PDA

View Full Version : செல்லப்பாட்டியே...!!



சிவா.ஜி
04-02-2010, 12:11 PM
செல்லப்பாட்டியே...
அப்பனுக்கும்,அம்மாவுக்கும் மேல்
அன்பைக்காட்டும் மூதாட்டியே
குட்டிப் பேத்தியின்
விழிவிரிந்த கதை கேட்டாய்
இந்த செல்லப் பேரனின்
முட்டிச்சிராய்ப்புக்கு
குதப்பிய வெற்றிலையை
வலிக்காமல் பதித்தாய்..!!

தப்பு செய்த பேரப்பிள்ளைகளுக்கு
பாதுகாப்பான மறைவிடம் நீ
சாத்து விழாது
காத்து நிற்கும் காவல் தெய்வம் நீ...

எதிர்காலத்தையும்
நிகழ்காலத்தையும் இணைக்கும்
கடந்தகாலம் நீ....
பொக்கைவாய்ச் சிரிப்பில்
பச்சிளம் குழந்தை...
பட்டதில் கொஞ்சத்தை
பாடமாய் படிப்பிக்கும்
மூத்த மடந்தை..

உன் வாய்க்கு வெற்றிலை
இடித்துக் கொடுக்க..என்
கடமை முடித்து பறந்து வருவேன்
எங்கும் போகாமல்
அங்கேயே இரு...
என்மகனும் உன்கதை கேட்க வருவான்
உன் நினைவு ஏடுகளை தூசுதட்டி வை..

எமனை ஏமாற்ற
ஏதேனும் காரணம் சொல்
என்னை ஏமாற்ற எண்ணிவிடாதே....
பொக்கைவாய் சிரிப்போடு
புகைப்படத்தில் உறைந்துவிடாதே....!!


(எப்போதோ கவிச்சமரில் கிறுக்கிய சில வரிகளோடு இன்னும் கொஞ்சம் சேர்த்து...இங்கே உங்கள் பார்வைக்கு....)

ஆதி
04-02-2010, 12:28 PM
//எதிர்காலத்தையும்
நிகழ்காலத்தையும் இணைக்கும்
கடந்தகாலம் நீ....
//

காலங்காளை இணைக்கிற பாலம்..

//காத்து நிற்கும் காவல் தெய்வம் நீ...//


//எமனை ஏமாற்ற
ஏதேனும் காரணம் சொல்
என்னை ஏமாற்ற எண்ணிவிடாதே....
பொக்கைவாய் சிரிப்போடு
புகைப்படத்தில் உறைந்துவிடாதே....!!//

ஏக்கம் ததும்பும் வரிகள் அண்ணா...

சுருக்குப்பை போல
சுருக்கம் விழுந்த
உன் தோல்களுள்
பொதிந்திருக்கும் அனுபவ பொக்கிஷத்தை
எனக்கு உயிலெழுதி கொடு..


பாராடுக்கள் அண்ணா..

சிவா.ஜி
04-02-2010, 12:35 PM
"சுருக்குப்பை போல
சுருக்கம் விழுந்த
உன் தோல்களுள்
பொதிந்திருக்கும் அனுபவ பொக்கிஷத்தை
எனக்கு உயிலெழுதி கொடு.."

அருமையான வரிகள் ஆதன். உண்மையிலேயே எனக்கு ஆச்சர்யமளிக்கும் உறவு பாட்டி. அதுவும் அந்தக் காலத்து பாட்டிகள்...எத்தனை அனுபவ அறிவு? நிஜமான பாசம், எந்த சூழ்நிலையிலும் உறுதியான முடிவெடுக்கும் தைரியம் என மூத்தவள் இருக்கிறாள் என்று இளையவர்களை நிம்மதியாய் வாழ வைக்கும் ஜீவன்.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆதன்.

கலையரசி
04-02-2010, 12:56 PM
சாத்து விழாது
காத்து நிற்கும் காவல் தெய்வம் நீ...

பொக்கைவாய் சிரிப்போடு
புகைப்படத்தில் உறைந்துவிடாதே....!!
இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன்.
பாட்டியிடம் வளராத குழந்தைகள் துரதிஷ்டசாலிகள் தாம்!

குணமதி
04-02-2010, 01:09 PM
பாராட்டு.

பாட்டி நல்ல பாட்டி!
பாலும் சோறும் ஊட்டி
படுக்க வைப்பாள் ஆட்டி!

இனிய நினைவுகள் காட்சிக்கு வருகின்றன.

சிவா.ஜி
04-02-2010, 01:33 PM
உண்மைதான் கலையரசி அவர்களே. பாட்டியிடம் கதைகேட்டு, பாசத்தில் நனைந்து வளராத பிள்ளைகள் துரதிர்ஷ்டசாலிகள்தான்.

மிக்க நன்றி கலையரசி அவர்களே.

சிவா.ஜி
04-02-2010, 01:33 PM
பாராட்டுக்கு மிக்க நன்றி குணமதி.

கலைவேந்தன்
04-02-2010, 03:13 PM
சும்மா கலக்கலா கீது வாத்யாரே...!

அந்தக்காலத்து பெருசு எல்லாம் ரெம்ப தெனாவெட்டுன்னு சொம்மா ஜில்மாவா நெனச்சிக்கினு இருந்தேனா...

இப்ப நெசமாலுமே இந்த கவுதையை வாயிச்சுட்டு அந்த கெழம் கெட்டதுங்க மேல ஒரு மருவாதியே வந்துட்டுது அண்ணாத்தே...

சொம்மா எகிருதுல்ல..?

இந்தா பாராட்டைப்பிட்சுக்கோ வாத்யாரே...!

- சும்மா ஒருதமாசுக்கு தான் சிவா...!

சிவா.ஜி
04-02-2010, 03:34 PM
ஹா...ஹா...ஹா....வாங்க கலை. கலக்கலான பின்னூட்டம். படிச்சதும் உற்சாகம் எனக்கும் தொத்திக்கிச்சு.

டேங்ஸு நைனா.

இன்பக்கவி
04-02-2010, 05:23 PM
எமனை ஏமாற்ற
ஏதேனும் காரணம் சொல்
என்னை ஏமாற்ற எண்ணிவிடாதே....
பொக்கைவாய் சிரிப்போடு
புகைப்படத்தில் உறைந்துவிடாதே....!!

ரொம்ப நல்லா இருக்கு..
நான் என் பாட்டியை பார்த்து வியந்து போய் இருக்கிறேன்..
என் பாட்டியை வைத்து என் அம்மாவை திட்டி இருக்கிறேன்..
பாட்டி கைப்பக்குவம் எல்லாமே தனி தான்
அவங்களை இழந்து இரண்டு வருடம் ஆகிறது..
இன்றுவரை அவங்களை மறக்க முடியவில்லை..
அம்மாச்சி, என்று ஆசையாக கூப்பிட ஆள் இல்லாமல் போச்சு...:traurig001:

சிவா.ஜி
05-02-2010, 04:09 AM
உண்மைதான் இன்பக்கவி. பாட்டியின் கைப்பக்குவம் மட்டுமல்ல, அனுபவம், பாசம் எல்லாமே அலாதியானது.

ரொம்ப நன்றிங்க.

அமரன்
05-02-2010, 05:36 AM
என்னைப் பொறுத்தவரை பலரின் குறும்புகளின் கன்னி ஆடுகளம் பாட்டிகள்தாம். பாட்டியின் கொட்டாம் பெட்டியை ஒளித்து வைப்பதும். அறிந்த பாட்டே அறிந்தே திட்டுவதும்.. பேரன்/பேத்தி ஓடுவதும்.கையில் பொல்லுடன் பாட்டி துரத்துவதும்.. இருவருக்குள்ளும் பொங்கும் பாசப் பூம்புனலுடன் குறும்பு நுரைக்க விளையாடும் இந்த விளையாட்டு பருவ வயதில் காதல் விளையாட்டின் அரிச்சுவடியாகவே இப்போது தோன்றுகிறது. பாட்டி இதைக் கூட விட்டு வைக்கவில்லை கற்றுத்தராமல்.

வெளிநாட்டு வாழ் தமிழ்பிள்ளைகளின் சீர்கெட்ட நடத்தைக்கு பாட்டிகள் இல்லாத வீடும் முதன்மைக் காரணங்களில் ஒன்று!

பாராட்டுகள் பாஸ்.

சிவா.ஜி
05-02-2010, 05:42 AM
ஆஹா....பாட்டியுடன் விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு குறித்து உங்கள் விவரனை அசத்தல் பாஸ்.

வெளிநாட்டுவாழ் தமிழ்பிள்ளைகள் மட்டுமில்லை அமரன், உள்நாட்டிலேயே நகரங்களிலும் இதே கதைதான். பெரியவர்களை யாரும் உடன் வைத்துக்கொள்வதில்லை, அப்படியே வைத்துக்கொண்டாலும், இளம்வயதினர் மதிப்பதே இல்லை.

"சும்மா கெட பெருசு" என்று அலட்சியமாய் சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள்.

நன்றி அமரன்ஜி.

கீதம்
05-02-2010, 05:47 AM
தாய்வழிப்பாட்டி, தந்தைவழிப்பாட்டி இருவருடனும் என் இள வயதினைக் கழித்தவகையில் நான் மிகவும் பாக்கியசாலியாக உணர்கிறேன்.

அந்த இனிய நினைவுகளை மீண்டும் உயிர்த்தெழச் செய்த கவிதைக்கு என் பாராட்டுகள்.

aren
05-02-2010, 05:48 AM
என்னுடைய அப்பா வழிப்பாட்டியை என் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.

ஆனால் எங்கள் பாட்டி வெறும் பாட்டி கிடையாது, வீட்டின் அனைத்து பொறுப்புகளையும் தன் தலையிலே எடுத்துக்கொண்டு எவ்வளவு எளிதாக முடிவுகளை எடுத்து, இன்றைய எம்பிஏக்களுக்கு சான்ஸே இல்லை.

பாராட்டுக்கள் சிவாஜி. இன்னும் கொடுங்கள்.

இளசு
05-02-2010, 05:49 AM
தொடுதல் எனும் ஸ்பரிசம்..
தவறு செய்தாலும் குறையாப் பாசம்
அணைந்து மோந்த கணங்களின் வாசம்..

அம்மா - திட உணவு..
பாட்டி - திரவ உணவு..

அருந்த, சீரணிக்க ஏதானது..


பரிணாமத்தில் பாட்டிகள் தரித்திருக்க முக்கியக்காரணம் -
பாட்டிகள் பாச அரங்கமாயும், அனுபவச் சுரங்கமாயும் இருப்பதே..


சிவாவின் கவிதை முழுதும் அசத்தும் வரிகள்...
சாத்து விழாமல் அதில் உச்சம்!

வாழ்த்துகள்!


முக-வரி உயில் கேட்ட ஆதனுக்கு அன்பு..

அமரப் பின்னூட்டக் கடைசி வரி நிஜம்..

சிவா.ஜி
05-02-2010, 06:03 AM
பாக்கியம் செய்தவர் நீங்கள் கீதம் அவர்களே. இருவழிப் பாட்டிகளிடமிருந்தும் பாசத்தை பெற்றிருக்கிறீர்கள். என் தந்தை வழி பாட்டியை நான் பார்த்ததேயில்லை. ஆனால் அம்மா வழிப்பாட்டி...கிராமத்து பாட்டி. கதை சொன்ன பாட்டி.

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி கீதம்.

சிவா.ஜி
05-02-2010, 06:04 AM
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஆரென். அவர்களின் அனுபவ அறிவுக்கு முன்னால் எம்.பி.ஏ ஒன்றுமேயில்லை.

பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி ஆரென்.

சிவா.ஜி
05-02-2010, 06:07 AM
மிகச் சரியான கருத்துகள் இளசு. திரவ உணவுதான்...பாட்டிகள். வெற்றிலை குதப்பியபடி லயித்து சொல்லும் கதைகள்...குழந்தைகளுக்கு தூக்கமருந்து. கைவைத்தியம்....பாட்டிகளின் அரு மருந்து.

மிக்க நன்றி இளசு.

பா.ராஜேஷ்
10-02-2010, 02:49 PM
பாட்டிகள் உண்மையில் பொக்கிஷங்கள்... அருமையான கவிதை சிவா அண்ணா !

சிவா.ஜி
10-02-2010, 02:55 PM
உண்மைதான் ராஜேஷ். பாட்டிகளிடம் வளர்ந்தவர்களுக்குத்தான் அவர்களின் அருமை தெரியும். நன்றி ராஜேஷ்.

govindh
07-03-2010, 07:49 PM
செல்லப்பாட்டியே...
உள்ளத்தில்..
உறைந்து கிடந்த..பாட்டியின் நினைவுகளை..
உயிர் பெறச் செய்த கவிதை...!

அக்னி
09-03-2010, 06:54 AM
பாட்டா பாட்டியின்
பாசமே தனி வழி...

அதிலும்,
தள்ளாடும் அந்த வயதும்,
மழலைப் பருவமும்
சேர்ந்தடிக்கும் கொட்டம்..,
சொல்ல வார்த்தையேது...

ஆதன் சுட்டிய சிவா.ஜி யின் வரிகளும்,
சிவா.ஜி சுட்டிய ஆதனின் வரிகளும்,
அழகோ அழகு...

எம்முடன் ஒரு ஆச்சி இருந்தார்.
என்னை ‘ராசா’ என்றும் எனது அக்காவை ‘ராசாத்தி’ என்றும் பொக்கை வாய் நிறைய அழைப்பார்.
சிறுவயதில் எனக்கு வெட்கமாக இருக்கும்.
எனக்குப் பதினொரு வயதாகையில் அவர் மறைந்தபின் அந்த வெட்கம் ஏக்கமாக மாறியது.

‘தான் பொங்கல் நாளில் பிறந்தேன்’ என்று அடிக்கடி சொல்லும் ஆச்சி,
தனது சொந்தபந்தங்களைத் துறந்து, எம் குடும்பத்தோடு வாழ்ந்து ஒரு பொங்கல் நாளில் மறைந்து போனார்.
என் குழந்தைப் பருவத்துச் சேட்டைகளுக்கு என்றுமே முகம் சுழிக்காத அவர் முகம்,
எப்போதாவது என் நினைவில் வந்து போகும்.
இந்தக் கவிதைக்குப் பின் இனி அடிக்கடி நினைவில் வரும்...

பெற்றோரையே பாரமாய் நினைக்கும் உலகில்,
பாட்டியின் ஸ்பரிசத்துக்கும் பாசத்துக்கும்
ஏங்கும் கவிதைக்குப் பாராட்டு...

சிவா.ஜி
09-03-2010, 07:46 AM
நன்றி கோவிந்த்...எல்லோர் உள்ளத்திலும், இனிப்பான நினைவுகளாய் உறைந்து போன பாட்டிகள் இருப்பார்கள். அவர்கள் என்றென்றும் நினைவில் வாழுவார்கள்.

மிக்க நன்றி.

சிவா.ஜி
09-03-2010, 07:55 AM
பொங்கலில் பிறந்து உங்களுக்குக் கிடைத்தப் பாட்டியும் பொங்கலன்றே இறந்துப் போனாலும், இறவாத அவர் நினைவுகள், உங்களை 'ராசா' என்றே அழைத்துக் கொண்டிருக்கும் அக்னி.

பெற்றொருக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளியைவிட பாட்டா, பாட்டிகளுக்கும், பேரன் பேத்திகளுக்குமான இடைவெளி மிகக்குறைவு....நெருக்கமும், நேசமும் நிறைந்த உறவுகள்.

நினைவுகளின் பகிர்வுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி அக்னி.