PDA

View Full Version : பிறந்தநாள்…..இன்று பிறந்தநாள்......

கீதம்
29-04-2010, 01:03 AM
இன்றைக்கு ஏன் இத்தனை உற்சாகம்? நேற்றுவரை இந்தப் பரபரப்பில்லையே! திருமணத்துக்குப்பின் வரும் முதல் பிறந்தநாள் என்பதாலா? இருபத்திரண்டு பிறந்தநாட்களைச் சீரும் சிறப்புமாய் அம்மா, அப்பாவுடன் கொண்டாடியபின்னும் இன்று பிரபுவுடன் கொண்டாடவிருக்கும் பிறந்தநாளே தனிச்சிறப்பென்று உள்மனம் குதூகலமிடுவதாலா?

அம்மா அப்பாவின் அதிகாலை அழைப்பு அவள் உற்சாகத்தின் அளவை இன்னும் உயர்த்திவிட்டிருந்தது.

அயர்ந்து தூங்குகிறவனை எழுப்புவதா? அல்லது தானே எழும்வரை காத்திருப்பதா? அவளது ஆர்வம் முதல் கேள்விக்கு தலைசாய்த்தது.

இதமாய் மெல்ல எழுப்பினாள். என்றுமில்லாத வழக்கமாய் காலையிலேயே குளித்து, புதியபுடவையுடுத்தி புத்தம்புது மலரென தன்முன் நின்றவளை அப்படியே கட்டிக்கொள்வான் என்ற கனவு கலைந்தது, "காப்பி எங்கே?" என்ற கேள்வியில்.

காப்பி கையிலிருந்தால் அவன் கட்டிக்கொள்ளும் வேகத்தில் தளும்பி புடவையில் கறையுண்டாக்கிவிடுமே என்று பயந்து அடுப்படி மேடையிலேயே அதை விட்டுவந்ததை சொல்லவா முடியும்? ஏமாற்றத்தை மெல்ல விழுங்கியபடியே "இதோ, எடுத்திட்டு வரேன்!" என்று கூறி நகர்ந்தாள்.

அவன் கண்களைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும் வாழ்த்துச் சொல்வான் என்ற எதிர்பார்ப்பில் அவளது கண்கள் அலைந்தன. அலைந்து அலைந்து களைத்ததுதான் மிச்சம். ம்ஹும்! அவன் எதையும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

இப்படி அலைகிறாளே, என்னவாக இருக்கும் என்று யோசிக்க மாட்டானா? அவளது புத்துணர்வுக்கு காரணம் என்னவென்று யூகிக்க மாட்டானா? கண்முன் ஆட்டப்படும் கிலுகிலுப்பையைக் கண்டுகொள்ளாத குழந்தை போல் அல்லவா நடந்துகொள்கிறான்? ஒருவேளை மறந்துவிட்டானோ? இரண்டுநாட்களுக்கு முன்புதானே சூசகமாக சொல்லியிருந்தாள்? அதற்குள் எப்படி......?

ஜானு தவித்தாள். தானே சொல்லிவிடலாமா? சொன்னபின்பு நினைவு வந்து வருத்தப்படுவானோ? மறந்துவிட்டதே இந்த மரமண்டை என்று குட்டிக்கொள்வானோ? வேண்டாம், தன் வாயால் சொல்லவேண்டாம். அவனாகவே புரிந்துகொள்ளட்டும்.

இட்லியுடன் பரிமாறப்பட்ட கேசரிக்கான காரணமும் கேட்கப்படவில்லை. இதென்ன சண்டித்தனம்? நானும் விடப்போவதில்லை. தான் சொல்லாமலேயே அவன் வாயால் வாழ்த்து வாங்கிவிட்டுதான் மறுவேலை.

கண்ணாடி வளையல்கள் குலுங்கும் கரங்களை அவன்முன் ஆட்டி ஆட்டி பேசினாள். அணிந்திருந்த பனாரஸ் புடவையை அடிக்கொருதரம் சரி செய்தாள். எதுவும் வேண்டாம், எங்கே கிளம்பியிருக்கிறாய் என்றுகூடவா கேட்கக்கூடாது? சரியான கல்லுளிமங்கன்.

போனமாதம் அவனது அலுவலக நண்பன் ராஜேஷ் வீட்டுக்குப் போன சம்பவம் நினைவுக்கு வந்தது.

அவர் மனைவி ரேகா கேட்டாள், " உங்க ஹஸ்பெண்ட் உங்களுக்கு என்ன ட்ரீட் கொடுத்தார்?"

"எதுக்கு?" அப்பாவியாய் இவள்.

"வேறெதுக்கு? ப்ரமோஷனுக்குதான்!"

"இல்லையே! அப்படி எதுவும் இல்லையே, இருந்தா சொல்லியிருப்பாரே?"

திருமணமான இந்த ஒன்பது மாதங்களில் கணவன் தன்னிடமிருந்து எதையும் மறைக்கவில்லை என்கிற அசாத்திய நம்பிக்கை அவளுக்கு.

ரேகா சிரித்தாள்.

"சார், நீங்க பயங்கரமான ஆளுதான்! சொன்னா, உங்க ஒய்ப் பெரிசா ஏதாவது கேட்டுடப்போறாங்களோன்னு பயந்துகிட்டுதானே மறைச்சிட்டீங்க?"

பிரபு எவ்வித அலட்டலுமின்றி சொன்னான், " இதிலே மறைக்க என்ன இருக்கு? அக்கவுண்ட்டே எங்க ரெண்டுபேர் பேர்லயும்தான் இருக்கு. அவளுக்குத் தெரியாமலா போகும்? இது ஒரு பெரிய விஷயம்னு சொல்லத் தோணலை!"

ரேகா ஜானுவைப் பார்த்த பார்வையில் பரவியிருந்தது, பரிதாபமா? பரிகாசமா? புரியவில்லை.

ஜானுவுக்கு அவனுடைய உதாசீனம் உறுத்தியது. அலுவலகத்தில் பதவி உயர்வு! அதுவும் வந்து இரண்டு மாதம் ஆகிவிட்டதாம். இதுவரை அவளிடம் மூச்சுவிடவில்லை. கேட்டால் இது பெரிய விஷயம் இல்லையாம்.

சே! தன் மனைவி மற்றவர் முன் அவமானப்படுவாளே என்பதற்காகவாவது 'மறந்துவிட்டேன்' , ‘ஒரு சர்ப்ரைஸுடன் சொல்லலாம் என்றிருந்தேன்’ என்று ஏதாவது பொய்யைச் சொல்லியாவது பூசி மெழுகியிருக்கலாம்.

வீட்டுக்கு வந்தபிறகு விம்மலுடன் விளக்கம் கேட்க, அப்போதும் அதையே சொன்னான்.

"இது ஒரு பெரிய விஷயமா? உனக்கு என்ன வேணும்? வாங்கிக்கோ!" என்று அலட்சியமாகச் சொன்ன பிறகு என்ன செய்வது? அவளென்ன புடவை, நகைக்காகவா அவனிடம் வம்பு பிடிக்கிறாள்? தன் கணவன் மனந்திறந்து தன்னிடம் பேசவேண்டும், இன்ப துன்பங்களைப் பகிர வேண்டும் என்றுதானே? அதைக்கூடப் புரிந்துகொள்ளமுடியாதவனா, இவன்?

இப்படி எத்தனையோ நிகழ்வுகள்! வேண்டுமென்றே பொய்க்கோபம் காட்டினாலும் அதையும் பொருட்படுத்துவதில்லை.

குப்புற விழுந்த குழந்தை, முதலில் அழும்; பின் தன்னைத் தூக்கிவிட, அருகில் எவருமில்லை என்று புரிந்தவுடன் தானே எழுந்து, மண்ணைத் தட்டிவிட்டு மீண்டும் விளையாடப்போகுமே, அதுபோல்தான் அவள் ஊடலும்.

ஒரு கெஞ்சலோ, கொஞ்சலோ, மிஞ்சலோ எதுவுமில்லாமல் வந்த வழியிலேயே திரும்பிவிடும். கொஞ்சகாலம் அவனுடன் அப்படி இப்படி செல்லச்சண்டையிட்டுக்கொண்டிருந்தவள், இப்போது அதையும் விட்டுவிட்டாள்.

ஆனால் அது எதையும் நினையாமல் இன்று அவள் மனம் குதியாட்டம் போடுவதென்னவோ உண்மை.

ஒவ்வொரு பிறந்தநாளும் அவளுக்கு மறக்கமுடியாத நினைவுகளைத் தரும். காலையில் அவளை எழுப்புவதே அம்மா, அப்பாவின் அன்பு முத்தங்களும் வாழ்த்துகளும்தான். இருவரும் அன்று கட்டாயம் விடுப்பு எடுத்துக்கொள்வார்கள். இவளும்தான். மூவரும் சேர்ந்து கோயில், சினிமா, பீச் என்று சுற்றிவிட்டு கைக்கொள்ளாத பரிசுகள் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப இரவு பதினொன்றாகிவிடும். படுக்கப்போகுமுன் மீண்டும் அம்மா அப்பாவின் முத்தங்களும், வாழ்த்துகளும் விடைகொடுக்கும்.

இதுதான் முதல்முறை, இவள் வீட்டிலிருக்கிறாள், அதுவும் தனியாக!

போகட்டும்! அலுவலகவேலை அதிகமாக இருக்கலாம். அதனால் லீவு போட்டுக்கொண்டு ஊர் சுற்றுவதென்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால்....ஆசையாய் ஒரு வாழ்த்து …..வாய் திறந்து சொன்னால்தான் என்ன? என்ன குறைந்துவிடும்?

பட்டென்று உச்சியில் பல்பு ஒளிர்ந்தது. ஒருவேளை, மாலைக் கொண்டாட்டத்தை மனதில் வைத்திருக்கிறானோ? மணக்க மணக்க, மல்லிகைப்பூவுடன் வந்து மகிழ்விக்கப்போகிறானோ? திரையரங்குச் செல்லலாம் என்று திடீர் அறிவிப்பு செய்து திடுக்கிடச்செய்வானோ? அவள் ஆசைப்பட்ட பிளாஸ்மா டிவி வாங்கித்தந்து அவளை வாய் பிளக்க வைப்பானோ?

சினிமாவில் காட்டுவதுபோல், ரகசிய ஏற்பாடுகள் செய்து, கண்களை இதமாய்ப் பொத்தி, இருட்டறை அழைத்துச்சென்று, படீரென்றுவிளக்குகளை எரியச்செய்து, பர்த்டே பாட்டுப்பாடி, கேக் எடுத்து அவளுக்கு ஊட்டி…......என்னென்னவோ ஆசைகள்.......கனவுகள்!

அல்பமாய்த் தோன்றினாலும் தறிகெட்டு ஓரும் நினைவுகளை அடக்கமுடியவில்லை.இருப்புக் கொள்ளாதவளாய் தவித்தாள்.
இன்று அவனுக்குப் பிடித்த மட்டன் கறி, சிக்கன் ப்ரைடு ரைஸ், கேரட் ஹல்வா எனப் பார்த்துப் பார்த்து செய்தாள்.

ஒருபக்கம் கோபம் வந்தது. இன்று தனக்குப் பிறந்தநாள்! தனக்குப் பிடித்ததை சாப்பிடாமல்.....தான் விரும்பியதைச் செய்யாமல்…...என்ன இது பைத்தியக்காரத்தனம்?

ஆனாலும் இதமான ஓர் இன்பம் இதயத்தை வருடவே செய்தது.

மாலை நெருங்க, நெருங்க, அவள் பரவசத்துடன் காத்திருந்தாள். எதிர்பாராத பரிசுக்காக அவள் மனம் ஏங்கியது.

போன் வரவும், படபடக்கும் இதயத்துடன் "ஹாய்!" சொன்னாள்.

"ஜானு! இங்கே கொஞ்சம் வேலை அதிகம். வர லேட்டாகும். சாப்பாடு எடுத்துவைக்க வேண்டாம். நீ சாப்பிட்டு படுத்துக்கோ!"

"..........."

"ஜானு.......கேக்குதா?"

"ம்"

சுயபச்சாதாபம் பீறிட்டு கண்ணீராய் வெளிப்பட்டது. போனை வைத்துவிட்டு ஓவென்று வாய்விட்டு கதறினாள்.

சமைத்ததை எடுத்து ப்ரிட்ஜில் வைத்து மூடினாள். குமுறிய மனதுடன் சோபாவில் சாய்ந்தவள், அப்படியே உறங்கிப்போனாள்.

சத்தம் கேட்டு கண் விழித்தபோது பிரபு கைலிக்கு மாறிக்கொண்டிருந்தான்.

"எப்போ வந்தீங்க?"

"இப்பதான்! நீ சாப்பிட்டியா?"

"ம்"

"ஏன் என்னவோ போலயிருக்கே?"

கேள்வி அவளைக்கூறுபோட்டது. உண்மையிலேயே மறந்துதான் போய்விட்டான்போலும். இதற்குமேலும் வீம்பு ஆகாது என்று உணர்ந்தவள், மெல்லிய புன்னகையினூடே,
"இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள்!" என்றாள்.

"அட, அப்படியா? நீ இன்னுமா பிறந்தநாள் கொண்டாடிகிட்டு இருக்கே? அதெல்லாம் எனக்குக் குழந்தைப் பருவத்தோடவே முடிஞ்சிடுச்சி!"

சொன்னபின்பாவது வாழ்த்துவான் என்று எதிர்பார்த்தவளுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியது. இனி இங்கு நிற்பதில் பயனில்லை என்று படுக்கையறை போக முற்பட்டவளை, "ஜானு" என்ற குரல் தடுத்தது.

ஆவலாய் திரும்பியவளிடம்,
"குட்நைட், ஜானு! எனக்கு இன்னும் கொஞ்சம் வேலையிருக்கு, முடிக்கணும், நீ போய் படுத்துக்கோ!"

அவள் அசையாமல் நின்றாள்.

"என்ன, ஜானு?"

"எனக்கு 'ஹாப்பி பர்த்டே' சொல்றீங்களா?"

கேட்டேவிட்டாள். வாக்கியத்தை முடிக்குமுன் துக்கம் பெருகி தொண்டையை அடைத்தது. கண்ணீரைக் கட்டுப்படுத்தினாள்.

"இதென்ன பெரிய விஷயம்? ஹாப்பி பர்த்டே! போதுமா?"

அவன் சிரித்தான். அவள் மெல்ல நடந்து அவனருகில் வந்தாள். தன் கரங்களை அவன் தோளில் மாலையாக்கி, அவன் கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்து, "தாங்க்ஸ்!" என்றாள். சொல்லிவிட்டு படுக்கையறை நோக்கி நடந்தவளைப் பார்த்து, சிரித்தபடியே சொன்னான்,

"நீ இன்னும் குழந்தையாவே இருக்கே, ஜானு!"

சொ.ஞானசம்பந்தன்
29-04-2010, 01:41 AM
புது மனைவியின் ஏக்கத்தை வெளிப்படுத்திய விதம் மிக்க அருமை. சொ.ஞானசம்பந்தன்

பாரதி
29-04-2010, 01:58 AM
எதிர்பார்ப்பு இல்லையென்றால் ஏமாற்றம் இல்லை என்ற சொற்றொடர்தான் நினைவுக்கு வருகிறது. நெருங்கியவர்களின் ஒரு சொல் / ஒரு பார்வை போதும் என்ற ஏக்கத்தில் மிதக்கும் மனதின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது இக்கதை! நன்றாக இருக்கிறது நண்பரே.

மதி
29-04-2010, 04:49 AM
அழகாக செதுக்கப்பட்ட கதை... ஜானுவின் ஏக்கத்தை வெளிப்படுத்திய விதம் அருமை. இத்தனை வருடங்களாக செல்லம் கொஞ்சி வாழ்ந்தவளின் ஏமாற்றம் கண்முன்னே தெரிகிறது. பிரபுவின் கதாபாத்திரம் தான் கொஞ்சம் உறுத்துகிறது கல்யாணமாகி ஒரு வருடம் கூட ஆகாமலேயே இவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்வான்..? என்ன மனுசன்யா அவன்..

பாராட்டுக்கள் கீதம்.

கீதம்
29-04-2010, 05:28 AM
புது மனைவியின் ஏக்கத்தை வெளிப்படுத்திய விதம் மிக்க அருமை. சொ.ஞானசம்பந்தன்

பாராட்டுக்கு மிக்க நன்றி.

கீதம்
29-04-2010, 05:29 AM
எதிர்பார்ப்பு இல்லையென்றால் ஏமாற்றம் இல்லை என்ற சொற்றொடர்தான் நினைவுக்கு வருகிறது. நெருங்கியவர்களின் ஒரு சொல் / ஒரு பார்வை போதும் என்ற ஏக்கத்தில் மிதக்கும் மனதின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது இக்கதை! நன்றாக இருக்கிறது நண்பரே.

மிக்க நன்றி பாரதி அவர்களே.

கீதம்
29-04-2010, 05:32 AM
அழகாக செதுக்கப்பட்ட கதை... ஜானுவின் ஏக்கத்தை வெளிப்படுத்திய விதம் அருமை. இத்தனை வருடங்களாக செல்லம் கொஞ்சி வாழ்ந்தவளின் ஏமாற்றம் கண்முன்னே தெரிகிறது. பிரபுவின் கதாபாத்திரம் தான் கொஞ்சம் உறுத்துகிறது கல்யாணமாகி ஒரு வருடம் கூட ஆகாமலேயே இவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்வான்..? என்ன மனுசன்யா அவன்..

பாராட்டுக்கள் கீதம்.

அலட்சியம் என்று சொல்லிவிடமுடியாது. சிலர் இயல்பாகவே எதற்கும் அலட்டிக்கொள்ளாதவர்களாக இருப்பார்கள். சிலர் சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இதுபோல் ஒரு குணம். அவ்வளவுதான்.

உங்கள் பாராட்டுக்கு நன்றி மதி அவர்களே.

கலையரசி
29-04-2010, 01:52 PM
சிலர் இப்படித்தான். மனைவியின் எதிர்பார்ப்புகளைப் பற்றிச் சிறிதும் அலட்டிக் கொள்ளமாட்டார்கள். பரிசு ஏதும் வாங்கித் தர வேண்டாம். வாயைத் திறந்து ஒரு வாழ்த்து கூடவாத் தெரிவிக்கக் கூடாது? கணவனிடம் வாழ்த்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ஜானுவின் ஏமாற்றத்தைக் மனதில் படும் படி சொல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் கதாசிரியர். பாராடுகிறேன் கீதம்!
(இக்கதையைப் படிக்கும் ஆண்கள் இனிமேலாவது தங்கள் மனைவியின் பிறந்த நாள், தம் கல்யாண நாள் ஆகியவற்றை நினைவில் வைத்திருந்து வாழ்த்துச் சொல்லி சிறந்த கணவர் என்ற பட்டத்தைப் பெற முயற்சிப்பீர்களாக!)

சிவா.ஜி
29-04-2010, 03:50 PM
மற்றொரு அருமையான கதை. ஜானுவோடு சேர்ந்து படிப்பவர்களையும்.....வாழ்த்துக்காக ஏங்க வைத்துவிட்டீர்கள். ஜானுவின் எதிர்பார்ப்பையும், ஏமாற்றத்தையும் மிக அழகாகப் பதிவாக்கியிருக்கிறீர்கள்.

பிரபுவைப்போல பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். எந்த விஷயத்துக்கும் அலட்டிக்கொள்ளாத குணம். ஆனால், ஜானுவைப்போல பல வருடங்களாக பெற்றோரின் செல்லத்தில் வளர்ந்தவர்கள்...கணவனிடமும் அதையே எதிர்பார்ப்பார்கள்.

அருமையான மனவியல் கருவை எதார்த்தமான கதை சொல்லலில் பிரமாதப்படுத்திவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள் கீதம் அவர்களே.

பா.ராஜேஷ்
29-04-2010, 09:23 PM
மிக மிக நன்று கீதம். கதை படிக்கும் பொது பிரபு வாழ்த்து சொல்வானா மாட்டானா என்ற பரிதவிப்பு வாசகருக்கும் வருவது உண்மை... சொல்லாடல்கள் அருமை. பாராட்டுக்கள்

govindh
29-04-2010, 10:11 PM
வாழ்த்துக்கள் கீதம் அவர்களே...

"ஏன் என்னவோ போலயிருக்கே?"

கேள்வி அவளைக்கூறுபோட்டது. உண்மையிலேயே மறந்துதான் போய்விட்டான்போலும். இதற்குமேலும் வீம்பு ஆகாது என்று உணர்ந்தவள், மெல்லிய புன்னகையினூடே,
"இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள்!" என்றாள்."

பெண்மையின் மென்மை மனதினை....ஏக்கத்தினை அழகு வார்த்தைகளால் வடித்துக் காட்டியிருக்கிறீர்கள்...
பாராட்டுக்கள்.

கீதம்
29-04-2010, 10:39 PM
சிலர் இப்படித்தான். மனைவியின் எதிர்பார்ப்புகளைப் பற்றிச் சிறிதும் அலட்டிக் கொள்ளமாட்டார்கள். பரிசு ஏதும் வாங்கித் தர வேண்டாம். வாயைத் திறந்து ஒரு வாழ்த்து கூடவாத் தெரிவிக்கக் கூடாது? கணவனிடம் வாழ்த்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ஜானுவின் ஏமாற்றத்தைக் மனதில் படும் படி சொல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் கதாசிரியர். பாராடுகிறேன் கீதம்!
(இக்கதையைப் படிக்கும் ஆண்கள் இனிமேலாவது தங்கள் மனைவியின் பிறந்த நாள், தம் கல்யாண நாள் ஆகியவற்றை நினைவில் வைத்திருந்து வாழ்த்துச் சொல்லி சிறந்த கணவர் என்ற பட்டத்தைப் பெற முயற்சிப்பீர்களாக!)

பாராட்டுக்கு நன்றி, அக்கா.
உங்கள் ஆலோசனைக்கு கூடுதல் நன்றி.

கீதம்
29-04-2010, 10:42 PM
மற்றொரு அருமையான கதை. ஜானுவோடு சேர்ந்து படிப்பவர்களையும்.....வாழ்த்துக்காக ஏங்க வைத்துவிட்டீர்கள். ஜானுவின் எதிர்பார்ப்பையும், ஏமாற்றத்தையும் மிக அழகாகப் பதிவாக்கியிருக்கிறீர்கள்.

அருமையான மனவியல் கருவை எதார்த்தமான கதை சொல்லலில் பிரமாதப்படுத்திவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள் கீதம் அவர்களே.

மிக்க நன்றி சிவா.ஜி அவர்களே. உங்கள் பின்னூட்டத்துக்குப் பிறகுதான் மன்றத்துக் கதைகள் மேலும் பொலிவுறுகின்றன. அதில் என் கதையும் ஒன்று என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

கீதம்
29-04-2010, 10:44 PM
மிக மிக நன்று கீதம். கதை படிக்கும் பொது பிரபு வாழ்த்து சொல்வானா மாட்டானா என்ற பரிதவிப்பு வாசகருக்கும் வருவது உண்மை... சொல்லாடல்கள் அருமை. பாராட்டுக்கள்

உங்கள் உளமார்ந்த பாராட்டுக்கு நன்றி பா.ராஜேஷ் அவர்களே.

கீதம்
29-04-2010, 10:46 PM
வாழ்த்துக்கள் கீதம் அவர்களே...

"ஏன் என்னவோ போலயிருக்கே?"

கேள்வி அவளைக்கூறுபோட்டது. உண்மையிலேயே மறந்துதான் போய்விட்டான்போலும். இதற்குமேலும் வீம்பு ஆகாது என்று உணர்ந்தவள், மெல்லிய புன்னகையினூடே,
"இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள்!" என்றாள்."

பெண்மையின் மென்மை மனதினை....ஏக்கத்தினை அழகு வார்த்தைகளால் வடித்துக் காட்டியிருக்கிறீர்கள்...
பாராட்டுக்கள்.

உங்கள் மனம் தொட்ட வரிகளை மேற்கோளிட்டுப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி கோவிந்த் அவர்களே.

அன்புரசிகன்
01-05-2010, 01:15 AM
கதையின் முடிவுவரை ஒரு ஏக்கம் பரிதவிப்பு ஏமாற்றம் கலந்த கலவை ஒன்று தெரிந்தது.

வாழ்த்துக்கள்.

கீதம்
02-05-2010, 11:24 AM
உண்மைதான். நாம் நண்பன் ஒருவன் திருமணத்துக்கு பத்திரிகை கொடுக்க ஊரெல்லாம் அவனோடு சுற்றியிருப்போம். ஊருக்கே கொடுத்த அவன் நமக்குக் கொடுக்க மறந்திருந்தால் எப்படி இருக்கும்? எதிர்பார்ப்பு, ஏக்கம், வருத்தம் எல்லாம் கலந்துதானே? அப்படியொரு மனநிலையைதான் இதில் பிரதிபலித்தேன்.

வாழ்த்துக்கு நன்றி, அன்புரசிகன் அவர்களே.

அமரன்
13-05-2010, 10:37 AM
வழக்கம்போலவே கீதத்தின் முத்திரை..

புதுமணவரசியின் வாழ்க்கையை வாழ்த்து காட்டிவிட்டது கதை.

நீ இன்னும் சின்னப் பிள்ளையாகவே இருக்கிறாய் ஜானு என்ற வசனத்தில் பிரபு வாழ்கிறான்.

முக்கியமான நாட்கள், தருணங்களை நினைவில் வைச்சிருப்பது உறவுப் பிணைப்பை உறுதியாக்க உதவும்.

அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள், கசப்புகள், காயங்கள் இருந்த இடமே காணாமல் போக இத்தகைய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்க வேண்டும்.

ஒருவருட சோகத்தை இல்லாமல் செய்யும் வல்லமை ஒரு நொடி முத்தத்துக்கு உண்டு என்பதை அனைவரும் உணரவேண்டும்.

நமது இலக்கியங்கள் விளக்கி நிற்கும் சுற்றந்தழால் இல்லறம் சிறக்க, வாழ்க்கை இனிக்க பெரிதும் ஒத்தாசையாக உள்ளன. அந்த வரிசையில் இந்தக் கதையும் அடக்கம்.

கீதம்
16-05-2010, 12:27 AM
கதையின் ஆழத்தைத் துல்லியமாய்க் கணக்கிட்டுவிட்டீர்கள், அமரன். உங்கள் விரிவான விமர்சனத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

பா.சங்கீதா
17-05-2010, 05:29 AM
பாராட்டுக்கள், கீதம்அக்கா..........
கதை ரொம்ப நல்ல இருக்கு.......:)

கீதம்
19-05-2010, 10:11 PM
பாராட்டுக்கள், கீதம்அக்கா..........
கதை ரொம்ப நல்ல இருக்கு.......:)

பாராட்டுக்கு நன்றி சங்கீதா.

அக்னி
08-06-2010, 06:59 AM
கதையின் முடிவில் மீண்டும்,

குப்புற விழுந்த குழந்தை, முதலில் அழும்; பின் தன்னைத் தூக்கிவிட, அருகில் எவருமில்லை என்று புரிந்தவுடன் தானே எழுந்து, மண்ணைத் தட்டிவிட்டு மீண்டும் விளையாடப்போகுமே, அதுபோல்தான் அவள் ஊடலும்.
இவ்வரிகள்...

வந்துபோவதுதான்,
ஊடலில் வாடல்...
வந்துதங்கிவிட்டால்,
கருகிப் போய்விடும் காதல்...

அமர பின்னூட்டம் சொல்வதுபோல,
எந்நாளும் தினமும் பேசுவதை விடவும், விசேட தினங்களில் சொல்லப்படும் வாழ்த்துக்கள் இடைவெளிகளை நிரப்பும்...

ஏக்க மனதைப் பிரதிபலிக்கும் கதை.
கீதம் அவர்களுக்கு என் பாராட்டு...

கீதம்
10-06-2010, 01:35 AM

அழகான ஆழ்ந்த பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி அக்னி அவர்களே.

த.ஜார்ஜ்
13-06-2010, 02:26 PM
அக்னி மேற்கோள் காட்டிய வரிகளையே நானும்சொல்ல விழைகிறேன்.ஊடலையும் கூடலையும் கச்சிதமாக சொல்லிவிடுகின்றன அந்த வரிகள். உங்கள் கதையில் வருகிற மாதிரி சூழலை நானும் சந்தித்திருக்கிறேன்.ஆரம்பத்தில் என் மனைவியின் பிறந்த நாளை மறந்து தொலைத்து விட்டு அவளை கலங்க வைத்திருக்கிறேன். நான் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை.அது போன்ற அசட்டையாய் இருந்திருக்கிறேன்.இவளோ எல்லா உறவுகளுக்கும் அவர்களது பிறந்த நாளுக்காக முதல் ஆளாய் வாழ்த்து சொல்வாள்.அவர்கள் கூட மறந்து போய்விடுவார்கள் என்பதுதான் சோகம்.அவள் எதிர்பார்ப்பு, வாழ்த்து என்ற ஒற்றை வார்தைக்காக மட்டும்தான் என்பது இதுபோல்தான் அவளே சொல்லிதான் உறைத்தது.அந்த வருடம் முந்தின தினமே உறவினர்கள், நண்பர்கள்,உடன் பணியாளர்கள் என்று எல்லோருக்கும் தொலைபேசி மறு நாள் அவ்ளுக்கு வாழ்த்து சொல்லக்கெட்டுக் கொண்டது இன்னமும் அவளுக்குத் தெரியாது. மறு நாள் விடியற்காலையிலிருந்து வந்து குவிந்த வாழ்த்துகளால் திக்குமுக்காடிப் போனதில் சந்தோசத்தால் வீடே நிறைந்தது. 'யாரோ இதுகளுக்கு சொல்லிருக்கா. இல்லென்னா இதுகளுக்கு எப்படி தெரியும்?' நான் மூச்சே விடவில்லை. அந்த நினைவுகளை மீட்டெடுத்த கீதம், நன்றி

கீதம்
27-06-2010, 10:59 PM
மனைவியின் ஏக்கம் புரிந்து அவரை மகிழ்வித்த உங்களை மனதார பாராட்டுகிறேன்.
அழகிய நினைவலைகளுடன் பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி, ஜார்ஜ் அவர்களே.

Ravee
29-07-2010, 06:05 PM
ம்ம் என்னை பார்த்துக்கூட சில பேர் கேட்பார்கள் என்னடா இன்னமும் டாம் அண்ட் ஜெர்ரி, மிக்கி , பாப்பாயி கார்ட்டூன் பாக்குற என்று . இதுக்கெல்லாம் நான் வெக்கப்பட்டது கிடையாது. எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தை உள்ளம் இருக்கணும் . அதை பூட்டி வச்சுட்டு எதை இந்த உலகத்தில பெரிசா அனுபவிக்க போறாங்க என்று தெரியவில்லை :):)

கீதம்
31-07-2010, 12:45 AM
உங்கள் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி, ரவி அவர்களே. மன்றம் வந்தவுடன் வரிசையாய் என் கதைகளைப் படித்ததுடன் தவறாமல் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் உங்கள் அன்புக்கு மீண்டும் என் நன்றி.

KAMAKSHE
01-01-2011, 01:12 PM
உங்கள் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி, ரவி அவர்களே. மன்றம் வந்தவுடன் வரிசையாய் என் கதைகளைப் படித்ததுடன் தவறாமல் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் உங்கள் அன்புக்கு மீண்டும் என் நன்றி.
இது உங்களோட அடுத்த சூப்பர் கதை..

கதையோட உயிர் இதோ இந்த வரிகள் தான் ... மனதை அப்படியே அழுத்துயது கீதம்

அவன் கண்களைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும் வாழ்த்துச் சொல்வான் என்ற எதிர்பார்ப்பில் அவளது கண்கள் அலைந்தன. அலைந்து அலைந்து களைத்ததுதான் மிச்சம். ம்ஹும்! அவன் எதையும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

இப்படி அலைகிறாளே, என்னவாக இருக்கும் என்று யோசிக்க மாட்டானா? அவளது புத்துணர்வுக்கு காரணம் என்னவென்று யூகிக்க மாட்டானா? கண்முன் ஆட்டப்படும் கிலுகிலுப்பையைக் கண்டுகொள்ளாத குழந்தை போல் அல்லவா நடந்துகொள்கிறான்? ஒருவேளை மறந்துவிட்டானோ? இரண்டுநாட்களுக்கு முன்புதானே சூசகமாக சொல்லியிருந்தாள்? அதற்குள் எப்படி......?

ஜானு தவித்தாள். தானே சொல்லிவிடலாமா? சொன்னபின்பு நினைவு வந்து வருத்தப்படுவானோ? மறந்துவிட்டதே இந்த மரமண்டை என்று குட்டிக்கொள்வானோ? வேண்டாம், தன் வாயால் சொல்லவேண்டாம். அவனாகவே புரிந்துகொள்ளட்டும்.

இட்லியுடன் பரிமாறப்பட்ட கேசரிக்கான காரணமும் கேட்கப்படவில்லை. இதென்ன சண்டித்தனம்? நானும் விடப்போவதில்லை. தான் சொல்லாமலேயே அவன் வாயால் வாழ்த்து வாங்கிவிட்டுதான் மறுவேலை.

கண்ணாடி வளையல்கள் குலுங்கும் கரங்களை அவன்முன் ஆட்டி ஆட்டி பேசினாள். அணிந்திருந்த பனாரஸ் புடவையை அடிக்கொருதரம் சரி செய்தாள். எதுவும் வேண்டாம், எங்கே கிளம்பியிருக்கிறாய் என்றுகூடவா கேட்கக்கூடாது? சரியான கல்லுளிமங்கன்.

சூப்பர். வாழ்த்துக்கள்

M.Jagadeesan
01-01-2011, 02:19 PM
கதை சொல்லி மனதை கவருவது எளிது.கதை இல்லாமலேயே எழுதி
மனதைக் கவருவது என்பது மிகவும் கடினம்.இது கீதத்திற்கு இயல்பாகவே உள்ள தனித் திறமை.

கௌதமன்
01-01-2011, 03:21 PM
பிரபு, ஜானு என்னும் இரண்டு கதாபாத்திரங்களின் மூலம் இரண்டு வேறுபட்ட எண்ணவோட்டங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் நண்பர்.

பிரபுவை பொருத்தவரை மிகவும் யதார்த்தவாதியாக இருக்கிறார். பிறந்த நாள் என்பது ஒரு நிகழ்வு. இது ஒரு சாதனையோ அல்லது தனிசிறப்போ இல்லை. பூமியில் பிறந்த எல்லா ஜீவராசிகளுக்கும் பிறந்த நாள் என்று ஒன்று உண்டு. அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை என்ற கருத்துடையவராயிருக்கிறார். நாம் கொண்டாடுகிற அல்லது பங்கு கொள்கிற பிறந்த நாள் விழாக்கள் ஒரு சம்பிரதாய சடங்காகத்தான் உள்ளது. எனவே பிரபுவின் மனவோட்டபடி இதில் முக்கியத்துவம் ஏதுமில்லை. ஆனால் பதவி உயர்வு என்பது ஒரு நிகழ்வு அல்ல. அதன் பின்னே முயற்சியும், உழைப்பும், மனைவியின் துணையும் இருக்கிறது. அதை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளாதது சரியல்ல.

ஜானுவை பொருத்தவரை சில பழக்கங்களை சிறு வயது முதலாகவே கடைபிடித்து வருகிறாள். அதில் ஒன்றுதான் பிறந்த நாள் விழா / வாழ்த்து. அதை கணவனிடம் எதிர்பார்த்ததும் தவறல்ல.

ஒரு உளவியல் சிந்தனையை மன்றத்தில் விதைத்த நண்பருக்கு வாழ்த்துகள். உண்மையில் ஒரு கதை சொல்லி அதற்கு முடிவும் சொல்லி சிந்தனையைத் தடை செய்வதைவிட, இது போன்ற சம்பவங்களை (case study) படிக்கும் தோழர்கள் தான் பிரபுவாகவோ அல்லது ஜானுவாகவோ மாறி இது போன்ற பிரச்சனைகள் தம் வாழ்வில் வந்தால் எப்படி அணுகுவது என்ற சிந்தனையைத் தூண்டுவதே ஒரு படைப்பாளியை உருவாக்கும். நூறு பேர் நூறு விதமாக இதை அணுகலாம். இதனால் சிந்தனை வளரும் ஒரு அறிவார்ந்த சமுதாயம் உருவாகும்.

நன்றி!

ஜனகன்
01-01-2011, 06:10 PM
கீதம் அருமையா எழுதி இருக்கிறீர்கள்.

நானும் உங்கள் கதை நாயகியின் எண்ணங்களுடன் ஒன்றிப்போய் கதையை வாசிக்கும்போது, கண்கள் பனித்து விட்டன.

பெண்ணின் ஏக்கத்தை கதையின் முக்கிய கருவாக கொண்டு சொல்லி இருப்பது வித்தியாசமாக இருந்தது.வாழ்த்துக்கள்.

Hega
01-01-2011, 08:19 PM
அவளென்ன புடவை, நகைக்காகவா அவனிடம் வம்பு பிடிக்கிறாள்? தன் கணவன் மனந்திறந்து தன்னிடம் பேசவேண்டும், இன்ப துன்பங்களைப் பகிர வேண்டும் என்றுதானே? அதைக்கூடப் புரிந்துகொள்ளமுடியாதவனா, இவன்?

இப்படி எத்தனையோ நிகழ்வுகள்! வேண்டுமென்றே பொய்க்கோபம் காட்டினாலும் அதையும் பொருட்படுத்துவதில்லை.

குப்புற விழுந்த குழந்தை, முதலில் அழும்; பின் தன்னைத் தூக்கிவிட, அருகில் எவருமில்லை என்று புரிந்தவுடன் தானே எழுந்து, மண்ணைத் தட்டிவிட்டு மீண்டும் விளையாடப்போகுமே, அதுபோல்தான் அவள் ஊடலும்.

.

இது கதையல்ல என்பது நிஜம் தானே அக்கா.

ஒவ்வொரு பெண் வாழ்வில் இம்மாதிரி சின்ன சின்ன ஏக்கம் உண்டு. பல்ர் அதை புரிந்திடுவதில்லை. கேவலம் ஒருவாழ்த்து தானே அதை சொல்லாவிட்டால் என்ன என என எதிர்கேள்வி கேட்போர் அவர்கள் கொடுக்கும் நகை,பணம், புடவை எல்லாவற்றையும் விட வாழ்த்தை சொல்வதால் கப்பி பேட்த்டேமா.. விஷ்யூடா என சொல்லும் ஒரு வார்த்தையில் மகிழ்வாள் என்பதை உணர்வதில்லை

எத்தனைபேர் வாழ்த்தினாலும் தனக்கு பிடித்த நெருக்கமானவர்களிடமிருந்து விஷ்யூடா எனும் வாழ்த்து கிடைக்காவிட்டால் ஏனோ மனது தவிக்கும் தவிப்பும் புரிவதில்லை.

அந்த தவிப்பை புரிய வைத்தமைக்கு உங்களுக்கு ஒ போடுவேன்.

சூப்பர்க்கா...:icon_b:

கீதம்
01-01-2011, 10:56 PM
இது உங்களோட அடுத்த சூப்பர் கதை..

கதையோட உயிர் இதோ இந்த வரிகள் தான் ... மனதை அப்படியே அழுத்துயது கீதம்

சூப்பர். வாழ்த்துக்கள்

உங்கள் அன்புக்கும் ஆர்வத்துக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

நீண்டநாள் கழித்து வந்தாலும் வந்தவுடனே என் கதைகளை வாசித்துப் பின்னூட்டமிட்டுப் பாராட்டும் உங்களுக்கு என் நன்றிகள் பல, காமாக்ஷி.

உங்கள் ஆர்வத்தை பெரிதும் பாராட்டுகிறேன்.

கீதம்
01-01-2011, 10:59 PM
கதை சொல்லி மனதை கவருவது எளிது.கதை இல்லாமலேயே எழுதி
மனதைக் கவருவது என்பது மிகவும் கடினம்.இது கீதத்திற்கு இயல்பாகவே உள்ள தனித் திறமை.

உண்மைதான் ஐயா. என் கதைகளில் சம்பவங்களைவிடவும் உணர்வுக்கலவைகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். சரியாகப் புரிந்துவைத்திருக்கிறீர்கள். நன்றி.

கீதம்
01-01-2011, 11:01 PM
பிரபு, ஜானு என்னும் இரண்டு கதாபாத்திரங்களின் மூலம் இரண்டு வேறுபட்ட எண்ணவோட்டங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் நண்பர்.

பிரபுவை பொருத்தவரை மிகவும் யதார்த்தவாதியாக இருக்கிறார். பிறந்த நாள் என்பது ஒரு நிகழ்வு. இது ஒரு சாதனையோ அல்லது தனிசிறப்போ இல்லை. பூமியில் பிறந்த எல்லா ஜீவராசிகளுக்கும் பிறந்த நாள் என்று ஒன்று உண்டு. அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை என்ற கருத்துடையவராயிருக்கிறார். நாம் கொண்டாடுகிற அல்லது பங்கு கொள்கிற பிறந்த நாள் விழாக்கள் ஒரு சம்பிரதாய சடங்காகத்தான் உள்ளது. எனவே பிரபுவின் மனவோட்டபடி இதில் முக்கியத்துவம் ஏதுமில்லை. ஆனால் பதவி உயர்வு என்பது ஒரு நிகழ்வு அல்ல. அதன் பின்னே முயற்சியும், உழைப்பும், மனைவியின் துணையும் இருக்கிறது. அதை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளாதது சரியல்ல.

ஜானுவை பொருத்தவரை சில பழக்கங்களை சிறு வயது முதலாகவே கடைபிடித்து வருகிறாள். அதில் ஒன்றுதான் பிறந்த நாள் விழா / வாழ்த்து. அதை கணவனிடம் எதிர்பார்த்ததும் தவறல்ல.

ஒரு உளவியல் சிந்தனையை மன்றத்தில் விதைத்த நண்பருக்கு வாழ்த்துகள். உண்மையில் ஒரு கதை சொல்லி அதற்கு முடிவும் சொல்லி சிந்தனையைத் தடை செய்வதைவிட, இது போன்ற சம்பவங்களை (case study) படிக்கும் தோழர்கள் தான் பிரபுவாகவோ அல்லது ஜானுவாகவோ மாறி இது போன்ற பிரச்சனைகள் தம் வாழ்வில் வந்தால் எப்படி அணுகுவது என்ற சிந்தனையைத் தூண்டுவதே ஒரு படைப்பாளியை உருவாக்கும். நூறு பேர் நூறு விதமாக இதை அணுகலாம். இதனால் சிந்தனை வளரும் ஒரு அறிவார்ந்த சமுதாயம் உருவாகும்.

நன்றி!

ஒரு சின்ன மனச்சலனத்துக்குப் பின்னால் இத்தனைப் பெரிய சிந்தனையா? வியப்பிலாழ்த்தும் உங்கள் விமர்சனம் கண்டும் மிகவும் மகிழ்ந்துபோனேன். நன்றி கெளதமன்.

கீதம்
01-01-2011, 11:04 PM
கீதம் அருமையா எழுதி இருக்கிறீர்கள்.

நானும் உங்கள் கதை நாயகியின் எண்ணங்களுடன் ஒன்றிப்போய் கதையை வாசிக்கும்போது, கண்கள் பனித்து விட்டன.

பெண்ணின் ஏக்கத்தை கதையின் முக்கிய கருவாக கொண்டு சொல்லி இருப்பது வித்தியாசமாக இருந்தது.வாழ்த்துக்கள்.

பெண் என்று மட்டுமில்லை, ஜனகன். ஒரு ஆணுக்கும் இதுபோன்ற ஏக்கம் எத்தனையோ இருக்கலாம். ஆனால் நான் ஒரு பெண்ணாயிருப்பதால் ஒரு பெண்ணின் ஏக்கத்தை உணர்வுபூர்வமாகச் சொல்லமுடிகிறது. பாராட்டுக்கு நன்றி ஜனகன்.

கீதம்
01-01-2011, 11:13 PM
இது கதையல்ல என்பது நிஜம் தானே அக்கா.

ஒவ்வொரு பெண் வாழ்வில் இம்மாதிரி சின்ன சின்ன ஏக்கம் உண்டு. பல்ர் அதை புரிந்திடுவதில்லை. கேவலம் ஒருவாழ்த்து தானே அதை சொல்லாவிட்டால் என்ன என என எதிர்கேள்வி கேட்போர் அவர்கள் கொடுக்கும் நகை,பணம், புடவை எல்லாவற்றையும் விட வாழ்த்தை சொல்வதால் கப்பி பேட்த்டேமா.. விஷ்யூடா என சொல்லும் ஒரு வார்த்தையில் மகிழ்வாள் என்பதை உணர்வதில்லை

எத்தனைபேர் வாழ்த்தினாலும் தனக்கு பிடித்த நெருக்கமானவர்களிடமிருந்து விஷ்யூடா எனும் வாழ்த்து கிடைக்காவிட்டால் ஏனோ மனது தவிக்கும் தவிப்பும் புரிவதில்லை.

அந்த தவிப்பை புரிய வைத்தமைக்கு உங்களுக்கு ஒ போடுவேன்.

சூப்பர்க்கா...:icon_b:

சின்னச் சின்ன பாராட்டுகளும் வாழ்த்துகளும்தானே மகிழ்வான வாழ்வுக்கு மூலாதாரங்கள். கொள்கையாளர்களுக்கு குழந்தைமனங்கள் புரிவதில்லை. உண்மைதான். பாராட்டுக்கு நன்றி Hega.

ஜானகி
02-01-2011, 12:42 AM
எவ்வளவுதான் தொழில்நுட்பக் கருவிகள் வந்திருந்தாலும், நம் மனதில் இருப்பதைப் படம் பிடிக்க, வார்த்தைகளுக்கு ஈடு இணை இல்லை தானே ?

அடுத்தவர் மனதை நிழற்படமாகப் பார்த்தது போல இருந்தது.

நாமும் இதையெல்லாம் தாண்டி வந்தவர்கள் தானே...அதனால், பச்சாதாபம் அதிகமாகிறது.

கீதம்
05-01-2011, 10:33 PM

இளகியமனம் பிரதிபலித்த பின்னூட்டத்துக்கு நன்றி ஜானகி அவர்களே.