PDA

View Full Version : கொழுப்பைக் கரைக்கும் கொடம்புளிmuthuvel
28-01-2010, 09:35 AM
உடல் பருமனால் ஆண்களும், பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறிது தூரம் நடந்தாலோ, மாடிப் படிகளில் ஏறினாலோ மூச்சிரைக்கும். அப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். இதனால் இவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

சிலர் எடையைக் குறைக்கிறோம் என்ற விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை இழப்பதுதான் மிச்சம்.

பொதுவாக ஒருவருடைய எடை அவருடைய நடுத்தர வயதில்தான் அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆனால் இன்று சிறு பிள்ளைகள் கூட குண்டாகி அவதிக்குள்ளாகின்றனர்.

இதற்கு நாம் உண்ணும் உணவுதான் முக்கியக் காரணமாகிறது. உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்கி விடுவதால் உடல் பெருத்துவிடுகிறது.

உடல் எடையைக் குறைக்க சிலர் பட்டினி கிடப்பார்கள். அது தவறு. மருந்து மாத்திரைகளை உபயோகித்தாலும் உடல் எடை குறையாது.

உணவும், உடற்பயிற்சியும் தான் உடல் எடையை முறையாகக் குறைக்கும் மருந்தாகும்.

அதற்கு கொடம்புளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

கொடம்புளி இந்தியாவில் கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இலங்கை மக்களும் புளிக்குப் பதிலாக கொடம்புளியைப் பயன்படுத்துகிறார்கள்.

கொடம்புளியின் பூர்வீகம் இந்தியாதான். தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் விளைகின்றது.

Tamil : Kodumpuli

Sanskrit : Vrikshamla

English : Brindel berry

Telugu : Sima chinta

Malayalam : Kodumpuli

இதன் பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மேல் தோலுடன் உள்ள தசைப் பகுதிதான் மருத்துவத் தன்மை கொண்டது.

உடல் பருமன் குறைய

உடல் பருமன் உள்ளவர்கள் சமையலில் இந்த கொடம்புளியை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

இந்த கொடம்புளியில் உள்ள ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் என்ற வேதிப்பொருள் தான் உடலின் எடையைக் குறைக்க பெரும் வகையில் உதவுகிறது.

உண்ணும் உணவில் இருக்கும் அதிகப்படியான மாவுச்சத்துக்கள் அனைத்தும் கொழுப்புச் சத்தாக மாறுகின்றது. இதனால் கொழுப்புப் படலம் உடலில் தங்கி உடலைப் பருமனாக்குகிறது.

இந்த மாவுச் சத்தை கொழுப்புச் சத்தாக மாறாமல் ஹைட்ரஸி சிட்ரிக் அமிலம் தடுக்கிறது. இதனால் உடலில் கொழுப்புச் சத்து உருவாவது தடுக்கப்படுகிறது. மேலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.

பசியை அடக்கும்

கொடம்புளியை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும். சீரண மண்டலத்தை பலப்படுத்தும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு வெகு விரைவில் கரையும்.

மலச்சிக்கல் தீர

புளிக்குப் பதிலாக கொடம்புளியை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.

மூட்டுவலி நீங்க

கொடம்புளியின் விதையை நீக்கி அதன் சதைப் பகுதியை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அருந்தினால் மூட்டுவலி குணமாகும். உடலில் உள்ள வாத பித்த குற்றத்தைச் சீர்படுத்தும்.

இலங்கை மக்களும், கேரள மக்களும் பழங்காலம்தொட்டே இந்த கொடம்புளியைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

நாமும் கொடம்புளியை உணவில் சேர்த்து அதன் பயன்களை அடைவோம்.இதயம் பேசுகிறது...

டாக்டர் செரியனுடன் சில நிமிடங்கள்...

ஐந்தேகால் அடி கம்பீரமான உயரம். எப்போதும் மாறாத 66 கிலோ எடை. இதயத்தோடு தொடர்புடையவர். இதய அறுவை சிகிச்சை உலகின் முடிசூடா மன்னர், டாக்டர்

கே.எம்.செரியன்.ஓர் அதிகாலை நேரத்தில் நிகழ்ந்தது இந்தச் சந்திப்பு. கையில் காபிக்குப் பதிலாக நெல்லிக்காய் ஜூஸுடன் வந்தமர்கிறார் செரியன். பெரிய நெல்லிக்காயை அரைத்து சர்க்கரை போடாமல் வெறும் இஞ்சி மட்டுமே அதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. தினம் காலையில், டாக்டர் தவறாமல் அருந்தும் ஆரோக்கிய பானம் இது.

இவருக்கான சுப்ரபாதம் காலை ஆறு மணிக்கு ஐ.சி.யூ.வில் இருந்து ஆரம்பிக்கிறது. அடுத்த இருபது நிமிடங்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அனைத்து நோயாளிகளின் விவரங்களையும் கேட்டறிகிறார். சற்று நேரத்தில் கொதிக்கக் கொதிக்க பிளாக் டீ. அதை முடித்துவிட்டு ட்ரெட் மில்லரில் ஏறுகிறார். முப்பது நிமிட நடைப்பயிற்சி. வியர்வைப் பெருக்கெடுத்து ஓட, அதிலிருந்து இறங்கி இருபது நிமிடங்கள் ஓய்வு. அன்றைய நாளிதழ்கள் அத்தனையையும் புரட்டி முடிக்கிறார். மருத்துவக் குணம் அதிகமுள்ள 'பப்பாளி’யின் காதலர் இவர். அது நேர்த்தியாக நறுக்கப்பட்டு இவருக்காக காத்திருக்கிறது. பிறகு, குளியல் முடித்து எட்டு மணிக்கு சென்னை முகப்பேரில் இருக்கும் 'ஃப்ரான்டியர் லைஃப்லைன்’ மருத்துவமனையில் ஆஜர். வாரத்தின் ஆறு நாட்களும் இதே ஷெட்யூல்தான். ஞாயிறு மட்டும் சென்னையை அடுத்த எலவூர் கிராமத்தில் இருப்பார். பல கோடி ரூபாயில் உருவாகிவரும் தனது லட்சிய சின்னமான 'நேஷனல் மெடிக்கல் சயன்ஸ் பார்க்’கை மேற்பார்வையிட கிளம்பிவிடுவார். அன்றைக்கு மட்டும் மத்தியான தூக்கம் உண்டு. ''அந்தத் தூக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும்'' என்கிறார். பின்னே, சும்மாவா? ஒரு நாளில் பதினான்கு மணி நேரம் உழைக்கிறாரே. அதேபோல், இரவு படுத்ததும் உடனே தூக்கம்தான்.

''பதற்றமான சூழ்நிலை உங்கள் பணியில் தவிர்க்க முடியாததாயிற்றே! டென்ஷனை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?''

''யோகா, தியானம் என்று எதுவுமே நான் செய்வதில்லை. எனக்கு டென்ஷனே கிடையாது. ஒருவேளை என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு

இருக்குமோ என்னவோ! கன்ஃப்யூசியஸ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. 'உனக்கு மிகவும் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுத்துவிடு. பிறகு ஒரு நாள்கூட வேலை செய்ய வேண்டியிருக்காது. ஒவ்வொரு கணமும் ஆனந்தமாக நகரும்.''

டாக்டர் செரியனின் சொந்த ஊர் கேரள மாநிலத்திலுள்ள செங்கனூர். இவரது தந்தை டீ மற்றும் ரப்பர் விவசாயி. அந்தக் குடும்பத்திலிருந்து மருத்துவத்துறைக்கு நுழைந்த முதல் நபர் செரியன்தான்.

''நீங்கள் மருத்துவத் துறைக்கு வரக் காரணம்?''

''ஒருவர் பிறப்பதைத் தேர்ந்தெடுக்கும் கடவுள், பிறப்புக்கு முன்னரே அதற்கான காரணத்தை தீர்மானித்துவிடுகிறார். கிரேக்க ஞானி ஒருவரின் கருத்து இது. நான் இந்த வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.''

''இதய அறுவை சிகிச்சையில் உங்களின் சிறப்பு அம்சம்?''

''ஒவ்வொரு நோயாளியையும் அவரவர் வயதுக்கு ஏற்ப என் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, என் குழந்தை, என் பேத்தி என்று உள்ளார்ந்த அன்புடன் அணுகுவேன். நான் நோய்களுக்கு கட்டுப் போடுகிறேன். இறைவன் அதைக் குணமாக்கி நோயாளியை மட்டுமின்றி என்னையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான்.''

''சினிமாவுக்குப் போவதுண்டா?''

''விமானப் பயணத்தின்போது ஏதேனும் படம் பார்ப்பதுண்டு. பதினைந்து ஆண்டுகள் கழித்து அண்மையில் தியேட்டருக்குச் சென்று 'ஹாரிபாட்டர்’ படம் பார்த்தேன். என் பேத்திகள் என்னை வற்புறுத்தி இழுத்துச் சென்றார்கள். குழந்தைகளுடன் குழந்தைகளாக ரசித்தது மறக்க முடியாத பேரின்பம்.''

''பிடித்த உணவு?''

''கறி மீன். இது கத்தோலிக்க சிரியன் கிறிஸ்துவர்களின் ஸ்பெஷல். இதைச் செய்வதற்கு கொடம்புளி என்ற கேரள வகை புளியைப் பயன்படுத்துவார்கள். இந்தப் புளியில் இயற்கை மருத்துவக் குணங்கள் அதிகம். இதைச் சாப்பிட்டால் அலர்ஜி நீங்கும். கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனை தெரிந்துகொண்ட அமெரிக்கர்கள், கொடம்புளியை கேப்ஸ்யூல் வடிவாக்கி, ஒரு கேப்ஸ்யூல் ஐம்பது டாலர் விலைக்கு விற்கின்றனர். இதனால் இப்புளியின் விலை இந்தியாவிலும் ஏறிவிட்டது. ஒரு கிலோ நூற்றைம்பது ரூபாய். இந்தப் புளி கொண்டு தயாரிக்கப்பட்ட மீன் வாழை இலையில் சுற்றப்பட்டு வேக வைக்கப்படும். மிகச் சுவையாக இருக்கும். ஆரோக்கியமும் அடங்கியது.''

''நீங்கள் மிகவும் விரும்பும் நபர்?''

''என்னைப் பெற்ற தாய். பெற்றோரை நேசியுங்கள். ஆசிரியரை மதியுங்கள். வாழ்வு நிச்சயம் உயரும். இதைத்தான் அடுத்த தலைமுறைக்கு நான் சொல்ல வருகிறேன்.''

''உங்கள் இலக்கு என்ன?''

''இதய அறுவை சிக ¤ச்சையில் உள்ள அனைத்து வகையான சிக்கலான சிகிச்சைகளையும் செய்துவிட்டேன். இனி புதுவிதமாக ஏதாவது இதய நோய் ஏற்பட்டாலும் அதற்கு சிகிச்சை அளிக்கக் காத்திருக்கிறேன். இளமைப் பருவத்தில் சில மருத்துவமனைகளில் கடும் பணி ஆற்றியிருக்கிறேன். அருகிலிருப்பவர்களிடம் வியாபாரம் கலந்த சுயநலப் போக்கு இருப்பதைக் கண்டு அதிர்ந்தேன். மருத்துவர் என்பவர் மக்கள் சேவகர் அல்லவா! உடனே அவர்களை விட்டு விலகினேன். எந்தப் பின்புலமும் பணபலமும் இன்றி நல்ல வெற்றிகரமான டாக்டர் என்பதை மட்டுமே மூலதனமாக வைத்தேன். இறைவன் அருளால் இந்த மருத்துவமனையைத் தொடங்கினேன். இதோ நான் சர்வதேச தரத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கும் 'நேஷனல் மெடிக்கல் சயன்ஸ் பார்க்’ பலருக்கும் உதவப்போகிறது. என் இலக்கைத் தொட்டுவிட்ட திருப்தியைத் தரப்போகிறது.''

மென்மையான சிரிப்புடன் விடைகொடுக்கிறார் டாக்டர் செரியன். நினைவிலேயே நிற்கிறது நெல்லிக்காய் ஜூஸ்.

பா.ராஜேஷ்
28-01-2010, 09:53 AM
மிகவும் அருமையான, அவசியமான பயனுள்ள தகவல் முத்துவேல்.. இதே போல பல முத்தான தகவல்களை பதியுங்கள் .. :)

சிவா.ஜி
28-01-2010, 10:46 AM
நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி முத்துவேல்.

(தயவு செய்து எங்கிருந்து தகவலை எடுத்தீர்களோ அந்த தளத்திற்கோ, பத்திரிக்கைக்கோ நன்றி என்று குறிப்பிடுங்கள். உங்கள் பெயரில் பதியும் பதிவுகள் உங்கள் சொந்த ஆக்கங்களாக இருக்க வேண்டும். வேறொருவருடையதை உங்கள் பெயரில் பதியக்கூடாது. நன்றி.)

ஓவியன்
28-01-2010, 10:53 AM
சிவா அண்ணா,

நன்றி தினகரன் (http://www.dinakaran.com/healthnew/healthinnerdetail.aspx?id=250&id1=4) என்று கூறலாம் போலிருக்கு :rolleyes:...

சிவா.ஜி
28-01-2010, 10:58 AM
ஆமாம் ஓவியன். முத்துவேல் அவர்கள் புதியவராகையால்...இன்னும் விதிகளை தெரிந்துகொள்ளவில்லை.

விரைவில் தெரிந்துகொள்வார் என நம்புகிறேன்.

ஜனகன்
28-01-2010, 01:18 PM
பயனுள்ள தகவல், பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி முத்துவேல்.

sakthim
30-01-2010, 09:56 AM
உண்மையிலேயே அருமையான தகவலை தான் கொடுத்து உள்ளீர்கள்.

sunson
31-01-2010, 07:13 AM
மருத்துவர் செரியனின் சேவை அளவிட முடியாதது. வங்கதேசம் , ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாடுகளில் வாழும் எண்ணற்ற குழந்தைகளுக்கு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பல இதய அறுவை சிகிட்சை செய்து பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றி இருக்கிறார் . அவர் சேவை வளர்க....

muthuvel
31-01-2010, 12:39 PM
நன்றி நன்றி

சிவா.ஜி
02-02-2010, 02:32 PM
மருத்துவர் செரியனின் சேவை அளவிட முடியாதது. வங்கதேசம் , ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாடுகளில் வாழும் எண்ணற்ற குழந்தைகளுக்கு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பல இதய அறுவை சிகிட்சை செய்து பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றி இருக்கிறார் . அவர் சேவை வளர்க....

ஒப்பற்ற அவரோட சேவை இனி வளர முடியாதுங்க. அவர் இறந்துவிட்டார். உலகப் புகழ்பெற்ற ஒரு மருத்துவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியானது.

தங்கவேல்
09-04-2010, 05:06 AM
முத்துவேல் கொடம்புளி கோயமுத்தூரில் கிடைக்குமா? அதன் படம் இருந்தால் பதிவிடுங்களேன்.

indiran
12-07-2011, 08:58 PM
உடல் பருமனால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு தங்கள் பதிவு மிக்க பயனுள்ளதாக அமைந்துள்ளது.