PDA

View Full Version : புலம் பெயரும் பறவைகள் போல்...



கீதம்
06-01-2010, 07:55 AM
பிறந்த நாட்டை விட்டு,
பேசியத் தமிழை விட்டு,
வளர்ந்த ஊரை விட்டு,
வளர்த்த உறவை விட்டு
புலம் பெயரும் பறவைகள் போல
இடம் பெயர்ந்து செல்கிறோம்!

வேரை மண்ணில் விட்டு,
விண்ணில் கிளையைச் செலுத்தும்
உயரமான ஊசியிலை மரங்களைப்போல
வாழ்வை இங்கே விட்டு,
வளத்தைத் தேடிச் செல்கிறோம்!

காற்றடித்தால் கலைகின்ற மழைமேகம் போலச்
சிதறியோடும் எம் நினைவுகளைச்
சேகரிக்க நினைக்கையில்,
கனவு வந்து கலைக்க,
கனவுக்கும் நனவுக்கும் இடையில்
ஊசலாடிக்கொண்டே உயரப்பறக்கிறோம்!

ஆயுளில் பாதியைப் பிறந்த மண்ணில் கழித்து,
மீதியை வேற்றுமண்ணில் கழிக்க விரைகிறோம்;
கூடவே,
குழந்தைகளின் குழந்தைப்பருவத்தையும்
அவரறியாமல் எடுத்துச் செல்கிறோம்!

புலம்பெயர்ந்த பறவைகள்
இனம்பெருகித் தாயகம் திரும்பும்;
ஊசியிலை மரத்தின் உத்திராட்ச விதைகள்
மண்ணில் விழும்;புதியவை முளைக்கும்;
கலைந்துபோன மேகங்கள் மீண்டும்
வானில் கூடி மழை தரும்;
எங்கள் வாழ்வும்,
மலர்ந்து, மணம் வீசி,
தாயகத்தில் நிலைபெறும் நாள்வரும் என்றே
நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்!

நன்றி:பதிவுகள்

Narathar
06-01-2010, 09:35 AM
அருமையான வரிகள்!

வரிகளின் வலிகள் புரிகின்றது
ஆனால் வலிக்கான காரணத்துக்கு விடைதேடி
வலியை நீக்காமல் புலம் பெயர் உறவுகள் இன்னும் இன்னும்
வலி நீடிக்க வேண்டுமென உள் மனதில் நினைப்பதுதான் உண்மையில் வேதணையாகவிருக்கின்றது.

அமரன்
07-01-2010, 05:40 PM
புலம் பெயர்ந்தவனின் வலியினை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

சொந்தமண் ஏக்கம் எல்லாருக்கும் இருந்தாலும் எனக்கு மட்டும் ஏனோ அது நெருக்கமாக இல்லை.

ஏன்?

என் குழந்தைப் பருவத்தை அதன் போக்கில் விடாதினாலா..
இளைமைக் காலத்தை வளமாக அனுபவிக்க தடையாக இருந்ததாலே.
இல்லையேல்,
சொந்தங்கள் எல்லாத்தையும் வேரோடு பெயர்த்து வேறிடத்தில் நட்டதினாலா..
ஏதோ... ஒன்று. என்ன என்று தெரியவில்லை.. சரி பிழை பற்றி யோசிக்கவே இல்லை.
ஆனால்,
கடைசி வரை மிதிக்கக் கூடாது, பார்க்கக் கூடாது என்ற வைராக்கியம் மட்டும் இந்தக் கணம் வரை கட்டுக் குலையாமல்..

பாராட்டுகள் கீதம்.

கீதம்
07-01-2010, 09:15 PM
தாய் நாட்டை விட்டுப்பிரிந்து வெளியேறிய எவருக்குமே அந்த வலி இருக்கும். வலிகளைத் தாண்டி வாழ்க்கையை அமைப்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம். எனினும் எதிர்காலம் நலமாய் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம். பின்னூட்டத்திற்கு நன்றி நாரதர் மற்றும் அமரன் அவர்களே.

சிவா.ஜி
08-01-2010, 07:53 AM
நிரந்தரமாக இல்லாவிடினும், தாற்காலிக புலம்பெயர்வை அனுபவிக்கும் எங்களைப் போன்றோரின் குரலாய் இந்தக் கவிதை ஒலிக்கிறது.

"குழந்தைகளின் குழந்தைப் பருவத்தையும் அவர்களறியாமல் உடன் அழைத்து செல்கிறோம்"

சிந்திக்க வேண்டிய வரிகள் மற்றும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய முடிவுகளைக் காட்டும் வரிகள்.


வாழ்த்துகள் கீதம்.

கீதம்
08-01-2010, 10:14 PM
நிரந்தரமாக இல்லாவிடினும், தாற்காலிக புலம்பெயர்வை அனுபவிக்கும் எங்களைப் போன்றோரின் குரலாய் இந்தக் கவிதை ஒலிக்கிறது.

"குழந்தைகளின் குழந்தைப் பருவத்தையும் அவர்களறியாமல் உடன் அழைத்து செல்கிறோம்"

சிந்திக்க வேண்டிய வரிகள் மற்றும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய முடிவுகளைக் காட்டும் வரிகள்.


வாழ்த்துகள் கீதம்.

மிகவும் நன்றி சிவா.ஜி அவர்களே. பரிசீலித்தாலும் இறுதியில் நம்மால் எதுவும் செய்ய இயலாத சூழ்நிலையில் என்ன செய்வது?

பா.ராஜேஷ்
15-01-2010, 12:25 PM
மிகவும் நன்றி சிவா.ஜி அவர்களே. பரிசீலித்தாலும் இறுதியில் நம்மால் எதுவும் செய்ய இயலாத சூழ்நிலையில் என்ன செய்வது?

உண்மைதான் ! அரசாங்கம்தான் ஏதாவது செய்ய வேண்டும்.

அக்னி
15-01-2010, 02:45 PM
சொந்த மண்ணின் ஏக்கத்திலும்,
அங்கு நிகழ்ந்த தாக்கம்தான் மனதில்...

சொந்த மண்ணின்மீதான ஆசையிலும்,
அந்த மண்ணில் வாழும் பயம்தான் மனதில்...

ஆண்டுகள் கழித்து
சொந்த மண்ணில் காலடி வைத்தால்,
சுகமாய்க் குறுகுறுக்குமா...
நீ மட்டும்
சுகமாய் இருந்துவிட்டாயே எனக் கூசுமா...

தெரியவில்லை என்றாலும்,
எம் மண் வாசத்திற்காய்
மனம் தவிப்பது உண்மைதான்...

பாராட்டுக்கள் பலப்பல...

இன்பக்கவி
23-01-2010, 02:47 PM
புலம் பெயர்ந்து அடிமையாய் வாழும் நிலை வந்துவிட்டால் தினமும் துயரம் தான்..
இழப்பது எத்தனையோ விஷயங்கள்...
எதுவுமே திரும்ப கிடைகாதவைகள்...
நன்றிகள் வாழ்த்துகள்

கீதம்
24-01-2010, 01:48 AM
சொந்த மண்ணின் ஏக்கத்திலும்,
அங்கு நிகழ்ந்த தாக்கம்தான் மனதில்...

சொந்த மண்ணின்மீதான ஆசையிலும்,
அந்த மண்ணில் வாழும் பயம்தான் மனதில்...

ஆண்டுகள் கழித்து
சொந்த மண்ணில் காலடி வைத்தால்,
சுகமாய்க் குறுகுறுக்குமா...
நீ மட்டும்
சுகமாய் இருந்துவிட்டாயே எனக் கூசுமா...

தெரியவில்லை என்றாலும்,
எம் மண் வாசத்திற்காய்
மனம் தவிப்பது உண்மைதான்...

பாராட்டுக்கள் பலப்பல...

மனதின் ஏக்கம் விரைவில் தீர என் வாழ்த்துகள். பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி அக்னி அவர்களே.

கீதம்
24-01-2010, 01:49 AM
புலம் பெயர்ந்து அடிமையாய் வாழும் நிலை வந்துவிட்டால் தினமும் துயரம் தான்..
இழப்பது எத்தனையோ விஷயங்கள்...
எதுவுமே திரும்ப கிடைகாதவைகள்...
நன்றிகள் வாழ்த்துகள்

நன்றி இன்பக்கவி அவர்களே.

இளசு
01-02-2010, 08:28 PM
பெயர்வது வேறு..
பெயர்க்கப்படுவது வேறு..

முதல் வகை -
நிரந்தர திருநாளைப்போவார்கள்..


அடுத்தத் தலைமுறை விதைகள்
அந்நிய மண்ணில்
அழுத்தமாய் வேரூன்றியபிறகு
முந்தைய தலைமுறையின்
சொந்த ஊர்க் கனவுகள் -
''ஆண்டிகள் மடம் கட்டிய'' கதைகளே..

--------------

பெயர்ப்பது வேறு..

அமரனின் அடிமனக் கொதிப்பின் தெறிப்பும்
அக்னியின் இருதலைக்கொள்ளி தவிப்பும்

முந்தைய நிலையினின்றும்
முற்றிலும் வேறல்லவா?



பாராட்டுகள் கீதம், அக்னி..

கீதம்
02-02-2010, 10:46 PM
பெயர்வது வேறு..
பெயர்க்கப்படுவது வேறு..

முதல் வகை -
நிரந்தர திருநாளைப்போவார்கள்..


அடுத்தத் தலைமுறை விதைகள்
அந்நிய மண்ணில்
அழுத்தமாய் வேரூன்றியபிறகு
முந்தைய தலைமுறையின்
சொந்த ஊர்க் கனவுகள் -
''ஆண்டிகள் மடம் கட்டிய'' கதைகளே..

--------------

பெயர்ப்பது வேறு..

அமரனின் அடிமனக் கொதிப்பின் தெறிப்பும்
அக்னியின் இருதலைக்கொள்ளி தவிப்பும்

முந்தைய நிலையினின்றும்
முற்றிலும் வேறல்லவா?



பாராட்டுகள் கீதம், அக்னி..

விமர்சனப் பின்னூட்டத்திற்கு நன்றி இளசு அவர்களே.