PDA

View Full Version : கங்காநகர் பாலகிருஷ்ணன் மகன்



கீதம்
18-03-2010, 12:38 PM
“நான் கார் டிரைவிங் கத்துக்கலாம்னு இருக்கேன்”

அம்மா தந்த நெய்தோசையை சாப்பிட்டுக்கொண்டே பொதுவாகச் சொன்னான், சுப்பிரமணி.

வீடே நிசப்தமானது. இரவு உணவுக்காக சாப்பாட்டு மேசையில் ஆஜராகியிருந்த அப்பாவும், அண்ணனும் ஒருகணம் அவனை நம்பாமல் ஏறிட்டனர். பின் அண்ணன் தான் சத்தம்போட்டுச் சிரித்து அந்த அமைதியைக் கலைத்தான்.

“ஏன்டா சுப்பு! எத்தனைப் பேரைப் பழி வாங்கணும்னு வஞ்சம் வச்சிருக்கே? டேய்! வேணாம்டா!ரோட்டிலே நடமாடுறவங்க பாவம்டா! விட்டுடுடா!”
இது அண்ணன் சிவா.

“தம்பீ, கார் வாங்கப் போறீங்களா, என்ன? வீட்டிலே நிறுத்தத்தான் இடமில்லே!” பெருமூச்சுடன் அண்ணி.

அண்ணன் மகன் வினய், இரண்டு வயது கூட நிறையவில்லை. அவனும் ஏதோ புரிந்ததுபோல் கைகொட்டிச் சிரித்தான்.

“இவர் சைக்கிள் பழகி முடிச்சாச்சு! ஸ்கூட்டர் பழகி முடிச்சாச்சு, இப்போ கார் பழகப் போறாராக்கும்! ஏன் இந்த வேண்டாத வேலையெல்லாம்?”

தனக்குத்தானே பேசுவது போல் முனகலுடன் அப்பா, அம்மாவைக் கேட்டார்.

“அவன் ஆசைப்படறான்! விடுங்களேன்! படிப்பும் ப்ளஸ் டூவுக்கு மேல ஏறலை. ஒரு கார் டிரைவராகவாவது போலாமேன்னு அண்ணன் தான் அவனைக் கேட்டார். அவனும் சரின்னு சொல்லி பணத்தைக் கட்டிட்டு வந்துட்டான்!”

அம்மா, பேச்சோடு பேச்சாக ரகசியத் தீர்மானத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தாள்.

“ஓ! இதெல்லாம் உன் அண்ணன் ஏற்பாடா? அப்படி சொல்லு! எல்லாத்தையும் முடிச்சிட்டுதான் கடைசியில என் கிட்டே சொல்றீங்களா, அம்மாவும், பிள்ளையும்?” அப்பா உறுமினார்.

“அவன் நல்ல நிலைக்கு வரணும்னுதானே அவர் சொல்றார்? சிங்கப்பூரிலே வேலையும் வாங்கித் தரதா சொல்லியிருக்கார்”

“அப்புறம்? வேற எதுவும் சொல்லலையா? அவர் பொண்ணு ஒண்ணு அடங்காமத் திரியுமே, அதை இவன் தலையிலே கட்டிவிடறேன்னு சொல்லியிருப்பாரே?

“அவள் ஒண்ணும் அடங்காப்பிடாரியில்லை! நல்ல பொண்ணுதான்! என்ன, கொஞ்சம் செல்லம் அதிகம்; அதனாலே பிடிவாதம் கொஞ்சம், வாய்த்துடுக்கு கொஞ்சம்னு வளைய வர்றா. மத்தபடி பவானி இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா, சாந்தி மாதிரி பண்பா, பணிவா நடந்துக்குவா!”

அம்மா, சந்தடி சாக்கில் மூத்த மருமகளுக்கு ஐஸ் வைத்தாள்.

அப்பா இன்னமும் சீற்றம் தணியாமல் உறுமிக்கொண்டிருந்தார்.

“ஏதேது? அண்ணனும், தங்கச்சியும் சேர்ந்து ஒரு பெரிய சதித்திட்டத்தையே தீட்டி வச்சிருக்கீங்க போலிருக்கு!
அம்மா பதிலுக்கு ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.

சுப்பிரமணிக்கு எரிச்சலாக வந்தது. இப்போது இதுவா பிரச்சனை? கார் பழகப்போறேன்னு சொன்னால், ‘சரிப்பா! நல்லபடியா கத்துகிட்டு வா! ஜாக்கிரதையா ஓட்டு! விபத்து ஏற்படாம கவனமா இரு!’ இப்படி ஏதாவது அறிவுரை தந்து அன்பாய் அனுப்பினால்தானே நல்ல மனநிலையில் கற்றுக்கொள்ள முடியும்? அதைவிட்டுவிட்டு ஆரம்பத்திலேயே அபசகுனம் போல் கிண்டலும் கேலியும் செய்து அவன் ஆர்வத்துக்கு தடை போட்டால்…….எரிச்சல் வராமல் வேறேன்ன வரும்?

மனக்குமுறலோடு வாசற்புறம் வந்தான். வராந்தாவில் தாத்தா சாய்வுநாற்காலியில் சாய்ந்திருந்தார். விழித்திருக்கிறாரா, தூங்குகிறாரா என்று கண்டறிய முடியாத இருட்டு. அவருடைய காலருகே கிடந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

தாத்தா லேசாக இருமினார்.

“தண்ணி எடுத்திட்டு வரவா, தாத்தா?”

“இதோ இருக்கு, குடிச்சுக்கிறேன்”

சொம்பு நீரை ஒரே மூச்சில் குடித்தவர், அவனிடம், “ஏன்ப்பா, என்னவோ போலயிருக்கே?” என்றார்.

“ப்ச்! ஒண்ணுமில்லை, தாத்தா!”

“சொல்லுடா, உங்கப்பன் உன்னைத் திட்டிகிட்டு இருந்த மாதிரி இருந்துதே?”

தாத்தா பலே கில்லாடி. ஆள் மட்டும்தான் வராந்தாவில். கவனம் முழுவதும் வீட்டுக்குள்.

“தாத்தா! நான் கார் டிரைவிங் கத்துக்கப்போறேன்னு சொன்னதுக்குதான் இந்தக் கேலியும், பேச்சும்!”

“ஏன்டா, சுப்பு, நெசமாத்தான் சொல்லுறியா?”

‘கற்றது தமிழ்’ படத்துக் கதாநாயகி மாதிரி கேட்டார்.

“என்ன, தாத்தா, நீங்களுமா?” நொந்து போனான் சுப்பிரமணி.

“அதில்லைடா, சைக்கிளே இன்னும் ஒழுங்கா ஓட்டத்தெரியாது. அதுக்குள்ளே காரான்னு யோசிக்கிறேன்.”

“நான் என்ன தாத்தா செய்வேன்? அது எனக்கு வராமலேயே போயிட்டது. இப்போ இருக்கிற பொடிப்பசங்க எல்லாம் ஆளுக்கொரு சைக்கிள் வச்சுகிட்டு என்னமா பந்தா பண்றான்க. என் கெட்ட நேரம், சைக்கிள் கத்துக்க ஆரம்பிச்ச புதுசிலே ஒரு தப்பு பண்ணி பெரிய பிரச்சனையாயிட்டது. அதிலேயிருந்து சைக்கிள்னாலே பயம் வந்துட்டுது.”

“அதுக்கு என்ன செய்ய முடியும்? பாம்பையும் அடிக்கணும், தடியும் உடையக்கூடாதுன்னா நடக்குமா? கீழே விழாமல் சைக்கிள் பழக முடியுமா?”

சுப்பிரமணிக்கு அந்த சம்பவத்தை நினைத்தாலே நெஞ்சம் கலங்கியது. அப்போது அவனுக்குப் பத்து வயது இருக்கும். அவனுக்கு சைக்கிள் மீதிருந்த ஆர்வத்தைப் பார்த்து மாமா, தன்னிடமிருந்த பழைய சைக்கிள் ஒன்றை சர்வீஸ் செய்து அவனிடம் சேர்ப்பித்தார். அண்ணன் தான் மைதானத்திற்கு அழைத்துச்சென்று சைக்கிள் மிதிக்கக் கற்றுக்கொடுத்தான். சிவா அப்போதே அப்பாவுக்குத் தெரியாமல் அவரது ஸ்கூட்டரை ஓட்டப் பழகியிருந்தான்.

சுப்பிரமணி சைக்கிள் மிதிக்கக் கற்றுக்கொண்டானே தவிர, சாலை விதிகள் எதையும் அறிந்திருக்கவில்லை. சாலையின் இடப்புறம் செல்வதா, வலப்புறம் செல்வதா என்பதைக்கூட அறியாத நிலையில், ஒருநாள் குருட்டாம்போக்கில் எந்தெந்தத் தெருவிலோ சுற்றிக்கொண்டிருந்தபோதுதான் எதிர்பாராத அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

ஓரு மூன்றுவயதுக் குழந்தை குறுக்கே ஓடிவர, பதட்டத்தில் தடுமாறி, பிரேக் பிடிக்கவும் தோன்றாமல் அக்குழந்தையின் மேலேயே ஏற்றிவிட்டான்.

குழந்தை கீழே விழுந்ததில் கீழே இருந்த கூரான கல் ஒன்று தலையில் பொத்தலிட்டு குபுகுபுவென்று இரத்தம் பெருக, அதைப் பார்த்த அதிர்ச்சியில் சுப்பிரமணிக்கு உடலெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட்டது. குழந்தையின் தாய் பதறியபடியே ஓடிவந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓலமிடத்தொடங்கிவிட்டாள்.

அக்கம்பக்கத்தவர் உடனே கூடிவிட, யாரோ ஒருவன், அநேகமாய் குழந்தையின் தகப்பனாய் இருக்கலாம், “கண்ணு தெரியலையாடா? பொறுக்கி நாயே! நில்லுடா! குழந்தைக்கு மட்டும் எதாவது ஆட்டும், உன்னை நார் நாராய்க் கிழிச்சிட்டுதான் டா மறுவேல! சைக்கிள் ஓட்டுற அழகப்பாரு! தீவட்டி!” என்று வாய்க்கு வந்தபடி வைதுகொண்டே குழந்தைக்கு முதலுதவி செய்ய முற்பட, மற்றவர்கள் எல்லாம் இவனைப் பிடித்துக்கொண்டனர்.

“டேய்! யாருடா நீ? உன்ன இந்த ஏரியாப் பக்கமே பாத்ததில்லையே? எந்த ஏரியாடா? உங்கப்பன் யாருடா?”

ஓரே நேரத்தில் ஆளாளுக்குக் கேள்விகள் கேட்க, எதற்குப் பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தபோது, ஒருவர்,
“என்னாத்துக்கு கேட்டினு இருக்கீங்கோ, பேசாம நாலு சாத்து சாத்தி அனுப்புனா, அப்பால இந்தப்பக்கம் தலகாட்டமாட்டான்” என்று தூபமிட, பயத்தில் கைகால்கள் உதறத்துவங்கின.

“தர்ம அடின்னா என்னம்மா?” என்று எப்போதோ அம்மாவிடம் கேட்டறிந்தது நினைவுக்கு வந்தது. இப்போது தானே அதை நேரடியாய் அனுபவிக்க இருப்பதை எண்ணும்போது, இதயம் வெளியில் விழுந்துவிட முயற்சிப்பதைப்போல் தடக் தடக் என்று அசுரவேகத்தில் துடித்தது.

“சார்..ப்ளீஸ்…., என்னை விட்டுடுங்க! தெ…தெ…தெரி….யாமப்…. பண்ணிட்டேன், என்னை…என்னை…. அடிக்காதீங்க!”

வாய் குழறியது. அழுகையினூடே, கையெடுத்துக் கும்பிட்டபடி கெஞ்சிக்கொண்டிருந்த போதுதான் ஆபத்பாந்தவனாக அவர் தோன்றினார்.

“நிறுத்துங்கப்பா! இந்தப்பையனை எனக்கு நல்லாத்தெரியும்! டேய், நீ கங்கா நகர் பாலகிருஷ்ணன் மகன் தானே?”

“ஆமாங்க, ஆமாங்க!” என்று அரற்றினான்.

“சின்னப்பையன்! விட்டுடுவோம், அவங்க அப்பாவைப் பாத்து நான் பேசிக்கிறேன்! குழந்தையை ஆஸ்பத்திரிக்கு எடுத்திட்டுப்போயாச்சா?’ என்று கேட்டார்.

அவருக்கு அங்கு ஏதோ செல்வாக்கு இருந்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவர் சொன்னதை ஏற்று அவனை அப்படியே முழுசாய் விட்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

“சரி, நீ போப்பா! நான் உங்கப்பாகிட்டே பேசிக்கறேன், இனிமேல் இந்தமாதிரி சைக்கிள் ஓட்டத்தெரியாம தெருவுக்குள்ள வரக்கூடாது! சைக்கிளை எடுத்துகிட்டு ஓடு!” என்று உத்தரவிட்டார்.

“என்னங்க, அவனை சும்மா விட்டுட்டீங்களே, ரெண்டு அறை கொடுத்து அனுப்பாம…..” யாரோ புலம்ப….

விட்டால் போதுமென்று நொடி நேரமும் நிற்காமல் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடி வந்தவன் தான். அதன்பிறகு சைக்கிளைத் தொடும் துணிவு வரவேயில்லை. இந்த விபத்தைப் பற்றியும் வீட்டில் மூச்சுவிடவில்லை. ஆனால் அண்ணன் எப்படியோ மோப்பம் பிடித்து, போட்டுக்கொடுத்துவிட, வெளியில் வாங்கத் தவறிய அறைகளை அப்பாவிடம் வாங்கினான். அதற்கப்புறம் சைக்கிள் ஆசை மொத்தமாய் விட்டுப்போனது.

‘உத்தியோகம் புருஷலட்சணம்’ என்பதுபோல் சைக்கிள் ஒட்டுவதும் ஆண்பிள்ளைக்கழகு என்ற ரீதியில் அம்மாவும் என்னென்னவோ சொல்லி அவன் மனதை மாற்ற முயன்றாள். ம்! கடைசிவரை அது மாறவேயில்லை. இந்நிலையில் இத்தனை வருடங்கள் கழித்து ‘கார் ஒட்டப்போகிறேன்’ என்றால் அனைவருக்கும் வியப்பு வருவதில் வியப்பென்ன?

என்ன ஆனாலும் சரி! கார் கற்றுக்கொள்வதைக் கைவிடக்கூடாது. உறுதியுடன் உறங்கப்போனான். கனவில் பவானியும் அவனும் சிங்கப்பூர் வீதிகளில், காரில் ஊர்வலம் போனார்கள். பவானி பார்ப்பதையெல்லாம் வாங்கித் தரச்சொல்லி அடம்பிடித்தாள். இவன் முடியாதென்று விவாதம் செய்துகொண்டிருக்கும்போது, பொழுது விடிந்துவிட்டதெனச் சொல்லி அம்மா எழுப்பினாள்.

முதலில் கொஞ்சம் பயந்தாலும், கீழே விழும் அபாயம் இல்லாததாலும், இவன் பிடிக்கத் தவறிய பிரேக்கை கற்றுக்கொடுப்பவர் பிடிப்பதாலும் வெகு சீக்கிரமே பயம் விட்டுப்போனது. ஓரே மாதத்தில் தேர்ச்சி பெற்று உரிமமும் வாங்கிவிட்டான்.

மாமாவுக்கு மெத்தப் பெருமை. இவனுக்காகவே பழைய கார் ஒன்றை வாங்கி தன் ஆஸ்தான ஓட்டுநராக சுப்பிரமணியை அமர்த்திக்கொண்டார். மாமாவின் அசாத்தியத் துணிச்சல் கண்டு நெகிழ்ந்து போனான்.

ஓருநாள் மாமாவை மும்பை செல்வதற்காக ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான். பவானியுடன் இன்று சினிமாவுக்குப் போவதாய்த் திட்டம். மனம் உற்சாகத்தில் மிதந்துகொண்டிருந்தது. புதிய பாடல் ஒன்றை வாய் சீட்டியடித்துக்கொண்டிருந்தது.

யாரோ தள்ளாடியபடி, காரின் குறுக்கே விழுவதுபோல் தெரிய, சட்டென்று கவனித்து,பிரேக் பிடித்தான். அது கடைத்தெரு என்பதால் கூட்டம் கூடிவிட்டது. சுப்பிரமணி இதுபோன்ற நாடகங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் அயரவில்லை.

குறுக்கே விழுந்தவன் எழக்காணோம். சுப்பிரமணி வண்டியை விட்டு இறங்கினான். அதற்குள் ஒரு சிறிய கும்பல் வண்டியை நோக்கி வந்தது. இவனைப் பார்த்ததும், யாரோ, “அட! நம்ம ரங்கசாமி ஐயாவோட மருமகன்!” என்றான். மாமாவின் செல்வாக்கு அத்தனை பிரசித்தம்.

கீழே விழுந்து கிடந்தவரைக் கண்ணுற்ற கணத்தில் துணுக்குற்றான். அவர் மயங்கி விழுந்திருக்கவேண்டுமென்று அறிந்த சுப்பிரமணி தண்ணீர் கொண்டுவரச்செய்து அவர் முகத்தில் தெளித்து மூர்ச்சை தெளிவித்தான். சில்லென்று தண்ணீர் பட்டு விழித்த அவர் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து திருதிருவென்று விழிக்கலானார்.

கூட்டத்திலிருந்த ஒருவன், “என்னய்யா? உன் ஆளுங்க எங்கே? ஒருத்தனையும் காணோம். பணம் பறிக்கிற கூட்டம் தானே நீங்க?” என்றான். மற்றொருவன், “இன்னும் கொஞ்சம் முன்னால வந்து வுழுந்திருக்கணும்யா. ஸார் பாரு! ஊஷாரா காரை அங்கேயே நிறுத்திட்டாரு!” என்று சுப்பிரமணியைக் கை காட்டினான்.

“இவனுங்களை எல்லாம் புடிச்சு நாலு தட்டு தட்டினாதான் சரிப்படுவானுக. பொழப்பத்தப் பொறுக்கிப்பசங்க” ஏதோ ஒரு குரல் உசுப்பேற்றியது.

அவர் கலங்கும் விழிகளோடு சுப்பிரமணியை ஏறிட்டார்.

சுப்பிரமணி சட்டென்று, “சார்! நீங்க.... கங்காநகர் பாலகிருஷ்ணன் தானே? என்னைத் தெரியலையா? ஞாபகமில்லையா? வாங்க, வீட்டுக்குப் போலாம்!” என்றதும்,

அவர் வியப்புடன் நோக்கியபடியே, "ஆமாம், தம்பீ!" என்றார்.

எதிர்பார்த்த எதுவும் நடவாததால் முணுமுணுத்தபடி கூட்டம் கலையத் தொடங்கியது.

அவர் நடக்கவும் தெம்பின்றி இருந்தார். அவரைக் கைத்தாங்கலாக காருக்கு அழைத்து வந்தான். அவர் மறுப்பையும் பொருட்படுத்தாமல் அருகிலிருந்த கடையிலிருந்து சுடச்சுட போண்டாவும், டீயும் வாங்கித் தந்தான். உண்டுமுடித்து சற்றே தெளிவடைந்தவுடன் அவர் தயங்கித் தயங்கி,

“தம்பீ, என்னை மன்னிச்சிடுப்பா! கூட்டத்தில் சிக்கியிருந்தா..என்னை ஒருவழி பண்ணியிருப்பாங்க. அதனால நான் சும்மாயிருந்திட்டேன்.நான் கங்காநகர் பாலகிருஷ்ணன் இல்லை.நீ வேற யாரையோ நெனச்சிகிட்டு.... !” என்று இழுத்தார்.

சுப்பிரமணிக்கு சிரிப்பு வந்தது.

“சார்! இந்த கங்காநகர் பாலகிருஷ்ணன் யாருன்னு எனக்கும் தெரியாது. கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னை இது போலொரு இக்கட்டுலேர்ந்து காப்பாத்த ஒரு புண்ணியவான் சொன்ன பொய் இது. இன்னைக்கு உங்களைப் பார்த்ததும் எனக்கு அவர்போலவேத் தோணவும் அதே பொய்யை நானும் பயன்படுத்தினேன், அவ்வளவுதான்!” என்றான்.

அவர் மெலிதாய் அதிர்ந்து, “அப்படியானால் அந்த சைக்கிள் பையன் நீதானா?” என்றார்.

சுப்பிரமணி, சிரிப்பை நிறுத்தி, ஒரு கணம் அவரை உற்றுப்பார்த்தான். பின் இருவருமே தங்கள் நாடகத்தை எண்ணி, கண்ணில் நீர் வரும்வரை சிரிசிரியென்று சிரித்துக்கொண்டனர்.

கலையரசி
18-03-2010, 12:52 PM
சரளமான நடை உங்களுக்குக் கை வந்திருக்கிறது. முடிவும் எதிர்பார்க்காத மாதிரி இருந்தது. நல்ல கதை. வாழ்த்து கீதம்.

govindh
18-03-2010, 01:06 PM
கங்காநகர் பாலகிருஷ்ணன் மகன் .....கதை
கண்முன் நடந்ததைப் போல் ஓர் உணர்வு..
வாழ்த்துக்கள் கீதம் அவர்களே...

சிவா.ஜி
18-03-2010, 02:47 PM
ஆஹா....இரு சம்பவங்களை முடிச்சுப்போட்ட விதம்.....மிகப் பிரமாதம். கொஞ்சங்கூட எதிர்பாராத முடிவு. ஆரம்பத்திலிருந்து சுப்பிரமணியின் தந்தையின் பெயர் சொல்லாமலேயே கதையை நகர்த்தி, அவனே 'நீங்க கங்காநகர் பாலகிருஷ்ணன் தானே எனக் கேட்டதும்', எப்படி என்ற ஆச்சர்யத்தை அளித்தது.

சரளமான நடை....தொய்வில்லாத சுவாரசியம்....எதிர்பாராத, அம்சமான முடிவு...அதில் தொக்கி நிற்கும் மனிதாபிமானம்....மிக மிக அருமை கீதம் அவர்களே.

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

aren
18-03-2010, 04:03 PM
நான் எதிர்பார்க்காத முடிவு. அருமையாக கதையை கோத்திருக்கிறீர்கள், பாராட்டுக்கள்.

மதி
18-03-2010, 04:59 PM
அட போட வைக்கும் முடிவு.. நன்றாய் வந்திருக்கிறது... வாழ்த்துகள்..~!

கீதம்
19-03-2010, 07:54 AM
சரளமான நடை உங்களுக்குக் கை வந்திருக்கிறது. முடிவும் எதிர்பார்க்காத மாதிரி இருந்தது. நல்ல கதை. வாழ்த்து கீதம்.

வாழ்த்துக்கு நன்றி கலையரசி அவர்களே.

கீதம்
19-03-2010, 07:55 AM
கங்காநகர் பாலகிருஷ்ணன் மகன் .....கதை
கண்முன் நடந்ததைப் போல் ஓர் உணர்வு..
வாழ்த்துக்கள் கீதம் அவர்களே...

மிக்க நன்றி கோவிந்த் அவர்களே.

கீதம்
19-03-2010, 07:58 AM
ஆஹா....இரு சம்பவங்களை முடிச்சுப்போட்ட விதம்.....மிகப் பிரமாதம். கொஞ்சங்கூட எதிர்பாராத முடிவு. ஆரம்பத்திலிருந்து சுப்பிரமணியின் தந்தையின் பெயர் சொல்லாமலேயே கதையை நகர்த்தி, அவனே 'நீங்க கங்காநகர் பாலகிருஷ்ணன் தானே எனக் கேட்டதும்', எப்படி என்ற ஆச்சர்யத்தை அளித்தது.

சரளமான நடை....தொய்வில்லாத சுவாரசியம்....எதிர்பாராத, அம்சமான முடிவு...அதில் தொக்கி நிற்கும் மனிதாபிமானம்....மிக மிக அருமை கீதம் அவர்களே.

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சிவா.ஜி அவர்களே.

கீதம்
19-03-2010, 07:59 AM
நான் எதிர்பார்க்காத முடிவு. அருமையாக கதையை கோத்திருக்கிறீர்கள், பாராட்டுக்கள்.

பாராட்டுக்கு மிக்க நன்றி ஆரென் அவர்களே.

கீதம்
19-03-2010, 08:00 AM
அட போட வைக்கும் முடிவு.. நன்றாய் வந்திருக்கிறது... வாழ்த்துகள்..~!

வாழ்த்துக்கு நன்றி மதி அவர்களே.

செல்வா
19-03-2010, 08:09 AM
நன்றாக எழுதுகிறீர்கள்...

இந்தக் கதை முடியும் போது எனக்கு இராஜேஷ் குமாரின் சிறுகதைகள் நினைவிலாடின...

யூகிக்க முடியாத முடிவு

வாழ்த்துக்கள்... கீதம்

கீதம்
19-03-2010, 08:17 AM
நன்றாக எழுதுகிறீர்கள்...

இந்தக் கதை முடியும் போது எனக்கு இராஜேஷ் குமாரின் சிறுகதைகள் நினைவிலாடின...

யூகிக்க முடியாத முடிவு

வாழ்த்துக்கள்... கீதம்

வாழ்த்துக்கு நன்றி செல்வா அவர்களே. நான் இராஜேஷ் குமார் கதைகள் படித்ததில்லை. கதை நன்றாக வந்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி.

Ravee
19-03-2010, 03:16 PM
ம்ம் பாண்டியராஜனின் துடுக்கு உங்கள் நடையில் கீதம்..... வித்தியாசமான கதை ... வித்தியாசமான முடிவு.

பா.ராஜேஷ்
19-03-2010, 04:10 PM
மிக அழகான கதை. எதிர்பாராத முடிவு. பாராட்டுக்கள் கீதம்

அன்புரசிகன்
19-03-2010, 10:22 PM
பொய்யை இறுதியில் அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். கடைசிவரை உண்மையாகவே தோன்றியது... கதையின் வெற்றி உங்கள் முடிவில் தெரிந்தது. வாழ்த்துக்கள்.

அமரன்
19-03-2010, 10:35 PM
பிரமாதம்.

ஆரம்பத்திலிருந்தே கதை தனக்குள் என்னை அடக்கிக்கொண்டது. முடியும் வரை வெளியேற அனுமதிக்கவில்லை.

திருக்குரலுக்கு மனதில் மதியும்படி அர்த்தம் சொல்லும் உரைசொல்லிகள் போல் சுவாரசியமான கதை சொல்லி நீங்கள்.

பாராட்டு கீதம்.

கீதம்
20-03-2010, 11:25 AM
ம்ம் பாண்டியராஜனின் துடுக்கு உங்கள் நடையில் கீதம்..... வித்தியாசமான கதை ... வித்தியாசமான முடிவு.

பின்னூட்டத்துக்கு நன்றி ரவீ அவர்களே.

கீதம்
20-03-2010, 11:26 AM
மிக அழகான கதை. எதிர்பாராத முடிவு. பாராட்டுக்கள் கீதம்

நன்றி ராஜேஷ் அவர்களே.

கீதம்
20-03-2010, 11:27 AM
பொய்யை இறுதியில் அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். கடைசிவரை உண்மையாகவே தோன்றியது... கதையின் வெற்றி உங்கள் முடிவில் தெரிந்தது. வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி அன்புரசிகன் அவர்களே.

கீதம்
20-03-2010, 11:28 AM
பிரமாதம்.

ஆரம்பத்திலிருந்தே கதை தனக்குள் என்னை அடக்கிக்கொண்டது. முடியும் வரை வெளியேற அனுமதிக்கவில்லை.

திருக்குரலுக்கு மனதில் மதியும்படி அர்த்தம் சொல்லும் உரைசொல்லிகள் போல் சுவாரசியமான கதை சொல்லி நீங்கள்.

பாராட்டு கீதம்.

பாராட்டுக்கு நன்றி அமரன் அவர்களே.

Akila.R.D
23-03-2010, 10:55 AM
கடைசியில் தான் உண்மை புரிந்தது...

வாழ்த்துக்கள் கீதம் அவர்களே..

கீதம்
24-03-2010, 11:56 PM
கடைசியில் தான் உண்மை புரிந்தது...

வாழ்த்துக்கள் கீதம் அவர்களே..

மிக்க நன்றி அகிலா.

இளசு
06-04-2010, 08:59 PM
புரை தீர்ந்த நன்மை..

தீதும் நன்றும் ...

தினை விதைத்தவன்...

காலத்தாற் செய்த...


தலையாலே தான் தருதல்..



எத்துணை சாசுவதமான உண்மை விதிகள்..

அதை இத்தனைச் சுவையான ஒரு கதைக்குள்....!!!!


அசந்தேன் கீதம்..

மனமார்ந்த பாராட்டுகள்!

கீதம்
06-04-2010, 10:59 PM
இத்தனை செய்திகளை இந்தக்கதை உள்ளடக்கியுள்ளதா என்று உங்களைப் போலவே நானும்(?) வியக்கிறேன். அதிநுட்பப் பார்வைக்கும் அழகிய விமர்சனத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி இளசு அவர்களே.

sarcharan
14-04-2010, 02:32 PM
கீதம் சூப்பர் ரசித்தேன் போங்க..
நான் ஒரு தடவை இப்படி தன் டூ விலர் கொண்டு பொய் ஒரு கிழவி மேல இடித்து... பழைய நினைவுகளை அசை போட்டேன்.. நல்ல கதை..

கீதம்
15-04-2010, 12:27 AM
கீதம் சூப்பர் ரசித்தேன் போங்க..
நான் ஒரு தடவை இப்படி தன் டூ விலர் கொண்டு பொய் ஒரு கிழவி மேல இடித்து... பழைய நினைவுகளை அசை போட்டேன்.. நல்ல கதை..

நன்றி, sarcharan.

நம்மில் பலருக்கும் இந்த ஆரம்பகால (மனக்)காயங்கள் இருந்துகொண்டு
அவ்வப்போது நினைவில் வந்து வாட்டும். சில சிரிக்கவைக்கவும் செய்யும். உங்களது எப்படியோ?

வெப்தமிழன்
16-04-2010, 10:12 AM
கதை மிகவும் அருமை கீதம் அவர்களே. முடிவு எதிர்பாராத ஒன்று .

மயூ
17-04-2010, 02:53 AM
சுபமான முடிவு. எங்களையும் சிரிக்கவைத்துவிட்டது முடிவில் :)

கீதம்
17-04-2010, 12:12 PM
கதை மிகவும் அருமை கீதம் அவர்களே. முடிவு எதிர்பாராத ஒன்று .

மிக்க நன்றி வெப்தமிழன் அவர்களே. நீங்கள் வந்தவுடனேயே என் கதைக்குப் பின்னூட்டம் தந்து அசத்திவிட்டீர்கள். மிகவும் மகிழ்ச்சி.

கீதம்
17-04-2010, 12:24 PM
சுபமான முடிவு. எங்களையும் சிரிக்கவைத்துவிட்டது முடிவில் :)

நன்றி மயூ அவர்களே.

பாரதி
18-04-2010, 09:02 AM
நல்ல கதை. நோக்கம் நல்லதெனில் யாருக்கும் தீங்கு விளைவிக்காதெனில் பொய்மையும் வாய்மையிடத்து... என்ற வள்ளுவரின் குரல் இக்கதையில் ஒலிக்கிறது. கதையின் தலைப்பும், கதை சொல்லும் பாங்கும் நன்றாக இருக்கிறது. பாராட்டுகிறேன்.

கீதம்
22-04-2010, 09:25 PM
நல்ல கதை. நோக்கம் நல்லதெனில் யாருக்கும் தீங்கு விளைவிக்காதெனில் பொய்மையும் வாய்மையிடத்து... என்ற வள்ளுவரின் குரல் இக்கதையில் ஒலிக்கிறது. கதையின் தலைப்பும், கதை சொல்லும் பாங்கும் நன்றாக இருக்கிறது. பாராட்டுகிறேன்.

உங்களுடைய பாராட்டு என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கிறது. நன்றி பாரதி அவர்களே.