PDA

View Full Version : ஜனநாயக அடிமைகள்



mannar amuthan
02-02-2010, 10:16 AM
மெய்யைத் தின்ற இருட்டு
செரிக்க முடியாமல்
மேடையில் வெளிச்சத்தைக் கக்க

மினுங்கும் உடைகளுள்
புதைந்த உடல்களோடு
வெளிப்படுகிறது பொய்மை

பொய்யைத் துப்பிப்
பின்னும் வலைகளில்
புலன்களையடக்கும் பூச்சிகள்

மோகப் போதையில்
வறுமையை முகிழ்தெடுக்கப்
போதையும் புழங்கும்

கரைவேட்டி கையசைக்க
அரைக் கோவணமும்
அசைகிறது அனிச்சையாய்

சிலநூறு ரூபாய்களுக்கும்
ஒரு வேளை உணவிற்கும்
விற்கப்படும் தேசியம்

தனியுடமை
விதைத் தறுத்த
விலையுயர்ந்த யுக்தியில்…
ஒளிவெள்ளம் எமை நோக்க
பாலிற்குப் பசித்தழும்
குழந்தையையும் மறந்து
காணொளிக்காய் அசைகிறது கை

எவனையோ தெரிவு செய்ய
எம்மையே தொலைத்த
கூட்டமொன்று,
மூலை முடுக்கெல்லாம்
கொடிகட்ட ஓடியலைகிறது
நிர்வாணமாய்

முள்வேலிக்குள் அவர்கள்
கூக்குரலிட்ட காலம் மறந்து
இவர்கள் அவனுக்காய்க்
குலவையிட
மீண்டும் அறுவடையாகும்
நம்மினம்…ஜனநாயக அடிமைகளாய்

சிவா.ஜி
02-02-2010, 10:49 AM
நீங்கள் சமீபத்திய இலங்கை தேர்தலைக் கண்டு இதை எழுதினீர்களா...இல்லை எங்கள் மண்ணில் நடக்கும் கேவலத்தை எண்ணி எழுதீனீர்களா தெரியவில்லை....ஆனால் நிச்சயம்...இங்கு நடக்கும் கூத்துக்கள் அங்கு நடக்காது என உறுதியாய் சொல்ல முடியும்.

வார்த்தைகளில் ஆவேசமும், ஆற்றாமையும்...தெரிகிறது. திருத்த முடியாத இந்த நிர்வாண ஜனங்களுக்கு எத்தனை கவிதை எழுதினாலும், எதுவும் அவர்களின் கண்களுக்கு தெரியப்போவதில்லை.

பிரியாணி உண்ட களைப்பில், கரன்சியை கண்களின் மேல் மூடிக்கொண்டு உண்ட மயக்கத்திலிருக்கிறார்கள்.

வாழ்த்துகள் அமுதன்.

Narathar
02-02-2010, 11:00 AM
மீண்டும் அறுவடையாகும்
நம்மினம்…ஜனநாயக அடிமைகளாய்

இந்த இரு வரியின் வீரியம் போதும்!
உங்கள் கவிதையின் முழுப்பொருளை உணர்த்த

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்

mannar amuthan
03-02-2010, 04:39 AM
தோழர்களுக்கு,

இலங்கை தேர்தலை மையப்படுத்தியே எழுதினேன். இந்திய அரசியலும் அறிவேன். அரசியல் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரித் தான் உள்ளது. இலங்கையில் தமிழ்த் தலைமைகளே தமிழ் மக்களை பேரினவாதிகளிடம் தங்களது சுயலாபத்திற்காக அடகு வைப்பது மேலதிக வேதனை.

நன்றிகள்
மன்னார் அமுதன்
http://amuthan.wordpress.com/

அமரன்
03-02-2010, 05:35 AM
அபாரம் அமுதன்..

எதுக்காகா அழுதாலும் அடக்கி விடலாம் குழந்தையை,
பசியால் அழுதால்.. பால்தான் அவசியம்.
பொம்மைக்காரும்.. பஞ்சு மிட்டாயும் அல்ல.

மன்னாரில் மீண்டும் மீன்பிடித்தடை என்கிறது ரவூப் ஹஹ்ஹீம் செவ்வி.

உங்கள் இறுதி அடியோசை காது வழி புகுந்து உயிரை உலுக்கிறது.

mannar amuthan
18-10-2010, 07:15 AM
என்றோ....
எவனோ வீசிய
எச்சில் இலைகளைத்
தின்று உயிர்க்கும்
பிச்சைக்காரி

'பாவம்,
தின்னட்டும்'

குரல் கொடுக்கும்
கனவான்கள்

உண்டதைத் தின்று
மீந்ததை ஈந்து
சில நாய்களோடு
சொந்தம் சேர்வாள்

நன்றிப் பெருக்கால்
நாய்களும் பின்செலும்

இருளைப் போர்த்தியவள்
உறங்கும் இரவுகளில்
நாய்கள் துணை தேடித்
தெருவிற்குள் செல்லும்

குப்பை மேட்டில்
வெறித்த கண்களால்
அவள் கிளிந்த உடைகளுள்
எதையோ தின்று கொண்டிருப்பான்
இலை வீசியவனும் ...
குரல் கொடுத்தவனும் ...

ஆக்கம்: மன்னார் அமுதன் - இலங்கை

inban
19-10-2010, 05:14 PM
மன்னார் அமுதன் ' ஜனநாயக அடிமைகள்' கவிதை அற்புதம்.

mannar amuthan
26-10-2010, 04:33 AM
நன்றி ஐயா