PDA

View Full Version : ஒரு நிமிடக்கதை..."முதலாளி"சிவா.ஜி
06-03-2010, 03:04 PM
பாஸ்கரன் வருடத்துக்கொருமுறை விடுமுறையில் வீட்டுக்கு வரும் துபாய்க்காரர். அந்த முறை வீட்டின் சில மின் வேலைகளுக்காக சில இளைஞர்கள் வந்திருந்தார்கள். அதில் இளங்கோ என்ற பையனின் சுறுசுறுப்பையும், வேலையின் தரத்தையும் பார்த்து மிக மகிழ்ந்த பாஸ்கரன் அவனுக்குக் கூடுதலாக, தன்னுடைய பரிசாகப் பணம் தந்தார்.

ஏற்றுக்கொள்ளத் தயங்கியவன்,

"சம்பளத்துக்கு மேல வாங்கறது தப்பு சார். வேண்டாம் சார்"

என்றவனை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.

"பரவாயில்லைப்பா...வெச்சுக்கோ...நான் சந்தோஷமா தர்றதுதானே...உன்னோட வேலை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வாங்கிக்க.."

"இல்ல வேண்டாம் சார். ஆனா எனக்கு ஒரு உதவி செய்வீங்களா..."

தயங்கிக்கொண்டே கேட்டவனைப் புருவம் உயர்த்திப் பார்த்தார்.

"சார் எங்க முதலாளி நல்லவர்தான். ஆனா சம்பளம் 1500 ரூபாதான் கிடைக்குது. அப்பாக்கு முடியாம இருக்குற இந்த நிலைமையில..இந்தப் பணம் பத்த மாட்டேங்குது. உங்களுக்குத் தெரிஞ்ச ஏதாவது துபாய்க் கம்பெனியில எனக்கு ஒரு விசா வாங்கிக் கொடுக்க முடியுமா சார். எங்களுக்கு அரை ஏக்கர் நிலம் இருக்கு, அதை அடமானம் வெச்சு, ஒரு லட்சரூபா குடுக்குறேன்"

என்ன சொல்லப் போகிறாரென்று ஆவலோடு அவர் முகத்தைப் பார்த்தவனை நோக்கி,

"இளங்கோ....உனக்கு விசா வாங்கித் தர்றதைப் பத்தி பிரச்சனை இல்லப்பா. எனக்குப் பணம் கூட வேண்டாம். வெறும் டிக்கெட் காசு மட்டும் செலவு பண்ணா போதும். ஆனா....ஏன் இருக்கிற நிலத்தை அடமானம் வெச்சு, இவ்ளோ பணத்தைக் கட்டி வெளிநாடு போகனுன்னு நினைக்கிற? அங்க நீ எதிர்பாக்குற மாதிரி நிறைய சம்பளம் கிடைக்காது. அதுமட்டுமில்ல...ஏன் எப்பவும் தொழிலாளியாவே இருக்க நினைக்கிறே? நீயும் முதலாளி ஆகலாமே"

"என்ன சார் சொல்றீங்க நான் எப்படி.......?"

"இப்ப உனக்கு முதலாளியா இருக்கிறவர், ஆரம்பத்துல என்னவா இருந்தார்?"

"அவரும் என்னை மாதிரியே இன்னொருத்தர் கிட்ட வேலைதான் செஞ்சிக்கிட்டிருந்தார் சார்."

"அவர் இப்ப முதலாளி ஆகலையா? அதே மாதிரி உன்னாலயும் முடியும். நீ விசாவுக்குத் தர்றதா சொன்ன பணத்தை வெச்சு இதே வேலையை நீ சொந்தமா எடுத்து செய். உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே, உன்னோட கடின உழைப்பும், வேலையில நீ காட்டுற அக்கறையும், வேலையோட தரமும்தான். அதுதான் உன்கிட்ட இருக்கிற பெரிய மூலதனம், இதை முதலாப் போட்டு தைரியமா தனியாத் தொழில் தொடங்கு....அப்புறம் நீயும் ஒரு முதலாளிதான்."

யோசனையோடு பாஸ்கரனைப் பார்த்த இளங்கோ....உள்ளுக்குள் ஒரு உந்துசக்தி கிடைத்ததைப் போல உற்சாகமாய்...

"ரொம்ப நன்றி சார். நான் முயற்சி பண்றேன்"

சொல்லிவிட்டுப் போய்விட்டான். பாஸ்கரனும்...சில நாட்களில் கிளம்பிவிட்டார். அடுத்த முறை ஊருக்கு வந்தவர், போர்வெல்லின் மோட்டார் இயங்கவில்லை என்று மீண்டும் இளங்கோவை அவனுடைய அலைபேசியில் அழைத்தார்.

சற்று நேரத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் ஒரு பையனுடன் வந்தான். தோரணையே மாறி இருந்தது. வந்தவன் நேராக வந்து பாஸ்கரனின் கால்களில் விழுந்தான்.

"அடடா...எந்திரிப்பா. நல்லா இரு...என்னது இது"

"சார் நீங்க சொன்ன மாதிரியே அந்த நிலத்தை வெச்சு தனியா தொழில் தொடங்கினேன். இந்த ஒரு வருஷத்துல மோட்டார் ரீவைன்டிங் கடை ஒண்ணும், எலக்ட்ரிகல் சாமான் விக்குற கடை ஒண்ணும் இப்ப எனக்குச் சொந்தமா இருக்கு. ஏழெட்டுப் பேர் என் கிட்ட வேலை செய்யறாங்க. சம்பளம் வாங்கிக் கிட்டிருந்தவனை...சம்பளம் கொடுக்கிறவனா மாத்தினது நீங்கதான் சார். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க.."

என மீண்டும் காலில் விழுந்தவனைத் தூக்கி நிறுத்தி, பெருமை பொங்க அவனைப் பார்த்துக்கொண்டே..

"நான் வெறும் திரியைத் தூண்டுற வேலையை மட்டும்தான் செஞ்சேன். ஆனா பிரகாசமா எரியக் காரணம் உன்னோட திறமையும், கடின உழைப்பும்தான். நான் என்னதான் லட்ச லட்சமா சம்பாதிச்சாலும்....இன்னும் ஒரு தொழிலாளிதான். ஆனா நீ இப்ப ஒரு முதலாளி. எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு"

எனச் சொல்லிக்கொண்டே அவனைப் பார்த்து சந்தோஷமாய் சல்யூட் அடித்தார்.

மதி
06-03-2010, 04:51 PM
" பாஸ்கரன் வருடத்துக்கொருமுறை விடுமுறையில் வீட்டுக்கு வரும் துபாய்க்காரர்"
நல்ல கதை.. ஆனால் பாஸ்கரன் துபாயில் என்ன பண்றார்னும் சொல்லியிருந்தீங்கன்னா நல்லாயிருக்கும்.. ஏன்னா கதையோட சாராம்சமே அதில் மட்டும் தான் அடங்கியிருக்கு.. ஊருக்கு உபதேசமாய் இருந்திட கூடாதில்ல.. :)

அக்னி
06-03-2010, 05:31 PM
அதத்தானே மதி,
‘நீ இப்போ முதலாளி, நான் இன்னும் தொழிலாளி’
அப்படீன்னு, பாஸ்கரன் கதையின் இறுதியில சொல்லுறாரு...

வெளிநாட்டு மோகம், எத்தனை உழைப்பாளர்களை மழுங்கடித்துக்கொண்டிருக்கின்றது
என்பதற்கு இந்தக் கதையும் ஓர் உதாரணம்.

பாஸ்கரனைத் தூண்ட ஒரு பாஸ்கரன் இல்லாமற் போனதால்,
பாஸ்கரன் இன்னமும் தொழிலாளியாகவே...

ஆனால்,
பணமல்லவா முதலாளி தொழிலாளியின் அந்தஸ்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது...

வெளிநாட்டு மோகத்தை உடைக்கும் அதேவேளை,
அந்த அந்தஸ்தின்(?) போலித்தனத்தையும் கோடி காட்டுகின்றது, கதை...

பாராட்டு...

Ravee
06-03-2010, 05:48 PM
வாய்ப்புக்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய் வார்த்தையை செயலில் காண்பிக்க, வாய்ப்புக்கள் பிறருக்கு தர முடிந்தது . நல்ல கதை சிவா அண்ணா.

அமரன்
06-03-2010, 05:50 PM
முதலாளியோ தொழிலாளியோ செய்யும் தொழிலே தெய்வம் என்று எண்ணும் உழைப்பாளிதான் மகிழ்ச்சியாக உள்ளான். காசு பணம் அவனிடம் கொட்டிக் கிடக்கோ இல்லையோ படுத்ததும் உறங்கும் வரம் அவனுக்குண்டு. இந்தக் கதைமாந்தர்களில் நான் உழைப்பாளியைக் காண்கிறேன்.

அந்த உழைப்பாளியை இனங்கண்ட பாஸ்கரன் (நம்ம சிவாதான்), அவனுக்குத் தீனி போட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், முதலாளி மோகத்தை கூட்டாமல் இருந்திருந்தாரேயானால் கதை இன்னும் ஜொலித்திருக்கும் என்றே தோன்றுகிறது.

இதை ஏன் சொல்றேன்னா, முதாலாளி ஆனதும் ஏழெட்டுப் பேர் என்னிடம் வேலை செய்யுறாங்க என்று சொல்றதுக்கும் ஏழேட்டுப் பேரைச் சேர்த்து வேலை செய்றேன் என்றதுக்கும் எத்தனை வேறுபாடு. அதுதானே உழைப்பாளிக்குக் கொடுக்கும் மரியாதை.

இதை வைச்சுப் பார்க்கும் போது, தாய்மண்ணில் விதை விழட்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் பாஸ்கரனினி துபாய் வேலையை நீங்கள் குறிப்பிடவில்லை எனத் தோன்றுகிறது.

அத்தியாவசியமான கருக்கொண்ட கதை சிவா. ஆணி நுனிபோல் உங்கள் ஒவ்வொரு நிமிடக் கதையும் ஆழமாக இறங்குகிறது.


பாராட்டுகள் சிவா!

ஜனகன்
06-03-2010, 07:46 PM
வெளிநாட்டு மோகத்தில் இருக்கும் இளம் சமுதாயத்துக்கு,நல்ல சிந்தனையுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்திய விதம் அருமை.
ஒரு நிமிட கதை சுப்பர் தொடர்ந்து எழுதுங்கள் சிவா

govindh
06-03-2010, 07:54 PM
நிமிடக் கதை..முதலாளி...
மனதில் நிற்கும்..உந்துசக்தி கதை..
பாராட்டுக்கள்...!

அன்புரசிகன்
07-03-2010, 03:59 AM
இலைமறைகாயாக ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் தொனியில் கதை மிளிர்கிறது. திறமை மட்டுமன்றி தட்டிக்கொடுப்பும் தேவைப்படுகிறது என்று பாஸ்கரன் என்ற ஒரு ஊன்றுகோலை அழகாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா...


ஆனால் பாஸ்கரன் துபாயில் என்ன பண்றார்னும் சொல்லியிருந்தீங்கன்னா நல்லாயிருக்கும்.. ஏன்னா கதையோட சாராம்சமே அதில் மட்டும் தான் அடங்கியிருக்கு.. ஊருக்கு உபதேசமாய் இருந்திட கூடாதில்ல.. :)

அப்படி சொல்லிட முடியாது. சிலவேளை அனுபவங்களும் இன்னொருவனை தட்டிக்கொடுக்க காரணமாக அமைந்துவிடும். அப்படி துபாயில் அவர் ஒரு முதலாளி என்று சொல்லியிருந்தால் கதை சினிமாத்தனமாக அமைந்திருக்கும் என்பது எனது எண்ணம்...

நல்ல விடையங்கள் மாற்றங்கள் யாராலும் உபதேசிக்கப்படலாம். காரணம் பாஸ்கரனின் நீண்டநாள் கனவாக கூட இருக்கலாம். ஆனால் அந்த திறமையை தன்னுள் அவர் கண்டுகொள்ளவில்லை போலும்.


பணமல்லவா முதலாளி தொழிலாளியின் அந்தஸ்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது...

பணத்துடன் முதலாளிக்கனவுகள் பலருக்கு கனவாகவே உள்ளது. பணம் திறமை சேர்ந்த கலவை சிறந்த முதலாளிக்கு வழிவகுக்கும்...

பார்க்கலாம். சிவா அண்ணா என்ன சொல்கிறார் என்று...

கலையரசி
07-03-2010, 04:15 AM
வெளிநாட்டுக்குச் சென்றால் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம் என்ற கனவில், இருக்கும் சொத்துக்களை விற்று வெளிநாட்டிலும் நல்ல வேலை கிடைக்காமல் நடுத்தெருவிற்கு வந்தவர்கள் உண்டு.
உள்நாட்டிலேயே கடுமையாகவும் திறமையாகவும் உழைத்தால் விரைவில் மேன்மைக்கு வர முடியும் என்ற கருத்தைச் சொல்லும் கதை. இளைஞர்களுக்கு நல்ல படிப்பினையையும் கொடுக்கும் கதை.பாராட்டுக்கள்.

சிவா.ஜி
07-03-2010, 04:22 AM
" பாஸ்கரன் வருடத்துக்கொருமுறை விடுமுறையில் வீட்டுக்கு வரும் துபாய்க்காரர்"
நல்ல கதை.. ஆனால் பாஸ்கரன் துபாயில் என்ன பண்றார்னும் சொல்லியிருந்தீங்கன்னா நல்லாயிருக்கும்.. ஏன்னா கதையோட சாராம்சமே அதில் மட்டும் தான் அடங்கியிருக்கு.. ஊருக்கு உபதேசமாய் இருந்திட கூடாதில்ல.. :)

மதி, பாஸ்கரன் கடைசியில சொல்ற அந்த லட்ச லட்சமா சம்பாதிச்சாலும் நான் இன்னும் தொழிலாளிங்கறதுலேயே தெரியுதில்லையா, அவர் முதலாளி இல்லை....என்பது. இத்தனை வருட அனுபவத்தில் அவர் கண்டது, பெரிய தொகை கொடுத்து வளைகுடா நாடுகளுக்கு வரும் சாதாரணத் தொழிலாளிகள் பெரிதாய் ஏதும் சம்பாதிக்க முடிவதில்லை என்பதைத்தான்.

நல்ல உழைப்பும், திறமையும் இருக்கும் இளங்கோவை, அப்படியோர் சாதாரணத் தொழிலாளியாய் இல்லாமல், அவன் விசாவுக்காக செலவு செய்ய இயன்ற அந்த பெரிய தொகையை, தன் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தினால், முதலாளியாகலாம் என்ற எண்ணத்தை அவன் மனதில் ஏற்படுத்துகிறார்.

இதே அறிவுரையை, அவர் வளைகுடா போகும்போது அவருக்கு யாரும் அளிக்கவில்லை. அதுமட்டுமல்ல, அவருக்கும், இனி அந்த வேலையை(லட்சலட்சமாக கிடைக்கும் பெரிய வேலை) விட்டுவிட்டு, முதலாளியாகும் விருப்பமுமில்லை. பெரும்பான்மையான வளைகுடா பணியாளர்கள் இருப்பதை விட்டுவிட அப்போதைக்கு நினைப்பதில்லை. ஆனால் மனதுக்குள் அந்தத் திட்டம் எப்போதும் இருக்கும். ஊரில் வந்து செட்டில் ஆகும்போது அதை செயல்படுத்துவார்கள்(எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது)

நீங்க சொன்ன மாதிரி கதையோட சாராம்சம் அதில் இல்லை. அதேப்போல அவர் ஊருக்கு உபதேசம் செய்யும் ஆளுமல்ல. பணமே வாங்காமல் விசா எடுத்துத் தர அவரால் முடியுமென்று சொன்னதிலிருந்தே தெரிகிறது, அவர் தட்டிக் கழிப்பதற்காக அதை சொல்லவில்லை என்பது.

நன்றி மதி.

சிவா.ஜி
07-03-2010, 04:32 AM
சரியாகச் சொன்னீர்கள் அக்னி. பணம் தேவைதான். ஆனால் பணத்தோடு, திறமையும், உழைப்பும் சேர்ந்தால் முதலாளியாவது மட்டுமல்ல....தொடர்ந்து அந்த நிலையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

எனக்குத் தெரிந்த சில நண்பர்கள், வளைகுடா வேலையை விட்டுவிட்டு, முதலாளியாகும் எண்ணத்தில் தொழில் தொடங்கி, திறமையும், சரியான உழைப்புமில்லாமல், மீண்டும் பெட்டியைத் தூக்கியிருக்கிறார்கள். அந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம், இது போனாலும், அது இருக்கிறது எனற எண்ணம்தான்.

அதனால்தான் ஆரம்பத்திலேயே, வளைகுடாப் பணத்தின் சுவையை இளங்கோ அறிந்துவிடாமல், அவனுடைய உழைப்பால் உயர்வதை ஊக்கப்படுத்துகிறார்.

அவனால், ஒரு லட்சம் செலவு செய்ய முடியும் எனச் சொன்னதும் ஒரு காரணம், அவர் அந்த யோசனையை சொல்வதற்கு.

நன்றி அக்னி.

சிவா.ஜி
07-03-2010, 04:40 AM
ஆமாம் ரவி. வாய்ப்புகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதே சமயம், வாய்க்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

நன்றி ரவி.

சிவா.ஜி
07-03-2010, 04:47 AM
பாஸ், அவனுக்கு முதலாளி மோகத்தை ஊட்டியது, வளைகுடா மோகத்தை விட்டுவிட்டு, தன்னிடமுள்ளத் திறமையையும், உழைப்பையும் உள்நாட்டிலேயே உபயோகித்து முன்னேற வேண்டுமென்ற எண்ணத்தில்தான்.

கடைசியில் இன்னும் கொஞ்சம் சேர்க்க வேண்டுமென்று நினைத்து, நிமிடக் கதை என்பதால் நீளத்தைச் சுருக்க எண்ணி விட்டுவிட்டேன். அதாவது, மோட்டார் பழுதை அந்த இளங்கோவே சரி செய்து, தான் முதலாளியாக இருந்தாலும், இன்னும் தொழிலாளிதான் என்பதைக் காட்ட நினைத்திருந்தேன்.

இப்போதும் பல*ரை நான் பார்த்திருக்கிறேன்.....ஏழெட்டு பேர் அவர்களிடம் பணிபுரிந்தாலும், அவர்களும் ஒரு தொழிலாளியாய்க் களத்தில் இறங்கி வேலை செய்வதை.

முதலாளியாவதென்பது என்னைப் பொருத்தவரை மோகமில்லை பாஸ்....முன்னேற்றம். அவனுக்குள் இருக்கும் தொழிலாளி அவனுடன் இருக்கும்வரை அவன் நல்ல முதலாளி. இப்படித்தான் நான் நினைக்கிறேன்.

நன்றி அமரன்.

சிவா.ஜி
07-03-2010, 05:30 AM
நான் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போவதை குறை சொல்லவில்லை ஜனகன். ஆனால், பெரும் பணத்தைக் கொடுத்து ஏமாந்து போகாமல், அதே பணத்தை வைத்து அவர்களின் நாட்டிலேயே முன்னேற வாய்ப்பிருக்கிறது என்பதைத்தான் சொல்கிறேன்.

மிக்க நன்றி ஜனகன்.

சிவா.ஜி
07-03-2010, 05:42 AM
மிக மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் அன்பு. நான் சொல்ல நினைத்ததை அப்படியே வரிக்கு வரி சொல்லியிருக்கிறீர்கள்.

ரொம்ப ரொம்ப நன்றி அன்பு.

சிவா.ஜி
07-03-2010, 05:44 AM
மிக்க நன்றி கோவிந்த்.

சிவா.ஜி
07-03-2010, 05:47 AM
நல்ல கருத்துக்கள் கலையரசி அவர்களே.

மிக்க நன்றி.

கீதம்
07-03-2010, 10:22 AM
நல்ல கருத்துச் சொல்லும் கதை. வெளிநாட்டு மோகம் கொண்ட திறமையான இளைஞர்கள் பலர் சரியான வழியில் அல்லாமல் குறுக்கு வழியில் அழைத்துச் செல்லப்பட்டு சாதாரண வேலைகளில் அமர்த்தப்பட்டு தொடரவும் இயலாமல் திரும்பி வரவும் வழியில்லாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவிப்பதை நான் பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன். வெளிநாடு செல்லச் செலவழிக்கும் பணத்தில் சிறுதொகையைக் கொண்டும் தாய்நாட்டிலேயே தொழில் செய்து முன்னேறலாம். குறைந்தபட்சம் குடும்பத்தினரின் அருகாமையை இழக்காமலாவது இருக்கமுடியும்.

அருங்கருத்தைத் தாங்கிவந்த கதைக்கு பாராட்டுகள் சிவா.ஜி அவர்களே.

சிவா.ஜி
07-03-2010, 10:49 AM
அதேதான் கீதம் அவர்களே. அப்படி அல்லல் படும் பலரை நான் பார்த்திருக்கிறேன், அவர்களின் சோகக்கதைகளைக் கேட்டிருக்கிறேன்.

நீங்கள் சொன்னதைப் போல, குறுக்கு வழியில் விசா வாங்க செலவழிக்கும் அந்தப் பணத்தை, உள்நாட்டிலேயே ஒரு தொழில் தொடங்க உபயோகப்படுத்தினால்....நிச்சயம் முன்னேறலாம்.

தங்கள் பின்னூட்டக் கருத்துக்கு மிக்க நன்றி கீதம் அவர்களே.

aren
07-03-2010, 10:59 AM
கதை நன்றாக இருக்கு. வளைகுடா நாட்டில் வந்தால் மக்கள் சம்பாதித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் படல் அல்லல்கள் எழுத்தில் சொல்லமுடியாது. அதுக்கு நம்ம ஊரிலே இருப்பதே மேல், இங்கேயே அதைவிட அதிகமாக சம்பாதிக்கலாம்.

நமக்குத் தெரிந்த வேலையை, நமக்குப் பிடித்த வேலையை நாம் செய்வதில் இருக்கும் திருப்தியே அலாதிதான்.

இன்னும் எழுதுங்கள்.

சிவா.ஜி
07-03-2010, 11:30 AM
உங்கள் அனுபவத்தில் நிறைய பார்த்திருப்பீர்கள் ஆரென். நல்ல நிறுவனத்தில், உயர்ந்த பதவிக்குப் போகிறதென்றால் பரவாயில்லை. ஆனால் குறைந்த சம்பளத்துக்குப் போகிறவர்கள் உண்மையிலேயே மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

நன்றி ஆரென்.

(ஆனா இந்தக் கதை எழுதும்போது உங்கக்கிட்ட பேசிக்கிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. பேசாம சாலரீடாவே இருந்திருக்கலாம், தொழில் தொடங்கி...எப்பவும் டென்ஷன்லயே இருக்க வேண்டியதா இருக்குன்னு நீங்களும், உங்க நண்பரும் சொன்னது நினைவுக்கு வந்தது.)

இன்பக்கவி
07-03-2010, 11:33 AM
நல்ல கதை சிவா அவர்களே
ஒரு நிமிடத்தில் அழகாய் ஒரு நச்:icon_b: கதை

பா.ராஜேஷ்
07-03-2010, 11:47 AM
எத்தனை பேர் இன்னும் இவ்வாறு ஏமாந்து கொண்டிருகிறார்கள். அவர்களுக்கு தேவையான கதைதான் அண்ணா.

சிவா.ஜி
07-03-2010, 11:58 AM
ரொம்ப நன்றி இன்பக்கவி.

ரொம்ப நன்றி ராஜேஷ்.

Akila.R.D
08-03-2010, 03:50 AM
உங்கள் கதையை படித்ததும் எங்கேயோ படித்த வரிகள் நினைவுக்கு வருகிறது...

"கை நீட்டி சம்பளம் வாங்குகிறவன் முன்னுக்கு வர மாட்டன்"...

நல்ல கருத்தை கூறியுள்ளீர்கள்...
வாழ்த்துக்கள்..

சிவா.ஜி
08-03-2010, 07:42 AM
நல்ல வரிகள். வாழக்கையை ஓட்டிக்கொண்டுப் போகத்தான் முடியுமேத் தவிர...மேன்மையான நிலைக்கு வருவது சிரமம்தான்.

நன்றி அகிலா.

xavier_raja
17-03-2010, 01:33 PM
நல்ல தன்னம்பிக்கை ஊட்ட கூடிய கதை. இது போன்ற கதைகளால்தான் மனிதனின் self confidence உயரும்.

சிவா.ஜி
17-03-2010, 03:02 PM
ஒவ்வொரு வெற்றியாளருக்கும் தேவையானது தன்னம்பிக்கை.

பின்னூட்டக்கருத்துக்கு மிக்க நன்றி சேவியர் ராஜா.