PDA

View Full Version : திருப்புமுனை

கலையரசி
27-03-2010, 04:14 PM
அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் செல் ஒலித்தது.

"ஏங்க உங்க வைத்தி மாமா வந்திருக்கார். உங்களைப் பார்க்கணும்னு காத்திக்கிட்டுருக்கார். எப்ப வருவீங்க?" மனைவி தான் பேசினாள்.

"அந்த ஆளை நல்லா நாலு கேள்வி கேட்கணும். சரி.. சரி வை. பத்து நிமிஷத்தில் வந்துடுவேன். நேர்ல பேசிக்கிறேன்"

யாரைப் பார்த்து நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்க வேண்டுமென்று இந்தப் பத்து வருடங்களாக நினைத்துக் கொண்டிருந்தேனோ அந்த மனுஷனே வீடு தேடி வந்திருக்கார். அன்றைக்கு அவர் பேசின பேச்சை நான் இன்னும் மறக்கவில்லை.

பி.ஏ படித்து விட்டு சும்மா இருந்த நேரம்.

"என் ஒண்ணுவிட்ட அண்ணன், மந்திரிக்கு பர்சனல் செக்ரட்டரியா இருக்கான். அவன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னாப் போதும். உடனே உனக்கு வேலை வாங்கிக் கொடுத்துடுவான்"னு சொல்லி அம்மாதான் என்னை இந்த வைத்தி மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

என்னை ஒரு புழுவைப் போலப் பார்த்து, "என்ன படிச்சிருக்கே?" என்றார் மாமா.

"பி.ஏ"

"பி.ஏ படிச்சிட்டா பெரிய மேதாவின்னு நெனைப்பா? அந்தக் காலத்துல நாங்க படிச்ச எஸ்.எல்.சி.க்கு ஈடாகுமா ஒங்க பி.ஏ? இந்தக் காலத்துப் பசங்க ஒடம்பு நோகாம யார் சிபாரிசுலயாவது வேலை கெடைக்காதான்னு அலையுதுங்க. தெனம் நாலு பேர் தங்களோட புள்ளைங்களை அழைச்சுக்கிட்டு சிபாரிசு கேட்டு வர்றானுங்க. சரி. சரி. ஒன்னோட
பயோ டேட்டாவைக் கொடுத்துட்டுப் போ. பார்க்கிறேன்" என்றார் அலட்சியமாக.

ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது எனக்கு. அதற்குப் பிறகு எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டுப் படித்து படிப்படியாக முன்னேறி இப்போது வங்கியில் பெரிய பொறுப்பில் இருக்கிறேன்.

இப்ப எந்த மூஞ்சை வைச்சுக்கிட்டு என்னைப் பார்க்க வந்தீங்கன்னு கேட்கணும்....வீடு வந்ததும் சிந்தனை தடைபட்டது.

"வாங்க மாமா, எப்படியிருக்கீங்க?" என்னையும் அறியாமல் வெளிவந்தன வார்த்தைகள்.

"ஏதோ இருக்கேம்பா. ஒன் மாமி பூவும் பொட்டுமா மகராசியா போய்ச் சேர்ந்துட்டா. நான் தான் தனியாக் கெடந்து தவிக்கிறேன். எத்தனை நாளைக்கு இப்படியிருந்து கஷ்டப்படணும்னு என் தலையில எழுதியிருக்கோ தெரியல. பையனும் சரியில்லை. பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு என்னைக் கவனிக்கிறதில்லே. வர வர கண்ணும்
சரியாத் தெரியமாட்டேங்குது. ஆப்ரேஷன் பண்ணலாம்னா கொஞ்சம் பணம் கொறையுது. அதான் ஒன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். ஆயிரம் ரூபாய் கடனாக் கொடுத்தீன்னா, கொஞ்ச நாள்ல திருப்பிக் கொடுத்துடுவேன்" என்றார் மாமா கெஞ்சும் குரலில்.

என் மனதில் இருந்த ஆணவக்கார மாமாவுக்கும் இவருக்கும் துளியும் சம்பந்தமில்லாதது போல் தோன்றியது.

சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து, "இந்தாங்க மாமா, கடனா வேணாம். நான் கொடுத்ததாவே இருக்கட்டும்" என்று சொல்லி ஆயிரம் ரூபாயை அவர் கையில் கொடுத்தேன்.

"ரொம்ப சந்தோஷம்பா. குணத்துல அப்படியே என் தங்கச்சியை உரிச்சி வைச்சிருக்கே. பெண்டாட்டி புள்ளக்குட்டிகளோட நல்லா இருக்கணும்பா நீ"
முகம் மலர வாழ்த்தி விட்டு விடை பெற்றார் அவர்.

"நீங்க வந்தவுடனே சண்டை போட்டு அவரை வெளியே அனுப்பிடுவீங்களோன்னு பயந்துக்கிட்டிருந்தேன். நீங்க என்னடான்னா அவரை வாய் நிறைய வாங்க மாமான்னு வரவேத்ததோடல்லாம பணமும் கொடுத்தனுப்புறீங்க. உங்களைப் புரிஞ்சுக்கவே முடியல"

"வீட்டுக்கு வர்ற வரைக்கும் என்னென்னவோ கேட்கணும்னு நெனைச்சுக்கிட்டு தான் வந்தேன். ஆனா வீட்டுக்கு வந்தவங்க விரோதியா இருந்தாலும் வாங்கன்னு சொல்லணும்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அந்தப்பழக்கத்துல வாங்க மாமான்னு சொல்லிட்டேன்.

உடம்பும் மனசும் தளர்ந்து போய் வந்திருக்கிற ஒரு முதியவர்கிட்டப் போய் பழசைக் குத்திக் கிளறி அவமானப்படுத்தறது மனிதாபிமானம் இல்லன்னு தோணிச்சு. மேலும் அன்னிக்கு அவர் பேசின பேச்சு தான் எனக்குள்ள ரோஷத்தைக் கிளப்பி இந்தளவுக்கு என்னை முன்னேற வெச்சது.

உழைப்பே உயர்வு தரும்னு போதிச்சதுக்கு நான் தந்த டியூஷன் பணம் தான் இந்த ஆயிரம் ரூபாய்" என்றேன் புன்னகையுடன்.

(தினமணிக்கதிரில் நான் எழுதிய ஒரு பக்கக்கதை)

சிவா.ஜி
27-03-2010, 04:51 PM
மிக மிக யதார்த்தமான கதை. தளர்ந்துபோய் வந்திருக்கும் மாமாவை...பார்த்தபிறகு....அவன் மனதில் இருந்த வன்மமெல்லாம் மறைந்துவிட்டது. மிக நல்ல திருப்புமுனை.

இத்தனை வருடங்களாக வளர்த்துக்கொண்ட வன்மம்தான் அவனை...மறைமுகமாக வாழ்க்கையிலும் வளர்த்திருக்கிறது. அதற்கு அவன் கொடுத்த ட்யூஷன் ஃபீஸ் மிகச் சரி.

அருமையான நெஞ்சைத் தொடும் கதைக்குப் பாராட்டுக்கள் கலையரசி அவர்களே.

Hega
27-03-2010, 05:22 PM
உறவினர்களின் உதாசீனம் தான் பலர் வாழ்வில் உயர்வதற்கான ஏணிப்படியாக இருந்திருக்கின்றது.

பழைய கோபங்களை மனதில் வைக்காது உதவி என வீடு தேடி வந்தவருக்கு மனி்தாபிமானத்தோடு உதவிசெய்ய வேண்டும் என்பதை கதையாக்கிய கலையரசி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

மதி
27-03-2010, 06:42 PM
வீட்டுக்கு வந்தவரை உபசரிக்கும் போது மறைந்துவிடும் வன்மம்... பின் அவருக்கு ட்யூஷன் ஃபீஸ் தருவது யதார்த்தம். அழகான கதையோட்டம். சிறப்பான கதைக்கு பாராட்டுக்கள் கலையரசி அவர்களே..!

கீதம்
27-03-2010, 11:24 PM
'இன்னா செய்தாரை...' குறள்தான் நினைவுக்கு வந்தது. அவர் உணர்கிறாரோ, இல்லையோ, ஆனால் நம்மைப் பொறுத்தவரை மனிதாபிமானத்துடன் நடந்துகொண்ட நிறைவே போதும். நல்லதொரு சிந்தனைக்குப் பாராட்டுகள், கலையரசி அவர்களே.

குணமதி
28-03-2010, 01:41 AM
///உடம்பும் மனசும் தளர்ந்து போய் வந்திருக்கிற ஒரு முதியவர்கிட்டப் போய் பழசைக் குத்திக் கிளறி அவமானப்படுத்தறது மனிதாபிமானம் இல்லன்னு தோணிச்சு. மேலும் அன்னிக்கு அவர் பேசின பேச்சு தான் எனக்குள்ள ரோஷத்தைக் கிளப்பி இந்தளவுக்கு என்னை முன்னேற வெச்சது///

அருமை.

கலையரசி
28-03-2010, 09:00 AM
உறவினர்களின் உதாசீனம் தான் பலர் வாழ்வில் உயர்வதற்கான ஏணிப்படியாக இருந்திருக்கின்றது.

பழைய கோபங்களை மனதில் வைக்காது உதவி என வீடு தேடி வந்தவருக்கு மனி்தாபிமானத்தோடு உதவிசெய்ய வேண்டும் என்பதை கதையாக்கிய கலையரசி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

பாராட்டுக்கு மிக்க நன்றி நிஷா!
மன்றத்தில் புதிதாகச் சேர்ந்தவர்களில் உங்களது பின்னூட்டம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. உங்களது வேறு சில பின்னூட்டங்களையும் பார்த்தேன்.
பின்னூட்டம் இடுவதுடன் உங்களது படைப்புக்களையும் தாருங்கள். ரசிக்கக் காத்திருக்கிறோம்.

கலையரசி
28-03-2010, 09:02 AM
மிக மிக யதார்த்தமான கதை. தளர்ந்துபோய் வந்திருக்கும் மாமாவை...பார்த்தபிறகு....அவன் மனதில் இருந்த வன்மமெல்லாம் மறைந்துவிட்டது. மிக நல்ல திருப்புமுனை.

இத்தனை வருடங்களாக வளர்த்துக்கொண்ட வன்மம்தான் அவனை...மறைமுகமாக வாழ்க்கையிலும் வளர்த்திருக்கிறது. அதற்கு அவன் கொடுத்த ட்யூஷன் ஃபீஸ் மிகச் சரி.

அருமையான நெஞ்சைத் தொடும் கதைக்குப் பாராட்டுக்கள் கலையரசி அவர்களே.

வழக்கம் போல் பதிவிட்ட ஒரு சில நிமிடங்களுக்குள் படித்து முதல் ஆளாய்க் கருத்து வெளியிட்ட உங்களுக்கு ஸ்பெஷல் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கலையரசி
28-03-2010, 09:04 AM
வீட்டுக்கு வந்தவரை உபசரிக்கும் போது மறைந்துவிடும் வன்மம்... பின் அவருக்கு ட்யூஷன் ஃபீஸ் தருவது யதார்த்தம். அழகான கதையோட்டம். சிறப்பான கதைக்கு பாராட்டுக்கள் கலையரசி அவர்களே..!

சிறப்பான முறையில் ஆக்கப்பூர்வமான உங்களது விமர்சனம் எழுத்துக்களை மெருகேற்ற மிகவும் உதவுகிறது. நன்றி மதி அவர்களே!

கலையரசி
28-03-2010, 09:04 AM
'இன்னா செய்தாரை...' குறள்தான் நினைவுக்கு வந்தது. அவர் உணர்கிறாரோ, இல்லையோ, ஆனால் நம்மைப் பொறுத்தவரை மனிதாபிமானத்துடன் நடந்துகொண்ட நிறைவே போதும். நல்லதொரு சிந்தனைக்குப் பாராட்டுகள், கலையரசி அவர்களே.

மிக்க நன்றி கீதம்

கலையரசி
28-03-2010, 09:05 AM
///உடம்பும் மனசும் தளர்ந்து போய் வந்திருக்கிற ஒரு முதியவர்கிட்டப் போய் பழசைக் குத்திக் கிளறி அவமானப்படுத்தறது மனிதாபிமானம் இல்லன்னு தோணிச்சு. மேலும் அன்னிக்கு அவர் பேசின பேச்சு தான் எனக்குள்ள ரோஷத்தைக் கிளப்பி இந்தளவுக்கு என்னை முன்னேற வெச்சது///

அருமை.

உங்களது பாராட்டுக்கு மிகவும் நன்றி குணமதி அவர்களே!

Akila.R.D
29-03-2010, 05:20 AM
கதை ரொம்ப நல்லா இருக்கு கலையரசி...

எதார்த்தமான கதை...எல்லா குடும்பத்துலயும் இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்திருக்கும்...

வாழ்த்துக்கள்...

aren
29-03-2010, 05:39 AM
என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் பிரதிபலிப்புத்தான் இந்தக் கதையோ என்று என்ன வைக்கிறது. நல்ல கதை. நிறைய எழுதுங்கள்.

அக்னி
29-03-2010, 06:53 AM
வைத்தி மாமா வாய் திறந்த இடங்களிலெல்லா்ம் உணர்ச்சிக் கலவை...
அலட்சியம், கெஞ்சல், வாழ்த்து என வார்த்தைகள் வரும்போதெல்லாம்,
சட்சட்டென மாறுது நம் மன உணர்வுகளும்...

அலட்சியங்கள் தூண்டலைத் தருவது உயர்ந்த வாழ்வைத் தரும்.
பண்பு, இரக்கம், தருணத்தில் உதவி சிறந்த வாழ்த்தைத் தரும்.

இன்னா செய்தாரை ஒறுத்து அவர் நாண நன்னயம் செய்துவிட்ட
இன்னுமொரு படிப்பினைக் கதை...

தன்மை நிலையில் எழுதப்பட்டதால்,
கதையின் முடிவில் நம் ஒவ்வொருவரிலும் தண்மை...

பாராட்டு...

*****
அக்னி: சிவா.ஜி இதில இன்னுமொரு படிப்பினையும் இருக்குத் தெரியுமா... :smilie_abcfra:
சிவா.ஜி: அதென்னாது... :confused:
அக்னி: யாரையாச்சும் பழிவாங்கணும்னா, அவங்க வயசாகும்முன்னரே பழிவாங்கிடணும்... :aetsch013:
சிவா.ஜி: :fragend005: :eek: :sauer028: :icon_ush: :traurig001:

கலையரசி
29-03-2010, 01:58 PM
கதை ரொம்ப நல்லா இருக்கு கலையரசி...

எதார்த்தமான கதை...எல்லா குடும்பத்துலயும் இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்திருக்கும்...

வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கு நன்றி அகிலா.

கலையரசி
29-03-2010, 02:00 PM
என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் பிரதிபலிப்புத்தான் இந்தக் கதையோ என்று என்ன வைக்கிறது. நல்ல கதை. நிறைய எழுதுங்கள்.

அகிலா சொல்லியிருப்பது போல் ஒவ்வொருத்தர் வாழ்விலும் இது போன்ற நிகழ்ச்சி நடைபெறுவது உண்மையே. அது உங்கள் வாழ்விலும் நடந்திருக்கிறது.

பாராட்டுக்கு நன்றி ஆரென் அவர்களே!

கலையரசி
29-03-2010, 02:06 PM
வைத்தி மாமா வாய் திறந்த இடங்களிலெல்லா்ம் உணர்ச்சிக் கலவை...
அலட்சியம், கெஞ்சல், வாழ்த்து என வார்த்தைகள் வரும்போதெல்லாம்,
சட்சட்டென மாறுது நம் மன உணர்வுகளும்...

அலட்சியங்கள் தூண்டலைத் தருவது உயர்ந்த வாழ்வைத் தரும்.
பண்பு, இரக்கம், தருணத்தில் உதவி சிறந்த வாழ்த்தைத் தரும்.

இன்னா செய்தாரை ஒறுத்து அவர் நாண நன்னயம் செய்துவிட்ட
இன்னுமொரு படிப்பினைக் கதை...

தன்மை நிலையில் எழுதப்பட்டதால்,
கதையின் முடிவில் நம் ஒவ்வொருவரிலும் தண்மை...

பாராட்டு...

*****
அக்னி: சிவா.ஜி இதில இன்னுமொரு படிப்பினையும் இருக்குத் தெரியுமா... :smilie_abcfra:
சிவா.ஜி: அதென்னாது... :confused:
அக்னி: யாரையாச்சும் பழிவாங்கணும்னா, அவங்க வயசாகும்முன்னரே பழிவாங்கிடணும்... :aetsch013:
சிவா.ஜி: :fragend005: :eek: :sauer028: :icon_ush: :traurig001:

கதையை வழக்கம் போல் அழகான பின்னூட்டத்தால் இன்னும் அழகுப்படுத்திவிட்டீர்கள். உங்கள் பாராட்டு என்னை மிகவும் மகிழ்ச்சியுறச் செய்கிறது. நன்றி அக்னி அவர்களே!
பி.கு. உண்மை தான். வயசான பிறகு ஆள் பழசை எல்லாம் மறந்து மிகவும் தளர்ந்து போய் இருக்கும் போது பழி வாங்கும் செயல் செத்த எலியை அடிப்பது போன்றது தான்.

ஜனகன்
29-03-2010, 03:38 PM
சொல்ல வந்த கதையை சுவையான நடையில், இயல்பான நிகழ்வு கோர்வையில் சொன்ன விதம் மிக மிக அருமை.
இது நீங்கள் எழுதி தினமணிக்கதிரில் வெளி வந்த கதையா? சந்தோசம். இன்னும் எழுதுங்கள்.

பா.ராஜேஷ்
29-03-2010, 07:14 PM
வெகு இயல்பான கதை. மிக நன்றாக யதார்த்தமாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள்

கலையரசி
03-04-2010, 12:36 PM
சொல்ல வந்த கதையை சுவையான நடையில், இயல்பான நிகழ்வு கோர்வையில் சொன்ன விதம் மிக மிக அருமை.
இது நீங்கள் எழுதி தினமணிக்கதிரில் வெளி வந்த கதையா? சந்தோசம். இன்னும் எழுதுங்கள்.

ஆதரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஜனகன் அவர்களே!

கலையரசி
03-04-2010, 12:37 PM
வெகு இயல்பான கதை. மிக நன்றாக யதார்த்தமாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள்

பாராட்டுக்கு மிக்க நன்றி ராஜேஷ் அவர்களே!

govindh
03-04-2010, 01:33 PM
"திருப்புமுனை.."நல்ல திருப்தியான கதை..
உதாசீனம்..உந்துதல்..உயர்வு...நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது...
பாராட்டுக்கள்...

கலையரசி
03-04-2010, 02:19 PM
நீங்கள் மன்றத்தில் சேர்ந்து இன்றுடன் தான் ஒரு மாதம் நிறைவு பெறுகிறது. அதற்குள்
623 பதிவுகள் செய்து விட்டீர்கள்! இதே வேகத்தில் போனால் விரைவில் பல்லாயிரக்கணக்கான பதிவுகளைச் செய்து விடுவீர்கள் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துடன் உங்களது பாராட்டுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சொ.ஞானசம்பந்தன்
05-04-2010, 11:24 PM
அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் செல் ஒலித்தது.
.............................

உழைப்பே உயர்வு தரும்னு போதிச்சதுக்கு நான் தந்த டியூஷன் பணம் தான் இந்த ஆயிரம் ரூபாய்" என்றேன் புன்னகையுடன்.

(தினமணிக்கதிரில் நான் எழுதிய ஒரு பக்கக்கதை)

மறப்போம் மன்னிப்போம் என்ற மனப்பக்குவம் எல்லார்க்கும் வராது. மாந்த நேயம் மிக்க கதை. பாராட்டு.
சொ.ஞானசம்பந்தன்

இளசு
06-04-2010, 08:52 PM
கதிரில் வந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் கலையரசி..

செல்லிடத்து சினம் காப்பதில்தான் பெருமை இருக்கிறது...

கையில் இரும்பிருந்தும் தசையைக் கிழிக்காததுதான் - (மன)வலிமை!

பாராட்டுகள்.

---------------------

வாழ்க்கை எனும் திரைப்படத்தில் நடிகர்திலகம் ( அப்பா)
தம் மகன்களுக்கு சொத்தில் பங்கு தந்து சொல்வார்:

இது என் மகன்கள் என்பதற்காக அல்ல..
அன்று என்னை அவமானப்படுத்தி, வெளியே தள்ளி
இந்த அளவுக்கு இந்த வயதில் என்னை முன்னேற வைத்ததற்காக
''டியூஷன் ஃபீஸ்'!

இதை விட அம்மகன்களின் நன்றிகெட்டத்தனத்துக்கு
செருப்பால் அடித்துக்கூட உறைக்கவைக்க முடியாது!

கலையரசி
07-04-2010, 10:57 AM
மறப்போம் மன்னிப்போம் என்ற மனப்பக்குவம் எல்லார்க்கும் வராது. மாந்த நேயம் மிக்க கதை. பாராட்டு.
சொ.ஞானசம்பந்தன்

பாராட்டுக்கு மிக்க நன்றி.

கலையரசி
07-04-2010, 10:58 AM
கதிரில் வந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் கலையரசி..

செல்லிடத்து சினம் காப்பதில்தான் பெருமை இருக்கிறது...

கையில் இரும்பிருந்தும் தசையைக் கிழிக்காததுதான் - (மன)வலிமை!

பாராட்டுகள்.

---------------------

வாழ்க்கை எனும் திரைப்படத்தில் நடிகர்திலகம் ( அப்பா)
தம் மகன்களுக்கு சொத்தில் பங்கு தந்து சொல்வார்:

இது என் மகன்கள் என்பதற்காக அல்ல..
அன்று என்னை அவமானப்படுத்தி, வெளியே தள்ளி
இந்த அளவுக்கு இந்த வயதில் என்னை முன்னேற வைத்ததற்காக
''டியூஷன் ஃபீஸ்'!

இதை விட அம்மகன்களின் நன்றிகெட்டத்தனத்துக்கு
செருப்பால் அடித்துக்கூட உறைக்கவைக்க முடியாது!
மிகவும் அழகான பின்னூட்டம் கொடுத்தமைக்கு நன்றி இளசு அவர்களே!

விகடன்
08-04-2010, 06:59 AM
இது கதைதானா? இல்லை அனுபவமா? என்று சிந்திக்கும் வகையில் உயிப்போட்டத்துடன் எழுதியிருக்கிறீர்கள் கலையரசி. பாராட்டுக்கள்.

கலையரசி
08-04-2010, 09:22 AM
பாராட்டுக்கு என் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் விராடன்.

செல்வா
12-04-2010, 02:24 PM
நல்லகதை....

பகிர்வுக்கு நன்றிகள்...

வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..

கலையரசி
13-04-2010, 01:57 PM
வாழ்த்துக்கு மிக்க நன்றி செல்வா அவர்களே!

govindh
14-04-2010, 03:39 PM
நீங்கள் மன்றத்தில் சேர்ந்து இன்றுடன் தான் ஒரு மாதம் நிறைவு பெறுகிறது. அதற்குள்
623 பதிவுகள் செய்து விட்டீர்கள்! இதே வேகத்தில் போனால் விரைவில் பல்லாயிரக்கணக்கான பதிவுகளைச் செய்து விடுவீர்கள் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துடன் உங்களது பாராட்டுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அன்பு வாழ்த்துக்களுக்கு.... மிக்க நன்றி..!

வெப்தமிழன்
16-04-2010, 01:17 PM
இயன்றவரை இன்னா செய்யாதிருத்தல் நன்று !

sarcharan
16-04-2010, 01:39 PM
நல்ல கதை தமிழரசி.. பாராட்டுக்கள்

மயூ
17-04-2010, 02:36 AM
நம் அன்றாட வாழ்வில் நடக்கும் கதைகள். ஜதார்த்தமாக இருந்தது. எனக்கும் என்னோட பிளாஷ் பாக் அப்படியே ஞாபகத்திற்கு வந்தது. நன்றிகள் கலையரசி அவர்களே. வாழ்த்துக்களும் கூட. அருமையான கதை.

கலையரசி
17-04-2010, 11:19 AM
இயன்றவரை இன்னா செய்யாதிருத்தல் நன்று !

மிக்க நன்றி வெப்தமிழன்!

கலையரசி
17-04-2010, 11:20 AM
நல்ல கதை தமிழரசி.. பாராட்டுக்கள்

பாராட்டுக்கு நன்றி! என் பெயர் கலையரசி!

கலையரசி
17-04-2010, 11:20 AM
நம் அன்றாட வாழ்வில் நடக்கும் கதைகள். ஜதார்த்தமாக இருந்தது. எனக்கும் என்னோட பிளாஷ் பாக் அப்படியே ஞாபகத்திற்கு வந்தது. நன்றிகள் கலையரசி அவர்களே. வாழ்த்துக்களும் கூட. அருமையான கதை.

உங்கள் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி மயூ!