PDA

View Full Version : காத்திருப்புகீதம்
02-03-2010, 10:07 AM
விருட்டென்று சீறிப்பறக்கும்
வாகனங்களைப் புறக்கணித்து
எப்போதே வரவிருக்கும்
எனக்கான பேருந்திற்காய்
தவமிருக்கிறேன்!

ஒருமணிக்கொருமுறை
ஒய்யாரமாய் வந்துசேரும்
அந்தப் பேருந்திற்கான
என் காத்திருத்தலை
சவுக் சவுக்கென மென்றபடி
அரைமனதுடன்
அசைபோட்டுக்கொண்டிருந்தது காலம்!

சாலையைக் கண்காணிப்பதால்
பலனேதும் இல்லையென்று
பட்டவர்த்தனமாய் அறிந்தபோதும்
புறச்சூழலால் ஈர்க்கப்பட்டு,
போகும் வரும் வாகனங்களை
ஒரு குழந்தையின் ஆர்வத்துடன்
பார்வையிடுகிறேன்.

இறுதிமூச்சு இருக்கும்வரை
விரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன,
இயந்திரக் காளைகள்!

அவரவர் பிரச்சனைகளைச் சுமந்தபடி
அன்றாடம்போலவே
பயணித்துக் கொண்டிருக்கின்றன, அவையாவும்!

மின்னல் நொடிகளிலும்
கவனிக்க முடிகிறது, கடந்து செல்லும்
சில கனிந்த பார்வைகளை!

அய்யோ பாவம் என்கிற பார்வைகளும்
அவ்வப்போது கொக்கி போட்டுச் செல்ல,
உக்கிரம் தெறிக்கும்
சில வக்கிரப் பார்வைகளைத் தவிர்க்க
விழிகளைச் சற்றே தழைக்கிறேன்.

குளிர்கண்ணாடி அணிந்துகொண்ட
பார்வைகளைப் பற்றியோ
குறை சொல்வதற்கு எதுவுமில்லை!

துரிதமாய் இயங்கும் யுகத்தில்
சற்றும் பொருந்தாத
ஜடமாய் என்னை உணர்கிறேன்!

கடும் பிரயத்தனத்துடன்
என்னால் கடத்தப்பட்ட காலம்,
மென்று துப்பிய இக்கவிதை போக,
மீதத்தை என்ன செய்வதென விழித்தபடி
தொடர்கிறேன், என் காத்திருத்தலை!

sofi
02-03-2010, 10:19 AM
முதல் தடவை உங்கள் கவிதையை படித்தேன் ..மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் கீதம்

சிவா.ஜி
02-03-2010, 11:36 AM
அந்தப் பேருந்திற்கான
என் காத்திருத்தலை
சவுக் சவுக்கென மென்றபடி
அரைமனதுடன்
அசைபோட்டுக்கொண்டிருந்தது காலம்!


இறுதிமூச்சு இருக்கும்வரை
விரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன,
இயந்திரக் காளைகள்!


கடும் பிரயத்தனத்துடன்
என்னால் கடத்தப்பட்ட காலம்,
மென்று துப்பிய இக்கவிதை போக,
மீதத்தை என்ன செய்வதென விழித்தபடி
தொடர்கிறேன், என் காத்திருத்தலை!

மிக அழகாக செதுக்கப்பட்டக் கவிதை. காத்திருத்தலின் கனத்தை....காத்திருந்த கணத்தை, கவிதையாய் சமைத்தவிதம் விருந்தாய் விரிந்திருக்கிறது.

இயந்திரக் காளைகள்....மிக வித்தியாசமான வார்த்தைப் பிரயோகம். ஆச்சர்யப்படுகிறேன்.

மென்று துப்பிய கவிதை போக மீதத்தை.....என்ன ஒரு கவிதைத்தனமான வரிகள்....!!

அழகான, அருமையான கவிதை கீதம் அவர்களே.

மிகுந்த வாழ்த்து.

அக்னி
02-03-2010, 04:31 PM
காத்திருப்பு...
என் வாழ்விற் தவிர்க்கமுடியாமற் சுமந்த கனம்...

வசந்தம் தேடிப் பயணித்த காலப்பகுதியின் சம்பவம் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன்.

சில ஆயிரம் கிலோமீற்றர் ஊடுருவற் பயணமொன்றை,
இலக்குக்குச் சற்றுமுன்னே
இடைமறித்துக் கைதுசெய்தது எல்லைப் பாதுகாப்புப் படை.

புரியாத மொழி, தெரியாத தேசம்.
சில நாட் சிறைவாசம் முடிந்து,
வந்த இடத்திற்கே திரும்பவும்...

அவர்கள் எல்லைவரைக்கும்
எந்தத் தடையுமில்லை.
வந்த இடத்தின் தடயமில்லாததால்
திரும்பிச் செல்ல
அந்த இடத்துக் காவலரின்
அனுமதியுமில்லை...

நம் முகவர் வரவேண்டுமாம்.
இல்லையெனிற் பணம் வேண்டுமாம்.
முகவருக்கு அழைப்பெடுத்தால்,
அனுப்புகின்றேன் ஆளை என்றார்.

அதுவரைக்கும்
அடைத்துவைத்துவிட்டனர்
அவர்கள் அலுவலகத்தின் ஓர் அறையில்.

அறையின் ஜன்னலால்,
நெடுஞ்சாலை தெரிந்தது.
வரும் வாகனமெல்லாம்,
எம்மை மீட்கவரும்
வாகனமாய்த் தெரிந்து,
ஏமாற்றி விரைந்தன.

காலைமுதல் மாலைவரை
இப்போவரும் அப்போவரும்
எனக் காத்திருந்த அந்தக் கனதி..,
வராவிட்டால் என்னாகுமோ
என்னும் பயம்..,
முதல்நாள் வாங்கிய
அடிகளின் வலிகளை
மர(ற)க்கச் செய்திருந்தது...

முதல் அனுபவமாகையால்,
தேறிட முடியாததால்,
இறைவனை இறைஞ்சியபடியே
இதயம் துடித்துக்கொண்டிருந்தது.

முன்னிரவில்,
காசு வாங்கிய
இந்தநாட்டுக் காவற்துறையே
அடுத்த நாடுவரை
அழைத்துச் சென்றுவிட்டது.

அதற்குப் பின்னர் அதனை விடவும்
காத்திருப்புக்கள் பல வந்த போதிலும்,
முதற்கனதி என்பதால்
மறதி அதனைக் கவ்வுதில்லை...

இந்தக் காத்திருப்பின் கனம்,
தமிழ்ப்பெண்ணின்
பேருந்துக் காத்திருப்பின் கனத்தின் முன்
கனமற்றதுதான்...

அதனை ஆழமாகக் கவிதை சொல்லி நிற்கின்றது.

வட்டமிடும் வல்லூறுகளின்
பார்வைப்பட்டுக் கூனி..,
தொட்டுரசும் காமுகரின்
வக்கிரத்திற் கூசி..,
இன்னும் எதற்குக் காத்திருக்கின்றாய்
பெண்ணே..?

பேருந்து வர நேரமாகலாம்.
இதற்கெதிராக உன்னிடம்
பேருந்து வர நேரமாகலாமோ..?

நாளைக்கு
நிம்மதியாய் நீ வர வேண்டுமென்றால்,
இன்றே
வல்லூறுகளை விரட்டிடக் கரமுயர்த்து.
வக்கிரத்திற்கெதிராய் உக்கிரம்கொள்.

நாளை மறுதினம்
உன் சகோதரி
மனம்நொந்து காத்திருக்கமாட்டாள்...

கனமான கவிதை...,
மனதை அழுத்தி நினைவைப் பிதுக்கிவிட்டது.

என் பாராட்டும் கனமும் கீதம் அவர்களுக்கு...

கீதம்
04-03-2010, 07:04 AM
முதல் தடவை உங்கள் கவிதையை படித்தேன் ..மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் கீதம்

உங்களுக்குப் பிடித்திருப்பது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி சோபி அவர்களே. பாராட்டுக்கு நன்றி.

கீதம்
04-03-2010, 07:06 AM
மிக அழகாக செதுக்கப்பட்டக் கவிதை. காத்திருத்தலின் கனத்தை....காத்திருந்த கணத்தை, கவிதையாய் சமைத்தவிதம் விருந்தாய் விரிந்திருக்கிறது.

இயந்திரக் காளைகள்....மிக வித்தியாசமான வார்த்தைப் பிரயோகம். ஆச்சர்யப்படுகிறேன்.

மென்று துப்பிய கவிதை போக மீதத்தை.....என்ன ஒரு கவிதைத்தனமான வரிகள்....!!

அழகான, அருமையான கவிதை கீதம் அவர்களே.

மிகுந்த வாழ்த்து.

ரசனையான பின்னூட்டம் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. பாராட்டுக்கு மிக்க நன்றி சிவா.ஜி அவர்களே.

கீதம்
04-03-2010, 07:15 AM
காத்திருப்பு...
என் வாழ்விற் தவிர்க்கமுடியாமற் சுமந்த கனம்...


கனமான கவிதை...,
மனதை அழுத்தி நினைவைப் பிதுக்கிவிட்டது.

என் பாராட்டும் கனமும் கீதம் அவர்களுக்கு...

ஆழ்மன நினைவுகளையும் ஆறிய காயங்களையும் கிளறிவிட்டதன் அடையாளமாய் ஒரு கனத்தக் கவிதைப் பின்னூட்டம். பின்னூட்டம் பார்த்து லேசான குற்ற உணர்வு தலைதூக்குவது உண்மையே.

சொல்லில் அடங்காச் சோகங்களைச் சுமந்து நிற்கும் வரிகளில் மறைந்துள்ள வலியை என்னால் உணரமுடிகிறது.

வாழ்வாதாரத்தின் வருகைக்காக காத்திருந்த கணத்தைக் கண்முன் கொண்டுவந்து கவலையுறச் செய்துவிட்டீர்கள்.

கடந்துபோன கசப்பான அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி அக்னி அவர்களே.

அக்னி
04-03-2010, 07:29 AM
குற்றவுணர்வு எழ வேண்டிய அவசியமில்லை.

காத்திருப்பு என்ற தலைப்பே, என்பதிவின் முதற்பாதியைக் கவர்ந்துகொண்டது.

அனுபவங்கள் இனிமையானாலும் கசப்பானாலும் மனதிலிருந்து மறைந்துவிடுவதில்லை.
அந்த அனுபவங்களிலிருந்து, நாம் நமது வாழ்வின் பாதையைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

அன்று, எனது அனுபவங்கள்,
இன்று, எதுவரினும் எதிர்கொள்ளும் மனத்தைரியத்தைத்தான்
எனக்குத் தந்திருக்கின்றன.

ஆதலால்,
அனுபவங்களை மறந்துவிடத் துடிப்பவனல்ல நான்.

தங்களுக்கும் மீண்டும் என் நன்றி!

கா.ரமேஷ்
04-03-2010, 11:36 AM
அருமையான கவிதை கீதம்... காத்திருத்தலின் வலி... காத்திருக்கும் போதுதான் தெரியும் ... அக்னியின் பின்னூட்ட கவிதையும் மிக அருமை...

கீதம்
04-03-2010, 11:40 PM
அருமையான கவிதை கீதம்... காத்திருத்தலின் வலி... காத்திருக்கும் போதுதான் தெரியும் ... அக்னியின் பின்னூட்ட கவிதையும் மிக அருமை...

மிக்க நன்றி ரமேஷ் அவர்களே.

Ravee
10-03-2010, 06:18 PM
இந்த கவிதை என்னை பார்த்து எழுதியதை போல இருக்கிறது.

பாதி நேரம் பயணப்படுவதில் போகிறது என்றால்
வாழ்க்கை மீதி நேரம்
காத்திருக்க வீணாய் போகிறது
பின் எனக்காக எங்கே நேரம்
இரவில் தூங்காமல் உங்களுடன் .
தூங்கும் நேரமோ
என் சக பயணியின் தோள்களில்

ரசிகனை மேலும் ரசிக்க வைத்த கவிதை .

Ravee
10-03-2010, 06:25 PM
காத்திருப்பு...
என் வாழ்விற் தவிர்க்கமுடியாமற் சுமந்த கனம்...

வசந்தம் தேடிப் பயணித்த காலப்பகுதியின் சம்பவம் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன்.

சில ஆயிரம் கிலோமீற்றர் ஊடுருவற் பயணமொன்றை,
இலக்குக்குச் சற்றுமுன்னே
இடைமறித்துக் கைதுசெய்தது எல்லைப் பாதுகாப்புப் படை.

புரியாத மொழி, தெரியாத தேசம்.
சில நாட் சிறைவாசம் முடிந்து,
வந்த இடத்திற்கே திரும்பவும்...

அவர்கள் எல்லைவரைக்கும்
எந்தத் தடையுமில்லை.
வந்த இடத்தின் தடயமில்லாததால்
திரும்பிச் செல்ல
அந்த இடத்துக் காவலரின்
அனுமதியுமில்லை...

நம் முகவர் வரவேண்டுமாம்.
இல்லையெனிற் பணம் வேண்டுமாம்.
முகவருக்கு அழைப்பெடுத்தால்,
அனுப்புகின்றேன் ஆளை என்றார்.

அதுவரைக்கும்
அடைத்துவைத்துவிட்டனர்
அவர்கள் அலுவலகத்தின் ஓர் அறையில்.

அறையின் ஜன்னலால்,
நெடுஞ்சாலை தெரிந்தது.
வரும் வாகனமெல்லாம்,
எம்மை மீட்கவரும்
வாகனமாய்த் தெரிந்து,
ஏமாற்றி விரைந்தன.

காலைமுதல் மாலைவரை
இப்போவரும் அப்போவரும்
எனக் காத்திருந்த அந்தக் கனதி..,
வராவிட்டால் என்னாகுமோ
என்னும் பயம்..,
முதல்நாள் வாங்கிய
அடிகளின் வலிகளை
மர(ற)க்கச் செய்திருந்தது...

முதல் அனுபவமாகையால்,
தேறிட முடியாததால்,
இறைவனை இறைஞ்சியபடியே
இதயம் துடித்துக்கொண்டிருந்தது.

முன்னிரவில்,
காசு வாங்கிய
இந்தநாட்டுக் காவற்துறையே
அடுத்த நாடுவரை
அழைத்துச் சென்றுவிட்டது.

அதற்குப் பின்னர் அதனை விடவும்
காத்திருப்புக்கள் பல வந்த போதிலும்,
முதற்கனதி என்பதால்
மறதி அதனைக் கவ்வுதில்லை...

இந்தக் காத்திருப்பின் கனம்,
தமிழ்ப்பெண்ணின்
பேருந்துக் காத்திருப்பின் கனத்தின் முன்
கனமற்றதுதான்...

அதனை ஆழமாகக் கவிதை சொல்லி நிற்கின்றது.

வட்டமிடும் வல்லூறுகளின்
பார்வைப்பட்டுக் கூனி..,
தொட்டுரசும் காமுகரின்
வக்கிரத்திற் கூசி..,
இன்னும் எதற்குக் காத்திருக்கின்றாய்
பெண்ணே..?

பேருந்து வர நேரமாகலாம்.
இதற்கெதிராக உன்னிடம்
பேருந்து வர நேரமாகலாமோ..?

நாளைக்கு
நிம்மதியாய் நீ வர வேண்டுமென்றால்,
இன்றே
வல்லூறுகளை விரட்டிடக் கரமுயர்த்து.
வக்கிரத்திற்கெதிராய் உக்கிரம்கொள்.

நாளை மறுதினம்
உன் சகோதரி
மனம்நொந்து காத்திருக்கமாட்டாள்...

கனமான கவிதை...,
மனதை அழுத்தி நினைவைப் பிதுக்கிவிட்டது.

என் பாராட்டும் கனமும் கீதம் அவர்களுக்கு...

ஒவ்வொரு நல்ல பதிவும் படிக்கும் போது அதில் உங்கள் பதில் கவிதையை தேடித் படிப்பேன் . உங்கள் பின்னூட்டம் பெரும் தகுதியை எப்போது நான் பெறுவேனோ ???

அமரன்
10-03-2010, 08:43 PM
நம்மைச் சுற்றி இருப்பவர்கள் உறைந்திட நீ மட்டும் அசைவில்....

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் கெதியசைவிலிருக்க நீ மட்டும் மெல்லசைவில்...
இரண்டுமே கவித்துவமான காட்சிகள். நீ நானாகும் போது முன்னது மட்டும் மழை இருட்டின் மின்னலாக.. பின்னது மின்னலின் தாக்கமாக..

ஏனோ தெரியவில்லை
முதிர் கன்னிகள்
ஓடிவந்து நிறைக்கிறார்கள்.

பாராட்டுகள் கீதம்!

கீதம்
15-03-2010, 04:32 AM
நம்மைச் சுற்றி இருப்பவர்கள் உறைந்திட நீ மட்டும் அசைவில்....

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் கெதியசைவிலிருக்க நீ மட்டும் மெல்லசைவில்...
இரண்டுமே கவித்துவமான காட்சிகள். நீ நானாகும் போது முன்னது மட்டும் மழை இருட்டின் மின்னலாக.. பின்னது மின்னலின் தாக்கமாக..

ஏனோ தெரியவில்லை
முதிர் கன்னிகள்
ஓடிவந்து நிறைக்கிறார்கள்.

பாராட்டுகள் கீதம்!

பிரமாதம்!
உங்கள் பின்னூட்டத்திற்குப் பிறகு படித்துப்பார்த்தால் முதிர்கன்னிகளின் காத்திருப்பின் வலி தெரிகிறது. மிகுந்த பாராட்டும் நன்றியும் அமரன் அவர்களே.

அக்னி
15-03-2010, 07:30 AM
ஒவ்வொரு நல்ல பதிவும் படிக்கும் போது அதில் உங்கள் பதில் கவிதையை தேடித் படிப்பேன் . உங்கள் பின்னூட்டம் பெரும் தகுதியை எப்போது நான் பெறுவேனோ ???
நண்பரே ரவீ...
உங்கள் அன்புப் பதிவுக்கும், அதீத புகழ்ச்சிக்கும் நன்றி.
அன்பு மட்டும் போதும். இந்த அதீத புகழ்ச்சிக்கு அருகதையில்லாதவன் நான்.

உங்கள் படைப்புக்களுக்கு நான் பின்னூட்டமிட்டிருக்கின்றேன்.

உங்களுடைய பல படைப்புக்களில்,

நில் என்றாய் நின்றேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20599)
மரணம் என்றால் பயம் கொள்வாயா.............. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20618)
நான் கண்டது கனவா ? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21952)
காதல் எந்த பாடத்திட்டத்தில்..... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22090)
ஜாலியா ஒரு பயணம்.... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22762)
மேலுள்ள சிலவற்றுக்கு பின்னூட்டமிட்டிருக்கின்றேன்.

வேண்டுமென்று தவிர்த்துச் செல்வதில்லை. நேரப்பிரச்சினை, தேடிச்சென்று பதிவிட இடம்கொடுக்குதில்லை.
உங்கள் படைப்புக்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், எனது பின்னூட்டங்கள் ஏதுமில்லை நிலைதான்.

உங்கள் படைப்புக்கள் வேகம் குறையாமற் பயணிக்கட்டும்.
மெதுவாகவேனும் தொடர்ந்து வருவேன்.