PDA

View Full Version : அன்னையை நினைந்து!நாகரா
13-03-2010, 05:39 AM
அல்லாவின் நாமத்தை
நின்பேரில் ஒளித்திருந்து
என்புதோல் போர்த்திய
அன்பின் திருஉருவாய்
மண்ணில் ஒளிர்ந்த
அன்னை லலிதாவே!
என்னை ஈன்றெடுத்த
நின்னை நினைந்து
நெஞ்சம் நெகிழ
என்னைத் திறக்கின்றேன்!
அன்பைப் பொழிவாயே!
(என் அன்னையின் பெயர் LALITHAA = ALLAAH IT = "இது அல்லா" என்பதன் ANAGRAM, அநாகரம்; லலிதா = ல்+அ+ல்+இ+த்+ஆ = இ+த்+அ+ல்+ல்+ஆ = இதல்லா, அதாவது "இது அல்லா")

அன்பைப் பொழி வாயே இருதயம்!
மெய்வாய் அதனை யாம் மறந்ததேனோ?
பொய்வாய்க் கன்மனப் பேய்வாய் உழல்வதேனோ?
"இது அல்லா" என்றே நின் திரு நாமஞ் சொல்லும்
உபதேசம் புரிந்தே
ஒவ்வொன்றும் அல்லாவின் திரு உருவாய்
எப்போதுங் கண்டே
எல்லாமும் அன்பு செயும்
மன இதம் எமக்குத் தருவாயே!

மன இதம் எமக்குத் தரு வாயே இருதயம்!
மெய்வாய் அதனை மறந்த யாமோ மனிதம்?
(வாய் = வழி)
மன இதம் மறந்தோம்
மத இனம் எனப் பிளந்தோம்!
கூறுகளாய்ச் சிதைந்து கிடக்கும் எம்மைக்
கூட்ட வல்லது
தாயாம் நின் அன்பே!
தாயே! தயை புரிவாயே!
சேயாம் எம் மேல் அன்பைப் பெய்வாயே!
(தொடரும்)

நாகரா
13-03-2010, 02:38 PM
தயை புரி வாயே இருதயம்!
அன்பைப் பெய் வாயே இருதயம்!
அல்லாவின் அருளாய்
அம்மை நீ வழிவாய்!
செம்மை யாம் பெற எம்
நெஞ்சை நீ உழுவாய்!
எந்தையின் அருவம்
பிள்ளையெம் உருவுள்
நன்றே பதிந்திட
எம் மெய் உயிர்த்தெழ
மெய் வழி தருவாய்!
மெய் வழி மறைக்கப்
பொய்க் குருக் கூட்டம்
பின்னும் மாய்கையை
வெட்டும் ஞான வாளை
எமக்குத் தருவாய்!
குரு நபி அருவம்
குர் ஆன் ஓதும்
குகையாம் இருதயம்
புகவே மன இதம்
எமக்கே அருள்வாய்!
அகமது நினதாய்
முகமது நபியாய்
சகமதில் அல்லா
அருளரசியற்ற
வழி வகை செய்யும்
அன்பே சிவமாம்
அன்னை லலிதா
நின் திருவடி சரணம்!
(தொடரும்)

நாகரா
13-03-2010, 02:46 PM
பிறந்திறந்துழலும் கருமச் சுழலை
முறிக்கும் அன்பின் தரும நெறியை
இருதயந் திறந்தே நீ காட்டுவாய்!
பெருவாழ்வுப் பெருவரம் யாவரும்
பெறவே அன்பின் சிகிச்சையை
கரதலந் திறந்தே நீ செய்வாய்!
நின் திரு மகன் வள்ளலின்
குரு மொழி விளங்கவே
சிரதலந் திறந்தெம்முள் உய்வாய்!
வெண்ணீறாய் நெற்றியில் ஒளிர்வாய்!
உண்ணீரமுதாய்க் கண்டத்தே விழுவாய்!
உண்ணாமுலையை மெய்யுண்ணப் பொழிவாய்!
நெஞ்சத் திரு நிலமாய் எம்முள்ளே விரிவாய்!
நெஞ்சடி இருள் வாய் ஒளிரவே விடிவாய்!
உந்தியில் சத்திய தரிசனந் தருவாய்!
உந்திக்கீழ் இரசவாத அதிசயம் புரிவாய்!
முதுகடி பொருந்தும் ஜோதியாய் எழுவாய்!
முழந்தாள் இறங்கி அருளாட்சி செய்வாய்!
திருவடி பதியும் பூரணம் ஆவாய்!
பரமபிதா சமேத பரிசுத்த ஆவியாம்
குமரன் கிறிஸ்துவின் புனித அன்னையாம்
மரியாள் ஸ்ரீ மகா லலிதா பரமேஸ்வரி
நின் திருவடிகள் சரணம்!

அமரன்
13-03-2010, 09:34 PM
பாரதியின் கவிதைகளுக்குப் பிறகு உங்கள் கவிதைகளில் சொல்வளம் மிகக் கண்டேன் நாகா.

அம்மா..
நினைவே சங்கீதம்..
இனிமைக்குச் சொல்லவும் வேண்டுமா.

தொடருங்க.

govindh
13-03-2010, 10:37 PM
அம்மா...தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை...
கவிப் பணி தொடருங்கள்..ஐயா

sofi
13-03-2010, 11:05 PM
அருமையான கவிதை ..இல்லை அன்னையின் உருவில் கவிமாலை ..வாழ்த்துக்கள்

நாகரா
14-03-2010, 05:04 AM
ஊக்குவிக்கும் உம் பின்னூட்டங்களுக்கு நன்றி அமரன், கோவிந்த் மற்றும் சோஃபி

நாகரா
15-03-2010, 05:48 AM
முதுகடியில் பயமெனும் முடிச்சினை அவிழ்க்க
"யாமிருக்க பயமேன்!" எனும்
அபய மந்திரந் தருவாய்!
உந்திக்கீழ் அவ காம முடிச்சினை அவிழ்க்க
அம்மையப்பனாய் அங்கமர்ந்தே கருணை அருள்வாய்!
உந்தியில் ஆணவ முடிச்சினை அவிழ்க்க
சச்சிதானந்த சத்தி சித்தி பூரண
அருட்பேராற்றலாய் அங்கே அமர்வாய்!
உந்தி மேல் மருண்மயக்க முடிச்சினை அவிழ்க்கப்
பூரண ஞானமாய் அங்கே நிறைவாய்!
நெஞ்சை மூடும் வஞ்ச முடிச்சினை அவிழ்க்கத்
தாழுடை அன்பாய் அங்கே பாய்வாய்!
நெஞ்சமேல் பேத பாவ முடிச்சினை அவிழ்க்க
ஆன்ம நேய அமிழ்தமாய் அங்கே பெருகுவாய்!
கண்டத்தே கரும விதி முடிச்சினை அவிழ்க்க
அறவாழித் தரும நெறியாய் அங்கே சுழல்வாய்!
நெற்றியை மூடிய மாயை இருள் முடிச்சை அவிழ்க்க
சுயம்பிரகாசச் சுடர் விழியாய் அங்கே மலர்வாய்!
உச்சியை மூடிய அஞ்ஞான முடிச்சை அவிழ்க்க
மெய்வழி திறக்கும் பூரணமாய் அங்கே உய்வாய்!
அவதார மகிமை முழந்தாள் இறங்க அருளரசியற்றுவாய்!
பூரண மெய்ஞ்ஞானம் பூமியில் விளங்கத் தாய் நீ பாதம் பதிவாய்!
"மெய் வழி ஜீவன் நானே" என்றே சேயெம் மெய் வழி தாய் நீ புகுவாய்!
முடிச்சுகள் யாவும் அவிழ்த்தே
முதல் நடு முடிவாய்
சேயெம் தேக மெய்யுயிர்த்த தாயே லலிதா நின் திருவடி சரணம்!

நாகரா
16-03-2010, 05:38 AM
பள்ளி வாசல் சென்றதில்லை!
நல்லார் அல்லாவில் ஒளிந்த
நல்லாவி லலிதா அன்னையே!
நின் செந்திலக நெற்றி
சொல்லும் அமுதக் "குர் ஆன்"
எப்போதும் என் நெஞ்சில் அதிரும்!

தேவாலயஞ் சென்றதில்லை!
பரமபிதா சமேத
பரிசுத்த ஆவி லலிதா அன்னையே!
ஒளிரும் நின் திருமுகம்
ஒலிக்கும் வேதாகமம்
இருதய வாய்க்குள் இனிக்கும்!

கோயிலுக்குச் சென்றதில்லை!
பரப்பிரம்ம சமேத
பராசத்தி லலிதா அன்னையே!
நின் மோனப் புன்னகை
என் நெஞ்சுள் அவிழ்க்கும்
நல் வேத இரகசியம்!

அக்னி
16-03-2010, 07:53 AM
தாயிற்குள்ளான என்
மெய் வளர்ச்சியே
மெய்யான வளர்ச்சி...
விஞ்சும் வளர்ச்சி
எவ்வுலகிலும் இல்லை...

நான் தந்த வேதனை தாங்கி,
என் முதற்பசி தீர்த்தவள் தாய்...

நான் பேச ‘அம்மா’ என
முதல் வார்த்தை தந்தவள் தாய்...

எனக்கான பெரும் முதல் அம்மா...
ஆதலால்,
அனைத்திலும் முதலானவள் அம்மா...

அந்த வார்த்தையைச் சொல்லும்போதே, நெஞ்சம் நிறைந்து பூரிக்கின்றது.

நாகரா அவர்களின் அன்னையை நினைந்த பாக்கள், நெஞ்சை வருடுகின்றன...

வாழ்த்தி வணங்குகின்றேன் அன்னையை நினைந்து...

நாகரா
15-12-2010, 08:15 AM
உம் அழகியக் கவி மயப் பின்னூட்டத்துக்கு நன்றி அக்னி.

Hega
15-12-2010, 09:53 AM
அன்னை பற்றி அருமையாய் கவி படைக்கும் அன்பராம் நாகராவுக்கு என் பாராட்டுக்கள்.

முரளிராஜா
15-12-2010, 01:43 PM
பள்ளி வாசல் சென்றதில்லை!
நல்லார் அல்லாவில் ஒளிந்த
நல்லாவி லலிதா அன்னையே!
நின் செந்திலக நெற்றி
சொல்லும் அமுதக் "குர் ஆன்"
எப்போதும் என் நெஞ்சில் அதிரும்!

தேவாலயஞ் சென்றதில்லை!
பரமபிதா சமேத
பரிசுத்த ஆவி லலிதா அன்னையே!
ஒளிரும் நின் திருமுகம்
ஒலிக்கும் வேதாகமம்
இருதய வாய்க்குள் இனிக்கும்!

கோயிலுக்குச் சென்றதில்லை!
பரப்பிரம்ம சமேத
பராசத்தி லலிதா அன்னையே!
நின் மோனப் புன்னகை
என் நெஞ்சுள் அவிழ்க்கும்
நல் வேத இரகசியம்!
அன்னையை போற்றும் அழகான கவிதை நாகா. வாழ்த்துக்கள்.
என் அன்னையோடு நான் வாழ்ந்த நாட்கள் என்றும் என் கண் முன்னே.
மீண்டும் வருமா அந்த பசுமையான நாட்கள்.

நாகரா
26-12-2010, 10:09 AM
அன்னை பற்றி அருமையாய் கவி படைக்கும் அன்பராம் நாகராவுக்கு என் பாராட்டுக்கள்.
நன்றி ஹேகா

நாகரா
26-12-2010, 10:44 AM
அன்னையை போற்றும் அழகான கவிதை நாகா. வாழ்த்துக்கள்.
என் அன்னையோடு நான் வாழ்ந்த நாட்கள் என்றும் என் கண் முன்னே.
மீண்டும் வருமா அந்த பசுமையான நாட்கள்.
நன்றி முரளி ராஜா