PDA

View Full Version : கரைந்த அன்பு…!பூமகள்
21-04-2010, 05:17 AM
http://img38.imagefra.me/img/img38/6/4/21/poomagal/f_wvlx3m_e70af44.jpg


அன்றும் அதே
புன்னகையோடே
விடைபெற்றாய்..

இறுதியில் இனிக்கும்
நெல்லிக்கனியாய்
இனிக்காமல் போனது
உன் முத்தம் அன்று..

நீ தந்த முத்தக் குவியலை
முகர்ந்து பார்க்கிறேன்
உன்னிடமிருந்து நான்
ஆசையாய் கேட்டு வாங்கிய
கைப்பையில்…

இறுகப் பற்றிய
உன் விரல் இடுக்குகள்..
கொடுத்த நடுக்கம்
இன்னும் என்
விரல்களில் மிஞ்சி நிற்கிறது..

நீயின்றி போன
வீடும் தாழ்வாரமும்
வெறுமையைக் குலைத்து
எனைப் பார்த்த கணத்தில்
என்னுள் அப்பி அழுகிறது..

வரவேற்கத் தேடும் உன் விழி
தொலைந்து போன
அந்த முற்றம் நிரம்பிய
சோகம் தாளாமல்..

இப்போதெல்லாம்
நான் ஊருக்குப்
பயணிப்பதே இல்லை..
என் செல்லப் பாட்டியே…!!

ஆதி
21-04-2010, 06:30 AM
இது போன்ற இழப்புக்கள் இந்த வாழ்க்கையில் வலுக்கட்டாயமாக காலத்தின் கோரக்கரங்களால் திணிக்கப்படுகின்ற ஒன்று..

உங்கள் இழப்பின் சோகம் கவிதை முழுக்க தோய்ந்திருக்கிறது..

//நீயின்றி போன
வீடும் தாழ்வாரமும்
வெறுமையைக் குலைத்து
எனைப் பார்த்த கணத்தில்
என்னுள் அப்பி அழுகிறது..
//

இந்த வரிகள் அந்த சோகத்தின் கனத்தை துல்லியமாய் வாசிப்பவரின் மனங்களில் உறையவைத்து செல்கிறது..

//என் செல்லப் பாட்டியே…!!//

இந்த வரி மட்டும் கவிதையில் துருத்தி கொண்டு நிற்கிறது ஆற்றோட்டத்தோடு பொருந்தாமல்...

அக்னி
21-04-2010, 06:51 AM
பூமகள்...
இந்தக் கவிதைக்குப் பெரும் நன்றி...

*****
நேற்றிரவு இலங்கை நேரப்படி 21:20 மணியளவில் எனது அம்மம்மா (தாயின் தாய்) இறைபாதம் சேர்ந்துவிட்டார்.

கடும் சுகவீனமுற்று, ஐந்தாண்டுகளுக்கு மேலாகப் படுக்கையிலிருந்த அந்த ஜீவன்,
இறை சந்நிதானத்தில் அமைதி கொண்டிருக்கச் சென்றுவிட்டது.

அவர் அமைதி பெற்றுவிட்டார் என்பது,
துயர மனங்களைத் தேற்றுகின்றது.

சூழ்நிலைகள் இடையூறு செய்தபோதிலும்
இதுவரைகாலமும் தாய்க்குத் தாயாக அவரைத் தாங்கிப் பராமரித்த
அவரது பிள்ளைகள் மருமக்களுக்கு, ஆறுதல் நிறைவாகக் கிட்டட்டும்.
அவர் ஆசிகள் அவர்களோடு என்றென்றும் இருக்கும்.

அந்தக் குடும்பத்தில்
சண்டை வந்ததே இல்லை.
ஏழ்மை இருந்த போதிலும்,
பாசத்தில் ஏழ்மையே இல்லை.

அதிகம் கற்காத அந்தத் தம்பதியர்,
தம் பிள்ளைகளைக் கற்பித்ததன் பலனை,
பேரப்பிள்ளைகள் நாம் பெற்றோம்.

அன்று அவர்கள் தந்த ஈரமுத்தங்கள்,
இன்றும் என் நெஞ்சிற் காயவில்லை.

இருபதாண்டுகள் மரணம் பிரித்து வைத்த
அந்தத் தம்பதியரை,
மரணம் மீண்டும் இணைத்து வைத்துவிட்டது.

என் தாயை எனக்குத் தந்த தாய்க்கு
நெஞ்சார அஞ்சலி செய்கின்றேன்...

muthuvel
21-04-2010, 08:15 AM
என் கண்களை குளமாக்கிய கவிதை திரு அக்கணி அவர்களே

govindh
21-04-2010, 08:40 AM
கரைந்த அன்பு…!
உருக வைக்கும் அன்பு கவித் துளி...!
பொருத்தமான படமும் நெகிழ வைக்கிறது...

govindh
21-04-2010, 08:43 AM
அம்மம்மா (தாயின் தாய்)...
பாசம் பெருங்கடல்...

அக்னி அவர்களுக்கும்...நம் ஆறுதல்கள்....

கீதம்
21-04-2010, 12:01 PM
பூமகளின் வரிகள் அத்தனையும் அற்புத வரிகள். உள்ளத்தை உருக்கும் பரிவின் வரிகள்.

என்றோ ஊன்றப்பட்டு மறந்துபோன விதையொன்று என் கண்ணீர்த்துளிகளின் தயவால் மண்ணைக்கிளறி முளைத்து வந்து நிற்கிறது என் நெஞ்சுக்குள்! ஆம்! என் அம்மாச்சியின் நினைவுகள் தாம் அவை.

பாட்டி, ஆத்தா, அம்மாச்சி, அம்மம்மா .....அழைப்புகள் என்னவோ வேறுதான். அந்த உறவு தரும் பாசமோ உலகெங்கும் ஒன்றுதான்.

அக்னி அவர்களுக்கு என் ஆறுதல்கள். அவர் அம்மம்மாவுக்கு என் அஞ்சலிகள்.

கலையரசி
21-04-2010, 01:41 PM
பாட்டியின் அன்பு கிடைக்கப்பெற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் முதியோர் காப்பகம் பெருகி வரும் இக்காலக்கட்டத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை.

பாட்டியின் இழப்பு ஏற்படுத்திய சோகத்தைப் படிப்பவர் மனதில் பதிய வைப்பதில் இக்கவிதை வெற்றி பெறுகிறது. பூமகளுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அம்மம்மாவை இழந்து வாடும் அக்னி அவர்களுக்கு ஆறுதலைத் தெரிவிக்கிறேன்.

சுடர்விழி
22-04-2010, 03:12 AM
ரொம்ப அருமையான கவிதை....கண்களை குளமாக்கின வரிகள்

”வரவேற்கத் தேடும் உன் விழி
தொலைந்து போன
அந்த முற்றம் நிரம்பிய
சோகம் தாளாமல்..”

உருக்கமான வரிகள்.....பாராட்டுக்கள்...

செல்வா
22-04-2010, 08:47 AM
இழப்புகள் மனிதன் வாழ்வில் இழக்காத ஒன்று...

சாதாரணனுக்கும் ஒரு கவிக்கும் ஏற்படும் இழப்புகளுக்குப் பெரும் வேறுபாடு இருக்கிறது.

ஒரு சாதாரணனுக்கு ஏற்படும் இழப்புகள் ஒரு வார அழுகையோடு முடிந்து விடுகிறது. ஒரு கவியின் இழப்புகளோ காலத்தை வெல்லும் காவியமாக ஆகிவிடுகிறது.

அத்தகைய ஒரு கவியை தீ்ட்டியிருக்கும் பூவின் கவிதை இன்னொரு இழப்புக்கு ஆறுதலாக இருப்பதிலேயே அதன் அமரத்துவத்தை அடைந்து விட்டது.

ஆழ்ந்த அனுதாபங்கள் அக்னி மற்றும் பூ.

பூமகள்
22-04-2010, 12:20 PM
@ ஆதன்,

என் கவிதையில் எனக்கு தோன்றிய அதே இடத்தை நீங்களும் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.. நன்றிகள்.

@ அக்னி,

என்னவென்று சொல்ல அண்ணா... என் அம்மாயி(அம்மாவின் அம்மா) என் கண் முன்னாலேயே காலம் கடந்து 3 வருடங்கள் ஓடிவிட்டன.. அவரது நினைவு நாள் இம்மாதம் முதல் தேதி.. அன்று முதல் அவர் நினைவு இன்னும் தாளாமல் நான் எழுதிய கவிதை இது.. உங்களுக்காகவே எழுதியது போல் இருக்கிறது.. என் கவி உங்களுக்கு பெரும் ஆறுதலைத் தரும் என நம்புகிறேன்..

என் அம்மாயி பற்றி நானெழுத உங்களுக்கு ஆறுதலாக அவை அமைந்தது எதார்த்தமாகினும்,
அண்ணன் - தங்கை உறவுக்கு இதை விட பெரிய சான்று வேறு வேண்டுமா?? ஆழ்ந்த அனுதாபங்களும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

பாசப்பெருங்கடல் அம்மா என்றால்..
அதனினும் பெருங்கடல் அம்மாயி..

சொல்ல ஆயிரம் உண்டு.. அவர் பாசத்தைச்
சொல்லால் கட்ட முடியவில்லை ...
அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

அமரன்
24-04-2010, 08:27 PM
நலந்தானே...
கோபங்கள் இருந்தால் இந்த விசாரிப்பில் அதுவும் கரையட்டும்...

உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு எழுத்திலும் கரைந்திருக்கிறது அன்பு!

உறவுச்சங்கிலியின் முதல் கணுவுக்கும் மூன்றாம் கணுவுக்குமான உறவு எதிலும் வடிக்க இயலாதது.

வசீகரன்
28-04-2010, 10:00 AM
அன்பு என்பது வாழ்கையின் ஆதாரம்.
ஆசையாகி கரைந்த அன்பு அருகாமை இருந்து அகண்டு போகையில்.
மறந்து வாழ்க்கையோடு கலந்து விடமுடிவதில்லை...

அன்பின் பிரிவு வலியை சொன்ன ஒரு மேன்மை கவிதை

நன்றி பூமகள்..!

கா.ரமேஷ்
28-04-2010, 10:11 AM
////இப்போதெல்லாம்
நான் ஊருக்குப்
பயணிப்பதே இல்லை..
என் செல்லப் பாட்டியே…!!
//////

எனக்கும் இப்படி ஒரு நிலைதான்... அவர் மறைந்த பிறகு என் பாட்டியின் ஊருக்கு செல்வதே இல்லை ....


வெற்றிலையின் ஈரமுத்தம் இன்னும் நினைவலைகளில்... கரையாத அந்த அன்பினை நினைவுபடுத்தியமைக்கு நன்றி...நல்லதொரு படைப்புக்கு பாராட்டுக்க*ள்..

பூமகள்
29-04-2010, 09:32 AM
இங்கு பின்னூட்டமிட்ட முத்துவேல், கோவிந்த், கீதம், சுடர்விழி, கலையரசி, செல்வா அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

@அமரன் அண்ணா,

எல்லாம் நலமே... உங்களது கடமையும் நிலைமையும் உங்கள் மேல் கோபம் கொள்ள வைப்பதில்லை எப்போதும்..

கணு பற்றி சொல்லி 'வின்' பண்ணி விட்டீர்கள் எல்லார் மனதையும்.

@ வசீகரன்,

நலமா?? நன்றிகள் வசீ..

@கா.ரமேஷ்,

எத்தனை வரவேற்புகளும் உபசரிப்பும் இருந்தாலும் அவரின் வரவேற்பும் அன்பு முத்தமும் என்றும் ஈடுகட்ட இயலாதது..

நன்றிகள் ரமேஷ்.

ஆதவா
06-07-2010, 05:46 PM
முதலில் உங்கள் தலைப்பே தவறு... அன்பு கரைவதில்லை. பகிரப்படுகிறது. அது இங்கே கரைந்துவிடாமல் யாவரின் மனதிலும் அழியா பதிவு பெறுகிறது.

இக்கவிதைக்கு விமர்சனம் தேவையில்லை. விமர்சித்து கவிதையின் அழகை கெடுக்க விரும்பவில்லை.!!

@ அக்னி @

எனது அஞ்சலி....

சசிதரன்
07-07-2010, 01:50 PM
//நீயின்றி போன
வீடும் தாழ்வாரமும்
வெறுமையைக் குலைத்து
எனைப் பார்த்த கணத்தில்
என்னுள் அப்பி அழுகிறது..//

நல்ல வரிகள் பூமகள்.... இழப்பின் வலி கவிதஎங்கும் பரவியுள்ளது...

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
08-07-2010, 10:54 PM
மூன்று வருடங்களுக்கு முன்பு நான் சவூதியில் இருக்கையில் என் பாட்டி இறந்து விட்டார். அவர் முகத்தை இறுதியாய் காணக்கிடைக்காமல் போனதை இப்பொழுதும் எண்ணினாலும் கண்கள் குளம் கட்டிக்கொள்ளும். எனக்கும் கவிதைக்கும் பரிச்சயமில்லாத அந்த நேரத்தில் வரைந்த கவிதை. பழைய குறிப்பேட்டு புத்தகத்தை துலாவியெடுத்து இக்கவிதையை இங்கு இடுகிறேன்.

எப்பொழுதாவது புத்தகமெடுக்குமென்னை
எப்பொழுதுமெடுக்கச்சொல்லிய

தெருப்புழுதியிலும்
மேமாத வெயிலிலும் சதா காயுமென்னை
எப்பொழுதாவது காயச்சொல்லிய

மின் வெட்டிய இரவுகளில்
கைவிசிறிக்காற்றுடன்
கதையோடு கலந்த உறக்கமிட்ட

எதையோ செய்து விட்டேனென்று
நடுமண்டையில் நச்சென்று குட்டிய
அடுத்த வீட்டு அலமேலுவிடம்
அரைமணிநேரம் சண்டையிட்ட

அனுஅனுவாய் அனைத்தையும்
அழகாய் சரிபார்த்தனுப்பும்
அன்னையின் கண்களில்
தப்பிப்பிழைத்த
பொத்தானில்லா சட்டை ஓட்டையில்
ஊக்கிட்டுச் செருகிய

மேகமோடமிட்ட வானம்
தூறலிடத்தொடங்கும் முன்னே
குடையேந்தி டீச்சருடன்
சண்டையிட்டழைத்துச்சென்ற
பாட்டியை நலம் விசாரிக்க மட்டும்
ஏழெட்டுபேர் சேர்ந்த செய்த சூனியமாய்
மறந்துத் தொலைக்கிறது ஒவ்வொரு முறையும்
தொலைவில் தொலைபேசியில்
அனைவர் நலம் விசாரிக்கையில்.

மறந்த என் பாட்டியை மீண்டும் ஒரு முறை நினைவு கூறச் செய்த மலர்மகளின் கவிதைக்கு நன்றி. அம்மம்மாவின் இழப்பால் வாடும் அக்னிக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.