PDA

View Full Version : நிச்சயமாக உனதென்றே சொல்



M.Rishan Shareef
09-02-2010, 07:14 AM
நிச்சயமாக உனதென்றே சொல் (http://mrishanshareef.blogspot.com/2009/12/blog-post_10.html)

உன் வறண்ட தொண்டைக்குழிக்கு
தண்ணீரை எடுத்துச் செல்கையில்
ஈரலித்துக்கொள்கிறது
பின்னும்
இரையும் வயிற்றுக்கென நீ
உள்ளே தள்ளிடும்
எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கிறது
எதையும் தனக்கென வைத்துக்கொள்ளாமல்
தானும் உபயோகித்துக்கொண்டு
முழுதாக உனக்கே தருவதென்பது
ஆச்சரியம் தானென்ன

எல்லோரையும் தூற்றியபடியும்
எச்சிலில் குளித்தபடியும்
தினமொரு ஆளைத்தேடி
உன் கண்களால் செவிகளால் வார்த்தைகளால்
அலையுமது
ரோசா வண்ணத்திலல்லது இளஞ்சிவப்பில்
மிகவும் திமிர்பிடித்துக்
கொழுத்துப் போய்க்கிடக்கிறது
அதற்கு மெல்லவென நான் சிக்கியபொழுதில்
மேலண்ணத்துக்கும் கீழண்ணத்துக்குமிடையிலதனைத்
துடிதுடிக்கவைத்து
கட்டற்ற பொய்களை
அவதூறுகளை வசைமொழிகளை
வெளியெங்கும் இறைத்தது
தேளுக்கில்லை
அரவத்துடையது மிகவும்
மெல்லியது, பிளந்தது, கூரியது
இரண்டெனவும் கூறலாமெனினும்
அதனைப் போன்றதல்ல உன்னுடையது

தீண்டப்பட்ட எல்லா மனங்களையும்
கொல்லும்
கொடிய விஷத்தினைக் கக்கியபடி
வழியெங்கும் தொடரும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வல்லினம் - மலேசிய கலை இலக்கிய இதழ் -10, அக்டோபர் 2009
# தமிழ் எழுத்தாளர்கள்
# தினகரன் வாரமஞ்சரி (27.12.2009)
# திண்ணை

சுகந்தப்ரீதன்
09-02-2010, 08:11 AM
யாகாவராயினும் நாகாக்க.... இன்னும் ஆழமாய் சொல்லவேண்டுமென்றால் மனம்காக்க.. எனலாம்..!!

நாக்கு ஒரு கருவி.. அதை உபயோகிப்பது மனிதனின் மனமே... அதனால்தான் அது அடுத்தவரின் நாக்கை தாக்காமல் மனதை தாக்குகிறது..!!ஆகையால் மனதை பேணுவதன் மூலம் மட்டுமே மற்றவரின் நலம் காக்கப்படும்..!!

பாராட்டுக்கள் ரிஷான்..!!

ஆர்.ஈஸ்வரன்
09-02-2010, 08:38 AM
பாராட்டுக்கள்

அக்னி
09-02-2010, 11:05 AM
ஈரத்திற்குள்ளிருந்து எரிதழல்கள்...

ஈரமாயிருப்பதால்
உனக்குச் சுடவில்லை போலும்.

கருகிப்போகும் மனங்களை
ஒரு தடவை சுவைத்துப்பார்...
உனக்குத் தெரிந்திவிடும்
உன் கசப்பு...

சுகந்தப்ரீதன் சொல்லியதுபோல்,
விஷத்தைத் துப்ப வைப்பதும், பாசத்தைச் சொல்ல வைப்பதும்
மனம்தான்...

சுரப்பது எப்போதும் பாசமாய் மட்டும் இருக்கட்டும்.

பாராட்டுக்கள் ரிஷான் ஷெரீப்...

சிவா.ஜி
09-02-2010, 11:24 AM
நாக்கு ஒரு அடங்கா மிருகம். எந்தக் கட்டுக்குள்ளும் அடங்குவதில்லை. நல்ல உறவுகளைக்கூட விட்டு வைப்பதில்லை. சில நேரங்களில் மூளையின் கட்டளைக்குக் கூட கட்டுப்படுவதில்லை.

அய்யன் சொன்னதைப்போல நாவடக்கம்...நம்மை எல்லோரிடத்தும் நல்லவனாய் வைத்திருக்கும். அதற்கு மன அடக்கம் மிகத் தேவை.

சொல்ல வந்த கருத்தை மிக அழகாய், அருமையாய் சொல்லியிருக்கும் கவிதைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

அக்னியின் பின்னூட்டக்கவிதை...வழக்கம்போல அசத்தல். மூலக்கவிதைக்கு தங்கப்பூண் போட்டதைப்போல.

இளசு
18-02-2010, 06:39 PM
ஹிட்லர் சுத்த சைவ உணவாளர்...

அதைப்போல்
நாவுக்கும் சில நல்ல அம்சங்கள் உண்டாம்..
ரிஷான் சொல்கிறார் -

சுவை மட்டும் பார்த்து
இரைப்பைக்கு அனுப்பும்
சுயநலமில்லா சேவகனாம் அது!!!

அம்மா, அப்பா, ஆசான் என அன்பொழுக மதித்து அழைப்பதும் அதுவே..
அன்பே கண்ணே கனியமுதே என இணையை, வாரிசை இழுத்துப் பிணைப்பதும் அதுவே...
இது விஷம், இது கெட்டுப்போனது எனத் துப்ப அறிந்து சொல்லும் துணையும் அதுவே...
கல்லூரி, அலுவல், சமூகம் எங்கும் முன்னேற்றப் பாதை சமைக்கும் வார்த்தைச் சாதுர்யத் துரட்டியும் அதுவே...



ஆனாலும் -

ரிஷான் சொல்லி, சுகந்தன், அக்னி, சிவா வழிமொழிந்ததுபோல்
விஷச்சூடிடும் பொல்லாத ஒரு குணம் வெளிப்படும் சிலபல கணங்களாலேயே....

நபிகள் தொடங்கி அய்யன் வரை
எத்தனை ஆன்றோரிடம்
அவமானப்பட்ட அபாக்கியசாலி அது..


என்ன சொல்ல?
ஆயிரம் நற்குணங்கள், திறன்கள் அமையப்பெற்றும்
சுயநலம், சர்வாதிகாரம், இனவெறி, மதபோதை
இதைப்போல ஏதோ ஒரு விஷம் கலந்த
பாற்குடத் தலைவர்களின் கதை போல்தான்
நாவும்.

ஆழ்ந்த அனுதாபங்கள் அதற்கு உரித்தாகுக!

M.Rishan Shareef
23-02-2010, 03:59 AM
அன்பின் சுகந்தப்ரீதன், ஆர்.ஈஸ்வரன், அக்னி, சிவாஜி, இளசு,

உங்கள் அனைவரினதும் ஆழமான கருத்துக்கள் மிகவும் அற்புதமானவையாக இருக்கின்றன. எல்லாமே அருமையான கருத்துக்கள்.

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றிகள் அன்பு நண்பர்களே !