PDA

View Full Version : காதலர்தினச் சிறப்புக்கவிதைமதுரகன்
14-02-2010, 08:15 AM
நண்பர்களே எனது காதலர்தினச் சிறப்புக்கவிதையை என் வலைப்பூவில் பதிவிட்டுள்ளேன் (தமிழ் மன்றத்தில் இல்லாத நண்பர்களும் பார்க்க வசதியாய்). அதனைப் பார்த்து கருத்திட்டால் மகிழ்ச்சியடைவேன்.
இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்
http://saaralhal.blogspot.com/2010/02/blog-post_13.html

நன்றி

இளசு
17-02-2010, 07:53 PM
பாராட்டுகள் மதுரகன்.

உங்கள் கவிதையை இங்கும் முழுதாய்ப் பதிக்க வேண்டுகிறேன்.


பின்னர் முழுவிமர்சனம் அளிப்பேன். நன்றி..

மதுரகன்
20-02-2010, 01:25 PM
- "இளசு அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இங்கேயே கவிதையை தருகிறேன் ஆனால் படங்களை இணைக்க முடியவில்லை " -

காலங்களால் பிணைப்புகளால் ஆழத்தினால் நீண்டு கிடக்கின்ற காதலுக்கான என்னுடைய நீண்ட ஒரு காதல் சுவடு.....


நீயும் நானும் எமக்குள்ளும்

அடுத்தடுத்த மரங்களில் மரங்களில் மழைக்காக ஒதுங்கி நின்று
முகம் பார்த்துப் புன்னகைக்கும் விழிகளில் ஆரம்பித்து
கடற்கரையோர ஒற்றைக்குடைக்குள் முடங்கிப்போகாத
எமது காதல்.........

மழைக்கால மேகம் மறைத்த நட்சத்திரங்களுக்குள்
மின்னிக்கொண்டிருந்த உன் புன்னகை,
சாலையோர மின் விளக்குகளாய் என்னைத்
தொடர்ந்து கொண்டிருக்க...

வெட்கத்தை வார்த்தைகளால் கூட வெளிப்படுத்த
முடியும் என்று எனக்கு உணர்த்திச்சென்ற
உரையாடல்கள்

இரவுகளில் விழித்துக்கொண்டும் ஒருவரை ஒருவர்
நினைத்துக்கொண்டும், இடையிடையே இருமிக்கொண்டு, தலையணைக்குள்ளிருந்த புகைப்படத்தில் முகம் தடவி
இருட்டினுள் இதழ் பதித்து,
அதிகாலை அழைப்பெடுத்து வாய்திறக்காமலே துண்டித்து
அருகிலே இருப்பதுபோல் அடிக்கடி பேசிக்கொண்டும்
பாவனை செய்து கொண்டும், சராசரியை விட
அதிகமாகவே கிடைக்கிறது உன் அன்பு எனக்கு....

மீண்டுமொருமுறை உன்னைச் சந்தித்தபோது
உன் கண்களைப் பார்த்தேன், இன்னும் இதுவரைக்கும்
கையாலாகாத என் மீது உன் நம்பிக்கை தொடர்கிறதா என...

படபடவென அடித்துக்கொள்ளும் இமைகளுக்கு நடுவில்
உருண்டு கொண்டிருக்கும் உன் கருவிழிகள் அறியாமலே
என் கைகளைப் பற்றிக்கொள்வாய் இன்னமும் காத்திருப்பேன் என

விடைபெற்றுக்கொள்ளும் நேரங்களில் தரையைப் பார்த்துக்கொள்வாய்
நாடியைப் பற்றி தலையை மெல்ல உயர்த்தும்போது
அப்போது பெய்த மழையில் பூத்த பூப்போல அழுகையில் நனைந்து கொண்டிருக்கும் கன்னங்களிலும் புன்னகை பூக்கும்...

மாறுபட்ட ஒவ்வொரு சந்திப்புக்களிலும் பரிமாற்றங்களிலும்
உனக்கும் எனக்கும் இடைப்பட்ட அந்த
ஐந்தடி இடைவெளியிலோ அன்றில் சற்றே நெருக்கமான பொழுதுகளில்
கைகளைப் பற்றவும் தோள் சாயவும் உனக்கு கிடைத்த
ஐந்து நொடி இடைவெளியிலும் துடித்துக் கொண்டிருந்தது
எமது இதயங்களின் காதல்.......

விலகிச்செல்லும் போது நீ சிந்திச்சென்ற கண்ணீர்த்துளிகளும்
நான் வெளியேற்றிச் சென்ற சூடான மூச்சுக்காற்றும்
சிதறிச்சென்ற தூரத்தின் ஐம்பது மடங்கு
நமது காதலின் ஆழம்.....

வருடங்களைக்கடந்து போராடும் என் வயதுகளின் நிறைவிற்குள் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் உன்னிடம் விரைந்து வருவேன்
மொட்டொன்றை நெகிழ்த்த வரும் தென்றலைப்போல...

என் ஆயுளின் அந்தி வரை இப்படியே, சிலவேளை
நரைத்துப்போன சுருங்கிப்போன உடலுடன்
காத்துக்கொண்டிருப்பேன் அதே காதலுடன்....

எனக்கும் ஆசைதான் மரணித்த பின்பும் உனக்காக
விழித்திருக்கும் கண்களை பூட்டிவைக்கவாவது நீ வரவேண்டும் அருகில்....

இனி நீ, உனது பக்கங்கள்.......

இலைகளை உதிர்த்துக் கொண்டிருக்கும் ஓர்
இலையுதிர்கால மரம்போல,
என் வயதுகள் இளமையை வருடங்களாக உதிர்ந்துகொண்டிருந்தாலும்
காத்துக்கொண்டிருப்பேன் என் கண்ணீர்த்துளிகளான காதலோடு,
உன் மடியில் தலை வைத்து ஒரு கணம் அழுதுகொள்ள....

பூக்களைப் பற்றியோ கவிதையைப் பற்றியோ
பேசிக்கொள்ளும்போது நாவிலிருந்து தட்டுத்தடுமாறி
உன் பெயரும் உதித்துவிடுகின்றது.
தனித்திருக்கும் இரவுகளில் சுவாசிக்கும் தருணங்களில்
நீ சுவாசமாக நுழைந்து மீள்கிறாய், கண்ணீராக ததும்பிக்கொள்கிறாய்

உனக்காக நான் என்று இல்லாது,
உனக்காக மட்டும்தான் நான் என்று நீ
கூறிச்சென்ற வார்த்தைகளும், ஓரிரு ஸ்பரிசங்களும்,
உன் கையெழுத்துப் பதித்த தாள்களும், புகைப்படங்களும்
போதும் என் வாழ்நாளைத் தீர்த்துக்கொள்ள....

ஆனாலும் ஒரு ஆசைதான் உடலியக்கங்கள் குன்றிப்போன
பொழுதுகளில் நீ அருகிருந்து படிக்கும் கவிதைகளை
கேட்டுக்கொண்டே நான் கண் மூட வேண்டும் என....

..............................................................................................................................................
இன்னமும் எத்தனை நாட்களுக்கு நீடித்திருக்கப்போகிறது எமது உறவு,
இதுவரை இந்தத்தருணம் வரை இந்தக்காதலர்தினம் வரைக்கும்
தப்பிப் பிழைத்துவிட்டிருக்கின்றது எமது காதல்.....

காதலர்க்கு,
மாசி மாதம் முழுவதும் உங்களுக்காக மலர்ந்திருக்கின்றது, எங்கள் புன்னகைகளைத் தவிர
அடுத்த வருடமாவது மலர்ந்துவிடும்
உங்களிடம் பூஞ்செடியொன்றை நாட்டிக்கொள்ளுங்கள் எங்களுக்காக....
அன்புடன்,
மதுரகன்