PDA

View Full Version : தோற்றதற்காய் பெருமைப்படு, நண்பனே!கீதம்
08-03-2010, 05:00 AM
தோற்றதற்காய் பெருமைப்படு, நண்பனே!
ஏனெனில்,
போட்டியில் பங்கேற்பவனுக்கே
வெற்றியும் தோல்வியும் சாத்தியம்!

வெறும் பார்வையாளனாக நின்று
வேடிக்கைப் பார்ப்பதினும்,
போட்டியிட்டுத் தோற்பது
பன்மடங்கு உயர்வென்று நினை!

ஓட்டப்பந்தயத்தில் கூட,
முதலில் வந்தவனை விட்டு
மூன்றாமிடத்தில் வந்தவனுக்குதான்
முதலில் பரிசு வழங்கப்படுகிறது!

வீழ்வது தோல்வியென்று
யார் சொன்னது தோழா?
வீழ்ந்த நீ எழுந்தோடாவிடில்
அதுவன்றோ பெருந்தோல்வி?

பத்துபேர் பாய்ந்தோடினாலும்
பதக்கம் ஒருவனுக்குதானே என்று
ஒத்துக்கொண்டு ஒன்பது பேர்
ஓடாமலா இருக்கக்கூடும்?

புலியின் பதுங்கல்,
பாய்ச்சலுக்கன்றி, பயத்தினால் அல்ல!
உன் தோல்வியும் கூட
வெற்றிக்கான பாய்ச்சலாகவே இருக்கட்டும்!

வெற்றியைக் கொண்டாடும் வேளையிலும்
உன் தோல்விகளை நினைவில் கொள்!
எதிர்பாராத பொழுதுகளில் அவற்றை
என்றேனும் சந்திக்க நேரிடலாம்!

வெற்றியா? தோல்வியா?
என்பதல்ல வாதம்;
ஆடுகளத்தில் நீ இருக்கிறாயா என்பதை மட்டும்
அடிக்கடி உறுதிபடுத்திக்கொள்!

உயரே தொங்கும் மாங்காய்க்காக
கல்லுயர்த்தும் சிறுவனைக் கவனித்துப்பார்!
கையெறியும் கற்கள்
தோல்வியைத் தழுவுகின்றனவே என்று
கைவிட்டுப் போவதில்லை எந்நாளும்!

கடைசியில் ஒரு காயாவது
அவன் கைகளில் வீழும்;
அதுவரை களைப்படைவதில்லை,
அவன் கரமும் மனமும்!

உன் தோல்விகளையே கற்களாக்கி,
கவனம் சிதறாமல்,
வெற்றிக்கனியைக் குறிபார்த்து எறிய
கற்றுக்கொள் அவனிடம்!

எத்தனை முறை கல்லெறியப்படுகிறது
என்பதல்ல கணக்கு!
கனி கைவசப்படுகிறதா என்பதில்
இருக்கவேண்டும் உன் கவனம்!

வெற்றியைக் கொண்டாட
எவராலும் இயலும்;
தோல்வியை ஏற்றுத் துவளாதிருக்க
ஒரு சிலரால் மட்டுமே முடியும்!

அந்தச் சிலரில் ஒருவனாக நீ இருப்பின்,
வெற்றிக்கோப்பை
விரைவிலேயே உன் கையில் கிட்டும்;
வெற்றிமுழக்கம்
உன் வீட்டுக்கதவைத் தட்டும்!

(பதிவுகளில் வெளிவந்த என் கவிதை)

Akila.R.D
08-03-2010, 05:21 AM
//எத்தனை முறை கல்லெறியப்படுகிறது
என்பதல்ல கணக்கு!
கனி கைவசப்படுகிறதா என்பதில்
இருக்கவேண்டும் உன் கவனம்!//

அருமையான வரிகள்...

வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு தெம்பூட்டும் கவிதை...

வாழ்த்துக்கள் கீதம் அவர்களே..

அக்னி
08-03-2010, 10:10 AM
தோல்வியாற் துவள்பவனே,
நம் ஒவ்வொருவருக்குள்ளும்
தோல்வியை வெற்றிகண்ட
முதலனுபவம் உள்ளதே...

உன் முதலடி நினை.

காத்திருந்து,
புரண்டு,
தவழ்ந்துதானே
முயற்சித்தாய் முதலடிக்கு...

தடுமாறி விழ விழ,
அடிகள் பட்டுப் பட்டுத்தானே
வைத்தாய் முதலடியை...

அறியாத போது உனக்குள்ளிருந்தது
முயற்சி...
இப்போது மட்டும் உனக்குவரலாமோ
அயர்ச்சி...

உன்
இந்த அனுபவமே போதும்,
நீ எப்போதும் வெற்றிக்கனி பறிக்க...

விழ விழ எழு
என்னும் உணர்ச்சியை ஊட்டும் அற்புதமான கவிதை.

கீதம் அவர்களுக்குப் பாராட்டு...

ஒரு புத்துணர்வுப் பாடலை மனம் முணுமுணுக்கின்றது...
‘தோல்வி நிலையென நினைத்தால்...’

சிவா.ஜி
08-03-2010, 10:50 AM
தோற்பதில் துயரமில்லை...வெற்றிக்கு முயற்சித்ததில் பெருமையே....

போட்டியை ஏற்றுக்கொள்ள துணிவு வேண்டும், அந்தப் போட்டியில் தோற்றாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.

முயலாமை என்றுமே வெற்றியைத் தராது....

தன்னம்பிக்கையூட்டும் வரிகள். வாழ்த்துகள் கீதம் அவர்களே.

சிவா.ஜி
08-03-2010, 10:52 AM
அறியாத போது உனக்குள்ளிருந்தது
முயற்சி...
இப்போது மட்டும் உனக்குவரலாமோ
அயர்ச்சி...


மிக அருமையான வரிகள் திறனாய்வுப் புலியாரே.

govindh
08-03-2010, 11:33 AM
ஆடுகளத்தில் நீ இருக்கிறாயா என்பதை மட்டும்
அடிக்கடி உறுதிபடுத்திக்கொள்! ...அருமையான வரிகள்..
கருதிய கருமம் கைகூடும் வரை சலியாது உழைமின்..!
விவேகானந்தரின் வீரக் கருத்துக்களை..நல்கும் உங்கள் வெற்றிக் கவிதை..!
வாழ்த்துக்கள் கீதம் அவர்களே..!

அக்னி
08-03-2010, 12:41 PM
மிக அருமையான வரிகள் திறனாய்வுப் புலியாரே.
மிக்க நன்றி சிவா.ஜி... :)

இன்பக்கவி
08-03-2010, 01:04 PM
நான் கண்டது காண்பது எல்லாமே தோல்விதான்
அதுக்கூட பழகி விட்டது....:):)
அருமையான கவிதை....
நன்றிகள் :icon_b::icon_b::icon_b:

இளசு
08-03-2010, 08:48 PM
ஒன்பதாவது முறை விழுந்தவனிடம்
நிலத்தாய் சொன்னாள்:
எழுந்திரு மகனே....
ஏற்கனவே எட்டுமுறை எழுந்தவனல்லவா நீ!


எங்கோ வாசித்த வரிகள்....


விழுவதில் இல்லை..
எழாததில் இருக்கிறது - தோல்வி..


நம்பிக்கையூற்றான கவிதை வ்ழங்கிய கீதம் அவர்களுக்கும்
மனங்கவர்ப் பின்னூட்டம் அளித்த ( கவிஞர் வாலியின் பாங்கு சில வரிகளில்..)
அக்னிக்கும் பாராட்டுகள்.

கீதம்
09-03-2010, 11:04 PM
//எத்தனை முறை கல்லெறியப்படுகிறது
என்பதல்ல கணக்கு!
கனி கைவசப்படுகிறதா என்பதில்
இருக்கவேண்டும் உன் கவனம்!//

அருமையான வரிகள்...

வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு தெம்பூட்டும் கவிதை...

வாழ்த்துக்கள் கீதம் அவர்களே..

நன்றி அகிலா.

கீதம்
09-03-2010, 11:07 PM
விழ விழ எழு
என்னும் உணர்ச்சியை ஊட்டும் அற்புதமான கவிதை.

கீதம் அவர்களுக்குப் பாராட்டு...

ஒரு புத்துணர்வுப் பாடலை மனம் முணுமுணுக்கின்றது...
‘தோல்வி நிலையென நினைத்தால்...’

வழக்கம் போல் ஒரு உற்சாகப் பின்னூட்டம்! வாழ்த்துக்கும் கவிப்பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அக்னி அவர்களே.

கீதம்
09-03-2010, 11:08 PM
தோற்பதில் துயரமில்லை...வெற்றிக்கு முயற்சித்ததில் பெருமையே....

போட்டியை ஏற்றுக்கொள்ள துணிவு வேண்டும், அந்தப் போட்டியில் தோற்றாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.

முயலாமை என்றுமே வெற்றியைத் தராது....

தன்னம்பிக்கையூட்டும் வரிகள். வாழ்த்துகள் கீதம் அவர்களே.

ஆழ்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி சிவா.ஜி அவர்களே.

கீதம்
09-03-2010, 11:10 PM
ஆடுகளத்தில் நீ இருக்கிறாயா என்பதை மட்டும்
அடிக்கடி உறுதிபடுத்திக்கொள்! ...அருமையான வரிகள்..
கருதிய கருமம் கைகூடும் வரை சலியாது உழைமின்..!
விவேகானந்தரின் வீரக் கருத்துக்களை..நல்கும் உங்கள் வெற்றிக் கவிதை..!
வாழ்த்துக்கள் கீதம் அவர்களே..!

நன்றி கோவிந்த் அவர்களே.

கீதம்
09-03-2010, 11:12 PM
நான் கண்டது காண்பது எல்லாமே தோல்விதான்
அதுக்கூட பழகி விட்டது....:):)
அருமையான கவிதை....
நன்றிகள் :icon_b::icon_b::icon_b:

உங்கள் தோல்விகள் யாவும் வெற்றிகளாய் மாற என் வாழ்த்துகள்.

நன்றி இன்பக்கவி.

கீதம்
09-03-2010, 11:13 PM
நம்பிக்கையூற்றான கவிதை வ்ழங்கிய கீதம் அவர்களுக்கும்
மனங்கவர்ப் பின்னூட்டம் அளித்த ( கவிஞர் வாலியின் பாங்கு சில வரிகளில்..)
அக்னிக்கும் பாராட்டுகள்.

மிக்க நன்றி இளசு அவர்களே.

Ravee
10-03-2010, 12:47 AM
போட்டியில் பின் தங்கினேன்
பரவாயில்லை
துவக்கத்தில் உன் அருகில் நான்
அது ஒன்றே போதும்
அடுத்த போட்டி எப்போது
காத்திருக்கிறேன்
ஜெயிப்பதல்ல வாழ்க்கை
போராட்டமே வாழ்க்கை

குணமதி
10-03-2010, 02:52 AM
***********
ஜெயிப்பதல்ல வாழ்க்கை
போராட்டமே வாழ்க்கை
***************
அருமையான வரிகள்.

நன்றி.

அருள்
10-03-2010, 02:55 AM
"வீழ்வது தோல்வியென்று
யார் சொன்னது தோழா?
வீழ்ந்த நீ எழுந்தோடாவிடில்
அதுவன்றோ பெருந்தோல்வி?"

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் நானும் முயல்கிறேன்... இருந்தாலும் ?

அமரன்
10-03-2010, 05:27 AM
இனி என்னத்தைச் சொல்ல..

வீழ்வது தோலிவியல்ல
வீழ்ந்தும்
எழாதிருப்பதே தோல்வி..

எழுவதுக்கான கவி(கை)தை.

இனிய பாராட்டு கீதம்.

ஓவியன்
10-03-2010, 07:54 AM
நல்ல கவிதை கீதம், மனதாரப் பாராட்டுகிறேன் ஆனால் ஏனோ தெரியலை, கொஞ்சம் வெளியே நின்று தோல்வியால் துவண்டவனை தேற்றுவது இலகுவாக இருப்பது போல, அந்த தோல்வியால் துவண்டவனால் அந்த தேற்றுதலை இலகுவாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

பா.ராஜேஷ்
10-03-2010, 03:29 PM
தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை கீதம் அவர்களே. பாராட்டுக்கள். மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்.

கீதம்
13-03-2010, 08:49 PM
போட்டியில் பின் தங்கினேன்
பரவாயில்லை
துவக்கத்தில் உன் அருகில் நான்
அது ஒன்றே போதும்
அடுத்த போட்டி எப்போது
காத்திருக்கிறேன்
ஜெயிப்பதல்ல வாழ்க்கை
போராட்டமே வாழ்க்கை

நன்றாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி ரவீ அவர்களே.

கீதம்
13-03-2010, 08:51 PM
"வீழ்வது தோல்வியென்று
யார் சொன்னது தோழா?
வீழ்ந்த நீ எழுந்தோடாவிடில்
அதுவன்றோ பெருந்தோல்வி?"

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் நானும் முயல்கிறேன்... இருந்தாலும் ?

முயலுங்கள். ஒருநாள் நிச்சயமாய் வெற்றி காண்பீர்கள். முயற்சி திருவினையாக்கும்.

நன்றி அருள் அவர்களே.

கீதம்
13-03-2010, 08:52 PM
இனி என்னத்தைச் சொல்ல..

வீழ்வது தோலிவியல்ல
வீழ்ந்தும்
எழாதிருப்பதே தோல்வி..

எழுவதுக்கான கவி(கை)தை.

இனிய பாராட்டு கீதம்.

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அமரன் அவர்களே.

கீதம்
13-03-2010, 08:56 PM
நல்ல கவிதை கீதம், மனதாரப் பாராட்டுகிறேன் ஆனால் ஏனோ தெரியலை, கொஞ்சம் வெளியே நின்று தோல்வியால் துவண்டவனை தேற்றுவது இலகுவாக இருப்பது போல, அந்த தோல்வியால் துவண்டவனால் அந்த தேற்றுதலை இலகுவாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

உண்மைதான் ஓவியன் அவர்களே.

ஆனாலும் தோல்வியையே காணாதவர்கள் என்று எவராவது உண்டா? நானும் பலமுறை தோல்வி கண்டவள்தான். இது ஊருக்கு மட்டும் உபதேசமல்ல. எனக்கும்தான்.

பின்னூட்டத்துக்கு நன்றி.

கீதம்
13-03-2010, 08:57 PM
தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை கீதம் அவர்களே. பாராட்டுக்கள். மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்.

மிக்க நன்றி ராஜேஷ் அவர்களே.