PDA

View Full Version : குகியும் குபாவும் - ஒரு காதல் கதை..!கலைவேந்தன்
04-02-2010, 03:39 PM
http://i194.photobucket.com/albums/z52/KALAIVENTHAN/image001-4.jpg

கு கி யும் கு பா வும்...!

குட்டிக் கிருஷ்ணன் குட்டிப்பாப்பா
குறைவில்லாத குதூகலத்துடன்
எங்க வீட்டுச் செல்லப்பிராணிகள்....

குட்டிக்கிருஷ்ணன் வந்த கதை
கொஞ்சம் சோகம் கொஞ்சம் சிரிப்புதான்..

என்றோ ஒரு குளிர்நாளில்
சீசனுக்கு உடல்வளைத்த
சீசரும் சிந்தாமணியும்
சிந்தாமல் சிதறாமல் போட்ட
சிறப்பான குட்டி நாய்...

பெயர்கூட பிறகுதான் நாங்கள் வைத்தோம்...

கண் திறவாமல் பூத்த புஷ்பமாய் இருந்த
அழகான கறுப்புக்குட்டி நாய்க்கு
குட்டிக்கிருஷ்ணன் பெயர் மிகவும் பொருத்தம் தான்...

நாளொரு உணவு வகையுடன்
செல்லத்துக்குக் குறைவில்லாமல்....
ஆனால் தனிமை என்னமோ
குட்டிக்கிருஷ்ணனை வாட்டியது....

தாயிழந்த சோகம் முகத்தில் அப்பிநிற்க
துணைஇல்லா கோபம் கொப்பளிக்க
குட்டிப்பிசாசு போல குறும்புகள் பலவுடன்
வளைய வந்துகொண்டிருந்தான் கு கி....

ஆறு மாதங்கள் அழ்காய ஓடின..

வெளிநாட்டு நாய்க்குட்டி ஒன்னு
வெள்ளைப் பனிப்பூ போல
நண்பர் பரிசளித்த போது
முகம் முழுதும் கண்கள் விரிய
முத்தமிட்டு அணைத்துக்கொண்டேன்....

கண்கள் மெல்லத் திறந்து தலை ஒருக்களித்து
பாவமாய்ப் பார்க்கும் பார்வை....
குட்டிப்பாப்பா என்று பெயர்வைக்க தோன்றியது....

குட்டிக்கிருஷ்ணனுக்கு
தன் முன்பிறவி இணையொன்று
தேடித்தன்னை அடைந்தது போல் கிறக்கம்...

பார்த்த முதல் பார்வையில்
குபா தான் தன் இணை என்று குகியின் நிர்ணயம்..

அப்புறமென்ன....

அழகான காதல்கதை
அங்கே அரங்கேறத் தொடங்கியது...

குட்டிப்பாப்பா எங்கே போனாலும்
நன்றியுள்ள பணியாளனாய்
பின் தொடரும் குட்டிக்கிருஷ்ணன்...

குபா எதை முகர்ந்தாலும் அதை முதலில் நக்கிப்பார்த்து
நல்லதென மனசுக்குப்பட்டால்
குபா பக்கம் தள்ளிவிடும் குகி...

குபா உறங்கும் வரை அதன் உடல் முழுதும் உரசி
உறங்கியது உரப்பானால் தானுறங்கும் குகி...

குபாவின் காதுமடல் மெல்ல வருடி நக்கி
சிலிர்த்தெழும் குபா அழகை
குறும்புடன் கண்டு ரசிக்கும் குகி...

மெல்ல மெல்ல குகியின் தொடுகையும் வருடலும் இதமாகி
கிறங்கி நிற்கும் குபா....

ஏதோ கவனத்தில் குகி இருந்தாலோ
தன்பால் கவனம் ஈர்க்க குபாவின் எத்தனங்கள்...
மெல்ல எழும் குபாவின் முனகல்கள்...
பதறிப்போய் பாய்ந்துவந்து
குபாவின் உடல் மேல் தன்னுடல் உரசி
கதகதப்பில் மெய்மறக்கவைக்கும் குகி....

குபாவின் மெல்லிய அசைவும்
குகிக்கு பூகம்பம் தான்....
குகியின் சிரமங்கள் குபாவுக்கு சோகமேகங்கள் ....

ஒருவருக்கொருவர்
உயிர் துறக்கும் பாவனைகள்....
நாய்க்குட்டிகளின் காதல்கள்
மனிதரிலும் மேன்மை தான்....

பொல்லாத பொழுதொன்று விடிந்தது
எமனின் எருமைவாகனம் வீட்டின் முகப்பில் வந்து நின்றது
குட்டிப்பாப்பாவின் அழகு கண்ட ஒருவர்
இதை வளர்க்க கேட்டபோது
காசுக்கு ஆசைப்பட்டு விற்க மனமில்லை என்றாலும்
கேட்டவர் மனைவியின் அண்ணனாய் போனது
வாய்மூடி இருக்கச்செய்தது...

குட்டிப்பாப்பாவின் கதறலும் கெஞ்சலும் கண்ணீரும்
மனிதர்களின் காதுகளில் எட்டவே இல்லை..

குகியின் மனநிலை விவரிக்க இயலா சோகத்துடன்
குபாவை சுற்றிச்சுற்றி வந்து தன் பாசத்தை காட்டியது
எடுத்துப்போகவிடாமல்
தன் கூரிய பற்களால் மிரட்டவும் தொடங்கியது....

குட்டிப்பாப்பா அழுதழுது சோர்ந்தது...
குகி இறுதிவரை தன் போராட்டத்தை தொடர்ந்தது...

குட்டிப்பாப்பா காற்றில் சட்டென மறைவது போல்
மேகத்தின் ஊடே மறையும் நிலா போல்
இருந்த காதல் இல்லாமல் போனது போல்
தாயிடமிருந்து பிரித்த குழந்தை போல்
குபா போனபின் குகிக்கு எல்லாம் கசந்தது....

ஊர் உறங்கியபின் ஊளையிட்டு
தன் சோகம் தொடர்ந்தது....

அங்கே குபாவை பாலில் முக்கி
பனியில் புரட்டி கொஞ்சி விளையாடி
அதன் கவனத்தை திசைத்திருப்பி
தோல்வியே கண்டனர் அறிவிலிகள்...

ஆகாரம் மறுத்தது.... தன் ரோமம் உதிர்த்தது....
அழகாய் இருந்த குபா காண சகிக்காது போனதும்
கொண்டு போய் விட்டுவிடலாம் இந்த சனியனை...
எண்ணிய நிமிடம் பழைய வீட்டின் முன் நின்றது கார்...

பழகிய வீட்டின் காதலனின் வாசம் தேடி
சந்தோஷக் கூச்சலுடன் முனகியபடி
நொண்டி உருண்டு புரண்டு குகியிடம் போய் நின்றது...

யாரோ இது என்று ரோமம் சிலிர்க்க கோபம் கொண்டு உறுமியது
அடையாளம் தெரியாத அசிங்கமாய் ஏதோ ஒன்று
தன்னை உரச வருவதை எதிர்த்து குரைத்து நின்றது
பழகிய வாசனை மூக்கு உணர்ந்ததும்...
கண்களின் ஏமாற்றம் மறைந்து
என் குபா என்று நிமிர்ந்து நோக்கியது....

அன்று கண்ட பனிப்பூ குபா இல்லை இப்போது
அருவெறுக்கும் உடலை எலும்பு மூடிய விகாரமாய்
கண்முன் நிற்பது நம் குபா தானா என்று
அருகே சென்று ஊர்ஜிதம் செய்தது...

குகியின் கண்ணுக்கு குபாவின் விகாரம் தெரியவில்லை
விட்டு மறைந்த காதல்
சட்டென புதுப்பாய்ச்சலுடன் வந்தது...

இனி பிரிவு என்றுமில்லை என்று
அணைத்துக்கொண்டது...

எங்கள் வீட்டு செல்லங்கள் குகி குபா வின் உடல்நலம்
எங்கள் கவனிப்பில் மீண்டும் அழகு பூக்கச்செய்தது...

ஓடிக் களித்து உண்டு உரையாடி
தங்கள் சோகம் வேகம் தொலைத்து
மீண்டும் காதல் பவனியுடன் வளைய வந்தது
குபா குகி இரண்டுமே புது வாழ்க்கை தொடங்கியது....

சுயநலம் இல்லாத குகி குபா காதல்...
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல்
ஒருவர் சோகம் மற்றவர் தீர்த்தல்
தனக்கே உரிய மௌன பாஷையும்
அங்க சங்கேதமும்
நாக்கின் வழியே நலம்விசாரிக்கும் மேன்மையும்
அற்புதமான காதல் காவியம்தான்...
கண்களில் படாமல் மறைந்துபோன ஓவியம்தான்...

ஜனகன்
04-02-2010, 04:43 PM
அழகான...குகி, குபா காதல் உணர்வுகளை சொல்லும் கவிதை.
சிறந்த கவிஞனாக இந்த கவிதை உங்களை படம்பிடிக்கிறது. மேன் மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.

இன்பக்கவி
04-02-2010, 05:14 PM
தலைப்பை பார்த்து படிக்காமல் போக இயலவில்லை..
அருமையாக இருக்கு...
அந்த படமும் , கவிதையும் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

பா.ராஜேஷ்
10-02-2010, 02:51 PM
அடடா! சற்றே நீண்ட கவிதை... மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அய்யா !

Akila.R.D
11-02-2010, 04:03 AM
குகி, குபா காதலை சொல்லும் கவிதை மிகவும் அருமை...

aren
11-02-2010, 04:06 AM
அருமை அருமை அருமை!!!!!

சிவா.ஜி
11-02-2010, 07:39 AM
குட்டி நாய்களுக்கு இருக்கும் ஆழ்ந்த காதலைக் காணும்போது.....வெறும் பொழுதுபோக்கிற்காக காதலிக்கும் சிலரை நினைத்து வெறுப்புதான் வருகிறது.

குட்டிக்கிருஷ்ணன், குட்டிப்பாப்பா அந்யோன்யமும், பிரிவால் வாடிய உணர்வுகளையும் மிக அழகாக வடித்திருக்கிறீர்கள் கலை.

மிக வித்தியாசமான சிந்தனை...மிக அழகான கவிதை.

வெகு அருமை. வாழ்த்துகள் கலை.

இளசு
19-02-2010, 06:27 PM
கலை,

அன்பை அழகாய்ச் சொன்ன அருமையான படைப்பு..

உங்கள் மொழிவளமைக்கு இன்னொரு சான்று!

பாராட்டுகள்..


அன்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

கீதம்
20-02-2010, 06:34 AM
மனிதர்களை விடவும் மிருகங்களிடம்தான் பாசம் அதிகமாக வெளிப்படக் காண்கிறோம்.

விலைபேசி விற்ற பசுவை
தொழுவம் விட்டு வெளியேற்றவிடாமல்
வழிமறித்துக் காவலிருக்கும்
வளர்ப்புநாய்!

இது எப்போதோ நான் எழுதியது.

உங்கள் கவிதை படித்து குபா, குகியின்மேல் அளவுகடந்த ஆர்வம் பிறந்துவிட்டது. அழகிய கவிதைக்கு பாராட்டுகள் கலைவேந்தன் அவர்களே.

ஓவியன்
20-02-2010, 07:46 AM
யாராவது, யாரையாவது நாயெனத் திட்டிக் கேட்டால் கோபம் பொத்துக்கொண்டு வரும் எனக்கு, நாய்களை ஏம்பா கேவலப் படுத்திறீங்கனு கத்தத் தோன்றும். உண்மை தானே அந்த ஜீவன்களுடன் உறவாடிப்பார்த்தாலன்றோ அவற்றின் அருமை தெரியும்.

நல்ல சொல் வளத்துடன் குகி-குபா காதலைச் சொன்ன வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன் கலை அண்ணா. மனதார வாழ்த்துகிறேன், என் வாழ்த்துகளில் கொஞ்சத்தை குகி, குபாவிடமும் சேர்த்து விடுங்கோ.

ஓவியன்
20-02-2010, 07:48 AM
விலைபேசி விற்ற பசுவை
தொழுவம் விட்டு வெளியேற்றவிடாமல்
வழிமறித்துக் காவலிருக்கும்
வளர்ப்புநாய்!

அசத்தல் வரிகள் கீதம், நாய்கள் நம்மைப் புரிந்து கொண்ட அளவுக்கு நாம் இன்னமும் அவற்றினை புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

செல்வா
21-02-2010, 03:50 AM
அன்பும் காதலும்
எவ்வுயிருக்கும் பொதுவாகும்...
இவற்றை வியாபாரமாக்க மனிதன்
கற்றுக்கொண்டது போல் மற்றவை
கற்கவில்லை...

அழகிய கவிதை
வாழ்த்துக்கள் ஐயா...

கலைவேந்தன்
07-11-2010, 10:38 AM
ஜனகன், இன்பக்கவி,ராஜேஷ், அகிலா, ஆரென்,சிவாஜி, இளசு, கீதம், ஓவியன், செல்வா... அனைத்து நண்பர்களுக்கும் என் நெடிதான நன்றிகள்..!