PDA

View Full Version : ஒரு தாய்ப்பறவையின் ஊமைக் கதறல்



கீதம்
05-03-2010, 06:17 AM
குழந்தைகளுக்குள் சண்டை என்பது சாதாரண விஷயம். அதைச் சில சமயங்களில் பெற்றோர் கண்டுகொள்வதும் கிடையாது. ஆனால் க்ரேட் ஈக்ரெட் (Great Egret) என்னும் பறவையோ ஒருபடி மேலே போய் குழந்தைகள் சண்டை கொலையில் முடிவதைக் கூட கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது. சொல்லப்போனால் எவனொருவன் மிஞ்சுகிறானோ அவனை வளர்ப்பதே தன் வாழ்வியல் கடமை என்பது போல் காத்திருக்கிறது. காரணம் உணவுப்பற்றாக்குறை! பஞ்ச காலத்தில் கிடைக்கும் துளி உணவை, பிள்ளைகள் அனைத்திற்கும் பங்கீடு செய்து, அத்தனையையும் நோஞ்சான்களாக வளர்க்க விரும்பாத அத்தாய்ப்பறவை, மற்ற உடன்பிறப்புகளைக் கொன்று வெற்றி வாகை சூடிய குஞ்சுக்கு, இருக்கும் உணவை முழுமையாய்த் தந்து வல்லாளனாக வாழ்விக்க முனைகிறது. (ஆதாரம்: Exploring The Secrets Of Nature - Reader's Digest)

என்னதான் மரபணுவில் ஊறிய குணமாக இருந்தாலும் அத்தாயின் இதயம், கண்முன் துடிதுடித்துச் சாகும் குழந்தைக்காக இம்மியளவும் இரங்காமலா இருக்கக் கூடும்?
அந்த எண்ணத்தில் எழுந்த கவிதை இது!

http://1.bp.blogspot.com/_52BUgI4sZe8/SgnKWq4fzGI/AAAAAAAABYU/DPDmqP3c60E/s320/more+baby+great+herons_0156.jpg

என்னை மன்னிப்பாயா, என் கண்ணே?
ஏதும் செய்ய இயலாதவளாயிருக்கும்
என் நிலை அறிவாயா மகனே?

எளியோரை வலியோர் ஏறி மிதிப்பரென்று
என்றைக்கோ எழுதப்பட்டுவிட்டது
நம் இரத்தத்தில்!

அதனை நிரூபிக்கும் முயற்சிகள்
காலங்காலமாய்த் தொடர்ந்திருக்க,
இதோ, கண்முன்னே காட்சியளிக்கிறாய்
அதன் சான்றாய்!

முழு வளர்ச்சியற்ற, முடமான
உடன்பிறப்பையே
முழுதாய் வெல்ல இயலாத உன்னால்
எங்ஙனம் எதிர்கொள்ள இயலும்,
எதிரிகளைப் பின்னால்?

வாழ்க்கைப் போராட்டத்தில்
வெல்வதற்கான வாய்ப்பைத்
தவறவிட்டாய் கண்மணி!

வாழ்நாள் யாவும்
வஞ்சகரிடம் அடிபட்டு, மிதிபட்டு
பயந்து பயந்து வாழ்ந்து,
வாழ்வைத் தொலைப்பதினும்
இயன்றவரைப் போராடித்
தோற்றது மேலென்று நினை!

இந்த எண்ணத்தைத் தாங்கி
அமைதியாய் இறந்துவிடு!

உன்னைப் புறந்தள்ளியதால்
உன் அண்னன் செய்தது
சரியல்லவென்று
சாபமிடமாட்டேன் அவனை!

ஒருவேளை,
இப்படிப் போராடி வென்றவள்தானோ,
நானும்?

என் வருத்தமெல்லாம்
இப்படியான உன் முடிவை
அணுவணுவாய்த் துடிப்பதை,
நான் அருகிருந்து காணநேரிட்ட
அவலத்தை எண்ணியே!

எனக்கென்று, இவ்வினத்துக்கென்று
வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
என்னைக் கட்டிவிட்டன கண்ணே!

உன் முடிவு இப்படியன்றி
வேறெப்படியேனும் இருந்திருக்கக்கூடாதா?
நானொரு மலட்டுப்பறவையாய்
இருந்திருக்கலாம்;
அல்லது இட்ட முட்டைகளுள் ஒன்று
கூழ்முட்டையாய்ப் போயிருக்கலாம்;
அன்றி வேறோர் வான்பறவை வந்து
வட்டமிட்டு உன்னை
வாயினாற்கவ்விச் சென்றிருக்கலாம்!

இப்படி எதுவும் நிகழாமல்
இன்னமும் நீ உறங்காமல்
என் கண் முன்னே நீயும்
கதறிக்கொண்டிருக்க,
கையாலாகாதத் தாயாய் நானும்
கண்ணீரோடு காத்திருக்கிறேன்,
காலதேவன் சடுதியில் வந்து
கையோடு உன்னைக்
கொண்டுபோகமாட்டானாவென்று!

மறுபிறவியென்று ஒன்று உண்டெனில்
மகனே, நீ
குயிற்குஞ்சுகளுக்கும் சோறூட்டும்
காகத்தின் மகவாய்ப் பிறந்து,
கருணை கொண்ட தாயின் சுகமுணர் என்றே
வாழ்த்தி உன்னை
வழியனுப்புகிறேன், கண்ணே!

அக்னி
05-03-2010, 07:28 AM
இந்தச் செய்தி எனக்குப் புதியது.
அதைத் தாங்கிய கவிதையோ மிக மிக உயர்ந்தது...
பாராட்டி நிற்கின்றேன்...

அந்தக் குஞ்சின் இறுதிநேர மனவோட்டம் இப்படி இருந்திருக்குமோ...

அருகதையில்லாத அம்மா..!

பெற்றடுத்ததால் மட்டுமே
நீ எனக்குத் தாயாகினாய்...

பிள்ளைகளே
தமக்குள் அடிபட்டுச் சாக,
ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கும்
உனக்கு,
ஓர் முட்டை மட்டும் பெற்றெடுக்கும்
சாபம்
ஏன் கிடைக்காமற் போனது...

எங்கே கற்றாய் இந்த வைராக்கியத்தை...
மனிதரிடமா...
ஆமாம்... அவர்களிடம்தானே
கருக்கலைப்பும் சிசுக்கொலையும்
சாதாரண நிகழ்வுகள்...

அவர்களுக்கும் உனக்கும் சாதாரணம்...
எனக்கும் அந்தச்சிசுக்களுக்கும் ரணச் சா...

அடுத்தபிறவியிலும்
இதே இனத்திலேயே வலிமையாய்ப் பிறந்து,
இந்தச் சாப வழியை மாற்றுவேன்...
தாய்மையை உணர்த்துவேன்...

போய்வருகின்றேன்...

சிவா.ஜி
05-03-2010, 08:57 AM
மிக வித்தியாசமான தகவலுக்கு....மிக அற்புதமானக் கவிதை. தன் குஞ்சு தன் முன்பே சாவதை வேடிக்கப் பார்ப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இய்லாத தாய்மையின் உள்ளத்து ஓலங்களை....வரிகளாய்த் தீட்டியிருக்கிறீர்கள்.

அடுத்த பிறவியிலும், தாய்ப்பறவை மாறாது, அதனால்...என்னைப்போன்ற ஒரு இயலாதத் தாய்க்குப் பிள்ளையாய் பிறப்பதைவிட காகத்துக்குக் குஞ்சாய் பிற....எனச் சொல்லும் கடைசி வரிகள், கவிதையின் சிறப்பான வரிகள்.

மனம் நிறைந்தப் பாராட்டுக்கள் கீதம் அவர்களே.

அக்னி
05-03-2010, 09:07 AM
அடுத்த பிறவியிலும், தாய்ப்பறவை மாறாது, அதனால்...என்னைப்போன்ற ஒரு இயலாதத் தாய்க்குப் பிள்ளையாய் பிறப்பதைவிட காகத்துக்குக் குஞ்சாய் பிற....எனச் சொல்லும் கடைசி வரிகள், கவிதையின் சிறப்பான வரிகள்.

நான் மேற்கோளிட நினைத்து விடுபட்டதை நீங்கள் சுட்டிவிட்டீர்கள் சிவா.ஜி...

மிகச்சிறப்பு, அந்த இடத்தில் காகத்தைப் பொதிந்தமையே...

சிவா.ஜி
05-03-2010, 09:16 AM
மிகச் சிறப்பாய் எழுதியிருக்கிறார் அக்னி. ஒரு தகவலைப் படித்து, அதனுள்ளிருந்து கிடைத்தக் கருவை சிறப்பான கவிதையாக்கிய திறனை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

தாயின் கோணத்தில் கீதம் அவர்கள் எழுதியதற்கு, அந்த பிள்ளையின் கோணத்தில் நீங்கள் எழுதிய வரிகள் பிரமாதம். அதுவும் ஒரேயொரு முட்டையிடும் சாபத்தை ஏன் பெறாமல் போனாய் என்ற வரிகள் மிக அருமை.

கீதம்
05-03-2010, 09:30 AM
மேற்கண்ட பறவைச் செய்தியைப் படித்து மனம் மிகவும் வேதனையுற்றது. இப்படியும் ஒரு தாயா என்று அதிர்ந்தேன். ஆனால் இதனிலும் விநோதமான தாய்மை, இயற்கையில் பல உயிரினங்களிலும் இருப்பதை அறியமுடிந்தது. எனினும் மனம் பாதித்ததால் கவிதைக்கு ஒரு கரு கிடைத்தது. அப்பறவைக் குஞ்சின் நிலையிலிருந்து என்னால் யோசிக்க இயலவில்லை. அக்னி அவர்களின் கவிதைப் பின்னூட்டம் கண்டு சிலிர்த்துப் போனேன்.

மிக்க நன்றி அக்னி அவர்களே.

கீதம்
05-03-2010, 09:36 AM
மிக வித்தியாசமான தகவலுக்கு....மிக அற்புதமானக் கவிதை. தன் குஞ்சு தன் முன்பே சாவதை வேடிக்கப் பார்ப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இய்லாத தாய்மையின் உள்ளத்து ஓலங்களை....வரிகளாய்த் தீட்டியிருக்கிறீர்கள்.

அடுத்த பிறவியிலும், தாய்ப்பறவை மாறாது, அதனால்...என்னைப்போன்ற ஒரு இயலாதத் தாய்க்குப் பிள்ளையாய் பிறப்பதைவிட காகத்துக்குக் குஞ்சாய் பிற....எனச் சொல்லும் கடைசி வரிகள், கவிதையின் சிறப்பான வரிகள்.

மனம் நிறைந்தப் பாராட்டுக்கள் கீதம் அவர்களே.

ஆம், அப்பறவை தன் நிலையிலிருந்து மாறாது என்று உணர்ந்துதான் காக்கைக் குஞ்சாய்ப் பிறக்குமாறு ஆசி வழங்குவதாக எழுதினேன்.

பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சிவா.ஜி அவர்களே.

govindh
07-03-2010, 07:11 PM
ஊமைக் கதறல் ...கேட்டு...உள்ளம் துடித்தது..!

கீதம்
08-03-2010, 02:37 AM
ஊமைக் கதறல் ...கேட்டு...உள்ளம் துடித்தது..!

நன்றி கோவிந்த் அவர்களே.

இன்பக்கவி
08-03-2010, 01:15 PM
மறுபிறவியென்று ஒன்று உண்டெனில்
மகனே, நீ
குயிற்குஞ்சுகளுக்கும் சோறூட்டும்
காகத்தின் மகவாய்ப் பிறந்து,
கருணை கொண்ட தாயின் சுகமுணர் என்றே
வாழ்த்தி உன்னை
வழியனுப்புகிறேன், கண்ணே! :traurig001::traurig001:

என்ன தான் செய்யமுடியும்...??
வலிக்கிறது வரிகள்....

இன்பக்கவி
08-03-2010, 01:16 PM
பிள்ளைகளே
தமக்குள் அடிபட்டுச் சாக,
ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கும்
உனக்கு,
ஓர் முட்டை மட்டும் பெற்றெடுக்கும்
சாபம்
ஏன் கிடைக்காமற் போனது...:icon_b::icon_b::icon_b:

கலையரசி
08-03-2010, 01:53 PM
இப்படியும் ஒரு தாய்ப் பறவையா? இயற்கை தான் எவ்வளவு விநோதம்!
ஊமைக் கதறல் மனதை நெகிழச் செய்துவிட்டது.

இளசு
08-03-2010, 06:01 PM
Empathy
பரகாயப் பிரவேசம்
கூடுவிட்டு கூடு பாய்தல்
உய்த்துணர்தல்..


தாய்ப்பறவையாய் கீதமும்
சேய்பிறையாய் அக்னியும்
ஓர் உணர்வு யாகம் மூட்டினீர்கள்..

இருவரையும் வாழ்த்துகிறேன்!


சிவா சொன்ன அதே வரியில்
என் மனம் மளுக்கென்றது..


--------------------------------


இயற்கையில் வாரிசு காக்கவென பொதிந்த பண்புகள் ஏராளம்.

ஒரு லட்சம் உறவினர்கள் கூடியிருக்கும் எரிமலை விளிம்புக்கு
பலமுறை சறுக்கி சறுக்கி ஏறி,
ஆழ்கடலில் ஐம்பது மைல் சென்று பிடித்த மீனை வாய்க்குள் நைத்து
குரல் வழி தன் குஞ்சுகளை அத்தனைக் கூட்டத்திலும் இனங்கண்டு
வாயோடு வாய் வைத்து வாரிசுகளுக்கு முதலில் ஊட்டி
இணைக்கு மிச்சம் (இருந்தால்) இறுதியில் ஈயும்
ஆர்க்டிக் பெங்குயின் தாய் -
தாய்மைக் கடலின் ஒரு துளி..



சில விலக்குகள் -

பாம்புகளில் கர்ப்பிணி உண்டு... பெறுபவள் உண்டு..
ஆனால் '' தாய்'' இல்லை.

கீதம்
09-03-2010, 10:26 PM
மறுபிறவியென்று ஒன்று உண்டெனில்
மகனே, நீ
குயிற்குஞ்சுகளுக்கும் சோறூட்டும்
காகத்தின் மகவாய்ப் பிறந்து,
கருணை கொண்ட தாயின் சுகமுணர் என்றே
வாழ்த்தி உன்னை
வழியனுப்புகிறேன், கண்ணே! :traurig001::traurig001:

என்ன தான் செய்யமுடியும்...??
வலிக்கிறது வரிகள்....

எனக்கு ஏற்பட்ட வலியைதான் உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். பின்னூட்டத்திற்கு நன்றி இன்பக்கவி.

கீதம்
09-03-2010, 10:29 PM
பிள்ளைகளே
தமக்குள் அடிபட்டுச் சாக,
ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கும்
உனக்கு,
ஓர் முட்டை மட்டும் பெற்றெடுக்கும்
சாபம்
ஏன் கிடைக்காமற் போனது...:icon_b::icon_b::icon_b:

ஆம். அக்னி அவர்களின் அபார வரிகள். அழகிய பின்னூட்டத்தால் என் கவிதைக்குப் பெருமை சேர்த்த அவருக்கு மற்றுமொரு மனங்கனிந்த நன்றி.

கீதம்
09-03-2010, 10:42 PM
இப்படியும் ஒரு தாய்ப் பறவையா? இயற்கை தான் எவ்வளவு விநோதம்!
ஊமைக் கதறல் மனதை நெகிழச் செய்துவிட்டது.

குயில்களைப் பற்றி நான் அறிந்த ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்.

நம் நாட்டுக் குயில்கள் வெறுமனே தன் முட்டைகளை கள்ளத்தனமாய் காக்கைக் கூட்டில் இட்டுச் செல்ல, பிற நாட்டுக் குயில்களோ, இன்னும் ஒருபடி மேலே சென்று, எந்தப்பறவையின் கூட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறதோ, அந்தப்பறவையின் முட்டையைக் கீழே தள்ளிவிட்டு தன் முட்டையை இட்டுச் செல்கின்றன. அது மட்டுமின்றி அதன் குஞ்சும் முதலில் பொரிந்து வெளிவந்து, கண் திறக்குமுன்னரே, இறக்கை முளைக்குமுன்னரே மீதமுள்ள முட்டைகளை கூட்டிலிருந்து கீழே தள்ளிக் கொல்கிறது. இந்தத் தாயையும் சேயையும் என்னவென்பது? இயற்கையின் விநோதம் என்றுதான் சொல்லவேண்டும். பின்னூட்டத்திற்கு நன்றி கலையரசி அவர்களே.

கீதம்
09-03-2010, 10:53 PM
Empathy
பரகாயப் பிரவேசம்
கூடுவிட்டு கூடு பாய்தல்
உய்த்துணர்தல்..


தாய்ப்பறவையாய் கீதமும்
சேய்பிறையாய் அக்னியும்
ஓர் உணர்வு யாகம் மூட்டினீர்கள்..

இருவரையும் வாழ்த்துகிறேன்!


சிவா சொன்ன அதே வரியில்
என் மனம் மளுக்கென்றது..


--------------------------------


இயற்கையில் வாரிசு காக்கவென பொதிந்த பண்புகள் ஏராளம்.

ஒரு லட்சம் உறவினர்கள் கூடியிருக்கும் எரிமலை விளிம்புக்கு
பலமுறை சறுக்கி சறுக்கி ஏறி,
ஆழ்கடலில் ஐம்பது மைல் சென்று பிடித்த மீனை வாய்க்குள் நைத்து
குரல் வழி தன் குஞ்சுகளை அத்தனைக் கூட்டத்திலும் இனங்கண்டு
வாயோடு வாய் வைத்து வாரிசுகளுக்கு முதலில் ஊட்டி
இணைக்கு மிச்சம் (இருந்தால்) இறுதியில் ஈயும்
ஆர்க்டிக் பெங்குயின் தாய் -
தாய்மைக் கடலின் ஒரு துளி..



சில விலக்குகள் -

பாம்புகளில் கர்ப்பிணி உண்டு... பெறுபவள் உண்டு..
ஆனால் '' தாய்'' இல்லை.

தாய்மை, பல இனங்களிலும் பன்முகம் காட்டி நிற்கிறது. எல்லாவற்றிலும் உயர்ந்து நிற்பது மானுடத்தாய்மையே. இங்கு இனத்தின் பெருக்கம் மட்டுமே வாழ்க்கை இலட்சியம் அல்லவே. அதனால் தானோ, நோஞ்சான் பிள்ளைக்கு சற்று அதிகமாகவே சிரத்தை எடுத்து ஊட்டி வளர்ப்பாள் தாய்.

மூன்றுமாதங்கள் கடுங்குளிரிலும் தனக்கிட்ட வேலையை (முட்டையை அடைகாப்பது) செவ்வனே செய்து உணவு உறக்கம் இன்றி தன் இணையின் வருகைக்காகக் காத்திருக்கும் பெங்குவின் தந்தையின் பொறுப்பு கண்டும் எனக்கு மிகவும் வியப்பு!

பாராட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி, இளசு அவர்களே.

Ravee
10-03-2010, 12:54 AM
இது பல உயிரினங்களில் நடப்பதுண்டு கீதம் . நான் படித்திருக்கிறேன் . பார்த்தும் இருக்கிறேன் . பாசம், அன்பு, கூடி இருத்தல் என்பது எல்லாம் நமது சுயநலம் என்ற கருத்துக்கள் கூட உண்டு.

அருள்
10-03-2010, 02:43 AM
முதல் கவிதை அருமை. அதற்கு பதிலளித்த அணைத்து கவிதையும் அருமை.

கீதம்
15-03-2010, 04:26 AM
இது பல உயிரினங்களில் நடப்பதுண்டு கீதம் . நான் படித்திருக்கிறேன் . பார்த்தும் இருக்கிறேன் . பாசம், அன்பு, கூடி இருத்தல் என்பது எல்லாம் நமது சுயநலம் என்ற கருத்துக்கள் கூட உண்டு.

இருக்கலாம்; ஆனால் அதை வெளிப்படையாய் ஒப்புக்கொள்ளும் பக்குவம் நமக்கு இல்லையோ என்று தோன்றுகிறது. பின்னூட்டத்துக்கு நன்றி ரவீ அவர்களே.

கீதம்
15-03-2010, 04:27 AM
முதல் கவிதை அருமை. அதற்கு பதிலளித்த அணைத்து கவிதையும் அருமை.

நன்றி அருள் அவர்களே.