PDA

View Full Version : குளமாகிய நான்...............!செல்வா
05-01-2010, 08:36 AM
ஓலமிட்டபடியே கரைபுரண்டு ஓடும்
ஆற்றுக் கடுத்தபடி வெட்டப்பட்ட
கால்வாய் நீரைப் பருகியபடியே
சலனமற்றுப் படுத்துக் கிடக்கும்
சிறுகுளம் நான்….

ஒழுங்கற்றுச் சுருட்டப் பட்டிருக்கும்
என் கரைகள் உமக்கு அழகாகத்
தோன்றலாம்…

அந்தி வானின் மஞ்சள் வெயில்
சிந்தித் தெறிக்கும் என் அழகிய
மேனிமீது நீங்கள் மையல்
கொள்ளலாம்…

கரைநெடுக அடர்ந்து படர்ந்து
சமதர்மம் வளர்க்கும்
செடிகொடிகளோடு கதைபல பேசும்
பேர்தெரியாத பலவித பூச்சிகளையும்
பறவைகளையும் நீங்கள் இரசிக்கலாம்.

காற்றற்ற பகல் வெளியில்
நீலவான வரங்கில் மேகக்கூட்டம்
நடத்தும் ஓவியக் கண்காட்சிகளை
கழுத்து வலிக்காமலே என்னில்
கண்டு களிக்கலாம்

ஒரு மாலை நேர மழையில்
எகிறும் கெண்டையின்
வெள்ளிப் பளபளப்பில் உங்கள்
உள்ளம் நெகிழலாம்.

கரை நடுவே இரையுண்ட பாம்புபோல்
நீண்டு வளைந்து கிடக்கும்
ஒற்றையடிப் பாதையில் நடந்தும்
ஓரமாய் ஒருபக்கம் நின்றும் நீங்கள்
உருகிப் போகலாம்

மரநிழலில் மாங்காய் கடித்தபடியே
நெளியும் புழுவை ஊசியில் மாட்டி
ஏமாற்றிச் சில மீன்களைப் பிடிக்கலாம்

எட்டிப் பறிக்கும் தூரத்தில்
கொட்டிக் கிடக்கும்
ஆம்பலையும் தாமரையையும்
தட்டிப் பறித்துக் கொண்டோடலாம்…

பால்நிலா ஒழுகும் பின்னிரவில்
வெள்ளை ஒளிப் பின்னணியில்
ஓங்கி உயர்ந்தாடும் கறுப்புப்
பிசாசு மரங்கள் உங்களைப்
பயமுறுத்தலாம்.

கரையோர கிணற்றில்
தாகம் தீர்க்கலாம்
வழியும் வாய்க்கால்
வழியாக வயல்கள்
வளர்க்கலாம்

இத்தனைப் பயன்கள் என்னிலிருந்து கிடைத்தபின்னும்
என்னை ஆழம் பார்க்கும் எண்ணம் உங்களுக்கு ஏன்?

வெளிப்பார்வை போல்
தெளிவானதல்ல என் உட்பக்கம்…

என் மனவாழத்தில் எறியப்பட்ட
கற்கள் கொஞ்சமல்ல

தலைமுறை தலைமுறையாக
எறியப்பட்ட குப்பைகளின்
மட்கிய நீட்சிகளை இன்னும் எனக்குள் பார்க்கலாம்.

என்றோ வெட்டி எறியப்பட்ட
மூங்கில் கழிகளின்
மீதித்துருத்திக் கொண்டிருந்து
உங்களைப் பதம் பார்க்கலாம்

பெரும் பிரயாசைக்குப் பின்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
வழிப்போக்கர்கள்
கழுவிச் சென்ற கழிவுகளை
மீண்டும் கலைத்து விடாதீர்கள்…

இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்…
எனக்குள் இறங்கி
என் அமைதியைக் குலைக்கும்
உங்கள் முயற்சிகளை.

மண்கரை தாண்டி
ஈரமணல் தொட்டு
உள்ளிறங்கத் துடிக்கும் உங்கள் பாதங்களுக்குப்
பூட்டிடுங்கள்.

தீயைச் சுட்ட விரலைப் போல்
தீண்டத் துடிக்கும்
விரல்களைப் பின்னிழுத்துக் கொள்ளுங்கள்..

என் நீரைக் கொப்பளித்து
என்மீது உமிழ்ந்தவர்களின்
வீச்சமும்
வீரியமும் இன்னும் தீரவில்லை…

கிளறி விட்டு விடாதீர்கள்
ஆழத்தில் அமிழ்ந்திருக்கும்
சேற்றினை…

அதன் நாற்றத்தைச் சகிக்கும் சக்தி
உங்களில் யாருக்கும் இல்லை…
யாருக்குமே.....!

சரண்யா
05-01-2010, 08:47 AM
வித்தியாசமாக உள்ளது...செல்வா அவர்களே...
எனினும் வாழ்த்துகள்....தங்கள் சிந்தனைக்கு..

கா.ரமேஷ்
05-01-2010, 11:16 AM
வித்தியாசமான கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள்,நல்லதொரு படைப்பு...

குளம் என்பது சாதாரனமாக படலாம் உங்களைப்போன்ற சிலருக்குத்தான் அதனுடைய அழகு புரிகிறது.முதல் பாதி மிகவும் அருமை பாராட்டுக்கள்...

கீதம்
05-01-2010, 11:18 AM
சிறுவயதில் ஊருக்குப் போயிருக்கும் சமயங்களில் குளத்தில் கும்மாளமடித்ததும், சாப்பிட தாமரை இலை பறித்ததும் கும்பியைக் கிளப்பிவிடாதீர்கள் என்று பெரியவர்கள் எச்சரித்ததும் நினைவுக்கு வருகின்றன.

ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் இருக்கும் அம்சங்களை அழகாகச் சொல்லி வியக்கவைத்திருக்கிறீர்கள். கவிதைக்கும் உங்களுக்கும் என் பாராட்டுகள் செல்வா அவர்களே.

சசிதரன்
05-01-2010, 02:10 PM
அகமும் புறமும் விளக்கிய விதம் அருமை செல்வா...:)

ஜனகன்
05-01-2010, 02:57 PM
ஒரு குளத்தின் சுயசரிதையை கவிதை வடிவில் கொடுத்துள்ளீர்கள்.மிக தத்துருவமாக எழுதி அருமையாக தந்துள்ளீர்கள் செல்வா. வாழ்த்துக்கள்.மேலும் எழுதுங்கள்.

செல்வா
05-01-2010, 03:57 PM
வாழ்த்துகள்....தங்கள் சிந்தனைக்கு..

நன்றி சரண்யா.


முதல் பாதி மிகவும் அருமை பாராட்டுக்கள்...

நன்றி கா.ரமேஷ்.ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் இருக்கும் அம்சங்களை அழகாகச் சொல்லி வியக்கவைத்திருக்கிறீர்கள். கவிதைக்கும் உங்களுக்கும் என் பாராட்டுகள் செல்வா அவர்களே.


அகமும் புறமும் விளக்கிய விதம் அருமை செல்வா...:)

நன்றி கீதம் மற்றும் சசிதரன். உங்களைப் போன்ற கவிஞர்களின் பாராட்டு கிடைப்பது என் மகிழ்வை இன்னும் உயர்த்துகிறது.வாழ்த்துக்கள்.மேலும் எழுதுங்கள்.

நன்றி ஜனகன்.

அமரன்
06-01-2010, 08:28 PM
சற்றே நீ....ண்ட கவிதை.

சசி சொன்னதைப் போல் அகமும் புறமும்..

சுயமில்லாதவனின் அகமும் புறமும்.

அஞ்சு விரல் விரித்து

நான்கு விரல் மடித்து

ஒற்றை விரலாடுகிறது.

அஞ்சற்க..

தயங்காமல் தாமதம் செய்யாமல் இறங்குங்கள் குளத்தில்.

அழுக்காகுங்கள்.

கால் குத்தும் கற்களில் வட்டக்கட்டுக் கட்டுங்கள்.

கண்ணாடிச் சில்லுகளை அதில் பதிந்து அழகு சேருங்கள்.

மூங்கில்களை மூச்சுக் குழாய் ஆக்குங்கள்.

சேற்றுக்குள்ளே ஊற்றுக்கண் பிடியுங்கள்.

குளங்களைக் கிணறுகளாய் பரிமாணியுங்கள்.

தெள்ளத் தெளிந்த நீர்..

வாடை கிளப்பாத தண்ணீர்.

அள்ளிப் பருகுங்கள்.

ஆனந்தம் உரு`கட்டும்..

சிறந்த கவிதை.

பாரதி
06-01-2010, 10:13 PM
வர்ணனைகள் அழகு.
நன்றல்லது அன்றே மறப்பது நன்று... இல்லையா..?
குளத்தை தூர் வாரலாமே செல்வா?

செல்வா
08-01-2010, 10:51 AM
சுயமில்லாதவனின் அகமும் புறமும்.


தெள்ளத் தெளிந்த நீர்..


சிறந்த கவிதை.

சிந்திக்க வைக்கும் பின்னூட்டத்திற்கு
நன்றிடா பங்காளி


வர்ணனைகள் அழகு.
நன்றல்லது அன்றே மறப்பது நன்று... இல்லையா..?
குளத்தை தூர் வாரலாமே செல்வா?

வாருவோம்... வாருவோம்
பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றியண்ணா.

சிவா.ஜி
11-01-2010, 02:28 PM
ரசிக்க வைக்கும் புறம், முகம் சுளிக்க வைக்கும் அகம்.

குளத்து நீரில் பல முகங்களின் பிரதிபலிப்பு தெரிகிறது....குளத்தின் குரலில் பல குரல்கள் சேர்ந்திசை பாடுகிறது.

தூர் வார இயலாது....பெருமழை வெள்ளம் புதுநீர் பாய்ச்சினாலே சுத்தமாகும்.

ரொம்ப நல்லாருக்கு செல்வா. வாழ்த்துகள்.

சுகந்தப்ரீதன்
12-01-2010, 11:08 AM
குளத்தின்மீது உருவேற்றி உவர்ப்பின்றி (உள்)ளக்கருத்தை உரைத்தவிதம் மிகவும் நன்றாய் இருக்கிறது செல்வா..!!

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழியை முற்றிலும் முறியடித்த விதத்தில் உங்களின் கவித்திறமை வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம்..!!

நல்ல கவிஞன் நீ.. ஆனால் ஏனோ குறைவாகத்தான் எழுதுகிறாய்..!!

வாழ்த்துக்கள்... செல்வா..!!

பா.ராஜேஷ்
15-01-2010, 10:41 AM
குளத்தின் கரையில்
கோயில் இருந்தும்
குளம் இன்னமும்
குப்பையாய், காத்திருக்கிறதோ
சுத்தம் செய்யம்
குலத்தோருக்காக !!??

இன்பக்கவி
23-01-2010, 03:06 PM
அப்பாடா படித்து முடித்துவிட்டேன்...
பெரிய்ய....கவிதை,...
குளத்திற்காக கவிதை படிப்பது இதுவே முதல் முறை,,
நன்றாக இருக்கு..
வாழ்த்துக்கள்

செல்வா
29-01-2010, 03:21 PM
ரசிக்க வைக்கும் புறம், முகம் சுளிக்க வைக்கும் அகம்.

குளத்து நீரில் பல முகங்களின் பிரதிபலிப்பு தெரிகிறது....குளத்தின் குரலில் பல குரல்கள் சேர்ந்திசை பாடுகிறது.

தூர் வார இயலாது....பெருமழை வெள்ளம் புதுநீர் பாய்ச்சினாலே சுத்தமாகும்.கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா...


குளத்தின்மீது உருவேற்றி உவர்ப்பின்றி (உள்)ளக்கருத்தை உரைத்தவிதம் மிகவும் நன்றாய் இருக்கிறது செல்வா..!!

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழியை முற்றிலும் முறியடித்த விதத்தில் உங்களின் கவித்திறமை வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம்..!!


நன்றி சுபி.


குளத்தின் கரையில்
கோயில் இருந்தும்
குளம் இன்னமும்
குப்பையாய், காத்திருக்கிறதோ
சுத்தம் செய்யம்
குலத்தோருக்காக !!??

உங்கள் கவியருமை இராஜேஷ்.


அப்பாடா படித்து முடித்துவிட்டேன்...
பெரிய்ய....கவிதை,...
குளத்திற்காக கவிதை படிப்பது இதுவே முதல் முறை,,
வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கு நன்றி கவி.