PDA

View Full Version : பாவப்பட்ட அது



M.Rishan Shareef
23-02-2010, 04:10 AM
பாவப்பட்ட அது (http://mrishanshareef.blogspot.com/2009/12/blog-post_20.html)


கடவுள் தந்த பொழுதிலிருந்து
காயங்களெதுவும் கண்டிரா
பரிபூரணத் தூய்மையோடு துடித்திட்ட அது
மழலை வாடையை எங்கும் பரப்பும்
பூக்களை இறுக்கமாகப் பொத்திவைத்திருக்கும்
ஒருநாள் குழந்தையின்
உள்ளங்கையினைப்போலவும்
மொட்டவிழக் காத்திருக்கும்
தாமரையொன்றின் உட்புற இதழைப்போலவும்
மிகவும் மென்மையானது
சில சலனங்களை
பின்விளைவறியாது ஏற்றுப்பின்
கலங்கியது துவண்டது
வாடிச் சோர்ந்தது
ஞாபக அடுக்குகளில்
சேமித்துக் கோர்த்திருந்த
எனதினிய பாடல்களின் மென்பரப்பில்
உன் கால்தடங்களை மிகுந்த
அதிர்வோடு ஆழமாய்ப் பதித்தவேளையில்
ஏமாளியாய் நின்றதைத்தவிர்த்து
வேறென்ன பாவம்தான் செய்தது
வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

நன்றி
# வடக்கு வாசல் - செப்டம்பர், 2009 இதழ்
# வல்லினம் - மலேசிய கலை இலக்கிய இதழ் -10, அக்டோபர் 2009

அக்னி
09-03-2010, 04:26 PM
பரிதாபப்பட்ட
பாவப்பட்ட மனது...
பரிதாபப்படுமா
பாவம்செய்த மனது...

இது என் மனதின் பாவமல்ல...
ஏக்கப் பிரதிபலிப்பு...

ரிஷான் ஷெரீப் அவர்களுக்கு என் பாராட்டு.

govindh
09-03-2010, 05:18 PM
பாவப்பட்ட மனது...
கவிதை படித்து..
பாரமான மனது..
பாராட்டுக்கள்..

M.Rishan Shareef
16-03-2010, 02:56 AM
அன்பின் நண்பர்கள் அக்னி, Govindh,

வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே !

இளசு
07-04-2010, 09:50 PM
வசந்தமாளிகை படத்தில் ஒரு வசனம்: ( எழுதியவர் பாலமுருகன்)

நம்ம இதயம் இருக்கே
அதை ஒருத்தர்கிட்டே கொடுக்கிறவரைக்கும் ரொம்ப விசாலமா இருக்கும்
ஒருத்தர்கிட்டே கொடுத்ததுக்கப்புறம் ரொம்ப சுருங்கிடும்..


----------------------------------

நம்பிய இன்னோர் இதயம் வதைக்கும்வரைக்கும்
நம் இதயம் தாமரையின் உள்ளிதழ், மென்பரப்பு..

வதைபட்டு பாடம் பெற்றபின்
தாமிரம் , இரும்பை வெல்லும் வன்பரப்பு...

---

பாராட்டுகள் ரிஷான்!

M.Rishan Shareef
08-04-2010, 03:13 AM
அன்பின் இளசு,

//வசந்தமாளிகை படத்தில் ஒரு வசனம்: ( எழுதியவர் பாலமுருகன்)

நம்ம இதயம் இருக்கே
அதை ஒருத்தர்கிட்டே கொடுக்கிறவரைக்கும் ரொம்ப விசாலமா இருக்கும்
ஒருத்தர்கிட்டே கொடுத்ததுக்கப்புறம் ரொம்ப சுருங்கிடும்..


----------------------------------

நம்பிய இன்னோர் இதயம் வதைக்கும்வரைக்கும்
நம் இதயம் தாமரையின் உள்ளிதழ், மென்பரப்பு..

வதைபட்டு பாடம் பெற்றபின்
தாமிரம் , இரும்பை வெல்லும் வன்பரப்பு...

---

பாராட்டுகள் ரிஷான்! //

இதயம் குறித்த அருமையான வசனங்கள்.
தேடிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
கருத்துக்கும் வசனங்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !