PDA

View Full Version : ஒரு சொட்டுக் கண்ணீர்



கலையரசி
03-02-2010, 01:11 PM
இரவு பதினொன்றைத் தாண்டிய பிறகு, கதவு தட்டப்படும் ஓசை கேட்டுத் திறந்த பார்வதியம்மாள், தன் மகள் ரமாவைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.

'இந்நேரத்தில் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கணவர் இல்லாமல் மகள் வந்து நிற்கிறாள் என்றால்?' ஏதோ பிரச்சினை என்று அவளுக்குப் புரிந்தது.

"என்னம்மா இந்த நேரத்தில்?" என்று மட்டும் கேட்டு வைத்தாள்.
"ஒண்ணுமில்லம்மா. எனக்கும் அவருக்கும் சின்னப் பிரச்சினை. பயப்படுறாப்ல ஒண்ணுமில்ல. நீங்கப் போய்ப் படுங்க. காலையில பேசிக்கலாம்"

அம்மாவைச் சமாதானப்படுத்திவிட்டு, பையன்கள் இருவரையும் தூங்கச் சொல்லிவிட்டு சின்னவன் பக்கத்தில் படுத்துக் கொண்டாளே தவிர ரமாவுக்குத் தூக்கம் வரவில்லை. பாயில் படுத்த போது கணவனிடம் வாங்கிய அடியால் கன்றிப்போயிருந்த முதுகு வலித்தது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு தான் என்ன? நினைக்க நினைக்க அவளுக்குக் குழப்பமாகயிருந்தது. இதுவரை வாய் வார்த்தையாகச் சண்டை போட்டுக் கொண்டிருந்தவன், இப்போது அடிக்கவும் ஆரம்பித்து விட்டான்.

சோதிடத்தில் அவள் கணவன் சேகருக்கு அளவுக்கு மீறிய நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கையே தன் வாழ்வில் இந்தளவுக்குப் பிரச்சினையைக் கொடுக்கும் என அவள் கனவிலும் நினைக்கவில்லை. திருமணமான புதிதில் உட்கார்ந்தால் சோதிடம், எழுந்தால் சோதிடம் என்ற சேகரின் செயல்பாடு அவளுக்கு எரிச்சலைத் தந்தது.

"நம்பிக்கை இருக்க வேண்டியது தான். அதுக்காக நம்ம மூளையை உபயோகிச்சு முடிவு எதுவும் எடுக்காம, எதுக்கெடுத்தாலும் ஜோஸ்யக்காரன் சொல்றதையே கண்ணை மூடிட்டு செய்றதில எனக்கு உடன்பாடில்லை" என்று அவனிடம் சொல்லிப் பார்த்தாள். ஆனால் முன் கோபமும் மூர்க்க குணமும் கொண்ட அவனைத் திருத்த முடியாது என்பது தெரிந்ததும், பிரச்சினையைத் தவிர்க்க எண்ணி, அவனிஷ்டத்துக்குச் செயல்படட்டும் என்று ஒதுங்கிக் கொண்டாள்.

அவளுடன் வேலை பார்த்தவர்கள் எல்லாரும் மனை வாங்கி வீடு கட்டிய பிறகும், தான் வாடகை வீட்டில் இருக்க வேண்டியிருந்தை நினைத்து மனம் நொந்து கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை. தனது ஜாதகத்தைப் பார்த்துச் சோதிடர் சொல்லும் திசையில் தான் மனை வாங்குவேன் என அடம் பிடித்தான் சேகர்.
அதற்கப்புறம் வீட்டு வேலையை எப்போது துவங்குவது, மாடி கட்டலாமா வேண்டாமா என்று ஒவ்வொன்றிற்கும் சோதிடரைக் கேட்டு கேட்டு வீட்டை முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

ஒருவழியாக வீட்டை முடித்து புது வீட்டிற்குக் குடியேறி சரியாக ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் இன்னொரு பிரச்சினை. ஒருநாள் சோதிடரிடம் போய் பையன்கள் ஜாதகத்தைப் பார்த்ததிலிருந்து பிரச்சினை ஆரம்பமானது.

"வயசான காலத்துல பெரியவன் உங்களை வைச்சு சோறு போட மாட்டான். சின்னவன் தான் உங்களை வைச்சு காப்பாத்துவான்" என்று ஜாதகங்களைப் பார்த்து விட்டு எவனோ ஒரு ஜோஸ்யன் சொல்லிவிட்டதாக ருத்ர தாண்டவம் ஆடினான் சேகர்.

"ஜோஸ்யன் சொல்றதைக் கேட்டுட்டுப் பெரியவனை எப்பப் பார்த்தாலும் திட்டறீங்களே, இது உங்களுக்கே நியாயமாயிருக்கா? பசங்களைப் படிக்க வைக்கிறது நம்ம கடமை. வயசானப்புறம் அதுங்க நம்மளை வைச்சுக் காப்பாத்தணும்னு நாம ஏன் எதிர்பார்க்கணும்? நாம ரெண்டு பேரும் சம்பாதிக்கிறோம். நமக்கு பென்ஷன் வரும். அதுங்களை நம்பி நாம இருக்க வேண்டியதில்லை" என்று அவ்வப்போது சமாதானம் சொன்னாலும் அவன் போக்கை மாற்றிக் கொள்வதாயில்லை. நாளாக ஆக மகனைக் கண்டாலே ஒரு எதிரியைப் பார்ப்பது போல் நடக்க ஆரம்பித்தான்.

"நான் என்னம்மா தப்பு செஞ்சேன். அப்பா சதா என்னைத் திட்டிக்கிட்டேயிருக்காரு. வர வர வீட்டுல இருக்கவே புடிக்கல. எங்காவது ஓடிப் போயிடலாம்னு தோணுது" என்று செய்யாத தவறுக்குத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த பெரியவன் மனம் வெதும்பி பேசும் போது அவளுக்கு வருத்தமாயிருக்கும். இரண்டுங் கெட்டான் வயதில் மகன் எங்காவது ஓடிப் போயிடுவானோ என்ற பயம் காரணமாக, ஒவ்வொரு முறை சேகர் அவனைத் திட்டும் போதும், மகனுக்கு ஆதரவாக இவள் பேசத் தொடங்க, பிரச்சினை அதிகமாகிக் கொண்டே போனது.

சின்னப் பையனுக்கு மட்டும் அவன் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து பெரியவனை அலட்சியம் செய்த போது, அவனுக்கு அப்பா என்றாலே ஒருவிதப் பயமும் வெறுப்பும் தோன்றி மனதளவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டு படிப்பிலும் நாட்டம் குறையத் தொடங்கியது. எல்லாப் பாடங்களிலும் காலாண்டுத்தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களே அவன் பெற்றிருந்தான்.

முந்தின நாள் மாலை 'புராகிரஸ் ரிப்போட்'டைச் சின்னவன் கொண்டு வந்து சேகரிடம் கையெழுத்து வாங்கியதிலிருந்து பிரச்சினை ஆரம்பமானது.

உன்னோட எங்கடா?" என்று கேட்டு பெரியவனுடையதை வாங்கிப் பார்த்தவன், "நீ உருப்படவே மாட்டே. மார்க்கா வாங்கியிருக்கே. எல்லாத்திலேயும் ஜஸ்ட் பாஸ்" என்று சொல்லி .கம்பை எடுத்து அவனை விளாசித் தள்ளிவிட்டான்.

"எல்லாம் உங்களாலத் தான். அவனும் நாமப் பெத்த புள்ளைன்னு நினைக்காம எப்பப் பார்த்தாலும் அவனைத் திட்டிக்கிட்டேயிருந்தா அவனால எப்படி படிக்க முடியும்? என்று ரமா பையனுக்கு வக்காலத்து வாங்கி அவனை எதிர்த்துப் பேசவே, அவளுக்கும் கன்னத்திலும் முதுகிலும் அறை விழுந்தது.

"அவனைக் கெடுக்கிறதே நீ தான். நீ இனிமே இந்த வீட்டில ஒரு நிமிஷம் கூட இருக்கக்கூடாது. அவனையும் அழைச்சிக்கிட்டு வெளியில போ" என்று வெறி வந்தவன் போல் கத்தினான் சேகர்.

முன்பொருமுறை உளவியல் ரீதியாக அவனுக்கு ஏதேனும் பிரச்சினையிருக்குமோ எனச் சந்தேகித்தவள், அவன் இயல்பாகவிருந்த ஒரு நாளில் 'மனோத்தத்துவ டாக்டரிடம் ஆலோசனை
பெறலாம்' என்று யோசனை சொன்ன போது, "எனக்குக் கிறுக்கு புடிச்சிருக்குன்னு நினைச்சிக்கிட்டியா?" என்று கத்தி ஒரே ரகளை பண்ணிவிட்டான். அதனால் ஹிஸ்டீரியா வந்தவன் போல் அவன் கத்தும் போதெல்லாம் அமைதியாக அந்த இடத்தை விட்டுப் போய் விடுவாள் ரமா.

எனவே இந்தத் தடவையும் "இந்த ராத்திரியில நாங்க எங்க போவோம். விடியட்டும் காலையில போறோம்" என்று அமைதியாகச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் ரமா.

ஆனாலும் அவன் விடுவதாயில்லை.

"முடியாது. இப்பவே போகணும். ஒண்ணு இந்த வீட்டில நீங்கயிருக்கணும். இல்லேன்னா நான் இருக்கணும்" என்று சொல்லியவாறு அவளைப் பிடித்து வெளியேத் தள்ளிய போது சின்னவன் அம்மா சார்பாக அப்பாவிடம் பேச, அவனையும் சேர்த்து வெளியே தள்ளிக் கதவைத் தாளிட்டான் சேகர்.

கதவைத் தட்டி தட்டி ஓய்ந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் தெருவில் நின்ற போது, "அம்மா வாங்கம்மா. இவர்கிட்ட எதுக்குக் கெஞ்சிக்கிட்டிருக்கீங்க நான் உங்களுக்குத் துணையாயிருக்கேன். நாம பாட்டி வீட்டுல போய் இருக்கலாம்" என்றான் மூத்தவன்.
தெருவில் போவோரும் வருவோரும் ஒரு மாதிரியாக அவளைப் பார்த்துக் கொண்டு சென்ற போது அவளுக்குப் பயமாயிருந்தது. நல்ல வேளையாக பக்கத்து வீட்டு செளம்யாவின் அம்மாவும் அப்பாவும் வந்து வழிச்செலவுக்குப் பணம் கொடுத்ததோடு, "உங்கம்மா வீட்டுல போயிருங்க. நிலைமை சரியானப்புறம் வரலாம்," என்று சொல்லி பேருந்து நிலையத்துக்குச் செல்ல ஆட்டோவும் பிடித்துக் கொடுத்து உதவினர்.

இதே யோசனைகளுடன் சரியாகத் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவளை, அதிகாலையில் தொலைபேசியில் வந்த அழைப்பு திடுக்கிடச் செய்தது.

இந்த நேரத்தில் யாராகயிருக்கும்? ஒரு வேளை அவராக யிருக்குமோ?
இரவு தான் நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்து, "இனிமேல் அப்படி நடந்து கொள்ள மாட்டேன், வீட்டுக்கு வாங்க' என்று கூப்பிடுகிறாரோ?

அல்லது பக்கத்து வீட்டு செளம்யாவின் அப்பாவாக இருக்குமோ? இரவு நல்லவிதமாய் ஊர் போய்ச் சேர்ந்தீர்களா என்று கேட்பதற்காக போன் செய்கிறாரோ?

பல வித எண்ணங்களுடன் வந்து தொலைபேசியை எடுத்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பக்கத்து வீட்டுக்காரர் தான் பேசினார்.
"என்னண்ணே சொல்லுங்க"

"அம்மா ரமா. இராத்திரி நீங்க போய்க் கொஞ்ச நேரம் கழிச்சு சேகர் வந்து "எங்கே எல்லாரும்?"னு எங்களைக் கேட்டார்.

அவங்கம்மா வீட்டுக்குப் போயிட்டாங்கன்னு எங்க வீட்டம்மா சொன்னாங்க. அதோட போயி கதவைச் சாத்தினவரு தான். அதுக்கப்புறம் உள்ளேயிருந்து எந்தச் சத்தமும் கேட்கல.
வண்டியைக் கூட எடுத்து உள்ளாற வைக்கல. இப்பவும் இன்னும் கதவைத் திறக்கல. நானும் தட்டித் தட்டிப் பார்த்துட்டேன். எனக்கென்னவோ பயமாயிருக்கு. நீங்க உடனே கிளம்பி வாங்க."

"கடவுளே அவருக்கு எதுவும் நடந்திருக்கக் கூடாது" என்று வேண்டியபடியே அடித்துப் பிடித்துக் கொண்டு பையன்களையும் அழைத்துக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்த போது வீட்டின்
முன் கூட்டம் சேர்ந்திருந்தது. காவல்துறை அதிகாரியும் வந்திருந்தார்.
நடக்கக் கூடாதது நடந்து விட்டது என்று மட்டும் உள்மனம் கூறியது.

காவல் துறையினரின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்ற ரமா, அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சேகரின் உடலைப் பார்த்து அலறிவிட்டாள்.

நாக்கு வெளியே தொங்கி கண்கள் வெளியே பிதுங்கி பார்ப்பதற்கே மிகவும் கோரமாயிருந்தது அவன் முகம்.

ஏதாவது கடிதம் ஏதும் எழுதி வைத்திருக்கிறானா என்று வீடு முழுக்க சோதனை செய்த காவல் துறை, ரமாவிடமும் அவள் குழந்தைகளிடமும் மாறி மாறி விசாரணை செய்தது. முடிவில் பக்கத்து வீட்டிலும் தெருவிலும் சிலரை விசாரணை நடத்தி தற்கொலை தான் என்ற முடிவுக்கு வந்தது,

போஸ்ட் மார்ட்டம் உட்பட எல்லா காரியங்களும் முடிந்து, தனக்கு முன் கிடத்தியிருந்த கணவன் உடலைப் பார்த்து துளிக்கூட அழுகை வரவில்லை ரமாவுக்கு.

அவனது இந்த திடீர் முடிவை அவள் சிறிதும் எதிர்பார்த்திராததால் அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.

வாழ வேண்டிய வயதில் ஒன்றுமில்லாப் பிரச்சினைக்கு இப்படி ஒரு முடிவு எடுத்து தன்னையும் தன் குழந்தைகளையும் அனாதைகளாக ஆக்கி விட்டுச் சென்று விட்டாரே என்று கணவன் மேல் ஆத்திரம் பொங்கியது.

செய்தி கேள்விப்பட்டு வந்து சேர்ந்த சேகரின் அம்மா,
"அய்யோ என் புள்ளையைத் தனியா விட்டுடு இவ பாட்டுக்கு அவ அம்மா வூட்டுக்குப் போனதால தான் அவன் இப்படி பண்ணிக்கிட்டான். இவ போகாம இருந்திருந்தா என் புள்ளை இப்படியொரு ஒரு காரியம் பண்ணியிருக்க மாட்டான்" என்று பெருங் கூப்பாடு போட்டு அழுதாள்.

" அண்ணனைப் பத்தித் தான் உங்களுக்குத் தெரியுமே அண்ணி. கொஞ்ச நேரம் சத்தம் போடும். அப்புறம் கூப்பிட்டு வைச்சுக் கொஞ்சும். நீங்க இப்படி பசங்களையும் அழைச்சிக்கிட்டு அண்ணனைத் தனியா விட்டுட்டு போயிருக்கக் கூடாது," என்று அவன் கூடப் பிறந்தவர்கள் அவள் தரப்பு வாதம் எதையும் கேட்காமல் ஒவ்வொருவராக வந்து அவன் சாவுக்கு அவள் தான் காரணம் என்பது போல் சொல்லவே, அவளுக்கு ஆக்ரோஷம் அதிகமாயிற்று.

"ஆமாம் நான் தான் உங்க அண்ணனைக் கொன்னேன். என்னாலத் தான் அவரு செத்தாரு. ஊராருக்கு முன் அடிச்சிட்டுக்கிட்டு அழுது ஒப்பாரி வைச்சு, நான் அவரோட உண்மையான மனைவி, அவரோட இந்த முடிவுக்குத் நான் காரணம் இல்லைன்னு நிருபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. இவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் ஒண்ணும் சொகப்படலே. உயிரோட இருக்கும் போதும் என்னையும் என் குழந்தைகளையும் பாடாத் தான் படுத்தி வைச்சாரு. செத்த பிறகும் என்னால தான் செத்தது மாதிரி என்மேல இப்படி ஒரு அபவாதத்தை ஏற்படுத்திட்டுப் போயிட்டாரு. இவருக்காக நான் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடமாட்டேன்" என்று கோபமாகச் சொல்லிவிட்டுத்
தன்னைக் கட்டிக் கொண்டு அழ வந்த நாத்தானாரின் கைகளைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.

"என்ன தான் புருஷன் கொடுமைக்காரனாயிருந்தாலும், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாம இப்படியா ஒருத்தியிருப்பா," என்று உறவுக்கார பெண்கள் சிலர் காதைக் கடித்துக் கொண்டனர்.

"தான் வேலையிருக்கிறோம். நல்லாச் சம்பாதிக்கிறோம். அதனால புருஷன் போனாலென்ன? நாம மாமியார், நாத்தனார்னு யாரையும் சட்டை பண்ண வேண்டியதில்லேங்கிற திமிர் அவளுக்கு" என்று அங்கலாய்த்த அவளது புகுந்த வீட்டு உறவுக்காரர்களில் சிலர் ஒன்று கூடி, அவளை அழ வைப்பது எப்படி என்று சதியாலோசனை செய்தனர்.

மறுநாட்காலை மக்களின் வக்கிர உணர்வுகளைத் தூண்டும் வகையில் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை ஆகிய செய்திகளை முக்கிய செய்திகளாகப் பிரசுரித்து விற்பனையில் சாதனை(!) படைத்திருந்த நாளிதழ் ஒன்றில் தன்னைப் பற்றி அவதூறான செய்தி வெளியாகியிருப்பதாகத் தன் அலுவலக நண்பி மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்தாள் ரமா.

கணவனின் இந்தத் திடீர் முடிவைத் தைரியமாக எதிர்கொண்டவள், அந்தச் செய்தியைக் கேட்டு அழுதாள், அழுதாள், அழுது கொண்டேயிருந்தாள்.

நாளிதழில் வெளியாகியிருந்த அந்தச் செய்தி:-

"மனைவி நடத்தையில் சந்தேகம்; கணவன் தற்கொலை"

சிவா.ஜி
03-02-2010, 02:41 PM
ஜோசியத்தை நம்பி, முதன் முதல் தனக்கு தந்தை ஸ்தானத்தை தந்தவனையே வெறுத்த கணவன். மனம் பிறழ்ந்த நிலையில் அவன் படுத்திய கொடுமைகளை அனுபவிக்கும் ரமா, அல்ப காரணத்துக்காக தன் உயிரை மாய்த்துக்கொண்டு பிள்ளைகளை அனாதையாக்கிவிட்ட பொறுப்பில்லாக் கணவனுக்காக கண்ணீர் விட மறுப்பதில் நியாயம் இருக்கிறது.

ஆனால் அதே உறுதி, தன் நடத்தையை சந்தேகப்படும்போது உடைந்துவிடுகிறது. எத்தனைதான், சுயமாய் சம்பாதிக்கும் திறமையிருந்தாலும், இப்படிப்பட்ட சமூகக் கல்லடிகளைத் தாங்கும் வலிமை பல பெண்களுக்கு இருப்பதில்லை. அவர்களின் மெல்லிய குணத்தை இந்த சமுதாயம் பலகீனமாய் நினைத்துவிடுகிறது.

நல்ல பெண்களுக்கு சோதனைகளை தாராளமாய்க் கொடுக்கும் இந்த சமூகம்...திருந்துவது எப்போது?

நல்ல கதை கலையரசி அவர்களே. கடைசி பத்தியில் கலங்க வைத்துவிட்டீர்கள். வாழ்த்துகள்.

கீதம்
04-02-2010, 06:20 AM
நெஞ்சம் நெகிழச் செய்த கதை. பல பெண்களின் வாழ்வு இப்படிதான் சூழலால் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாகிப்போகிறது. அவர்களுக்காக பரிதாபப்படுகிறேன்.

உணர்வுபூர்வ கதைக்கு பாராட்டுகள்.

கலையரசி
05-02-2010, 01:07 PM
வாழ்வை இழந்து தவிக்கும் பெண்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டிய
சமூகமோ அவர்களை அழ வைத்துப் பார்ப்பதில் குரூர திருப்தி கொள்கிறது.
நன்றி கீதம்.

aren
09-02-2010, 03:36 AM
ஜோசியதத்தை நம்புவதை நான் எதிர்க்கவில்லை, ஆனால் அந்த நம்புவதிலும் ஒரு லிமிட் இருக்கிறது. அந்த லிமிட்டைத் தாண்டும்பொழுதுதான் விபரீதம் நடக்கிறது. எதுவுமே ஒரு அளவோட இருத்தலே நலம் என்ற நல்ல கருத்தைக்கொண்டுள்ளது உங்கள் கதை.

இன்னும் எழுதுங்கள்.

கலையரசி
14-02-2010, 12:24 PM
ஜோசியதத்தை நம்புவதை நான் எதிர்க்கவில்லை, ஆனால் அந்த நம்புவதிலும் ஒரு லிமிட் இருக்கிறது. அந்த லிமிட்டைத் தாண்டும்பொழுதுதான் விபரீதம் நடக்கிறது. எதுவுமே ஒரு அளவோட இருத்தலே நலம் என்ற நல்ல கருத்தைக்கொண்டுள்ளது உங்கள் கதை.

இன்னும் எழுதுங்கள்.

ஆரென் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இளசு
17-02-2010, 08:46 PM
நல்ல சிறுகதை. பாராட்டுகள் கலையரசி.

சிவா சொன்னதுபோல் அடிதாங்கிப்பழகிய பெண் மனதை
இடியாய்த் தாக்கும் சில நம் மண்ணில் உண்டு..

பரத்தை, மலடி,ராசி இல்லாதவள், தோஷம் உள்ளவள் - எனும் இடிகள்.


பரபரப்பு இதழியல் தர்மப்படி ஓரிடி இறங்க
பாவம் அவள் கலங்கியதில் வியப்பென்ன?

கலையரசி
18-02-2010, 03:58 PM
அழகான வரிகளில் அருமையான கருத்துக்களைக் கொண்டு பின்னூட்டம் எழுதிய இளசு அவர்களுக்கு நன்றி.