PDA

View Full Version : பனிக்காலம்.....செல்வா
06-01-2010, 11:59 AM
ஒற்றைக் கம்பம் விளக்கெரிக்க
ஒளியும் இருளும் கலந்த
நீண்ட நெடிய சாலை

வெண்பனி விழுந்து
பாதையெங்கும் நிறைக்கிறது

பனி படர்ந்த பாதையினூடு
பயணிக்கின்றன பல்லாயிரம்
பாதங்கள்

அழுத்தமாய் சில
மென்மையாய் பல

வழிகாட்டிச் சில
வழி தொடர்ந்து பல

வெண்பனிப் பாதையெங்கும்
சிதறித் தெறிக்கும் பலவித வர்ணங்கள்

சிவப்பு

மஞ்சள்

பச்சை

நீலம்…

தொடர்ந்து பொழியும் பனியில்

கரைந்து காணாமல் போகின்றன
பாதச் சுவடுகளும்.. பலவித வர்ணங்களும்

பாதங்கள் பதிவதும்
நிறங்கள் தெறிப்பதும்
பனி மூடுவதுமாக…
இயங்கிக் கொண்டே இருக்கிறது பாதை

பனிப் படுகைகள் வழியே
உற்றுப் பார்க்கையில்
சிவப்பு மட்டும்
மிக அடர்த்தியாய்..

தொடர்ந்து பெய்யும் பனியாலும்

மறைக்க முடியாமல்

இன்னும் இன்னும்

தெறித்துக் கொண்டே இருக்கிறது….

இளசு
06-01-2010, 06:12 PM
சிலர் - தலைவர்கள்
பலர் - பிரஜைகள்..

மறதிப்பனி மூடிய மங்கிய வரலாற்றுச்சாலை..

விவசாயம், அறிவியல், கலை என
பல நல்வண்ணங்கள் நம் சாலையில்...

ஆனாலும்...


அலெக்சாண்டர், ஜெங்கிஸ்கான், அடால்ஃப் ஹிட்லர் முதல்
அண்மை பாலஸ்தீனம், ஈராக், ஈழம் வரை
அடுத்தடுத்து சிந்திய
சிவப்பு முந்தித் தெரிவது
உறுத்தும் உண்மை..


போரில்லா எதிர்காலம் வருமா?


செல்வாவுக்கு அன்பு!

அமரன்
06-01-2010, 08:05 PM
எச்சரிக்கை, அபாய விளக்குகளின் நிறம் சிவப்பு.

பாதை வளைவுகள், பய(ண)யக் கைகாட்டிகள் பலதும் சிவப்பு.

ஏன்? வாகனங்களின் பிரேக்லைட்டும் சிவப்புத்தான்.

இருட்டைக் கிழித்துச் செல்லும் மஞ்சளொளிபட்டுச் சிவப்பு மின்னி,

அபாயங்கள் தவிர்த்து, உபாயங்கள் அறிந்து

சுகப்பயணம் அமைவது தேவலை என்றா சொல்வேன்.

பேசாமல் ஒற்றைக் கம்பத்தை சாய்த்து விடுவோம்.

ஒவ்வொருவர் கண்களிலும் சூரியனை பொருத்திடுவோம்.

சிவப்புத் தனித்துத் தெரியட்டும்.


பாராட்டுகளடா பங்காளி!

அட.. உதயச்சூரியனும் ரத்தத்தின் நிறமே!

செல்வா
08-01-2010, 10:54 AM
செல்வாவுக்கு அன்பு!

கவிதையின் நாடிபிடித்து கொடுக்கும் பின்னூட்டச் சத்துக்கள்.

உங்கள் அன்பிற்கு நன்றிகள் பல அண்ணா..
சிவப்புத் தனித்துத் தெரியட்டும்.விளக்குகளில் சிவப்பு தேவைதான்... ஆனால்
விளக்கெல்லாம் சிவப்பானால்...

அதனால் தான்.

பாராட்டுக்களுக்கு நன்றி.

சிவா.ஜி
08-01-2010, 11:20 AM
இப்படிப்பட்ட மறைபொருள் கவி எழுத ஏன் எனக்கு மட்டும் தெரிவதேயில்லை?

அதுசரி சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

மறைந்திருக்கும், கருப்பொருளை வெளிக்காட்டிய இளசுவுக்கு நன்றி. இல்லையென்றால் என்னைப் போன்ற பாமரனுக்கு இத்தனை நல்லக் கவிதையைப் புரிந்து வாசித்து ரசிக்க இயலாமல் போயிருக்கும்.

சிவப்பு ரத்தத்தையும் குறிக்கும், புரட்சியையும் குறிக்கும், ரத்தம் வீணாவது நின்றும், ஆரோக்கிய புரட்சிகள் கிளர்ந்தெழுவது தொடங்கவும் வேண்டும்.

வாழ்த்துகள் செல்வா.

செல்வா
08-01-2010, 11:44 AM
இப்படிப்பட்ட மறைபொருள் கவி எழுத ஏன் எனக்கு மட்டும் தெரிவதேயில்லை?

அதுசரி சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.அந்தப்புரம் அழுதது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14048)

உங்களுக்கு மறந்திருக்கும்...

ஆனால் நாங்க மறக்கமாட்டோமுல்ல :)

இப்படி ஒரு கவிதை எழுதிட்டு
ஒண்ணுமேத் தெரியாத மாதிரி.... பேசினா நம்பிடுவோமா?

உங்களோட நடிப்புத் திறமையும் எங்களுக்குத் தெரிந்தது தானே... :eek::eek: :icon_ush:சிவப்பு ரத்தத்தையும் குறிக்கும், புரட்சியையும் குறிக்கும், ரத்தம் வீணாவது நின்றும், ஆரோக்கிய புரட்சிகள் கிளர்ந்தெழுவது தொடங்கவும் வேண்டும்.

வாழ்த்துகள் செல்வா.

இரத்தம் என்றாலும் புரட்சி என்றாலும்.
வறுமை என்றாலும்
மூன்றும் அன்றிலிருந்து இன்றுவரை
அழுத்தமாகத்தான் தெறித்துக் கொண்டிருக்கிறது.

வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா.... :)

ஆதி
08-01-2010, 12:01 PM
//பனிப் படுகைகள் வழியே
உற்றுப் பார்க்கையில்
சிவப்பு மட்டும்
மிக அடர்த்தியாய்..
//

உண்மைதானடா..

கைகளும், தோள்களும் சிவக்க சிவக்க, நிலங்கள் பச்சை பட்டு சூடின..

உழைப்பு உண்டியல்களை பிச்சை பாத்திரங்களாக பார்த்ததால், பச்சை பார்த்திரங்களாக நிலங்கள் இருந்தும் பலன்கள் இல்லை..

சிவப்புக்கு குரல் கொடுக்க சிவப்பு பிறந்தது, என்றாலும் குரல்களில் ஒற்றுமையில்லாததால் சிவப்பு சீரிழந்தது..

சிவப்புக்கு வழி செய்ய சிவப்பை தேடி போக நேர்கிறது சில பெண்டீர்க்கு..

வைகறையும் சரி அந்தியும் சரி சிவப்புத்தான், சிவப்பில் துவங்கி சிவப்பில் முடிக்கிறது நம் பொழுது..

சிவப்பே பிரதானம், அதில் இருந்துதான், அதை சுற்றித்தான் மற்ற நிறங்கள் வழிகின்றன..


பாராட்டுக்கள் டா.. சிவா அண்ணா சொன்ன மாதிரி எனக்கும் இந்த மாதிரி கவிதை எல்லாம் எழுத வர்ராது..

சுகந்தப்ரீதன்
12-01-2010, 11:29 AM
கவிதையை படிச்சு முடிச்சதும் பனியில நனைஞ்ச மாதிரி மனசு மப்பாயிடுச்சி.. அதாம்ப்பா அர்த்தம் புரியலைன்னு சொன்னேன்..!! ஆனா அடுத்த பதிவே கிழக்கில் உதிக்கும் சிவப்பு சூரியனாய் இளசு அண்ணாவின் பின்னூட்டம்.. மனதுக்கு வெளிச்சத்தை தந்தது..!!

செறிவான அர்த்தம் பொதிந்த செழிப்பான கவிதை... பாராட்டுக்கள்..!!

jayashankar
12-01-2010, 11:40 AM
இனப்படுகொலைகள் பல இப்படி நீறுபூத்த நெருப்பென நடந்து கொண்டுதானிருக்கின்றன இந்த உலகில்.

நீறு கொண்டு நெருப்பை மறைப்பது போல் தாங்கள் வெண் பனிகலின் உதவியை நாடியிள்ளீர். இருப்பினும், விதவிதமான சில பசப்பு வார்த்தைகளையும், பல கொள்கைகளையும், சில சேவைகளையும், பல சால்சாப்புகளையும் கொண்டு வந்தாலும், அரசியல் என்ற அண்டத்துக்குள் அனைத்தும் அமுங்கிவிடுவது இயல்புதான் போலும். இருப்பினும், தொடர்ந்து நடக்கும் இனப் படுகொலைகளின் இர்த்தத்தை யாரும் மறைக்க முடியாது என்று தரமாக எடுத்து கூறியிருக்கின்றீர்கள்.


கவிதை வரிகள் மிகவும் பதமாக பிரயோகிக்கப்பட்டுள்ள விதம் அருமை. முதல் முறை என்ன இது என்று எண்ண வைத்து, அடுத்த முறை படிக்கும்போது சிகப்பு தெறிக்கின்றது என்ற வரிகளால் கவிதையின் தாக்கம் பட்டு இந்தப் பின்னூட்டம்.

நன்றி செல்வரே....

jayashankar
12-01-2010, 11:46 AM
இப்படிப்பட்ட மறைபொருள் கவி எழுத ஏன் எனக்கு மட்டும் தெரிவதேயில்லை?

அதுசரி சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

மறைந்திருக்கும், கருப்பொருளை வெளிக்காட்டிய இளசுவுக்கு நன்றி. இல்லையென்றால் என்னைப் போன்ற பாமரனுக்கு இத்தனை நல்லக் கவிதையைப் புரிந்து வாசித்து ரசிக்க இயலாமல் போயிருக்கும்.

சிவப்பு ரத்தத்தையும் குறிக்கும், புரட்சியையும் குறிக்கும், ரத்தம் வீணாவது நின்றும், ஆரோக்கிய புரட்சிகள் கிளர்ந்தெழுவது தொடங்கவும் வேண்டும்.

வாழ்த்துகள் செல்வா.


மிகவும் உண்மை சிவா, அந்த சிவப்பு தெறிக்கின்றது என்பதை மீண்டும் படித்திருக்காவிட்டால் நிச்சயம் இது மிகவும் சாதாரணக் கவிதையாகவே எனக்குப் பட்டிருக்கும்.

அப்புறம் பரவாயில்லீங்க... நாங்க இங்க கவிதை எழுதுதல் அப்படின்னா என்ன வீசம் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம். நீங்க நான் கம்பனாகவில்லையே என்று குறைப்பட்டுக் கொள்கின்றீர்கள்...

சரிதான். அப்ப நாங்க எங்க போயி முட்டிக்கிறது...

பா.ராஜேஷ்
15-01-2010, 10:17 AM
சிவப்பு மறைந்து
பச்சை தோன்ற
மனதளவில் மாற வேண்டும்
மனிதர்கள் மாற வேண்டும்
இல்லாவிடில்
எல்லா காலமும்
சிவப்பே பிரதானமாகும் !

இன்பக்கவி
23-01-2010, 03:16 PM
ஐயோ இந்த கவிதையின் விளக்கத்தை பின்னூட்டங்களை பார்த்து அறியும் நிலை எனக்கு.,..:traurig001:
இப்படி எல்லாம் எனக்கு கவிதை எழுத தெரியாது...:confused:
நிறைய இருக்கு கற்று கொள்ள...:icon_b:
நன்றிகள்:icon_b:

செல்வா
29-01-2010, 03:18 PM
வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும்
நன்றிகள் நண்பர்களே...

நான் கத்துக்குட்டி தான்.... ஏதோ மனதில் தோன்றுவதை
கவிதை என்ற பெயரில் கிறுக்கி வைக்கிறேன்.