PDA

View Full Version : அனாதரவானவைஆதி
06-02-2010, 05:29 AM
திசை தொலைத்த
ஒரு பறவையின் பதற்ற அச்சத்தோடு
தனக்கான இடமொன்றை துளாவி
அலைந்தது அந்த வார்த்தை..

ஒரு கர்ப்பகிரகமோ
ஒரு பலிப்பீடமோ
ஒரு தொழுகைக்கூடமோ
மறுதலித்திருக்கலாம் அதனை..

பறவையின் இறகைப் போன்றோ
பூவின் மடலைப் போன்றோ
மேகத்தின் துளியை போன்றோ
தவறவிடப்பட்டிருக்கலாம் அது...

மீள் வாசிப்பின் சமயத்தில்
தேவையற்றதென
நிராகரிக்கப்பட்டிருக்கலாம்
ஒரு கவிதையில் இருந்தும்..

கோடிட்ட இடமொன்றில்
நிரப்பப்பட வேண்டியதாய்
திட்டமிட்டு கைவிடப்பட்டும்
இருக்கலாம்..

குழந்தைக்கான
தாலாட்டில் இருந்தோ
கதையில் இருந்தோ
புறக்கணிக்கப்பட்டும் இருக்கலாம்..

இப்புவியில்
மறுதலிக்கப்பட்ட
தவறவிடப்பட்ட
நிராகரிக்கப்பட்ட
கைவிடப்பட்ட
புறக்கணிக்கப்பட்ட என்று
அனாதரவானவை ஏராளம்
இவ்வார்த்தையைப் போல்..

தாமரை
06-02-2010, 05:47 AM
உதாசீனம் செய்யப்பட்டு
தொலைக்கப்பட்ட அந்த வார்த்தை
நன்றி -
என்பதுதானே ஆதன்?

சில பேர் அதைத் தேடிக்கொண்டிருக்கிறோம்..
முகவரி தெரிந்தால் சொல்லுங்கள்...!!!

சிவா.ஜி
06-02-2010, 07:22 AM
தெரிந்தே தொலைக்கப்பட்ட அல்லது உதாசீனப்படுத்தப்பட்ட வார்த்தைகளைப் போல சில படைப்பாளிகளும் காயப்படுத்தப்படுகிறார்கள்.

(அழகான வார்த்தையாடலுடன், ஆழமான கருத்தும் கொண்ட கவிதைக்கு சின்னச் சின்ன எழுத்துப்பிழைகள் சாப்பாட்டில் கல். தொழுகை...தொலுகையானதும் ஏராளம்...ஏறாளமானதும், கோடிட்ட...கோட்டிட்ட ஆனதுமான சில கற்கள்)

வாழ்த்துகள் ஆதன்.

யவனிகா
06-02-2010, 09:10 AM
தொலைந்த சில வார்த்தைகளை
தேடியெடுக்கும் முயற்சியில்
நான் இருந்தேன்....

வண்ணத்துப்பூச்சி உதிர்த்த நிறமாகவோ
தேநீர்கோப்பையில் விழுந்த துளிமழையாகவோ
நேற்றைய இனிய கனவின் மறக்காத மிச்சமாகவோ
எப்போதாவது கிடைக்கும் அதிகாலை சூரியதரிசனம் போலவோ
நேற்றைய எதிரியின் இன்றைய புன்னகை போலோ
அன்புத்தம்பி ஆதியின் கவிதை போலவோ

மனம் நிறைக்கக்கூடிய வேலைதான் அது...
நிராகரிக்கப்பட்ட வார்த்தைகளை தேடுவது....

தேடியெடுத்த போது அவை
சிரித்துக்கொண்டுதான் இருந்தன...
யாராவது எங்காவது எப்போதாவது எப்படியாவது
எங்களை உபயோகித்துக் கொண்டுதான் இருக்கிறார்....

பறவையின் இறகைப்போல்
பறப்பது மட்டுமே வேலை...
காற்று எங்களை நிராகரிக்குமா?
கவலைவேண்டாம் என்றன!!!

சிவா.ஜி
06-02-2010, 09:15 AM
அசத்தல்மா....

"நேற்றைய எதிரியின் இன்றைய புன்னகைபோல..."

கிரேட்....ரொம்ப நல்லாருக்கும்மா. வாழ்த்துகள்.

யவனிகா
06-02-2010, 09:24 AM
அசத்தல்மா....

"நேற்றைய எதிரியின் இன்றைய புன்னகைபோல..."

கிரேட்....ரொம்ப நல்லாருக்கும்மா. வாழ்த்துகள்.

தம்பியின் கவிதை போலன்னு கூட சொல்லி இருக்கேன் அண்ணா

தம்பி மன்றம் வந்ததிலிருந்தே தம்பியின் கவிதைகள் எனக்கு பிடிக்கும்.மெல்லிய சோகம் இழையோட, அலாதியான கவிதைகள் அவை.எனக்குப் பெர்சனலாவும் ஏனோ பிடிக்கும்.தாமரை அண்ணாவிடம் அதிகம் பாராட்டி சொல்லிருக்கிறேன்.பாராட்டாவிட்டால் கூட உள்ளுக்குள்ளே ரசிப்பது நிச்சயம். உங்கள் பாராட்டு தம்பிக்கும் உரியது.

சிவா.ஜி
06-02-2010, 10:36 AM
ஆமாம்மா...ஆதனோட கவிதை ரொம்ப ஆழமா இருக்கும். சில சமயங்கள்ல எனக்கு புரிஞ்சிக்க கஷ்டமா இருக்கும். அது என்னோட 'ஞானம்' அவ்ளோதான்.

ஆதனுக்கு என்னோட பாராட்டு எப்பவும் உண்டு.

rajarajacholan
06-02-2010, 11:20 AM
என்ன சொல்ல,
நல்லாருக்குங்க. (ஏன்னா எனக்கு வேறட்துவும் சொல்ல தெரியாது)

இளசு
22-02-2010, 06:17 PM
ஆதனின் கவிதையும்
யவனிகாவின் கவிதையும்...

ஒன்றையொன்று விஞ்சி
ஒன்றுக்கொன்று ஆதரவாய்...


இரட்டிப்பு இன்பம் இத்திரியில்...-------------------------------

சமைத்தவள் எதிரிருக்க
முழுக்க உண்டு முடித்தும்
சொல்லாமல் விட்ட
நல்லாருக்கு.....


படைத்தவன் பார்த்திருக்க
ரசித்த மனம் நகருமுன்பு
பகிராமல் விட்ட
ஊக்கம்....

புன்னகை, சாகசம், புதுமொழி செய்து
அங்கீகாரதாகம் காட்டும்
குழந்தைக்குக் கொடாமல் விட்ட
பாராட்டு...

மனிதர்களில் மட்டுமல்ல..
வார்த்தைகளிலும்
அநாதைகள் இல்லாமல் போகட்டும்!

இன்பக்கவி
23-02-2010, 12:58 AM
கவிதைக்கு கவிதையால் பின்னோட்டம்...
எதை ரசிப்பது??
எல்லாமே சூப்பர்..:icon_b:
வாழ்த்துக்கள்
தையால் பின்னோட்டம்...
எதை ரசிப்பது??
எல்லாமே சூப்பர்..
வாழ்த்துக்கள் :icon_b:

அக்னி
09-03-2010, 04:27 PM
மனிதாபிமானத்தோடு சேர்த்துக்
குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்குமோ...

நாவிற் சூல்கொண்டு,
பிரசவமாகாமலே கலைக்கப்பட்டிருக்குமோ...

மனிதப் பண்பிலிருந்து
தடயமின்றி அழிக்கப்பட்டிருக்குமோ...

அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படாமல்
இந்தத் தலைமுறையிடமிருந்தே கடத்தப்படுகின்றது
‘நன்றி’

தாமரை அண்ணா சொல்லாவிட்டால், புரிந்துகொண்டிருக்கமாட்டேன்.
சிவா.ஜி யின் ஞானப் பிரச்சினைதான் எனக்கும்.

யவனிகா+அக்கா, இளசு அண்ணா
இருவரின் பின்னூட்டங்களும் கூட, அந்த வார்த்தையை வெளிப்படுத்தாத அற்புத உருவகப் பதிப்புக்கள்...

அனைவருக்கும் பாராட்டுக்களோடு.., நன்றியும்...

govindh
09-03-2010, 05:04 PM
அனாதரவான வார்த்தை....
அசத்தல் கவிதை..வரிகள்..வார்த்தைகள்..
வாழ்த்துக்கள்..

கீதம்
10-03-2010, 06:00 AM
அன்றாடம் புழங்கப்படுகின்றன,
அநேக வார்த்தைகள்!
எனினும்
கவன ஈர்ப்புச் செய்பவை
கைநழுவிப்போனவை மட்டுமே!

ஆதன் அவர்களின் கவிதாபரணத்தில்
அடுத்தடுத்து கோர்க்கப்பட்ட
பின்னூட்ட முத்துகளைப் போல்
அவ்வார்த்தைகளும் எங்கோ ஓரிடத்தில்
அழகுற மிளிர்ந்துகொண்டிருக்கும்,
ஐயமில்லை!

நன்றியும் பாராட்டும்,
ஆதன் அவர்களுக்கும்,
பின்னூட்ட நாயகர்களுக்கும்!

ஆதி
11-03-2010, 09:01 AM
பின்னூட்டி ஊக்கம் அளித்த ஒவ்வொருத்தருக்கும் நன்றி..

தாமரை அண்ணா சொல்வார், கவிதைக்கு நீ வைக்கும் தலைப்புகள் பெரும்பாலும் பொருந்துவதில்லை என..

இந்த கவிதையிலும் அது நிகழ்ந்திருக்கிறது என்பதை நான் நன்றாக உணர்ந்து கொண்டேன்..

"அனாதரவானவை" என்று தலைப்பை வைத்திருந்தால் ஒரு வேலை கவிதையின் பொருள் கொஞ்சம் அதிகமாக உணர்த்தப்பட்டிருக்க கூடும்..

வார்த்தை பற்றி சொல்லி செல்கிற கவிதையின் கடைசிப்பத்தில் கவிதையின் தளம் சட்டென மாறுவதை துல்லியமாய் புரிய வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது..

நவீனத்துவ சாரம் கொண்டது இந்த கவிதை.. நவீனத்துவ கவிதை என்றே தயங்காமல் சொல்லலாம்.. கவிதையின் கடைசி பத்தியில் தான் கவிதையின் கரு ஒளிந்திருக்கிறது..

கவிதையின் தலைப்பை மாற்றுகிறேன்..

ஊக்கமளித்த ஒவ்வொருத்தருக்கும் நன்றி..

நாகரா
11-03-2010, 10:04 AM
திசை தொலைத்த
ஒரு பறவையின் பதற்ற அச்சத்தோடு
தனக்கான இடமொன்றை துளாவி
அலைந்தது அந்த வார்த்தை..

ஒரு கர்ப்பகிரகமோ
ஒரு பலிப்பீடமோ
ஒரு தொழுகைக்கூடமோ
மறுதலித்திருக்கலாம் அதனை..

பறவையின் இறகைப் போன்றோ
பூவின் மடலைப் போன்றோ
மேகத்தின் துளியை போன்றோ
தவறவிடப்பட்டிருக்கலாம் அது...

மீள் வாசிப்பின் சமயத்தில்
தேவையற்றதென
நிராகரிக்கப்பட்டிருக்கலாம்
ஒரு கவிதையில் இருந்தும்..

கோடிட்ட இடமொன்றில்
நிரப்பப்பட வேண்டியதாய்
திட்டமிட்டு கைவிடப்பட்டும்
இருக்கலாம்..

குழந்தைக்கான
தாலாட்டில் இருந்தோ
கதையில் இருந்தோ
புறக்கணிக்கப்பட்டும் இருக்கலாம்..

இப்புவியில்
மறுதலிக்கப்பட்ட
தவறவிடப்பட்ட
நிராகரிக்கப்பட்ட
கைவிடப்பட்ட
புறக்கணிக்கப்பட்ட என்று
அனாதரவானவை ஏராளம்
இவ்வார்த்தையைப் போல்..
உலகத்தால் உதாசீனப்படுத்தப்பட்ட
அதீத விழிப்புணர்வு
ஜீவனுள்ள வார்த்தையாய்
உதாசீனப்படுத்த முடியா உக்கிரத்துடன்
எழுகிறது

அன்பின் பிரமாணமாக
என்புதோல் போர்த்த உடம்பை
மெய்யாக்கும் அவ்வார்த்தையின்
சாரம் புரியாமல்
காரமெனத் தூற்றும்
உலகம்

அதீத விழிப்புணர்வைச்
சுரீரென ஏற்றும் ஊசி போன்றது
அவ்வார்த்தை

வார்த்தையை
வார்த்த 'ஐ'யை
நினைவு கூர்கிறேன்

அனாதாரவானது எதுவுமில்லை
துச்சமாகத் தோன்றும் தூசையும்
தன் அதி நுண்ணிய ஆதரவால்
தழுவியிருக்கும் அன்பை
ஞாபகமூட்டுகிறது
அவ்வார்த்தை

நாகத்தைத் தன் வாலாக்கி
"நன்றி"யின் திரு உருவாய் இருக்கிறது
அவ்வார்த்தை

அருமையான கவிதை, வாழ்த்துக்கள் ஆதன்

ஆதவா
12-03-2010, 05:53 PM
மிக அருமையான கவிதை ஆதி. (உங்கள் பெயரை நீங்கள் மாற்றிவிட்டீர்கள் போலிருக்கிறதே)

துளாவி, இந்த வார்த்தையை கொஞ்சம் சரிபாருங்கள். எந்த வார்த்தை என்று நல்லவேளை சொல்லிவிடவில்லை. கவிதை கெட்டது போ என்று சொல்லி முடித்துவிடுவதற்கு இடங்கொடுக்காமல்...

அநாதைகளுக்கு பெரும்பாலும் குரலில்லை. ஊமைகளான அவற்றினைப் பற்றிய உங்கள் கவிதை ரசிக்கும்படியாக இருந்தது.

திசை தொலைத்த
ஒரு பறவையின் பதற்ற அச்சத்தோடு
தனக்கான இடமொன்றை துளாவி
அலைந்தது அந்த வார்த்தை..

ஆரம்ப வரிகளே பிரமாதம். பறவைகள் திசைகளைக் தொலைக்கின்றனவா, இல்லையென்றாலும் கூடு திரும்பி மாய்ந்த குஞ்சு காணும் பதற்றத்தை கவிதை ஏற்படுத்தியது. பதற்ற அச்சமென்பது, பதற்றத்தால் ஏற்பட்ட அச்சமா? பதற்றமே அச்சமா? கசக்கியெறியப்பட வார்த்தைகள் இல்லை. வார்த்தைகள் ஏற்படுத்தும் விளைவுகள் உண்டு.

கவிதை படித்து முடிந்ததும் நான் உதாசீனப்படுத்தியவர்கள் நினைவுக்கு வந்தார்கள்.

கவிதை எங்கு ஒளிந்திருக்கிறது என்று வெளிக்காட்டாதீர்கள் ஆதி. ஏனெனில் உங்கள் கவிதையின் ஒவ்வொரு எழுத்திலும் அதற்கான கரு அமர்ந்தேயிருக்கிறது.

நன்றி