PDA

View Full Version : அது அவன் தவறில்லை!

கீதம்
10-03-2010, 04:40 AM
சுந்தரலிங்கத்திற்கு பெரும் மலைப்பாக இருந்தது. இளையவள் கோகிலாவின் திருமணத்துக்கு இன்னும் இருபது நாட்களே இருந்தன. அதற்குள் பணத்தைப் புரட்டிவிட முடியுமா என்ற கேள்வி அவர் மனத்தைப் பிறாண்டிக்கொண்டே இருந்தது.

பத்திரிகை அடிக்கக் கொடுத்தாகிவிட்டது. மாப்பிள்ளை வீட்டில் பெரிதாய் எதுவும் கேட்கவில்லை என்றாலும் பெரியவளுக்குச் செய்ததுபோல் இவளுக்கும் செய்து அனுப்பினால்தானே மரியாதை.

கேட்காத ஆளில்லை! எல்லோரும் கையை விரித்துவிட, என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தார், சுந்தரலிங்கம். தெரிந்த இடத்தில் எல்லாம் பெரியவள் ராதாவின் கல்யாணத்துக்கென்று முன்பே கடன் வாங்கியாகிவிட்டது. கிட்டத்தட்ட எல்லாவற்றையும் அடைத்துவிட்டார் என்றாலும் அதை அடைக்க அவர் பட்ட சிரமத்தை அனைவருமே அறிவர்.

கடைசி முயற்சியாக பாஸ்கரனைப் பார்ப்பதென்று முடிவெடுத்தார். ராதாவின் திருமணத்தின்போது, வீட்டுக்குத் தலைப்பிள்ளை என்ற உரிமையில் அவனிடம் பணம் கேட்கப்போக, ஒரு பைசா தரமுடியாது என்று மறுத்துவிட்டான். இதற்காகவா உன்னை என் வருமானத்துக்கு மேல் செலவு செய்து நீ ஆசைப்பட்டப் படிப்பைப் படிக்கவைத்தேன்? போதாக்குறைக்கு உன் அம்மாவின் நகைகளையும் விற்றேனடா என்று ஆத்திரத்தில் அவர் சொல்லிக்காட்ட, இதற்கென்றே காத்திருந்தவன் போல், சண்டையிட்டுக்கொண்டு இனி உங்கள் ஒட்டும் வேண்டாம்; உறவும் வேண்டாம் என்று தன் மனைவியையும், மூன்று வயது மகனையும் அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் போய்விட்டான்.

மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் கேள்வி. இப்போதும் அவனுடனான பேச்சுவார்த்தை இல்லை என்றபோதும் இத்தனை நாட்களில் கொஞ்சமாவது மனம் மாறியிருப்பான் என்று எதிர்பார்த்தார். அவனும் இப்போது ஒரு பெண்ணுக்குத் தகப்பன் ஆயிற்றே!

கோகிலாவின் திருமண விஷயம் கேள்விப்பட்டு அவரைக் கோயிலில் சந்தித்த மருமகள் சுவேதா, கணவனுக்குத் தெரியாமல் பண உதவி செய்யத் தான் தயாராக இருப்பதாகக் கூறினாள். சுந்தரலிங்கம் திடமாய் மறுத்துவிட்டார்.அவளுக்கிருக்கும் பாசத்தில் துளி கூட எப்படி தன் மகனுக்கு இல்லாமல் போனது என்று நினைத்து வியந்தார். இப்போது காலம் என்னும் சூறாவளிக்காற்று, அவரை மீண்டும் மதியாதார் வாசலுக்கே சுழற்றிக்கொண்டுபோய் விடுகிறது. இற்றுப்போன நம்பிக்கையின் இறுதி இழையைப் பற்றியபடி மகனைக் காணப் புறப்பட்டார்.

கோகிலாவின் திருமணப்பத்திரிகை மாதிரியைக் கையில் எடுத்துக்கொண்டார். இரண்டு பிஸ்கட் பொட்டலங்களையும் வாங்கிக்கொண்டார். அவன் முன்னிருந்து நடத்திவைக்கவேண்டிய அவன் தங்கையின் திருமணத்துக்கு அவனையே பத்திரிகை வைத்து அழைக்கவேண்டிய நிலையிலிருப்பதை எண்ணி நொந்தவராய் அவன் வீட்டுப் படியேறினார்.

“ஏன் வந்தீர்கள்?” என்று முடிச்சிட்டப் புருவங்கள் கேட்க, “வாங்க!” என்று வாய் வரவேற்றது. உள்ளிருந்து ஓடி வந்த சுவேதா, “வாங்க, மாமா! கோகிலா கல்யாணவேலையெல்லாம் எந்த அளவில் இருக்கு?” என்று ஆர்வத்துடன் வினவ,பாஸ்கரனின் நெருப்பு விழிகள் அவளைச் சுட்டெரிக்க, வெப்பம் தாளாமல் முகம் கன்றினாள்.

“கண்ணா! நல்லாயிருக்கியா? தாத்தாவைத் தெரியுதா?”

வீட்டுக்குள் வீடு கட்டிவிளையாடிக் கொண்டிருந்த பேரனிடம் பிஸ்கட் பொட்டலங்களை நீட்ட, அவரை ஏறிட்டும் பாராமல் வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு விளையாட்டைத் தொடர்ந்தான். இதயம் முழுதும் சட்டென்று ஓர் வலி பரவியது.

சுவேதா கொடுத்த காப்பியைப் பருகியபடியே, மெல்ல, கோகிலாவின் திருமணப்பேச்சைத் துவக்க, பாஸ்கரனோ, தனக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லையென்பதைப் போல் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்து, ரசித்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று எதையோ நினைத்துக்கொண்டவன் போல், அவர் பக்கம் பார்த்து, “ ஏம்ப்பா, ராதாவுக்குப் பாத்த மாதிரியே இவளுக்கும் ஒரு பெட்டிக்கடையோ, மளிகைக்கடையோ வச்சிருக்கிறவனைப் பார்க்க வேண்டியதுதானே! இவளுக்கு மட்டும் என்ன, கம்ப்யூட்டர் எஞ்சினியர் வேண்டியிருக்கு?” என்றான்.

சுந்தரலிங்கம் வேதனையில் உழன்றவராய், இப்படியொரு மகனைப் பெற்றோமே என்றெண்ணித் தலை கவிழ்ந்தபடியே,

“நல்ல இடம்! அவர்களே வீடு தேடி வந்து பெண் கேட்டாங்க. எனக்கும் பிடிச்சிருந்தது. உன் தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால் அது உனக்கும் பெருமைதானே?” என்றார்.

“ஆமாம்! ரொம்பப் பெருமைதான். நாளைக்கு எனக்குப் பணமுடை வந்தால் அவள் வீட்டு வாசலில்தான் நிக்கப்போறேன், பாருங்க!”

அவன் பேச்சில் எகத்தாளம் தெறித்தது.

“அப்படியெல்லாம் பேசாதேப்பா! உனக்கு எந்தக் கஷ்டமும் வராது! நீ யாரிடமும் போய் கையேந்தும் நிலை வராது. “

“இப்போ என்கிட்ட இருக்கறதையெல்லாம் எடுத்துத் தாரை வார்த்தால் என் பெண்ணின் கல்யாணத்துக்கு நானும் , இதோ, உங்களை மாதிரி யாரிடமாவது கையேந்திதான் நிக்கவேண்டியிருக்கும்.”

தூளியில் உறங்கும் பேத்தியைப் பார்த்தார்.

‘அம்மா! நீ கொடுத்து வைத்தவள்! உன் தகப்பன் உன் திருமணத்துக்கென்று இப்போதிலிருந்தே பணம் சேமிக்கிறான். நானோ, இருந்தவற்றை எல்லாம் உன் அப்பனைப் படிக்கவைக்கவும், அவனுக்கு வேலைவாங்கிக் கொடுக்கவுமே செலவழித்துவிட்டு இன்று கையாலாகாதவனாக நின்று கொண்டிருக்கிறேன்.’

வேதனையுடன் வெளியேறியவருக்கு, இரண்டு வீடு கடந்ததும்தான் கைப்பையின் நினைவு வந்தது.

“ஏன்டா, மகேஷ், பாப்பாவுக்கும் கொஞ்சம் தாடா! “
சுவேதா, மகனைக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“தரமாட்டேன் , இது எல்லாமே எனக்குதான்!”

“ஏங்க, நீங்களாவது கேளுங்க! ஒரு பிஸ்கட் கூட தரமாட்டேங்கறான்!”

“மகேஷ்! நல்ல பையன் தானே, கொடுப்பா! அப்பா சொன்னா கேட்பதானே?’

இப்போது பாஸ்கரனும் கெஞ்சினான்.

“போங்கப்பா! நான் தரமாட்டேன்!”

“டேய்! பாப்பா அழுவுறா பாரு! உன் தங்கச்சி தானே! ஒண்ணே ஒண்ணு கொடுப்பா!”

“ஆமாம்! தங்கச்சி! இது ஏன் தான் பொறந்துச்சோ, எதை எடுத்தாலும் பாப்பாவுக்குக் குடு, பாப்பாவுக்குக் குடுன்னு எல்லாத்திலயும் பங்கு பிரிக்கிறீங்க! ச்சே! இது வரதுக்கு முன்னாடி நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன்! சனியன்!”

அவன் வாய் மூடிய நொடி சுவேதாவின் கை வலுவாய் இறங்கியது அவன் கன்னத்தில்!

“டேய்! இப்படியெல்லாம் பேச உனக்கு யாருடா சொல்லிக் கொடுத்தது? குழந்தையைப் போய்…..சனியன்…அது…இதுன்னுட்டு…..அவள் உன் கூடப்பிறந்தவள்டா! நீ செய்யாமல் வேற யார் செய்வா அவளுக்கு? இப்பவே இப்படிப் பேசுறியே? நீயெல்லாம் வளர்ந்து….பெரியவனாகி……”

நிலைப்படியருகே நின்றிருந்த சுந்தரலிங்கத்தைப் பார்த்து, தூக்கிவாரிப் போட்டவளாய் பாதியிலேயே நிறுத்தினாள், சுவேதா.

“என்னுடைய கைப்பையை மறந்திட்டேன்ம்மா. அதை எடுக்க வந்தேன் .”

அவள் அமைதியாய்ச் சென்று கைப்பையை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள்.

வாங்கிக் கொண்டவர், அவளிடம், “ குழந்தையை ஒண்ணும் சொல்லாதேம்மா! அது அவன் தவறில்லை. அப்படிப் பேச அவன் மட்டுமே காரணம் இல்லை. முன் ஏர் போனவழி தானே பின் ஏர் போகும். அவனை அடிக்காதேம்மா!”

சொல்லிவிட்டு அவர் விடுவிடுவென்று நடக்க, பாஸ்கரன் சிலையாய் நின்றான்.

சிவா.ஜி
10-03-2010, 05:22 AM
உடன்பிறந்தவளுக்காக துளியும் இரங்காத பாஸ்கரனின் அலட்சியத்துக்கு அடி அவனுடைய மகனாலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. பின் ஏர் மூலம் முன் ஏர் திருந்தினால் நல்லது.

மகளின் திருமணத்துக்காக அலையும் தந்தையின் பரிதாபத்தை எதார்த்தமாய் சொல்லியிருக்கிறீர்கள்.

நல்லக் கருத்தைச் சொல்லும் கதை. வாழ்த்துக்கள் கீதம் அவர்களே.

Akila.R.D
10-03-2010, 05:32 AM
பெற்றவர்களின் உழைப்பில் முன்னேறிவிட்டு பிறகு அவர்களை தூக்கி எறியும் வாரிசுகளுக்கு சரியான அடி இந்த கதை..

வாழ்த்துக்கள் கீதம் அவர்களே

aren
10-03-2010, 05:38 AM
நல்ல அருமையான கதையம்சமுள்ள ஒரு சிறுகதை. நாட்டில் நடப்பதை அப்படியே கதையாக இங்கே கொண்டுவந்துவிட்டீர்கள். ஆனால் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் மருமகள் தங்கமாக இருப்பதுதான். இல்லையென்றால் பழி அனைத்தும் அவள் மேலேதானே விழுந்திருக்கும்.

நல்ல கதை, இன்னும் எழுதுங்கள்.

கலையரசி
10-03-2010, 12:44 PM
ஆலமர விழுதாக இருந்து தாங்க வேண்டிய காலத்தில் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் சுயநலமிக்க மகன். பல வீடுகளில் நடக்கும் கதையை மிகவும் யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் நன்று. பாராட்டு.

Ravee
10-03-2010, 06:09 PM
காலத்துக்கு முன்பே ஏன் வெயில் காய்கிறது என்றால் பாஸ்கர் போன்ற நல்லவர்களால் தான் , நல்ல கதை மனம் திருத்தி விட்டான் என்று காட்டாமல் யதார்த்தமாய் விட்டது பிடித்திருக்கு .

ஜனகன்
10-03-2010, 06:19 PM
பெண்ணை பெற்ற அப்பனின் நிலை இப்படித்தான் என்று சொல்லாமல் சொல்லும் கதை.
சில குடும்பங்களில் ஏற்படும் எதார்த்தமான உண்மை இந்த கதையில் இருக்கின்றது.
இன்னும்பல படைப்புக்கள் வழங்க வாழ்த்துகின்றேன் கீதம்.

அமரன்
10-03-2010, 08:03 PM
உறைக்கும்படியான கதை.

இதை சின்ன வயசிலிருந்து அனுபவித்திருக்கேன் மகேஸாக இருந்து.

எல்லாப் பிள்ளைகளையும் சரிநிகர் சமானமாக பார்க்கவில்லை என்று கோபம் பீறிட்டாலும் தோள் கொடுத்துச் சுமை குறைப்பான் என்ற நம்பிக்கை சிதைந்து சுமை கூடி தளர்ந்தது மனசைப் பிசைந்தது. பிசைந்துகொண்டே உள்ளது.

எப்படிப் பார்த்தாலும் இந்த மாதிரிப் பெற்றவர் செய்தது குற்றமே.. அதுக்குரிய தண்டனையே மன உளைச்சல்.

சுவரில் அடித்த பந்து.. துடுப்பாட்டத்தை நேர்படுத்தி ஓட்டங்களைக் குவிக்கவும் கூடும். தற்பாதுகாப்புத் தடுப்பாட்டத்தை கற்றுக் கொடுக்கவும் கூடும். முன்னது சகலதுக்கும் நல்லது. பின்னது......?

பாராட்டுகள் கீதம்.

பா.ராஜேஷ்
11-03-2010, 08:53 AM
ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. பெரியவரின் படபடப்பு உணர முடிந்தது. பாராட்டுக்கள்

கீதம்
11-03-2010, 10:03 PM
உடன்பிறந்தவளுக்காக துளியும் இரங்காத பாஸ்கரனின் அலட்சியத்துக்கு அடி அவனுடைய மகனாலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. பின் ஏர் மூலம் முன் ஏர் திருந்தினால் நல்லது.

மகளின் திருமணத்துக்காக அலையும் தந்தையின் பரிதாபத்தை எதார்த்தமாய் சொல்லியிருக்கிறீர்கள்.

நல்லக் கருத்தைச் சொல்லும் கதை. வாழ்த்துக்கள் கீதம் அவர்களே.

குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டியவர்கள், பெற்றோர். அவர்களே தவறு செய்யும்போது குழந்தைகளை எப்படிக் கண்டிக்க இயலும்?

பாராட்டுக்கு நன்றி சிவா.ஜி அவர்களே.

கீதம்
11-03-2010, 10:05 PM
பெற்றவர்களின் உழைப்பில் முன்னேறிவிட்டு பிறகு அவர்களை தூக்கி எறியும் வாரிசுகளுக்கு சரியான அடி இந்த கதை..

வாழ்த்துக்கள் கீதம் அவர்களே

இந்தக் கதையைப் படித்து எவரும் திருந்தப்போவதில்லை எனினும் இனிமேல் யாரும் இப்படி உருவாகாமல் இருக்கலாமில்லையா?

மிக்க நன்றி அகிலா.

கீதம்
11-03-2010, 10:08 PM
நல்ல அருமையான கதையம்சமுள்ள ஒரு சிறுகதை. நாட்டில் நடப்பதை அப்படியே கதையாக இங்கே கொண்டுவந்துவிட்டீர்கள். ஆனால் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் மருமகள் தங்கமாக இருப்பதுதான். இல்லையென்றால் பழி அனைத்தும் அவள் மேலேதானே விழுந்திருக்கும்.

நல்ல கதை, இன்னும் எழுதுங்கள்.

ஆம்! இதைப் பல வீடுகளில் கண்டிருக்கிறேன். உடன்பிறந்தவர்களுக்குச் செய்ய மகனோ, மகளோ கணக்குப்பார்க்க, அவர்கள் வீட்டு மருமகளும், மருமகனும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வார்கள்.

பாராட்டுக்கு நன்றி ஆரென் அவர்களே.

கீதம்
11-03-2010, 10:10 PM
ஆலமர விழுதாக இருந்து தாங்க வேண்டிய காலத்தில் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் சுயநலமிக்க மகன். பல வீடுகளில் நடக்கும் கதையை மிகவும் யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் நன்று. பாராட்டு.

சுயநலம் என்று வந்துவிட்டால் பெற்றோராவது, உடன்பிறப்பாவது? எல்லாம் செலவுகளாகத் தான் தோன்றும். நன்றி கலையரசி அவர்களே.

கீதம்
11-03-2010, 10:13 PM
காலத்துக்கு முன்பே ஏன் வெயில் காய்கிறது என்றால் பாஸ்கர் போன்ற நல்லவர்களால் தான் , நல்ல கதை மனம் திருத்தி விட்டான் என்று காட்டாமல் யதார்த்தமாய் விட்டது பிடித்திருக்கு .

பாஸ்கரன் திருந்தவும் கூடும்; திருந்தாமலும் இருக்கக்கூடும்! அது இனிமேல் அவன் மகனின் கையில்தான் உள்ளது.

நன்றி ரவீ அவர்களே.

கீதம்
11-03-2010, 10:20 PM
பெண்ணை பெற்ற அப்பனின் நிலை இப்படித்தான் என்று சொல்லாமல் சொல்லும் கதை.
சில குடும்பங்களில் ஏற்படும் எதார்த்தமான உண்மை இந்த கதையில் இருக்கின்றது.
இன்னும்பல படைப்புக்கள் வழங்க வாழ்த்துகின்றேன் கீதம்.

உங்களைப் போன்றவர்களின் ஊக்கத்தால் மேலும் மேலும் எழுதும் எண்ணம் வலுப்பெறுகிறது. மிக்க நன்றி ஜனகன் அவர்களே.

கீதம்
11-03-2010, 10:24 PM
உறைக்கும்படியான கதை.

இதை சின்ன வயசிலிருந்து அனுபவித்திருக்கேன் மகேஸாக இருந்து.

எல்லாப் பிள்ளைகளையும் சரிநிகர் சமானமாக பார்க்கவில்லை என்று கோபம் பீறிட்டாலும் தோள் கொடுத்துச் சுமை குறைப்பான் என்ற நம்பிக்கை சிதைந்து சுமை கூடி தளர்ந்தது மனசைப் பிசைந்தது. பிசைந்துகொண்டே உள்ளது.

எப்படிப் பார்த்தாலும் இந்த மாதிரிப் பெற்றவர் செய்தது குற்றமே.. அதுக்குரிய தண்டனையே மன உளைச்சல்.

சுவரில் அடித்த பந்து.. துடுப்பாட்டத்தை நேர்படுத்தி ஓட்டங்களைக் குவிக்கவும் கூடும். தற்பாதுகாப்புத் தடுப்பாட்டத்தை கற்றுக் கொடுக்கவும் கூடும். முன்னது சகலதுக்கும் நல்லது. பின்னது......?

பாராட்டுகள் கீதம்.

அதைத்தான் சொன்னேன், முன் ஏர் போனவழியே பின் ஏர் போகுமென்று. முன் ஏரில் சரியான எருதைப் பூட்டாத வரையில் அது பாதை மாறிப்போகும் சாத்தியங்கள்தான் அதிகம்.

பின்னூட்டத்துக்கு நன்றி அமரன் அவர்களே.

கீதம்
11-03-2010, 10:26 PM
ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. பெரியவரின் படபடப்பு உணர முடிந்தது. பாராட்டுக்கள்

பாராட்டுக்கு நன்றி பா.ராஜேஷ் அவர்களே.