PDA

View Full Version : கனவுத் தொழிற்சாலை......!



செல்வா
21-03-2010, 09:19 PM
இருளடைந்தப் பாழ்வெளியில்
ஒருநாள் நான் படுத்திருந்த போது
கனவுகளின் தேவன் என்னைத்
தேடி வந்தான்

கனவுகளால் காயமுற்றிருந்த நான்
அவனைக் காண அஞ்சி
ஓட எத்தணித்தேன்

கதைகளில் வரும் பூதம் சுண்டு விரலால்
காட்டு மரங்களைத் தூக்கி வீசுவது போல்
என்னைத் தூக்கித் தன் தோளில்
போட்ட படி நடந்து கொண்டிருந்தான்

உலகின் நடுநாயகமாக உயர்ந்து நின்ற
கண்ணாடிக் கட்டிடத்தின்
முன் நின்று கொண்டிருந்தேன் நான்

கண்கள் நிறையக் கனவுகளோடு
பளிச்சிடும் உடைகளுடன்
மலர்ந்த முகம் நிறைய வியப்போடு
பலரும் உள்ளேச் சென்றவாறிருந்தனர்

சுழன்றடிக்கும் காற்று தரையில் கிடக்கும்
இலைத்துணுக்கை ஒரே மூச்சில் உயரேத்தூக்கி
சுற்றிக் கொண்டிருப்பதுபோல்
காற்றில்
சுற்றி வந்தேன் நான்

பிசிறே இல்லாது வெண்ணையில் வெட்டிச் செய்யப்பட்டது போல்
அமைக்கப் பட்டிருந்த ஒரு நீண்ட அறையில்
வரிசை மாறாமல் குவிக்கப் பட்டிருந்த பொறிகளுக்கிடையே
அமர்ந்திருந்தனர் அனைவரும்

மழுங்கச் சிரைத்த தலை மற்றும் முகமுமாய்
கண்களில் கூர்மையுடன் தோன்றிய ஒருவர்
விரல்களைக் காற்றில் வரைந்தபடி
விதவிதமான உருவங்களை உருவாக்கிக்
காட்டியவர்
கடைசியாகக் காட்டியது
அழகான ஒரு உலகம்
முன்னிருந்த ஒவ்வொருவரும்
அங்கே அரசர்களாகக்
கொலுவிருந்தனர்.

பார்த்துக் கொண்டிருந்தபோதே
அந்த உலகம் ஒன்று பலவாகப் பிரிந்து
ஒவ்வொருவர் தலைமேலும்
அமர்ந்து சுற்றத் துவங்கியது…

சுழலும் உலகம் சுழலுவிக்க
பொறியை இயக்கியபடியே
இயங்கத் துவங்கினர் அனைவரும்

வெளியே காலம் வேகமாய் மாறிக் கொண்டிருந்தது
உள்ளிருந்தவர்களோ எதுவும்
தெரியாது
இயங்கியபடியே இருந்தனர்

அவர்கள் தலைக்கு மேல் இருந்த
உலகின் ஒளி எப்போதெல்லாம்
குறைந்து கொண்டிருந்ததோ
அப்போதெல்லாம் அந்த மனிதர்
அழைக்கப்பட்டு
உலகம் ஒளியூட்டப் பட்டது

காலநிலை மாற்றத்தில் கண்ணாடிச்சுவர்
இன்னும் இன்னும் கெட்டிப்பட
வெளியே உலகுக்கும்
உள்ளே இருந்தோருக்கும் இடைவெளி
அதிகமாகிக் கொண்டிருந்தது

இயக்கத் துவங்கிய பொறிகள்
அசையத் துவங்கி
அசுர வளர்ச்சி பெற்று
ஒரு கட்டத்தில்
முன்னிருந்தோரைக் கடித்து
விழுங்கத் துவங்கின

சற்று நேரத்திற்குப் பிறகு
பார்க்கையில்
அந்த அறைமுழுதும்
வெறும் எந்திரங்களே
நிறைந்திருந்தன….!

govindh
21-03-2010, 09:49 PM
இயந்திரங்கள்...இயங்காமல்...
இனிதே...ரசித்து...சுற்றி வந்தேன்...
கனவுத் தொழிற்சாலை......!

பா.சங்கீதா
28-03-2010, 09:13 AM
கனவாக நீங்கள் கண்டது
கவிதையை படிக்கும் பொது எங்கள் கண் முன்பும் தோன்றியது
நல்ல கவிதை
வாழ்த்துகள்.....

பாரதி
28-03-2010, 11:52 AM
இருளடைந்தப் பாழ்வெளியில் ஒருநாள் நான் படுத்திருந்த போது கனவுகளின் தேவன் என்னைத் தேடி வந்தான்.

கனவுகளால் காயமுற்றிருந்த நான் அவனைக் காண அஞ்சி ஓட எத்தணித்தேன். கதைகளில் வரும் பூதம் சுண்டு விரலால் காட்டு மரங்களைத் தூக்கி வீசுவது போல் என்னைத் தூக்கித் தன் தோளில் போட்ட படி நடந்து கொண்டிருந்தான்.

உலகின் நடுநாயகமாக உயர்ந்து நின்ற கண்ணாடிக் கட்டிடத்தின் முன் நின்று கொண்டிருந்தேன் நான். கண்கள் நிறையக் கனவுகளோடு பளிச்சிடும் உடைகளுடன் மலர்ந்த முகம் நிறைய வியப்போடு பலரும் உள்ளேச் சென்றவாறிருந்தனர்.சுழன்றடிக்கும் காற்று தரையில் கிடக்கும் இலைத்துணுக்கை ஒரே மூச்சில் உயரேத்தூக்கி சுற்றிக் கொண்டிருப்பதுபோல் காற்றில் சுற்றி வந்தேன் நான்.

பிசிறே இல்லாது வெண்ணையில் வெட்டிச் செய்யப்பட்டது போல் அமைக்கப் பட்டிருந்த ஒரு நீண்ட அறையில் வரிசை மாறாமல் குவிக்கப் பட்டிருந்த பொறிகளுக்கிடையே அமர்ந்திருந்தனர் அனைவரும். மழுங்கச் சிரைத்த தலை மற்றும் முகமுமாய் கண்களில் கூர்மையுடன் தோன்றிய ஒருவர் விரல்களைக் காற்றில் வரைந்தபடி விதவிதமான உருவங்களை உருவாக்கிக் காட்டியவர், கடைசியாகக் காட்டியது அழகான ஒரு உலகம்.முன்னிருந்த ஒவ்வொருவரும் அங்கே அரசர்களாகக் கொலுவிருந்தனர்.

பார்த்துக் கொண்டிருந்தபோதே அந்த உலகம் ஒன்று பலவாகப் பிரிந்து ஒவ்வொருவர் தலைமேலும் அமர்ந்து சுற்றத் துவங்கியது. சுழலும் உலகம் சுழலுவிக்க பொறியை இயக்கியபடியே இயங்கத் துவங்கினர் அனைவரும்.வெளியே காலம் வேகமாய் மாறிக் கொண்டிருந்தது.

உள்ளிருந்தவர்களோ எதுவும் தெரியாது இயங்கியபடியே இருந்தனர். அவர்கள் தலைக்கு மேல் இருந்த உலகின் ஒளி எப்போதெல்லாம் குறைந்து கொண்டிருந்ததோ அப்போதெல்லாம் அந்த மனிதர் அழைக்கப்பட்டு உலகம் ஒளியூட்டப் பட்டது. காலநிலை மாற்றத்தில் கண்ணாடிச்சுவர் இன்னும் இன்னும் கெட்டிப்பட வெளியே உலகுக்கும் உள்ளே இருந்தோருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டிருந்தது. இயக்கத் துவங்கிய பொறிகள் அசையத் துவங்கி அசுர வளர்ச்சி பெற்று ஒரு கட்டத்தில் முன்னிருந்தோரைக் கடித்து விழுங்கத் துவங்கின.

சற்று நேரத்திற்குப் பிறகு பார்க்கையில் அந்த அறைமுழுதும் வெறும் எந்திரங்களே நிறைந்திருந்தன.

----------------------------------

செல்வா, இதற்கு சில முறை பின்னூட்டமிட முயன்றும் இயலவில்லை.

தொடக்கமும் முடிவும் எப்படி இருக்க வேண்டுமென திட்டமிடாத, பாலை சாலையில் பயணப்பட்டதாய் உணர்கிறேன். கருத்து கனவு என்பதால் அப்படி என இருக்கலாம் என வைத்துக்கொள்ள இயலவில்லை.

சேலைக்கு ஜரிகை தேவைதான். ஆனால் முழுவதும் ஜரிகையினால் நெய்யப்பட்ட சேலையெனில் கண்களை உறுத்தும் வாய்ப்பே அதிகம்.

எழுதுங்கள் செல்வா.

அக்னி
02-04-2010, 09:27 AM
செல்வா...

இந்தக் கவிதையின் பொருள்
எனக்குள் எங்கோ பொறுத்துக்கொண்டு
வர மறுக்கின்றது.

தவிர,
இந்தவகைக் கவிதைகளில் என் பரிச்சயம் இன்னும் போதாதுதான்...

தூக்கிய கனவுதேவன் சட்டென இல்லாமற் போய்,
நின்றுகொண்டிருந்த நான் காற்றில் சுழன்றடிக்க,
அனைவரும் அரசராய்க் கொலுவிருந்த அறை வந்து,
உலகங்கள் ஒவ்வொன்றாகி, தனித்தனியே சுற்றத்தொடங்கியதைப் பார்த்து,
ஒலியிழந்து,
அழைக்கப்பட்டவரால் ஒளி மீண்டும் ஊட்டப்பட்டு,
மீண்டும் விழும் இடைவெளியில்,
இயந்திர விழுங்கலில், இயந்திரங்கள் மட்டுமேஎ மிஞ்சிட...

நான் எங்கே...

அழைக்கப்பட்டவர் எங்கே எனத் தேடிக்கொண்டா...
அல்லது அலட்சியமாகவா...

ஆனால், இடைவெளி அதிகம்தான்...

இளசு
02-04-2010, 06:53 PM
அன்பு செல்வா

முழுக்கவும் படிமங்கள் எனப்படும் உருவகங்களால் முழுக்கவிதை வடிக்கும்போது -

வாசகனும் அதே புள்ளியை அடைந்து அதே கவிதானுபவம் அடைந்தால்
அந்த ஆனந்தம் படைப்பாளிக்கும் நுகர்வோனுக்கும் பன்மடங்கு.

( நண்பன், ராம்பால் போன்றவர்கள் இந்த வகை வாசகர்களுக்காகக் காத்திருக்கலாம்; வாசிப்பனுபவம் மெனக்கெட , மேம்பட வேண்டும்..

உரித்து ஊட்டிக்கொண்டிருக்க எப்போதும் அவசியமில்லை..
குறுக்கெழுத்துப் புதிராய் அவிழ்த்து ருசிக்கவும் ரசிகன் பழக வேண்டும் - என்பார்கள்)

அப்படி நிகழாவிட்டால் இடைவெளி - கனத்த மௌனம் - வந்துவிடும்.

கணையாழி தீராநதி தரக்கவிதைகள் இன்னும் எனக்கு எட்டா உயரம்.
பழக முயல்கிறேன். போதாது போல.. எட்டவில்லை இன்னும்.


வாசித்தவரை...

இக்கவிதை கணினி உலகம் எனும் தனி உலகில்
தனிக் கால அட்டவணையில்
மெய்நிகர் வாழ்க்கையாக பணியில் மூழ்கிய
இளைஞர் குழாம் சட்டென மனதாடியது..


முடிச்சவிழ்க்க
பாரதி, அக்னியுடன்
நானும் கோரி அழைக்கிறேன்.

செல்வா
04-04-2010, 08:02 AM
இயந்திரங்கள்...இயங்காமல்...
இனிதே...ரசித்து...சுற்றி வந்தேன்...
கனவுத் தொழிற்சாலை......!


கனவாக நீங்கள் கண்டது
கவிதையை படிக்கும் பொது எங்கள் கண் முன்பும் தோன்றியது
நல்ல கவிதை
வாழ்த்துகள்.....

பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி கோவிந்த் மற்றும் சங்கீதா.

செல்வா
04-04-2010, 08:05 AM
செல்வா, இதற்கு சில முறை பின்னூட்டமிட முயன்றும் இயலவில்லை.

தொடக்கமும் முடிவும் எப்படி இருக்க வேண்டுமென திட்டமிடாத, பாலை சாலையில் பயணப்பட்டதாய் உணர்கிறேன். கருத்து கனவு என்பதால் அப்படி என இருக்கலாம் என வைத்துக்கொள்ள இயலவில்லை.

சேலைக்கு ஜரிகை தேவைதான். ஆனால் முழுவதும் ஜரிகையினால் நெய்யப்பட்ட சேலையெனில் கண்களை உறுத்தும் வாய்ப்பே அதிகம்.

எழுதுங்கள் செல்வா.

உண்மைதான் அண்ணா... கொஞ்சம் அதிகமாகவே கண்களை உறுத்திவிட்டது.

புரியாம எழுதினால் தான் கவிதை என்ற மாயைக்குள் சிக்கிக்கொண்டேனோ என எண்ணுகிறேன்.

அடுத்தமுறை இன்னும் கவனமாகவே இருக்கிறேன்...

கனவிலிருந்து நனவிற்கு இழுத்தமைக்கு நன்றி.

செல்வா
04-04-2010, 08:26 AM
தூக்கிய கனவுதேவன் சட்டென இல்லாமற் போய்,
நின்றுகொண்டிருந்த நான் காற்றில் சுழன்றடிக்க,
அனைவரும் அரசராய்க் கொலுவிருந்த அறை வந்து,
உலகங்கள் ஒவ்வொன்றாகி, தனித்தனியே சுற்றத்தொடங்கியதைப் பார்த்து,
ஒலியிழந்து,
அழைக்கப்பட்டவரால் ஒளி மீண்டும் ஊட்டப்பட்டு,
மீண்டும் விழும் இடைவெளியில்,
இயந்திர விழுங்கலில், இயந்திரங்கள் மட்டுமேஎ மிஞ்சிட...

நான் எங்கே...

அழைக்கப்பட்டவர் எங்கே எனத் தேடிக்கொண்டா...
அல்லது அலட்சியமாகவா...

ஆனால், இடைவெளி அதிகம்தான்...



வாசித்தவரை...

இக்கவிதை கணினி உலகம் எனும் தனி உலகில்
தனிக் கால அட்டவணையில்
மெய்நிகர் வாழ்க்கையாக பணியில் மூழ்கிய
இளைஞர் குழாம் சட்டென மனதாடியது..



அன்பு அக்னி, அண்ணா
முடிச்சவிழ்த்தபின் அவிழ்க்க நானெதற்கு. நீங்கள் கூறியது தான் உட்கருத்து.

இடையில் வரும் மழுங்கச் சிரைத்த பெரியவர் ஒரு கணிப்பொறி மென்பொருள் நிறுவனத்தின் தலைமை மேலாளர் எனக் கொள்ளலாம்.

அவர் புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்குச் சொல்லுவதெல்லாம்..
நாம் இந்த வேலையை முடித்து விட்டால் நாமனைவரும் எங்கோச் சென்றுவிடுவோம் நமது நிறுவனம் உலகில் பெரிய நிறுவனங்களில் ஒன்றாகிவிடும்... என்பதாக....

குறைந்த நபர்களைக் கொண்டு அதிக லாபம் சம்பாதிக்க முனையும் நடுத்தர கணிணி நிறுவனங்களின் பிரதி எனக் கொள்ளலாம்.

வாக்குறுதிகளை அடுக்கி மூளைச்சலவை செய்தே கடும் வேலைவாங்கும் உத்தி. ஆனால் ஒரு கட்டத்தில் வேலை செய்பவர்கள் சலிப்படைகிறார்கள்.
அவர்கள் நம்பிக்கை நீர்த்துப் போகிறது. அது தான் மங்கும் உலகம்

மங்கும் போது மட்டும் அவர் அழைக்கப் பட்டு மீண்டும் மீண்டும் வாக்குறுதிகள் புதுப்பிக்கப் படுகின்றன...

எந்திரங்களோடு எந்திரங்களாக வேலை செய்யவும் உணவருந்தவும் மட்டுமே பழகிய இவர்கள் பொது வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டுப் போகின்றனர்.

எந்திரங்கள் இவர்களை விழுங்கியது அதன் பின் அறையில் எந்திரங்களே நிறைந்திருப்பது
இந்த மத்தியதரக் கணிணி நிறுவனங்களின் ஊழியர்கள் எந்திரங்களாகவே மாறிவிட்டதைச் சுட்டுகிறது.

இது எனது கண்முன் நான் காண்பது தினம் தினம்... அது தான் கனவாகிறது...

எழுதிப் பழகுகிறேன்.
திருத்துங்கள் திருத்திக் கொள்கிறேன்.

பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி அக்னி மற்றும் அண்ணா.

சிவா.ஜி
04-04-2010, 09:53 AM
நானும் ஆரம்பத்திலேயே வாசித்தேன் செல்வா. நிஜமாகவே என்னால் இதன் உட்கருத்தைப் புரிந்துகொள்ள* முடியவில்லை. மீண்டும் மீண்டும் வாசித்தும்....குழப்பமே நிலவியதால்...எதைச் சொல்லிப் பின்னூட்டமிடுவது எனத் தெரியாமல் விழித்தபடி பக்கம் புரட்டிவிட்டேன்.
இளசுவின் பதிவில் கொஞ்சமும், உங்கள் விளக்கத்தில் முழுதுமாகவும் அறிந்து தெளிந்தேன்.

உண்மையான நிலை...கணினி மென்பொருளாளர்களின் கட்டம் கட்டப்பட்ட வாழ்க்கைமுறை. வெளிப்புறமிருந்து உள்ளேக் காண முடியாத கண்னாடியை அறிவேன்....ஆனால் இவர்களைச் சுற்றி இருப்பது...உள்ளிருந்து வெளிக்காண முடியாத சிறப்புக் கண்ணாடிகள்.


வாழ்த்துக்கள் செல்வா.

செல்வா
04-04-2010, 10:19 AM
நானும் ஆரம்பத்திலேயே வாசித்தேன் செல்வா. நிஜமாகவே என்னால் இதன் உட்கருத்தைப் புரிந்துகொள்ள* முடியவில்லை. மீண்டும் மீண்டும் வாசித்தும்....குழப்பமே நிலவியதால்...எதைச் சொல்லிப் பின்னூட்டமிடுவது எனத் தெரியாமல் விழித்தபடி பக்கம் புரட்டிவிட்டேன்.
இளசுவின் பதிவில் கொஞ்சமும், உங்கள் விளக்கத்தில் முழுதுமாகவும் அறிந்து தெளிந்தேன்.

உண்மையான நிலை...கணினி மென்பொருளாளர்களின் கட்டம் கட்டப்பட்ட வாழ்க்கைமுறை. வெளிப்புறமிருந்து உள்ளேக் காண முடியாத கண்னாடியை அறிவேன்....ஆனால் இவர்களைச் சுற்றி இருப்பது...உள்ளிருந்து வெளிக்காண முடியாத சிறப்புக் கண்ணாடிகள்.


வாழ்த்துக்கள் செல்வா.

உண்மைதான் அண்ணா...

இந்தக் கும்பலிலிருந்து நான் சற்று அந்நியப்பட்டு நிற்பதற்குக் காரணமே தமிழ் மன்றம் தான். குறைந்தபட்சம் வாசித்தல் மற்றும் மனதில் தோன்றுவதை எழுதுதல் என்று ஆரம்பித்து இன்னும் எனது வாழ்வின் மீதான பார்வை மாறிப்போனதற்கு பெரிய ஒரு தூண்டுதல் தமிழ் மன்றம் தான்.

வாழ்வதற்கு தான் வேலை. வேலைக்காக வாழ்க்கை அல்ல.

சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவிலிருந்தபோது நான் சந்தித்த சிலரைப் பார்க்கும் போது தோன்றியது.

இது நடுத்தர நிறுவனங்களில் தான் மிக அதிகம். பெரிய நிறுவனங்கள் குறைந்த பட்சம் ஏதோ செய்கின்றனர். ஊழியர்களுக்காக.

ஆனால் இத்தகைய நடுத்தர நிறுவனங்களில் மாட்டிக் கொள்ளும் ஊழியர்கள் நிலை மிகப் பரிதாபமானது.

அமரன்
04-04-2010, 12:11 PM
கனம்...

இந்த சொல்லுக்குள் எத்தனை அடக்கம்.

கனம் அய்யா..
தலைக்கனம்...
மனக்கனம்..
பொருட்கனம்...

நீ சொன்ன கனவுலகில் எல்லாக்கனமும்ம் இருக்குப் பங்காளி.

தொடர்க..

அக்னி
06-04-2010, 03:56 PM
செல்வா...
வலிந்து யோசித்து நான் பின்னூட்டமிட்டிருந்தேன்.
அது கருவைச் சற்றிலும் தொடவில்லை என்பதை அறிந்தும் இருந்தேன்.

ஒரு கவிதையை எழுதியவன் மனநிலைக்குட் புகுந்தறிய எனது வாசித்தல் அதிகரிக்கவேண்டும்.

கவிதை எழுதியவனின் கருத்தொடும் பின்னூட்டம் இளசு அண்ணாவினுடையது என,
ஆதவா சொல்லுவதுண்டு. இங்கும் அஃதே...

இளசு அண்ணலின் பதிவு கண்டதும் மீண்டும் அழகாகத் தெரிந்த கவிதை, தெளிவாகப் புரியவும் செய்தது.
உன் பின்னூட்டம் அதனை உறுதிப்படுத்தியது.

இதுபோன்ற கவிதைகள்,
உன்னிடமிருந்தும், அமரன், ஆதன், ஆதவா, ரிஷான் ஷெரீப் ஆகியோரிடமிருந்தும் இன்னுமின்னும் வர,
இளசு, தாமரை, சாம்பவி, பாரதி, பென்ஸ் ஆகியோரின் பின்னூட்ட அலசல்களில்
என் நிலையிலிருப்போர் உயர முடியும் என நம்புகின்றேன்.

அடுத்த கவிதையின் பொருள் கண்டு சொல்லக் காத்திருக்கின்றேன்.

செல்வா
07-04-2010, 07:29 PM
பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி அக்னி...

அமரன்
10-04-2010, 06:55 PM
செல்வா..

கவிதையைப் பிரிச்சுப் போடு.

எந்த உதிரிப்பாகம் கவிதையின் எந்த உயிர்ப் பாகத்தை சுமக்கிறது என்று பார்த்து பொருத்துவோம்..