PDA

View Full Version : அதனால் குறையில்லை!



குணமதி
11-03-2010, 03:52 PM
அதனால் குறையில்லை!


வீட்டில் உள்ள பூனைக்கு மூன்று நான்கு வீடுகளோடே இயக்கம் எல்லை கண்டு விடுகிறது.
அவைதாம் அந்தப் பூனையின் உலகு!

எங்கள் வீட்டில் மிச்சம் மீதி என ஏதோ போடுவதை
வந்து வாலைக் குழைத்துக் கொண்டு தின்றுவிட்டுப் போகும் நாயின் ஒட்டம் குரைப்பு உலாவல் எல்லாம்
இந்தப்பக்கம் இரண்டு அந்தப்பக்கம் இரண்டு
மொத்தம் நான்கு தெருக்களே.
அதன் உலகு அந்நான்கு தெருக்களே!

எங்கள் கொல்லையில் காவலுக்கு இருக்கும் அழகையா அறிந்தவை எங்கள் சிற்றூரும் கொல்லைக்காடும் மட்டுமே!
அவர் உலகம் அந்தச் சிற்றூர், கொல்லைக்காடு, மூன்றுகல் தொலைவில் உள்ள மாரியம்மன் கோவிலுடன் முடிந்து விடுகிறது.

என் தாய்க்கு எங்கள் ஊர், அவருடைய பெற்றோர் வாழ்ந்த ஊர்,
சில கோவில்கள் உள்ள ஊர்,
சில சுற்றுலா செல்லும் ஊர்,
சென்னை - இவையே தெரியும்.
இவையே அவர் உலகம்!

என் தந்தை ஒரு குழுமத்தில் பணியாற்றினார்.
தமிழ்நாடு முழுவதும் சுற்றியிருக்கிறார்.
வட மாநிலங்களுக்கும் சென்றிருக்கிறார்.
அவர் இயங்கியிருந்த எல்லை
இந்தாயா முழுவதும் எனலாம்.

நான் படித்து வேலையில் சேரும் முன்
தமிழகத்தில் சில இடங்களையும்
சுற்றுலா சென்றதால்
வட இந்தியாவில் சில இடங்களையும் பார்த்திருக்கிறேன்.
வேலைக்குச் சென்றபின்
அரபு நாடுகள் ஐரோப்பா எனச் சுற்றி வருகிறேன்.

என் வீட்டுப் பூனையும்
எங்கள் தெரு நாயும்
எங்கள் கொல்லை அழகையாவும்
என்தாயும்
என் தந்தையும்
மகிழ்ந் திருந்ததைவிடவும்,
அவர்கள் மனம் பெற்றிருந்த நிறைவை டவும்,
அவர்கள் வாழ்க்கை பயன்பட்ட வகையை விடவும்

என் மகிழ்வும், மன நிறைவும், வாழ்வின் பயனும் மேம்பட்டது என்று என்னால் கூற முடிய வில்லை.

ஒருவர் பார்த்துப் பழகிய எல்லைக் குறைவால் பெருங் குறையேதுமில்லை என்பது உண்மையே!

govindh
11-03-2010, 04:26 PM
ஆம்..உண்மை தான்..
உலகம்..நம் கை அளவுக்கு சுருங்க...சுருங்க..
கலகம் பெருகுகிறது...நிறைய பிரச்சனைகளை
காண நேரிடுகிறது...இதையெல்லாம் அனுபவம் என எடுத்துக் கொள்ளலாம்..!
மகிழ்வு..மனநிறைவு..கேள்விக்குறி..தான்...!

அக்னி
11-03-2010, 05:11 PM
வித்தியாசமான கரு.
ஆனாற் கவிதை அமைப்பிற் கவனம் செலுத்தியிருக்கலாம்...

எனதெல்லை எவ்வளவு பெரியது
என்பதிலும்
எனதெல்லைக்குள் எவ்வளவு தெரியும்
என்பதே முக்கியமானது...

நம் எல்லைகள் பெரிதாகப் பெரிதாக,
நமக்குத் தெரியாதவையும் அதிகரித்துக்கொண்டே...
என்பதுதான் உண்மை.

எல்லைகள் எமக்குப் பெரிதாகியே போகட்டும்.
எமதெல்லைகள் என்பது இல்லாமலே போகட்டும்.

பாரதி
11-03-2010, 07:38 PM
வேறுபட்ட கரு... வேறுபட்ட கோணத்தில் கவிதை.
அவரவர்க்கு எல்லைகள் உண்டு என்பதிலிருந்து
எல்லைகள் எங்கிருந்தாலும் தொல்லைகள் இன்றி இருந்தாலே போதும்.. அல்லவா..?
யாவரும் கேளிர் என்பது உண்மையாகட்டும்.
எல்லைக்கோடுகள் இல்லாமல் போகட்டும்.

பாராட்டுகிறேன் நண்பரே.

அமரன்
11-03-2010, 09:22 PM
எல்லா வகையிலும் மாறுபட்ட கவிதை.

தேவைகளே எல்லைகளை நிர்ணயம் செய்கின்றன.

எடிசனுக்கு மின்சாரம்..

ஆம்ஸ்ரோமுக்கு நிலா..

யாசகன் ஈட்டிய பிடிச்சோறு..

நேரத்துக்குப் பிடித்த பேருந்து..

ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருளை வாங்க
ஒரு சதம் பத்தாத நிலையில் பெற்ற ஒற்றைச் சத நாணயம்..

அவனவனுக்கு அதது சாதனை.. ஆனந்தம்.

இங்கே ஏது எல்லை..

சுருங்கச் சொன்னால்,

எல்லையில்லா வானம் பொய்.

எட்டும்தூர மேகம் மெய்.

பாராட்டு

குணமதி
12-03-2010, 11:25 AM
நன்றி அக்னி அவர்களே.

குணமதி
12-03-2010, 11:26 AM
ஆம்..உண்மை தான்..
உலகம்..நம் கை அளவுக்கு சுருங்க...சுருங்க..
கலகம் பெருகுகிறது...நிறைய பிரச்சனைகளை
காண நேரிடுகிறது...இதையெல்லாம் அனுபவம் என எடுத்துக் கொள்ளலாம்..!
மகிழ்வு..மனநிறைவு..கேள்விக்குறி..தான்...!

கருத்துரைக்கு நன்றி கோவி!

குணமதி
12-03-2010, 11:26 AM
நன்றி பாரதி.

குணமதி
12-03-2010, 11:28 AM
***எல்லையில்லா வானம் பொய்.

எட்டும்தூர மேகம் மெய்.***

அருமை.

நன்றி அமரன்.