PDA

View Full Version : அச்சம், பேரச்சம் !



குணமதி
07-02-2010, 11:42 AM
அச்சம்,பேரச்சம்!


பாம்பைக் கண்டால் குரங்ககுக்குக் குலை நடுங்கும்! அச்சம் என்றால் அப்படியொரு பேரச்சம். பாம்பைக் கண்டதும் மிக விரைவாக ஓட்டம் பிடிக்கும்.

சீன/சப்பானியச் சண்டைப் படங்களில், பாம்பைக் குரங்கு பிடிப்பதை ஒரு நுட்பமான பிடி உத்தியாகக் காட்டுவார்கள். உண்மையில், பாம்பைக் கண்ட குரங்கு பேரொலி எழுப்பிக் கொண்டு ஓடிப்போகும் காட்சியையே காண்கிறோம்.

ஒரு பாவலன் கண்டு விளக்கியதோர் அரிய காட்சியைக் காண்போம்:

ஒரு பெரிய மரம். ஆலமரம். ஒரு குரங்கு ஆலம் விழுதுகளைப் பிடித்து ஊசலாடிக் கொண்டே, ஒன்றிலிருந்து இன்னொன்றிற்குத் தாவி விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தது. அவ்வாறு தாவும்போது, ஒரு விழுதைப் பிடிக்கப்போன குரங்கு, 'ஐயோ, பாம்பு' என்று அலறாத குறையாக ஒலி எழுப்பிக் கொண்டே துள்ளி கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டது.

எரியும் விளக்கினுடைய சுடரின் அழகில் மயங்கும் குழந்தை, அதைப் பிடிக்கும் ஆவலில் கையைக் கொண்டு போக, விரல் சுடரைத் தொடும் முன்பே, 'சுரீர்' என்று சூடு உணர்ந்ததும், குதித்துக் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொள்ளுமே, அதைப் போல்தான் இருந்தது அந்தக் குரங்கு கையைப் பின்னுக்கு இழுத்த காட்சி!

அந்தக் குரங்கு அங்கிருந்து பிடித்தது ஓட்டம்! கிளைக்குக் கிளை தாவி ஓடியது. கீழே தொங்கும் விழுதுகள் எல்லாம் அதன் கண்களுக்குப் பாம்புகளாகத் தெரிந்தன. பாம்பு தன்னைத் தொடர்ந்து பின்னாலேயே துரத்திக் கொண்டு வருவது போன்ற அச்ச உணர்வு!

மரத்தின் உச்சாணிக் கிளைக்குப் போனது குரங்கு. மூச்சு இரைத்தது.
'அப்பாடா, பிழைத்தேன்!' என்று உச்சிக் கிளையில் உட்கார்ந்தது. மறுபடியும் அச்சம். ஒருவேளை பாம்பு தன்னைப் பின்தொடர்ந்து வந்திருக்குமோ? மிரட்சியுடன் மெல்லக்குனிந்து கீழே பார்த்தது.

ஐயோ, காலின் கீழேயே பாம்பு! ஒருகணம் பகீரெனப் பேரச்சம் தாக்கியது. அட்டடா, அப்பா! அது பாம்பில்லை, தன் வால்தான் என்று தெரிந்து கொண்டு நடுக்கத்திலிருந்து மெல்ல விடுபட்டது அந்தக் அப்பாவிக் குரங்கு.

புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன் இந்தக் காட்சியைக் கூறுவதைப் பாருங்கள் :

கிளையினிற் பாம்பு தொங்க

விழுதென்று குரங்கு தொட்டு

விளக்கினைத் தொட்ட பிள்ளை

வெடுக்கெனக் குதித்த தைப்போல்

கிளைதொறும் குதித்துத் தாவி

கீழுள்ள விழுதை எல்லாம்

ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி

உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்!

ராஜா
21-07-2012, 02:21 PM
அருமை..!

vasikaran.g
29-07-2012, 07:54 AM
அருமை ..நன்று ..