PDA

View Full Version : ஒரு ஆறும் ஒரு மழையும்........!



செல்வா
25-02-2010, 09:13 PM
பெரிய மலைக்குக் கீழே
பரந்து விரிந்திருந்த அடிவாரப்
படுகையின் நடுவே
படுத்துக் கிடந்தது அந்த ஆறு

உயிரும் உடலும் வற்றிப்போய்
வறட்டு வெயிலில் யுகயுகமாய்
காய்ந்து போன
நீண்ட பெரிய ஒரு மலைப்பாம்பினைப் போல
சிதிலமாகிக் கிடந்தது அது

ஆற்று நீர் உருட்டி விளையாடிய
குளிர் கூழாங்கற்கள் அனைத்தும்
கடும் வெயிலில் காய்ந்து பழுத்திருந்தன.

ஆற்றுப் பாதை முழுதும்
வெயிலில் வெந்து கொண்டிருக்க
தனிமையும் மொளனமும்
தங்களுக்குள் சைகை மொழி பேசியபடி
அலைந்து கொண்டிருந்தன

முட்புதர்கள் முற்றும் எரிந்திருக்க…
ஒண்டியிருந்த ஒன்றிரண்டு மரங்கள் மட்டும்
இலையாடைகளைத் துறந்து விட்டு
கிளைக் கரங்கள் எரிந்த நிலையில்
உடன் கட்டை ஏறிக் கொண்டிருந்தன.

இருந்த ஒன்றிரண்டு புற்களையும்
கருகவைத்த கதிரவன்
கடலுள் மூழ்கி தன் பாவம்
கழுவச் சென்றான்.

அடர்ந்த அமாவாசை இரவு
அன்று மட்டும் இருளாயில்லை

எங்கிருந்தோப் பறந்து வந்த
கார்மேகங்களின் மோதுதலில்
இடியொலியும் மின்னலொளியும்
மங்கல வாத்தியங்களாய் முழங்க
நிறைந்து தளும்பும் ஏரி
கரையுடைத்துப் பாய்வது போல்
கொட்டித் தீர்த்தது வானம்

விடிகாலை வெளிப்போந்தக்
கதிரவன் கண்களுக்கு
மாறியிருந்தன காட்சிகள்

நுரைபொங்கக் கரை ததும்ப
ஓடிக்கொண்டிருந்தது வெள்ளம்

காய்ந்து கிடந்த முட்டைகள்
குளிர்நீர் பட்டதும் வெடித்துப்
பிறந்த மீன்குஞ்சுகள்
எங்கும் நீந்திக் களித்தன

ஓரிரவிற்குள்ளேயே பச்சையாடை
போர்த்தத் துவங்கியிருந்தாள் நிலமகள்.

பழுத்துக் கிடந்த கூழாங்கற்களை
தன் குளிர்கரங்களால் தழுவியபடி
அவற்றின் காதுகளுக்குள்
மலையின் இரகசியங்களை
உரத்துச் சொன்ன தண்ணீரின்
சலசலப்பு எங்கும் எதிரொலித்தது

புதிய கற்களுக்கும்
முன்பிருந்த கற்களுக்கும்
இடையே நடந்த நிலச் சண்டையில்
வழிந்தோடியது மணல் இரத்தம்

காணாமல் போயிருந்த
கொக்கு, காகம், மான், மயில்
மற்றும் உறவினர்கள் அனைவரும்
விருந்துண்ண வந்திருந்தனர்

இறந்து போய் உயிர் வந்தவன் போல்
கவனிப்புக்குள்ளானது ஆறு

மூன்று வருடங்களுக் கொருமுறை
மூன்று மாதம் வீடு வந்து செல்லும்
வெளிநாட்டுக் கணவன் போல்
மூன்று நாள் மழை விடைபெற
கணவனைப் பிரிந்த காரிகையாய்
களையிழந்தது ஆறு

அத்தனை உறவுகளும் மொத்தமாய்
பறந்து விட
குதூகலக் கொண்டாட்டத்தில்
குளித்திருந்த ஆறு தன்
வறண்டு போன நாவை
கடைசி துளி நீரை ஊறிஞ்சி
ஈரமாக்கிக் கொண்டது

பெருமழைக்காய் காத்திருப்பதும்
பெய்த சுவடு காயும் முன் ஓடுவதுமாய்
மழை நிகழ்த்தும் இந்தக் கண்ணாமூச்சி
ஆற்றின் மனதை அறுக்கும்
ஆறா இரணமாகிப் போனது…

ஆற்றின் வேதனைப் பெருமூச்சு
அந்தப் பாழ்வெளியெங்கும்
வெப்பக் காற்றாய் வீசியது

வானத்தைப் பார்த்தபடியே
காத்திருந்து சலித்துப் போன ஆறு
இப்போதெல்லாம் வான் நோக்கி கேட்பது
ஒன்றே ஒன்று தான்.

வந்து விடவே வேண்டாம்
இந்த மழை ….!

கீதம்
25-02-2010, 11:38 PM
'கண்ணிழந்தான் பெற்றிழந்தான் என உழந்தான்' என்னும் கம்பராமாயண வரிகளை நினைவுபடுத்திய கவின்மிகுக் கவிதை. வர்ணனைகள் மிகவும் அருமை.

தனிமையும் மெளனமும் பேசிய சைகைமொழி....
மூன்று வருடங்களுக்கொருமுறை வரும் கணவன்.....
கற்களின் உரசலால் வடிந்த மணல் ரத்தம்....

மிகவும் ரசிக்கவைத்த சொல்லாடல்கள்.

பாராட்டுகள் செல்வா அவர்களே.

செல்வா
26-02-2010, 09:57 AM
நன்றி கீதம்....

பாரதி
26-02-2010, 10:18 AM
எதைக்குறித்து கவிதை புனையப்பட்டது என்ற கவிஞரின் விளக்கம் கிடைத்தால் மிக நன்றாக இருக்கும்.

சிவா.ஜி
26-02-2010, 11:11 AM
வறண்ட ஆற்றின் அனைத்து அம்சங்களையும் அழகான சொல்லாடலில் சொல்லி சொக்க வைத்துவிட்டீர்கள் செல்வா. உவமைக்காக ஊருக்கு வரும் கணவனைக் கையாண்ட விதம் அசத்தல். இந்த சுகம் தந்துவிட்டு, சுவை மாறும்முன்னே பிரிவதற்கு பதிலாய் வராமலே இருந்து விடு மழையே எனச் சொல்வதில் தெரியும் வேதனை....

இப்போது நான் மேலே சொன்னதில் ஆற்றுக்கு பதிலாய் காத்திருக்கும் பெண்ணையும், மழைக்கு பதிலாய்....வந்துவிட்டு உடன் ஓடி மறைந்துவிடும் கணவனையும் இட்டு நிரப்பினாலும் இனிமை குறையாது.

அசத்திட்டீங்க செல்வா. மிகப் பிரமாதம்.

வாழ்த்துகள்+பாராட்டுக்கள்.

பா.ராஜேஷ்
26-02-2010, 12:47 PM
மிக அருமையான வார்த்தை பிரயோகங்கள் .... அருமையான வரிகள். சிவா அண்ணாவின் விளக்கத்திற்கு பிறகு இன்னும் அருமையை இருக்கிறது. ;)

பாராட்டுக்கள் செல்வா

செல்வா
26-02-2010, 02:14 PM
எதைக்குறித்து கவிதை புனையப்பட்டது என்ற கவிஞரின் விளக்கம் கிடைத்தால் மிக நன்றாக இருக்கும்.

உறவும் பிரிவும் மாறி மாறி வரும் வாழ்க்கையைச் சுட்டுவதேயன்றி வேறேதும் உட்பொருள் இல்லை அண்ணா....

செல்வா
26-02-2010, 02:16 PM
வாழ்த்துகள்+பாராட்டுக்கள்.

அந்த உவமை சொல்லும் போது அது நேரடியாகக் கவிதையின் பொருளுக்கு கொண்டு சேர்த்துவிடுமே என்று யோசித்தேன்... என்றாலும் அதினும் பொருத்தமாக ஏதும் தோன்றவில்லை....

வாழ்த்துக்கு நன்றி அண்ணா.....

செல்வா
26-02-2010, 02:17 PM
பாராட்டுக்கள் செல்வா

நன்றி பா.ராஜேஷ்

இளசு
26-02-2010, 06:24 PM
'கண்ணிழந்தான் பெற்றிழந்தான் என உழந்தான்' என்னும் கம்பராமாயண வரிகளை நினைவுபடுத்திய கவின்மிகுக் கவிதை.

கீதம் அவர்களை விஞ்சி இப்படைப்பை சிலாகிக்க முடியாது செல்வா..

அத்தனை வரிகளையும் சிரத்தையுடன் செதுக்கிய நேர்த்தி மிளிர்கிறது..


காய்ந்த சினைகள் மீன்களானதும்
தேய்பட்ட பாறைக்குஞ்சு கூழாங்கலானதும்
கல்லுரசி மணல் அரிப்பதும் என
அறிவியல் தகவல்களைத் தெளித்த யுத்திக்கு
சிறப்புப் பாராட்டுகள்..

செல்வா
27-02-2010, 02:26 PM
நன்றி அண்ணா.....!

இன்பக்கவி
28-02-2010, 03:38 AM
உறவும் பிரிவும் மாறி மாறி வரும் வாழ்க்கை:icon_b::icon_b::icon_b:


நிஜம் நிஜம் நிஜம்...
அருமையான கவிதை...
வாழ்த்துக்கள் :icon_b:

அமரன்
28-02-2010, 09:40 AM
நீ இடம் மாறும் போதே நினைச்சேன் இப்படி கவிதை நிச்சயம் என்று..

வந்து விழும் மழை நம் கைவிட்டு எப்போதோ சென்றுவிட்டது! காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதை மாற்றி மழையுள்ள போதே மகிழ்வுகொள் எனும் நிலையப்பா இப்போது.. எனக்கு இந்த மழை போனஸ் மாதிரி. ஏன்னா எனக்குல் மழை நிதமும் உண்டு.

ஆனாலும் அடிக்கடி மாறும் போது ஏற்படும் சுகவீனம் கஷ்டந்தான்..

தொடர்ந்து படை.

கலையரசி
28-02-2010, 10:09 AM
மூன்று வருடங்களுக் கொருமுறை
மூன்று மாதம் வீடு வந்து செல்லும்
வெளிநாட்டுக் கணவன் போல்
மூன்று நாள் மழை விடைபெற
கணவனைப் பிரிந்த காரிகையாய்
களையிழந்தது ஆறு

அருமையான வரிகள்! பொருத்தமான உவமை!
வாழ்த்துக்கள்.

செல்வா
01-03-2010, 08:47 AM
உறவும் பிரிவும் மாறி மாறி வரும் வாழ்க்கை:icon_b::icon_b::icon_b:

வாழ்த்துக்கள் :icon_b:

நன்றி கவி.

செல்வா
01-03-2010, 08:48 AM
நீ இடம் மாறும் போதே நினைச்சேன் இப்படி கவிதை நிச்சயம் என்று..


தொடர்ந்து படை.

நன்றிடா பங்காளி உன் பின்னூட்ட ஊக்கத்திற்கு...

செல்வா
01-03-2010, 08:49 AM
வாழ்த்துக்கள்.

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கலை...

பென்ஸ்
01-03-2010, 08:32 PM
போதை தலைக்கு ஏறி பாதையில் விழுந்து கிடந்து
நாக்கு காய்ந்து, துளி தண்ணிக்காய் கால்பிடித்து
ஊர்ந்து வந்து வீட்டில் விழுந்து...
காலையில் எழுந்து ...
"இன்றோடு குடிப்பதை விட்டுடனும்...!!!!"
இப்படிதான் இருக்கு உங்க கவிதை செல்வா....

மறுபடியும் மழை வந்தால் வேண்டாம் என்று சொல்லுமா இந்த ஆறு...
இது இயற்கை .. இன்னும் தொடரும்....

மருதத்தில் பூத்த இந்த குறிஞ்சியும் முல்லையும் அழகு....

இளசு
01-03-2010, 08:38 PM
மிக ரசித்தேன் இனிய பென்ஸின் பின்னூட்டத்தை..

பாராட்டுகள் பென்ஸ்..