PDA

View Full Version : குரங்கிற்கு இடம் கொடுத்தால்...



Ravee
08-02-2010, 04:34 PM
குரங்கிற்கு இடம் கொடுத்தால்




http://farm3.static.flickr.com/2396/2790386042_557060f86a.jpg



இணையம் என்று ஒரு நந்தவனம்
பூத்துக்குலுங்கும் பூங்காவனம்
காய் கனி மரங்கள் ஒரு நூறு
கண்கவர் பூச்செடி பல நூறு
கடமை தவறாத தோட்டக்காரன்
கருத்தாய் தினமும் காத்து வந்தான்
அரசன் வருவான் மாலை தோறும்
அரசியும் வருவாள் இணையாக
இருவரும் மெச்சினர் தோட்டம் கண்டு


அழகான பாத்திகள் பிரித்து
ஒவ்வொரு வண்ண பூக்களும்
ஒவ்வொரு பிரிவில் பூத்திருக்க
கண்கள் பூத்தன பூக்களை கண்டு
யார் கண் பட்டதோ தெரியாது
எங்கிருந்தோ வானரம் ஒன்று
இங்கு வந்தது - என்ன கொடுமை இது


மந்திக்கு பொறுக்கவில்லை
வண்ணமிகு பூந்தோட்டம்
வளமாய் இருப்பதை கண்டு
வாய்ப்புக்கு காத்திருக்க
வந்தது திருவிழா ஒன்று
வஞ்சனையாய் தோட்டக்காரனிடம் சென்று
வாஞ்சையுடன் நடித்து என்ன அய்யா
உனக்கு ஒரு பொழுது உண்டா
போக்கிடம் உண்டா
எப்போது பார்த்தாலும் இவ்விடத்தில்
என்ன அனுபவித்தாய் - செல்
திருவிழா கண்டு வா


செடிகளுக்கு நீர்விட்டு பூக்கள் பறித்து
பூஜைக்கு எடுத்துவைப்பேன்
கவலை படாதே போய் வா
என்று அனுப்பி வைக்க
அப்பாவி தோட்டக்காரன்
அதை நம்பி வெளியூர் போனான்


மந்தமான மந்தி முதலில்
எல்லா பாத்திகளுக்கும் நீர் விட்டது
சிறிது நேரத்தில் நீர் காணவில்லை
மீண்டும் மீண்டும் நீர் வார்க்க
சேறாகாப் போனது நிலம்
சேறில் உருண்டு புரண்ட மந்தி
அப்படியே பூக்களை பறிக்க
குரங்கின் கைகளில் பூக்கள்
இதற்கு மேல் சொல்வதற்கில்லை


வேலை பார்த்த களைப்பு
மரத்தடியில் சாய்ந்த மந்தி
வாய் ஊறும் பழங்களை கண்டு
மரத்தின் மேல் ஏறி
எட்டிய எல்லா பழங்களையும்
கவ்வி தின்றே
எஞ்சியவற்றை வீணே ஏறிந்தது


அதன் விசமத்தின் எண்ணிக்கை
விஷம் போல ஏறியது
அந்த எண்ணிக்கை கண்டு
யாரும் சந்தோசிக்கவில்லை
ஒவ்வொரு எண்ணிக்கையும்
ஒரு அழிவைகாட்டி நிற்க


திரும்பி வந்த தோட்டக்காரன்
திக்கித்து போய் நின்றான்
என்ன கொடுமை இது
ஏன் என் செடிகள் இறைந்து கிடக்கிறது
குரங்கு தந்த பதில்
ஊற்றிய நீர்........ வேரின் வழி
ஊறி இருக்கிறதா என பார்த்தேன்


பூக்களின் நிலை கண்டு அவனுக்கே
கேட்க மனம் இல்லை
பழங்கள் ஏன் இப்படி
இறைந்து கிடக்கிறது என்றான்
தித்திக்கும் விதைகள் தரும் பழங்கள்
தேடி தேடிவைத்தேன் - இந்தா
கொட்டைகள் என்று
ஒரு குமியல் காட்டியது


கட்டியம் கூற நாட்டின் காவலன் வந்தான்
மன்னன் வந்து கல்லாய் சமைந்தான்
நீ கொலை செய்தாலும் பொருத்ததிருப்பேன்
இந்த நிலை செய்தாயே என் தோட்டத்தை என்று
கட்டி வைத்தது அடித்தான்
தோட்டக்காரன் பேச வாய்ப்பே இல்லை


கெஞ்சி கூத்தாடி நடந்ததை சொல்ல
குரங்கு மரத்தின் மேல் இருந்து
பழிப்பு காட்டி சிரித்தது
பிடிக்க வந்த காவளாளிகளுக்கு
பின்புறம் காட்டி நகைத்தது


வெறுத்து போன அரசன்
விட்டு ஒழியுங்கள் இந்த தோட்டத்தை என்றான்
அரசி கேட்டாள் அப்போது இந்த தோட்டத்தை
என்ன செய்வதாக முடிவு என்றாள்
மனம் வெறுத்த மன்னன் சொன்னான்

"மதி உள்ள ஒருவரும் இனி இங்கு வாரார்
இந்த மந்திக்கே இதை
நேர்ந்து விடுங்கள் என்றான்" .

Ravee
09-02-2010, 02:24 AM
இணையம் என்ற அளப்பரிய சக்தி இப்போது பல மோசமான விசயங்களுக்காய் பயன்படுத்த போய் குழந்தைகளை வைத்து கொண்டு எந்த ஒரு தேடல் பகுதிக்கும் போக முடியவில்லை. மக்களின் அதிகமான பங்களிப்பு பாவிப்பு எல்லாமே இது போன்ற வக்கிரம் நிறைந்த வலைத்தளங்கள் ஆக போய் விட்ட காரணத்தால் தேடலின் போது முதலில் இவைகளே வருகின்றன. இணையம் இப்படியே வக்கிரம் வசம் விடப்படுமா ???

சுகந்தப்ரீதன்
09-02-2010, 07:52 AM
சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் எல்லோருக்கும் தேவையென்பதை கவிதையில் வலியுறுத்திருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்...!!

மன்னனைப்போல் எல்லோருமே துஷ்டனை கண்டு தூர விலகினால்...?!

சிவா.ஜி
09-02-2010, 07:57 AM
சில குரங்குபுத்திகள், சில வக்கிர புத்திகள் சேர்ந்து இணையமெனும் நந்தவனத்தை பாழ்படுத்துவதைப் பார்க்க பொறுக்க முடியவில்லை. என்ன செய்வது? இது இன்னும் மோசமாகுமென்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

பார்ப்போம்...யாராவது எதையாவது செய்வார்களா? நந்தவனத்தை மீட்பார்களா என்று.

சமூக அக்கறையுடன் வந்த கவிதைக்குப் பாராட்டுக்கள் ரவீ.

இன்பக்கவி
09-02-2010, 08:04 AM
ரவி அண்ணா..
இது வெறும் கவிதை அல்ல..
நம் உணர்வுகள்..
எழுதியவுடன் முதலில் படித்த வாய்ப்பு எனக்கு தந்த போதும், உங்கள் கோபத்தின் உச்ச கட்டத்தை உங்கள் எழுத்துக்களில் பார்த்தேன்...
நல்லா இருக்கு அண்ணா..

aren
09-02-2010, 08:05 AM
உலகில் நல்லதும் இருக்கிறது தீயதும் இருக்கிறது. வெறும் நல்லதே இருந்தால் தீயது என்பது எது என்பதே தெரியாமல் போய்விடும். ஆகையால் தீயது இருந்தால்தான் நல்லது எவ்வளவு சிறப்பானது என்று நமக்குத் தெரியும். ஆகையால் இரண்டும் வேண்டும், ஆனால் நாம் தான் நமக்கு எது வேண்டும் என்று தெரிந்துகொண்டு அதைப் பெற்றுக்கோள்ள வேண்டும்.

நல்ல கதை சொல்லும் ஒரு கவிதை. தொடருங்கள்.

Ravee
13-02-2010, 05:25 PM
ஆரேன் , இன்பக்கவி , சிவா.ஜி , சுகந்தப்ரீதன் உங்கள் கருத்துக்கு நன்றி

இளசு
19-02-2010, 07:02 PM
பதநீரை முந்தும் தேள், பூச்சிகள்..

பாற்கடலில் அமுதத்தை விஞ்சிய ஆலகால விஷம்..

உண்மையை விஞ்சும் வதந்-தீ!


நன்மையை விஞ்சும் இணைய நரகல்..


அழகாய்ச் சொன்ன அருமைக் கவி ரவீக்கு பாராட்டுகள்..



ஃபில்டர் என்னும் வடிகட்டிகளே சிவனாய் நம்மைக் காக்கட்டும்!

Ravee
20-02-2010, 12:18 PM
ஆஹா இளசு அவர்களே , நீங்கள் சொல்வதை பார்த்தால் இன்னும் ஒரு முறை காமதகனம் நடக்க வேண்டும் போல இருக்கிறது. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி