PDA

View Full Version : இன்னதெனத் தெளிவாரா...???சிவா.ஜி
03-03-2010, 08:53 AM
எந்தக் கடவுளும் தன்னைக்
கடவுளென சொல்வதில்லை
சொன்னால் அவன் கடவுளில்லை
கடவுள்....உணரப்படவேண்டியவன்
கடவுள் நான் எனச் சொல்பவன்
உதறப்படவேண்டியவன்....!!

ஓரறிவைக் கூட்டியவன்
பகுத்தறிவைக் காட்டியவன்
ஞானத்தைக் ஊட்டியவன்
அஞ்ஞானம் ஓட்டியவன்
அவனே இறைவன்....!!!

கடவுளையன்றி கைகூப்ப வேண்டியவர்
பெற்றெடுத்தோரும், கற்பித்தோருமன்றி
மற்றெவருமில்லை மாநிலத்தில்....!!

சிற்றின்ப லீலை செய்வோன்
பேரின்பம் தரும் பேராளன் ஆவானா?
பற்றற்ற பதமடைந்தவன்
குற்றமதைப் புரிவானா?
இதையுணரா மட மனிதர்
இனியேனும் அறிவாரா?
இதை இதை இன்னதென தெளிவாரா?

Narathar
03-03-2010, 08:58 AM
காலத்துக்கேற்ற கவிதை
காலத்தை பிரதிபலிப்பதுதான்
நல்ல கவிஞ்சனுக்கு அழகு...........
அது உங்கள் கவிதையில் தெரிகின்றது

வாழ்த்துக்கள்

சிவா.ஜி
03-03-2010, 09:09 AM
ஆதங்கமாய் இருக்கிறது நாரதரே....எத்தனை அறிஞர்கள் வந்தாலும், எத்தனை அறிவுரைகள் தந்தாலும், திருந்தாத இந்த மக்களை நினைத்து ஆயாசம்தான் வருகிறது. இவர்கள் திருந்தாதவரை....ஆனந்தர்கள் அவதரித்துக்கொண்டேதானிருப்பார்கள். நன்றி நாரதரே.

Akila.R.D
03-03-2010, 09:18 AM
சாட்டையடி சிவா.ஜி அவர்களே....

சூரிய கிரகணத்தின் போது பவானி முக்கூடலில் நீராட குடும்பத்துடன் சென்றிருந்தோம்....அங்கு நித்யானந்தரின் பக்தர்கள் கழுத்தில் அவரது புகைப்படம் பதித்த டாலரை அணிந்துகொண்டு ஜெய் நித்யானந்தா ஜெய் நித்யானந்தா என்று கோஷங்கள் எழுப்பியவாறு இருந்தனர்..இப்போதும் அது கண்முன்னே நிற்கிறது...

மனிதன் கடவுளைத்தவிர வேறு யார் மேலும் நம்பிக்கை வைக்க முடியாது போல உள்ளது..

சிவா.ஜி
03-03-2010, 10:38 AM
அதைப்போல டாலர் அணியச் சொல்லி அந்த நித்தியானந்தா கூட சொல்லியிருக்க மாட்டார். ஆனால் இந்த ஜனங்கள்....என்ன சொலவது அகிலா....நிஜத்தைவிட்டு நிழலில் மயங்கும் நிலையில்லா மனிதர்கள்.

நன்றி அகிலா.

ஆதி
03-03-2010, 10:51 AM
டைமிங் கவிதை அண்ணா..

அசதல்..

//சிற்றின்ப லீலை செய்வோன்
பேரின்பம் தரும் பேராளன் ஆவானா?//

இந்த வரிகள் வாசிக்கும் போது ஓஷோ நினைவாடாமல் இல்லை..

வாழ்த்துக்கள் அண்ணா..

சிவா.ஜி
03-03-2010, 11:04 AM
ஆமாம்..ஆதன்...சிற்றின்பத்தில் பேரின்பத்தைக் காணலாம் என்று சொல்லியே லட்சக்கணக்கான பக்தர்களை உருவாக்கியவர் ஓஷோ. அதை விடுத்து அவரது கருத்துக்கள் என்னைக் கவர்ந்தவை.

நன்றி ஆதன்.

அக்னி
03-03-2010, 11:07 AM
கடவுள் மனிதரைப் படைத்தபோது
அவர்கூட நினைத்திருக்க மாட்டார்,
மனிதர்கள் கடவுளாவார்களென்று...

சாமியார்...
சேர்த்துப்பார்க்கூடாது.
சாமி யார்...
பிரித்துப்பார்க்கவேண்டும்.

எல்லாமுமே அடிப்படையில் சுழற்சிதானே.
அந்தச் சுழற்சி நின்றுவிட்ட விபரீதம்தான் இதுவும்.

சாமி
சாமியார்
சாமியார்கள்
சாமியார்கள்வர்
சாமியார்கள்வர்கள்
சாமியார்கள்வர்கள்வர்...
இங்கே சுழற்சி நின்று வளர்ச்சி வந்ததுதான் விபரீதம்.
இங்கிருந்து வளர்ச்சி நின்று மீளச் சுழல வேண்டும்.
சாமியார்கள்வர்கள்வர்
சாமியார்கள்வர்கள்
சாமியார்கள்வர்
சாமியார்கள்
சாமியார்
சாமி
மீண்டு(ம்) இங்கே நிரந்தரமாய் நிற்கட்டும் சுழற்சி.

கவிதை சூடாகச் சொல்வதுபோல,
மடமனிதர்கள் இருக்கும்வரைக்கும்,
இதுபோன்ற
மடத்துமனிதரும் இருக்கத்தான் செய்வர்.

போலிகளால்
உண்மைகளிலும்
கருமை...

போலிகளுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கும் கவிதை.
சிவா.ஜி க்கு எனது நெஞ்சம் நிறைந்தப் பாராட்டு...

சிவா.ஜி
03-03-2010, 11:13 AM
ஆஹா....அக்னி....உங்கள் சுழற்சிச் சொற்கள்....கூரான அம்பைப் போலவே பாய்ந்திருக்கிறது. சாமி யார் எனத் தெளிவடைய...சாமியார்களை யார் எனத் தெரிந்துகொள்ளவேண்டும்...சாமியார்களில் யார் கள்வரென தெரிந்துகொள்ளவேண்டும்....பின்
சாமியிடம் வந்து நிற்க வேண்டும்.

அருமையான பின்னூட்டம். ரொம்ப ரொம்ப நன்றி பின்னூட்ட நாயகரே.

அக்னி
03-03-2010, 11:19 AM
உங்கள் சுழற்சிச் சொற்கள்....கூரான அம்பைப் போலவே பாய்ந்திருக்கிறது.
ஆமால்ல...
நாமளே அம்பு செய்து, நாமளே குத்திக்கொண்டு,
நாமளேதான் சொல்லியும் கொள்கின்றோம்,
குத்துது குடையுது என்று...

பாராட்டுக்கு நன்றிங்கோ...

ஆதி
03-03-2010, 11:37 AM
ஆமாம்..ஆதன்...சிற்றின்பத்தில் பேரின்பத்தைக் காணலாம் என்று சொல்லியே லட்சக்கணக்கான பக்தர்களை உருவாக்கியவர் ஓஷோ. அதை விடுத்து அவரது கருத்துக்கள் என்னைக் கவர்ந்தவை.

நன்றி ஆதன்.

அதிலும் ஒரு ஆழ்ந்த அர்த்தம் பொதிந்திருக்கிறது...

சிற்றின்பம் என்பதை அப்படியே கலவி இன்பம் என்று மட்டும் எடுத்துக் கொண்டால் விபரீதமாகிடும் கருத்து.. அவர் கருத்தும் அப்படி தான் ஆகிவிட்டது..

சிவா.ஜி
03-03-2010, 11:54 AM
அதேதான் ஆதன். அர்த்தம் அநர்த்தமானாலே விபரீதம்தான்.

இளசு
03-03-2010, 09:18 PM
கண்கண்ட தெய்வங்களாம் பெற்றோர், கற்பித்தோர் காலில் விழுபவன் நான்.

ஒளிகூட்ட, வழிகாட்ட ஞானியர், அறிஞர் பலரைச் சந்திப்போம் நம் வாழ்வில்...
மதிக்கலாம், அறிவுரை கேட்கலாம், ஆலோசனை பெறலாம்..

ஆனால் எந்த சகமனிதரையும் '' இறையம்சம், இறை தரகர்'' என ஏற்கக்கூடாது..


கவிதைக்குப் பாராட்டுகள் சிவா..

( உங்கள் சிறுகதை இதே கருத்தில் உண்டு மன்றத்தில் இல்லையா சிவா?)

-----------------

அக்னி

உன் பதிவைக் கண்டு அசந்தே போனேன்.

நிதமும் உன்னைக்கண்டு பெருமை கொள்ள வைக்கிறாய்..

சிவா.ஜி
04-03-2010, 05:20 AM
பெற்றவர்களிடம் பேச, ஆசிரியரிடம் பேச இடைத்தரகர்கள் அவசியமில்லாதபோது....இறைக்கு மட்டும் ஏன் இத் தரகர்...?

தவறான வழிகாட்டுதல்தான் இப்படி தரமில்லாதவர்களை நாடிப்போக வைக்கிறது.

ஆமாம் இளசு...மன்றம் சேர்ந்த புதிதில் எழுதிய சிறுகதை. நேரடி ஒளிபரப்பு என்ற தலைப்பில்.

மிக்க நன்றி இளசு.

aren
04-03-2010, 06:07 AM
இதுக்குப் பேருதான் டைமிங் என்று சொல்வார்களா, கவிதை நன்றாக உள்ளது சிவாஜி.

மனிதர்களை மனிதர்களாக மட்டுமே நினைத்தால் இந்த மாதிரியான பிரச்சனைகள் வருவதற்கு சான்ஸ் இல்லை. அதைவிட்டு அவர்களே கடவுள் என்றால் பிரச்சனைதான்.

சிவா.ஜி
04-03-2010, 06:55 AM
அப்படித்தானே ஏமாந்துபோய் அந்த போலிகளின் கால்களில் விழுகிறார்கள். தெளிவின்மைதான் காரணம். எப்போதுதான் திருந்துவார்களோ.

நன்றி ஆரென்.

அக்னி
04-03-2010, 07:23 AM
அக்னி

உன் பதிவைக் கண்டு அசந்தே போனேன்.


நன்றி அண்ணலே...
எனது பதிவுகள் உங்களால் ரசிக்கப்படுவது, எனக்குப் பெரும் விருது.
ஏனெனில், எனது முதன்மை வழிநடத்துனர்களில் ஒரு அண்ணனல்லவா நீங்கள்...

படைப்புக்களே எனது பதிவுகளின் அடிப்படை.
அவற்றினை உள்வாங்காவிட்டால், என்னிடம் ஏதுமில்லை.

எல்லாப் புகழும் படைத்தவருக்கே...

govindh
12-03-2010, 04:56 PM
பற்றற்ற பதமடைந்தவன்
குற்றமதைப் புரிவானா?
இதையுணரா மட மனிதர்
இனியேனும் அறிவாரா?
தெளிவா சொல்லிட்டீங்க...
பாராட்டுக்கள்...

சிவா.ஜி
13-03-2010, 04:17 AM
பாராட்டுக்கு நன்றி கோவிந்த்.

நாகரா
13-03-2010, 05:06 AM
ஓரறிவைக் கூட்டியவன்
பகுத்தறிவைக் காட்டியவன்
ஞானத்தைக் ஊட்டியவன்
அஞ்ஞானம் ஓட்டியவன்
அவனே இறைவன்....!!!

அருமையான கவிதை, குறிப்பாக இவ்வரிகள் பரிணாம ஏற்றத்தையும் பாய்ச்சலையும் உணர்த்துதல் அருமை

/ஓரறிவைக் கூட்டியவன்/
ஜடக் கல்லாயிருந்ததை ஓரறிவு உயிராக்கி மதிப்பு கூட்டியவன்

/பகுத்தறிவைக் காட்டியவன்/
ஒன்று முதல் ஐயறிவு உயிர்களை ஆக்கிப் பின் பகுத்தறிய முடிந்த ஆறாம் அறிவுள்ள மனிதனை ஆக்கிக் காட்டியவன்

/ஞானத்தைக் ஊட்டியவன்/
ஏழாம் அறிவாகிய இருதய மெய்ஞ்ஞானத்தை ஊட்டியவன்

/அஞ்ஞானம் ஓட்டியவன்/
இவ்வாறாகத் தன்னைத் தான் இன்னதெனத் தெளியாதிருந்த ஜடக் கல்லைப் பரிணாம ஏற்றத்தில் மெய்ஞ்ஞானம் உணர்ந்த தேவ மனிதனாக்கி, அதன் அஞ்ஞானத்தை ஓட்டியவன்

/அவனே இறைவன்....!!!/
மனித மிருகமாய் இன்னுந் தெளியாமலிருப்பவனுக்குத் தெளிவைத் தருகின்ற சொல்லாடல் அருமை, வாழ்த்துக்கள் திரு. சிவா.

சிவா.ஜி
13-03-2010, 05:32 AM
மிக்க நன்றி திரு. நாகரா அவர்களே.

உங்களின் தத்துவ விளக்கத்துக்குப் பிறகு அந்த வரிகளுக்கு இன்னும் மதிப்பு கூடுகிறது. மனம் நிறைந்த நன்றி.