PDA

View Full Version : கவிதை : வதைக்கின்ற தேவதை



gvchandran
31-03-2010, 12:59 AM
கவிதை : வதைக்கின்ற தேவதை

மண்ணில் நீ எந்தன் சொந்தமாகிடில்
விண்ணிலும் விந்தைகள் புரிய முனைகுவேன்
கண்ணில் நீ இங்கோர் தேவ வடிவென
எண்ணில் இன்பத்தீ என்னில் எழுவதேன்?

நானென்பதழிந்து நீ யென்றான பின்
தேனென்பதும் திகட்டுதே தெள்ளமுதும் கசக்குதே
ஊனென்பதை விடுத்து உள்ளமும் ஒன்றிடில்
வானென்பதும் வாழ்த்திட வையத்துள் வாழ்வமே

கோடையும் கொதிப்பின்றி குளிருமே தென்றலாய்
வாடையும் அடங்குமே அருகில் நீ வந்திடில்
பேடையும் பட்சியும் போலவே இணைந்திங்கு
ஆடையும் பாலும் போல அமோகமாய் வாழ்வமே

எண்ணமெலாம் நீயாக அந்த எண்னமொன்றே தீயாக
வண்ணமெலாம் குழைத்திங்கு விண்ணகச்சிற்பி தான்
திண்ணமென முனைந்து நின் திரு உருவை வடித்தனனோ?
பெண்ணாக வடிவெடுத்து வதைக்கின்ற தேவதையே

---------------------000========000---------------------------

Akila.R.D
31-03-2010, 04:09 AM
//ஆடையும் பாலும் போல அமோகமாய் வாழ்வமே

நான் ரசித்த வரிகள்..

கவிதை நன்றாக உள்ளது சந்திரன் அவர்களே...

வாழ்த்துக்கள்.....

சிவா.ஜி
31-03-2010, 05:27 AM
அழகான தமிழில் காதலியெனும் தேவதைக்கு கவிதை வடித்தவிதம் அருமை. உங்கள் கவிதைப் பயணத்தைத் தொடருங்கள் சந்திரன்.
(அப்படியே உங்களைப் பற்றிய சிலவற்றையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்க*ளேன்)

அக்னி
31-03-2010, 07:06 AM
புருவத்தில் நாணேற்றிப்
பார்வையாற் துளைக்கும்
பாவை சொல்லுகின்றாள்
எதிர்ப் பாவை...

உனக்கு நானுமோர் தேவவடிவென்றால்,
உனக்கு நாலுபேர் இன்னுமுளரோ...
எண்ணிலெழுந்த இன்பத்தீ எண்ணிலாதெழுந்திருந்தால்
என்னிலும் பற்றியிருக்கும் இந்தத்தீ...

தேன் திகட்டித் தெள்ளமுதும் கசக்க
நானாக நீயானதுதான் காரணாமோ...
ஊன்விடுத்து உள்ளமும் இனியொன்றி
வையத்துள் (பேயாக) அலையத்தான் வருவேனோ...

கோடையும் வாடையும் இயல்பு மாற்றும்
சீர்கெட்ட வானிலையா நானுன் மனநிலையில்...
ஆடையும் பாலுமாய் நாம் தோன்ற
வைத்திடுவாயோ என்றும் கொதிநிலையில்...

வண்ணெமெல்லாம் குழைத்து வைத்த
அலங்கோலமாய் நான் தெரிந்தேனோ...
திரு உருவாய்த் தெரிகின்றதோ
பெண் உருவான நான் உனக்கு...

இத்தனையும் உன்னோடு
ஊடலுக்காய்...
தவிக்கின்றேன் உன்னுடன்
கூடலுக்காய்...

அழகிய கவிதை.

நீயும் அழகுதான் என்றால் ஏற்றுக்கொள்ளாது பெண்மனம்.
நீ மட்டும்தான் அழகு என்றால் மகிழ்வில் நிறைந்திடும் அதேமனம்.

இதனை மட்டும் எழுத நினைத்தேன்.
இத்தனையும் தொடர்ந்து வந்துவிட்டது.

பெண்மனம் நினைத்தது சரியா என,
மன்றச் சகோதரிகள் சொல்லட்டும்...

வதைக்கிண்ற > வதைக்கின்ற என வரவேண்டும்.

சந்திரக் கவிதைக்கு எனது நிறைந்த பாராட்டு...

பா.ராஜேஷ்
11-04-2010, 05:28 PM
தலைப்பே ஒரு குறுங் கவிதைதான். நன்றாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள் சந்திரன்.

gvchandran
11-04-2010, 11:37 PM
வதை மிக கொடுமையாய் இருப்பதால் ண் என்று வந்தது

அக்னி
13-04-2010, 08:36 AM
புரியவில்லையே சந்திரன்...

கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்...

ஆதி
13-04-2010, 08:39 AM
வதை மிக கொடுமையாய் இருப்பதால் ண் என்று வந்தது


புரியவில்லையே சந்திரன்...

கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்...

அவள் தரும் துயரம் மிக அதிகமாக இருப்பதால்..

'ன்' 'ண்' ஆனதாம்.. ஒரு சுழி கூடிவிட்டதாம்..

நல்லா சமாளிக்கிறீங்க சந்திரம்.. 'ண்' 'ன்' ஆக மாற்றுங்க..

கவிதைக்குள் வதை கம்மியா இருக்கோ ? சரியான 'ன்' போட்டிருக்கிங்களே..

govindh
13-04-2010, 08:49 AM
"நானென்பதழிந்து நீ யென்றான பின்
தேனென்பதும் திகட்டுதே தெள்ளமுதும் கசக்குதே...."

வதைக்கின்ற தேவதை....அழகு...
பாராட்டுக்கள்...

இளசு
13-04-2010, 10:48 PM
அடடா...


தலைப்பில் உள்ள பிழையைக் களைந்தபின் உள்வந்து பார்த்தால்
கவிஞர் வேண்டுமென்றே ண் போட்டதாய்ச் சொல்கிறார்...

மறுபடி ண் என மாற்றணுமா?????????


==================================

தீந்தமிழை வடிக்கச் செய்வதால்
இந்தக் காதல் கொதிப்பை எனக்குப் பிடிக்கும்..



பாராட்டுகள் சந்திரன் அவர்களே..


-----------------------------------------


பால்மனம் மாறி அக்னி வடித்த பதில் அழகு, அருமை..

உண்மை சதம் சொல்ல அக்னி அழைத்தபடி மகளிர் வரணும்..