PDA

View Full Version : செவ்வாய் எதற்கடா?



lenram80
11-02-2010, 02:54 PM
ஒரு செவ்வாய்யன்று
அப்பா கொண்டு வந்த தென்னங்கன்று!
ஆசையாய் நட்டு
தினம் தண்ணீர் விட்டு
நிதம் என் கை தொட்டு
மளமளவென என்னைப் போலவே
அதுவும் வளர்ந்தது என் கண் பட்டு!!

நான் பூப்பெய்த, அது பூ பெய்தது!

வருடங்கள் கடந்தது!
அது மட்டும் வளர்ந்தது!

"அம்மா...தண்ணீர் ஊற்றவா கன்றுக்கு?"
"கன்று இல்லடி. மரம்"

ஆடினோம் இருவரும் அன்று!
இப்போது அசைகிறோம் தனியாய் நின்று!
பூத்தோம் இருவரும் அன்று!
காய்த்தது அது மட்டும் நன்று!

அம்மா போகாத கோயில் இல்லை!
அப்பா செய்யாத பூசை இல்லை!

மரமாய் பிறந்திருக்கலாம்!
இப்படி மங்கையாய்
செவ்வாய் தோஷத்தோடு பிறந்ததற்கு!

இந்த முட்டாள் உலகத்திடம் கேட்க
ஒரே ஒரு கேள்வி என்னிடம் இருக்கடா!
நாற்றைப் பறித்து நடவு செய்ய
செவ்வாய் பார்ப்பது எதற்கடா?

ஜனகன்
11-02-2010, 05:37 PM
நல்ல கேள்வி லெனின்.பெண்ணாய் பிறந்தாலே சாத்திரம் சம்பிரதாயம் என்று பார்ப்பார்கள்.
குறிகிய வரிகளில் உணர்வை தொட்டு சென்ற கவிதை வரிகள் மேலும் எழுதுங்கள்,பாராட்டுகின்றேன்.

lenram80
16-02-2010, 01:12 PM
நன்றி ஜனகன் அவர்களே!!!

எப்போது அந்த விழிப்புணர்ச்சி வரும்? அறிவியல் பெருகும் அதே நேரத்தில் இப்படி அவலங்களும் பெருகுகிறதே!! வெறும் ஒன்பது கிரகங்கள் மட்டுமா நம் வாழ்க்கையைத் தீர்மாணிக்கும்? ஏன் பால் வளித் திறலின் மற்ற மண்டலங்கள் பாதிக்காதா?? மற்ற கெலக்சிகள் பாதிக்காதா?

கொடுமை...
என்று அழியும் இந்த மடமையின் மோகம்?
என்று பெய்யும் அறிவு மேகம்?

rajarajacholan
16-02-2010, 01:37 PM
என்னோட கஸினுக்கு செவ்வாய்தான், ஆனா நல்லவேலை உடனே மாப்பில்லை கிடைத்துவிட்டது. ஆனால் பெண் கிடைக்காமல் இருக்கும் ஆண்கள் எத்தனையோ பேர் இருக்கிறாங்க. அவங்களையு கொஞ்சம் பாடலாமே

சிவா.ஜி
16-02-2010, 01:51 PM
என்னோட கஸினுக்கு செவ்வாய்தான், ஆனா நல்லவேலை உடனே மாப்பில்லை கிடைத்துவிட்டது. ஆனால் பெண் கிடைக்காமல் இருக்கும் ஆண்கள் எத்தனையோ பேர் இருக்கிறாங்க. அவங்களையு கொஞ்சம் பாடலாமே

"நல்ல வேலை' இருந்துமா "மாப்பில்லை" ன்னு சொல்லிட்டாங்க?

சிவா.ஜி
16-02-2010, 01:58 PM
சம்மட்டியடிக் கேள்வி லெனின். செவ்வாயாவது புதனாவது....நாற்றைப் பறித்து நடவு செய்ய, நல்ல மண் போதாதா?

நவ கிரகம் என்று சொன்னவர்களே இப்போது ஒரு கிரகம் இல்லை என்று ஜகா வாங்கிவிட்டார்கள். புளூட்டோ, கிரகம் என்று சொல்லுமளவுக்கு பெரிய கிரகம் இல்லையாம்.

அப்ப அதுக்கு சமமா நம்ம சாஸ்திரத்துல இருக்கிற 'கெரகத்த' கழட்டி விட்டுட்டாங்கன்னா...அஷ்ட கிரகமா....அப்ப இதுவரைக்கும் போட்ட கணக்கெல்லாம் நம்ம கஷ்ட காலமா?

நல்லா கேட்டிருக்கீங்க லெனின் வாழ்த்துகள்.

lenram80
16-02-2010, 02:36 PM
நான் சொல்ல வந்தது ஆண்/பெண் பேதமில்லாமல் பாதிக்கும் செவ்வாய் பற்றி தான். இருந்தாலும் அதிகம் பாதிக்கப் படுவது பெண் என்பதே என் கருத்து.

பதிவிட்டமைக்கு நன்றி ராஜராஜன் & சிவாஜி.

நம்ம நவக் கிரகங்களில் சந்திரன், சூரியன் எல்லாம் வருகிறது. ஒருவேளை நம் பழைய சோதிட ஜாதக ஆள்கள் பூமியை மையமாகக் கொண்டு மற்ற எல்லாம் (சூரியன் உள்பட) சுற்றுகிறது என்று நினைத்தார்களோ??

இளசு
16-02-2010, 08:59 PM
நம்ம நவக் கிரகங்களில் சந்திரன், சூரியன் எல்லாம் வருகிறது. ஒருவேளை நம் பழைய சோதிட ஜாதக ஆள்கள் பூமியை மையமாகக் கொண்டு மற்ற எல்லாம் (சூரியன் உள்பட) சுற்றுகிறது என்று நினைத்தார்களோ??

அன்பு லெனின்


பெரியம்மை தடுப்பூசி வரும்வரை
மருத்துவம் இல்லா வைரஸ் - அம்மன் ஆனது!


அதே போல்தான் இந்த நவக்கிரகம்...


சந்திரன் ( பூமிக்கு கைப்புள்ள..) ஆணாம்..
27 நட்சத்திரங்கள் ( சூரியனுக்கு பெரியண்ணாக்கள்) அதன் மனைவிகளாம்...


எறும்புக்கு 27 யானைகள் மனைவியரா?


இமயம் உச்சி, எல்லை என்றால் அதுதான் கைலாயம்..

எகிப்து அப்போது தெரியாததால், இலங்கையோடு நம் அவுட்டோர் எல்லை முடிந்துவிட்டது..


அக்கால முன்னோரைக் குறை சொல்லவில்லை.


அவர்கள் அளவில்லா அறிவாற்றலோடு வானவியலை ஆராய்ந்து
அவர்களுக்கு எட்டியவரை எழுதி வைத்தார்கள்...


(அழுத்தமான) நம்பிக்கையாளர்கள் அந்த எழுத்தோடு அங்கேயே நிற்கிறார்கள்.. வானவியலை மானிடர் வாழ்வியலோடு ஏற்றி பிடிவாதப் பொருத்தம் சேர்க்கிறார்கள்.


மதம், சாதி போல இதுவும் உணர்வுமயமான ஒட்டுதல் என்பதால்
மாற்றுக்கருத்தால் மனம் நோகிறார்கள்..


இக்கவிதை நாயகி போல் எத்தனை பேரை இச்சாத்திரம் நோகடிக்கிறது என்பதைக் காண மறுக்கிறார்கள்..


எத்தனை சம்மட்டிகள் அடித்தாலும்
இக்குட்டிச்சுவர் சாய இன்னும் நாளாகும்..

lenram80
16-02-2010, 11:42 PM
நன்றி இளசு அவர்களே...

முதலில் உங்களின் பதிவு கிடைத்தமைக்கு எனக்கு மிக்க மகிழ்ச்சி.

நீங்கள் சொன்னது போல இந்தக் குட்டி சுவர் சாயுமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி தான். எத்தனையோ ஆண்டுகள் ஆனாலும் அதுவும் வாழும் என்பது தான் மிகப் பெரிய சோகம்.

குணமதி
17-02-2010, 01:43 AM
படித்தவர்கள் அறிவியலாளர்களே இவற்றை நம்பிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்!

என்றைக்குத் தீரும் இந்த அவலம்?

சிவா.ஜி
17-02-2010, 05:04 AM
மிக மிக அருமையான பின்னூட்டம் இளசு. இந்தக் குட்டிச்சுவர்கள் சாயும்....பார்வைகள் விசாலப்படும்போது...அதுவும் நடக்கும்.

அக்னி
17-02-2010, 06:14 PM
உலகில்,
மற்ற இனத்தவரிடம்
கேட்டுப்பார்க்கவேண்டும்..,
எப்படிச் செவ்வாய்த்தோஷத்தைத்
தவிர்க்கின்றார்கள் என்று...

செவ்வாய் தோஷமும், சனியின் பார்வையும் அடங்கலாக,
நவக்கிரகத் துன்பத் தொல்லைகள் வரும்காலங்களில் இல்லாமற் போய்விடும்.

எப்படித் தெரியுமா...

அதுதான் இன்றைய (சில) ஜோதிடர்கள் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்து,
(சில) மருத்துவர்களின் உதவியோடு நடைமுறைப்படுத்தும்
கணித்த சாஸ்திரம்.

பிரசவ, மரண நேரங்கள்
கணிப்பிற்கு அப்பாற்பட்டவை.

மருத்துவ உதவியோடு ஓரளவுக்குக் கணிகக்ப்பட்ட பிரசவநேரம்,
ஜோதிட உதவியோடு உறுதிப்படுத்தப்படும் பரிதாபம்...

பிள்ளை
பெற்றெடுத்த காலம் போய்
அறுத்தெடுக்கும் காலம்
வந்தேவிட்டது.

நல்ல நாள், நடசத்திரம் பார்த்துப்
பிரசவ அறுப்புக்கு
நாள் குறித்துக்கொள்ளூம்
இந்தக் கணித்த சாஸ்திரம்
நம்மிடமிருந்து தோஷங்களைத்
தகர்த்தெறிந்ததா என்றால்,
அதுவுமில்லை...

தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்கள் தவிர,
மற்றைய சந்தர்ப்பங்களில் இவ்வறுப்பைத் தவிர்த்துக்கொள்வோமே.

தோஷங்கள் பலவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்.
ஆனால் அவை,
நம் சந்தோஷங்களை மட்டும் குலைத்துப்பார்க்க வேண்டாமே.

செவ்வாய்க்கிரகத்தில்
மனிதன் வாழ முடியுமா
என ஆராய்கின்றது உலகம்...
அதற்குள்,
செவ்வாய்த் தோஷம் காட்டி
வாழ்வைப் பறிக்கின்றது
நம் சமுதாயம்...

நம் சமுதாய மூடங்களிலொன்றை, ஆதங்க உணர்வினால் எரியூட்டும் கவிதை...
லெனின் அவர்களுக்குப் பாராட்டுக்கள் பல...

இளசு அண்ணாவின் பின்னூட்டம் போல,
ஆயிரம் பின்னூட்டங்கள் பார்த்தாலும்,
இம்மூடநம்பிக்கையாளர்கள் திருந்துவார்களா என்பது சந்தேகம்தான்...