PDA

View Full Version : மரிக்கொழுந்து!!!



aren
12-03-2010, 08:00 AM
மரிக்கொழுந்து!!!

மாலை ஐந்தாகிவிட்டது இன்னும் கனகா வரவில்லையே என்று சரசா கவலைப்பட்டாள். இப்போ வந்தாதான் ராவு எட்டு மணிக்குள் இருக்கிற பூவையெல்லாம் வித்துவிடலாம், அப்படி இல்லையென்றால் நேரமாகிவிடும், பூவை விக்கமுடியாது என்று சரசா நினைத்தாள்.

சரசாவும் கனகாவும் அடுத்தடுத்தே உட்கார்ந்து அந்த மாரியம்மன் கோவில் வாசலிலே பூ விற்பவர்கள். இருவரும் பக்கத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பூ வித்தபிறகு இருவரும் ஒத்தையடிப் பாதை வழியாகவே ஊர் போய் சேரவேண்டும், சரசாவுக்கும் கனகாவுக்கு தனியாக அந்த வழியே ராத்திரியில் போக பயம், ஆனால் இரண்டு பேரும் சேர்ந்து பேசிக்கொண்டே போனால் அவ்வளவு பயமாக இருக்காது, அதனாலே இருவரும் ஒன்றாகவே போவார்கள். கனகா இன்னிக்கு வரலைன்னா தனியா தான் எப்படி போவது என்று இன்னும் கவலைப்பட்டாள் சரசா.

அப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே மரிக்கொழுந்து கூடையைத் தூக்கிக்கொண்டு அங்கே வந்தாள்.

மரிக்கொழுந்து கனகாவின் மகள். பத்தாம் வகுப்பு முடிச்சவுடன் கனகா அவளோட படிப்பை நிறுத்திட்டு யார் கையிலாவது பிடித்துக் கொடுத்துவிட்டால் தமக்கு நிம்மதி என்று நினைத்திருந்தாள், ஆனால் அவளோட போறாத வேளை மரிக்கொழுந்து நன்றாக படித்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாள், வெறுமனே தேர்ச்சி பெறவில்லை, அந்தப் பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்தாள். அதனால் அவளுக்கு படிப்பு சொல்லிக்கொடுத்த டீச்சர்கள் அனைவரும் அவள் பிளஸ் டூ படித்துவிட்டு பின் டிகிரி படிக்க வேண்டும் என்று கனகாவை வற்புறுத்தி மரிக்கொழுந்தை பிளஸ் டூவில் சேர்த்துவிட்டார்கள். இப்போ இருக்கும் கஷ்டத்திலும் கனகா இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு மரிக்கொழுந்தை படிக்க வைத்துக்கொண்டிருந்தாள்.

மரிக்கொழுந்து கூடையைத் தூக்கிக்கொண்டு வருவதைப் பார்த்து சரசா அவளிடம், கனகாக்கா எங்கே என்றாள்.

அம்மாவுக்கு தலைவலி, எழுந்துக்கவே முடியாம படுத்திருக்குது, நான் ஸ்கூல் விட்டு நாலு மணிக்கு வீட்டுக்கு வந்தப்போ, பூ வீட்டு வாசலில் கட்டப்படாமல் அப்படியே இருந்தது, வீட்டுக்குள் போய் பாத்தா, அம்மா தலைவலியைத் தாங்கமுடியாமல் அப்படியே படுத்திருந்தது. பூ வாசலிலே கட்டாமலே இருக்குதே என்றேன் அம்மாவை எழுப்பி, சுப்ரமணி பூவை வாசல்லேயே வச்சுட்டுப் போய்ட்டாணா, நான் உள்ளே இருந்தது அவனுக்குத் தெரிந்திருக்காது, நான் வீட்டில் இல்லே என்று நினைத்து அங்கேயே வைச்சுட்டுப் போய்ட்டான் போலிருக்கு என்றாள் அம்மா தலையைத் தடவிக்கொண்டே.

எப்படி சுப்ரமணி பணம் வாங்காமல் பூ கொடுத்தான் என்று கேட்டாள் சரசா.

ஆமாக்கா, சுப்ரமணி முதல் நாள் கொடுத்த பூவுக்கு பணம் கொடுக்கலைன்னா மறுநாள் பூ கொடுக்கமாட்டான், ஆனால் எப்போதும் பணம் தயாராக வைத்துக்கொண்டு நின்றிருக்கும் அம்மா இன்னிக்கு காணலியே, எங்கேயாவது போயிருப்பாள் நாளைக்கு வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்து இன்றைக்குக் கொடுக்கவேண்டிய பூவை வீட்டு வாசலிலேயே வைத்துவிட்டுப் போய்விட்டான்னு நினைக்கிறேன்.

பூ கட்டாம கிடக்குதே, பூவை கட்டலைன்னா, பூத்திடும், நீ படுத்துக்கோ, நான் இதை கவனிக்கிறேன் என்று சொல்லிவிட்டு நானே உட்கார்ந்து பூவை கட்டினேன் என்றாள் மரிக்கொழுந்து சரசாவிடம்.

சரி சரி, அங்கே உன் கடையைப் போடு, எப்படியாவது இருட்டறதுக்குள் பூவை வித்துடனும் என்று சொன்னாள் சரசா.

கனகாவும் சரசாவும் ஒன்றாகவே இங்கே பூ விக்க ஆரம்பித்தார்கள் ஒரு இருபது வருஷத்துக்கு முன்பு. அதுக்கு முன்னால கனகாவின் அம்மா கிருஷ்ணவேணிதான் இங்கே பூ வித்துக்கொண்டிருப்பாள். சில சமயங்களில் அம்மாவுக்குத் துணையாக கனகாவும் இங்கே வந்து பூ விப்பாள். அப்பொழுதுதான் இங்கே எலக்ரிகல் காண்டிராக்ட் எடுத்து வேலை செய்யும் மாரிப்பனிடம் தன் மனதைப் பறி கொடுத்தாள். கிருஷ்ணவேணியும் தன் பொண்ணு ஆசைப்பட்டுட்டாளேன்னு அவனுக்கே கட்டிக் கொடுத்துவிட்டாள்.

கல்யாணமான புதிதில் மாரி ரொம்ப நல்லவனாகவே இருந்தான். காண்டிராக்ட் எடுத்து கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை கனகாவிடம் கொடுத்து வீட்டு செலவுக்கு வைத்துக்கொள்ளச் சொல்லுவான். அந்த நல்ல சமயத்தில் பிறந்தவதான் இந்த மரிக்கொழுந்து. மரிக்கொழுந்து வாசனை கனகாவிக்கு ரொம்பவும் பிடிக்கும், அதனாலே தன் பொண்ணுக்கு மரிக்கொழுந்து என்றே பெயர் வைக்கவேண்டும் என்று ஒத்தக்காலில் நின்று அந்தப் பெயரையே வைத்துவிட்டாள்.

மரிக்கொழுந்து பிறந்த சமயத்தில் கனகா அவ்வளவாக மாரியின் தேவைகளை கவனிக்கமுடியவில்லை, ஆனால் மாரியும் நல்ல மாதிரியாக நடந்துகொண்டான். என்னவோ தெரியவில்லை, ஒரு நாள் காத்தால கூட வேலை செய்யும் ஒருத்தியுடன் ஊரைவிட்டே ஓடிவிட்டான். எங்கே இந்த மாரியைக் காணவில்லை என்று கிருஷ்ணவேணியும் எல்லா இடத்திலேயும் தேடினாள். ரெண்டு நாள் கழித்து மாரிக்கு உதவி செய்யும் சேகரைப் பார்த்து அவனைப் பிடித்து எங்கேடா மாரி என்று கேட்டபோது அவன் இடியுடன் ஒரு விஷயத்தைச் சொன்னான். அவன் கூட வேலை செய்யும் மல்லிகா என்ற பொண்ணை கூட்டிக்கொண்டு மெட்ராஸ் ஓடிட்டான் என்று தெரிந்தது.

பிறகு சேகரை இன்னும் கொஞ்சம் அடிச்சபோது அவன் சொன்னான், மல்லிகாவுக்கும் மாரிக்கும் ஒரு வருஷமாவே தொடர்பு இருந்ததாகவும், அது முத்தி, இப்போ ஒடிட்டாங்க என்றும் தெரிந்தது.

இந்த விஷயம் தெரிந்தபோது கனகா, சரி போனது போய்ட்டான், அவளையாவது நல்லா வெச்சுக்கட்டும் என்று சொல்லிவிட்டு தன் பூ விற்கும் வேலையை கவனிக்கத் தொடங்கினாள்.

பூ என்ன விலைம்மா என்ற கேள்வியைக் கேட்டவுடன் சகஜ நிலைக்கு வந்தாள் சரசா.

கேட்டவருக்கு பூ கொடுத்துவிட்டு மரிக்கொழுந்தைப் பார்த்தாள். தளதளவென்று தங்க விக்ரகம் மாதிரி வளர்ந்திருந்தாள் மரிக்கொழுந்து. அவ பூப்பெய்தலிலிருந்து அவளை பூ விக்க வரவிடுவதில்லை கனகா, அவளுக்கு நேர்ந்தது மாதிரி தன் மகளுக்கு ஆயிடக்கூடாது என்பதாலும் இருக்கலாம், அல்லது நல்லா படிக்கிறாளே, படிக்கட்டும் என்று நினைத்து இங்கே அனுப்புவதில்லையோ என்னவோ, இங்கே அவ்வளவாக வருவதில்லை, அதனால் ரொம்ப நாள் கழிச்சு சரளா மரிக்கொழுந்துவைப் பார்த்ததில் இவளுடைய அழகு இப்போதுதான் இவளுக்குத் தெரிந்தது.

ஆனால் அந்த அழகை மறைக்க சரியான ஆடையில்லை என்பதையும் கவனித்தாள் சரசா. மரிக்கொழுந்து போட்டிருந்த ரவிக்கை கொஞ்சம் கிழிந்து அவள் உள்ளழகு கொஞ்சம் வெளியே தெரிந்தது. அதை மறைக்க தாவணியை கொஞ்சம் இழுத்துவிட்டிருந்தாள். ஆனால் தாவணியும் ஒரிரு இடத்தில் கிழிந்திருந்தது தெரிந்தது. படிக்கிற பொண்ணு, பாவம் என்று நினைத்தாள் சரசா.

மரிக்கொழுந்து அங்கே போகிற வருபவர்களைப் பார்த்து பூ வாங்கிக்கோங்க என்று ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் கேட்டபிறகும் ஒரு சிலர் தலையை அந்தப் பக்கம் திருப்பி வைத்துக்கொண்டு போனார்கள், ஒரு சிலர் இவள் பக்கம் திரும்பி, வேண்டாம்மா என்று பதில் சொல்லிவிட்டுப் போனார்கள், ஒரு சிலர் இவள் கேட்டதற்கு மதிப்பு கொடுத்து இவளிடம் பூ வாங்கினார்கள்.

சரசா அனைத்து பூவையும் விற்றுவிட்டாள், மரிக்கொழுந்துவிடமும் இன்னும் ஒரு சில முழம் பூக்களே இருந்தன. அதையும் எப்படியாவது விற்றுவிடவேண்டும் என்று மரிக்கொழுந்து அனைவரையும் கேட்டாள்.

அப்போ, ஒரு மைனர் மாதிரி இருந்தவன் பல்லை இளித்துக்கொண்டே மரிக்கொழுந்துவிடம் வந்தான்.

என்ன பூ நல்லாயிருகியே என்று மரிக்கொழுந்துவைப் பார்த்து நேரடியாகவேச் சொன்னான்.

ஆனால் மரிக்கொழுந்து அவன் பேசியதைச் சட்டைச் செய்யாமல், அண்ணே பூ வாங்கிக்கோங்க அண்ணே, வீட்டில் இருக்கும் அண்ணிக்கு பூ வாங்கிட்டுப் போங்க அண்ணே என்றாள்.

வந்தவன் மரிக்கொழுந்து சொன்ன அண்ணன் என்ற வார்த்தையைச் சட்டை செய்யாமல், இவளைப் பார்த்து பல்லை இளித்துக்கொண்டே, இவள் கையில் வைத்திருந்த பூவைக் காண்பித்து, எனக்கு இந்தப் பூ வேணாம், ஆனா எனக்கு இந்தப் பூ தான் வேணும் என்று சொல்லிக்கொண்டே மரிக்கொழுந்து கையைப் பிடித்தான்.

அதுவரை பூ விக்க வேண்டும் என்று பொறுத்துக்கொண்டிருந்த மரிக்கொழுந்து, அவள் கையை அவனிடமிருந்து இழுத்துவிட்டு பின் தன் கையை ஓங்கி அவன் கன்னத்தில் ஒரு அறைவிட்டுவிட்டு, தன்னிடம் மீதமிருந்த பூவை அவன் முகத்தில் வீசிவிட்டு, நீயெல்லாம் ஒரு ஆம்பளைன்னு நினைச்சுட்டு பொம்பளைக் கையைப் பிடிச்சு இழுக்கிறயே தூ என்று அவன் முகத்தில் காரி துப்பிவிட்டு, கூடையை எடுத்துக்கொண்டு, சரசக்கா வா நாம போகலாம் என்று அங்கிருந்து விருவிருவென்று நடந்தாள்.

வாங்கிய அடியும் முகத்தில் விழுந்த எச்சிலையையும் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே சிலைமாதிரி நின்றுவிட்டான் அந்த மைனர்.

விடுவிடுவென நடந்துபோய்க் கொண்டிருந்த மரிக்கொழுந்துவைப் பின் தொடர்ந்து சரசா பின்னாலே வேகமாக நடந்தாள்.

போட்டிருந்த துணி கிழிந்திருந்தாலும் மரிக்கொழுந்துவின் திடமான மன நிலையை நினைத்து பெருமிதம் அடைந்த சரசா, மரிக்கொழுந்துவின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அவள் பின்னால் சந்தோஷத்துடன் நடந்தாள் சரசா.

சிவா.ஜி
12-03-2010, 08:18 AM
வறுமையிலும், தன் மானம் காத்த மரிக்கொழுந்து....வாசம் வீசுகிறாள்.
சில மணிநேர சம்பவம்தான். அதற்குள் பல கதைகளை சொல்லிவிட்டீர்கள். காதல், கல்யாணம், துரோகம், கஷ்டம், சுயமரியாதை, மானம் என எல்லாம் கலந்து மரிக்கொழுந்து கதம்பமாக மணக்கிறது.

ஒரு நீண்ட தொடருக்குப் பிறகு, சிறிய இடைவேளையாக வந்த உங்கள் கதைக்கு பாராட்டுக்கள் ஆரென்.

Akila.R.D
12-03-2010, 08:25 AM
கனகா(ம்பரத்தைப்) போல் அல்லாமல் மரிக்கொழுந்து மணம் வீசுகிறது..

வாழ்த்துக்கள் ஆரென்..

aren
12-03-2010, 09:39 AM
நன்றி சிவாஜி.

பெரிய தொடர்கதை எழுதினால் யாரும் படிப்பதில்லை, குறைந்தது இதையாவது பார்ப்பார்கள் என்ற நினைப்பில் வந்த கதைதான் இது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
12-03-2010, 09:39 AM
நன்றி அகிலா.

கதை வாசனையுடன் இருந்தாலே, அதுவே எனக்கு சந்தோஷம்.

நன்றி வணக்கம்
ஆரென்

அன்புரசிகன்
12-03-2010, 09:59 AM
நெஞசுறுதியை ஒரேவரியில் அழகாக வடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா..

கலையரசி
12-03-2010, 12:21 PM
பெரிய தொடர் முடித்த கையோடு சிறுகதையும் எழுதி அசத்திவிட்டீர்கள். உங்களது தொடர்கதையைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் முடிக்கவில்லை. முடித்தவுடன் அதற்குப் பின்னூட்டம் எழுதுவேன்.
இனி மரிக்கொழுந்து பற்றி:-
வறுமை இருந்தாலும் நெஞ்சுறுதி இருப்பதால் தான் இப்படிப்பட்ட பெண்கள் தங்கள் மானத்தையும் கற்பையும் காத்துக் கொள்ள முடிகிறது. அருமையான கதை.
பாராட்டுக்கள் ஆரென் அவர்களே!

aren
12-03-2010, 03:07 PM
நெஞசுறுதியை ஒரேவரியில் அழகாக வடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா..

நன்றி அன்புரசிகன்.

கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் எனக்கு சங்தோஷமே.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
12-03-2010, 03:10 PM
பெரிய தொடர் முடித்த கையோடு சிறுகதையும் எழுதி அசத்திவிட்டீர்கள். உங்களது தொடர்கதையைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் முடிக்கவில்லை. முடித்தவுடன் அதற்குப் பின்னூட்டம் எழுதுவேன்.
இனி மரிக்கொழுந்து பற்றி:-
வறுமை இருந்தாலும் நெஞ்சுறுதி இருப்பதால் தான் இப்படிப்பட்ட பெண்கள் தங்கள் மானத்தையும் கற்பையும் காத்துக் கொள்ள முடிகிறது. அருமையான கதை.
பாராட்டுக்கள் ஆரென் அவர்களே!

நன்றி கலையரசி.

தொடர் கதையை மெதுவாகவே படியுங்கள், அவசரம் இல்லை.

வருமைக்கும் மானத்திற்கும் முடிச்சு போடுகிறார்கள், ஆனால் அவை இரண்டும் வெவ்வேரானவை என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

govindh
12-03-2010, 04:45 PM
மரிக்கொழுந்து...கதை கதம்பம்..
நல்ல மணம்...
ஆரேன் அவர்களுக்கு பாராட்டுக்கள் ...

aren
13-03-2010, 05:07 AM
மரிக்கொழுந்து...கதை கதம்பம்..
நல்ல மணம்...
ஆரேன் அவர்களுக்கு பாராட்டுக்கள் ...

நன்றி கோவிந்த்.

கதை உங்களுக்கு நல்ல மணம் வீசியது குறித்து சந்தோஷம்.

நன்றி வணக்கம்
ஆரென்

அக்னி
13-03-2010, 06:48 AM
சட்டையைக் கிழித்துப்போட்டு அலைவது நாகரீகமாம்.
கிழிந்த சட்டையைப் போடுவது வறுமையாம்.

கிழித்துப் போடுபவர்களிடம் பல்லை இளிக்கும் கூட்டம்,
கிழிந்ததைப் போடுபவர்களிடம் உடனேயே கையையல்லவா வைக்கின்றது.
மரிக்கொழுந்து போன்று திருப்பிக் கையைவைக்காவிட்டால், வறுமையைக் காரணம் காட்டியே நாசமாக்கிவிடுவார்கள்.

வறுமை இருந்துவிட்டுப் போகட்டும்.
மூன்று நேர உணவை இருநேரமாக்கிச் சமாளித்துக்கொள்ளலாம்.
கிழிந்த மேலாடையை, இன்னுமொரு கிழிந்த மேலாடையின் கிழியாத பாகத்தாற் போர்த்திக்கொள்ளலாம்.
வறுமையைக் காரணம் சொல்லி, படிப்பைத் தொலைப்பதும் மானத்தை விற்பதும் இயலாமைக்கு நமது சப்பைக்கட்டு.

கதைநாயகி,
இரண்டிலும் மிகுந்த செல்வமுடையவளாய் இருப்பதுபோல,
குடும்ப சூழ்நிலைகளைப் புரிந்து நடப்பதுபோல,
எந்த வேலையானாலும் கூச்சமின்றிச் செய்வதுபோல,
துணிச்சலின் துணை கொண்டு அக்கிரமத்தை எதிர்ப்பதுபோல
வாழ்ந்திட முயலவேனும் வேணும்.

சூழ்நிலை வாழ்நிலையைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கக்கூடாது.
எந்தச் சூழ்நிலையிலுருந்தும், நம் வாழ்நிலையை உயர்த்த நமக்குட் சிறு உந்துசக்தி இருந்தாற் போதும்.

சுருங்கச் சொல்லின்,
நாம் சூழ்நிலையின் சொற்புத்தியாக இருக்கக்கூடாது.
சூழலினைப் பயன்படுத்தும் சுயபுத்தியுடையவராக இருத்தல்வேண்டும்.

மரிக்கொழுந்து வாசம் வீசுது...

ஆரென் அண்ணாவுக்கு எனது பாராட்டு...

ஆரென் அண்ணா...
தொடர்கதைகள் தொடங்கும்போதிருந்து தொடர்ந்து வாசித்து வந்தால்,
அது விடுபட்டுப் போவதில்லை.
ஆர்ம்பத்திலோ, இடையிலோ விட்டுவிட்டோமானால்,
பின்னர் அதற்கென நேரம் ஒதுக்கியே வாசிக்கவேண்டும்.

அதற்காகத் தொடர்கதை எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்.
(உங்கள் தொடரில், என் நிலை இதுதான். வாசிக்கவேண்டும்...)

அமரன்
13-03-2010, 09:02 PM
வறுமையின் நிறம் சிவப்பு..
புரட்சியின் நிறம் சிவப்பு..
அபாயத்தின் நிறம் சிவப்பு..

இதை எல்லாம் தாங்கிய செந்நிறப் பூ மரிக்கொழுந்து.

நான் சந்தித்த வறுமைக் கோட்டுக் கீழே இருக்கும் பலரிடம் தன்மான உணர்வு தீவிரமாக இருப்பது என்றுமே எனக்கு வியப்பைத் தருவது.

அழகான நிகழ்ச்சி.. ஆச்சரியமான நிழல்கள். அசத்திட்டீங்க ஆரெனண்ணா.

aren
14-03-2010, 07:43 AM
நன்றி அக்னி.

நான் எழுதிய கதையை இப்படி புட்டு புட்டு வச்சிட்டீங்களே, இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா என்பதே உங்கள் விமர்சனம் பார்த்தபிறகே தெரிகிறது. உங்கள் விமர்சனம் நான் எழுதிய கதையைவிட அருமையாக உள்ளது.

தொடர்கதை பற்றி, அதை எழுதி முடிக்கவே படாத பாடு பட்டுட்டேன், ஆனால் அதை படித்தவர்கள் வெகு சிலரே. நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
14-03-2010, 07:45 AM
நன்றி அமரன்.

நீங்கள் சொல்வது உண்மைதான் அமரன். பணம் இல்லாதவர்களிடம் தன்னம்பிக்கையும் தன்மான உணர்வும் அதிகமாக இருப்பது நன்றாகவே தெரியும். இருப்பதை இழக்காமல் சாதிக்கவேண்டும் என்ற லட்சியமாகக்கூட இருக்கலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

பா.ராஜேஷ்
14-03-2010, 06:23 PM
துருவ நட்சத்திரத்திற்காக காத்திருக்கையில் மரிக்கொழுந்துவின் வாசம் !!! கதை நன்று ஆரென்

aren
15-03-2010, 03:18 AM
நன்றி ராஜேஷ்.

துருவநட்சத்திரம் மிளிர நேரமாவதால் இடையில் கொஞ்சம் வாசனையைத் தூவிவிட்டேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

கீதம்
15-03-2010, 04:11 AM
மரிக்கொழுந்தின் வாசம் அதனோடு இணைந்திருக்கும் மற்ற மலர்களின் வாசத்தையும் விஞ்சி நிற்கும். இங்கும் அப்படிதான். தங்கள் முந்தைய கதைகளை விஞ்சி நிற்கிறது. பாராட்டுகள் ஆரென் அவர்களே.

aren
15-03-2010, 06:07 AM
நன்றி கீதம்.

இந்தக் கதை நான் எழுதிய மற்ற கதைகளை விட நன்றாக வந்திருக்கிறது என்பது குறித்து சந்தோஷம்.

நன்றி வணக்கம்
ஆரென்

xavier_raja
17-03-2010, 01:29 PM
என்ன கதை சார் இது, ஒரு விதத்தில் அந்த பெண்ணின் மனஉறுதியை காட்டினாலும் அவள் முன்னேரினலா என்று தெரியாமல் கதையை பாதியில் விட்டு விட்டர்கள்.

aren
18-03-2010, 05:38 AM
என்ன கதை சார் இது, ஒரு விதத்தில் அந்த பெண்ணின் மனஉறுதியை காட்டினாலும் அவள் முன்னேரினலா என்று தெரியாமல் கதையை பாதியில் விட்டு விட்டர்கள்.

நன்றி சேவியர் ராஜா அவர்களே.

உங்களுக்கு இந்தக் கதை பிடிக்காமல் போனதற்காக வருந்துகிறேன். அடுத்த முறை இன்னும் சிறப்பாக இருக்கும்படி கதை எழுதுகிறேன்.

சிறுகதை எழுதும்பொழுது ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை மையமாக வைத்தே கதை எழுதப்படுகிறது. அதனாலே நானும் அவளுடைய மன உறுதியை மட்டுமே இங்கே எடுத்துக்கொண்டேன், ஆனால் இதுவே தொடர் கதையாக இருந்திருந்தால் அவள் வாழ்க்கையில் முன்னேறினார்களா, கல்லுரி சென்று படிப்பை முடித்தார்களா என்று விஷயங்களை எழுதியிருக்கமுடியும். சிறுகதை என்பதால் இவற்றையெல்லாம் எழுதவில்லை.

அடுத்த முறை கதை இன்னும் சிறப்பாக இருக்கும்படி எழுதுகிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி. அடுத்த கதையையும் படித்துவிட்டு விமர்சனம் எழுதுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இராஜேஸ்வரன்
09-04-2012, 07:49 AM
கொடுக்கவேண்டிய பூவை வீட்டு வாசலிலேயே வைத்துவிட்டுப் போய்விட்டான்னு நினைக்கிறேன். பூ கட்டாம கிடக்குதே, பூவை கட்டலைன்னா, பூத்திடும், நீ படுத்துக்கோ, நான் இதை கவனிக்கிறேன் என்று சொல்லிவிட்டு நானே உட்கார்ந்து பூவை கட்டினேன் என்றாள் மரிக்கொழுந்து சரசாவிடம்.

மரிக்கொழுந்தை பொறுப்புள்ள பெண்ணாக சித்தரித்திருக்கிறீர்கள். அதே சமயம்


மரிக்கொழுந்து, அவள் கையை அவனிடமிருந்து இழுத்துவிட்டு பின் தன் கையை ஓங்கி அவன் கன்னத்தில் ஒரு அறைவிட்டுவிட்டு, தன்னிடம் மீதமிருந்த பூவை அவன் முகத்தில் வீசிவிட்டு, நீயெல்லாம் ஒரு ஆம்பளைன்னு நினைச்சுட்டு பொம்பளைக் கையைப் பிடிச்சு இழுக்கிறயே தூ என்று அவன் முகத்தில் காரி துப்பிவிட்டு, கூடையை எடுத்துக்கொண்டு, சரசக்கா வா நாம போகலாம் என்று அங்கிருந்து விருவிருவென்று நடந்தாள்.

அவளை சுயமரியாதையுள்ளவளாக காட்டுவதிலும் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.

நல்லதொரு கதை. பாராட்டுக்கள்.