PDA

View Full Version : துரோகத்தின் கத்தி



ஆதி
25-01-2010, 10:45 AM
முதுகில் ஆழப்பாய்ந்த
வலியோடு இரத்தம் சுவைத்திருந்தது
துரோகத்தின் கத்தி ஒன்று..

நேற்று
இதே கத்தி
எவரின் முதுகிலேயோ
உயிர்க் குடித்திருந்திருக்கலாம்..

நாளை
யாரோ ஒருவரின்
முதுகில் பாய
குறி வைத்துக்கொண்டிருக்கலாம்..

யாதொரு நேரத்திலும்
யாதொரு இடத்திலும் இருந்து
இந்த கத்தி பாய்ந்து வரலாம்
நம் நம்பிக்கைகளை
மணல் துகளாக்கியவாறு..

மற்றக் கத்திகள் போலில்லை
துரோகத்தின் கத்தி..
இது குத்தப்பட்டப் பிறகு
வெறுப்பை கக்குபவை..

உறவுகளின் மீதான நம்பிக்கையை
மறுப்பரிசீலனைக்கு உட்படுத்தி
சந்தேகத்தை உள்ளூற வைப்பவை..

யாவரும் ஏதாவது ஒரு தருணத்தில்
எவராவது ஒருவரால் குத்தப்பட்டு
இதன் கசப்பை அனுபவித்திருந்தாலும்
தம் மனதுக்குள் மறைமுகமாய்
வைத்திருக்கின்றனர் இதனை..

பயன்படுத்தியவர்
பயன்படுத்தாதவர் யாவரும் இதனை
கூர் தீட்டி தயார் நிலையில்
வைத்திருக்கின்றனர்
ஒரு முதுகை எதிர்பார்த்து..

பின் வரும் நாளின்
கோர கணமொன்றில்
எவரின் முதுகிலாவது
இதே கத்தி செருகப்படலாம்
கொடும் வன்மத்தின் அடையாளமாய்
என் கைரேகைகளுடன்..

சிவா.ஜி
25-01-2010, 10:55 AM
இது பிரத்தியேக கத்தி. முதுகில் மட்டுமே பாய்கின்ற கத்தி. கத்தியைத்தாங்கும் கைகளில், சற்றேனும் நடுக்கம் காண முடியாது....குத்தப்படும் முன்புவரை அடையாளம் காண முடியாதபடி, சர்க்கரை பூசியிருக்கும்....குத்தியபின்...கசப்பை வீசியிருக்கும்.

நிதர்சன வரிகள் ஆதன். வலியைச் சொல்லும் வரிகள்...ஆனால் யாராலும் தவிர்க்க முடியாத வலிகள்.

பாராட்டுக்கள் ஆதன்.

jayashankar
25-01-2010, 11:03 AM
நல்ல வளமையான விதத்தில் எழுதப்பட்ட கவிதை வரிகள்....

மன வலியை நிதர்சனமாக எடுத்துரைத்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது...


யாவரும் ஏதாவது ஒரு தருணத்தில்
எவராவது ஒருவரால் குத்தப்பட்டு
இதன் கசப்பை அனுபவித்திருந்தாலும்
தம் மனதுக்குள் மறைமுகமாய்
வைத்திருக்கின்றனர் இதனை..

பயன்படுத்தியவர்
பயன்படுத்தாதவர் யாவரும் இதனை
கூர் தீட்டி தயார் நிலையில்
வைத்திருக்கின்றனர்
ஒரு முதுகை எதிர்ப்பார்த்து..

மிக அருமையான வரிகள்...

பகிர்ந்தமைக்கு நன்றி ஆதன் அவர்களே

இன்பக்கவி
25-01-2010, 12:40 PM
தாங்கி கொள்ள முடியாதது நம்பிக்கை துரோகம் தான்..
அருமையாக கவிதை படைத்து இருகின்றீர்கள்..
நன்றிகள்..
படித்ததும் வலியை உணர்கிறேன்..
நிறைய துரோகத்தை பார்த்த வலி..

இளசு
25-01-2010, 08:44 PM
சிம்பன்சியாய் இருந்தவரை கூட
இந்தக் கத்தி நம்மிடம் இல்லை!!

கட்டைவிரலை ஆயுதமாக்கி
ஆதியன் செய்துகொண்ட
கத்திகளில் முக்கியமானது
ஆதன் சொன்ன முதுகுக்கத்தி...


ஆழமும் அழகும் கொஞ்சும் கவிதை!
ஆதனுக்கு அன்பு!

ஆதி
27-01-2010, 10:00 AM
இது பிரத்தியேக கத்தி. முதுகில் மட்டுமே பாய்கின்ற கத்தி. கத்தியைத்தாங்கும் கைகளில், சற்றேனும் நடுக்கம் காண முடியாது....குத்தப்படும் முன்புவரை அடையாளம் காண முடியாதபடி, சர்க்கரை பூசியிருக்கும்....குத்தியபின்...கசப்பை வீசியிருக்கும்.




சரியாய் சொன்னீங்க அண்ணா, உண்மைதான் குத்தப்படும் வரை அடையாளம் அறியாதபடி, சர்க்கரை பூசியிருக்கும்..

வாழ்த்துக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றிங்கண்ணா..

பா.ராஜேஷ்
27-01-2010, 10:37 AM
பின் வரும் நாளின்
கோர கணமொன்றில்
எவரின் முதுகிலாவது
இதே கத்தி செருகப்படலாம்
கொடும் வன்மத்தின் அடையாளமாய்
என் கைரேகைகளுடன்..

வலி உணர்ந்த பின்னரும்
இன்னொரு முதுகை தேடும்
எண்ணம் வருவது எவ்வாறு?

ஆதி
27-01-2010, 10:40 AM
நல்ல வளமையான விதத்தில் எழுதப்பட்ட கவிதை வரிகள்....

மன வலியை நிதர்சனமாக எடுத்துரைத்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது...



மிக அருமையான வரிகள்...

பகிர்ந்தமைக்கு நன்றி ஆதன் அவர்களே

நன்றி ஜெய் அண்ணா, உங்களுக்கு பிடித்த வரிகளை உணர்ந்து எழுதிய வரிகள்..

பின்னூட்டத்திற்கு நன்றி அண்ணா..

ஆதி
27-01-2010, 10:42 AM
தாங்கி கொள்ள முடியாதது நம்பிக்கை துரோகம் தான்..
அருமையாக கவிதை படைத்து இருகின்றீர்கள்..
நன்றிகள்..
படித்ததும் வலியை உணர்கிறேன்..
நிறைய துரோகத்தை பார்த்த வலி..

நன்றி இன்பக்கவி, உங்களுடைய கவிதைகளில் அந்த வலியின் தாக்கத்தை அதிகம் கண்டிருக்கிறேன்..

மீண்டும் நன்றிகள்..

ஆதி
27-01-2010, 10:47 AM
சிம்பன்சியாய் இருந்தவரை கூட
இந்தக் கத்தி நம்மிடம் இல்லை!!

கட்டைவிரலை ஆயுதமாக்கி
ஆதியன் செய்துகொண்ட
கத்திகளில் முக்கியமானது
ஆதன் சொன்ன முதுகுக்கத்தி...


ஆழமும் அழகும் கொஞ்சும் கவிதை!
ஆதனுக்கு அன்பு!

உண்மைதான் அண்ணா.. விலங்கின் குணம் இதுதான் என்று சொல்லிவிடலாம், மனிதனின் குணம் இதுதான் என்று சொல்ல முடியாது, அத்தனை குணம் அவனுக்குண்டு..

நன்றி பல அண்ணா..

ஆதி
27-01-2010, 10:52 AM
வலி உணர்ந்த பின்னரும்
இன்னொரு முதுகை தேடும்
எண்ணம் வருவது எவ்வாறு?

இந்த கவிதையை கவிஞனோடு மட்டும் பொருத்திப்பார்த்தால் உங்கள் கருத்து சரி போலிருக்கும்.. உங்களோடும், மற்றப் பிறரோடும் பொருத்திப்பாருங்கள் ராஜேஷ் புரியும்..

//யாவரும் ஏதாவது ஒரு தருணத்தில்
எவராவது ஒருவரால் குத்தப்பட்டு
இதன் கசப்பை அனுபவித்திருந்தாலும்
தம் மனதுக்குள் மறைமுகமாய்
வைத்திருக்கின்றனர் இதனை..
//

இந்த வரியில் உங்க கேள்விக்கான பதில் இருக்கு ராஜேஷ்..

மற்றவர்களை மட்டும் விமர்சனம் செய்வது கவிதையல்ல, சுய ஆய்வும் செய்து எழுதுவது ஒரு நல்ல கவிதைக்கான அடையாளம்.. இந்த கவிதையின் கடைசிப் பத்தியின் வரிகள் அனைவரின் மனசட்சியும் அறிந்த வரிகள்..

பா.ராஜேஷ்
27-01-2010, 11:03 AM
சரிதான் ஆதி . இளசு அண்ணா சொன்ன மாதிரி மனிதன் மிருகமான பிறகு தன்னை மறந்து விடுகிறான்

செல்வா
30-01-2010, 03:53 AM
வரலாற்றில் வாழும் இத்தகைய கத்திகள் எல்லோருக்கும் தெரிந்தவை...
புரூட்டஸ் , யூதாஸ் இப்படி பல...
இங்கே ஆதன் சுட்டுவது மறைக்கப் பட்டு நம் ஒவ்வொருவர் மனத்துள் துருத்திக் கொண்டிருக்கும் கத்திகளை...

கத்திகளை கையிலோ அல்லது கண்முன்னோ வைத்துக் கொண்டிருப்பதை விட
தூக்கி ஒரு ஓரத்தில் போட்டுவிட்டால் அதன் மீது கவனம் விழாது..

என்றோ ஒரு நாள் தேடும் போது கிடைக்காமலும் போகலாம்.

ஆதி
02-02-2010, 08:20 AM
வரலாற்றில் வாழும் இத்தகைய கத்திகள் எல்லோருக்கும் தெரிந்தவை...
புரூட்டஸ் , யூதாஸ் இப்படி பல...
இங்கே ஆதன் சுட்டுவது மறைக்கப் பட்டு நம் ஒவ்வொருவர் மனத்துள் துருத்திக் கொண்டிருக்கும் கத்திகளை...

கத்திகளை கையிலோ அல்லது கண்முன்னோ வைத்துக் கொண்டிருப்பதை விட
தூக்கி ஒரு ஓரத்தில் போட்டுவிட்டால் அதன் மீது கவனம் விழாது..

என்றோ ஒரு நாள் தேடும் போது கிடைக்காமலும் போகலாம்.

யூதாஸ் பற்றி சமீபத்தில் ஒரு புது விஷயம் அறிந்தேன் செல்வா..

யூதாஸ் மற்றவர்களை போல நற்செய்தி எழுதிருக்கார்.. அதில் நாடிக்ஸ் எனும் வார்த்தையை அதிகமா பயன்படுத்திருக்கார், நாடிக்ஸ் *- Menifast, விழிப்புணர்வு, மெஞ்ஞானம் போன்ற வார்த்தைகளுக்கு இணையானது..

காட்டிக் கொடுப்பு பற்றி யூதாஸ் அதில் எழுதி இருக்கார், ஏசுவே தன்னிடம் வந்து நீதான் என்னை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக சொல்கிறார், இவர் முடியாது என்று மறுக்க, கடவுளின் விருப்பமும் அதுதான், உன்னைவிட என்னை அதிகமாய் புரிந்து கொண்டவர்கள் இங்கு இல்லை, உன்னால் மட்டும் தான் இதை செய்ய இயலும் என்று ஏசு சொல்கிறார், வருங்காலம் என்னை பழிக்குமே என்று அவர் சொல்ல, பரலோக ராஜ்ஜியத்தில் நீ இடம் பெறுவாய் என்று ஏசு சொல்கிறார், அதாவது ஏசுவே விரும்பித்தான் யூதாஸை காட்டி கொடுக்க சொன்னதாக அதில் கூறப்படுகிறது, மற்ற நற்செய்திகளில் இருக்கிற சிறு சிறு சம்பவங்களை வைத்தி இது உண்மைதான் என்று நம்ப தோன்றுகிறது..

1) ஏசுவை சிலுவை மரணத்துக்கு கையளித்த உடன், யூதாஸ் சென்று முப்பது வெள்ளிக் காசுகளை எரிந்துவிடுவது,

2) மனம் வருந்தி, தான் மிக பெரிய பாவி என்று தன்னைத்தானே நொந்து கொண்டு, நான்று கொள்வது..

3) ஏசுவின் பிறப்பே, சிலுவை சாவை ஏற்க வேண்டும் என்பதே என்பதால், அவரை யாராவது ஒரு காட்டிக் கொடுக்க நிச்சயமாய் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதும் உண்மையே.. யூதாஸ்தான் ஏசுவை காட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே கடவுளின் திட்டமாக இருந்திருக்க முடியும்..

*************

சீஸரை விட்டிருந்தால் ரோம ராஜ்ஜியத்துக்கு சீஸ்ரல் அல்லவா பெரிய துரோகியாக இருந்திருப்பார்.. ஹி.. ஹி..

சீஸருக்கு புருடஸ் செய்தது துரோகம் என்றால், கிலியோபாட்ரா ஆண்டனி செய்தது என்ன ? ;)

சேக்ஸ்பியர் எழுதின நாடகம், சிலரை கதாநாயகராக ஆக்கிவிட்டது..

**********************

//கத்திகளை கையிலோ அல்லது கண்முன்னோ வைத்துக் கொண்டிருப்பதை விட
தூக்கி ஒரு ஓரத்தில் போட்டுவிட்டால் அதன் மீது கவனம் விழாது..

என்றோ ஒரு நாள் தேடும் போது கிடைக்காமலும் போகலாம்.//

மிக சரியாய் சொன்னாய் செல்வா.. பின்னூட்டத்துக்கு நன்றிகள் டா..

ஆர்.ஈஸ்வரன்
02-02-2010, 09:14 AM
துரோகத்தின் கத்தி கவிதைக்கு கூர்மையான நல்வாழ்த்துக்கள்

தாமரை
02-02-2010, 10:00 AM
துரோகம் என்னும் கத்தி
உறங்குகிற உறை
நம்பிக்கை

கவிதையின் அழகை விட அதில் ஆழப் பொதிந்திருக்கும் உண்மை இருக்கிறதே.. அதுதான் மிக முக்கியமானது..

நானே அறியேன்
நாளை ஒரு துரோகம்
செய்யப் போகிறேனென

என்னுள் இருக்கும்
எதாவது ஒரு மிருகத்தின்
தோலைப் போர்த்திக் கொண்டு

குத்திய பின் வழியும் குருதியை
உறிஞ்சுக் குடிப்பேனோ
நக்கி ரசிப்பேனோ

கண்களின் குருதியேற
கடகடவென
வெறியுடன் சிரிப்பேனோ

எனக்கும் இதற்கும்
என்ன சம்பந்தம் என
உதறிவிட்டு போவேனோ

அய்யோ பாவம் என
அலறித் துடிப்பேனோ
அறியேன்

இக்கணம் வரை
நான் நல்லவனாகத்தான்
தோன்றுகிறேன்

அப்படின்னு ஒரு சுயவிமர்சனத்தோடு..

துரோகம் தரும் வலியைப் பார்த்திருக்கீங்க.

சில சமயங்களில் துரோகங்கள், அதாவது கத்திகள் குத்திய பின்னும் குத்து பட்டவன் வலியில் துடித்தாலும் குத்துபவர்கள் அதை உணர்வதே இல்லை. அதைத்தான் இந்தக் கவிதையின் கடைசி வரியில் உள்ள என் கைரேகைகளோடு என்ற வார்த்தைகள் உணர்த்துகின்றன.

சிலர் துரோகங்களை தாங்கிக் கொள்வதற்காகவே (கத்தி ஸ்டேண்ட் - இல்லையா சிவா.ஜி?) பிறப்பெடுத்த மாதிரி அநியாயத்துக்கு நல்லவங்களா இருப்பாங்க. ஆனால் அவர்களறியாமலேயே அவர்களின் கைரேகை படிந்த கத்தி இன்னொரு முதுகில் இருக்கலாம்..

குத்துகிற கைக்கே தெரியாது சிலசமயம்.. சில சமயம் வெறியோடும் குத்தும்..

ஆக மொத்தத்தில் தெரிந்தோ தெரியாமலோ இந்தக் கத்தியை நாம் அப்பப்ப யார் மேலாவது சொருகி கிட்டுதான் இருக்கோம்..

சிலருக்கு உடனே வலி தெரியலாம். சிலசமயம் குத்தப் பட்டது தெரியாமலே கூட சிலர் செத்தும் போகலாம். முதுகில் சொருகப்பட்ட கத்தியும் வழியும் குருதியுமாக வலி தெரியாமல் திரிந்து கொண்டும் இருக்கலாம்.

இனிமேல் என்கையால் துரோகம் என்னும் கத்தி குத்தப்படாதுன்னு யாரும் உறுதியா சொல்ல முடியாது.

அதே மாதிரி

இதுவரை துரோகம் என்னும் கத்தி என் கையால் யார் முதுகிலும் சொருகப்பட்டதில்லை என்றும் யாராலும் சொல்லவும் முடியாது...

இரண்டாவது பக்கமும் பார்த்திருந்தா கவிதை இன்னும் பலமா ஆகி இருக்கும்.

சிவா.ஜி
02-02-2010, 02:58 PM
அருமையான அலசல் தாமரை. சுயம் நோக்குதலுக்கு உங்களோட எளிய வரிகள் அம்சமா பொருந்துது. அதே மாதிரி முதல் மூணு வரி....நிறைய சொல்லுது.

கடைசி வரிகள் கவலைப்பட வெக்குது.

ஆதி
04-02-2010, 10:49 AM
ஆழமான அலசலுக்கு முதலில் மிக்க நன்றிகள் அண்ணா( மன்றில் பலரும் ஏங்கி தவமிருப்பதல்லவா உங்கள் பின்னூட்டம்)....


"என் கைரேகையோடு" நான் மிக உணர்ந்து எழுதிய வார்த்தை...

//இனிமேல் என்கையால் துரோகம் என்னும் கத்தி குத்தப்படாதுன்னு யாரும் உறுதியா சொல்ல முடியாது.

அதே மாதிரி

இதுவரை துரோகம் என்னும் கத்தி என் கையால் யார் முதுகிலும் சொருகப்பட்டதில்லை என்றும் யாராலும் சொல்லவும் முடியாது...


இரண்டாவது பக்கமும் பார்த்திருந்தா கவிதை இன்னும் பலமா ஆகி இருக்கும். //


இரண்டாவது பக்கத்தை நான் யோசிக்கவே இல்லைங்கண்ணா.. நீங்க சொன்னப் பிறகுதான், அட ஆமாமில்ல அப்படி னு தோணுது..

கண்டிப்பா இனிஏழுததைருக்கும் கவிதைகாளில் இந்த ஆலோசனையை ஞாபகம் வைச்சுக்குவேன் அண்ணா..

ஆழ்ந்த பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் அண்ணா..

அமரன்
06-07-2010, 08:44 PM
கீதம், ராஜேஷ் என மன்ற உறவுகள் வேறு பதிப்புகளில் குறிப்பிட்டுக் காட்டியதில் தேடிப்பிடித்துப் படித்தேன். வீண்போகவில்லை என் எதிர்பார்ப்பு.

பாராட்டுகள் ஆதன்.
பயனுள்ள இழையாக இழைக்கப்பட்டுள்ளது.

nambi
06-07-2010, 08:51 PM
துரோக.... கத்திகள் எப்போதும் முதுகில் தான் குத்தும் என்னதான் நெஞ்சை திறந்து காட்டினாலும்...உண்மைதான்...வரிகள் அருமை! பகிர்வுக்கு நன்றி!

shibly591
07-07-2010, 03:15 AM
துரோகம் என்பது எப்போதுமே மழுங்காத கூர்க்கத்தி..குத்துபவர்கள் எப்படியும் இன்னொருவரிடமிருந்து அதே குத்தை வாங்கித்தான் ஆகணும்..

தாங்களின் விமர்சனப்பார்வை அருமை..வாழ்த்துக்கள்

சசிதரன்
07-07-2010, 01:45 PM
துரோகத்தின் கத்தியை பற்றி அருமையானதொரு பார்வை ஆதன்... ஒவ்வொருவரும் தங்கள் மனதின் ஆழத்தில் அதனை வைத்திருக்கிறார்கள் என்று சொல்வது நிதர்சனமான உண்மை... அருமை...:)

govindh
07-07-2010, 02:58 PM
நன்றி நினையாது...!
பழி..பாவம்..பார்க்காது...!

வெகு தூரத்திலிருந்து வீசினாலும்
குறி தவறாமல் குத்தி விடும்
இந்தத் துரோகக் கத்தி.

பாராட்டுக்கள் ஆதன்.

ஆதவா
07-07-2010, 05:08 PM
இக்கவிதைக்கு நல்ல விமர்சகர்கள் கிடைத்திருக்கிறார்கள் எனும்போது....... இங்கே பொங்கி வழிகிறது பொறாமை!! :traurig001:

துரோகம் முதுகில் பாயும்
நம்பிக்கை துரோகம் நெஞ்சில் பாயும்.
இது இரண்டையும் விடுபவர்களுக்கு
பின்னாள்
இதயத்தில் பாயும்
கத்திகள்!!

வாழ்த்துக்கள் ஆதி!