PDA

View Full Version : தண்டனை



sudakar88
18-03-2010, 05:52 PM
போக்குவரத்து காவலர் கதிரவன் சாலையில் வருத்தம் கலந்த ஆத்திரத்தோடு நின்று கொண்டு இருந்தார். இருக்காதா பின்னே? கடந்த 3 மணி நேரமாக ஒரு வாகனம் கூட உரிமம் இல்லாமல் மாட்டவில்லை. தொலைவில் தெரிந்த வாகனத்தை பார்த்து அவர் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் தோன்றின. அந்த இரு சக்கர வாகனத்தில் மூவர் வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் மதுவின் மயக்கத்தில் இருந்ததற்கு அடையாளமாக வண்டி சற்று தள்ளாடியவாறு வந்தது. அருகில் வந்த வண்டியை கதிரவன் நிறுத்தினார்.

"வண்டியில் மூவர் வருவது சட்டப்படி குற்றம். அதுவும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது குற்றம். சரி, உரிமம் மற்றும் மற்ற ஆவணங்களை எடுங்கள் " என்றார் கதிரவன்.

மன்னித்துவிடுங்கள். அவசரமாக வந்ததில் அவற்றை எடுக்க மறந்துவிட்டோம். என்றான் வண்டியை ஓட்டி வந்தவன்.

இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் ஆயிரக்கணக்கில் பணம் செலுத்த வேண்டி இருக்கும். மற்றும் சிறை தண்டனையும் கிடைக்கும். உங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது. எனவே 1000 ரூபாய் செலுத்துங்கள். கேஸ் எழுதாமல் விட்டுவிடுகிறேன்.

அந்த வாலிபர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என பணம் கொடுத்துவிட்டு ஓடினர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் கதிரவனின் செல்போன் அடித்தது. செல்போனை எடுத்துப் பேசினார்.
...............
எப்போது?
...............
எந்த மருத்துவமனையில்?
................
உடனே வருகிறேன்.

கதிரவன் வண்டியில் கிளம்பினார். வண்டி நேராக கங்கா மருத்துவமனைக்குச் சென்றது. ஒரு புயலின் வேகத்தோடு மருத்துவமனைக்குள் நுழைந்தார். உள்ளே வரவேற்பறையில் விசாரித்த பின் ஒரு அறையில் நுழைத்தார். அங்கே படுக்கையில் அவரது மூன்று வயது மகன் கையில் கட்டோடு படுத்திருந்தான். அருகே அவர் மனைவி அழுகையோடு தெரிந்தார்.

இப்போது எப்படி உள்ளது?

பரவாயில்லை. மருத்துவர் இப்போதுதான் பார்த்துவிட்டு சென்றார். கையில் எலும்பு விரிசல் ஏற்பட்டுள்ளது. இன்னும் 4 மாதங்களில் சரியாகிவிடும் என்று மருத்துவர் கூறினார்.

எப்படி ஏற்பட்டது?

சாலை ஓரத்தில் நின்றிந்தோம். போதையில் இருந்த ஒரு கயவன் வண்டியில் வந்து மோதிவிட்டான்.


கதிரவனுக்கு தான் லஞ்சம் வாங்க கை நீட்டியது நினைவுக்கு வந்தது.

govindh
18-03-2010, 05:59 PM
தவறு செய்தால் ...உடனடி தண்டனை...
கதை..நல்லா இருக்கு...
அசத்துங்கள்..சுதாகர்..

சரோசா
18-03-2010, 08:50 PM
கதை அசத்தல் தொடரூங்கள் சுதாகர்

ஜனகன்
18-03-2010, 08:59 PM
நல்ல கருத்தைச் சொல்லும் கதை.
வாழ்த்துக்கள் கீதம்.

சிவா.ஜி
19-03-2010, 05:32 AM
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்....நல்ல கருத்து. உங்கள் முதல் கதை முயற்சிக்கு வாழ்த்துக்கள் சுதாகர். தொடருங்கள்.

சிவா.ஜி
19-03-2010, 05:33 AM
நல்ல கருத்தைச் சொல்லும் கதை.
வாழ்த்துக்கள் கீதம்.

கீதம்????

கீதம்
19-03-2010, 07:43 AM
அழகுத் தமிழில் ஒரு நல்ல கதை. பாராட்டுகள் சுதாகர் அவர்களே. தொடர்ந்து எழுதி எங்களை மகிழ்வியுங்கள்.

கீதம்
19-03-2010, 07:45 AM
நல்ல கருத்தைச் சொல்லும் கதை.
வாழ்த்துக்கள் கீதம்.

வாழ்த்துகள் சுதாகர்.

உங்கள் வாழ்த்தை வாங்கி சுதாகர் அவர்களிடம் சேர்ப்பித்துவிட்டேன், ஜனகன் அவர்களே.

செல்வா
19-03-2010, 07:50 AM
நல்ல கதை....
அவர் கை நீட்டி வாங்கியதால் அவர் மகனுக்கு கையில் அடி பட்டது என்ற விதியின் மீது பழிபோடும் வகையில் இல்லாமல்...

குடித்து விட்டு வண்டி ஓட்டியதற்கு தண்டனை தராமல் விட்டதால் அதன் பாதிப்பு தனது குடும்பத்திற்கும் நேரலாம் என்ற சமூக நீதியை வலியுறுத்தியிருந்தால் என் பார்வையில் கதை இன்னும் பலமடங்கு உயர்ந்திருக்கும்.

தொடர்ந்து எழுதுங்கள்..

வாழ்த்துக்கள்.

பா.ராஜேஷ்
19-03-2010, 03:52 PM
நன்றாக எழுதி உள்ளீர்கள் சுதாகர். பாராட்டுக்கள். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்

அமரன்
20-03-2010, 08:09 AM
நன்றே சொன்னீர்கள்.

பட்டால்தான் தெரியும்.. நெருப்பு சுட்டால்தான் புரியும்.

தொடருங்க..

அப்படியே உங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்களேன் சுதா.

கலையரசி
20-03-2010, 09:48 AM
லஞ்சம் வாங்குகிறவன் எந்தப்பாதிப்பும் இன்றி வாங்கிக் கொண்டே தான் இருக்கிறான்.
அதுவும் ஒவ்வொரு மாசக்கடைசியிலும் பலரிடம் வசூலித்து ஒரு பெரிய தொகையைக் கல்லா கட்டி விடுகிறார்கள். லஞ்சம் வாங்கியவனுக்கு உடனடியாகப் பாதிப்பு ஏற்படும் என்பதை இது போன்ற நீதிக் கதைகளைப் படித்து நாம் திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியது தான். யதார்த்தில் இது நடப்பதில்லை.

முதல் முயற்சியே அருமையாக உள்ளது. மேலும் எழுதுங்கள் சுதாகர் அவர்களே!

aren
24-03-2010, 02:12 AM
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். ஆனால் இப்போவெல்லாம் தெய்வத்திடமும் கம்ப்யூட்டர் எல்லாம் இருக்கிறது போலிருக்கு, உடனே மானிட்டரில் பார்த்து ஆக்ஷ்ன் எடுத்துவிடுகிறது போலிருக்கு. நல்ல கதை, சிறியதாக இருந்தாலும் நல்ல நறுக்கென்று இருக்கிறது. இன்னும் எழுதுங்கள்.

குணமதி
24-03-2010, 03:42 AM
சுருக்கமாக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

பாராட்டு.

Akila.R.D
29-03-2010, 06:20 AM
அளவான வரிகளில் அருமையான கருத்து...

வாழ்த்துக்கள் சுதாகர்...