PDA

View Full Version : விளையாடும் குழந்தைக்காக....!!



சிவா.ஜி
26-02-2010, 02:36 PM
மின்சாரமில்லாத ஒரு முன்மாலை நேரம்
உடலும் மனமும் புழுங்க,
செயற்கைக் காற்றில்லா நிலையில்
இயற்கைக் காற்றுக்கேங்கி...
வந்தமர்ந்தேன் நிழல் மரத்தின் ஓரம்...!!

மலரத்துடிக்கும் அரும்புகள்
மலர்ந்த மலர்களில்
தேனீக்கள் செய்யும் குறும்புகள்
சுற்றித் திரிதல் முடிந்து
சுற்றம் சேர பறக்கும் பறவைகள்
வளர்ப்பவரின் வயிறு நிறைக்க
வளமான மடி சுரக்கும் கறவைகள்...!!

காணக் காண ஊறியது கவிதை வரிகள்
எழுதுகோலும் எண்ணங்களுமாய்
எழுத்தை விதைக்கத் தயாரானேன்....
எங்கிருந்தோ வந்த அணிலொன்று
என் இருப்பை அலட்சியம் செய்து
என்னருகே துள்ளிக் குதித்து விளையாடியது...

சிந்தனையில் கையசைக்கா நிலை கண்டு,
அச்சமின்றி விளையாடும் அணிலை
அச்சப்படுத்தி விரட்ட மனமின்றி,
அசையாமலிருந்து அதன் ஆட்டத்தை ரசித்தேன்
கவிதைக் குழந்தையின் பிரசவத்தை தள்ளிப்போட்டு,
விளையாடும் குழந்தைக்காக சிலையாகி அமர்ந்தேன்....!!!

செல்வா
26-02-2010, 02:44 PM
பல நேரம் நான் சிந்திப்பதுண்டு

ஒரு நாள் இந்த உலகில் மின்சாரம் இல்லாத நிலை வந்தால்
மக்கள் அனைவருமே மரங்கள் வளர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஐந்து நிமிடம் ஆழ்ந்து பார்த்த விழிகள்
அள்ளித்தெளித்த அழகிய கவிதை...

கலைஞன் எதையும் கூர்ந்து நோக்குபவன்
கண்டவற்றை காட்சிப்படுத்துவதில் தேர்ந்தவன்.

அண்ணா நீங்கள் ஒரு பிறவிக் கலைஞன்.

உங்கள் ஊரில் அடிக்கடி மின்தடை வரவேண்டுமென்று
பிரார்த்திக்கிறேன்.

அப்போதுதானே எங்களுக்கு
அழகிய பல கவிதைகள் கிடைக்கும்.

கரவைகள் - கறவைகள்

சிவா.ஜி
26-02-2010, 02:51 PM
ஆமாம் செல்வா....செயற்கைகளில் சுகம் கண்டே பழகிவிட்டது....அது நின்று போனால் இயற்கையிடம்தான் கையேந்தி நிற்க வேண்டும். சுழலும் மின்விசிறிக்கடியிலிருந்து...நகலைத்தான் பார்த்து ரசிக்க முடியும்...அசலைப் பார்க்க....இயற்கையை நாட வேண்டும்.

ரொம்ப ரொம்ப நன்றி செல்வா.

(தவறைச் சுட்டியதற்கு நன்றி செல்வா. தட்டச்சுப் பலகை சில சமயம் காலை வாரிவிடுகிறது)

இன்பக்கவி
26-02-2010, 03:14 PM
நல்லா இருக்கு வசிக்கும் போதே தமிழ் இனிமையாக இருக்கு...
கடைசி வரிகள் நல்லா இருக்கு....
வாழ்த்துக்கள்...
நன்றிகள் :icon_b:

சிவா.ஜி
26-02-2010, 03:26 PM
ரொம்ப நன்றிங்க இன்பக்கவி.

இளசு
26-02-2010, 06:02 PM
தாவரங்களில் தென்னை
மிருகங்களில் அணில்

''பிள்ளை'' என அழைக்கப்பெறும் பெருமை இவை இரண்டுக்கே...

முதல் பிள்ளை வளரும் காணி நிலம் கேட்டான் மகாகவி..

இரண்டாம்பிள்ளை விளையாட தன் மனம், உடல் கட்டி உயர்ந்தான் மன்றக்கவி...


வாழ்த்துகள் சிவா!

ஜனகன்
26-02-2010, 08:43 PM
அருமை........சிந்தனையை தூண்டும் கவிதை வரிகள்.
நல்ல கவிஞனாக இந்த கவிதை உங்களை படம் பிடிக்கிறது.
மேலும் வளர்ந்து சிறக்க என் வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
27-02-2010, 07:54 AM
அணில்பிள்ளைக்கு ஒரு தனி சிறப்பு இருக்கிறது. அதைப் பார்த்தால் ஒரு குழந்தையைப் பார்ப்பதைப்போலவே இருக்கும். சில சமயம் வெருண்டு பார்க்கும் அந்தக் கண்கள் மிக அழகு.

பாராட்டுப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி இளசு.

சிவா.ஜி
27-02-2010, 08:00 AM
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஜனகன்.

வசீகரன்
27-02-2010, 09:35 AM
யவனிகா அவர்களின் குருவிகளுடன் பறக்கலானது மனது கவிதை ஞாபகம் வருகிறது....

நம்மை கட்டாயப்படுத்தி செய்யும் காரியங்களில் இல்லாத இன்பம்...
இயல்பின் நம்மை நாடும் சில இனிய நிகழ்வுகள்.... அதோடு நாம் நம்மை இணைந்து கொள்வதில் உள்ள சுகமே தனி....

ஏதார்த்தமான ஒரு அழகிய கவிதைக்கு வாழ்த்துகள் அண்ணா...!

சிவா.ஜி
27-02-2010, 11:08 AM
நன்றி வசீ. உண்மைதான்...சில இனிய நிகழ்வுகளில் நம்மை மறந்து நாம் லயித்துவிடுகிறோம்.


ரொம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். வேலை அதிகமா? நலமா?

வசீகரன்
27-02-2010, 11:57 AM
ரொம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். வேலை அதிகமா? நலமா?

நலமே அண்ணா...
அதுசரி நான் எப்போதான் ஒழுங்காக மன்றத்துக்கு வந்தேன் சிவாண்ணா..!

எப்ப வந்தா என்ன எப்பவும் இது நம்ப மன்றமுங்கோ....!!

சிவா.ஜி
28-02-2010, 05:25 AM
அதே அதே....எப்பப்ப முடியுதோ அப்பப்ப வாங்க....!!!

கலையரசி
28-02-2010, 05:37 AM
மலரத்துடிக்கும் அரும்புகள்
மலர்ந்த மலர்களில்
தேனீக்கள் செய்யும் குறும்புகள்
சுற்றித் திரிதல் முடிந்து
சுற்றம் சேர பறக்கும் பறவைகள்
வளர்ப்பவரின் வயிறு நிறைக்க
வளமான மடி சுரக்கும் கறவைகள்...!!

அடடா! என்ன ஒரு அருமையான வர்ணனை!
இயற்கையை ரசிப்பதிலும் அதை வார்த்தைகளில் வடிப்பதிலும் வல்லவர் நீங்கள்!
அவசர உலகில் இயற்கையை ரசிக்க மனிதனுக்கெங்கே நேரமிருக்கிறது?
நல்லதொரு கவிதையைப் பதித்தமைக்கு வாழ்த்துக்கள்!

கீதம்
28-02-2010, 05:59 AM
மின்தடை ஏற்பட்டால்தான் இயற்கையை ரசிக்கும் வாய்ப்பே கிடைக்கிறது. வானத்து விண்மீன்களின் அழகை, மின்மினிப் பூச்சிகளின் மினுக்கிடலை, விளக்கொளியில் ரசிக்க முடிகிறதா? தென்றலின் சுகத்தை அனுபவிக்கமுடிகிறதா?

மின்சாரம் இல்லாதபோதுதான் ஒற்றை மெழுகின் ஒளியில் குடும்பத்தவர் அனைவரும் கூடி அமர்ந்து பாட்டுக்கு பாட்டு பாடிவிளையாட முடிகிறது. இன்பக்கவி அவர்களைப் போல் இழந்த தமிழ் எழுத்துகளைத் தேடிக் கண்டடைய முடிகிறது. உங்களைப்போல் அணிற்பிள்ளையின் துறுதுறு விளையாட்டை ரசிக்க முடிகிறது. பல இன்பங்களை நாம் இழந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது.

இப்போதெல்லாம் வீடுகளில் இன்வெர்டர் உபயோகிக்கிறார்கள். இனிமேல் அதுவும் இயலாது போலும்.

அழகிய கவிதைக்கு பாராட்டுகள் சிவா.ஜி அவர்களே.

சிவா.ஜி
28-02-2010, 07:19 AM
ஆமாங்க கலையரசி அவர்களே. இயற்கையை ரசிக்க இந்த அவசர உலகில் நேரம் கிடைப்பதே பெரும்பாடு. ஆனால் வசூல்ராஜா படத்துல கமல் சொன்ன மாதிரி நாமதான் இதுக்கெல்லாம் நேரம் ஒதுக்கிக்கனும்.

மனதை விசாலமாக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் நிவாரணி இந்த இயற்கை ரசிப்பு.

ரொம்ப நன்றிங்க.

சிவா.ஜி
28-02-2010, 07:22 AM
ஆஹா....அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் கீதம் அவர்களே....ஒற்றை மெழுகின் ஒளியில் பாட்டுக்குப் பாட்டு, மின்மினிப் பூச்சிகளின் ஒளி ரசித்தல், தென்றலின் சுகமறிதல் என எல்லாமே நாம் இயற்கையோடு ஒத்திசையும்போதுதான் சாத்தியமாகிறது.

இன்வெர்ட்டர் எல்லா வீடுகளுலும் இருக்கும் இந்தக் காலத்தில், நாம்தான் நேரமொதுக்கி இயற்கையை ரசிக்க வேண்டும்.

ரசனையான உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

அமரன்
28-02-2010, 09:06 AM
கவினான காட்சி....சிவாவின்
கவிமனதுக்குச் சாட்சி...!

கனிச்சுவை(ச்) சிவா.

ஓடிவந்து விருந்து படைக்கும் இயற்கை ஒருபுறம்
தேடிப்போய் உண்டு களிக்கும் இயற்கை மறுபுறம்..

முன்னது கிராமங்களிலும் பின்னது நகரங்களிலும் கிடைக்க
இரண்டுங்கெட்டான் இடங்களில் செம்புளியங்காய்ச் சுவைதான்..

அதை அப்படியே அள்ளி வழங்கியுள்ளீர்கள் சிவா!

சிலையாகித் தலைவர்கள்...காகங்கள்:)
விளையாட இடங்கொடுப்பதும்
நினைவில் மின்னியது சிவா!

சிவா.ஜி
28-02-2010, 09:13 AM
ஆமாம் பாஸ் நமக்கெல்லாம் செம்புளியங்காய் ரொம்பப் பிடிக்கும். ஏன்னா அதுதான் கிடைக்கும்.

கடைசியில சொன்ன தலைவர் சிலையின் 'தலை' சூப்பர்.

நன்றி அமரன்ஜி.

அக்னி
02-03-2010, 11:32 AM
இராமரின் ஸ்பரிசத்தால் அணில் அலங்காரம் பெற்றது என்பார்கள்.
இந்தக் கவிதையினாலும்...

அணிலின் இயல்புகள், அதற்குப் ‘பிள்ளை’ என்னும் பெயரைப் பெற்றுத்தந்திருக்குமோ எனச் சிந்தித்ததுண்டு...

துறுதுறுவென ஒளிரும் பார்வை...
கொடி பிடிக்கும் பஞ்சுப்பொதி வால்...
எப்போதும் நறுநறுவென்னும் அதரம்...
இரு காலில் நின்று உணவைப் பற்றும் கரங்கள்...

அழகுதான் அணில்...

பழகும்வரைக்கும் பயந்து மருளும் அணிலும் அழகு.
பழகிவிட்டாற் பாய்ந்து வரும் அணிலும் அழகு.

அதன் குறும்புகள், எம்மைக் குழந்தைகளாக்கிவிடும்...

அதனைக் கண்டு ரசித்துத் தந்த இந்தக் கவிதை அப்படியே கொள்ளை கொள்கின்றது.

ஒரு காற்றாடி கரகரப்பாய்ச் சுழன்றால்,
தூக்கம் வராது.., எரிச்சல்தான் வரும்...
இதுவே ஒரு மரம் சலசலத்தால்,
தூக்கம் சந்தோஷமாய் வரும்...

மிகச்சிறந்த திரைப்படமானாலும்
பார்த்து முடிந்ததும் கண்களில் எரிச்சல்தானிருக்கும்.
ஆனால், சாளரத்துக் காட்சிகளை
எத்தனை பார்த்தாலும் கண்கள் களைத்துவிடுவதில்லை.

செயற்கை எத்தனை இன்பங்களைத் தந்தாலும்,
இயற்கையை மேவிட முடியாது...

அழகான கவிதை தந்து, ஆசையாக வாசிக்க வைத்த சிவா.ஜி க்கு,
எனது பாராட்டு...

சிவா.ஜி
02-03-2010, 11:42 AM
ஒரு காற்றாடி கரகரப்பாய்ச் சுழன்றால்,
தூக்கம் வராது.., எரிச்சல்தான் வரும்...
இதுவே ஒரு மரம் சலசலத்தால்,
தூக்கம் சந்தோஷமாய் வரும்...


செயற்கை எத்தனை இன்பங்களைத் தந்தாலும்,
இயற்கையை மேவிட முடியாது...



ஆஹா... ஆஹா....அழகான ரசிப்புத்தன்மையை, அற்புதமாய் வெளிப்படுத்திய பின்னூட்டம். சலசலக்கும் மரத்தின் சத்தமும் இன்பம்தான், சாளரப் பார்வையும் சலிக்காத அனுபவம்தான்....அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் திறனாய்வுப் புலியாரே.

உங்களின் பின்னூட்டங்களின் ரசிகன் நான். இந்த ரசிகனுக்காக விருந்துபடைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி அக்னி.

muthuvel
02-03-2010, 11:52 AM
நல்ல கவிதை

சிவா.ஜி
02-03-2010, 11:54 AM
நன்றி முத்துவேல்.