PDA

View Full Version : அப்பா வருவார்



கீதம்
02-02-2010, 07:32 AM
சின்னஞ்சிறு கண்மலர்
செம்பவள வாய்மலர்
சிந்திடும் அழகே ஆராரோ......
வண்ணத்தமிழ் சோலையில்
மாணிக்க மாலையில்
ஆராரோ...அன்பே ஆராரோ......

பானுமதி தன் மடியில் தலைவைத்துப் படித்திருந்த பேத்திகள் சந்தியா, சரண்யா இருவரையும் இருகைகளாலும் தட்டிக்கொடுத்துக் கொண்டே பாடிக்கொண்டிருந்தார். ஹாலில் அமர்ந்து மாணவிகளின் தேர்வுத்தாள்களைத் திருத்திக் கொண்டிருந்த மஞ்சரியின் கவனம் அம்மாவிடம் திரும்பியது.

எத்தனை வசீகரக் குரல்! முறையான வாய்ப்புக் கிட்டியிருந்தால் சுசீலா, ஜானகி இவர்களின் வரிசையில் அம்மாவும் இடம் பெற்றிருப்பார் என்று தோன்றியது. பானுமதி தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார்.

பாப்பா உன் அப்பாவைப்
பார்க்காத ஏக்கமோ...
பாய்ந்தே அவர் மடிதனில்
சாய்ந்தால்தான் தூக்கமோ..
தப்பாமல் வந்துன்னை
அள்ளியே அணைப்பார்..
தாமரைக் கன்னத்தில்
முத்தங்கள் கொடுப்பார்..
குப்பைதனில் வாழும்
குன்றுமணிச்சரமே...
கொஞ்சிடும் அழகே ஆராரோ...

அப்பப்பா! இந்தப் பாட்டைப் பாடவேண்டாமென்று அம்மாவிடம் எத்தனை முறைதான் சொல்வது?
ஆறு வருடங்களாக அலுக்காமல் பாடிக்கொண்டிருக்கிறார். அப்பா வருவாரென்று குழந்தைகளிடம் ஏன் பொய் சொல்லி ஏமாற்ற வேண்டும்? மஞ்சரி அலுத்துக் கொண்டாள். தனக்கும் இந்தப் பாட்டைப் பாடித்தான் தாலாட்டி இருப்பாரோ?

அப்பா வருவார், அப்பா வருவார் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. 'அப்பா' என்றாலே மங்கிய ஓர் ஆணுருவம் அவள் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. அம்மாவின் திருமணப் புகைப்படமும் செல்லரித்த நிலையில்! அம்மா மட்டும் இன்னும் செல்லரிக்காத நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் ஓடிப்போன அப்பாவின் வரவுக்காக!

மஞ்சரியைப் பொறுத்தவரை விலகிப்போன அப்பா திரும்பி வரவேண்டுமென்றோ, விட்டுப்பிரிந்த கணவன் திருந்தி வரவேண்டுமென்றோ எந்த விருப்பமும் இல்லை. ஓடிப்போனவர்கள் ஓடிப்போனவர்களாகவே இருக்கட்டும். வாழ்க்கை சலனமற்ற நீரோட்டம்போல் நகர்ந்து கொண்டிருக்கிறது. மீண்டும் சுழலில் சிக்கித்தவிக்க அவள் தயாராக இல்லை. மஞ்சரி இப்போதுதான் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் உணர்ந்தாள். அம்மாவும், தன்னிரு பெண்களும் போதும்; அந்தச் சின்னக்கூட்டுக்குள் சிறகடித்துப் படபடத்தது அவள் மனம்.

பேத்திகளை உறங்கவைத்துவிட்டு பானுமதி மகளிடம் வந்தார். மஞ்சரியின் தோள் தொட்டு,
"என்னம்மா, இன்னும் தூங்கலையா?" என்றார்.
"ப்ச்! நிறைய வேலை இருக்கம்மா"
என்றவள், அம்மாவிடம் எதையோ சொல்ல நினைத்துப் பின் தயங்கியவளாய் அதைக் கைவிட்டாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடம், பானுமதி கையில் டீயுடன் வந்து நின்றார். மஞ்சரிக்கு இதிலொன்றும் ஆச்சரியம் இல்லை. இதுபோல் எத்தனையோ நிகழ்வுகள்! அவள் நினைப்பாள்; அம்மா முடிப்பார்.

ஒரு புன்சிரிப்புடன் கோப்பையைக் கையில் வாங்கியவள்,

"அம்மா, நீங்கள் வணிகவியல் படிச்சதுக்குப் பதிலா உளவியல் படிச்சிருக்கலாம். நான் என்ன நினைச்சாலும் கண்டுபிடிச்சிடுறீங்க!" என்றாள்.

பானுமதி புன்னகைத்தார். மஞ்சரி தாயின் வாயைக் கிளறும் நோக்கில் மேலும் தொடர்ந்தாள்.

"ஆனால், உங்கள் எண்ணத்தைக் கண்டுபிடிக்கறதுதான் எனக்கு சவாலா இருக்கு.
இல்லைன்னா, இவ்வளவு அருமையான் அம்மாவை விட்டுட்டு அப்பா ஏன் ஓடிப்போனார்னு இந்நேரம் கண்டுபிடிச்சிருப்பேனே!"

பானுமதி சொல்ல எதுவுமில்லாதவர் போல் மெல்லிய புன்னகையொன்றைப் பதிலாய்த் தந்துவிட்டுச் சென்றார். எப்படிப்பட்ட மலையையும் உளி கொண்டு செதுக்கிவிடலாம். ஆனால் அம்மாவின் வாயிலிருந்து அப்பாவைப் பற்றிய விபரம் அறிவதென்பது அசாத்தியம் என்பது அவள் அனுபவபூர்வமாகக் கண்ட உண்மை. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமாமே! அவர் துளியும் அசைவதாய்க் காணோம்.



****************************************************************************************



"மஞ்சு...மஞ்சு......எழுந்திரிம்மா....! நேரமாச்சி! கோயிலுக்குப் போகவேணாமா? உன் மகள்களைப்பாரு!"

இரவு தாமதமாய்ப் படுத்ததன் விளைவு, கண்களைத் திறக்கவும் இயலவில்லை.

"அம்மா! நாங்க ரெடி!"

ஒருமித்தக் குரலில் இருவரும் கூற, மஞ்சரி அவசரமாக எழுந்து அமர்ந்தாள். எதிரில் புத்தாடை அணிந்த இரு பூச்செண்டுகள் நின்றிருந்தன.

"ஹேப்பி பர்த்டே செல்லக்குட்டி! ஹேப்பி பர்த்டே பட்டுக்குட்டி! என் கண்மணி ரெண்டும் எப்பவும் இதேமாதிரி சந்தோஷமா இருக்கணும், அதான் இந்த அம்மாவுடைய ஆசை!"

இருவரையும் அணைத்து உச்சி முகர்ந்தாள். ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பதுமைகளென நின்றவர்களைப் பெருமிதம் பொங்கப் பார்த்தாள். அவர்களை தனியே அடையாளங்காண மஞ்சரியையும், பானுமதியையும் தவிர வேறெவராலும் இயலாது. அவ்வளவு ஏன்? அவர்களைப் பெற்றவனாலும் முடியாது. அவன்தான் அவர்களைப் பார்த்ததே இல்லையே!

தயாளனைப் பற்றிய நினைவே வேதனையைத் தந்தது. தயாளன்! என்னவொரு பொருந்தாப் பெயர்! மனிதப் பிறவியின் பலனை அனுபவிக்கத் தெரியாதவன். சந்தேகத்தையே தன் உடலில் இரத்தமாய் ஓடவிட்டிருந்தான் அவன். எதற்கெடுத்தாலும் சந்தேகம்...சந்தேகம்...சந்தேகம்தான். அவனைத் திருத்திவிடலாம் என்றுதான் ஆரம்பத்தில் மஞ்சரி நினைத்திருந்தாள். ஆனால் அது இயலாத காரியமென்று போகப்போகத்தான் புரிந்தது.

படித்திருந்து பயனென்ன? எந்த வேலையிலும் நிரந்தரமாகத் தங்கவிடாத குரங்குபுத்தி! அவன் அலுவலகம் சென்ற நாட்களைவிட வீட்டிலிருந்தவையே அதிகம்! மஞ்சரி வீட்டுக்குள் நுழையுமுன்பே விசாரணை துவங்கிவிடும்.

"ஏண்டி லேட்?"
"யாருடி அவன், உன் பக்கத்திலே நின்னுகிட்டிருந்தவன்?"
"பஸ் ஸ்டாப்பிலே என்னடி இளிப்பு?"

இப்படி எத்தனையோ!என்ன விளக்கம் கொடுத்தாலும் அதிலொரு குதர்க்கம், குத்தல் பேச்சு!

அவளை தினமும் அடித்துத் துன்புறுத்த ஒரு காரணம் தேவைப்பட்டது அவனுக்கு. மஞ்சரி ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்தாள். உடன் பணியாற்றும் ஆசிரியர்களிடம் பேசுவதையும் தவிர்த்தாள். தன் துயரக்கதை எதுவும் பானுமதியின் காதுகளை எட்டிவிடாமல் பார்த்துக்கொண்டாள். அவராவது நிம்மதியாய் இருக்கட்டுமே!

இந்நிலையில்தான் மஞ்சரி கர்ப்பமானாள். கர்ப்பத்திலிருப்பவை இரட்டைக் குழந்தைகள் என்று தெரியவந்தது. குழந்தைகள் பிறந்த பின்பு அவன் மாறக்கூடும் என்று மஞ்சரி நம்பினாள்.

தயாளனது குறுக்குபுத்தியோ கொடூரமாக வேலை செய்தது. குழந்தைகள் தன் உதிரம்தானா என்று ஆராய்வதிலேயே குறியாக இருந்தான் அவன். கர்ப்பவதியென்றும் பாராமல் அவளை அடித்துத் துவைத்தான். எவரெவருடனோ அவளைத் தொடர்பு படுத்தி அவள் தன்மானத்தைத் தரைமட்டமாக்கினான்.

பொறுத்துப் பொறுத்துப் போனவள் உடல் வேதனையும், மன வேதனையும் ஒன்றுசேர, ஒருநாள் புலியெனப் புறப்பட்டாள்.

"ச்சீ! நீயும் ஒரு மனுஷனா?"

அவன் முகத்தில் காரி உமிழ்ந்தவள், விவாகரத்து செய்ய முடிவெடுத்தாள். இனி அவளிடம் தன் ஜம்பம் செல்லாதென அறிந்த தயாளன், அவளைப் பழிவாங்கக் காத்திருந்ததுபோல், பிரசவத்திற்கென்று மருத்துவமனையில் அவள் அனுமதிக்கப்பட்ட நன்னாளில் பணம், நகைகளை சுருட்டிக்கொண்டு தலைமறைவானான்.

ஆயிற்று! இன்றோடு ஆறு வருடங்கள்! ஆறு வருடம் என்பது மஞ்சரியின் ரணத்தை ஆற்றப் போதுமானதாக இல்லாவிடினும், மேற்கொண்டு காயங்களை உருவாக்காமல் இருந்தது. எப்படியாயினும் சரி! இனி அந்த மனிதனால் எனக்குத் துயர் வரப்போவதில்லை. அம்மாவைப் போல் கணவன் என்றாவது வருவான் என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் பேதை அல்ல அவள்.

"மஞ்சரி! இன்னும் குளியல் முடியலையா?"

"இதோ, வந்துட்டேம்மா!"

சுயநினைவுக்கு வந்தவள் வேகமாய்க் குளியலறை புகுந்தாள். என்ன வேலையிருந்தாலும் சரி, இந்த ஒருநாள் மட்டும் மஞ்சரி கட்டாயமாய் விடுப்பு எடுத்துக் கொள்வாள். அவள் வாழ்வில் திருப்பத்தைத் தந்த நாள் அல்லவா இது? குழந்தைகள் பிறந்தநாள் என்பதைவிடவும் தயாளன் என்ற சாத்தானிடமிருந்து விடுபட்ட நாள் என்பதே பெருமகிழ்வைத் தந்தது. குளித்துமுடித்து அம்மா வாங்கிவைத்திருந்த புதுச்சேலை உடுத்தி அலங்கரித்து வெளியில் வந்தவள்,

"அம்மா! பிறந்தநாள் எங்களுக்கா, உங்களுக்கா?"

என்ற குழந்தைகளின் கேள்வியில் திக்குமுக்காடிப் போனாள்.

"அவளுக்கு மறுபிறவி கிடைத்த நாள். அதனால் அம்மாவுக்கும் இதுதான் பிறந்தநாள்" என்றார் பானுமதி.

மஞ்சரிக்கு மனம் நெகிழ்ந்தது. அம்மா இப்படிதான்! நினைக்கும் எல்லாவற்றையும் படித்துவிடுகிறார். எதையும் அவரிடமிருந்து மறைக்க முடிவதில்லை. ஆனால்... அவர் மட்டும்...

'டிங் டாங்"
வாசலில் அழைப்புமணிச் சத்தம்.

"பூக்காரராயிருக்கும்!"

கதவைத் திறந்த பானுமதி வாயடைத்து நிற்க, பின்னால் வந்த மஞ்சரி அங்கு நின்றவனைப் பார்த்து மின்சாரத்தால் தாக்கப்பட்டவளைப் போல் உடல் குலுங்க அதிர்ந்து நின்றாள்.

யார்..? தயாளனா? ஏன் வந்திருக்கிறான்? இனி இவனுக்கு இங்கென்ன வேலை? களவாடிச் சென்றவை கரைந்துவிட்டனவா?

உடல் இளைத்து, கண்கள் குழிவிழுந்து, பரிதாபத்திற்குரியவனாய் நின்றவனை மஞ்சரி தன் கூரிய விழிகளால் ஏறிட்டாள். அனல் கக்கும் பார்வையை சந்திக்கத் திராணியற்றவனாய் அவன் விழிகளைத் தாழ்த்தினான். தடுமாற்றமில்லாத குரலில் மஞ்சரி பேசினாள்

"நீங்க ஏன் இப்ப வந்திருக்கீங்கன்னு எனக்குத் தெரியாது; தெரிஞ்சுக்கவும் விருப்பமில்லே. ஆறு வருஷத்துக்கு முன்னாலேயே நம் உறவு முறிஞ்சிட்டுது. அதைக் கொண்டாடத்தான் கோயிலுக்குப் போய்க்கிட்டிருக்கேன். நான் பழைய மஞ்சரியில்ல, உங்க ஏச்சுக்களையும், அடி உதைகளையும் வாங்கிகிட்டு அமைதியா இருக்க! மரியாதையாப் போயிடுங்க! இல்லைனா உங்களுக்குதான் அசிங்கம்."

அவன் தலைகவிழ்ந்து நின்றிருந்தான். அவன் காலடியில் நீர்த்துளிகள் சிதறின. அழுகிறானா?

அவன் மெல்ல நிமிர்ந்து மஞ்சரியை நோக்கிய பார்வையில் கெஞ்சல் இருந்தது.அவளுக்குப் பின்னால் பூனைக்குட்டிகள் போல் மிரள மிரள விழித்து நின்ற குழந்தைகளைப் பார்த்தான். அப்போதுதான் அந்தக் காரியத்தைச் செய்தான்.

வாசல் என்றும் பாராமல் சடக்கென்று அவள் கால்களில் விழுந்தான்.

மஞ்சரி அதிர்ந்தாலும் நிலைகுலையவில்லை. கையாலாகாத நிலையிலிருப்பவன் காரியத்தைச் சாதிக்க எவர் காலிலும் விழத்தயாராயிருப்பான் என அறியாதவளா? காரியம் முடிந்ததும் கழுத்தைத் திருகும் கயவர் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதையும் அவள் அறிந்திருந்தாள்.

"உங்களுக்கு வெட்கமா இல்லையா? என் காலில் விழுந்து என்ன ஆகப்போவுது? தயவு செய்து என்னை என் போக்கிலேயே விட்டுட்டு திரும்பிப் பாக்காமப் போயிடுங்க! உங்களுக்குப் புண்ணியமாப் போகும்!"

செய்வதறியாது நின்றிருந்தவன், முதன்முறையாக வாய்திறந்தான்.

"என்னை மன்னிச்சிடு மஞ்சு! நான் திருந்தி வந்திருக்கேன். வாழ்க்கைன்னா என்னன்னு தெரிஞ்சு வந்திருக்கேன்,மஞ்சு! படக்கூடாத கஷ்டமெல்லாம் பட்டு வந்திருக்கேன். உன் அருமை தெரிஞ்சு திரும்பி வந்திருக்கேன். என்னை மன்னிச்சு ஏத்துக்க மாட்டியா, மஞ்சு?"

"போதும்! போதும்! பட்டதெல்லாம் போதும்!"

மஞ்சரி இரு கைகளாலும் தன் காதுகளைப் பொத்திக்கொண்டாள்.

"மஞ்சு! நீ செய்யறது சரியில்லைமா! எதுவாயிருந்தாலும் அவரை உள்ள கூப்பிட்டு பேசு!"

இவ்வளவு நேரம் பொறுமை காத்த பானுமதி இனியும் அமைதியாய் இருப்பது சரியல்ல என்று உணர்ந்தவராய் குறுக்கிட்டார்.

"அம்மா! தயவுசெய்து நீங்க இதிலே தலையிடாதீங்க! உங்களை மாதிரி ஏமாளியில்ல நான்!" மஞ்சரி சீறினாள்.

அவன் கும்பிட்டக் கரங்களுடன் பானுமதியைப் பார்த்து பேசத் துவங்கினான்.

"அத்தை! நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க! இதுக்குமேல் மஞ்சுவை எப்படி சமாதானப்படுத்தறதுன்னு எனக்குத் தெரியலை. ஆனா, நான் இப்போ சொன்னதெல்லாம் சத்தியம்! என்னை நம்புங்க! அப்படி என் உறவே இனி வேண்டாம்னு முடிவெடுத்திட்டா, நான் விவாகரத்துப் பத்திரத்துல கையெழுத்துப் போட்டுத்தரேன். வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கச் சொல்லுங்க. நான் செய்த தவறுக்கு அவள் ஏன் தண்டனை அனுபவிக்கணும்? இதிலே என்னோட மொபைல் நம்பர் இருக்கு. எப்போ வேணும்னாலும் கூப்பிடுங்க. வந்து கையெழுத்துப் போடறேன். இனிமே, உங்க பொண்ணுடைய வாழ்க்கையில குறுக்கிடமாட்டேன். நான் வரேன்!"

திரும்பியவன், மீண்டுமொருமுறை தன் மகள்களை ஏக்கம் நிறைந்த விழிகளால் ஏறிட்டான். பின் விடுவிடுவென்று வெளியேறினான்.

பானுமதி அப்படியே சரிந்து உட்கார்ந்து முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழத் துவங்க, மஞ்சரி எதுவும் புரியாமல் அம்மாவை வியப்புடன் நோக்கினாள்.

பாட்டி அழுவதன் காரணம் தெரியாமல் தாங்களும் அழத்தயாராயிருந்த குழந்தைகளைத் தேற்றி, பிறந்தநாள் பரிசாக முன்தினம் தான் வாங்கிவந்த பொம்மைகளைத் தந்து அவர்கள் கவனத்தைத் திசை திருப்பினாள்.

அம்மா அழுது ஓயும்வரை காத்திருந்து, பின் அவர் இயல்பு நிலைக்கு வந்ததும், அவர் முகத்தைத் தன்னிரு கைகளிலும் தாங்கி, பரிவுடன் பேசினாள்.

"என்னம்மா, இது, சின்னக்குழந்தையாட்டம்? அழும்படி என்ன நடந்திடுச்சு? தைரியத்தைக் கைவிடலாமா? நான் இல்லையா, உங்களையும், குழந்தைகளையும் என் கண்ணுக்குள்ள வச்சுக் காப்பாத்த?"

என்னென்னவோ கூறி அம்மாவை சமாதானப்படுத்த முயன்றாள். அவரோ, தேற்றுவாரில்லாதக் குழந்தைபோலத் திரும்பவும் அழத்துவங்கினார்.
மஞ்சரிக்குக் கலக்கமாயிருந்தது. அவளறிந்தவரை அம்மா மிகவும் துணிச்சலானவர். எப்போதும் புன்னகை மாறா முகம். இன்றளவும் அவர் தன் சோகத்தையோ, வருத்தத்தையோ வெளிக்காட்டியதேயில்லை. இன்று என்னாயிற்று?

"என்னை மன்னிச்சிடு, மஞ்சு!"

பானுமதி சற்றே தெளிவடைந்ததுபோல் தோன்றியது.

"அம்மா, நீங்க எதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேக்கறீங்க?"

"மஞ்சு! என் வாழ்க்கையோட ரகசியத்தை இப்ப உன்கிட்ட சொல்லப்போறேன்மா!"

"அம்மா! இப்போ எதுக்கு அதெல்லாம்?"

"இல்லம்மா, நீ தெரிஞ்சிக்கணும்! உன் அப்பாவைப் பத்தி நீ என்ன நினைக்கிறே? வாழத்தெரியாமல் ஓடிப்போன கோழைன்னுதானே! அதுதான் இல்லம்மா! அந்த உத்தமரை விரட்டிவிட்ட பாவி நான்தாம்மா! நான்தான்..நானேதான்!"

"அம்மா!" அதிர்ந்தாள் மஞ்சரி.

"உண்மைதான், மஞ்சு! உன் புருஷனுக்கிருந்த சந்தேகபுத்தி உன் வாழ்க்கையை நாசம் பண்ணிச்சு! எனக்கிருந்த சந்தேகபுத்தி என் வாழ்க்கையை நாசம் பண்ணிடுச்சு!"

"அம்மா!"

மஞ்சரி அதிர்விலிருந்து மீள முடியாமல் தவித்தாள். அம்மாவா? சந்தேகத்தால் தன் வாழ்வை இழந்தாரா? நம்பமுடியாமல் நடுங்கினாள்.


"கொஞ்சநஞ்சமில்ல! சதா சர்வ காலமும் அவரை சந்தக்கண்ணால்தான் பாத்தேன். எனக்கு மட்டும்தான் அவர் சொந்தம்கிற எண்ணம் என்னைப் பாடாப் படுத்த, அவருடைய நடவடிக்கையெல்லாம் ஆராயத் தொடங்கினேன். என் நடவடிக்கையால் அவருக்கு சொந்தக்காரங்க, நண்பர்கள் மத்தியில அவப்பெயர் உண்டாயிடுச்சு! நெருப்பில்லாமல் புகையுமா? ஏதோ இருக்கப்போய்தான் இவள் இப்படி வேவு பாக்கிறான்னு எல்லாரும் பேசினாங்க.

உன் அப்பாவும் மனசளவில என்னை விட்டு விலக ஆரம்பிச்சாரு. நீ பிறந்தபிறகு நிலைமை இன்னும் மோசமாயிடுச்சு. நியாயமான காரணங்களையும் ஏற்காம, அவரைக் குற்றவாளியாக்கி குறுக்குவிசாரணை செஞ்சேன். விஷ வார்த்தைகளால் அவரை ரணப்படுத்தினேன். அவருடைய நல்ல மனசைக் கொத்திக்கூறு போட்டேன். என் வாழ்க்கையை நானே நரகமாக்கினேன். ஒருநாள் அந்த நரகத்தை விட்டு வெளியேறினவர்தான் இன்னைக்கு வரை திரும்பலை.

எனக்கு மட்டுமே அவரைச் சொந்தமாக்க நான் செஞ்ச முயற்சியெல்லாம் என்னைக்குமே அவரை எனக்கு சொந்தமில்லாம ஆக்கிடுச்சு! என் பாவம் உன்னையும் விடலை!"

பானுமதி நிறுத்தி மூச்சு வாங்கினார். மஞ்சரி சிலையாய் அமர்ந்திருந்தாள். இது யாவும் கனவாயிருக்கக்கூடாதா என்று கலங்கிப் போயிருந்தாள். பானுமதி தொடர்ந்தார்.

"நான் மனந்திருந்தி இருபத்தஞ்சு வருஷமாயிட்டுது. அவரில்லாத போதுதான் அவருடைய அருமை புரிஞ்சது. என்ன பயன்? கண் கெட்டபின்னால் சூரிய நமஸ்காரம்! அவர் வருவார் வருவாருன்னு காத்திருந்து காலம் போனதுதான் மிச்சம். அவர் எங்கே இருக்கார்னு தெரிஞ்சால், என்னைக்கோ போய் அவர் காலில் விழுந்து கதறி மன்னிப்பு கேட்டு அவரோடு சேர்ந்து வாழ்ந்திருப்பேன். என்னால் அது முடியலை. நீ இருக்கிற இடம் தெரிஞ்சதால் உன் புருஷன் உன்னைத் தேடி வந்து மன்னிப்பு கேட்டார். தவறை உணர்ந்து வந்தவரை நீ உதாசீனப்படுத்தி அனுப்பிட்டே!

உன் அப்பாவைத் தேடிப்போய் நான் நின்னாலும் அவரும் இதைத்தானே செய்வார்? உன்னைப் போலத்தானே நடந்துப்பார்? அதை நினைச்சேன். கட்டுப்படுத்தமுடியாமல் அழுகை வந்திட்டது.

என்னை மன்னிச்சிடு, மஞ்சு! இத்தனை நாள் உன் பார்வையில் உத்தமியா வலம்வந்த என்னை.......உன்னைத் தந்தையில்லாப் பெண்ணாக்கிய என்னை.......மன்னிச்சிடு, அம்மா! தவறு செய்தவங்க திருந்தி வந்தாலும் இந்த உலகம் ஏற்காதுங்கறதை எனக்கு நல்லாவே புரியவச்சுட்டேம்மா!"

அம்மா முகத்தை முந்தானையால் துடைத்துக்கொண்டார். மஞ்சரி இன்னும் பிரமிப்பிலிருந்து விடுபடவேயில்லை. யாவும் உண்மைதானா?அம்மாவால்..... எப்படி....இப்படி......? அம்மாவைக் குழப்பத்துடன் ஏறிட்டாள்.

ஒருவேளை, தன்னையும், தயாளனையும் இணைத்துவைக்க அம்மா நாடகமாடுகிறாரோ? அம்மாவின் சுபாவம் அத்தனைக் கொடூரமாகவா இருந்திருக்கும்? இருக்காது! இனித் தன் கணவன் வரப்போவதில்லையென உணர்ந்தவள், தன் மகளின் வாழ்வாவது வளமாக அமையட்டும் என்று சிந்தித்து, தவறுகளைத் தன் பக்கம் திருப்பிவிட்டுக் கொள்கிறாரா? புரியாத புதிரோடு அம்மாவைப் பார்த்தாள்.

மனதிலிருந்த பாரமெல்லாம் இறங்கியது போல் பானுமதி அமைதியாய் அமர்ந்திருந்தார். முகத்தில் பழையபடி புன்னகை தவழத் தொடங்கியிருந்தது. அவர் மஞ்சரியைப் பார்த்து,

"என்னம்மா, என்ன யோசனை? நான் சொன்னதெல்லாம் உண்மைதானான்னு சந்தேகப்படுறியாம்மா?"

எனவும், சட்டென்று அவரின் வாய் பொத்திய மஞ்சரி, மெல்லிய குரலில், ஆனால் கணீரென்று,

"வேணாம் அம்மா, இனி நம் வாழ்க்கையில் சந்தேகம்கிற வார்த்தைக்கே இடந்தரவேணாம். நம்புவோம்! நம்பிக்கைதானே வாழ்க்கை! என் கணவர் திருந்திட்டார்னு நம்புறேன்; அப்பா திரும்பி வருவார்னு நம்புறேன்; நம் வாழ்க்கை இனி எந்தப் பிரச்சனையுமில்லாமல் சந்தோஷமாவும் நிம்மதியாவும் கழியும்னு நம்புறேன்."

என்றபடி, அறைக்குள் மின்விசிறிக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்த தயாளனின் மொபைல் நம்பர் எழுதிய தாளைக் கையிலெடுத்தாள்.

சிவா.ஜி
02-02-2010, 08:19 AM
கதையை போட்டியில் வாசித்தபோதே தனித்துத் தெரிந்தது. இதற்குத்தான் என்னுடைய வாக்கையும் செலுத்தினேன்.

தாயைப்போல பிள்ளை என்பதற்கு, இரண்டுபேருமே கணவன் இல்லாமல் தனித்திருக்கும் நிலையை உதாரணம் காட்டினாலும், இருவருக்கும் அதற்கானக் காரணங்கள் முற்றிலும் வேறாக இருப்பதைக் கதையின் கடைசியில் சொல்லும்போது...அட போட வைக்கிறது.

இனி சந்தேகமே நம் வாழ்க்கையில் வேண்டாம் என மஞ்சு சொல்லும்போது, மனிதர்களுக்குள் நம்பிக்கை வேண்டும் என்பது உறைக்கிறது.

நல்ல கதை, நல்ல முடிவு. வாழ்த்துகள் கீதம் அவர்களே.

கீதம்
02-02-2010, 10:53 PM
என் கதையைத் தேர்ந்தெடுத்து வாக்களித்தமைக்கும், பாராட்டுக்கும் நன்றி சிவா.ஜி அவர்களே.

கலையரசி
03-02-2010, 12:55 PM
கதை நீளமாயிருந்தாலும் உங்கள் எழுத்து நடை தொய்வில்லாமல் கதையை நகர்த்தி
செல்கிறது. பாராட்டுக்கள்.
போட்டியில் இரண்டாமிடம் பெற்றதற்கு வாழ்த்தி மென்மேலும் நல்ல பல கதைகளை
மன்றத்தில் பதிக்க வாழ்த்துகிறேன்.

aren
03-02-2010, 11:14 PM
மனது கனக்கிறது.

கீதம்
04-02-2010, 06:22 AM
கதை நீளமாயிருந்தாலும் உங்கள் எழுத்து நடை தொய்வில்லாமல் கதையை நகர்த்தி
செல்கிறது. பாராட்டுக்கள்.
போட்டியில் இரண்டாமிடம் பெற்றதற்கு வாழ்த்தி மென்மேலும் நல்ல பல கதைகளை
மன்றத்தில் பதிக்க வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்கு நன்றி கலையரசி அவர்களே.

கீதம்
04-02-2010, 06:25 AM
மனது கனக்கிறது.

என்ன செய்வது? சந்தேகம் என்ற சாத்தானை மனதுக்குள் குடிவைத்துவிட்டால் வாழ்க்கையின் ஆணிவேரை கொஞ்சம் கொஞ்சமாக அசைத்து கடைசியில் வேரோடு பிடுங்கி எறிந்துவிடும் அபாயம் உள்ளதே. பின்னூட்டத்திற்கு நன்றி ஆரென் அவர்களே.

Ravee
13-02-2010, 05:50 PM
ரசிகனை ரசிக்கச் செய்த கதை மீண்டும்.

கீதம்
13-02-2010, 10:01 PM
உங்கள் ரசனைக்கு என் மனமார்ந்த நன்றி ரவீ அவர்களே.

இளசு
18-02-2010, 07:38 PM
மிக அழகான கதை கீதம்..

மிக அழகாக, சரளமாக எழுத வருகிறது..

கதைமாந்தரின் குணநலன்கள், எண்ண ஓட்டங்களால் மனஓவியமே
படிப்பவர் நெஞ்சில் வரைகிறீர்கள்..

பாராட்டுகள்..


குற்றம் பார்க்கில்..?

நம்பிக்கையே வாழ்க்கை ,,!

கீதம்
19-02-2010, 09:56 PM
மிக அழகான கதை கீதம்..

மிக அழகாக, சரளமாக எழுத வருகிறது..

கதைமாந்தரின் குணநலன்கள், எண்ண ஓட்டங்களால் மனஓவியமே
படிப்பவர் நெஞ்சில் வரைகிறீர்கள்..

பாராட்டுகள்..


குற்றம் பார்க்கில்..?

நம்பிக்கையே வாழ்க்கை ,,!

எல்லோரையும் நம்பினாலும் பிரச்சனைதான்; அதே சமயம் யாரையும் நம்பாவிடினும் பிரச்சனைதான்.

சில நேரங்களில் இப்படிதான் நம்பிக்கையுடன் துணிந்து முடிவெடுக்கவேண்டியுள்ளது.

பாராட்டுக்கு நன்றி இளசு அவர்களே.