PDA

View Full Version : ஒரு அரக்கனென நீ இருப்பாய் விகார மௌனத்துடன்..ஆதி
15-04-2010, 10:58 AM
யாருனக்கு இந்த மௌனத்தை
பரிசளித்தாரென தெரியவில்லை..

தலைமுறையின் அடையாளமாய்
உன் முதாதயரின் ஜீன்களில் இருந்து
அது உன்னில் படிந்திருக்க கூடும்..

நீ மௌனத்தை உடுத்தும்
போதெல்லாம்
விழா ஒன்றில் இருந்தோ
வீடு ஒன்றில் இருந்தோ
சந்திப்பு ஒன்றில் இருந்தோ
பலவந்தமாய் வெளியேற்றப்படுவதை போல
என் பேச்சுக்களை புறக்கணித்து
நம் காதலை வெளியேற்றுகிறாய்..

எரியும் உன் மௌனத்திற்கு
ஒரு சிகரட்டின் படிமம் கொடுத்து
அதை கரையவைக்க முயலுகையிலெல்லாம்
அது மேலும் கனன்று என்னை சுடும்..

பாழடைந்த நகரமொன்றின்
கோரத் தனிமையில் தள்ளி
நம் உறவின் கழுத்தை
கூரிழந்த பிளேடில் மெல்ல அறுக்கும்..

அத்தருணத்தில்
வெற்றிரவின் பேய் பிசாசுகளெல்லாம்
மனசினுள் புகுந்து
என்னை கொல்ல ஆரம்பிக்கும்..

யாதும் அறிந்து
எச்சலனமும் அற்று
ஒரு அரக்கனென நீ இருப்பாய்
விகார மௌனத்துடன்..

நன்றி : கீதம் ( அவர்களின் மௌனம் கவிதையின் தாக்கத்தால் எழுதியது)

govindh
15-04-2010, 11:11 AM
தாக்கத்தால் வந்த கவிதையும் அருமை...
பாராட்டுக்கள்...

கீதம்
15-04-2010, 09:26 PM
நான் சொல்லாமல் விட்ட, அல்லது எனக்குச் சொல்லத்தெரியாத, வலியை அழகாய் உணர்த்தினீர்கள். இந்த மெளனத்தின் இம்சையை அனுபவித்தவர் அன்றி வேறு எவராலும் புரிந்துகொள்வது கடினம். அற்புத வெளிப்பாடு.உவமைகள் அத்தனையும் வெகுபொருத்தம். அதிலும் விழா வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவனின் உணர்வு எவருக்கும் சொல்லாமலே விளங்கும்.

இப்படி ஒரு அரிய கவிதை தோன்ற நான் காரணமானேன் என்பதால் மிகவும் மகிழ்கிறேன். பாராட்டுகள் ஆதன் அவர்களே.

ஆதி
19-04-2010, 04:20 AM
தாக்கத்தால் வந்த கவிதையும் அருமை...
பாராட்டுக்கள்...

நன்றி கோவிந்த்

ஆதி
19-04-2010, 04:25 AM
நான் சொல்லாமல் விட்ட, அல்லது எனக்குச் சொல்லத்தெரியாத, வலியை அழகாய் உணர்த்தினீர்கள். இந்த மெளனத்தின் இம்சையை அனுபவித்தவர் அன்றி வேறு எவராலும் புரிந்துகொள்வது கடினம். அற்புத வெளிப்பாடு.உவமைகள் அத்தனையும் வெகுபொருத்தம். அதிலும் விழா வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவனின் உணர்வு எவருக்கும் சொல்லாமலே விளங்கும்.

இப்படி ஒரு அரிய கவிதை தோன்ற நான் காரணமானேன் என்பதால் மிகவும் மகிழ்கிறேன். பாராட்டுகள் ஆதன் அவர்களே.

படிமங்களுக்கு நிறை முக்கியதுவம் கொடுத்துவிட்டதால் கொஞ்சம் பயமாக இருந்தது, ஆனால் உங்களின் பின்னூட்டம் கண்டதும் அந்த பயம் குறைந்துவிட்டது..

பாராட்டுக்கு மிக்க நன்றி கீதம் அவர்களே...

செல்வா
22-04-2010, 08:57 AM
யாருனக்கு இந்த மௌனத்தை
பரிசளித்தாரென தெரியவில்லை..

தலைமுறையின் அடையாளமாய்
உன் முதாதயரின் ஜீன்களில் இருந்து
அது உன்னில் படிந்திருக்க கூடும்..


இங்கே சாதாரணமாக ஆரம்பித்து....
நீ மௌனத்தை உடுத்தும்
போதெல்லாம்
விழா ஒன்றில் இருந்தோ
வீடு ஒன்றில் இருந்தோ
சந்திப்பு ஒன்றில் இருந்தோ
பலவந்தமாய் வெளியேற்றப்படுவதை போல
என் பேச்சுக்களை புறக்கணித்து
நம் காதலை வெளியேற்றுகிறாய்..

எரியும் உன் மௌனத்திற்கு
ஒரு சிகரட்டின் படிமம் கொடுத்து
அதை கரையவைக்க முயலுகையிலெல்லாம்
அது மேலும் கனன்று என்னை சுடும்..

இந்தப் படிமங்களில் வழிந்து...

[/QUOTE]
பாழடைந்த நகரமொன்றின்
கோரத் தனிமையில் தள்ளி
நம் உறவின் கழுத்தை
கூரிழந்த பிளேடில் மெல்ல அறுக்கும்..

[/QUOTE]

இந்த இடத்தில் உச்சமடைகிறான்.... கவிஞன்.

இந்தக் கூரிழந்த பிளேடு... (கத்தி என்று ஏன் சொல்லவில்லை...?)

கூரான பிளேடு கிழிக்கும் வலி நமக்குத் தெரியாது....
ஓரு நானோ விநாடியில் அது தன் வேலையை முடித்துவிடும்.

ஆனால் கூரிழந்த பிளேடால் மெல்ல அறுப்பது என்ற உவமை...

மெளனத்தின் கொடூரப் பக்கத்தை இன்னுமொரு உவமையால் சொல்ல இயலுமா என்று எண்ண வைக்கிறது.

உடுக்கை இழந்தவன் கை போல்...
சித்திரத்தில் அலர்ந்த தாமரைக்கும்

சற்றும் சளைத்ததில்லை நண்பா....

வாழ்க நீ... நின் கவி....

ஆதவா
06-07-2010, 06:05 PM
மெளனம் சம்மதமென்றல்லவா சொன்னார்கள்... நீங்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்னவொ?? :aetsch013:

சரி உங்க கவிதைக்கு இந்த நைட்ல ஒரு கிறுக்கு கிறூக்கிவைக்கிறேன். (ஏதோ என்னால முடிஞ்சது)

அன்று எனக்கு மெளனக்கணை உள்ளூர வீசிக் கொண்டேயிருந்ததுஅதன் வீரியம் புரியாததாலோ என்னவோ எனக்கும் எதுவும் புரியவில்லை. ஆடைகளைக் கழற்றி எறிவதைப் போல மெளனத்தைக் கழற்றி எறிய மனதில்லை. மெளனத்தைக் காட்டிலும் வார்த்தைகள் பொல்லாதது. இரண்டுக்குமிடையேயான போட்டியில் எது ஓங்கும் என்று அறிவதற்கும் மெளனமே தேவைப் படுகிறது.

என்ன சொன்னீர்கள்? எனக்கு பரிசா? மெளனமா? அதை மெளனமாக நான் ஏற்றுக் கொண்டிருப்பேனென்று உங்கள் துளை நிரம்பிய மனது கூறிற்றா? நான் வார்த்தைகளைப் பரிசாகப் பெற்றது போல இதுவரையிலும் மெளனத்தைப் பரிசாகப் பெற்றதில்லை.

கவிதையொன்றிலிருந்து வார்த்தை பிசகுவதைப் போலவோ, பாடல் வரியொன்று இசைக்கு இணங்காததைப் போலவோ நான் நடந்து கொள்ளவில்லை. மெளனம் என்பது விருப்பத்தின் சமிஞ்சை. ஆசையின் பரிபாஷை. மொழிகளற்றவன் தேசத்தில் இரைந்து கொண்டிருந்தால் அது விழலுக்கு நீரெனத் தெரியாதா?

இருக்கட்டும்.. விகாரம் என்பது வார்த்தைகள் விரித்து நின்றதோடு நிற்கட்டும். சலனங்களை ஏற்படுத்துவது ஒலியானால் மெளனமும் ஒரு ஒலியெனத் தெரிந்து கொள்ளாயோ? வார்த்தைக் காடு வளர்த்த நீ, மெளனத் தோட்டத்தை உன் வீட்டுக்குள் வளர்த்து வா. அப்போது சொல்கிறேன். விகார மெளனத்தோடு!!

......................
இதுக்கு மேலயும் எழுதினா....

தமிழ்மன்றம் மட்டும் காகித வடிவில் இருந்தால் அத்தனை பேரும் கிழித்துவிடுவார்கள். ஆகவே நான் எஸ்கேப்!!! :sprachlos020:

கடைசியாக ஒரு தத்துவம் :

மெளனமாக இரு, ஆனால் வார்த்தைகளைக் கொன்றுவிடாதே!!:p

அமரன்
06-07-2010, 08:34 PM
கவனமாகக் கையாள வேண்டியவற்றை ஒப்புமைக்கு கையாண்டுள்ளீர்கள்.

பிளேடு இரு பக்கம் கூரானது. மிகவும் சிரமப்பட்டுப் பிடித்து அறுக்கும் போது அறுப்பவரையே பதம் பார்க்கவும் வாய்ப்புண்டு. மொட்டை பிளெட்டேன்றால் அதிகமான ஆபத்து.

ஏவி விட்ட ஏவலாளி மீதே தாக்கும் இயல்புடையன பேய், பிசாசுகள்.

பிடிப்பவனையும் பக்கத்திலிருப்பவனையும் அழிக்கும் சக்தி படைத்தது சிகரெட்டு..

இவற்றுள் சிகரெட்டை விட மற்ற இரண்டும் பயன்படுத்துபவனுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியன.

இதைவிடக் காதலின் சிறப்பை எவ்வாறு சொற்படுத்த முடியும்???!!!!!!!

இந்த மூன்றையும் கையாண்டு மௌனத்தை வீவரப்படுத்தி இருப்பது கவிதையின் அழகு.

மௌனத்தை உடுத்திக் கொண்டதான சொல்வீச்சு இன்னொரு சிறப்பு.

எப்போது நாம் ஆடைகளை உடுத்திக் கொள்கிறோம். நாம் ஆடைகளை உடுத்தும் போது என்ன மறைகின்றது. இரண்டுக்கும் முதன்மையான விடையாக அமைவது நிர்வாணம். நிர்வாணம் மட்டும்தான் உண்மை. மௌனம் மறைக்கும் உண்மையை அறிந்துக் கொள்ளத் துடிக்கும் லப்டப்.

இந்த மாதிரி காதலின் பெருமையை தனக்குள் ஒளித்து வைத்துகொண்டு உண்மையைத் தேடிப்புறப்பட்டு, கிடைக்காத ஆற்றாமையில், பேரலை என எழுந்த ஆத்திரத்தில், நிலைதடுமாறி, மதிமங்கி கூரிய சொல்வாளெடுத்து ஒரே போடாய்ப் போடுகிறது கவிதை.

மௌனத்துக்கும் கூரான (பிளேட்)வாள் போன்ற சொல்லுக்கும் சமன் செய்து விடுகிறது.

காதல் மட்டுமல்ல அதன் விளைவுகளும் இருபக்கச் சமானம்தான்.

பாராட்டுகள் ஆதன்.

nambi
06-07-2010, 08:47 PM
கவிதை அருமை! பகிர்வுக்கு நன்றி!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
09-07-2010, 04:01 PM
பரம்பரை வழியாய் தொற்றிக்கொள்ளும் சில நோய்களைப் போல் சில குணங்களும் ஒட்டிக்கொள்வதாய் மௌனத்தை விவரித்துள்ளீர்கள். இதுவரை யாரும் இப்படி சிந்தித்திராத ஒன்று. நல்லதொரு கற்பனை வளம். பாராட்டுக்கள் ஆதன்.