல்லாம் நல்லதுக்கு தான். இப்போவே உண்மை தெரிஞ்சுதே.. தைரியமா போ.’ சலிச்சுக்கிட்டே கிளம்பினான். மனசு அவனுக்காக பரிதாபப்பட்டது.
‘இவனுக்கு என்ன குறை? இந்த வயசுலேயே ஏன் இந்த வலி??’

அடுத்தநாள் காலையில எந்திரிச்சதும் முகத்துல சந்தோஷமா என் கல்யாணி காபி குடுத்துட்டு பேப்பர எடுத்துட்டு வந்தா. காபிய குடிச்சுக்கிட்டே பேப்பர திறந்தா கொட்ட எழுத்தில ‘கள்ளக் காதலனுடன் புதுமனைவி ஓட்டம். கணவன் தற்கொலை’னு போட்டிருந்தான். வரது செத்ததுக்கு அப்புறம் மொத மொறயா என் கண்ணுல தாரை தாரையா கண்ணீர் வந்தது.மனசு வலித்தது.

கீதம்
30-04-2010, 11:27 AM
நேரிலே நின்று 'உம்' போட்டு கேட்கிறமாதிரி அழகாய் கதை சொல்லிக்கொண்டே வந்து கடைசியில் மனதில் பாரம் ஏற்றிவிட்டீர்கள்.

வரது இறந்தது அவன் தவறில்லை. ஆனால் இந்த இளைஞனின் முடிவு.....? தேவையா இது? மனத்துணிவு அற்றவர்கள்! வேறென்ன சொல்வது?

மதி
30-04-2010, 11:33 AM
இது ஒரு உண்மைச்சம்பவத்தை வைத்து எழுதியது. கல்யாணத்தை துச்சமாய் நினைக்கும் பெரும்பாலான இன்றைய இளளஞர்கள் (நானும் இன்றைய இளைஞன் தான்) ஏமாற்றத்தை தாங்கும் மனப்பக்குவமும் பெறாதவர்களாய் இருக்கின்றனர். கேட்டதும் மனம் பாரமானது. எப்படி எழுதுவதென்று தெரியாததால் வரது அப்பா கதாபாத்திரத்தை கொண்டு வந்தேன். அந்த கதாபாத்திரமும் அதனை ஒட்டிய சம்பவங்களும் முழுக்க முழுக்க கற்பனையே..!

Akila.R.D
30-04-2010, 11:47 AM
யாரை குறை சொல்வது
அந்த பெண்ணையா?...
அவளது பெற்றோரையா?...
அல்லது கோழையான அந்த இளைஞனையா?..

இதில் யாராவது ஒருவர் அவசரப்படாமல் யோசித்து நடந்திருந்தால் இழப்பு இருந்திருக்காது..

சிவா.ஜி
30-04-2010, 12:25 PM
ரொம்ப வித்தியாசமான கரு. வரதுவின் மரணத்தையும், அந்த இளைஞனின் மரணத்தையும் வலியோடு சொல்லியிருக்கிறீர்கள் மதி. ரொம்ப ரொம்ப தேர்ந்த எழுத்துநடை. காட்சிகளின் விவரிப்பு மிக எதார்த்தமாக இருக்கிறது.

காதலையும், கல்யாண பந்தத்தையும் ஒருசேரக் கேவலப்படுத்திய அந்தப் பெண்ணுக்காக தன் உயிரைக் கொடுத்த இளைஞன் ஒரு முட்டாள்.

அனைத்தையும் கெட்டக் கனவாக நினைத்துப் புத்தம்புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டியவன்....வாழ்க்கையை முடித்துக் கொண்டானே.....இப்படி மன உறுதியில்லாத இளைஞர்களை நினைத்தால் பாவமாகவும் இருக்கிறது....கோபமும் வருகிறது.

அருமையான கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மதி.

மதி
30-04-2010, 12:46 PM
யாரை குறை சொல்வது
அந்த பெண்ணையா?...
அவளது பெற்றோரையா?...
அல்லது கோழையான அந்த இளைஞனையா?..

இதில் யாராவது ஒருவர் அவசரப்படாமல் யோசித்து நடந்திருந்தால் இழப்பு இருந்திருக்காது..

ஆமாம் அகிலா... அவசரப்படுவது தான் இன்றைய தலைமுறையினரின் இயல்பு..

ரொம்ப வித்தியாசமான கரு. வரதுவின் மரணத்தையும், அந்த இளைஞனின் மரணத்தையும் வலியோடு சொல்லியிருக்கிறீர்கள் மதி. ரொம்ப ரொம்ப தேர்ந்த எழுத்துநடை. காட்சிகளின் விவரிப்பு மிக எதார்த்தமாக இருக்கிறது.

காதலையும், கல்யாண பந்தத்தையும் ஒருசேரக் கேவலப்படுத்திய அந்தப் பெண்ணுக்காக தன் உயிரைக் கொடுத்த இளைஞன் ஒரு முட்டாள்.

அனைத்தையும் கெட்டக் கனவாக நினைத்துப் புத்தம்புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டியவன்....வாழ்க்கையை முடித்துக் கொண்டானே.....இப்படி மன உறுதியில்லாத இளைஞர்களை நினைத்தால் பாவமாகவும் இருக்கிறது....கோபமும் வருகிறது.

அருமையான கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மதி.
நன்றிண்ணா.. ரொம்ப நாளா இதை எழுதணும்னு நெனச்சுட்டு இருந்தேன்.. ஆனா எப்படி எழுதறதுன்னே தெரியல.. மனைவிக்கு என்ன பிடிக்கும்னே தெரியாவிட்டடலும் சிறப்பாய் குடும்பத்தை கட்டுக்கோப்பாய் நடத்தின போன தலைமுறையினர் திருமணத்திற்கும் தாலிக்கும் கொடுத்த மரியாதையை இன்றைய தலைமுறையினர் விளையாட்டாய் எடுத்துக்கறாங்களேன்னு தான். கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் பரவாயில்ல.. அப்புறமா தாலிய கழட்டி கொடுத்துடலாம்னு தோணுது. இதைக்கேட்டதும் அதிர்ச்சி ஆச்சு. அதன் வெளிப்பாடே இது.

ஆன் எ லைட்டர் சைட், இதைப்படிச்சுட்டு என் நண்பர்கள்.. வலிக்குதுடா.. இத்தனை பேர ஏன் டா போட்டு தள்ளிட்டு இருக்கன்னு... கடிச்சுட்டாங்க.. :)

இறைநேசன்
30-04-2010, 12:59 PM
மிக அருமையான சிறுக்கதை பாராட்டுக்கள் நண்பரே!

இதுபோன்ற சம்பவங்களில் ஆண்களுக்கு பெரிய பாதிப்பு என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. கொஞ்சம் மனதைரியமும் எல்லா காரியங்களையும் இலகுவாக எடுத்துகொள்ளும் மன பக்குவமும் இருந்தால் போதும் சுலபமாக "போனால் போகட்டும் போடா" என்று சொல்லி வெளியில் வந்துவிடலாம். பொதுவான பார்வைக்கு அவன்மேல் எந்த தப்பும் இல்லையே!

ஆனால் இதேபோல் கோழையான ஆண்கள் பெற்றோருக்கு பயந்து பெண்களில் வாழ்க்கையுடன் விளையாடி பெண்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய உண்மை சம்பவங்கள் உண்டு. அந்த பெண்ணே இன்று வேறு ஒருவனை மணந்துகொண்ட சீரும் சிறப்புமாக வாழ்ந்து வரும் பட்சத்தில் இதுபோன்ற தற்கொலைகள் அர்த்தமற்றது.

பாரதி
30-04-2010, 01:53 PM
எந்த வலியும் இல்லாமலே வாழ வேண்டும் என்ற நினைப்பில் இருந்தாலே மிகவும் துன்பம்தான். நேசிப்பின் அளவு கூடினாலும் பிரச்சினைதான். தற்கொலைதான் தீர்வு என்ற அவ்விளைஞனின் முடிவு மிகவும் மூடத்தனமானது. கதை நடை மிகவும் நன்றாக இருந்தது மதி.

கலையரசி
02-05-2010, 02:03 PM
ஏமாற்றத்தைத் தாங்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு வழி இந்தத் தற்கொலை தான்.
தன் சுயநலத்துக்காக அப்பாவி இளைஞன் ஒருவனின் வாழ்வைச் சீரழிக்கும் பெண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
மிகவும் சிறப்பான நடையில் அருமையான ஒரு கதையைத் தந்தமைக்குப் பாராட்டுகிறேன்.

simariba
02-05-2010, 02:18 PM
ஆரம்பத்தில்ருந்து முடிக்கும் வரை அதே விறுவிறுப்பு. கதை நன்று. சோகமுடிவு தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னும் தைரியமாக வாழ்வை எதிர் நோக்கியிருக்கலாம் நாயகன். இதில் அவன் தவறு ஒன்றுமில்லை. வாழ்க்கை தருவதை ஏற்றுக்கொள்ளத் தெரியாததால் ஏற்பட்ட முடிவு. நல்ல நடை, தொடர்ந்து எழுதுங்கள் மதி.

செல்வா
02-05-2010, 03:17 PM
வலி ரொம்பவே வலிக்குது....

வாழ்த்துக்கள்.

பா.ராஜேஷ்
02-05-2010, 03:19 PM
பாராட்டுக்கள் மதி. அழகியர் நேர்த்தியான, கதை, வசீகரிக்கும் எழுத்துக்கள். இறுதியாய் வந்த இளைஞனை கோழையாய் காட்டாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பரவாயில்லை..

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

மதி
03-05-2010, 03:28 AM
மிக அருமையான சிறுக்கதை பாராட்டுக்கள் நண்பரே!

இதுபோன்ற சம்பவங்களில் ஆண்களுக்கு பெரிய பாதிப்பு என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. கொஞ்சம் மனதைரியமும் எல்லா காரியங்களையும் இலகுவாக எடுத்துகொள்ளும் மன பக்குவமும் இருந்தால் போதும் சுலபமாக "போனால் போகட்டும் போடா" என்று சொல்லி வெளியில் வந்துவிடலாம். பொதுவான பார்வைக்கு அவன்மேல் எந்த தப்பும் இல்லையே!

ஆனால் இதேபோல் கோழையான ஆண்கள் பெற்றோருக்கு பயந்து பெண்களில் வாழ்க்கையுடன் விளையாடி பெண்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய உண்மை சம்பவங்கள் உண்டு. அந்த பெண்ணே இன்று வேறு ஒருவனை மணந்துகொண்ட சீரும் சிறப்புமாக வாழ்ந்து வரும் பட்சத்தில் இதுபோன்ற தற்கொலைகள் அர்த்தமற்றது.
நன்றி இறைநேசன்..

எந்த வலியும் இல்லாமலே வாழ வேண்டும் என்ற நினைப்பில் இருந்தாலே மிகவும் துன்பம்தான். நேசிப்பின் அளவு கூடினாலும் பிரச்சினைதான். தற்கொலைதான் தீர்வு என்ற அவ்விளைஞனின் முடிவு மிகவும் மூடத்தனமானது. கதை நடை மிகவும் நன்றாக இருந்தது மதி.

நன்றி பாரதிண்ணா..

ஏமாற்றத்தைத் தாங்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு வழி இந்தத் தற்கொலை தான்.
தன் சுயநலத்துக்காக அப்பாவி இளைஞன் ஒருவனின் வாழ்வைச் சீரழிக்கும் பெண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
மிகவும் சிறப்பான நடையில் அருமையான ஒரு கதையைத் தந்தமைக்குப் பாராட்டுகிறேன்.
நன்றி கலையரசி..

ஆரம்பத்தில்ருந்து முடிக்கும் வரை அதே விறுவிறுப்பு. கதை நன்று. சோகமுடிவு தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னும் தைரியமாக வாழ்வை எதிர் நோக்கியிருக்கலாம் நாயகன். இதில் அவன் தவறு ஒன்றுமில்லை. வாழ்க்கை தருவதை ஏற்றுக்கொள்ளத் தெரியாததால் ஏற்பட்ட முடிவு. நல்ல நடை, தொடர்ந்து எழுதுங்கள் மதி.
தைரியமாக எதிர்நோக்கியிருக்கலாம் தான். இந்த முடிவு திணிக்கப்பட்டதல்ல.. எனது உறவினர் வட்டத்தில் சின்ன விஷயத்துக்காக நடந்த இரு தற்கொலைகளின் பாதிப்பே.. பின்னூட்டத்திற்கு நன்றி அபிராமி.

வலி ரொம்பவே வலிக்குது....

வாழ்த்துக்கள்.

எனக்கும் தான்ண்ணா.. :):)
நன்றி..

பாராட்டுக்கள் மதி. அழகியர் நேர்த்தியான, கதை, வசீகரிக்கும் எழுத்துக்கள். இறுதியாய் வந்த இளைஞனை கோழையாய் காட்டாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பரவாயில்லை..

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
நன்றி ராஜேஷ்.. இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்று காட்டத்தான்..

கா.ரமேஷ்
03-05-2010, 12:53 PM
ஏமாற்றங்கள் இழப்புகள் எல்லாமே வாழ்க்கையின் பகுதி அதனை புரிதலுடன் பார்ப்பதில்தான் வாழ்க்கை அடங்கிருக்கிறது... எல்லாம் முடிந்தவுடன் யாரை குற்றம் சொல்ல முடியும்...!
நல்லதொரு கதை வாழ்த்துக்கள் தோழரே...

xavier_raja
11-05-2010, 09:26 AM
ஓடிப்போன இருவரும் நன்றாக இருக்க மாட்டார்கள்... எந்த அளவிற்கு அந்த பையன் இவளை நேசித்து இருந்தால் தற்கொலை செய்து இருப்பான்... சரி நான் கேட்கிறேன்... ஒருவேளை கணவன் மனைவி இருவரும் உடலுடன் கலந்திருந்தால் இந்த கள்ளக்காதலன் (அப்படிதான் சொல்ல தோன்றுகிறது) அப்பொழுது ஒத்துகொள்வானா?

அன்புரசிகன்
12-05-2010, 10:31 AM
வரதுவின் இழப்பு ஒரு பாரிய வலி தான்... ஆனால் மற்ற சிங்கம் செய்தது எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது....

இந்த கதையில் பார்த்தால் வரதுவை இறைவன் வேளையாக அழைத்ததற்கு காரணம் இவ்வகையான வலியை வரதுவுக்கு கிடைக்காமல் இருப்பதற்காகவோ...?

ஒரு வேளை வரது இருந்து இவ்வாறான வலியை உணர்ந்திருந்தால் அந்த வலி அனைவரையும் வரது சார்ந்தோரையும் உறுத்தியிருக்குமோ... இதனால் தான் வேளையாக அழைத்தாரோ...

வலி படிக்கும் போது தெரிகிறது. வாழ்த்துக்கள் மதி அண்ணா....

இறுதியில் அவர் அவ்வாறு அழுதிருக்க தேவையில்லை என்று அவருக்கு சொல்லிவிடுங்கள்.

மதி
12-05-2010, 11:47 AM
ஏமாற்றங்கள் இழப்புகள் எல்லாமே வாழ்க்கையின் பகுதி அதனை புரிதலுடன் பார்ப்பதில்தான் வாழ்க்கை அடங்கிருக்கிறது... எல்லாம் முடிந்தவுடன் யாரை குற்றம் சொல்ல முடியும்...!
நல்லதொரு கதை வாழ்த்துக்கள் தோழரே...
நன்றி.. ரமேஷ்...

ஓடிப்போன இருவரும் நன்றாக இருக்க மாட்டார்கள்... எந்த அளவிற்கு அந்த பையன் இவளை நேசித்து இருந்தால் தற்கொலை செய்து இருப்பான்... சரி நான் கேட்கிறேன்... ஒருவேளை கணவன் மனைவி இருவரும் உடலுடன் கலந்திருந்தால் இந்த கள்ளக்காதலன் (அப்படிதான் சொல்ல தோன்றுகிறது) அப்பொழுது ஒத்துகொள்வானா?

இந்தளவுக்கு ஏன் சார்?

வரதுவின் இழப்பு ஒரு பாரிய வலி தான்... ஆனால் மற்ற சிங்கம் செய்தது எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது....

இந்த கதையில் பார்த்தால் வரதுவை இறைவன் வேளையாக அழைத்ததற்கு காரணம் இவ்வகையான வலியை வரதுவுக்கு கிடைக்காமல் இருப்பதற்காகவோ...?

ஒரு வேளை வரது இருந்து இவ்வாறான வலியை உணர்ந்திருந்தால் அந்த வலி அனைவரையும் வரது சார்ந்தோரையும் உறுத்தியிருக்குமோ... இதனால் தான் வேளையாக அழைத்தாரோ...

வலி படிக்கும் போது தெரிகிறது. வாழ்த்துக்கள் மதி அண்ணா....

இறுதியில் அவர் அவ்வாறு அழுதிருக்க தேவையில்லை என்று அவருக்கு சொல்லிவிடுங்கள்.
அவருக்கு எங்கே சொல்றது...?? இதுல ஒரு மேட்டர் மட்டும் தான் உண்மை.. மத்ததெல்லாம் கற்பனை...!!!

அமரன்
13-05-2010, 10:09 AM
நல்ல கதை மதி அண்ணா.

அன்பு ரசிகனுக்கே அண்ணன்ன்னா எனக்கு பெரியண்ணா நீங்க.

கல்யாணம் ஆகி முதுமை ஏறிய தம்பதிகளின் காதலைத் தொட்டு (தாம்பத்யம்)
இக்காலக் காதலின் கறுப்புக் கரை ஒன்றைக்காட்டி வலியேற்றி விட்டீங்க.

எல்லாத்தையும் பாத்து பாத்து செதுக்கிய நீங்கள் உணர்வுகளை ஊட்டுவதில் சற்று தவறியதாகத் தெரிகிறது.

ம்...ம்.... உங்க கதைக்கான விமர்சனம் இப்படி முடியகூடாதே.. எதையாவது முடிச்சு வைக்கனுமே... உங்களைக் கட்டிக்கப் போறவங்க குடுத்து வைச்சவங்க.

வாழ்த்துகிறேன்.

மதி
13-05-2010, 10:31 AM

அண்ணாக்களே....நான் இன்னும் சின்ன பையன் தானுங்க..... உங்க இளவல் தான்...ஹிஹி

உணர்வு விஷயத்தில்... கற்பனை பண்ண முடிஞ்ச வரைக்கும் தான் எழுத முடிஞ்சது. அந்த 58 வயது முதியவர் கதாபாத்திரம் முழுக்க முழுக்க கற்பனை. ஒரு ஐம்பத்தெட்டு வயது காரர்.. என்ன பண்ணுவார்..? எப்படி யோசிப்பார்னு.? இவ்ளோ தான் யோசிக்க முடிஞ்சது.. அனுபவமின்மை.. :eek::eek:

அடுத்த மேட்டர நீங்க சொன்னது என் காதிலேயே விழல.:icon_b: