PDA

View Full Version : ந.ராசதுரை.....!!!



சிவா.ஜி
13-01-2010, 05:45 AM
ந.ராசதுரை


அமைதியாய் இருந்தது அந்த இடம். முதல் நாளே மணிமாறன் வந்து சுத்தப்படுத்திவிட்டு போயிருந்தான். அம்மா, அண்ணன்கள், அண்ணிகள், தங்கையுடன் வந்து சேர்ந்ததும் முதலில் அவனைத் தாக்கியது அந்த மயானத்தின் மௌனம்தான். காற்றில் ஒருவித வாசனை கலந்திருந்தது. அம்மாதான் மௌனத்தைக் கலைத்தாள்.

“இதுதானாப்பா உங்க அப்பாவை அடக்கம் பண்ணிய இடம்?”

வெறும் மண்மேடாய் இருந்ததாலும், முதல்முறை வருவதாலும் அவள் கேள்வியில் நியாயம் இருந்தது.

‘ஆமாம்மா...இதேதான். நேத்து நான்தானே வந்து சுத்தம் பண்ணிட்டுப் போனேன்”

மறக்கமுடியுமா அந்த இடத்தை அவனால்....முழுக்க மழுங்கடிப்பட்ட தலையுடன், இடது தோளில் தண்ணீர்க்குடம் சுமந்து சுற்றி வந்தது அவன் தானே. ஒவ்வொருமுறையும் அந்தப் பாணை அருவாளால் ஓட்டையாக்கப்பட்டபோது, தண்ணீருடன் கண்களிலிலிருந்து கண்ணீரும் வந்தது. வாய் அப்பா அப்பா என அரற்றியது.

’மணி இந்தா இதை சாப்பிடு நல்லா வெந்திருக்கு’ கைவிரல்களால் நசுக்கி சின்ன எலும்புத்துகள் கூட இல்லாமல் அவர் தன் தட்டிலிருந்து எடுத்து தரும் கறித்துண்டம் நினைவுக்கு வந்தது.


“ அப்ப இந்த பூவை தலைமாட்டிலும், கால் மாட்டிலும் வை.இந்தத்தண்ணியில கல்லக் கழுவிட்டு மஞ்சா குங்குமம் வெச்சுடு”

கையோடு கொண்டு வந்திருத சொம்புத்தண்ணீரை அவனிடம் கொடுத்துக் கொண்டே,

“ராசதுரை இந்த துணியைக் கால் மாட்ல விரிச்சுப்போடுப்பா.”

என மூத்தவனிடம் சொல்லிவிட்டு, பையிலிருந்த படையல் பொருட்களை ஒவ்வொன்றாய் எடுத்து மருமகள்களிடமும், மகளிடமும் கொடுத்து துணியின் மேல் பரப்பச் சொன்னாள்.

மணிமாறனின் அப்பாவுக்கு அன்று முதல் வருடம் நினைவுநாள். குழிப்படையல் கொடுக்க வந்திருக்கிறார்கள். எல்லாம் தயாரானதும், சூடம் கொளுத்திக் கும்பிடத் தொடங்கியபோது, மணிமாறன் தன் பையிலிருந்து குவார்ட்டர் பாட்டிலை எடுத்து அப்பாவின் குழியின் மீது ஊற்றினான்.

“இந்தக் கருமத்தை ஏண்டா ஊத்துற..? இதக் குடிச்சு குடிச்சுதான செத்தாரு இந்த மனுஷன்”

எரிச்சலுடன் கேட்டவளைப் பார்த்து லேசாக சிரித்தவன்...நினைவுகள் பின்னோக்கி ஓடின.

அப்பா நமச்சிவாயம் குள்ளமான உருவம்தான். சின்னதாய் மளிகைக்கடை வைத்திருந்தார். கடையை மூடிவிட்டு வர பத்துமணியாகிவிடும். வரும்போதே வாசனையுடன்தான் வருவார். ஆனால் தள்ளாட்டமேயில்லாமல் இருப்பார். அம்மாவிடம் வசவு வாங்கிக்கொண்டே தலைகுனிந்து சாப்பிட்டுவிட்டு, வழக்கமாய் தூங்கும் வராண்டாவுக்குப் போகும் முன் கூடத்தில் படுத்திருக்கும் பிள்ளைகளுக்கு ஒவ்வொருவர் அருகிலும் அமர்ந்து தலையைத் தடவி முத்தம் கொடுத்துவிட்டுதான் போவார்.

சின்னப்பெண் கமலா, தூக்கத்திலேயே சிணுங்குவாள். பல்லால் உதட்டைக் கடித்துக்கொண்டே பையப் பைய நடந்து போய்விடுவார். சில சமயம் சத்தம் கேட்டு விழித்துக்கொள்ளும் மணிமாறன், அவரது செய்கைகளைப் பார்த்து, இத்தனை நல்லவரை ஏன் அம்மா எப்போது பார்த்தாலும் திட்டிக்கொண்டே இருக்கிறார் என்று நினைப்பான். பெரும்பாலும் கணவன் மனைவிக்குத் தகராறு இரண்டு விஷயங்களால்தான் வரும். அவரது குடிப்பழக்கத்தால், இரண்டாவது தன் மூத்தமகன் ராசதுரையால்.

தாய்க்குத் தலைப்பிள்ளை என்பதை அம்மா மரகதம் அளவுக்கு அதிகமாய் நிரூபித்து வந்தாள். ராசதுரை என்ன தவறு செய்தாலும், அவனுக்குத் தான் ஆதரவாய் நிற்பாள். இவ்வளவுக்கும், நமச்சிவாயம் அவனை தொட்டு அடித்தது கூட இல்லை. கோபமாய் திட்டினாலே மரகதம் சண்டைக்கு வந்துவிடுவாள்.

‘என் ம்கனை ஏன் திட்டறீங்க. சின்னப்பையன் ஏதோ தெரியாம செஞ்சுட்டான் அதுக்கு ஏன் சாமியாடுறீங்க..நீ போடா கண்ணு....அம்மா நானிருக்கேனில்ல....அழாத...’

அழாதப் பையனை அழாதே எனச் சொல்லி அனுப்பிவிட்டு, நமச்சிவாயத்தை வறுத்தெடுக்கத் தொடங்கிவிடுவாள். இந்த செல்லமே அவனை கெடுத்து, கெட்டப் பழக்கங்களை தைரியமாய் செய்ய வைத்தது. பத்தாவது தேர்வில் தோல்வியடைந்ததும், அத்தோடு படிப்பை நிறுத்திவிட்டு, ஊர் சுற்றத் தொடங்கினான். நமச்சிவாயம்தான் அவனிடம் நைச்சியமாகப் பேசி, ஓட்டுநர் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்.

“பெரியவனே...உங்க தம்பிங்க எல்லாம் நல்ல படிச்சி நல்ல வேலைக்குப் போயிடுவாங்கப்பா. உனக்குன்னு ஒரு தொழில் உன் கையில இருந்தா நீயும் அவங்க மாதிரி சம்பாதிச்சு உன் வாழ்க்கையைப் பாத்துக்க முடியும்”

என்று சொன்னவரிடம் மௌனமாகத் தலையாட்டிவிட்டு பயிற்சிக்குப் போய் உரிமமும் வாங்கிவிட்டான். நமச்சிவாயம் சந்தோஷமாய் அவனுக்கு ஒரு பழைய டெம்போலாரியை வாங்கிக்கொடுத்தார்.

அவனே ஒருநாள் வந்து தான் மேரி என்ற பெண்ணைக் காதலிப்பதாகச் சொன்னான். மேரியின் அப்பாவும் அவனைப்போல ஒரு டெம்போலாரி ஓட்டுநர்தான். அவரைப் பற்றித் தெரிந்த நமச்சிவாயம்,

“அவங்க வேற மதம்ங்கறதுக்காக சொல்லலடா பெரியவனே...அந்த மைக்கேல் ஆளு சரியில்லடா. குடி, தொடுப்புன்னு எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு. பத்தாததுக்கு காசை வாங்கிட்டு ஆள அடிக்கிற ரௌடி வேலையை வேற செய்யுறான்...அந்த வீட்டுல பொண்ணு வேண்டாண்டா ராசு”

‘அந்த ஆளையா கட்டிக்கப்போறேன். அவன் பொண்ணத்தான கல்யாணம் பண்ணிக்கறேங்கறேன். நீ மட்டும் குடிக்கிறதில்லையா? அந்த ஆள சொல்ல வந்துட்ட”

அலட்சியமாய், எடுத்தெறிந்து பேசியவனைக் கோபமாய் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள்,

“அதான இவரு மட்டும் என்ன ஒழுங்கா...அந்த ஆளைப் பத்தி பேச...நீ போடா ராசு...நான் போய் அவங்க வீட்ல பேசுறேன்,இங்க பாருங்க என் மகனோட சந்தோஷம்தான் எனக்கு முக்கியம். அவன் ஆசைப்படற பொண்ணையே கட்டிக்கிடட்டும். நீங்க இதுல தலையிடாதீங்க”

மைக்கேலின் மற்ற எந்தக் கெட்டவைகளையுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், தாயும் மகனும் தன் குடிப்பழக்கத்தைக் காட்டி, எடுத்தெறிந்துப் பேசிவிட்டுப் போனதை எண்ணி கண்ணீர் வடித்தார் நமச்சிவாயம்.

மணிமாறன் படித்து முடித்து வேலைக்குப் போகத்தொடங்கிய பிறகும் கணவன் மனைவியின் சச்சரவு ஒயவில்லை. இவன் மீது மட்டும் நமச்சிவாயத்துக்கு எப்போதுமே பிரியம் அதிகம். ஆனால் அந்தப் பிரியம் இருப்பதையே ராசதுரையின் திருமணத்துக்குப் பிறகுதான் வெளிக்காட்டத் தொடங்கினார். சில நேரங்களில் குடியின் ஆக்ரமிப்பு அதிகமாகும்போது மட்டும்,

“மணி நீதாண்டா எனக்கு கடைசி காரியமெல்லாம் செய்யனும். உங்கம்மாவை நல்லா பாத்துக்கனும். அவ நல்லவடா. மூத்த பையங்கறதால அம்மாங்களுக்கே இருக்கிற தலைப்பிள்ளை பாசத்துல, நான் ராசதுரையை ஏதாவது சொன்னா, என் கிட்ட கோவமா இருக்கா. மத்தபடி உங்க மேலயும் அவளுக்கு ரொம்ப பாசண்டா. கதிரேசன் பாத்துப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்ல...இப்பவே பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு பெத்தவளை மதிக்க மாட்டேங்கறான். ராசதொரை பாக்கத்தாண்டா மொரடன். தம்பிங்க மேலயும், அவங்க அம்மா மேலயும் நெறய பாசம் வெச்சிருக்காண்டா. ஆனா அவன் பொண்ணுக் கட்டியிருக்கற எடம்தாண்டா சரியில்ல. அவ உங்கம்மாவப் பாத்துக்குவான்னு எதிர்பாக்க முடியாதுடா. நீ அப்படி இருந்துடாதடா தம்பி”

என உளறுவார். ஆனால் அவர் சட்டென்று இறந்ததும் இவன்தான் எல்லாக் காரியங்களும் செய்தான்.அப்பாவின் சொல்படி அம்மாவை கவனமாய் பார்த்துக்கொண்டான்.

உடன் வேலை செய்யும் நண்பனின் திருமணத்துக்காக அந்த ஊருக்குப் போனான். பெண் வீட்டில் நடக்கும் திருமணம். திருமணத்துக்கு முதல் நாள் பரிசம் போட்டார்கள். ஊர்ப் பெரியவர்கள் கலந்துகொண்டு நடத்தி வைத்த அந்த நிச்சயத்துக்கு வந்திருந்த ஒரு வயதான பெண் மணிமாறனை உற்றுப் பார்த்துக்கொண்டே...

”தம்பி நீங்க நமச்சிவாயம் பையனுங்களா?”

என்று கேட்டதும் மணிமாறனுக்கு ஆச்சர்யமாகிவிட்டது. காரணம், தான் பிறந்ததிலிருந்தே எந்த உறவினர் வீட்டுக்கும் போனதில்லை. ஏன்...அப்பாவும் அம்மாவும் எந்த வெளியூருக்குப் போயும் பார்த்ததில்லை. காரணத்தை எத்தனை முறை கேட்டாலும், நமச்சிவாயம், நமக்கு யாருமில்லடா தம்பி. நாம இந்த ஊருக்குப் பஞ்சம் பொழைக்க வந்தவங்க... என்று சொல்லிவிடுவார். அப்ப நம்ம சொந்த ஊர் எது என்று கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார்.

அப்படியிருக்கும்போது அப்பாவைத் தெரிந்தவர்களும் இருக்கிறார்கள் அவரைப் பற்றி விசாரிக்கிறார்களென்றால் சட்டென்று சந்தோஷமானான்.

‘ஆமாங்கம்மா...நான் அவரோட பையன்தான். நீங்க யாரும்மா...உங்களுக்கு எப்படி அவரைத் தெரியும்’

மணிமாறன் சொல்லி முடித்ததும், முகமெல்லாம் பரவசமாகி, அவனை முகம் வழித்து நெட்டி முறித்தாள்.

“நானா...யாரா...அதான் சொல்லிட்டியேப்பா அம்மான்னு. நானும் உனக்கு அம்மாதாம்ப்பா. உன் பெரியம்மா. உங்கம்மாவோட கூடப்பொறந்தவ. கடவுளே, கண்ண மூடுறதுக்குள்ள உங்களையெல்லாம் பாப்பேனான்னு தவிச்சுப்போய் கெடந்தேம்ப்பா. பொண்ணுவீட்டுக்காரங்க நெலத்தைதான் நாங்க குத்தகைக்கு பண்ணயம் பாக்குறோம். அவங்க கூப்புட்டாங்கன்னு கல்யாணத்துக்கு வந்தது நல்லதாப்போச்சு. என் ராசா அப்படியே உங்க அப்பா மாதிரியே இருக்கே. நல்லாருக்கியா கண்ணு. அம்மா அப்பால்லாம் நல்லாருக்காங்களா?”

மணிமாறன் கண்கள் சந்தோஷத்தில் கலங்கிவிட்டன. என்ன பேசுவதென்றே தெரியாமல் சற்று நேரம் மௌனமாய் இருந்துவிட்டு, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு,

‘அம்மா, அண்ணனுங்க, அண்ணிங்க, தங்கச்சி எல்லாரும் நல்லாருக்காங்கம்மா.....அப்பா இறந்து ஒரு வருஷம் ஆகப்போகுது”

‘ஆண்டவா....நமச்சிவாயம் எறந்துட்டாரா...எப்படிப்பா?”

‘உங்கக்கிட்ட சொல்றதுக்கென்ன பெரியம்மா.... குடி அதிகமாகி ஈரல் கெட்டுப் போய்.....ரொம்ப முயற்சி செஞ்சோம்...ப்ச்....காப்பாத்தமுடியல”

‘அடக்கடவுளே இதென்ன கொடுமையா இருக்கு. நமச்சிவாயம் குடிப்ப்பாரா?.. தங்கமானவராச்சேப்பா. இங்க இருந்தவரைக்கும், ஒரு கெட்ட பழக்கமும் இல்லியே....இந்த ஊருக்கு எவ்வளவெல்லாம் நல்லது செஞ்சிருக்காரு....அவருக்கா இந்த மாதிரி ஆகனும்.”

‘என்ன பண்றது பெரியம்மா....அம்மா சதா சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க...அவருக்கு நிம்மதியே இல்லாம இருந்தார்”

‘நெனைச்சேன்....அவளாலத்தான் இருக்குன்னு...எவ்ளோ பெரிய மனசு பண்ணி அவளுக்கு வாழ்க்கை குடுத்தாரு...அவரைப் போய் இந்த பாடு படுத்தியிருக்காளே”

“என்ன பெரியம்மா சொல்றீங்க’

“என்னத்த சொல்றதுப்பா....வா...அப்படி உக்காந்து பேசலாம்....."

வீட்டுக்கு வெளியே ஓரமாய் இருந்த கல் பலகையின் மேல் அமர்ந்துகொண்டு, மணிமாறனையும் கையைப் பிடித்து இழுத்து பக்கத்தில் அமர்த்திக் கொண்டு தொடர்ந்தார்.

"உங்கம்மாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்திச்சி. எந்த கெட்ட கண்ணு பட்டுதோ...ஆறே மாசத்துல அவ புருஷன்..காமாலையில போய் சேந்துட்டான். பொறந்த கொழந்தையைக் கூட பாக்க அவனுக்கு கொடுத்து வெக்கல. ராசதொரைய அவ புருஷன் வீட்டுக்காரங்களுக்கு தர முடியாதுன்னு சொல்லி, ஒரேயடியா சண்டை போட்டுக்கிட்டு எங்க வீட்லயேதான் இருந்தா உங்கம்மா. அவ நெலமைய பாத்து நாங்கள்லாம் தெனம் வேதனப்படுவோம். அப்பதான் உங்கப்பா....மகராசன்..அவளைக் கட்டிக்கிறேன், அந்தப் பையனை என் மகனா வளக்கறேன்னு சொல்லி, பொண்ணு கேட்டாரு. மொதல்ல எங்களுக்கெல்லாம் சம்மதமில்ல. அப்பல்லாம் அப்படி பழக்கமில்ல. உங்கப்பா அப்பவே சீர்திருத்தம் அது இதுன்னு கிராமத்துல ஏதேதோ பண்ணிக்கிட்டிருந்தாரு. ஆனா....எங்கப்பாவும் அம்மாவும்தான், எங்க காலத்துக்குப் பொறவு உனக்கு ஒரு பாதுகாப்பு வேணாமா தாயி, அண்ணங்க வீட்ல எத்தினி நாள் இருப்பே...அண்ணிங்க வேற வீட்டுப் பொண்ணுங்க அவங்க எப்படி தாயீ ஒன்ன கலங்காம வெச்சுக் காப்பாத்துவாங்கன்னு எடுத்து சொல்லி உங்கப்பாவுக்கு கட்டி வெச்சாங்க.கிராமமே வாயடைச்சுப் பாத்தாங்க”

மடியிலிருந்து வெற்றிலைப் பையை எடுத்து, வெற்றிலைப் பாக்கை மடித்து வாயில் போட்டுக்கொண்டு, கூடவே சிறிது புகையிலை இணுக்கையும் சேர்த்து போட்டு அதற்றிக்கொண்டே தொடர்ந்தார்,

” ஆனா உங்கம்மா ஒரு கண்டிசன் போட்டா. கட்டிக்கிடுறேன்....ஆனா...அடுத்த நாளே இந்த ஊரவிட்டு வேற எங்கையாவது போயி பொழச்சுக்கனும், இங்க இருந்தா என் மவனை என்கிட்டருந்து எங்க புருஷன் வீட்டுக்காரங்க பிரிச்சுடுவாங்கன்னு சொன்னா. உங்கப்பாவும் அதுக்கு ஒத்துக்கிட்டு, அவரு பாகத்தையெல்லாம் வித்துக் காசாக்கிக்கிட்டு, அவங்க அப்பா அம்மாவ சமாதானப் படுத்திட்டு போனவங்கதான்யா....இன்னி வரைக்கும் எங்க இருக்காங்க....என்ன செய்யுறாங்கன்னு ஒரு வெவரமும் தெரியல....இப்பத்தான்யா ஒன்னப் பாக்குற பாக்கியத்த அந்த செல்லியம்மா குடுத்திருக்கா”

அதிர்ச்சியின் உச்சத்திலிருந்தான் மணிமாறன். அவர் சொன்னதை ஜீரனிக்கவே அவனுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. இதுதான் அம்மா மூச்சுக்கு மூச்சு என் மகன், என்மகன் என்று சொல்லக் காரணமா? இதனால்தான் நமக்கு எந்த ஊர் எனக் கேட்டபோதெல்லாம் அவர்கள் சொல்லவில்லையா? அம்மாவின் கோபம் இப்போதுதான் அவனுக்கு விளங்கத்தொடங்கியது. அது கோபமல்ல...எங்கே தன் மகன் ஒதுக்கப்பட்டு விடுவானோ என்ற தாய்மை பயம். அப்பா அண்ணனைக் கண்டிக்கும்போதெல்லாம், அதுவே வளர்ந்து அவனை வெறுத்துவிடுவாரோ என்ற அச்சம். பிறந்த ஊரை உதறிவிட்டு வந்ததற்கான காரணமும், அங்கேயே இருந்தால் ராசதுரையைப் பற்றி பிள்ளைகளுக்குத் தெரிந்துவிடும், பிறகு அவர்களுக்குள் வேறுபாடு வந்துவிடுமோ என்ற அச்சம்தான். நினைக்க நினைக்க அப்பாவின் மேல் மரியாதைக் கூடிக்கொண்டே வந்தது.

கிரேட் மேன். அற்புதமான மனிதர். இறக்கும்வரை இந்த உண்மை எங்கள் யாருக்கும் தெரியாமல், ராசதுரையை வேற்றுமைப் படுத்தாமல் இருந்தாரே.

“பெரியம்மா....நீங்க எனக்கு ஒரு சத்தியம் பண்ணித் தாங்க. என்னைப் பாத்ததோ, இதெல்லாம் என் கிட்ட சொன்னதோ தயவுசெஞ்சி வேற யாருக்கும், குறிப்பா எங்கக் குடும்பத்துக்கு தெரியவே கூடாது. நான் ஒருநாள் கட்டாயம் அம்மாவயும் எல்லாரையும் இங்க கூட்டிக்கிட்டு வரேன். தெரிஞ்சா அம்மாவும், ராசதுரையும் நொறுங்கிப்போயிடுவாங்க....ப்ளீஸ் பெரியம்மா”

திருமணம் முடிந்த மறுநாள் கண்கலங்க அவர் விடைகொடுத்தபோதே அவனுக்குத் தெரிந்தது யாரிடமும் சொல்லமாட்டாரென்று.

நீண்ட நினைவுகளிலிருந்து மீண்டவனைப் பார்த்து,

“ஏண்டா மணி அப்பா ஞாபகம் வந்துடிச்சா...அம்மா கேட்டதுக்கு பதில் சொல்லாம அப்படியே யோசனைக்குப் போயிட்ட..? சரி சாமி கும்புட்டுட்டு வா....போலாம்”

“வராம இருக்குமா....அப்பாவுக்கு செல்லப்புள்ளையாச்சே...அதான் அந்தக் கருமத்த மறக்காம வாங்கிட்டு வந்து ஊத்தியிருக்கான்..”

அம்மாவின் பேச்சைக் கேட்டதும், மெலிதாய் புன்னகைத்துக்கொண்டே,ராசதுரை சொன்னபடி கையெடுத்துக் கும்பிட்டு விட்டு அவர்களோடு நடந்தான்.

முன்னால் போய்க்கொண்டிருந்த மரகதம் எதையோ மிதித்துவிட்டு, கீழே பார்த்து உச்சுக் கொட்டினாள்.

மணிமாறனும் கீழேப் பார்த்தான். ஒரு குயில் குஞ்சு இறந்து கிடந்தது. அப்படியே தலையை உயர்த்தி மேலே பார்த்தவனோடு மரகதமும் தன் பார்வையை திசைமாற்றினாள்.அருகில் இருந்த மரத்தின் கிளையில் ஒரு காக்கைக் கூடு தெரிந்தது

“குயில் குஞ்சும்மா....தன்னோடக் குஞ்சு இல்லன்னு தெரிஞ்சதும் அந்தக் காக்கா வெளியே தள்ளிவிட்டுடிச்சி போலருக்கு, சரி வாங்க போகலாம்”

அதிர்ச்சியுடன் மணிமாறனைப் பார்த்தவளை ஆதரவாக தோளில் அணைத்தபடி வீட்டுக்கு வந்தான்.

வீட்டுக்குள் நுழைந்ததும், மாலையோடிருந்த நமச்சிவாயத்தின் படம் தெரிந்தது.

திருமதி.மரகதம் நமச்சிவாயம், மெல்ல நடந்து சென்று, அந்தப் படத்தின் முன்னால் தலைகுனிந்து அமர்ந்து கதறினார்.

அன்புரசிகன்
13-01-2010, 06:06 AM
கதையின் ஆரம்பத்திலிருந்தே கலங்கடிக்க வைக்கிறது. அதுவும் இறுதியாக குயில் குஞ்சின் நீதி கூறுவது கதையின் உச்சக்கட்டம் எனலாம் போல் உள்ளது...

சீர்திருத்தங்களை அந்தக்காலங்களில் நடைமுறைப்படுத்திய தந்தை கதையின் கதாநாயகனாக தோன்றுகிறார்.

கதைக்கு ராசதுரை s/o நமச்சிவாயம் என்று தலைப்பு வைக்கலாமோ என்று எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை...

உங்களின் தனிவழிப்பாணியில் இன்னொரு கதை. வாழ்த்துக்கள் அண்ணா...

தாமரை
13-01-2010, 06:11 AM
சிவாஜி, அழகா விளையாடி இருக்கீங்க... வாழ்த்துகள்!!!!

அழகான கரு இருக்கு...

கதைகளம் இருக்கு...

முடிவு சொல்ல குயில் குஞ்சு இருக்கு..

கதையின் மடிப்புகளில் சில விஷயங்கள் மறைஞ்சிருக்கு.. பலருக்கு அது தெரியவே வராது. அதனால..

அதை எல்லாம் கொஞ்சம் வெளியே கொண்டு வரலாமே!!!

aren
13-01-2010, 06:31 AM
ஒரு சின்னக் கருவை வைத்துக்கொண்டு உங்கள் வார்த்தை ஜாலங்களை அழகாக தெளித்து அருமையானதொரு கதையை இங்கே கொடுத்து என்னை கலங்கடிக்க வைத்துவிட்டீர்கள். சபாஷ் போட வைக்கும் கதை!!!! பாராட்டுக்க*ள்.

நீங்கள் இன்னும் எழுதவேண்டும். தொடருங்கள்.

aren
13-01-2010, 06:39 AM
இந்தக் கதையை மின் இதழுக்குப் பரிந்துரைக்கிறேன்.

சிவா.ஜி
13-01-2010, 07:46 AM
நானும் முதலில் அப்படித்தான் தலைப்பிட நினைத்தேன் அன்பு. ஆனால் அந்த இனிஷியல் எல்லாம் சொல்லும் என்பதால் அப்படியே வைத்துவிட்டேன்.

எப்போதும்போல உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

சிவா.ஜி
13-01-2010, 07:48 AM
நன்றி தாமரை. மடிப்புகளை நீங்களே விரித்தால் நன்றாக இருக்கும். உங்களின் பார்வை....வித்தியாசமாய் இருக்கும்.

சிவா.ஜி
13-01-2010, 08:01 AM
இந்தக் கதையை மின் இதழுக்குப் பரிந்துரைக்கிறேன்.

பரிந்துரைக்கு மிக்க நன்றி ஆரென்.

jayashankar
13-01-2010, 08:24 AM
மிகவும் நேர்த்தியாக கொண்டு செல்லப்பட்டுள்ள கதை...

முதல் மரியாதை சிவாஜிதான் நினைவுக்கு வருகின்றார் நமச்சிவாயம் அவர்களைப் பற்றி வர்ணிக்கும் போது. ( கதை, போக்கு அனைத்தும் வேறுவிதமாக இருப்பினும்).

தன் கடந்தகாலங்களைப் பற்றி கூறாமலே தான் எவ்வளவு உயர்ந்தவன் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லி மறையும் தந்தை, தாயின் அதீத அன்பால் ( அது பயம் கலந்தது என்பது பிறகு தெரியும் போது அனுதாபம்தான் ஏற்படுகின்றது) கெட்டு குட்டிசுவராகிப் போய் உப்பு சப்பில்லாத வாழ்க்கை வாழும் மூத்தவன் ராசதுரை, தந்தையால் அரவணைக்கப்பட்டு தன் நிலையுணர்ந்து வாழ்வில் உயர்ந்து வாழும் மணிமாறன், தன் இறந்த கால வினையை நினைத்து தன் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அனைத்தையும் மறந்து வாழ்க்கை என்றால் என்ன என்பதை மறந்து தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, கணவனையும் மதிக்காமல் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற மரகதம்.

அனைத்து பாத்திரங்களின் பங்களிப்பும் மிக நேர்த்தியாக எங்கும் குறையோ கூடவோ இல்லாமல் கொண்டு சென்றிருப்பதுதான் இந்தக் கதையின் சிறந்த அமைப்பு.

இருப்பினும், தலைப்புத்தான் சிறிது காலை வாரிவிட்டது. மூத்தாரின் மகன் தான் ராசதுரை என்பது அவன் தன் தாயாரால் தடம் மாறி வளர்க்கப்பட்டான் என்ற கருத்தை உரைக்க ஆசிரியர் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், கதையின் கருவும் கதைக் களமும் கூறவருவது நமச்சிவாயம் அவர்களின் தியாகத்தை. மற்றும் இந்தக் கதையின் நாயகனாக மணிமாறனைத்தானே பார்க்க முடிகின்றது.

பிறகு ஏன் இந்தத் தலைப்பு...


இருப்பினும், கதையை நகர்ந்திச் சென்ற விதம், படிப்பவர்களை கட்டிப்போடுகின்றது என்பது உண்மை.


வாழ்த்துக்கள் சிவா

சிவா.ஜி
13-01-2010, 08:39 AM
விரிவான, அருமையான, அழகான பின்னூட்டம்.

சரியாகச் சொன்னால், இந்தக்கதையின் நாயகன் ராசதுரைதான். கதைக் கருவே அவனைச் சார்ந்ததுதான். நமச்சிவாயத்தின் தியாகம் இதில் பெரிதாய் இல்லை. அவரது எண்ணங்களும், செயல்களும் அவர்மீது மரியாதை ஏற்படுத்துகிறது.

ராசதுரையை உன் பெயர் என்ன எனக் கேட்டால்...'ந.ராசதுரை' எனச் சொல்லும் உரிமையை, எந்தவித பெரிய செயலாகவோ, தியாகமாகவோ செய்யாமல், தன் இயல்பாய் அதைச் செய்ததுதான் அவர் மீது மதிப்பு இன்னும் கூட காரணம்.

வெறும் ராசதுரை எனத் தலைப்பு வைத்திருந்தால்...அது சாதாரணம். 'ந' வைச் சேர்த்தது, வாசித்து முடித்ததும் தலைப்பை கதையோடு இணைக்க முடியும் என்பதால்தான்.

வினாக்களிருந்தால், விளக்கம் வரும், படைப்பாளிக்கே ஒரு தெளிவு வரும். எனவே வினா எழுப்பிய பின்னூட்டத்திற்கு பிரத்தியேக நன்றிகள் ஜெய்.

பா.ராஜேஷ்
13-01-2010, 08:54 AM
மணிமாறன் உடன் பயணித்த அனுபவம் கிடைக்கிறது. நமச்சிவாயத்தின் அன்பும், பண்பும் மணிமாறனுக்கும் வந்திருப்பது தெரிகிறது.

தாமரை அண்ணா, இன்னமும் மடிப்புகள் இருந்தால், மடிப்புகளை விரியுங்களேன்..

தாமரை
13-01-2010, 09:02 AM
என்ன சிவாஜி என் தலை மேல இப்படி பாரத்தை இறக்கி வச்சுப்புட்டீங்க..

இருக்கட்டும் இருக்கட்டும் பின்னால ஒரு முறை வச்சுக்கிறேன்.. ஒவ்வொண்ணா சொல்றேன் கேட்டுக்குங்க..

மனசு இருக்கே மனசு.. அதைப் புரிஞ்சிக்க முடியவே முடியாதுங்கறேன்..

அந்த அம்மா சாகுற மட்டும் ராசதுரையை பொத்திப் பொத்தி வளர்க்கத்தான் போறா!!
உண்மையில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தா இப்படிப் பட்ட மனப்பான்மை கொண்டவர்கள்

“குயில் குஞ்சும்மா....தன்னோடக் குஞ்சு இல்லன்னு தெரிஞ்சதும் அந்தக் காக்கா வெளியே தள்ளிவிட்டுடிச்சி போலருக்கு, சரி வாங்க போகலாம்”

என்ற வார்த்தையைக் கேட்டவுடன், தன் கணவனின் பெருமையை நினைப்பதற்கு பதிலா, தன் மகனின் நிலைமையைப் பத்தி நினைச்சு சுருண்டு போவாங்க. இராசதுரை வளர்ந்துட்டான், கல்யாணமாகிடுச்சி, குடும்பத்தலைவனா இருக்கான் என்ற எண்ணமெல்லாம் வராது.. ஐயய்யோ இராசதுரை அப்பனில்லாத பிள்ளைன்னு தெரிஞ்சுடுமோ அப்படிங்கற மனச்சுருக்கம் உடனே வந்திரும்.

மனசுக்குள்ள இப்படி ஒரு இடம் இருக்கிறது. அதில நமக்கு மிகவும் பிடிச்ச ஒருவர் மிகப் பெரிய கஷ்டத்துக்கு ஆளாவார். மனசில ஒரு உறுதி வரும். அவரை நாம கடைசி வரை சிறு கஷ்டம் கூட ஏற்பட விடக் கூடாதுன்னு..

சிலருக்கு அம்மா, சிலருக்கு அப்பா, சிலருக்கு இப்படி குழந்தை, சிலருக்கு சகோதரங்கள்...

அவர்கள் சார்ந்த விஷயங்கள் வரும்பொழுதெல்லாம், இவர்கள் படுபயங்கர சுயநலவாதிகள் ஆகிறதும், மரவட்டை மாதிரி தொட்டாற்சிணுங்கியாக இருப்பதும் மாற்றவே இயலாதவை..

நமச்சிவாயம் ஏன் குடிக்க ஆரம்பிச்சார்?

அவருக்கு இராசதுரையோட அப்பா அப்படிங்கற ஸ்தானத்தை ஊரே, உலகமே கொடுத்தாலும் அந்த அம்மா அந்த ஸ்தானத்தை அவருக்கு இன்னும் கொடுக்கலை.

நமச்சிவாயம் அப்பாவா நடக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் அந்த அம்மா அவரை அங்கிருந்து தள்ளி விடறாங்க..

ஒரு தகப்பனா அவரால ராசதுரைக்கு இனிசியல் மட்டும்தான் குடுக்க முடிஞ்சது.

ந.இராசதுரை சன் ஆஃப் மரகதம் என்ற தலைப்பு, இதை அழகா வெளிய கொண்டுவரும்.. உண்மையில் எனக்கு இந்தக் கதையின் அடிப்படையில் தெரிவது இதுதான். நமச்சிவாயம் என்ற பெயரை அதிகம் உபயோகப்படுத்தாமல், அம்மா பேரைச் சொல்லி இருந்தீங்கன்னா இந்தக் கோணம் வெளிய வரும். கடைசியில் அப்பா பேரு நமச்சிவாயம்னு சொல்லி இருக்கலாம்.

நல்லவனா வாழ்கிறவனுக்கு வரும் கஷ்டங்கள் இருக்கே, அதை வெளிக்காட்டாமல் வாழும் "முதல் மரியாதை" சிவாஜி கேரக்டர்கள் இருக்காங்களே.. அவர்களின் வாழ்க்கை பலருக்குத் தெரியாமலயே போயிடுது..

இதுவே இராசதுரையின் திருமண வாழ்வு நிம்மதி குறைந்ததாக இருக்கும் பட்சத்தில் என்ன ஆகும்?

இராசதுரை அம்மாவைக் கவனிக்க முடியாது என நமச்சிவாயம் கணித்தது மிகவும் சரி.. ஏனென்றால் அம்மாவுக்குத்தான் இராசதுரை முக்கியமே தவிர இராசதுரைக்கு அம்மாவா, தன் மனைவியா எனப் போராட்டம் வரும் பட்சத்தில் அம்மா பக்கம் இருக்க மாட்டார். அந்த அம்மாவின் போராட்டம் கண்டிப்பா இராசதுரைக்குப் புரியவும் புரியாது.. அப்பா பிடிவாதக்காரி. அம்மாவுக்கு சின்ன மனசு அப்ப்டின்னு எல்லாம் தோணுமே தவிர அம்மாவின் உணர்வுகள் கண்டிப்பா புரியாது.

மணிமாறன் தெளிவானவர் என்று கணித்ததும் சரிதான்.

உங்கள் பார்வையில் தெரிவது நமச்சிவாயம் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்தார் என்பது. மறைந்து இருப்பது மரகதம் அவருக்கு இராசதுரையின் அப்பா என்ற ஸ்தானத்தை தரவே இல்லை என்பது.

அந்த ஸ்தானத்தை கடைசியா அவள் தர ஒரு காரணம் அழகா கொடுத்து இருக்கீங்க. பொருத்தமான, அழகான லாஜிக்கான குயில் குஞ்சு - காக்கை நிகழ்ச்சி, மணிமாறன் கொடுத்த சின்ன ஷாக் ட்ரீட்மெண்ட்..

தெளிவான இந்த முடிவுக்கு பின் ந. இராசதுரை என்பது அழகா பொருந்துது...

மனசுக்கு இதமான முடிவைக் கொடுத்த இந்த முடிவுக்கு நன்றி.

( ஆனால் மரகதம் போன்றவர்களை வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தால் குயில் குஞ்சு உதாரணம் போல அவர்கள் மனசை இரணப்படுத்தும் விஷயம் இருக்கவே இருக்காது. )


இரண்டாவது விஷயம் மணிமாறன் அப்பாவுக்கு எப்படிச் செல்லப் பிள்ளை ஆனான் என்பது..

அதை பொங்கல் முடிஞ்சு சொல்றேன்

jayashankar
13-01-2010, 09:08 AM
உண்மைதாங்க.... அது உங்கள் கதையில் வருகின்றது. அதனை இரண்டாவது முறை படித்த போதுதான் கண்டேன்.

ஒரு இடத்தில் ‘ தன் மூத்தமகன் ராசதுரை” என்றும் “இன்று மணிமாறனின் அப்பாவுக்கு” என்றும் கூறி வேறுபடுத்திக் காட்ட முயற்சி மேற்கொண்டுள்ளது தெரிகின்றது.

ஆயினும், ராசதுரைதான் முக்கிய கதாபாத்திரம் என்ற கூற்று இருக்கும் போது கதை களனை மணிமாறனும், அவன் தந்தையும் மட்டுமே அவர்களின் நெருங்கிய சொந்தமாகிய மரகதத்தை வைத்து நகர்த்திச் செல்வதால், ராசதுரைக்கும் கதைக்கும் அவ்வளவு சம்பந்தமில்லாமல் போய் விடுகின்றது என்பதையும் மறுக்க முடியாது.

இவையனைத்தும் பிரச்சினையேயில்லை. ஏனெனில் தாங்கள் இந்தக் கதையை நகர்த்தி சென்றவிதம், பிரச்சினையை அணுகி அதனை தீர்த்து வைத்த முறை, பாத்திரங்களின் நேர்த்தியான பங்களிப்பு, மிகவும் ஆழமான கதைக் கரு.

இதனால்தான், நான் முதல் மரியாதை சிவாஜி ( என்னை மிகவும் பாதித்த சிவாஜி படங்களில் முக்கியமானது) நினைவுக்கு வருகின்றார் என்று குறிப்பிட்டேன்.

நன்றிங்க சிவா...

சிவா.ஜி
13-01-2010, 09:10 AM
மணிமாறன் உடன் பயணித்த அனுபவம் கிடைக்கிறது. நமச்சிவாயத்தின் அன்பும், பண்பும் மணிமாறனுக்கும் வந்திருப்பது தெரிகிறது.

தாமரை அண்ணா, இன்னமும் மடிப்புகள் இருந்தால், மடிப்புகளை விரியுங்களேன்..

ரொம்ப நன்றி ராஜேஷ். தாமரை மடிப்புகளை விரிக்கத் தொடங்கிவிட்டார். பாருங்கள். மறந்திருக்கும் பலதும் வெளிவரும்.

தாமரை
13-01-2010, 09:11 AM
இருப்பினும், தலைப்புத்தான் சிறிது காலை வாரிவிட்டது. மூத்தாரின் மகன் தான் ராசதுரை என்பது அவன் தன் தாயாரால் தடம் மாறி வளர்க்கப்பட்டான் என்ற கருத்தை உரைக்க ஆசிரியர் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், கதையின் கருவும் கதைக் களமும் கூறவருவது நமச்சிவாயம் அவர்களின் தியாகத்தை. மற்றும் இந்தக் கதையின் நாயகனாக மணிமாறனைத்தானே பார்க்க முடிகின்றது.

பிறகு ஏன் இந்தத் தலைப்பு...




இந்தக் கதையைப் பொருத்தவரை மணிமாறன் கதைசொல்லி!

கதையை முழுக்க நாம் மணிமாறனின் மனம், கண், காதுவழியாகவே பார்க்கிறோம்.

அந்த மணிமாறனுக்கு ஹீரோவாகத் தெரிவது நமச்சிவாயம்.

ஒருவரின் வாழ்க்கையை இன்னொருவர் சரிதமாக எழுதும் பொழுது எழுதுபவர் கண்ணோட்டத்தில் இருப்பது போல மணிமாறனின் மனதில் இருக்கும் நமச்சிவாயத்தை நாம் பார்க்கிறோம்.

இதை மணிமாறன் நேரடியாக நமக்குச் சொல்வது போல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் மணிமாறன் ஹீரோ அல்ல. அவர் நமக்கு கதையைச் சொல்லுபவர்.

கடைசி வரியில் நமச்சிவாயத்திற்கு இராசதுரையின் அப்பா ஸ்தானம் கிடைக்கிறது. அதனால் ந.ராசதுரை என்பது கதையை முழுக்கப் படித்த பின் பொருந்துகிறது..

இராசதுரை என்பதால் கதை அவரைப் பற்றி இருக்கும் என மனசில் ஒரு எண்ணம் இருக்கும் தான்...

ஆனால் ந. இராசதுரை என்று சொல்வதன் மூலம் அந்த இனிஷியலுக்கு அர்த்தம் கிடைத்த நிகழ்வை சிவா.ஜி சொல்லி இருக்கிறார். ந. இராசதுரை அப்படின்னு இனிஷியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் சரிவருமோ?

சிவா.ஜி
13-01-2010, 09:16 AM
தாமரை.....எனக்கே தெரியாமல் மறந்திருக்கும் பலதையும் வெளிக்கொண்டு வந்து விளக்கம் கொடுக்கவும், சிந்திக்க வைக்கவும் உங்களால் முடியுமென்பதால்தான் சொன்னேன். விளக்கம் வாசித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டேன்.

நான் கடைசி வரியில் மட்டுமே திருமதி.மரகதம் நமச்சிவாயம் என எழுதியிருப்பதன் சரியான அர்த்தம் விளங்கிக்கொண்டதுமல்லாமல், அதன் பின்னனியை உளவியல் ரீதியாய் அலசியிருக்கும் விதம்....உங்களுக்கு என்னுடைய சல்யூட்.

பொங்கலுக்குப் பிறகு மீண்டும் பார்ப்போம்.

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

சிவா.ஜி
13-01-2010, 09:20 AM
தலைப்பில் அப்படி ஒரு எழுத்தை மட்டும் பெரிதாக்க முடியுமாங்க* தாமரை?

பா.ராஜேஷ்
13-01-2010, 09:34 AM
மடிப்புகள் எத்தனை. 3 இடியட்ஸ் படத்தில் சொல்வது போல் வித்தியாசமாக சிந்திப்பவர்களால் (திங்க் அவுட் ஆப் தி பாக்ஸ்) இந்த கோணத்தில் பாக்க முடிகிறதோ !!! :confused: ;)

தாமரை
13-01-2010, 09:39 AM
மணிமாறனாக நான் வாழ்ந்திருக்கிறேன் என்பதால் என்னால் எளிதில் சம்பந்தப் படுத்திப் பார்க்க முடிகிறது இராஜேஷ்.

சிவா.ஜி தலைப்பில் செய்ய முடியாது...

ஆனால் கதையின் மேல் தலைப்பை மறுபடி அப்படி செய்யலாமே... கதைக்கு வலிமை சேர்க்கும்.

jayashankar
13-01-2010, 10:17 AM
அடடே! மணிமாறரா நீங்க....

என்னடா பயங்கரமா யோசிச்சு, எப்படி இப்படியெல்லாம் எழுதுறாரேன்னு பார்த்தா, கதை அப்படிப் போகின்றதா...

அப்ப சரிதாங்க.

கதையில் வரும் எழுத்தை விட அனுபவம் சொல்லும் எழுத்துக்கள் மிகுந்த வலிமையானவைங்க தாமரை.

மாற்றுக்கருத்தே கிடையாது.

அப்புறம், தவறு செய்வதும், அதனைத் திருத்திக் கொளவதும் மனித இயல்பு. ஆனால், அதனை ஏற்று, அன்போடு அரவணைத்து, அதன் இயல்பில் அதனை மதித்து, அந்த உணர்வுகளைக் காத்து, அவர்களை திருத்த எத்தனிக்காமல் அவர்கள் நிலையை பெரிதாக மதித்து வாழுதல்தான் சிறப்பு.

உங்களைப் போன்ற மணிமாறர்களால்தான் மாதம் மும்மாரி பொழிகின்றது தாமரை. வாழ்த்துக்கள்....

சிவா.ஜி
13-01-2010, 10:39 AM
மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப்போகும்.....

மணிமாறனா வாழ்ந்து பாரு பாசம், நேசம், புரிந்துணர்வு, மனிதம் எல்லாமே எப்போதும் உடனிருக்கும்....

மறுபடி ஒரு ராயல் சல்யூட் தாமரை.

ஆதி
13-01-2010, 11:40 AM
கதையை மிக அழகாய் கொண்டு சென்றிருக்கீங்க அண்ணா..

மணிமாறன் பாத்திரத்தை சரியாய் பயன்படுத்திருகீங்க அண்ணா..

மரகதத்தின் நிலையை கொஞ்சம் உள்ளே சென்று பார்த்தால், அவள் உண்மையில் கொடுமைக்காரியோ, சண்டைக்காரியோ இல்லை..

அவள் கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டே இருந்தது, தன் மூத்தமகன் ஒதுக்கப்பட்டு விடுவானோ என்று பயத்தினால் மட்டுமில்லை..

அவளின் பிரச்சனை .. நமச்சிவாயம் ஏதோ பெரிதாக தனக்காக தியாகம் செய்துவிட்டார் என்றும் இந்த சமூகத்தின் கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு தான் இரண்டாம் மணம் புரிந்து கொண்டோம் என்றும் அவளுக்குள் இருந்த தாழ்வு மனப்பாண்மையும், குற்ற உணர்ச்சியும்தான்..

இராசதுறைக்காக மட்டும் ஊரைவிட்டு வந்துவிடல்லை, இரண்டாம் கல்யாணம் புரிந்து கொண்ட பிறகு அவளுக்குள் உள்ள குற்ற உணர்ச்சியால் அவளால் யாரையும் நேர் கொள்ள இயலாது என்னும் நினைப்புமே அவளை ஊரைவிட்டு போய்விட வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வைத்திருக்க வேண்டும்..

அவள் ராசத்துறைக்காகத்தான் எல்லாம் செய்தாள் என்றால், மற்ற குழந்தைகளே வேண்டாம் என்று அவள் இருந்திருக்க முடியும், நமச்சிவாயமும் அவளை கண்டிப்பாய் கட்டாயப்படுத்தி இருக்க மாட்டார்.. அதனால் பிரச்சனை அவளின் தாழ்வு மனப்பான்மையும் குற்ற உணர்ச்சியுமே..

அதுமட்டுமின்றி அவளின் இன்னொரு பிரச்சனை, இராசதுறை தான் இரண்டாம் மணம் புரிந்து கொண்டதால் தன்னை வெறுத்துவிட கூடாது என்பதும் தான்.. அதனாலேயே அவள் அதிகமாய் அவன் மீது பாசம் காட்டினாள்..

இங்கு எந்த அளவுக்கு மரகதம் நமச்சிவாயத்தை புரிந்து கொள்ளவில்லையோ, அந்த அளவுக்கு மரகதத்தை நமச்சிவாயம் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பதே திடமான உண்மை.. நமச்சிவாயம் மரகதத்துக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும்.. நமக்கு வேறுப் பிள்ளைகள் வேண்டாம் என்று கூட சொல்லி அவளின் பயத்தை கொஞ்சம் சரி செய்திருக்கலாம்..

மரகதம் ஏன் தன்னோடு அதிகமாய் சண்டை போடுகிறாள் என்று யோசித்து, அவளின் பிரச்சனையை களைய முயற்சித்து இருக்கலாம்.. ஆனால் அவர் தன்னை மரகதம் புரிந்து கொள்ளவில்லை என்று நொந்து கொண்டு, தன்னை தனிமை படுத்திக் கொண்டதோடு மரகதத்தையும் தனிமைப் படுத்திவிட்டார்..

எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனையில் சம்பந்தப் பட்ட அத்தனை பேரின் தவறும் அந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்குமே ஒழிய ஒருவர் மீது மட்டும் பழிப் போட கூடாது என்பதால் இதனை சொல்கிறேன்..

//“குயில் குஞ்சும்மா....தன்னோடக் குஞ்சு இல்லன்னு தெரிஞ்சதும் அந்தக் காக்கா வெளியே தள்ளிவிட்டுடிச்சி போலருக்கு, சரி வாங்க போகலாம்”//

இந்த வரிகள் உண்மையிலேயே கதைக்கு ஒரு பெரிய பலம் அண்ணா.. சரியான வரியை சரியான இடத்தில் பயன்படுதிருக்கீங்க அண்ணா.. கலக்கீடிங்க அண்ணா.. கொஞ்சம் கலங்கவும் வச்சுடீங்க அண்ணா..

பாராட்டுக்கள் அண்ணா..

சிவா.ஜி
13-01-2010, 11:50 AM
அட மிக வித்தியாசமான கோணம் ஆதன். உண்மைதான், தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தெரிந்தால், ராசதுரை சங்கடப்பட்டிருப்பான் என்பது நிஜம்தான்.

அதேபோல, ராசதுரை தன் மகன் இல்லை என்பதை யாரும் எந்த நேரத்திலும் தெரிந்துகொள்வதை விரும்பாத நமச்சிவாயம், அதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை, தன் மனைவியைப் புரிந்துகொள்வதற்கு கொடுக்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆனால் மனைவி மீது பாசமில்லை என சொல்ல முடியாது. இனி குழந்தைகள் வேண்டாமென்று சொல்லியிருந்தால், மரகத்தின் மீது மட்டும்தான் அவருக்கு அக்கறை, அவள் மட்டும் போதும் என்று நினைத்ததைப்போல ஆகியிருக்கும்.

தன்னுடைய இயல்பான வாழ்க்கையையும் வாழமுடியும், அதே சமயம், தன் மனைவியின் குழந்தையை தன் குழந்தையாய் வரித்துக்கொள்ள முடியும் என உறுதியாக நம்பியதால்தான் தைரியமாய் அவளைக் கல்யாணம் செய்து கொண்டார். அப்படி வாழவும் செய்தார்.

பல நேரங்களில் பெற்ற பாசம், கணவன் பாசத்தைவிட அதிகம் என்பதை நாம் கண்டிருக்கிறோம்.

மிக அழகான மாற்றுக்கண்ணோட்டத்துடனான பின்னூட்டம். மிக்க நன்றி ஆதன்.

கீதம்
13-01-2010, 11:58 AM
எல்லாக்கோணங்களையும் எல்லோரும் அலசி ஆராய்ந்து வெளிப்படுத்தியபின் எதை எழுதுவது என்று புரியாமல் விழிக்கிறேன். கதையின் முடிவில் நெஞ்சம் கலங்கியது உண்மை. சமுதாயத்தில் இது போன்ற புரட்சித்திருமணங்கள் வரவேற்கப்படவேண்டியவைதான் என்றாலும் இதன் பின்னணியில் இருக்கும் சிக்கல்களையும் கலைய முயற்சிக்கவேண்டும். கதை மாந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் ஒருவகை பரிதாபமே எழுகிறது. மிக்க பாராட்டுகள்.

சிவா.ஜி
13-01-2010, 12:05 PM
நீங்கள் சொன்னதைப்போல, உணர்ச்சிவசப்பட்டோ, அதீத ஆர்வத்திலோ சமுதாய பழக்கவழக்கங்களுக்கு எதிரான செயலை யாராவது செய்துவிடும்போது, அது பாராட்டப்படவேண்டியதாக இருந்தாலும், அதன் விளைவுகளுக்கு சுமுகமான தீர்வுகளை யோசிக்க வேண்டியது அவசியமாகிறது.

மிக்க நன்றி கீதம்.

ஆதி
13-01-2010, 12:07 PM
ஆனால் மனைவி மீது பாசமில்லை என சொல்ல முடியாது. இனி குழந்தைகள் வேண்டாமென்று சொல்லியிருந்தால், மரகத்தின் மீது மட்டும்தான் அவருக்கு அக்கறை, அவள் மட்டும் போதும் என்று நினைத்ததைப்போல ஆகியிருக்கும்.

தன்னுடைய இயல்பான வாழ்க்கையையும் வாழமுடியும், அதே சமயம், தன் மனைவியின் குழந்தையை தன் குழந்தையாய் வரித்துக்கொள்ள முடியும் என உறுதியாக நம்பியதால்தான் தைரியமாய் அவளைக் கல்யாணம் செய்து கொண்டார். அப்படி வாழவும் செய்தார்.



மரகதம் மீது பாசமில்லை என்று நான் சொல்லவே இல்லை அண்ணா..

பொதுவாக இவ்வாறான விடயத்தில் பெண்களுக்கு பெரியத் தயக்கம் இருக்கும் அண்ணா, அப்படி யோசிப்பது பாவம் என்று கூட யோசிப்பார்கள் அண்ணா..

இன்னும் சொல்லப் போனால் பிள்ளை தன்னை வெறுத்துவிடக் கூடாது எனும் பயம் வேறு இருக்கும்..

மரகதத்தின் மனநிலையும் அதுவே தான்..

அவர் வேறு பிள்ளைகள் வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும் என்று சொன்னதில் ஒரு உட்பொருள் உண்டு, அதாவது உன் பாசம் மட்டுமல்ல என் பாசமும் நம் பிள்ளை இராசத்துறைக்கு மட்டும் தான், அதுமட்டுமின்றி, பிற்காலத்தில் இந்த இரண்டாம் மணம் விடயம் ஒரு வேளை இராசத்துறைக்கு தெரிய வந்தால், கண்டிப்பாய் அவன் மரகதத்தை மட்டுமல்ல மற்ற பிள்ளைகளையும் ஏற்றுக் கொள்ள மாட்டான் (நிறைந்த மனப்பக்குவம் இல்லாதவன் எனும் பட்சத்தில்) , என்னும் முன்னெச்சரிக்கும் தான்..

தன்னைப் பற்றி மட்டுமல்ல, இராசதுறையின் எதிர்க்காலத்தைப் பற்றியும் நவச்சிவாயம் சிந்திக்கிறார் என்பது அவளுக்கு புரிந்திருந்தாலே பாதி பிரச்சனை தீர்ந்தது அண்ணா.. கண்டிப்பாய் அவர் கண்டிக்கும் போது கண்டிக்க வந்திருக்க மாட்டாள் மரகதம்..

நமச்சிவாயம் நல்ல கணவனாய் இருந்தார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, அவர் நன்றாக தன் மனைவியை புரிந்து கொள்ளவில்லை.. அதனால்தான் மரகதத்தின் குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை பற்றி குறிப்பிட்டிருந்தேன் அண்ணா..


நமச்சிவாயம் தன்னை மரகதத்துக்கு புரிய வைக்க, முதலில் மரகதத்தை அவர் புரிந்திருக்க வேண்டும்.. என்பதே என் கருத்து அண்ணா..

நான் சொல்ல வந்ததை குழப்பாமல் சொல்லிவிட்டேன் என்று நம்புகிறேன் அண்ணா..

//இதன் பின்னணியில் இருக்கும் சிக்கல்களையும் கலைய முயற்சிக்கவேண்டும்//

இதை தான் அண்ணா நானும் சொல்ல முயற்சிக்கிறேன்..

சிவா.ஜி
13-01-2010, 12:26 PM
உண்மைதான் ஆதி. மனைவியைப் புரிந்துகொள்ள முயற்சித்திருப்பார்...ஆனால் அது அவ்வளவு எளிதானதாய் ஆரம்பத்தில் இருந்திருக்காது. இருந்தும் மீண்டும் மீண்டும் முயற்சித்திருந்தாரானால், நீங்கள் சொன்னதைப்போல மரகதமும் புரிந்து கொண்டு மாறியிருப்பார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஆரம்பக்கட்டத்திலேயே மனம் தளர்ந்து, மதுவின் துணையை நாடிவிட்டார். அதனால் அவர்மேல் மரகத்துக்கு வெறுப்பு அதிகமாகிவிட்டது.

கீதம் சொன்னதைப் போல இதிலுள்ள அடிப்படை சிக்கல்களுக்கு தீர்வு தேட மிகப் பொறுமையும், பரந்த சிந்தனையும், உறுதியும் வேண்டும்.

உங்கள் விளக்கத்தையும், நீங்கள் சொல்ல வந்ததையும் நன்றாக புரிந்து கொண்டேன் ஆதன்.

சரண்யா
13-01-2010, 01:10 PM
எல்லாருமே கதையை அலசி விட்டார்கள்...தங்கள் விளக்கத்தையும் பார்த்தேன்...
தாமரை அவர்களின் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார் அவருக்கு ஒரு சல்யூட்...
மனபக்குவம் வேண்டும் என்றே நினைக்கிறேன்
இந்த கதையில் வந்தது போல உள்ள மணிமாறன் சட்டென வேறு விதமாக அம்மாவிற்கு உணர வைத்ததற்கு .
குடியை பற்றி வந்தவுடன் சற்று கண்கள் வேறு பார்க்கலாம் என்று தான் தோன்றியது..நீங்க கொடுத்த தலைப்பில் ஏதோ பொதிந்துள்ளதை எண்ணி தான் மீண்டும் படிக்க தொடங்கினேன்....
ந-நல்ல/நமச்சிவாயம் நல்ல அப்பாவாக வாழ்ந்திருக்கிறார்...
இருக்கும் போது அருமை புரியாது...இல்லாதவர்கள் சென்றவுடன் அவர்களை பற்றி தெரிந்தால் கலங்க தான் செய்ய வைக்கிறது...
அடுத்த முறை நீங்க கதை எழுதீனா..நல்லா மொத்த சந்தோஷத்தையும் தர போல சந்தோஷமான கதையாக இருக்கனும்ன்னு கேட்டுக்கிறேன்...
நன்றி சிவா அவர்களே...

சிவா.ஜி
13-01-2010, 02:24 PM
மிக்க நன்றி சரண்யா. நீங்கள் கேட்ட மாதிரியே ஒரு சந்தோஷமான கதையைத் தருகிறேன்.

சரண்யா
13-01-2010, 02:29 PM
ஒ....அப்படியா...
நன்றி சிவா அவர்களே....

த.ஜார்ஜ்
13-01-2010, 04:31 PM
கதையை படித்து விட்டேன்.சொல்லத்தோன்றியவை சொல்லப்பட்டுவிட்டன.என்னிடம் வார்த்தைகள் இல்லை.என் விழிமூடிதிறக்கும் ஒரு அசைவை பெருமிதமாய் நீங்கள் உணர்ந்து கொள்வீர்களாக.

தாமரை
13-01-2010, 06:36 PM
அவளின் பிரச்சனை .. நமச்சிவாயம் ஏதோ பெரிதாக தனக்காக தியாகம் செய்துவிட்டார் என்றும் இந்த சமூகத்தின் கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு தான் இரண்டாம் மணம் புரிந்து கொண்டோம் என்றும் அவளுக்குள் இருந்த தாழ்வு மனப்பாண்மையும், குற்ற உணர்ச்சியும்தான்..

இராசதுறைக்காக மட்டும் ஊரைவிட்டு வந்துவிடல்லை, இரண்டாம் கல்யாணம் புரிந்து கொண்ட பிறகு அவளுக்குள் உள்ள குற்ற உணர்ச்சியால் அவளால் யாரையும் நேர் கொள்ள இயலாது என்னும் நினைப்புமே அவளை ஊரைவிட்டு போய்விட வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வைத்திருக்க வேண்டும்..

அவள் ராசத்துறைக்காகத்தான் எல்லாம் செய்தாள் என்றால், மற்ற குழந்தைகளே வேண்டாம் என்று அவள் இருந்திருக்க முடியும், நமச்சிவாயமும் அவளை கண்டிப்பாய் கட்டாயப்படுத்தி இருக்க மாட்டார்.. அதனால் பிரச்சனை அவளின் தாழ்வு மனப்பான்மையும் குற்ற உணர்ச்சியுமே..

அதுமட்டுமின்றி அவளின் இன்னொரு பிரச்சனை, இராசதுறை தான் இரண்டாம் மணம் புரிந்து கொண்டதால் தன்னை வெறுத்துவிட கூடாது என்பதும் தான்.. அதனாலேயே அவள் அதிகமாய் அவன் மீது பாசம் காட்டினாள்..

இங்கு எந்த அளவுக்கு மரகதம் நமச்சிவாயத்தை புரிந்து கொள்ளவில்லையோ, அந்த அளவுக்கு மரகதத்தை நமச்சிவாயம் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பதே திடமான உண்மை.. நமச்சிவாயம் மரகதத்துக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும்.. நமக்கு வேறுப் பிள்ளைகள் வேண்டாம் என்று கூட சொல்லி அவளின் பயத்தை கொஞ்சம் சரி செய்திருக்கலாம்..

மரகதம் ஏன் தன்னோடு அதிகமாய் சண்டை போடுகிறாள் என்று யோசித்து, அவளின் பிரச்சனையை களைய முயற்சித்து இருக்கலாம்.. ஆனால் அவர் தன்னை மரகதம் புரிந்து கொள்ளவில்லை என்று நொந்து கொண்டு, தன்னை தனிமை படுத்திக் கொண்டதோடு மரகதத்தையும் தனிமைப் படுத்திவிட்டார்..

எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனையில் சம்பந்தப் பட்ட அத்தனை பேரின் தவறும் அந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்குமே ஒழிய ஒருவர் மீது மட்டும் பழிப் போட கூடாது என்பதால் இதனை சொல்கிறேன்..



பாராட்டுக்கள் அண்ணா..

இந்த மனநிலை கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும் ஆதி..

இந்த மாதிரியான பெண்கள் மற்ற நேரங்களில் சரியாகத்தான் இருப்பார்கள். அந்த ஒரே ஒரு ஃபேக்டர் வரும்பொழுது பைத்தியங்கள் போல நடந்து கொள்வார்கள்..

மரகதம் போன்ற சூழ்நிலையுள்ள பெண்கள், கணவர் நமக்கு இராசதுரை மட்டும் போதும் என்று சொன்னால், அவர்களை குற்றம் சொல்வதாக எண்ணி அழுவார்கள். தன் கணவருக்கு நல்ல வாழ்க்கையைத் தரவில்லையே எனவும் அழுவார்கள்..

அதாவது நம்ச்சிவாயமே வேணாம் என்று விட்டு விட்டாலும் அல்லது வேறு எந்த வித அணுகு முறையை நமச்சிவாயம் கையாண்டாலும்,

முன்னால போன கடிக்கும் பின்னால போனா உதைக்கும் என்று ஒரு பழமொழி கேட்டிருப்பீங்களே.. அப்படிப்பட்ட நிலை நம்ச்சிவாயத்தினுடையது.


கணவருக்கு என்று தான் செய்யும் கடமையில் தவறக் கூடாது என்ற எண்ணம் சாதாரண சமயங்களில் இருக்கும். அதைச் சரியாகச் செய்ய இயலவில்லை என அழுவார்கள். என்பதால்

ஆனால் மகன் பற்றிய பேச்சு வரும்பொழுது அத்தனை புலன்களும் ஆஃப் ஆகி, மனம் மட்டுமே பித்து பிடித்தது போல் ஆகிவிடும்.

அவர்களுடைய மனதைப் புரிந்து கொண்டால், எதுவும் செய்ய முடியாது என்பதும் புரியும். எதையும் செய்யாமல் இருக்கவும் முடியாது என்பதும் புரியும்.


இந்த நிலைக்குக் காரணம், அவள் திருமணத்தின் போது எடுத்த முடிவு. தன்னைச் சார்ந்தோர் அத்தனை பேரிடம் இருந்தும் விலகி வந்து விடுகிறாள். எனவே மனம் விட்டு பேச, உரிமையாய் அறிவுரை கூற நம்பிக்கையான தோழமை என்ற ஒன்று இறுதி வரை அவளுக்கு கிடைக்காமலேயே போய்விடுகிறது.


மணிமாறன் மாதிரி சற்று தெளிவான மகனாக இருந்தால் அந்தத் தாயின் மனம் மெல்ல மெல்ல மாறலாம். ஆனால் இராசதுரை போன்ற மகன் மீது இப்படி ஒரு பித்து இருந்தால், தொட்டாற் சிணுங்கியாகவும், கழிவிரக்க வாதியாகவும் மாறி மாறி வாழ, உடன் வாழ்வோருக்கு எல்லாவற்றையுமே விட்டு விலகி விடலாம் என்று தோன்ற ஆரம்பித்து விடும்.

அப்போது தன் மீது இருக்கும் அந்த கழிவிரக்க வாழ்க்கையை மாற்ற தன்னை வெறுத்து மகன் மீது மட்டுமே பாசம் கொண்டு வாழ்ந்து விடட்டும் என்ற முடிவுக்கு பல ஆண்கள் வந்துவிடுகிறார்கள். அதனால் எதாவது ஒரு வகையில் தன் மேல் இருக்கும் அந்த நன்றி உணர்வை மறக்கடித்து அவர்களின் மனசை ஒரே பக்கமாக போக விட்டு விடுகிறார்கள்.

இதனால் மனைவியின் இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரியான நிலை மாறி முழுதுமாக மகன் பக்கம் சாய்ந்து விடுகிறாள். அழுகை குறைந்து விடுகிறது. மகனின் நல்வாழ்வு மட்டுமே குறிக்கோளாக வாழத் தொடங்கி விடுகிறாள்.

நம்ச்சிவாயம் அவளை உணர்ந்து அவளுக்கு முக்கியமில்லாதவராக தன்னை மாற்றிக் கொள்ளும் வரை அவளுடைய் இந்த இரட்டை மன நிலையால் மிகவுமே துன்பப் பட்டிருக்க வேண்டும்,

அதனால் அடுத்து பிறந்த கதிரேசன் சுயநலவாதியாக மாறிவிட்டான். அம்மாவின் பேச்சுக்கு அப்பா அடங்கிப் போவதும், அம்மாவின் பாசம் இடாசதுரையின் மேலேயே இருந்ததும் அவனைச் சுயநலவாதியாக வாழ வைத்துவிட்டன.

மணிமாறன் வளர ஆரம்பித்த பொழுது நமச்சிவாயம் குடிக்க ஆரம்பித்து இருப்பார். தான் செய்ய நினைத்த ஒரு பிள்ளைக்கு நல்ல தகப்பனாய் இருப்பது, மனைவியால் அங்கீகரிக்கப் படாமல், அனைத்து முயற்சிகளும் பட்டுப் போய், ஒரு பெண்ணிற்கு நல்ல கணவனாக இருக்கிறோமா என்ற அளவிற்கு மனதில் சோர்வு ஏற்பட, அதற்கேற்ப இராசதுரையின் பாதையும் மாறிக் கொண்டே போக, எதுவும் செய்ய முடியவில்லையே, என்ற மனம் போதையை நாட, மனைவியின் இரட்டை முகம் ஒரு முகமாய் மாறி இருக்கும்.

மணிமாறனுக்கு கிடைத்த சூழ்நிலை அப்பாவின் அமைதி.. அப்பாவின் பாசம்,, அம்மா வெறுக்கவில்லை. ஆனால் அப்பாவை அம்மா திட்டுவது சகஜமாக இருந்தாலும் அது மிகப் பெரிய கரைச்சலாக இல்லாமல் சிறு பொழுது புலம்பலாக இருந்தது. இராசதுரையை மனைவியின் இஷ்டத்திற்கு விட்டுவிட்டதாலும், நட்பு வட்டாரம் பெரிதாக இல்லாததாலும், மணிமாறனுடன் அதிகப் பொழுதை செலவிட்டார்.

அப்பா அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்ததால் மணிமாறனின் மனம் விசாலமடைந்தது. பெருந்தன்மையான வாழ்க்கை போக்கு ஏற்பட்டது. தந்தையின் அனுபவ முதிர்வு அவனை பக்குவமான மகனாக்கியது..

இதனால், மணிமாறன் தந்தைக்குப் பிடித்தமானவனாகப் போனான்,

மரகதத்தைப் பொருத்தவரை, இராசதுரைக்கு அப்பா யாரென்று சந்தேகம் வராமல் இருக்க வேண்டும் என நினைத்தாளே தவிர நம்ச்சிவாயம்தான் அவன் அப்பா என்பதை அவள் அளவிலேயே அவள் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால்தான் தந்தைக்கு இளைய மகன் என்னும் பேரில் நமச்சிவாயத்தின் இறுதிக் கடன்களுக்கு மணிமாறனை கொஞ்சமும் தடையின்றி ஒப்புக் கொள்ளவும் செய்கிறாள்.

உண்மையிலேயே இக்கதையில் இழையோடி இருக்கும் பல உணர்வுகள், நிகழ்வுகள் வெகு இயற்கையானவை. சிவா.ஜி இதனை எப்படி யோசித்து எழுதி இருப்பார் என ஆச்சர்யமாக இருக்கிறது.

மதி
14-01-2010, 04:12 AM
இத்தனை பேர் அலசியதுக்கு அப்புறம் என்ன எழுதறது... ஒரு மாறுதலுக்கு... பாராட்டை விட குற்றச்சாட்டுகளை வைக்கிறேன்... சிவா.ஜி என் அண்ணா..என்ற உரிமையில்...

1. குயில் குஞ்சு வசனம் கதைக்கு அழகாய் இருந்தாலும் வாழ்க்கைக்கு உகந்ததாய் இல்லை. என் அப்பா தியாகம் செய்தவர்.. நீ அதை புரிந்து கொள்ளவில்லை என்று தாயை குத்திக் காட்டுவதாகவே படுகிறது. தாய் மற்றும் தந்தையின் கடந்தகாலம் தனக்குத் தெரியும் என்பது மற்றவருக்குத் தெரியாது என்ற எண்ணம் கொண்ட மணிமாறன் இப்படி பூடமாக தன் தாயிடம் தெரிவிப்பான் என்று தோன்றவில்லை. தந்தை மறைந்துவிட்டார். ஆயினும் இந்த வசனம் இறக்கும் வரை தாயின் மனதை குத்திக் கிழிக்கும் என்பதை அறியாதவனா மணிமாறன். அடிப்படை குணாதிசயமே அடிபட்டுப் போகின்றதே இந்த வசனத்தால்... கணவனின் பெருமைக்கு முன் குற்ற உணர்ர்சியே மேலோங்கும்...

2. வார்த்தைகளால் சில பல விஷயங்கள் மடிப்புகளாய் இருந்தாலும்... மரகதத்தின் வசனங்கள் நமச்சிவாயம் மீது பெரிதாய் அன்பு இருப்பதை மாதிரி காட்டவில்லை. இந்த எரிச்சல் குடிப்பழக்கத்தால் இறந்து போனாரே என்ற ஆதங்கமாய் எடுத்துக் கொண்டாலும் மணிமாறன் நல்லவன்.. நமச்சிவாயம் மிக்க நல்லவர்.. என்று காட்டவே கொண்டு செல்லப்பட்ட கதை போலுள்ளது.

3. இடையில் நமச்சிவாயத்துக்கு தொற்றிக் கொண்ட குடிப்பழக்கம். ஊரைவிட்டு கிளம்பும் முன் அவருக்கு இருந்ததில்லை. ராசதுரையை தன் மகனாய் பாவிக்க முடியாமல் மனைவி தடுக்கிறாள் என்ற விரக்தியில் அவர் இப்பழக்கத்துக்கு அடிமையானார் என்று எடுத்துக் கொண்டாலும் குடல் வெந்து போகும் அளவுக்கா.. அந்த காலத்திலேயே சமுதாய சீர்திருத்தம் என்று மரகததை திருமணம் செய்த நமச்சிவாயம், அவள் பேச்சுக்காக ஊரைவிட்டு உறவைவிட்டு செல்லலாம் என்று முடிவெடுத்த அவர்... ராசதுரைக்கும் தனக்குமான உறவு எப்படி இருக்கும் என்பதை யோசிக்காமலா செய்திருப்பார். மேலும் அவ்வளவு தெளிவுள்ள மனிதன் குடி குடியைக் கெடுக்கும் என்று தெரியாமலா இருப்பார்... குடிக்கு அவர் உயிர் போவதும் சரியாகப் படவில்லை...!!!

மிச்சம் ஏதாவது இருந்தால் யோசிச்சு வைக்கிறேன்.. ஹிஹிஹிஹி... ஏதாச்சும் எழுதணுமேன்னு தான் இவ்ளோவும்.. குற்றச்சாட்டுகளிலும் குற்றம் இருக்கலாம்..

மற்றபடி இன்னார் இப்படித் தான் இருப்பார்.. நடப்பார் என்று மட்டும் கணிக்க முடிந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லை. எதுவும் எப்படியும் நடக்க சாத்தியமே... :)

அமரன்
14-01-2010, 05:20 AM
கதாசிரியர், வாசகர்கள், விமர்சகர்கள் மட்டுமன்றி கதாமாந்தரும் தத்தமது கடமைகளைச் சரியாகச் செய்துள்ளார்கள்.

மணிமாறனே தனக்கு ஈமக்கடமை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்ட நமச்சிவாயம் முதல் பெரியம்மா வரை இயல்பான மாந்தர்கள். இயற்கையான உணர்வுகள்.

பாராட்ட வார்த்தைகள் இல்லைச் சிவா.

ரச்சிகிறேன் ஒவ்வொன்றையும்.

அமரன்
14-01-2010, 05:22 AM
இந்த மாதிரியான பெண்கள் மற்ற நேரங்களில் சரியாகத்தான் இருப்பார்கள். அந்த ஒரே ஒரு ஃபேக்டர் வரும்பொழுது பைத்தியங்கள் போல நடந்து கொள்வார்கள்..

மரகதம் போன்ற சூழ்நிலையுள்ள பெண்கள், கணவர் நமக்கு இராசதுரை மட்டும் போதும் என்று சொன்னால், அவர்களை குற்றம் சொல்வதாக எண்ணி அழுவார்கள். தன் கணவருக்கு நல்ல வாழ்க்கையைத் தரவில்லையே எனவும் அழுவார்கள்..

அண்ணா..

சொந்தங்களை விட்டு வந்தவள். தன் பிள்ளைிராசதுரை தனியனாகிடக் கூடாது என்ற நினைப்பிலும் இராதுரை மட்டும் போதும் என அவள் நினைத்திருக்காமல் இருந்திருக்கலாம். இருந்திருப்பாள்.

aren
14-01-2010, 05:41 AM
ஒரு கதையை இத்தனை விதமாக அலசியது இல்லை இதுவரை மன்றத்தில். அதிலிருந்தே இந்தக் கதை எவ்வளவு மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது என்று தெரிகிறது.

கதையை எழுதி இங்கே படைத்த படைப்பாளி சிவாஜிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
14-01-2010, 05:58 AM
இத்தனை பேர் அலசியதுக்கு அப்புறம் என்ன எழுதறது... ஒரு மாறுதலுக்கு... பாராட்டை விட குற்றச்சாட்டுகளை வைக்கிறேன்... சிவா.ஜி என் அண்ணா..என்ற உரிமையில்...

1. குயில் குஞ்சு வசனம் கதைக்கு அழகாய் இருந்தாலும் வாழ்க்கைக்கு உகந்ததாய் இல்லை. என் அப்பா தியாகம் செய்தவர்.. நீ அதை புரிந்து கொள்ளவில்லை என்று தாயை குத்திக் காட்டுவதாகவே படுகிறது. தாய் மற்றும் தந்தையின் கடந்தகாலம் தனக்குத் தெரியும் என்பது மற்றவருக்குத் தெரியாது என்ற எண்ணம் கொண்ட மணிமாறன் இப்படி பூடமாக தன் தாயிடம் தெரிவிப்பான் என்று தோன்றவில்லை. தந்தை மறைந்துவிட்டார். ஆயினும் இந்த வசனம் இறக்கும் வரை தாயின் மனதை குத்திக் கிழிக்கும் என்பதை அறியாதவனா மணிமாறன். அடிப்படை குணாதிசயமே அடிபட்டுப் போகின்றதே இந்த வசனத்தால்... கணவனின் பெருமைக்கு முன் குற்ற உணர்ர்சியே மேலோங்கும்...

2. வார்த்தைகளால் சில பல விஷயங்கள் மடிப்புகளாய் இருந்தாலும்... மரகதத்தின் வசனங்கள் நமச்சிவாயம் மீது பெரிதாய் அன்பு இருப்பதை மாதிரி காட்டவில்லை. இந்த எரிச்சல் குடிப்பழக்கத்தால் இறந்து போனாரே என்ற ஆதங்கமாய் எடுத்துக் கொண்டாலும் மணிமாறன் நல்லவன்.. நமச்சிவாயம் மிக்க நல்லவர்.. என்று காட்டவே கொண்டு செல்லப்பட்ட கதை போலுள்ளது.

3. இடையில் நமச்சிவாயத்துக்கு தொற்றிக் கொண்ட குடிப்பழக்கம். ஊரைவிட்டு கிளம்பும் முன் அவருக்கு இருந்ததில்லை. ராசதுரையை தன் மகனாய் பாவிக்க முடியாமல் மனைவி தடுக்கிறாள் என்ற விரக்தியில் அவர் இப்பழக்கத்துக்கு அடிமையானார் என்று எடுத்துக் கொண்டாலும் குடல் வெந்து போகும் அளவுக்கா.. அந்த காலத்திலேயே சமுதாய சீர்திருத்தம் என்று மரகததை திருமணம் செய்த நமச்சிவாயம், அவள் பேச்சுக்காக ஊரைவிட்டு உறவைவிட்டு செல்லலாம் என்று முடிவெடுத்த அவர்... ராசதுரைக்கும் தனக்குமான உறவு எப்படி இருக்கும் என்பதை யோசிக்காமலா செய்திருப்பார். மேலும் அவ்வளவு தெளிவுள்ள மனிதன் குடி குடியைக் கெடுக்கும் என்று தெரியாமலா இருப்பார்... குடிக்கு அவர் உயிர் போவதும் சரியாகப் படவில்லை...!!!

மிச்சம் ஏதாவது இருந்தால் யோசிச்சு வைக்கிறேன்.. ஹிஹிஹிஹி... ஏதாச்சும் எழுதணுமேன்னு தான் இவ்ளோவும்.. குற்றச்சாட்டுகளிலும் குற்றம் இருக்கலாம்..

மற்றபடி இன்னார் இப்படித் தான் இருப்பார்.. நடப்பார் என்று மட்டும் கணிக்க முடிந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லை. எதுவும் எப்படியும் நடக்க சாத்தியமே... :)

வாங்க நக்கீரரே....

மதி, நீங்கள் இங்கு பதித்த எதையும் குற்றச்சாட்டுகளாகவே நான் எண்ணவில்லை. கதைக்கான விமர்சனத்தில், வாசிப்பவரின் மனதில் தோன்றும் எண்ணங்களாய்த்தான் அவற்றைப் பார்க்கிறேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். மணிமாறன் ஏன் அப்படி சொன்னான்? ஒருவர் ஒரு தவறை தொடர்ந்து செய்யும்போது, அதாவது குற்றமிழைக்காத ஒருவரை குற்றவாளியாகத் தவறாகவே எண்ணிக்கொண்டிருப்பது போன்ற செயலைச் செய்யும் ஒருவருக்கு, அவரது தவறான எண்ணத்தை மாற்ற நினைப்பது தவறல்ல மதி. இருக்கும்வரை தன் கணவரை புரிந்துகொள்ளாத மரகதம், இறந்தபிறகாவது புரிந்துகொண்டு, தன் தவறுக்கு வருந்துவதில் தவறில்லையே. நேரிடையாகச் சொல்லி மனதைப் புண்படுத்தாமல், இலைமறைக் காயாக சுட்டிக்காட்டும்போது தன் தவறை உணர அவர்களுக்கு வாய்ப்பிருக்கிறது. குற்ற உணர்ச்சி தோன்றினாலும் அது தவிர்க்க இயலாதது.

அப்பாவின் பிரிய மகனான மணிமாறனுக்குத் தன் தாய்க்கும் அப்பாவின் நல்ல குணம் தெரியவேண்டும் என நினைத்ததில் ஆச்சர்யமில்லை. அதனால் அவனது கேரக்டருக்கு எந்த பங்கமும் வராது. வரவில்லை. அம்மா மிக விரும்பிய மூத்தவனைவிட, இளையவனான இவனுக்குத் தான் தன் தாயை கடைசிவரை ஆதரவுடன் நடத்த வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது.

மரகதத்தை கெட்டவளாக எங்கும் காட்டவில்லையே. அதுவரை தன் தாய் ஏன் சதா அப்பாவிடம் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறாள் என்ற வருத்தம் மகனிடம் இருந்தாலும், உண்மை தெரிந்தபிறகு அவளது செயல்களுக்கான நியாயத்தை உணர்ந்து கொள்கிறான். அடிப்படையிலேயே நல்லவரான நமச்சிவாயமும், அவரது அரவணைப்பில் நல்லவனாகவே வளரும் மணிமாறனும், நல்லவர்களாகக் காட்டப்படவேண்டுமென்ற கட்டாயத்தின் பேரில் காட்டப்படவில்லை. அவர்கள் கேரக்டரே அப்படித்தான். மரகதத்தின் வசனங்கள், அவர் எந்த மாதிரியான மனநிலையில் வாழ்கிறார் என்பதைக் காட்டவே அப்படி இருக்கின்றன.

அடுத்து, எத்தனை நல்லவருக்கும், எத்தனை உறுதியானவருக்கும், அந்த உறுதியைக் குலைக்கும்படி சில சம்பவங்கள் பாதிக்கலாம். அந்த பாதிப்பில், சில நேரம் தாற்காலிக நிம்மதிக்காக சில வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கலாம். அப்படி நமச்சிவாயம் தேர்ந்தெடுத்ததுதான் குடிப்பழக்கம். குடிக்கும் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் அது உடல்நலத்துக்கு கேடு என்பது. இருந்தும் குடிக்கிறார்களென்றால் அதுதான் அந்தமாதிரியான பழக்கத்தின் வீரியம். நாள்பட்ட எந்தக் கெட்ட பழக்கமும், மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துமல்லவா....அதுதான் அவரது குடலை வேக வைத்தது. அதுமட்டுமல்லாமல், இளமையில் பாதிப்புகளைத் தாங்கும் உடல், முதுமையில் தளர்ந்துவிடுகிறது.

கடைசியில் நீங்கள் சொன்னது மிக மிக உண்மை.

"இன்னார் இப்படித் தான் இருப்பார்.. நடப்பார் என்று மட்டும் கணிக்க முடிந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லை. எதுவும் எப்படியும் நடக்க சாத்தியமே... "

மிக்க நன்றி மதி.

சிவா.ஜி
14-01-2010, 05:59 AM
கதையை படித்து விட்டேன்.சொல்லத்தோன்றியவை சொல்லப்பட்டுவிட்டன.என்னிடம் வார்த்தைகள் இல்லை.என் விழிமூடிதிறக்கும் ஒரு அசைவை பெருமிதமாய் நீங்கள் உணர்ந்து கொள்வீர்களாக.

உங்கள் விழிமூடித் திறக்கும் அசைவை பெருமிதமாய் ஏற்றுக்கொள்கிறேன் நண்பரே.

மனமார்ந்த நன்றிகள்.

சிவா.ஜி
14-01-2010, 06:01 AM
மிக்க நன்றி அமரன்.

"மணிமாறனே தனக்கு ஈமக்கடமை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்ட நமச்சிவாயம் முதல் பெரியம்மா வரை இயல்பான மாந்தர்கள். இயற்கையான உணர்வுகள்."

இந்த வார்த்தைகள் சொல்கின்றன என் கதைக்கான அங்கீகாரத்தை. மனமார்ந்த நன்றிகள் பாஸ்.

சிவா.ஜி
14-01-2010, 06:04 AM
உங்கள் பெருந்தன்மையான பாராட்டுக்கு மிக்க நன்றி ஆரென். மன்றத்தின் சிறப்பில் இது மகத்தானது. படைப்பவனின் மன உணர்வுகளை துளி பிசகாமல் உணர்ந்துகொண்டு, அதற்கான அங்கீகாரத்தையும் செவ்வனே செய்யும் மன்ற உறவுகளை நினைத்து நெஞ்சம் நெகிழ்கிறது.

சுகந்தப்ரீதன்
14-01-2010, 10:58 AM
நம்ப மன்றத்தில் சில படைப்புகளுக்கு பின்னூட்டம் சில சமயம் ஒரு பக்கத்தைக்கூட தாண்டாது... ஆனால் இங்கே அரேன் அண்ணா சொன்னதுபோல் மூன்றாம் பக்கத்தை தொட்டிருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது..!! இன்னும் நீளும் என்றே எண்ணுகிறேன்..!!

வாழ்த்துக்கள் சிவா அண்ணா...!!

சிவா.ஜி
14-01-2010, 11:02 AM
சுபி ஆச்சர்யம்....இந்தக் கதைக்குபோய் இவ்வளவு பின்னூட்டமா....அப்படீங்கறதாலயா...? இல்ல....

எப்படியானாலும், வாழ்த்துக்கு நன்றி சுபி.

(சும்மா கலாய்க்கறதுக்குத்தான் சொன்னேன்.)

கலையரசி
15-01-2010, 01:21 PM
நமச்சிவாயம் ஓர் உயர்ந்த மனிதர். விதவை பெண்ணுக்கு வாழ்வு கொடுப்பதே அரிதான விஷயம். அதிலும் குழந்தையோடு இருக்கும் பெண்ணுக்கு வாழ்வு கொடுப்பதற்கு உயர்ந்த உள்ளம் வேண்டும். இவரோ அவள் போடும் கண்டிஷனுக்கு உடன்பட்டு சொந்த ஊரை விட்டு, சொத்து பத்துகளை விற்று பிழைப்புக்காக
வேறு ஊருக்குப் போய்..... எனத் தம் வாழ்வு முழுக்க மரகதம் என்ற பெண்மணிக்காகவே அர்ப்பணிக்கிறார்.
அது மட்டுமன்றி தமக்குப் பிறகும் அவள் வாழ்வு நன்றாகயிருக்க வேண்டும் என்ற அக்கறையுடன் மணிமாறனிடம் சொல்லி, அவளை நன்றாகப் பார்த்துக் கொள்ளச் சொல்கிறார்.
அவள் மகனையும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகாமல்,
'பெரியவனே...உங்க தம்பிங்க எல்லாம் நல்ல படிச்சி நல்ல வேலைக்குப் போயிடுவாங்கப்பா. உனக்குன்னு ஒரு தொழில் உன் கையில இருந்தா நீயும் அவங்க மாதிரி சம்பாதிச்சு உன் வாழ்க்கையைப் பாத்துக்க முடியும்” என்று சொல்லி அவனுக்கு வண்டி வாங்கிக் கொடுக்கிறார்.

ஆனால் மரகதம் கடைசி வரை அவரது நல்ல உள்ளத்தைப் புரிந்து கொள்ளாமல் முழுக்க முழுக்க ராசதுரையின் அம்மாவாக மட்டுமே இருக்கிறாள்.
எப்போதுமே இருக்கும் போது ஒருவரின் அருமை தெரியாது. அவர் நம்மை விட்டுப் போன பின் தான் தெரியும் என்று சொல்வது எவ்வளவு பெரிய உண்மை?
குயில் குஞ்சு மூலம் தன் அப்பாவின் பெருமையை மணிமாறன் அவளுக்கு உணர்த்தும் விதம் அருமை.
சிறந்த கதை. மிக்க பாராட்டு.

சிவா.ஜி
15-01-2010, 01:55 PM
அழகான, தெளிவான உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி கலையரசி. உண்மைதான், மரகதம், தன் கணவரை புரிந்துகொள்ளவில்லை, அல்லது..புரிந்துகொள்ளும் மனநிலையில் அவர் இல்லை.
ஆழ்ந்த பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றிகள் கலையரசி.

இளசு
30-01-2010, 05:27 PM
சிவா

உங்களுக்கு முதலில் மனமார்ந்த பாராட்டுகள்.


அன்பின் ஆரென் சொன்னதுபோல் மன்றத்தில் இதுவரை இந்த ஆழத்துக்கு
எந்த சிறுகதையும் உள்ளாயப்பட்டதில்லை.

அதிலும் நம் தாமரையின் அலசல் - ஒரு படைப்பை அலசும் முனைவர் அளவுக்கு
ஓர் உயர்தரத்தில்.....

ஆதனின் மறுபார்வையும் மதியின் எதிர்பார்வையும் -

குறுக்குவெட்டாய் அலசி உதறின... கதைமாந்தர் மனநலன்களை!


கீதமும் கலையரசியும் அழகான மீள்பார்வை தந்து அசத்தினர்..


மனநல நிபுணர்கள் கூட '' இதுதான் உலகநியதிப்படி சரியான மன அமைவு''
என்னும் ஒரு கோடு நோக்கியே தத்தம் வாடிக்கையாளரை நகர்த்துவர்
என எண்ணுகிறேன்.


ஆனால் நம் நண்பர்கள் இங்கே கதைமாந்தரின் மன அமைவை
குறிப்பாய் அம்மா மரகதம் மனதை..
பரந்து விரிந்து அணுகி அசத்தியுள்ள பாங்கு - மெச்ச வைக்கிறது..

எது சரி? யார் சரி?
ஒன்று மட்டுமா சரி?
ஒருவர் நல்லவர் என்றால் மற்றவர் கெட்டவர் என்றா பொருள்?

எவரேனும் முழுமையான நல்லவரா?
எவரேனும் முழுமையான கெட்டவரா?


மிக ஆதாரக் கேள்விகள் எழுப்பிய அற்புதக் கதை..


தாமரை போலவே நானும் சிவாவின் மனமாளிகை நுண்ணமைப்பை வியக்கிறேன்.


------------------------

முதல் மரியாதை மலைச்சாமி, பொன்னாத்தா இருக்கட்டும்..

பாரதிராஜா - ரத்னவேலு கூட்டணி தந்த
பொன்மனம் - சிவகுமார், ராதிகா, பிரபு
யாராவது ஒப்பு நோக்கினீர்களா?

(வேற்றுமைகளே அதிகம்..)

சிவா.ஜி
31-01-2010, 04:24 AM
நானும் அதையே வியக்கிறேன் இளசு. தாமரையின் மிக நுணுக்கமான உள்நோக்கு, எழுதிய என்னையே...மீண்டும் வரிவரியாய் வாசிக்க வைத்துவிட்டது. ஆதனின் பார்வை...யோசிக்க வைத்தது. மதியின் கேள்விகள், மீண்டும் கதை எழுதிய மனநிலைக்கு கொண்டுபோய் பாத்திரங்களின் படைப்பை மீள்பார்வை பார்க்க வைத்தது.

உளவியலுடன் சம்பந்தப்பட்ட கதை என்பதால், உங்களின் பார்வையையும் வெகுவாக எதிர்பார்த்தேன்.


"எது சரி? யார் சரி?
ஒன்று மட்டுமா சரி?
ஒருவர் நல்லவர் என்றால் மற்றவர் கெட்டவர் என்றா பொருள்?

எவரேனும் முழுமையான நல்லவரா?
எவரேனும் முழுமையான கெட்டவரா?"

இந்த வரிகளில் நான் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது. மனித மனங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டதல்ல...அப்படி இருந்துவிடால் சுவாரசியமும் இல்லை.

உங்கள் அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி இளசு.

இன்பக்கவி
31-01-2010, 09:36 AM
ரொம்ப அருமையான கதை...
அதற்கு பதில் அளித்த அனைத்து பின்னோடங்களும் அருமை...
கதைக்குள் கதை..என்பது போல சிலரின் பின்னோட்டங்கள் அருமையாக கதையை விளக்குகின்றன..
நன்றாக எழுதி இருகின்றீர்கள்..
குருவி குஞ்சு மனதை என்னவோ செய்கிறது...அருமை...
சொல்ல வார்த்தைகள் இல்லை..
நன்றிகள் சிவா.ஜி:icon_b:
(உங்கள் பெயரை நான் சிவாஜி என்று இதுவரை நினைத்துக் கொண்டு இருந்தேன்:D.)

சிவா.ஜி
01-02-2010, 04:10 AM
ரொம்ப ரொம்ப நன்றிங்க இன்பக்கவி. எல்லாரும் படிக்கிற கமர்ஷியல் பத்திரிக்கையில எழுதினாக்கூட இந்தளவுக்கு கதையை ஊன்றிப் படிச்சு அலச மாட்டாங்க. நம்ம மன்றத்துலதான் அந்த சிறப்பு. எந்த எழுத்தாளனுக்கும், மன திருப்தி தர்றமாதிரியான அருமையான பின்னூட்டங்கள்.

உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி. என் பேர் சிவா. அப்பாவோட இனிஷியல் ஜி. ரெண்டையும் சேர்த்து சிவா.ஜி

samuthraselvam
01-02-2010, 04:24 AM
மனதை கனக்க வைக்கிறது.....

தலைப்பப் படித்ததுமே தெரிகிறது, தந்தை தான் இக்கதையின் ஆணி வேர் என்பது....

அனால் அது எப்படி என்பது படித்ததும் விளங்குகிறது...

மேலோட்டமாகப் படித்தால் கதையில் மனம் ஒன்றிப் போகிறது.... கொஞ்சம் விலகி நின்று பார்த்தால் சில கேள்விகள் எழுகின்றது......
வாழ்த்துகள் சிவா அண்ணா....

பிரிக்க சொன்னா மன்றத்து மக்கள் பிரிச்சு மேஞ்சிடராங்கப்பா...

சிவா.ஜி
01-02-2010, 04:29 AM
ஆமா லீலும்மா. பிரிக்கச் சொல்லலைன்னாலும் பிரிச்சு அலசுறதுதானே நம்ம மன்ற மக்களோட சிறப்பு. இது கதை எழுதறவங்களுக்கு எவ்ளோ பெரிய நன்மை தெரியுமா?

பின்னூட்டத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றிம்மா.

ஆதவா
15-11-2010, 02:40 PM
இந்த கதையை இப்பொழுதுதான் படிக்கிறேன்.
அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் அண்ணா. என் கண்ணுக்குத் தெரிவது நமச்சிவாயம் மட்டும்தான்!!!
பின்னூட்டங்கள் இக்கதையின் தரத்தை உயர்த்துகின்றன.

govindh
18-11-2010, 12:30 PM
நல்ல மனசுக்காரர் நமசிவாயம்.
ந.ராசதுரை.....!!!
பொருத்தமானத் தலைப்பு...

அருமையான கதை -
அழகாக அமைத்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள் அண்ணா.