PDA

View Full Version : தலைவியின் குறிப்பு!



குணமதி
24-03-2010, 06:30 PM
தலைவியின் குறிப்பு!


பழந் தமிழர் அக வாழ்க்கையில் களவொழுக்கமும் கற்பொழுக்கமும் இடம்பெற்றிருந்தன.

திருமணத்திற்கு முன் தலைவியும் தலைவனும் கண்டு விரும்பி காதலித்து பிறரறியாது சேர்ந்திருக்கும் வாழ்க்கை களவொழுக்கம் சார்ந்தது. திருமணத்திற்குப் பின்னான இல்லற வாழ்க்கை கற்பொழுக்கம் சார்ந்ததாகும்.

இங்குப் பல்வேறு காரணங்களால் பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், வாழ்வில் பல்வேறு கரணச் சடங்குகள் இடம் பெற்றதோடு களவொழுக்கம் மறைந்து கற்பொழுக்கம் நிலைக்கலாயிற்று.

களவொழுக்கம் இருந்த பண்டைக் காலத்தில், ஒரு காதலன் இரவு நேரத்திலே வருகிறான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் தலைவியைக் கண்டுக் கூடியிருந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான்.

இவ்வாறான நடைமுறை பல நாட்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஊரார் அறியுமுன், தலைவி அவனை மணம் புரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறாள்.

தோழி தலைவியின் கருத்தோடு ஒன்றியவள். ஒருநாள் தோழி,
தலைவனிடம் இதை மிகப் பக்குவமாக எடுத்துச் சொல்கிறாள். தோழியின் கூற்றை ஒரு பாடல் வழி தருகிறார் கண்ணன் சேந்தனார் என்னும் புலவர்.

அப்பாடலின் பொருள்:

“தலைவனே! நல்ல மணம் கமழும் மலைச் சாரலிலே தினைப் புனங் காப்பவர்கள் திரிந்து கொண்டிருப்பார்கள். அந்த மலைப் பாதையிலே நீங்கள் இனிமேல் வரவேண்டாம். ஏனென்றால் அவர்களுக்கு இனிய மொழி பேசத் தெரியாது; அவர்கள் கடுஞ்சொல்லினர். அவர்கள் கொல்லுதற்கு உதவும் வில்லைக் கையிலே பிடித்திருப்பார்கள். அவர்கள் வேகமாக அம்பைச் செலுத்தக் கூடியவர்கள். தம்மை நெருங்குகின்றவர்களைக் குத்திக் கொல்லும் வேலும் வைத்திருப்பார்கள். அவர்கள் கல்லிலே (மலையிலே) வாழ்கின்றவர்கள். அவர்கள் மனமும் கல்லாகத்தான் இருக்கும்; அவர்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் தாம்; ஆயினும் கொடியவர்கள். ஆகவே, இம் மலையிடத்தே வாராது அப்பாற் செல்வீராக!”

அந்தப்பாடல் இது :

விரைகமழ் சாரல் விளைபுனங் காப்பார்
வரையிடை வாரன்மின் ஐய! – உரைகடியர்
வில்லினர் வேலர் விரைந்துசெல் லம்பினர்
கல்லிடை வாழ்ந ரெமர்.

இப் பாடல், தலைவியின் கருத்தைத் தலைவனுக்குக் குறிப்பாக எடுத்துக் காட்டுகின்றது. ”இரவில் வந்து போவது பேரிடர் விளைவிக்கக் கூடியது. வெளிப்படையாக மணம் செய்து கொண்டுக் கூடி வாழ்வதே சிறந்தது.” என்று குறிப்பிடுகின்றது. அத்துடன், தலைவன் மீது தலைவி கொண்டுள்ள அன்பையும் புலப்படுத்துகின்றது.

இந்தப் பாடல் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றான “திணைமொழி ஐம்பது” என்ற நூலில் ஐந்தாம் பாடலாக இடம்பெற்றுள்ளதாகும்.

இளசு
24-03-2010, 08:22 PM
ஏமாற்றும் எண்ணமிருந்தால் மாற்றிக்கொள்..
பின்னி எடுக்க எம்மவர் பின்புலமாய் ஏராளம் ..


எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம் அத்தலைவன்..


பகிர்வுக்கு நன்றி குணமதி அவர்களே!

குணமதி
25-03-2010, 02:32 AM
பின்னூட்டத்திற்கு நன்றி இளசு.

govindh
25-03-2010, 01:59 PM
தர்ம சங்கடங்கள்...ஏற்படும் முன்...
தலைவியின் குறிப்பறிந்து செயல்படு...

தோழியின் கூற்று...ரசித்தேன்...
பகிர்வுக்கு நன்றி குணமதி அவர்களே!

குணமதி
25-03-2010, 02:31 PM
நன்றி கோவி.

பா.ராஜேஷ்
27-03-2010, 12:26 PM
நல்லதோர் பகிர்வு குணமதி. நன்றி

குணமதி
27-03-2010, 04:32 PM
நன்றி நண்பரே.

கலையரசி
27-03-2010, 04:49 PM
ஊரறிய திருமணம் செய்து கொண்டால் இப்படி பயந்து பயந்து இரவில் வர வேண்டியதில்லையே என்பதைத் தோழி எவ்வளவு அழகாகச் சொல்கிறாள்.
இளசு அவர்கள் சொன்னது போல் எச்சரிக்கை செய்வதற்காகவும் தோழி இதைச் சொல்லியிருப்பாளோ?
பாடலை விளக்கிய விதம் அருமை.

குணமதி
27-03-2010, 04:54 PM
ஊரறிய திருமணம் செய்து கொண்டால் இப்படி பயந்து பயந்து இரவில் வர வேண்டியதில்லையே என்பதைத் தோழி எவ்வளவு அழகாகச் சொல்கிறாள்.
இளசு அவர்கள் சொன்னது போல் எச்சரிக்கை செய்வதற்காகவும் தோழி இதைச் சொல்லியிருப்பாளோ?
பாடலை விளக்கிய விதம் அருமை.

மிக்க நன்றி.

சிவா.ஜி
27-03-2010, 05:01 PM
பாடலில் தோழி சொல்வதாய் எதுவும் குறிப்பிடவில்லையே....தலைவியே சொல்வதைப் போல அல்லவா அமைந்திருக்கிறது...

இருந்தாலும், களவொழுக்கம் மறந்து...கற்பொழுக்கம் திரும்புமாறு சூசகமாய் சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம். அருமையான பாடல், அருமையான விளக்கம். பகிர்வுக்கு நன்றி குணமதி.

குணமதி
27-03-2010, 05:08 PM
பாடலில் தோழி சொல்வதாய் எதுவும் குறிப்பிடவில்லையே....தலைவியே சொல்வதைப் போல அல்லவா அமைந்திருக்கிறது...

இருந்தாலும், களவொழுக்கம் மறந்து...கற்பொழுக்கம் திரும்புமாறு சூசகமாய் சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம். அருமையான பாடல், அருமையான விளக்கம். பகிர்வுக்கு நன்றி குணமதி.

நன்றி.

கீதம்
28-03-2010, 09:28 PM
அழகிய பாடலும் அதன் விளக்கமும் அருமை. தொடர்ந்து எழுதி, மென்மேலும் தமிழ்ச்சுவை அறியச்செய்யுங்கள் குணமதி அவர்களே.

Akila.R.D
29-03-2010, 04:22 AM
பகிர்ந்தமைக்கு நன்றி குணமதி...

தொடர்ந்து எழுதுங்கள்...

குணமதி
31-03-2010, 05:56 AM
பகிர்ந்தமைக்கு நன்றி குணமதி...

தொடர்ந்து எழுதுங்கள்...

நன்றி. எழுதுகிறேன்.

குணமதி
31-03-2010, 05:57 AM
அழகிய பாடலும் அதன் விளக்கமும் அருமை. தொடர்ந்து எழுதி, மென்மேலும் தமிழ்ச்சுவை அறியச்செய்யுங்கள் குணமதி அவர்களே.

மிக்க நன்றி. எழுதுகிறேன்.