PDA

View Full Version : சில்லறைsimariba
12-04-2010, 01:03 AM
கையில் சில்லறையுடன்
பேருந்து நிலையத்தில்
காத்திருப்பு...

பிச்சை கேட்டு ஓரு
சிறுவன் என் அருகில்...

கிழிந்த ஆடைகளுடன்
தலையில் எண்னெய் இன்றி..

கொடுக்கலாம் தான்
அதன் பின்
நடக்கபோகும் நிகழ்வு??

அங்கிருக்கும் அத்தனை
பிச்சைகாரர்களும் நம்மை
முற்றுகை இடுவதாக..

என் கண்முன்னே
பயமுறுத்த...

சற்றே யோசித்தபடி நான்

அதே கணத்தில்
என் கையிலிருந்து
ஒரு நாணயம்
தரையில் தேங்கியிருந்த
அழுக்குத்தண்ணீரில்
விழ..

சடாரென குனிந்து
எடுத்தான்..
யோசனையாக என்னை
பார்த்தான்..
நீயே வைத்துக்கொள்
என்றேன்..
சொல்லிவிட்டு நாம் ஏன்
எடுக்கவில்லை..
எவ்வளவு சாமர்த்தியம்
அவனுக்கு..
இனி நடத்துனரிடம்
நூறு ரூபாய்
தந்து சில்லறை வாங்கி
அடக்கடவுளே..

சற்று நேரத்தில்
கையில் அரை அளவு தீர்ந்த
தின்பண்ட பாக்கேட்டுடன்
அவனே தான்..

நிஜமாகவே பசியா??
ஏதோ ஒன்று
அறைந்தது போல்
இருந்தது..

எத்தனை
அம்மா பசிக்குது வை
அலட்சிய படுத்தியிருக்கிறோம்...

இனி இவர்களுக்கென
தனிச் சில்லறை
என் பையில்
எப்போதும் இருக்கும்...

கீதம்
12-04-2010, 01:22 AM
உண்மைதான். சில சமயங்களில் உண்மை எது பொய்யெது என்றறிய இயலாமல் தவிக்கநேர்கிறது. கவிதை நன்று. பாராட்டுகள் அபி.

சற்றே நின்று, தோள்பை இறக்கி,
பணப்பை திறந்து,
சில்லறை தேட இயலாதவளாய்,
போகிறபோக்கில்
தன் இரக்கத்தை மட்டுமே
அம்முடவனின் பிச்சைப்பாத்திரத்தில்
தாராளமாய் இட்டு நிரப்பி,
அடுத்தப் பேருந்தையாவது பிடிக்கவேண்டுமே என்று
அவசரமாய் ஓடுகிறாள்!

இதுதான் பலரின் நிலை!

simariba
12-04-2010, 01:29 AM
பாராட்டுக்கு நன்றி கீதம்.

பா.சங்கீதா
12-04-2010, 04:45 AM
உண்மையாகவே பசியா இல்லை சோம்பேறியா என்று யோசிப்பது அனைவரின் இயல்பு
இதில் சிலர் மட்டும் விதிவிலக்கு,
மனித நேயம் வளர ஒரு நல்ல கவிதை,
வாழ்த்துகள்......:)

simariba
12-04-2010, 08:37 AM
நன்றி சங்கீதா.

govindh
12-04-2010, 09:13 AM
எத்தனை
அம்மா பசிக்குது வை
அலட்சிய படுத்தியிருக்கிறோம்...
மனம் கனக்கிறது...!

வாழ்த்துக்கள் அபி.

அக்னி
12-04-2010, 10:25 AM
"பாத்திரமறிந்து பிச்சை இடு”
என்பதுண்டு...

அறியமுடியாமல்,
பார்வை திருப்பிய கணங்கள் பல...

பார்வை திருப்பக் காரணம் இருக்கின்றது.
ஓர் நாள்,
ஒரு தொலைத்தொடர்பு நிலையத்திற்குச் சென்றிருந்தேன்.
நவநாகரீகமாய் ஒரு யுவதி.
எங்கேயோ பார்த்தமுகம்.
திரும்பிப் பார்க்கவைக்கும் உடையோடு நின்றிருக்க,
பார்த்தேன்...

ஓர் கற்றை காகிதத்திற்குள்
பார்வை புதைத்திருந்த பாவையை
என் நினைவுக்குட் தேடியபடி,
காகிதக் கற்றைக்குள் பார்வையை விட்டேன்.
அதிர்ந்துவிட்டேன்.
அவளைச் சந்தித்த கணத்தையும் அறிந்துகொண்டேன்.

அக்கற்றைக் காகிதங்களில்,
‘எனக்கு வேலை இல்லை. இரு சகோதரிகளோடு வீடின்றி இருக்கின்றேன். ஏதேனும் உதவிசெய்யுங்கள்’
‘நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு வைத்தியத்திற்காக உதவி செய்யுங்கள்’
‘குடும்பத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது. சிறு உதவி செய்யுங்கள்’

விதம் விதமாக இப்படிப் பல...

அதற்குள் ஒன்றைத் தேடி எடுத்த அப்பெண்,
அதிற் சில பிரதிகளெடுத்துக் கொண்டாள்...

பிரதிசெய்தமைக்குப் பணம் பெற்றுக்கொண்டு,
மீதத்தை அடுத்தவருக்காகப் பத்திரப்படுத்திக்கொண்டார்,
நிலைய உரிமையாளர்.

தினம் தொடருந்தில் இவர்களைக் காணலாம்.
வருவார்கள்.
துண்டுச் சீட்டை வைப்பார்கள்.
பணம் கேட்பார்கள்.
சில வேளைகள் அத்துண்டுகள் அலட்சியமாகத் தூக்கிப் போடப்படும்.
சில வேளைகளில் அத்துண்டுகள் எம்மிற் திணிக்கப்படும்.

இந்நிகழ்வின் பின்னர்,
இவர்களுக்குப் பணம் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

இவர்கள் தாண்டிச் செல்கையில்,
இவர் உண்மையாக இருப்பாரோ என்பது மனதில் உறுத்தவே செய்கின்றது.

இல்லாமை இயலாமை இரந்து பெறச் செய்கின்றது.
ஆனால்,
இரப்பதையே தொழிலாகக் கொண்டால்...

கீதம் சொல்லுவதைப் போல,
உண்மையான பசிக்கு உணவிட நேரம் கிடைப்பதில்லை.
உண்மையான பசியை அறியாது பணமிட மனம் விடுவதில்லை.

இயல்பான கவிதை.
அண்மைக்கால என் மனதின் பிரதிபலிப்பு...

நட்சத்திரப் பாராட்டு...

Akila.R.D
12-04-2010, 11:02 AM
பசியில் வாடும் சிறுவர்களைக்கண்டால் காசு தராமல் உணவாக வாங்கி தாருங்கள்...

அது உங்கள் தானத்தை முழுமையாக்கும்...
அவர்களையும் தவறான வழிக்கு செல்லவிடாமல் தடுக்கும்...

கவிதை நன்றாக உள்ளது அபி...

வாழ்த்துக்கள்...

simariba
13-04-2010, 01:17 AM
உண்மை தான் அக்னி, துண்டு சீட்டு போடும் இது போல் சிலரை பார்த்துத்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது. பாராட்டுக்கு நன்றி அக்னி.
நல்ல யோசனைக்கும் பாராட்டுக்கும் நன்றி அகிலா.

பா.ராஜேஷ்
13-04-2010, 07:48 PM
சில்லறை மீது
அக்கறை கொள்ளும்
அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்...

நன்றி அபிராமி

இளசு
13-04-2010, 11:06 PM
காலக்கண்ணாடியாய்ப் பிரதிபலிப்பதால் இது வெற்றிக்கவிதை..


பின்னூட்டங்களே வெற்றிக்குச் சாட்சி..


வாழ்த்துகள் கவிஞருக்கு..

( உங்களை எப்படி அழைக்க?)
-------------------------------


கீதம் அவர்களின் அழகான பின்னூட்டக்கவிதை வெகுவாய்க் கவர்ந்தது. பாராட்டுகள் கீதம்!

----------------------------------------------------------


அக்னி பகிர்ந்த கவிக்கதை - கண்ணாடியின் மறுபக்கம்.. அருமை அக்னி..


மேலும் அலச..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20866
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21481

simariba
14-04-2010, 01:20 AM
நன்றி இளசு. என் பெயர் அபி.

சுடர்விழி
22-04-2010, 04:02 AM
நல்ல கவிதை ...பாராட்டுக்கள் அபி அவர்களே...கீதம் அவர்களின் பின்னூட்டக் கவிதை ரொம்ப அருமை...

ஒரு சின்ன சந்தேகம்....சில்லறை ,சில்லரை எது சரி? சில்லறை என்று எனக்குத் தோன்றுகிறது...யாராவது விளக்கம் கொடுங்களேன்...

பாரதி
30-04-2010, 02:47 AM
நல்ல கவிதை; நாம் செய்யும் சிறு செயல்கள் யாருக்கேனும் நலத்தை, மகிழ்ச்சியைத் தருகிறதெனில் அது நம்மை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தவே செய்யும்.
சிந்திக்க வைத்த சில்லறைக்கு பாராட்டு.ஒரு சின்ன சந்தேகம்....சில்லறை ,சில்லரை எது சரி? சில்லறை என்று எனக்குத் தோன்றுகிறது...யாராவது விளக்கம் கொடுங்களேன்...

சில்லரையா சில்லறையா? எது சரியான சொல்?
ரொம்பநாளா இது சந்தேகமாகவே இருந்தது..

புலவர் கவிக்கோஞானச்செல்வன் எனது இந்தசந்தேகத்தை சமீபத்தில் ஒரு
சிற்றிதழில் எழுதிய கட்டுரைமூலம் தீர்த்துவிட்டார்..

அவர் எழுதியதை அப்படியே தட்டச்சுகிறேன்.

சில்லரை என்று பலர் எழுதுகிறார்கள்/ கால் அரை முக்கால் என்பன, /ஒன்று/
என்பதற்குள் அடங்குகிறது.

சில்லரை எனில் சில அரைகள் என்று ஆகிறது.

சில என்பதற்கு இரண்டிற்கும் குறைவான எண் இருக்கமுடியாது. இரண்டு அரைகள் ஒன்று ஆகிவிடாதோ?

ஆதலின் சில்லரை எனும் சொல்பிழை உடையது.

ஒரு ரூபா எனில் முன்னர் இருந்த 10,20காசுகள் இப்போது
மறைந்துகொண்டிருக்கும் 25காசுகள் 50காசுகள் .. சில்லறை

100ரூ எனில் 5ரூபாய் 10ரூபாய் 50ரூபாய் சில்லறையாகும்.

நாம் கொடுக்கும் தொகை அல்லது பெறும் தொகை எதுவோ அதில் முழுமை இல்லாத உதிரிகள் எவையோ அவையே சில்லறையாகும்.

ஒரு தொகையை சிலவாக அறுத்து(கூறுபோட்டு) தரப்படுத்தல் சில்லறை
ஆகவே சில்லறைதான் சரியான சொல்.

நன்றி : தமிழ் பிரவாகம் மடற்குழு.

nambi
30-04-2010, 06:31 AM
சில்லறை, சில்லரை என்பதற்கான விளக்கம் நன்றாக இருந்தது. பயனுள்ள தகவல். சில்லறை என்றே தமிழ் அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுடர்விழி
01-05-2010, 10:42 AM
விளக்கத்திற்கு நன்றி பாரதி அவர்களே ...

சிவா.ஜி
01-05-2010, 03:24 PM
என்னைப்பொறுத்தவரை நான் யாருக்கும் பிச்சையிடுவதில்லை. பிச்சையை ஊக்குவிக்கும் என்பதால். ஆனால் பசிக்கிறது எனக் கேட்பவருக்கு ஏதாவது வாங்கிதருவதுண்டு. அதை அவர்கள் வாங்கிக்கொள்ளும்போதே தெரிந்துவிடும்...அவர்களுக்கு உண்மையாகவே பசியா...இல்லை நாடகமா என்று. அப்படியும் சில நேரம் ஏமாந்ததுண்டு.(பாக்கெட் உணவுகளை வாங்கிக்கொடுத்தால் வாங்கியக் கடையிலேயே திரும்பக்கொடுத்துவிட்டுக் காசு வாங்கிக்கொள்கிறார்கள்.)

இரக்கம் தேவைதான்....ஆனால்...அது இல்லாதவரை...இல்லாதவராகவே வைத்திருக்குமென்றால்...அவர்களுக்குக் காட்டத் தேவையில்லை என்பது என்னுடைய எண்ணம்.

உங்க நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் அபி.

(விளக்கம் கிடைத்த பிறகும் சில்லறை ஏன் சில்லரையாகவே இருக்கிறது?)

சிவா.ஜி
01-05-2010, 03:24 PM
கீதம் அவர்களின் பின்னூட்டக் கவிதை மிக அருமை.

simariba
04-05-2010, 07:00 AM
எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும், மாற்றிவிட்டேன்... ஒரு சில வார்த்தைகள் சரி மாதிரியே தெரிந்து ஏமாற்றி விடுகின்றன.