PDA

View Full Version : சத்தியம்



கலையரசி
20-02-2010, 12:07 PM
எதிர்பாராமல் அமெரிக்காவிலிருந்து மாமா பன்னீர்செல்வம், தம் குடும்பத்துடன் அவர்கள் வீட்டிற்கு வந்து இறங்கியவுடன், கணேசனுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. அவர்கள் வெளிநாடு சென்ற இந்த பதின்மூன்று வருடங்களில், அவ்விரு குடும்பங்களுக்கிடையே எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை.

அவன் அம்மாவுக்குப் பல வருடங்களாகப் பார்க்காமலிருந்த தம் அண்ணனைப் பார்த்ததில் ஆனந்தக் கண்ணீர் பெருக, அடிக்கடி மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தார்.

"வாங்கண்ணே, நல்லாயிருக்கீங்களாண்ணி? இத்தினி வருஷமா இருக்கோமா, செத்தோமான்னு சாரிச்சு ஒரு கடுதாசி கூடப் போடலே. ஒரு போன் பண்ணலே. இது நம்ம சித்ராவா? நம்பவே முடியலியே? கத்திரிக்காய்க்குக் கால் மொளைச்சது மாதிரி குட்டிப் பொண்ணா இருந்தவ, நெடு நெடுன்னு எப்படி வளர்ந்துட்டா? எனக்கு ரொம்ப சந்தோஷம்ணா. இப்பவாவது உங்களுக்கு எங்க ஞாபகம் வந்துதே"

பரஸ்பர விசாரிப்புகள் முடிந்து சாப்பாடு முடித்து எல்லாரும் சாவகாசமாக கடந்து போன நிகழ்வுகளைப் பற்றியும், இந்தக் கால இடைவெளியில் இழந்து போன உறவுகளைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. என்ன காரணத்திற்காக வந்திருக்கிறோம் என்று ஒருவரும் வாய் திறப்பதாக இல்லை.

சின்ன வயதில் அவனையும் சித்ராவையும் இணைத்து அம்மாவைப் பெற்ற பாட்டி அடிக்கடி கிண்டல் செய்து கொண்டிருப்பார்.

"சித்ரா பொறந்தப்பவே அவ, கணேசனுக்குத் தான்னு நான் முடிவு பண்ணிட்டேன்; அதனால இதுங்க கல்யாணம் வரைக்கும் நான் இருப்பேனோ என்னவோ, ஒம் பொண்ணை அவனுக்குக் கட்டிக் கொடுத்திடு; அப்பத்தான் என் ஆன்மா சாந்தி அடையும்" என்று அம்மாவின் எதிரில் மாமாவிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாராம் பாட்டி.
அம்மா இதை அவன் காதுபடவே அப்பாவிடம் பலமுறை கூறியிருக்கிறார்.

"ஆமாம் இதையே நீ நூறு வாட்டி எங்கிட்ட சொல்லிட்ட. உங்கண்ணன் வெளிநாடு போய் நல்லாச் சம்பாரிச்சு கார் பங்களான்னு வசதியாயிருக்கிறதா சொல்றாங்க. பொண்ணும் மேலே
மேலே படிச்சு ஏதோ பெரிய வேலையில இருக்குதாம். நம்மப் புள்ளை இன்னும் டிகிரியைக் கூட முடிக்காம அரியர்ஸ் வைச்சிக்கிட்டு ஒரு சினிமா பாக்கியில்லாம பார்த்துக்கிட்டு ஊர் சுத்துது. அரியர்ஸை முடிக்கக் கூடாதான்னு கேட்டா, படிச்சு முடிச்சவங்களுக்கெல்லாம் வேலை கிடைச்சிட்டுதான்னு எடக்கு மடக்கா எதிர் கேள்வி கேட்குது. எப்பவோ உங்கம்மாவுக்குச் செஞ்சு கொடுத்த சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு, இவனுக்குப் போயி அவங்க பொண்ணை......போ, போய் உருப்படியா ஏதாவது வேலையிருந்தாப் பாரு" என்று அம்மாவை அடக்கிவிடுவார் அப்பா.

பாட்டி இப்போது உயிரோடு இல்லாவிட்டாலும், அவர்களுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை மாமா மீற மாட்டார் என்று அவனுக்கு அசாத்திய நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் தம் அம்மா மீது மாமாவுக்குக் கொள்ளைப் பிரியம். எனவே கற்பனையில் வாழ்க்கைத் துணையாக சித்ராவை மணம் முடித்து அவளுடன் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்திக்
கொண்டிருந்தான் கணேசன்.. ஆனால் இடையில் அவர்களுடைய தொடர்பு முற்றிலுமாக அறுபட்ட போது, 'சத்தியம் சர்க்கரைப் பொங்கல்' என்று அதைத் தூக்கி உடைப்பில் போட்டு விட்டு, அமெரிக்காவிலேயே மாப்பிள்ளை பார்த்து மாமா தம் பொண்ணுக்குத் திருமணம் செய்து விடுவாரோ என்ற சந்தேகம், அவன் நெஞ்சில் ஒரு முள்ளாக உறுத்திக்
கொண்டிருந்ததென்னவோ உண்மை.

மேலும் அவள் எம்.பி.ஏ முடித்து ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் மேலாண்மை அதிகாரியாக வேலை செய்கிறாள் என்று கேள்விப்பட்டபோது, அந்தச் சந்தேகம் வலுப்பெறவே செய்தது.
அவளுக்கிணையாக படித்து முன்னேற வேண்டும் என்று அவனுக்கும் ஆசைதான். ஆனால் சினிமா பார்ப்பதில் அவனுக்கு இருந்த ஆர்வம், படிப்பில் சுத்தமாகயில்லை.

"நீ என்னப்பா செய்ற?" என்று மாமி கேட்ட போது, அவனுக்கு அவமானமாகத் தான் இருந்தது.

"டிகிரி முடிச்சிட்டு வேலை தேடிக்கிட்டிருக்கான் அண்ணி. இங்கெல்லாம் அமெரிக்கா மாதிரி, படிச்ச பசங்களுக்கு உடனே எங்க வேலை கிடைக்குது?. போன வாரம் தான் நம்மூரு ஜோசியர்கிட்ட இவனோட ஜாதகத்தைப் பார்த்தேன். இப்போ இவனுக்கு ஏழரை நாட்டு சனி புடிச்சி ஆட்டுதாம். அடுத்த வாரத்தோட அது முடிஞ்சுடுதாம்.
அதுக்கப்புறம் இவனுக்கு யோகம் தான் அவரு அடிச்சிச் சொல்றாரு"

நல்ல வேளையாக உண்மை விளம்பியான அப்பா, "கூட்டாளிகளோட சேர்ந்துக்கிட்டு வெட்டியாத் தான் ஊரைச் சுத்திக்கிட்டிருக்கான் இந்த உதவாக்கரை" என்று திருவாய் மலர்வதற்கு முன், அம்மா முந்திக் கொண்டு மானத்தைக் காப்பாற்றி விட்டார்.

"சித்ராவுக்குத் திருமணம் நிச்சயமாயிருக்கு. மாப்பிள்ளையும் அமெரிக்காவில தான் வேலை பார்க்கிறார். கல்யாணப் பத்திரிக்கையை நேர்ல குடுத்துட்டுப் போகத்தான் வந்தோம். நீங்க தான் முன்ன நின்னு என் பொண்ணு கல்யாணத்தை நடத்தி வைக்கணும்" என்று மாமா அப்பாவிடம் சொன்ன போது, அவன் மனம் சுக்கு நூறாக உடைந்து போனது.

"மாப்பிள்ளையும் எம்.பி.ஏ படிச்சு வெளி நாட்டுக் கம்பெனியில லட்ச லட்சமாச் சம்பாதிக்கிறார். நல்ல கலரா முக லட்சணமாக இருக்காரு; ஏகப்பட்ட சொத்துக்கு ஒரே வாரிசு"

தம் மாப்பிள்ளையின் புகழை, மாமி அடுக்கிக் கொண்டே செல்ல, அதற்கு மேல் அங்கு உட்கார்ந்திருக்க விரும்பாமல், விருட்டென்று எழுந்து வெளியில் சென்று தன் நண்பர்களிடம் அடைக்கலம் புகுந்தான் கணேசன்.

"டேய்! உடுடா மச்சி! இந்தப் பொண்ணு இல்லேன்னா, உலகத்துல வேறே பொண்ணே கிடைக்காமயாப் போயிடும்? இந்தப் பொண்ணுகளே இப்படித்தான். நம்மள சுத்தி சுத்தி வருவாளுக. நம்மளை விட பணக்காரனுங்க கிடைச்சதும் எல்லாத்தையும் மறந்துட்டு, "இவ்ளோ நாள் உங்கள நான், கூடப் பொறக்காத அண்ணனாத்தான் நினைச்சேன்"னு சொல்லிட்டு கையில ராக்கியைக் கட்டிட்டு டாட்டா காட்டிட்டு போயிடுவாளுக. நாம தான் தேவதாசு மாதிரி தாடி வளர்த்துக்கிட்டு, அவளுகள மறக்க முடியாம தண்ணியைப் போட்டுக்கிட்டு
லோ லோன்னு தெருவில நாய் மாதிரி அலைஞ்சிக்கிட்டிருப்போம். விட்டுது சனியன்னு தலைமுழுகிட்டு நிம்மதியாயிரு" இது மாலன்.

"டேய்! அவ கல்யாணத்துக்குப் போயி, அவளுக்கு நல்லா உறைக்கிற மாதிரி பாட்டு ஒண்ணு தயார் பண்ணி, பியானோ வாசிச்சிக்கிட்டே எடுத்து உட்டேன்னு வை, மாலையெல்லாத்தையும் தூக்கியெறிஞ்சுட்டு, கதறிக்கிட்டே உன் காலடியிலே வந்து விழுந்துடுவா"

"ஏய் மச்சான்! அவ சின்ன வயசில தலையில வைச்சிருந்த ரோஜாப் பூவோட இதழ் எதையாவது பத்திரமா எடுத்து வைச்சிருப்பியே. அதக் கொண்டு போயி அவக் கிட்ட காட்டினேன்னு வைச்சுக்கோ. அப்படியே நெகிழ்ந்து போயி உன்னைத்தவிர யாரையும் ஏரெடுத்தும் பார்க்க மாட்டேன்னு சொல்லிடுவா"

" டேய் சும்மாயிருங்கடா. எப்பக் கிண்டல் பண்றதுன்னு ஒரு விவஸ்தையே கிடையாது உங்களுக்கு. நீ நம்பிக்கை இழக்காதடா மாமு. எத்தினி சினிமா பார்த்திருக்கோம், கல்யாண வரைக்கும் போய் மாப்பிள்ளை பொண்ணு மாறிப் போறதை? சின்ன வயசிலே ஒம் மேல ரொம்பப் பிரியமா இருந்தாள்னு சொல்றே. ஒரு வேளை அவளைக்
கட்டாயப்படுத்தி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைச்சிருப்பாங்களோன்னு எனக்குச் சந்தேகமாயிருக்கு. எதுக்கும் ஒரு தடவை அவக்கிட்டே பேசிப் பாரு" என்று பிரபு சொன்னபோது, எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தவனுக்கு, இப்போது கொஞ்சம் நம்பிக்கை துளிர்விட்டது.

'அத்தான், அத்தான்' என்று சிறு வயதில் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தவள், அவனை மறந்து விட்டு வேறு ஒருவனை மணக்க எப்படித் துணிவாள்? ஆமாம். கண்டிப்பாக அவளுக்கு இஷ்டமில்லாமல் தான் இந்தக் கல்யாணம் ஏற்பாடு செய்திருப்பார்கள். இது மாமியின் வேலையாகத் தானிருக்கும்.

அவன் வீட்டிற்குத் திரும்பிய போது, வீடு சத்தமின்றி வெறிச்சென்றிருந்தது. எல்லோரும் போய் விட்டார்களோ?
முன்னறையில் அம்மா, அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது.

"நெருங்கிய உறவுல கல்யாணம் பண்ணினா, குழந்தை குறையோட பொறக்குமாம். அப்படியே குறையில்லாமப் பொறந்தாலும், சரியான மூளை வளர்ச்சி இல்லாம ரொம்ப மந்தமாயிருக்குமாம். நம்ம பையனைக் கல்யாணம் பண்ணாததுக்கு என்னென்னவோ காரணம் சொல்றாங்க அண்ணி,"

"ஸ், மெதுவாப் பேசு. அந்தப் பொண்ணு காதுல விழுந்துடப் போகுது."

"அவ இங்கயில்ல. மொட்டை மாடியில உட்கார்ந்துட்டு என்னமோ படிச்சிக்கிட்டுருக்கிறா."

சித்ரா மாடியிலிருப்பதை அறிந்தவன், மெதுவாக ஏறி மாடிக்கு வந்தான்.

அவளை அணுகி தயக்கத்துடன், 'ஹலோ' என்றான்.

"வாங்கத்தான், எப்படியிருக்கீங்க?" படித்துக் கொண்டிருந்த பெரிய புத்தகத்தை மூடி வைத்து விட்டு மிகவும் இயல்பாகப் புன்னகைத்தாள்.

"ம். எனக்கென்ன கேடு?. நல்லாத்தான் இருக்கேன். எங்கே மாமா, மாமியைக் காணோம்?"

"சொந்தக்காரங்க சில பேருக்கு கல்யாணப் பத்திரிக்கை கொடுக்கப்போயிருக்காங்க. இன்னுங் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க."

"உனக்குக் கல்யாணம்னு கேள்விப் பட்டேன். கங்கிராட்ஸ். மாப்பிள்ளை உனக்குப் பழக்கமானவரோ?"

"இல்லையில்ல. இது அப்பா அம்மா ஏற்பாடு செஞ்ச கல்யாணம் தான்"

"இந்தக் கல்யாணத்துல உனக்குப் பரிபூரண சம்மதம் தானே?"

"ஆமாம். ஏன் கேட்கிறீங்க?" (கள்ளி! எதுவுமே தெரியாத மாதிரி எப்படி நடிக்கிறாள்? )

"இல்லை. உன்னை வற்புறுத்திச் சம்மதிக்க வைச்சுட்டாங்களோன்னு கேட்கிறேன்"
(ஆமாம் அத்தான். என்னை எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து நீங்க தான் விடுவிக்கணும். நான் உங்களைத் தான் விரும்பறேன்னு சொல்ல மாட்டாளா?)

"சே சே! அப்படியெல்லாம் இல்லை. நான் ஒத்துக்கிட்ட பிறகு தான் ஏற்பாடு பண்ணினாங்க. கண்டிப்பா நீங்க என் கல்யாணத்துக்கு வரணும். அவர்கிட்ட, இவர் தான் என்னோட சின்ன வயசு கூட்டாளின்னு உங்களை அறிமுகப் படுத்தணும்"

"ஓ! உனக்கு அதெல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கா? அமெரிக்கா போன பிறகு 'எல்லாத்தையும்' மறந்துட்டியோன்னு நினைச்சேன்." ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கிண்டலாகச் சொன்னான்.

"எப்படி மறக்க முடியும்த்தான்? சின்ன வயசுல நெல்லிக்காய் பறிச்சுக் குடுங்கன்னு, உங்களைச் சுத்தி சுத்தி வருவேன். என் தொல்லை தாங்காம ஒரு தடவை நீங்க உச்சிக் கிளையில ஏறி, கிளை முறிஞ்சி கீழே விழுந்து நல்லா அடிபட்டுட்டுது. ஏண்டா மரத்துல ஏறுனேன்னு கேட்டு அத்தை வேற, உங்களை விளாசித் தள்ளினாங்க. எனக்காகத் தான் ஏறினேன்னு கடைசி வரைக்கும் நீங்க சொல்லவேயில்லை. அதெல்லாம் பசுமையா இன்னும் நினைவுலயிருக்கு"

"எல்லாம் ஞாபகம் இருக்குன்னு சொல்றே? அப்புறம் என்னை மறந்துட்டு, வேற எவனையோ கட்டிக்க எப்படி சம்மதிச்சே?" கோபத்தில் அவனையும் அறியாமல் வெளி வந்தன வார்த்தைகள்.

அவனுடைய இந்த நேரடித் தாக்குதலை அவள் சற்றும் எதிர்பார்த்திராதலால் சற்று துணுக்குற்றவள், பிறகு சமாளித்துக் கொண்டு தொடர்ந்தாள்.

"குழந்தை பருவத்தில நமக்குள்ள இருந்தது கள்ளங்கபடமற்ற நட்பு மட்டுமே. அதைக் காதல்னு நீங்க தப்பா அர்த்தம் புரிஞ்சிட்டீங்கன்னா, அது என் தப்பில்லே.பெரியவங்க சில பேர் குழந்தைங்ககிட்ட போயி என்ன பேசணும்னு தெரியாம, என்னைக் கட்டிக்கிறியா, இவனைக் கட்டிக்கிறியான்னு கேட்டு ஏதாவது உளறிக்கிட்டு இருப்பாங்க.
அப்படித்தான் பாட்டியும் நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சு ஏதாவது கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. அதை நான் அப்பவே மறந்துட்டேன்.

சின்ன வயசில நமக்குப் புடிக்கிற அநேக விஷயங்கள் வளர்ந்த பிறகு, நமக்கு அறவே புடிக்காமப் போயிடுது. உதாரணத்துக்கு இந்த நெல்லிக்காய் விஷயத்தையே எடுத்துக்குங்க.
அப்ப எந்தளவுக்குப் பிரியமா நான் நெல்லிக்காய் தின்னேனோ, இப்ப ஒன்னைக் கூட என்னாலத் திங்க முடியலை. அந்தளவுக்கு புளிப்புன்னா இப்ப சுத்தமா எனக்குப் புடிக்கலை.

அப்ப நெல்லிக்காய் பறிச்சுக் கொடுத்ததுக்காக நன்றி பாராட்டி, உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா, அதே மாதிரி நான் குழந்தையாயிருந்தப்ப மாங்காய், இலந்தைப்பழம் பறிச்சுக் கொடுத்து உதவி செஞ்சவங்க, குறைஞ்சது பத்து பேராவது இருப்பாங்க, அவங்க அவ்ளோ பேரையும் நான் திருமணம் செஞ்சுக்கணும்.

தமிழ் சினிமா நிறையப் பார்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். காதல் ஒன்னைத் தவிர உலகத்துல வேற பிரச்சினையே இல்லேங்கிற மாதிரி படம் எடுத்து எடுத்து இளைஞர்களைக் குழப்பி கனவுலகத்திலேயே அவங்களை நடமாட விடறாங்க. நிழல் வேற, நிஜம் வேற. காதல் சோறு போடாது அத்தான். நீங்க முதல்ல உங்க படிப்பை முடிச்சி ஒரு வேலைக்குப் போயி உங்கச் சொந்தக் கால்ல நிற்க.........."

அவள் உபதேசத்தைக் கேட்க பொறுமையில்லாதவன் இடையில் குறுக்கிட்டு கடைசியாகத் தான் பெரிதும் நம்பியிருந்த அந்தப் பிரம்மாஸ்திரத்தை உபயோகித்தான்.

"உன்னை எனக்கே கட்டிக் கொடுக்கறேன்னு பாட்டிக்கிட்ட உங்கப்பா சத்தியம் செஞ்சு கொடுத்திருக்கிறாரே, அது என்னாச்சு?" அப்புறம் செத்துப் போன நம்ம பாட்டியோட ஆன்மா எப்படி சாந்தியடையும்?"

"சத்தியம் செய்யறதுக்கு முன்னாடி அப்பா எங்கிட்ட கேட்டிருக்கணும். சம்பந்தப்பட்ட என்னைக் கேட்காம, அப்பா பாட்டிக்கிட்ட செஞ்சு கொடுத்த சத்தியத்தைப் பத்தி எனக்குக் கவலையில்லை. செத்துப் போனவங்க ஆன்மா சாந்தியடையணும்கிறதுக்காக, உயிரோடு இருக்கிற ஆன்மாக்கள்லாம் நிம்மதியிழந்து அவஸ்தை படணுமா என்ன?"

அவனுக்கு நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போலிருந்தது.

Ravee
20-02-2010, 12:40 PM
கனவுகளுடன் வாழ்க்கை நடத்துபவனுக்கு எட்டிக்காய் ஆகும் அறிவுரைகள்.

சிவா.ஜி
20-02-2010, 03:10 PM
கதை ஆரம்பம் முதல் கடைசிவரை வெகு சரளமாக பயணிக்கிறது. அவரவர் வயதுக்கேற்ற அழகான, யதார்த்தமான உரையாடல்கள்.
(அவஸ்தையை மட்டும் விவஸ்தையா மாற்றிவிட்டால் நல்லது)

சரியான கேள்வியைத்தான் சித்ரா கேட்டிருக்கிறாள். சம்பந்தப்பட்டவரின் சம்மதமில்லாமல்...சத்தியம் செய்து கொடுப்பதை எப்படி ஏற்பது? எதற்கும் உபயோகமில்லாதவன்..எட்டாக்கனிக்கு ஆசைப்படலாமா?

குறைந்தபட்ச தகுதியையாவது வளர்த்துக்கொண்டு கேட்டிருந்தாலாவது சித்ரா யோசித்திருப்பாள்.

சத்தியம், வாக்கு...என சொல்லிவிட்டு அதற்காக வீணாக கச்சைக் கட்டுபவர்கள் சிந்திக்க வேண்டும். அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத்தண்ணீரைக் குடிக்க முடியுமா?

அருமையான கதை. வாழ்த்துகள் கலையரசி அவர்களே.

aren
20-02-2010, 03:20 PM
நல்ல கதை கலையரசி, ஆனால் பாவம் நம்ம ஹீரோவை ஜீரோ ஆக்கிட்டீங்களே.

ஆனா ஒன்னு இதிலிருந்து தெரிகிறது. பெரியவர்கள் நாம் சிறியவர்களாக இருக்கும்பொழுது என்ன சொன்னாலும், நாம் தம் சொந்தக்காலில் நின்றால்தான் நமக்கு மதிப்பு. இது ஒரு நல்ல படிப்பினை.

இன்னும் எழுதுங்கள்.

செல்வா
20-02-2010, 08:41 PM
பழகிய மொழியில்
அழகிய கதை.....

நிஜமாகவே நெற்றிப் பொட்டில் அறையும் வசனங்கள் ...

நல்லா எழுதுறீங்க...
நிறைய எழுதுங்க...

வாழ்த்துக்கள்...!

ஜனகன்
20-02-2010, 09:41 PM
மிக இயல்பான வசனங்களுடன்,அருமையான கதை

பாவம் கணேசன், இப்படி ஏமார்ந்து விட்டார்.நானும் கதையுடன் ஒன்றி ஏமார்ந்து விட்ட மாதிரி ஒரு பிரமை.

இன்னும் எழுதுங்கள் கலையரசி,வாழ்த்துகின்றேன்

குணமதி
21-02-2010, 12:23 AM
நடைமுறையை வைத்து இயல்பாக எழுதியிருக்கிறீர்கள்.

உண்மை நிலைகளைப் புரிந்து கொள்ளாமல் கனவு காண்பவர்களுக்குத் தெளிவு தரும் கருத்து.

சிறப்பு.

கீதம்
21-02-2010, 10:36 PM
யதார்த்தக் கருத்துகளுடன் சரளமாய்ப் பயணிக்கும் மணியான கதை. நல்லதொரு சிந்தனைக்கு பாராட்டுகள்.

இப்படிதான் பலபேர் இறக்கும் தருவாயில் சத்தியம் செய்யச்சொல்லி வற்புறுத்திப் பெறுவார்கள். அந்நேரச் சத்தியம் எல்லாம் மரணத்தின் வாயிலில் இருப்பவர்களை மனநிறைவுடன் வழியனுப்புவதற்கான ஏற்பாடேயன்றி அதையே உண்மையென்று எடுத்துக்கொள்ளக்கூடாது. கோர்ட்டில் பொய்ச்சத்தியம் செய்து மற்றவர்களின் வாழ்வை வீணடிப்பதைவிடவும் இதுபோன்ற பொய்ச்சத்தியங்கள் செய்து பிறரை வாழவைப்பது எவ்வளவோ மேலானது.

பாரதி
22-02-2010, 12:33 AM
செத்துப் போனவங்க ஆன்மா சாந்தியடையணும்கிறதுக்காக, உயிரோடு இருக்கிற ஆன்மாக்கள்லாம் நிம்மதியிழந்து அவஸ்தை படணுமா என்ன?

இந்த வரியின் வீரியம் கணேசனுக்கு மட்டுமில்லை; அனைவருக்கும் நன்றாகவே புரிகிறது.

நடைமுறை வாழ்வில் தெளிவாக இருக்க வலியுறுத்தும் நல்ல கதையை தந்தமைக்கு பாராட்டு.

கலையரசி
22-02-2010, 12:42 PM
கனவுகளுடன் வாழ்க்கை நடத்துபவனுக்கு எட்டிக்காய் ஆகும் அறிவுரைகள்.

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ரவி அவர்களே!

கலையரசி
22-02-2010, 12:44 PM
கதை ஆரம்பம் முதல் கடைசிவரை வெகு சரளமாக பயணிக்கிறது. அவரவர் வயதுக்கேற்ற அழகான, யதார்த்தமான உரையாடல்கள்.
(அவஸ்தையை மட்டும் விவஸ்தையா மாற்றிவிட்டால் நல்லது)

சரியான கேள்வியைத்தான் சித்ரா கேட்டிருக்கிறாள். சம்பந்தப்பட்டவரின் சம்மதமில்லாமல்...சத்தியம் செய்து கொடுப்பதை எப்படி ஏற்பது? எதற்கும் உபயோகமில்லாதவன்..எட்டாக்கனிக்கு ஆசைப்படலாமா?

குறைந்தபட்ச தகுதியையாவது வளர்த்துக்கொண்டு கேட்டிருந்தாலாவது சித்ரா யோசித்திருப்பாள்.

சத்தியம், வாக்கு...என சொல்லிவிட்டு அதற்காக வீணாக கச்சைக் கட்டுபவர்கள் சிந்திக்க வேண்டும். அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத்தண்ணீரைக் குடிக்க முடியுமா?

அருமையான கதை. வாழ்த்துகள் கலையரசி அவர்களே.
அவஸ்தையை விவஸ்தையாக மாற்றி விட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
ஆழமான பின்னுட்டத்திற்கு நன்றி சிவா.ஜி அவர்களே!

கலையரசி
22-02-2010, 12:46 PM
நல்ல கதை கலையரசி, ஆனால் பாவம் நம்ம ஹீரோவை ஜீரோ ஆக்கிட்டீங்களே.

ஆனா ஒன்னு இதிலிருந்து தெரிகிறது. பெரியவர்கள் நாம் சிறியவர்களாக இருக்கும்பொழுது என்ன சொன்னாலும், நாம் தம் சொந்தக்காலில் நின்றால்தான் நமக்கு மதிப்பு. இது ஒரு நல்ல படிப்பினை.

இன்னும் எழுதுங்கள்.

ஆமாம் ஆரென் அவர்களே. படிக்க வேண்டிய வயதில் படித்து, திறமைகளை வளர்த்துக் கொண்டு நம் சொந்தக்காலில் நிற்கும் போது தான்
உறவுகள் நம்மை மதிக்கும்; கொண்டாடும்.
பின்னூட்டத்திற்கு நன்றி.

கலையரசி
22-02-2010, 12:48 PM
பழகிய மொழியில்
அழகிய கதை.....

நிஜமாகவே நெற்றிப் பொட்டில் அறையும் வசனங்கள் ...

நல்லா எழுதுறீங்க...
நிறைய எழுதுங்க...

வாழ்த்துக்கள்...!

உற்சாகம் தரும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் செல்வா அவர்களே!

கலையரசி
22-02-2010, 12:50 PM
மிக இயல்பான வசனங்களுடன்,அருமையான கதை

பாவம் கணேசன், இப்படி ஏமார்ந்து விட்டார்.நானும் கதையுடன் ஒன்றி ஏமார்ந்து விட்ட மாதிரி ஒரு பிரமை.

இன்னும் எழுதுங்கள் கலையரசி,வாழ்த்துகின்றேன்

கதையுடன் ஒன்றி விட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றி. உங்கள் வாழ்த்து
மேலும் எழுத எனக்கு உற்சாகம் அளிக்கிறது.
நன்றி ஜனகன் அவர்களே!

கலையரசி
22-02-2010, 12:52 PM
நடைமுறையை வைத்து இயல்பாக எழுதியிருக்கிறீர்கள்.

உண்மை நிலைகளைப் புரிந்து கொள்ளாமல் கனவு காண்பவர்களுக்குத் தெளிவு தரும் கருத்து.

சிறப்பு.

ஆமாம் குணமதி அவர்களே! வெறுமனே கனவு கண்டால் மட்டும் போதாது; கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்கவும் வேண்டும்.
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி குணமதி அவர்களே!

கலையரசி
22-02-2010, 12:54 PM
யதார்த்தக் கருத்துகளுடன் சரளமாய்ப் பயணிக்கும் மணியான கதை. நல்லதொரு சிந்தனைக்கு பாராட்டுகள்.

இப்படிதான் பலபேர் இறக்கும் தருவாயில் சத்தியம் செய்யச்சொல்லி வற்புறுத்திப் பெறுவார்கள். அந்நேரச் சத்தியம் எல்லாம் மரணத்தின் வாயிலில் இருப்பவர்களை மனநிறைவுடன் வழியனுப்புவதற்கான ஏற்பாடேயன்றி அதையே உண்மையென்று எடுத்துக்கொள்ளக்கூடாது. கோர்ட்டில் பொய்ச்சத்தியம் செய்து மற்றவர்களின் வாழ்வை வீணடிப்பதைவிடவும் இதுபோன்ற பொய்ச்சத்தியங்கள் செய்து பிறரை வாழவைப்பது எவ்வளவோ மேலானது.

வழக்கம் போல் அருமையான கருத்துக்களுடன் ஆழமான பின்னூட்டம் எழுதியதற்கு நன்றி கீதம்!

கலையரசி
22-02-2010, 12:56 PM
இந்த வரியின் வீரியம் கணேசனுக்கு மட்டுமில்லை; அனைவருக்கும் நன்றாகவே புரிகிறது.

நடைமுறை வாழ்வில் தெளிவாக இருக்க வலியுறுத்தும் நல்ல கதையை தந்தமைக்கு பாராட்டு.

பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கிறேன் பாரதி அவர்களே!

balanagesh
22-02-2010, 01:32 PM
கனவோடு வாழனும்... அனால் கனவிலேயே வாழ்ந்திடக் கூடாது என்று சொல்லும் அழகான கதை...

'செத்துப் போனவங்க ஆன்மா சாந்தியடையணும்கிறதுக்காக, உயிரோடு இருக்கிற ஆன்மாக்கள்லாம் நிம்மதியிழந்து அவஸ்தை படணுமா என்ன? ' - நச் டயலாக் போங்க...

கலையரசி
22-02-2010, 02:05 PM
"கனவோடு வாழனும்... ஆனால் கனவிலேயே வாழ்ந்திடக் கூடாது என்று சொல்லும் அழகான கதை..."


அழகான கருத்துடன் பின்னூட்டம் எழுதிய பாலநாகேஷ் அவர்களுக்கு நன்றி.

அக்னி
22-02-2010, 03:10 PM
உறவுகள் பிரிந்திடக்கூடாது என்பதற்காக,
உணர்வுகளைக் கொன்று வாழ்வதுதான் சத்தியமா...

உறவுகளைப் பேணவேண்டும் என்ற நோக்கம் நல்லதுதான்.
அதற்காகப்,
பிடிக்காத வாழ்வைப் பொய்யாக வாழ்வது எப்படிச் சத்தியமாகும்...

இன்னுமொரு சமுதாய விழிப்புணர்வுக் கதை...

அறிந்து வாங்கப்படும்
சத்தியங்கள்..,
அறியாமற் கொடுக்கின்றன
சாபங்களை...

எமது வாழ்க்கை முடியும் நிலையில்,
அடுத்தவர் வாழ்க்கையை முடிவுசெய்யும் தவறுகள்,
இனியும் தொடராதிருக்கட்டும்...

பாராட்டுக்கள் கலையரசி அவர்களுக்கு...

இளசு
22-02-2010, 06:26 PM
நம் மன்ற நண்பர்களின் பாராட்டுக்கருத்துகளை வழிமொழிகிறேன்.


குறிப்பாய் கீதம், பாரதி கருத்துகள் - நான் சொல்லவந்ததை முன்னமே சொல்லி நிற்கின்றன.


பாராட்டுகள் கலையரசி அவர்களே!

கலையரசி
23-02-2010, 12:09 PM
[.

இன்னுமொரு சமுதாய விழிப்புணர்வுக் கதை...

அறிந்து வாங்கப்படும்
சத்தியங்கள்..,
அறியாமற் கொடுக்கின்றன
சாபங்களை...

எமது வாழ்க்கை முடியும் நிலையில்,
அடுத்தவர் வாழ்க்கையை முடிவுசெய்யும் தவறுகள்,
இனியும் தொடராதிருக்கட்டும்...

பாராட்டுக்கள் கலையரசி அவர்களுக்கு...[/QUOTE]

அழகான கவிதை மூலம் பாராட்டுத் தெரிவித்த அக்னி அவர்களுக்கு நன்றி.

கலையரசி
23-02-2010, 12:13 PM
குறிப்பாய் கீதம், பாரதி கருத்துகள் - நான் சொல்லவந்ததை முன்னமே சொல்லி நிற்கின்றன.


பாராட்டுகள் கலையரசி அவர்களே![/QUOTE]

பாராட்டுக்கு நன்றி இளசு அவர்களே!

இன்பக்கவி
25-02-2010, 04:11 AM
நன்றாக இருக்கு உங்கள் கதை...
ம்ம்ம் உழைப்பால் முடியாதது என்ன இருக்கு..
உழைப்பு தானே உயர்வுக்கு வெற்றி :icon_b:

கலையரசி
25-02-2010, 12:17 PM
நன்றாக இருக்கு உங்கள் கதை...
ம்ம்ம் உழைப்பால் முடியாதது என்ன இருக்கு..
உழைப்பு தானே உயர்வுக்கு வெற்றி :icon_b:

பின்னூட்டம் எழுதி ஊக்கப்படுத்திய இன்பக்கவி அவர்களுக்கு நன்றி.

பா.ராஜேஷ்
26-02-2010, 11:47 AM
நல்ல சாட்டையடி. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்.

கலையரசி
26-02-2010, 12:36 PM
நல்ல சாட்டையடி. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்.

பாராட்டுக்கு நன்றி ராஜேஷ் அவர்களே!