PDA

View Full Version : ஒரு நிமிடக் கதை= உதவிசிவா.ஜி
21-02-2010, 12:58 PM
சண்முகம், தொலைக்காட்சிப் பெட்டியின் ரிமோட்டைக் கையில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு சானலாகத் தாவிக்கொண்டே இருந்தார். ஓய்வான முன்னிரவு நேரம். ஒரு சானலில் பளிச்சென்று சந்தோஷின் முகம் தெரிந்ததும், பட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தார்.

சந்தோஷ், சண்முகத்தின் அண்ணன் மகன். இவர் அவனுடைய மேல் படிப்புக்கு உதவ மறுத்துவிட்டதிலிருந்து, அந்தக் குடும்பத்துக்கும் இவருக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. ஆனாலும், சந்தோஷின் தொழில்ரீதியான வளர்ச்சியை கவனித்துக்கொண்டுதானிருந்தார். இன்று அவன் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர்.

அவனுடைய பேட்டியைத்தான் ஒளிபரப்புகிறார்கள். என்ன சொல்கிறானென்று ஆர்வமாய் பார்த்தார்...

சம்பிரதாயமான சில கேள்விகளுக்குப் பிறகு,

"நீங்கள் இந்த உயர்ந்த நிலைக்கு வரக் காரணமானவர்கள், அல்லது உதவியவர்கள் என்று யாரையாவது குறிப்பிட விரும்புகிறீர்களா?"

என்ற கேள்விக்கு,

"நிச்சயமாய். என்னுடைய இந்த உயர்ந்த நிலைக்கு முக்கியமான...இல்லையில்லை...ஒரே ஒரு காரணகர்த்தா என் சித்தப்பா திரு. சண்முகம் அவர்கள்..."

சண்முகம் திடுக்கிட்டு நிமிர்ந்தார். என்ன சொல்கிறான் இவன்...எதுவும் விளங்காமல், தொடர்ந்து பேட்டியைக் கவனித்தார்.

"அப்படியா? அவரின் உதவியாலா நீங்கள் இவ்வளவு பெரிய தொழிலதிபர் ஆனீர்கள்?"

அந்தக் கேள்வியைக் கேட்டு புன்னகையோடு,

"தவறு. அவரது உதவி கிடைக்காததால்தான் இந்த உயர்வை நான் அடைய முடிந்தது."

"குழப்பமாய் இருக்கிறதே...என்ன சொல்ல வருகிறீர்கள் சந்தோஷ் அவர்களே"

"உண்மைதான், நான் மேல்நிலைப்பள்ளியில் நல்ல மதிப்பெண் பெற்று தேறிய நிலையில், மேற்கொண்டு படிக்க மிகவும் விருப்பப்பட்டேன். என் தந்தையார் மிகக் குறைவான சம்பளத்தில், குடும்பத்தைக் காப்பாற்றவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததால், அப்போது வசதியாக இருந்த என் சித்தப்பாவிடம் உதவி கேட்டேன். அவர் நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார். விரலுக்குத் தகுந்த வீக்கம்தான் இருக்க வேண்டும். உனக்கெல்லாம் இந்தப் படிப்பே அதிகம், இனி ஏதாவது வேலை செய்து உன் குடும்பத்தைக் காப்பாற்று எனச் சொல்லிவிட்டார்."

பார்த்துக்கொண்டிருந்த சண்முகம் சங்கடத்தில் நெளிந்தார்.

"வெறுமனே உதவமுடியாது எனச் சொல்லியிருந்தால் நான் வேறு யாரிடமாவது போய் உதவி கேட்டிருப்பேன்...ஆனால், உன் குடும்பத்தைக் காப்பாற்ற ஏதாவது வேலை செய் எனச் சொன்னது என் மூளைக்குள் உறுத்திக்கொண்டேயிருந்தது. தக்காளி கமிஷன் மண்டியில் பெட்டியடித்துக்கொடுக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். கொஞ்ச நாட்களிலேயே அந்தத் தொழிலின் நாடிபிடித்துவிட்டேன்."

அருகிலிருந்த நீரைக் குடித்துவிட்டு,

"நானே கமிஷன் வேலை பார்க்கத் தொடங்கி, மளமளவென்று வளர்ந்து, வெளி மாநிலங்களுக்கு சரக்கை அனுப்ப வாடகை லாரிகளை பயன்படுத்தினேன். சில மாதங்களில் சொந்தமாய் லாரிகள் வாங்கி...வளர்ந்து...இன்று உணவு பதனிடும் ஆலை, குளிர்ப்பதனக் கிடங்குகள் என நிறைய நிறுவனங்களுக்குச் சொந்தக்காரன். இப்போது சொல்லுங்கள்...அவரால்தானே நான் இந்த நிலைக்கு வந்தேன். அவர் மட்டும் உதவியிருந்தால், எல்லோரையும் போல ஒரு எஞ்சினியராகவோ, ஊழியனாகவோ இருந்திருப்பேன். ஆனால் இன்று என் நிறுவனங்களில் எத்தனையோ எஞ்சினியர்கள் பணிபுரிகிறார்கள்."

"அப்படியென்றால் இனி படிப்புக்கு உதவிக் கேட்டு வருபவர்களுக்கு உதவவேண்டியதில்லை எனச் சொல்கிறீர்களா?"

"பார்த்தீர்களா? தவறான கோணத்தில் பார்க்கிறீர்கள். உதவி கிடைக்கவில்லையென்றாலும், சோர்ந்துபோகாமல், உழைத்து, தன் சொந்தக்காலில் நிற்க முயலவேண்டும் என்ற செய்தி இதிலிருப்பது தெரியவில்லையா?"

"மன்னிக்கவும் சந்தோஷ் அவர்களே...நாம் பேட்டியைத் தொடரலாமா?"

சண்முகம் குற்ற உணர்ச்சியில் தடுமாறினார்.

ஜனகன்
21-02-2010, 01:25 PM
அருமை..... குறுகிய வரிகளில் சந்தோஷ்ன் திறமையை வெளிப்படித்திய விதம் நன்றாக உள்ளது.
உணர்வை தொட்டது.பாராட்டுகின்றேன்.

aren
21-02-2010, 02:02 PM
இதுதான் என் வாழ்க்கையில் நடந்தது. அதை அப்படியே இங்கே சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் வார்த்தைகளில். நானே இதை என்னுடைய நினைவலைகள் பகுதியில் எழுதலாம் என்றிருந்தேன்.

இதைப் படிக்கும் அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

படிக்க பணமே இல்லாதவர்கள் வாழ்க்கையில் முன்னேறும்பொழுது அப்பா படிப்புக்காக செலவழிக்கும் பணத்தை ஒழுங்காக உபயோகப்படித்திக்கொண்டால் பலர் முன்னுக்கு வர வாய்ப்பிருக்கிறது.

சிவா.ஜி
21-02-2010, 02:46 PM
மிக்க நன்றி ஜனகன்.

சிவா.ஜி
21-02-2010, 02:48 PM
ஆஹா....உங்கள் கதையேவா? உங்களை நினைத்து பெருமையாய் இருக்கிறது ஆரென். இந்தக் கதை உருவானதற்கும் உங்கள் தொடர்தான் காரணம்.

மிக்க நன்றி ஆரென்.

சரண்யா
21-02-2010, 03:58 PM
ஒரு நிமிட கதை உதவி செய்யாமல் இருந்த உதவி முன்னேற்றத்தின் வழி வகுக்கும்..
பகிர்வுக்கு நன்றி...

பாரதி
21-02-2010, 04:29 PM
சில நேரங்களில் மனதைப்பாதிக்கும் சொற்களே வாழ்க்கையில் நடக்க வேண்டிய வழியை தீர்மானிக்கின்றன என்பது சரிதான் சிவா.
நல்ல கரு - கதை. வாழ்த்துகிறேன்.

அமரன்
21-02-2010, 10:14 PM
என் உண்டியலில்
சில சில்லறைகள்..
பல நாண(ந)யங்கள்..

எனக்குத் தேவை
நிமிடமல்ல..
ஒரே ஒரு நொடி...

சரிதானே சிவா!

பாராட்டுகள்.

நம்ம சுனைத் எழுதிய கவிதை ஒன்றும் நினைவாடுது் இக்கணத்தில்!

கீதம்
21-02-2010, 11:22 PM
நேரடியாய் உதவுபவர்களைவிடவும் இப்படி மறைமுகமாய் உதவுபவர்களே நம் நாட்டில் அதிகம்.:rolleyes:

என்ன செய்வது? நெஞ்சில் உரத்துடன் போராடி அவர்கள் முன்னால் தலை நிமிர்ந்து வாழ்வதையே லட்சியமாய்க் கொள்ளவேண்டும்.
பாராட்டுகள் சிவா.ஜி அவர்களே.

மதி
22-02-2010, 01:54 AM
இப்படியும் மறைமுகமாக உதவுபவர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள்...!! என்ன சொல்ல... நல்ல கதை அண்ணா..!

Ravee
22-02-2010, 05:22 AM
சிவா அருமையான கதை ,என் விசயத்தில் பெரியப்ப்பா..... உங்கள் கதையில் சித்தப்பா ஆகிவிட்டார் .ம்ம் வீட்டுக்கு வீடு வாசல் படி.

சிவா.ஜி
22-02-2010, 09:19 AM
ரொம்ப நன்றி சரண்யா. உதவிச் செய்யாமலிருந்தாலும் முன்னேறலாம்...மனசுல தைரியம் இருந்தா.

சிவா.ஜி
22-02-2010, 09:20 AM
மிக்க நன்றி பாரதி. நீங்கள் சொல்வது உண்மைதான். எந்த வார்த்தை நம் வாழ்க்கையை மாற்றுமென்பதை சொல்ல முடியாது.

சிவா.ஜி
22-02-2010, 09:25 AM
சரிதான் பாஸ். ஒரு நொடி போதும். நாணயங்கள் இருந்துவிட்டால் சில்லறைகளை சமாளித்துவிடலாம்.

ரொம்ப நன்றி பாஸ்.

சிவா.ஜி
22-02-2010, 09:27 AM
மிக்க நன்றி கீதம் அவர்களே. மனதில் உறுதி மிக முக்கியம். எடுத்த காரியத்தில் சிரத்தை அதிமுக்கியம்.

சிவா.ஜி
22-02-2010, 09:28 AM
இப்படி மறைமுகமாக உதவுகிறவர்களை நம்பலாம் மதி, ஆனால் கூட இருந்தே...ஏற்றிவிட்டு காலைவாருகிறவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நன்றி மதி.

சிவா.ஜி
22-02-2010, 09:30 AM
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு கதை இருக்கிறது. இருந்தும் நீங்கள் முயற்சியை விடாது முன்னேறியதற்கு உங்களின் தனித்தன்மைதான் காரணமாய் இருக்க வேண்டும் ரவி.

மிக்க நன்றிகள்.

Akila.R.D
22-02-2010, 11:24 AM
நம் நாட்டில் நிறைய தொழில் அதிபர்கள் இப்படி உருவானவர்கள் தான்..
கதை நன்றாக உள்ளது சிவா.ஜி அவர்களே..

சிவா.ஜி
22-02-2010, 12:07 PM
ஆமாம் அகிலா. முயற்சியும், எடுத்த காரியத்தில் உறுதியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

மிக்க நன்றி.

கலையரசி
22-02-2010, 03:12 PM
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு நிகழ்வால் அல்லது யாரோ ஒருவரால் திருப்புமுனை ஏற்படும். இந்தக் கதையில் அந்த நபர் சித்தப்பா.
யதார்த்தமான் நல்ல கதை. பாராட்டு சிவா.ஜி அவர்களே!

அக்னி
22-02-2010, 03:50 PM
வாழ்க்கை ஒரு வழிப்பாதையல்ல...

நாம் வரும்வழியிற்,
போகும் வழி தெரியத்தான் செய்யும்.
போகும் வழித் தடைப்பட்டால்,
முட்டிக்கொண்டு இருப்பவனுக்கு
அதுதான் முடிவிடம்.
அடுத்த வழியைத் தேடுபவன்
அடைவான் முடிவிடம்.

எப்பொழுதும் நாம் நிற்கும் புள்ளி, ஆரம்பப் புள்ளியாகவே இருந்தால்,
வாழ்க்கைக் கோலம் அழகுபெற்றுக்கொண்டே இருக்கும்.

நிமிடக் கதை - நிமிடும் கதை

பாராட்டுக்கள் சிவா.ஜி...

சிவா.ஜி
22-02-2010, 03:54 PM
சரிதான் கலையரசி அவர்களே. அவர்களின் நோக்கம், தவறாய் இருந்தாலும், சரியான திசையில் பயணிப்போருக்கு வெற்றி நிச்சயம்தான்.

மிக்க நன்றி.

சிவா.ஜி
22-02-2010, 03:58 PM
அசத்தல் அக்னி. தடைபட்ட வழியில் முட்டிக்கொண்டிருப்பவனுக்கு முடியும் இடமாவது....அடுத்த வழிதேடி பயணிப்பவனுக்கு முடிவின் இடமாகிறது. அந்த முடிவு அவன் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியின் இடம்....முயலாதவனுக்கு வெறும் வெற்றிடம்.

அருமையான சொல்லாடலில் அழகான பின்னூட்டம்.

நன்றி திறனாய்வுப் புலியாரே.

அக்னி
22-02-2010, 04:59 PM
ஆமாம் சிவா.ஜி...
முட்டியவுடன் வலிக்கத்தான் செய்யும்.

அதற்காக வலியுடன் முட்டிக்கொண்டே இருந்தால்,
வலிதான் ஆறுமா... வழிதான் கிட்டுமா...

வலி மாறியவுடனாவது, வழி மாற்றாவிட்டால்,
வாழ்க்கை வலியுடனேயே முற்றுப்பெற்றுவிடும்...

தொடர் தடைகள் வாழ்க்கையில் எனக்கும் சலிப்பைத் தந்ததுண்டு, தருவதுண்டு.
ஆனால், சலிபடைந்தே இருக்காமல்,
அந்தச் சலிப்புகளையே சல்லிகளாக்கி
வாழ்வைச் சிறுகச் சிறுகக் கட்டிக்கொண்டிருக்கின்றேன்...
அதற்கு, இன்னும் ஊக்கம் தருமாற்போலிருந்தது இந்த நிமிடக் கதை...

அதற்கு உங்களுக்கு எனது நன்றிகள்...

இளசு
22-02-2010, 08:00 PM
கதை அசத்தல்.. பாராட்டுகள் சிவா

பின்னூட்டங்கள் ஒவ்வொன்றும் அசத்தல்...
குறிப்பாய் ---

அன்பின் ஆரென் - நெகிழ்வு
கீதம் - நெத்தியடி
பாரதி - நறுக்
அக்னி - அபாரம்..
-----------------------------------

தலைமைப் பண்பாளர்கள் சொல்வது --

வெற்றிகளை என்னிடம் சொல்லாதீர்கள்-
தோல்விகளைச் சொல்லுங்கள் -
அவை என் பலம், தீர்க்கம் பெருக்குகின்றன..


வெற்றியாளர்களை உருவாக்குவது -
காலத்தில் கிடைத்த நல்லுதவி நீராகவும் இருக்கலாம்..
வேகத்தை ஊட்டிய தூண்டுதல் பொறியாகவும் இருக்கலாம்..


இருசாராருக்கும் நன்றி சொல்லியபடி
பயணத்தைத் தொடர்வோரே சாதனை படைப்பார்...


------------------------------

தொலைக்காட்சியில் ஓர் உறவினர் எனக்குறிப்பாய் சொன்னாலே போதுமே..
சித்தப்பா எனக் குறிப்பாய்ச் சொல்வது......?

சிவா.ஜி
23-02-2010, 05:15 AM
ஆமாம் இளசு...ஒரு உறவினர் என்றே சொல்லியிருக்கலாம்....அவருக்கு உணர்த்த அப்படி சொன்னால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் ஒரு உறவினர் என்று சொல்லியிருந்தாலே அவர் உணர்ந்துகொண்டிருப்பார் என்பது இப்போது நீங்கள் சுட்டிக் காட்டியவுடந்தான் தெரிகிறது.

உண்மையிலேயே அக்னியின் இரு பின்னூட்டங்களும் மிக மிக அருமை. அதிலும் அவரது வார்த்தை விளையாட்டு அசத்தல்.

மிக்க நன்றி இளசு.

நேசம்
23-02-2010, 07:28 AM
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் இருந்தால் எந்த ஒரு விசயமும் தடையாக இருக்காது என்பதை உணர்த்தும் நிமிட கதை.பாரட்டுகள் அண்ணா.

அக்னி
23-02-2010, 08:05 AM
இளசு அண்ணா சுட்டிய பின்னர்தான் தெரிகின்றது...

சந்தோஷ் தனது பேட்டியில், சித்தப்பா சண்முகமெனக் குறிப்பிடாமலிருந்தால்,
அவனது பாத்திரம் பூரணத்துவமாயிருந்திருக்கும்.

சித்தப்பா உணர்ந்து கொள்வதற்குச், சம்பவம் போதுமானதுதான்...

சிவா.ஜி
23-02-2010, 08:48 AM
மிக்க நன்றி நேசம். நம்மில் பெரும்பாலோனோர் இப்படிப்பட்டவர்கள் தானே.

சிவா.ஜி
23-02-2010, 09:20 AM
உண்மைதான் அக்னி, இளசு சுட்டிய பிறகுதான் நானே அவதானித்தேன். இனி மாற்றினால் சரியாகாது.

அக்னி
23-02-2010, 10:17 AM
மாற்ற வேண்டாம் சிவா.ஜி...

இதுபோன்ற, ஆழ்ந்து அவதானித்து வரும் பின்னூட்டங்களால்,
படைப்புக்கள் பட்டைதீட்டப்படுகின்றன.

மன்றப்புதியவர்களுக்கு,
மன்றத்தின் தனித்துவத்தைச் சொல்லும் பதிவுத் திரியாக இதுவும் இருக்கட்டும்...

இன்பக்கவி
25-02-2010, 05:17 AM
சிவா நல்ல இருக்கு...
பிறர் உதவியை எதிர் பார்க்காமல் வாழ பழகிக்கணும்..
கிடைக்காத உதவிக்காக துவள கூடாது...
அருமையா சொல்லி இருக்கீங்கள்...
ஒரு உதவி..
எப்படிதான் நல்லா கதை எழுதுறீங்கள்...:confused:

சிவா.ஜி
25-02-2010, 05:20 AM
அதேதான் இன்பக்கவி. உதவி கிடைக்கவில்லையென்றால் துவண்டுவிடக் கூடாது. முயன்று முன்னேற வேண்டும்.

(எல்லாம் பார்த்ததும், படிப்பதும், கேட்டதையும் வைத்துதான் எழுதுகிறேன். நல்லா இருக்கா இல்லையாங்கறது படிக்கிற உங்களைப் போன்ற பெரியவங்கதான் சொல்லனும்....பெரியவங்கன்னு சொல்றது வயசை வெச்சி இல்லை....ஹி...ஹி...)

இன்பக்கவி
25-02-2010, 05:26 AM
அதேதான் இன்பக்கவி. உதவி கிடைக்கவில்லையென்றால் துவண்டுவிடக் கூடாது. முயன்று முன்னேற வேண்டும்.

(எல்லாம் பார்த்ததும், படிப்பதும், கேட்டதையும் வைத்துதான் எழுதுகிறேன். நல்லா இருக்கா இல்லையாங்கறது படிக்கிற உங்களைப் போன்ற பெரியவங்கதான் சொல்லனும்....பெரியவங்கன்னு சொல்றது வயசை வெச்சி இல்லை....ஹி...ஹி...)

கதை எழுதுவதில் கத்துக்குட்டி நான் என்னை போய்ட்டு இப்படி சொல்லிடீங்களே...:traurig001:
இங்க இருக்கும் சிலரின் கதை பக்கமே போக பயம் எனக்கு..:icon_ush:
ரொம்ப நல்லா கதை எழுதுறாங்கள்..
நான் போய்ட்டு எதாச்சும் உளறிவிட்டா என்ன செய்வது என்று சில கதை பக்கமே போவது இல்லை...:lachen001:
சிலரின் அருமையான கதைகளை ரவி அண்ணா சொல்ல கேட்டு இருக்கேன்..
நானும் மூன்று கதை சிந்தித்து ஒன்று எழுதி பாதியில் நிக்குது....:traurig001:
விரைவில் பதியனும்...

சிவா.ஜி
25-02-2010, 06:40 AM
சிந்தனை தோணினதுக்கப்புறம் விடக்கூடாது. பாதியா இருந்தாலும் எழுத ஆரம்பிச்சுடுங்க...எழுதும்போதே தொடர்ந்து எழுதறதுக்கு ஐடியா கிடைச்சிடும். வாழ்த்துகள்.

பா.ராஜேஷ்
26-02-2010, 12:52 PM
உங்கள் கதையை ஆரேனும், அவர் கதையை நீங்களும் மாறி மாறி எழுதுகிறீர்கள் போலும். :D
நல்ல கதை அண்ணா. முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தடைகள் யாவும் தவிடுபோடி என்பதை உங்கள் கதைகள் எடுத்துரைக்கின்றன.

சிவா.ஜி
26-02-2010, 12:55 PM
சரியாகச் சொன்னீர்கள் ராஜேஷ்.

"முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தடைகள் யாவும் தவிடுபோடி"

மிக உண்மை.

மிக்க நன்றி ராஜேஷ்.