PDA

View Full Version : தங்கை ஒரு தீபமென்றால்......



கீதம்
01-01-2010, 07:38 AM
"எலே! மூர்த்தி! எந்திரிடா! ரைஸ்மில்லு வேலைக்குப் போவலியா?"

"ப்ச்! தூங்கவுடும்மா! நான் இனிமே அங்க போவப்போறதில்ல, ஒரே தூசும் தும்பட்டையுமா இருக்கு! மூச்சுவுடக்கூட முடில."

"டேய்! புள்ளையாடா நீ? எத்தனப் பாடுபட்டு அந்த வேலய வாங்கிகுடுத்தேன். நாலு நாளு போயிருப்பியா? அதுக்குள்ள வந்துடுச்சா கேடுகாலம் உனக்கு? அய்யாராசா, தோ, உனக்குக் கீழ நிக்கிற பொண்ணப்பாருடா! அது உழைச்சு உழைச்சு ஓடாத் தேயுது. அதுக்கொரு கல்யாணம் பண்ணிக்குடுக்கணூங்கற நெனப்பு கொஞ்சமாச்சும் இருக்கா உனக்கு?"

நீ பாட்டுக்கு கத்திக்கொண்டிரு, நான் பாட்டுக்கு தூங்குகிறேன் என்பது போல் அவள் பேச்சை சிறிதும் லட்சியம் செய்யாமல் போர்வையை இழுத்து மூடிக்கொண்டான்.

"டேய்! வயிறெரிஞ்சு சொல்றேன்டா! எனக்கப்புறம் நீ நாதியத்துப் போய்தான் நிக்கப்போறே! உன் சொகுசு வாழ்க்கையெல்லாம் இன்னுங்கொஞ்சகாலம்தான். எப்படியோ பாடுபட்டு இந்தப் பொண்ணைக் கரையேத்திட்டேன்னா, போதும், அப்புறம் இந்தக் கட்டைக்கு என்ன வேல? போய்ச்சேந்துடுவேன். நீ தனிமரமா நின்னு தவியாத் தவிக்கப்போறே பாரு!"

ஆண்டாள் காலையிலேயே கூப்பாடு போடத் துவங்கி விட்டாள். அக்கம்பக்க மனிதர்களைப் பற்றி அவளுக்குத் துளியும் கவலையில்லை. பெற்ற மகனுக்கே அவள் மேல் அக்கறையில்லை எனும்போது மற்றவர்களைப் பற்றி அவள் ஏன் கவலைப்படவேண்டும் என்று நினைத்தாளோ என்னவோ?

"அம்மா! சும்மாயிரும்மா! காலங்காத்தால ஆரம்பிச்சிடாதே! பாவம்மா அண்ணே!" சசி குறுக்கிட்டாள்.

"ஆமாம்டி ஆமாம்! அண்ணனை சொன்னா வந்துடுதா உனக்கு? ஊரு உலகத்துல இல்லாத அண்ணே! தாயும், தங்கச்சியும் உழைச்சி கொண்டாற பணத்துல உக்காந்து சாப்புடற தண்டச்சோறையெல்லாம் அண்ணன்னு சொல்லாதடி!"

"அம்மா! நீ சொன்னாக் கேக்கமாட்டே! நீ வேலைக்கு கெளம்பு! வா! எனக்கும் நேரமாச்சி!"

அவசரமாய் அம்மாவின் வாய் பொத்திக் கிளப்பினாள். போகிறபோக்கில் அம்மாவுக்குத் தெரியாமல் தன் கைப்பை திறந்து ஒரு ஐம்பது ரூபாய்த் தாளை எடுத்து தூங்கிகொண்டிருந்த மூர்த்தியின் தலையணை ஓரம் செருகிவிட்டுச் சென்றாள்.

இனி மாலை வரை மூர்த்திதான் தனிக்காட்டு ராஜா. இஷ்டம்போல் தூங்கலாம்; இஷ்டம்போல் எழுந்திரிக்கலாம். டிவி பார்க்கலாம்; வகையாய் சாப்பிடலாம். ஆனால் என்ன, எல்லாம் ஆறிப்போயிருக்கும். அதுதான் ஒரு குறை. சசியின் சமையல் பிரமாதமாய் இருக்கும். அம்மா சமைத்தால் ஏனோதானோ என்றுதான் இருக்கும். இவ்வளவுக்கும் ஒரு மெஸ்ஸில் சமையல் வேலை செய்கிறாள்.

மதிய உணவுக்குப் பின் மறுபடியும் ஒரு நீண்ட தூக்கம். பின் எழுந்து ஒரு குளியல் போட்டு நாகரிகமாய் உடுத்திக்கொண்டு மேலுக்கு சில வாசனைத் திரவியங்களையும் பூசிக்கொண்டு கலக்கலாய் வெளியில் சென்றால் நண்பர்கள், அரட்டைக் கச்சேரி, கல்லூரி வாசல் கடைக்கண் பார்வைகள், சினிமா, ரோட்டோரக் கடை முட்டை பரோட்டா என்று பல பணிகளையும் முடித்துக்கொண்டு வீடுவர எப்படியும் மணி பத்தாகிவிடும்.சில சமயம் அதையும் தாண்டிவிடும். வேலிப்படலைத் திறக்கும்போதே வீட்டுக்குள் விளக்கெரியும். பெரும்பாலும் சசிதான் விழித்திருந்து கதவு திறப்பாள்.

அவன் மேல் சசிக்கு அளவுகடந்த பாசம் என்றுதான் சொல்லவேண்டும். இந்தப்பாசமெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கோ? சசி கல்யாணமாகிப் போய்விட்டால் அப்புறம் எல்லாமே கணக்குதான். வீடுதேடிப் போனால் கூட தன்னை வரவேற்பாளோ மாட்டாளோ!

"சீர் கொண்டுவந்தால் சகோதரி" என்பதை மெய்ப்பிக்கவும் தயங்கமாட்டாள். சட்டென்று அவனுக்குச் சிரிப்பு வந்தது. "கொண்டுவந்தாலும் கொண்டுவராவிட்டாலும் தாய்" என்ற வாக்கை நினைந்து. இங்கு எல்லாம் தலைகீழ். சம்பாதித்துக் கொண்டுவரவில்லை என்று சதா சர்வகாலமும் தன்னை வைது கொண்டிருக்கும் அம்மாவை நினைத்துக்கொண்டான்.

அம்மா கையில் ஓரளவு சேமிப்பு இருக்கிறது. மேற்கொண்டும் தேவையென்றால் கடனை உடனை வாங்கியாவது ஒரு நல்ல இடத்தில் சசிக்கு வரன் பார்த்துவிடுவாள். அம்மா சாமர்த்தியம் அவன் அறியாததல்ல. இல்லையென்றால் இவனுக்கு அடுத்தடுத்து ஏதாவது ஒரு வேலைக்கு சிபாரிசு வாங்கி வருவாளா?


அவனுக்குதான் உடம்பு வளைவதாய் இல்லை. ஒரு வாரம் பத்துநாள் போவான்; சொல்லாமல் கொள்ளாமல் நின்றுவிடுவான். ஆண்டாள் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள்; அழுது பார்த்தாள்; தலைக்குமேல் வளர்ந்த பிள்ளையென்றும் பாராமல் அடித்தும் பார்த்துவிட்டாள். அவன் எதற்கும் மசிவதாய் இல்லை.

தான் பெற்ற பிள்ளை, தாயையும், தங்கையையும் உட்காரவைத்து கஞ்சி ஊற்றுவான் என்ற நம்பிக்கையில் அவன் மண் அள்ளிப்போட்டான்.

இவ்வளவுக்கும் மூர்த்தியிடம் கெட்டகுணங்கள் என்று எதுவுமே கிடையாது, சோம்பலைத் தவிர! புகை, மது ஏன், பாக்குப்போடும் பழக்கம் கூட இல்லை.ஆனாலும் பயன் என்ன? ஊர் சுற்றுவதில் ஆனந்தம் அடைபவன் உழைப்பதில் துயரம் அல்லவா அடைகிறான்.

போனவாரம்கூட கடைவீதியில் ஆட்டோமொபைல்ஸ் வைத்திருக்கும் ராஜசேகர் பார்த்துவிட்டுக் கேட்டான்.

"மூர்த்தி! என் கடைக்கு ஒரு ஆள் தேவைப்படுது. யாராச்சும் இருந்தாச் சொல்லேன்"

வேலையில்லாத வேறெவனுமாய் இருந்தால், "வேற ஆள் எதுக்கு? நானே வரேனே!" என்று உடனடியாய்க் கூறியிருப்பான். இவனோ, "பார்க்கிறேண்டா, யாருக்காச்சும் தேவைன்னா சொல்றேன்" என்றான்.

பிறகுதான் ஆண்டாள் வேலை செய்யும் மெஸ்ஸின் முதலாளியம்மா மூலம் மாவு அரவை நிலையத்தில் உதவியாள் வேலை வாங்கித்தரப் பட்டது. அதற்கும் மூன்றே நாளில் மூடுவிழா நடத்திவிட்டான்.

இன்று கையில் ஐம்பது ரூபாயைக் கண்டதும், மாலைக்காட்சி பார்க்கத் துடித்த மனம், அவனுக்கு முன்பே சரவணா டாக்கீஸுக்கு டிக்கட் எடுக்க வரிசையில் முண்டியடித்துக்கொண்டு நின்றது.

இடைவேளையின்போதுதான் அதைக் கவனித்தான். சீட்டுக்கிடையில் விழுந்த சோளப்பொரியை எடுக்கமுயலும்போது கையில் அகப்பட்டது அது. மெல்லிய கழுத்துச் சங்கிலி. பார்க்கத் தங்கம்போல இருக்க, பரபரவென்று பார்வையை நாலாபுறமும் சுழற்றினான். எவரும் கவனிக்கவில்லை என்று உணர்ந்ததும் சட்டென எடுத்து தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

இவன் சீட்டுக்கிடையில் இருக்கிறதென்றால் இதற்கு முன் மதியக்காட்சியின்போது இங்கு உட்கார்ந்திருந்தவரின் கழுத்திலிருந்து நழுவி விழுந்திருக்கவேண்டும். அதற்குமேல் படத்தில் கவனம் போகவில்லை. இது மட்டும் தங்கமாயிருந்தால்...ஆஹா....இரண்டு சவரனாவது தேரும். தியேட்டர் அலுவலகத்தில் கொடுத்துவிடலாமா என்றும் ஒரு யோசனை குறுக்கே வந்தது.

திரையில் கதாநாயகனும் வில்லனும் சண்டையிட்டுக்கொண்டிருக்க, மூர்த்தியின் மனதுக்குள் சாத்தானும் தேவதூதனும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். யார் வெல்கிறார்களோ அவர்கள் சொல்லைக் கேட்பது என்ற முடிவுக்கு வந்தவன்போல் சற்றுநேரம் அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். இறுதியில் வழக்கம்போல் சாத்தானே வென்றது.

படம் முடிந்து வெளியே வந்தவனுக்கு எல்லோரும் தன்னையே பார்ப்பது போல் தோன்ற அவசர அவசரமாக கூட்டத்தைவிட்டு வெளியேறினான். மனம் ஒருநிலையில் இல்லை. இதுவரை செய்யாத தவறு இது. அம்மா அடிக்கடி சொல்வாள் 'உழைக்கிற காசுதாண்டா உடம்பிலே ஒட்டும்!’

திருடனைப் போல் தன்னை உணர்ந்தான். இருந்தாலும் அம்மாவிடமிருந்து தற்சமயம் தப்பிக்க இது தேவையாயிருந்தது. தினமும் அவளிடம் பாட்டுவாங்கி வாங்கி காது செவிடாகிவிடும் போலிருந்தது.

ஒரு முடிவுக்கு வந்தவனாய் வீடு நோக்கி நடைபோட்டான். நாளை எப்படியும் இந்தசெயினை விற்றுப் பணமாக வேண்டும். பத்தாயிரம் தேறினாலும் போதும். ராஜசேகரிடம் சொல்லி ஐயாயிரத்தில் பழைய டி.வி.எஸ்.50 ஒன்று வாங்க ஏற்பாடு செய்யவேண்டும். மீதி ஐயாயிரத்தை சசியின் திருமணத்திற்கென்று அம்மாவின் கையில் கொடுத்தால் அகமகிழ்ந்து போவாள். பணம் ஏது என்று கேட்டால் ராஜசேகரிடம் வேலைக்குச் சேர்ந்துவிட்டதாகவும் முன்பணமாக வாங்கிவந்ததாகவும் சொல்லிக்கொள்ளலாம்.

எப்படியாவது பிள்ளை உருப்பட்டால் போதுமென்று நினைப்பவள் பொறுப்பாய் தங்கை கல்யாணத்திற்கு பணம் தருகிறானே என்று மகிழ்ந்துதான் போவாள். வேலை மெனக்கெட்டு ராஜசேகரிடம் போய் விசாரிக்கமாட்டாள் என்று நம்பினான்.

என்றுமில்லாத வழக்கமாய் வீட்டுக்குள் விளக்கெரிந்து கொண்டிருந்தது. வாசற்கதவை அம்மாதான் திறந்தாள். சசி ஒரு ஓரமாய் சுருண்டு படுத்திருந்தாள்.

"ஏம்மா, சசிக்கு உடம்புக்கு முடியலையா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல; சாப்புட வரியா?"

சசியிடமிருந்து மெல்லிய விசும்பல் வெளிப்பட, துணுக்குற்றவனாய் அவளருகில் சென்று அமர்ந்தான்.

"ஏ,சசிமா, ஏன் அழுவுற?"

"..."
"ஏய், கேக்கறேன்ல?"

சசி மெளனமாய் இருக்க, ஆண்டாள் தான் பதில் கொடுத்தாள்.

"அதான் ஒண்ணுமில்லன்னு சொல்லியாச்சில்ல, இன்னும் என்னத்துக்கு குடைஞ்சிகிட்டிருக்க?"

"ஏம்மா, என்னை ஒரு மனுசனா மதிச்சு பேசுறியா நீ? இந்நேரத்துக்கு ஒரு பொம்பளப்புள்ள அழுதுகிட்டிருக்கு? அண்ணன் நான் என்னன்னு கேட்டா ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்லங்கறியே?"

"ஆகா! வந்துட்டாரு அண்ணன், விசாரணை பண்ண! எல்லாம் நாங்க வாங்கி வந்த வரம் அய்யா, வரம்! காலம்பூராவும் அழுவணுமின்னு எங்க தலையில எழுதி வச்சிருக்கே! என்ன பண்றது? நீ வா, சோறு தின்ன! உன் ஜோலிய நீ பாரு! யாரு எக்கேடு கெட்டா உனக்கென்ன?"

அவனுக்கு லேசாக தன்மானம் உறைத்தது. ஆண்டாள் எப்போதும் மூர்த்தியைதான் வைவாள். சசியை எதுவும் சொல்லமாட்டாள். என்னதான் பொறுப்பற்ற அண்ணனாக இருந்தாலும் சசியின் மேல் அவனுக்கும் பிரியம் இருந்தது.

எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான். ஆனால் சசி போல் அமைதியான, அடக்கமான, நல்ல பெண்ணைப் பார்த்ததேயில்லை. அவனுக்காக பலநேரம் அம்மாவிடம் பரிந்துபேசி திட்டுவாங்கிகொள்வாள்.

ஒருமுறை ஆண்டாளின் வசவு பொறுக்கமுடியாமல் 'வீட்டைவிட்டுப் போகிறேன்' என்று ரோஷத்துடன் புறப்பட்டபோது, சசிதான் அவன் காலில் விழுந்து கதறி தடுத்திருக்கிறாள்.

"அண்ணே! வீட்டைவிட்டுப் போவாதே அண்ணே! எனக்குக் கல்யாணம் பண்ணிக் குடுக்கும்போது நீயிருந்து குடுத்தாதான் எனக்கு மரியாதை அண்ணே! நீ இருக்கறதாலதான் எவனும் என்னை சீண்டாம, தீண்டாம இருக்கான். நீயும் இல்லைன்னா, கேட்பாரில்லாதவளாப் போயிடுவேண்ணே! எனக்காக இருண்ணே! "

அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்தபோது பெருமையாயிருந்தது அவனுக்கு. தான் ஒன்றும் பயனற்றுப் போய்விடவில்லை என்று புரிந்தது. அதன்பிறகு ஆண்டாள் என்ன சொன்னாலும் மண்டையில் ஏற்றிக்கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டான். தானொரு ஆண்மகனாய் இருப்பதே அந்த வீட்டுக்குப் பெருமை என்பதைப் போலவும் உணர்ந்தான்.

பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே தன் தோழிகளிடம் தன் அண்ணனை ஒரு பெரிய ஹீரோவைப் போல்தான் சித்தரிப்பாள். அவளைப் பொறுத்தவரை அவள் அண்ணன் அமைதியாய் இருப்பதே ஒரு சாகசம் நிகழ்த்துவதற்கான முன்னேற்பாடு போல்தான் இருக்கும். இன்றுவரை அந்த எண்ணம் மாறாமல் இருப்பது ஆச்சரியந்தான்.

தட்டில் போட்டிருந்த சோறு விரைத்துக் கிடந்தது. ஏனோ அழுது கொண்டிருக்கும் தங்கை முன் சாப்பிட மனம் வரவில்லை.

"அம்மா! நீங்க ரெண்டுபேரும் சாப்புட்டீங்களா?"

""ஆமாம், அது தான் கொறச்சல்!"

"ஏம்மா, எதக் கேட்டாலும் எடக்குமடக்காவே பதில் சொல்ற?"

ஆவேசமாய் தங்கை பக்கம் திரும்பினான்.

"ஏய், சசி, என்ன வெளையாடறிங்களா ரெண்டு பேரும்? ஏன் இப்ப அழுவுற? சொல்லப்போறியா இல்லையா?"

அவள் மெளனம் காக்கவே மூர்த்தியின் மூளை குறுக்குவழியில் வேலை செய்தது.

"ஏய், எவனையாவது நம்பி ஏமாந்திட்டியா?"

"அய்யய்யோ! என்னாண்ணே இது? இப்படியெல்லாம் கேக்குறே?" சசி வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள்.

"கட்டையில போறவனே! நீயும் ஒரு அண்ணனாடா? தீவட்டி! பச்சப்புள்ளய பாத்து என்ன கேள்வி கேக்குற?"

“பின்ன என்னம்மா, எத்தன தடவ கேக்கறேன், ஒருத்தரும் ஒண்ணும் சொல்லாம அழுதா, என்னான்னு நினைக்கிறது?"

"டேய், அவ சம்பளக்காசையெல்லாம் சேத்துவச்சி நேத்துதான்டா ரெண்டு சவரனுக்கு ஒரு செயின் வாங்கி போட்டேன். மூதேவி, அதுக்குள்ள எங்கியோ தொலைச்சிட்டு வந்து நிக்கிது!"

"எ..எ..என்ன.. நெசமாவா?"

"ஆமாண்ணே, எப்ப, எங்க அவுந்து விழுந்திச்சின்னு தெரியலண்ணே! " தேம்பித்தேம்பி அழுதவாறே சொன்னாள்.

"எங்க போயிருந்தே நீ?"

"நான் ஆபீஸில்தான் அண்ணே இருந்தேன்"

மூர்த்திக்குள் தவிப்பேற்பட்டது. பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். இதுதானா என்று கேட்கலாமா? ஆனால் அவள் தியேட்டருக்குப் போகவில்லையே! பின் எப்படி....?

சோறு தொண்டைக்குழிக்குள் இறங்காமல் தகராறு பண்ணியது. போதுமென்று தட்டை நகர்த்த, ஆண்டாள் ஏதேதோ புலம்பிக்கொண்டே பாத்திரங்களை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் சென்றாள்.

மூர்த்தியின் மனதுக்குள் ஒரே குடைச்சல். தங்கையின் இரண்டு வருட உழைப்பும் ஒரே நாளில் பறிபோன விவரம் அறியாமல் கேட்கக் கூடாதக் கேள்வியைக் கேட்டு அவளை மனம் நோகச் செய்த குற்ற உணர்வில் பாதிக்கப்பட்டவனாய், மெளனமாய் தங்கையின் தலை கோதினான்.

"சசி! இதுவரைக்கும் ஒரு அண்ணனா பொறுப்பா நடந்துக்கலைன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் கேக்கறேன், பொய் சொல்லாம சொல்லு! நீ யாரையாவது காதலிக்கிறியா?"

அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். சட்டென்று அழுகை நின்று கண்களில் ஒரு ஒளி மின்னியது. மீண்டும் தலைகவிழ்ந்துகொண்டாள்.
“ம்! சொல்லும்மா!"

கனிவுடன் கேட்க, அவள் கலவரத்துடன், "ஏன் அண்ணே கேக்கறே?" என்றாள்.

தன் பாக்கெட்டிலிருந்த சங்கிலியை எடுத்துக் காட்டினான்.

"இது உன்னுதான்னு பாரு! தியேட்டர்ல இருந்து கண்டெடுத்தேன்!"

சங்கிலியைக் கையில் வாங்கிப் பார்க்தவள் மிரண்டு பின் வாங்கினாள்.

பயந்தவளாய், அண்ணனின் கால் பற்றி, "என்னை மன்னிச்சிடு அண்ணே! இதுதான் முதல் தடவ! இனிமே போகமாட்டேன் அண்ணே!" என்று மன்றாடினாள்.

"யாரு? ஆபிஸில் உன்கூட வேலை பாக்கிறவனா?"

"ஆமாண்ணே!"

"அப்போ, இது உன் செயின் தானா?"

"ஆமாண்ணே!"

மூர்த்தி பெருங்குழப்பத்தில் ஆழ்ந்தான். சங்கிலி கிடைத்த தைரியத்தில் சசி தொடர்ந்தாள்.

"ரெண்டு வருஷமா என்னை விரும்புறார் அண்ணே. அவங்க அப்பாவுக்கும் சம்மதம்தானாம். எப்பவோ நம் வீட்டிலே வந்து பேசுறேன்னு சொன்னாரு. நான் தான் வரவேணாம்னு சொல்லிட்டேன். நீ ஒரு வேலைக்குப் போய் என் கல்யாணம் நடந்தாதானே அண்ணே எனக்கு கவுரவம். இந்த நிலைமையில, நீ என் வீட்டுக்கு வந்தா உனக்கு சரியான மரியாதை கிடைக்குமா அண்ணே?"

தங்கையின் வார்த்தைகளில் அடிபட்டுப்போனான். என்ன சொல்கிறாள் இவள்? தன் திருமணத்திற்குப் பின் அண்ணனை கணவனும் மற்றவர்களும் மதிக்கவேண்டுமே என்று கவலைப்படுகிறாளா? அல்லது தன் கெளரவம் கெட்டுப்போகுமே என்று யோசிக்கிறாளா?

எது எப்படியிருந்தாலும், தன்னால் அவள் வாழ்க்கையின் சந்தோஷத்தைக் காலக்கெடுவின்றித் தள்ளிப்போடுகிறாள் என்பது புரிந்தது. அவள் நினைத்திருந்தால் இரண்டு வருடமாய் நேசிப்பவனை, எந்தப் பொருளாதாரப் பிரச்சனையும் இல்லாமல் திருமணம் செய்துகொண்டு இந்நேரம் வாழ்க்கையில் நிலைபெற்றிருக்கலாம். தகப்பனிடம் சம்மதம் வாங்கியும் இவளது வார்த்தைக்கு மதிப்பளித்துக் காத்திருக்கும் காதலனை என்னவென்று சொல்வது?

இத்தனை நாட்கள் பொறுத்திருந்தவர்கள் இன்றுதான் முதன்முறையாக திரையரங்கு சென்றிருக்கின்றனர். இன்னும் தான் பொறுப்பின்றி நடந்துகொண்டிருந்தால், நிலைமை முற்றி வேறுவிதமாய் மாறவும் கூடும். அதற்குள் இவளுக்கு தானே முன்னின்று திருமணத்தை நிகழ்த்தித்தரவேண்டும்.

அண்ணனின் தன்மானம் காக்கும் பொறுப்பை தங்கை தவறாமல் செய்கிறாள். ஆனால் ஒரு அண்ணனாய் தான் செய்யவேண்டியவை என்னென்ன? யோசித்தபடியே உறங்கிப்போனான்.

காலையில் சேவல் குரலுக்கு முன்பே அம்மா கூவினாள்.

"அடியே! உன் செயினு எங்கேயும் போவலடி! தோ, நீ அவுத்துபோட்ட துணியிலேயே சிக்கிட்டு இருக்கு பாரு. துவைக்கப்போடும்போதுதான் பாத்தேன். ராத்திரியில சரியாத் தெரியில! நாம உழைச்ச காசு என்னிக்கும் நம்மள விட்டுப் போவாதும்மா!"

ஆரவாரித்தவள், எங்கோ புறப்படத் தயாராய் நின்ற மூர்த்தியைப் பார்த்து ஆச்சரியமுற்றவளாய்,

"என்னா, துரை! எந்த ஆபீஸுக்கு கிள்ம்பிட்டீங்க? சூரியன் சுள்ளுனு எரிக்கறவரைக்கும் எழுந்திரிக்காதவராச்சே?" கேலி செய்தாள்.

மூர்த்தியின் முகமும், மனமும் தெளிவாயிருந்தன.

"அம்மா! நான் இன்னிலேர்ந்து ராஜசேகர் ஆட்டோமொபைல்ஸ்க்கு வேலைக்குப் போறேன்!"

குரலில் தெரிந்த உறுதி கண்டு மலைத்துப் போனாள் ஆண்டாள். பாலகனைப் பள்ளிக்கு அனுப்புவதுபோல் ஒவ்வொருமுறையும் அவனை வலுக்கட்டாயமாக வேலைக்கு துரத்திக்கொண்டிருந்தாள். இன்று, அவன் தானாகவே முன்வந்து வேலைக்குப் போகிறேன் என்று கூறியதைக் கேட்டு ஆண்டாளுக்கு மயக்கம் வராத குறைதான். பூரிப்புடன் தன்னையறியாது, அவன் முகத்தை இருகைகளாலும் வழித்து நெட்டி முறித்தாள்.

"நீ பொறுப்பா நடந்து நல்லா வந்தா சரிதான், ராஜா!"

அம்மாவின் பின்னால் நின்றிருந்த சசியோ, கலங்கிய கண்களால் அண்ணனுக்கு நன்றி சொல்லிச் சிரித்தாள்.

சிவா.ஜி
01-01-2010, 08:28 AM
பொறுப்பில்லாத சகோதரனை பல கதைகளில் பார்த்திருக்கிறோம். அவர்கள் கடைசியில் திருந்தி நல்லவர்களாகிவிடுவார்கள். ஆனால் பெரும்பாலும் அது ஒரு செயற்கைத்தனமாகவே இருக்கும்.
இந்தக் கதையின் நாயகன் மூர்த்தி திருந்தக் காட்டப்பட்டக் காரணத்தில் யதார்த்தம் மிகுந்திருக்கிறது.

சசி சொன்ன வார்த்தைகளில் அண்ணனிடம் இருக்கும் பாசமும், அவனது கௌரவம் எந்த விதத்திலும் குறையக்கூடாது என்ற எண்ணமும் பளிச்செனத் தெரிகிறது.

கதையின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை தொய்வேயில்லாமல் சுவாரசியமாய் இருப்பதற்கு, உங்கள் எழுத்துநடைதான் காரணம். உரையாடல்களில் கொஞ்சம்கூட மிகைத்தன்மை இல்லாமல் இயற்கையாய் இருக்கிறது.

உங்கள் எழுத்துக்களின் தரம் ஒவ்வொரு கதையிலும் மேலும், மேலும் கூடிக்கொண்டே போகிறது. மனமார்ந்த வாழ்த்துகள் கீதம்.

கலையரசி
01-01-2010, 08:36 AM
உரையாடல் மிகவும் யதார்த்தம். எழுத்து நடையும் விறுவிறுப்பாக இருந்தது.
பொறுப்பில்லாமல் இருப்பவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டு திருந்துவார்கள். இதில் தங்கையின் பாசம் அண்ணனைத் திருத்தியிருக்கிறது.
நன்று.மிக்க பாராட்டு.

ஜனகன்
01-01-2010, 08:05 PM
உண்மை சம்பவம் போல் கதையை மெருகூட்டி ரொம்ப சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்.படிக்க இனிமையாகவும், தெளிவாகவும் இருந்தது.சுபமான முடிவு சந்தோசம்.வாழ்த்துக்கள்.

கீதம்
01-01-2010, 09:45 PM
பொறுப்பில்லாத சகோதரனை பல கதைகளில் பார்த்திருக்கிறோம். அவர்கள் கடைசியில் திருந்தி நல்லவர்களாகிவிடுவார்கள். ஆனால் பெரும்பாலும் அது ஒரு செயற்கைத்தனமாகவே இருக்கும்.
இந்தக் கதையின் நாயகன் மூர்த்தி திருந்தக் காட்டப்பட்டக் காரணத்தில் யதார்த்தம் மிகுந்திருக்கிறது.

சசி சொன்ன வார்த்தைகளில் அண்ணனிடம் இருக்கும் பாசமும், அவனது கௌரவம் எந்த விதத்திலும் குறையக்கூடாது என்ற எண்ணமும் பளிச்செனத் தெரிகிறது.

கதையின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை தொய்வேயில்லாமல் சுவாரசியமாய் இருப்பதற்கு, உங்கள் எழுத்துநடைதான் காரணம். உரையாடல்களில் கொஞ்சம்கூட மிகைத்தன்மை இல்லாமல் இயற்கையாய் இருக்கிறது.

உங்கள் எழுத்துக்களின் தரம் ஒவ்வொரு கதையிலும் மேலும், மேலும் கூடிக்கொண்டே போகிறது. மனமார்ந்த வாழ்த்துகள் கீதம்.

தங்களுடைய வார்த்தைகளில் தெரியும் உளப்பூர்வ பாராட்டைக் கண்டு மிகவும் மகிழ்கிறேன், சிவா.ஜி. அவர்களே. எழுதத் துவங்கிய குறுகிய காலத்திலேயே என் எழுத்து மேம்பட்டிருப்பது அறிந்து மகிழும் அதே வேளையில் இன்னும் அதை மேன்மையுறச்செய்யவேண்டும் என்ற ஆர்வமும் பிறக்கிறது. நிச்சயம் முயல்வேன். நன்றியுடன் கீதம்.

கீதம்
01-01-2010, 09:48 PM
உரையாடல் மிகவும் யதார்த்தம். எழுத்து நடையும் விறுவிறுப்பாக இருந்தது.
பொறுப்பில்லாமல் இருப்பவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டு திருந்துவார்கள். இதில் தங்கையின் பாசம் அண்ணனைத் திருத்தியிருக்கிறது.
நன்று.மிக்க பாராட்டு.

தங்கை என்னும் தீபம் காற்றில் அணைந்துவிடாமல் பாதுகாக்கும் மாடமாக அண்ணன் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் இக்கதை. பாராட்டுக்கு நன்றி கலையரசி அவர்களே.

கீதம்
01-01-2010, 09:52 PM
உண்மை சம்பவம் போல் கதையை மெருகூட்டி ரொம்ப சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்.படிக்க இனிமையாகவும், தெளிவாகவும் இருந்தது.சுபமான முடிவு சந்தோசம்.வாழ்த்துக்கள்.

உண்மையாகவும் சில இடங்களில் இதுபோல் நடக்கலாம். பொறுப்பில்லாதவர்கள் மனந்திருந்தி பொறுப்புடன் நடப்பது வரவேற்கப்படவேண்டிய விஷயம் தானே. பாராட்டுக்கு நன்றி ஜனகன் அவர்களே.

கா.ரமேஷ்
02-01-2010, 04:56 AM
உண்மையில் என்ன எழுதுவது என்று தெரியவில்லை பாசத்திற்க்கு முன்னுரிமை கொடுத்து எழுதியிருக்கிறீர்கள்...

நல்ல கதையோட்டம் ஒரு பாச*பிணைப்பு கடைசி வரையில் இருந்தது பாராட்டுக்கள்...

அமரன்
02-01-2010, 09:07 AM
மெஸ்ஸில் சமையல் வேலை பார்க்கும் அம்மாவின் சமையல் தரம் உள்ளிட்ட அனைத்தும் உண்மை.:)

தவறுகளை எப்படித் திருத்த வேண்டும் என்ற பாடமும் கலந்திருப்பது அதிவிஷேசம். (அதிவிஷேசத்தைக் கண்டதும் அன்பு, ஓவியன் எல்லாரும் ஓடி வரப்போறாங்க பாருங்க)

சிவாவின் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.

வானதிதேவி
02-01-2010, 12:47 PM
அருமையான பாத்திரபடைப்பு எதார்த்தமான வரிகள்.வாழ்த்துக்கள் கீதம் அவர்களே

பாரதி
02-01-2010, 02:49 PM
மாற்றங்களை உண்டாக்கத்தான் எப்படியெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கிறது!

கதையின் முடிவு அனைவரையும் மகிழ்வுக்குள்ளாக்கும் நண்பரே.

கீதம்
02-01-2010, 09:09 PM
பின்னூட்டமிட்டு ஊக்குவிக்கும் நண்பர்கள் கா.ரமேஷ், அமரன், வானதிதேவி மற்றும் பாரதி அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

சுகந்தப்ரீதன்
10-01-2010, 09:56 AM
மடசாமியாய் இருந்த அண்ணனை மாடாசாமியாய் மாற்றிய தங்கை உண்மையிலேயே ஒரு தீபம்தான்..!!

கதையில் யதார்த்தமான மன உணர்வுகளையும் உரையாடல்களையும் இணைத்துவிடும் நுணுக்கம் நன்றாக தெரிந்திருக்கிறது உங்களுக்கு..!!

வாழ்த்துக்கள்... தொடருங்கள்...!!

கீதம்
11-01-2010, 06:35 AM
மடசாமியாய் இருந்த அண்ணனை மாடாசாமியாய் மாற்றிய தங்கை உண்மையிலேயே ஒரு தீபம்தான்..!!

கதையில் யதார்த்தமான மன உணர்வுகளையும் உரையாடல்களையும் இணைத்துவிடும் நுணுக்கம் நன்றாக தெரிந்திருக்கிறது உங்களுக்கு..!!

வாழ்த்துக்கள்... தொடருங்கள்...!!

நன்றி சுகந்தப்ரீதன் அவர்களே.

இளசு
31-01-2010, 07:27 AM
சசி போல் ஒரு தங்கை பாசதீபமாய் ஒளிர்ந்தால்
எந்த அண்ணனும் கோயிலாய் மாறத்தான் வேண்டும்.


அழகான நடையில் அம்சமாய் ஒரு கதை.

வாழ்த்துகள் கீதம்.

இன்பக்கவி
31-01-2010, 09:26 AM
அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு நல்ல கதை..
நன்றிகள் கீதம்
வாழ்த்துக்கள் :icon_b:

கீதம்
02-02-2010, 07:02 AM
சசி போல் ஒரு தங்கை பாசதீபமாய் ஒளிர்ந்தால்
எந்த அண்ணனும் கோயிலாய் மாறத்தான் வேண்டும்.


அழகான நடையில் அம்சமாய் ஒரு கதை.

வாழ்த்துகள் கீதம்.

நன்றி இளசு அவர்களே.

கீதம்
02-02-2010, 07:03 AM
அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு நல்ல கதை..
நன்றிகள் கீதம்
வாழ்த்துக்கள் :icon_b:

நன்றி இன்பக்கவி அவர்களே.

aren
09-02-2010, 03:53 AM
தன்னுடைய அண்ணன் தன் புகுந்த வீட்டில் மதிக்கப்படவேண்டும் என்று நினைக்கும் தங்கையின் மனோபாவம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அண்ணன் அந்த அளவிற்கு இதுவரை நடந்துகொள்ளாவிட்டாலும் இனிமேல் நடந்துகொள்வான் என்றே கதையின்போக்கு சொல்கிறது.

நல்ல கதை, பாராட்டுக்கள். இன்னும் எழுதுங்கள்.

கீதம்
13-02-2010, 10:18 PM
தன்னுடைய அண்ணன் தன் புகுந்த வீட்டில் மதிக்கப்படவேண்டும் என்று நினைக்கும் தங்கையின் மனோபாவம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அண்ணன் அந்த அளவிற்கு இதுவரை நடந்துகொள்ளாவிட்டாலும் இனிமேல் நடந்துகொள்வான் என்றே கதையின்போக்கு சொல்கிறது.

நல்ல கதை, பாராட்டுக்கள். இன்னும் எழுதுங்கள்.

தொடர்கதை எழுதும் வேலைப்பளுவிலும் மற்றவர்களின் கதைகளைப் படித்துப் பின்னூட்டமிடும் தங்கள் வழக்கத்தை மதிக்கிறேன். மிக்க நன்றி ஆரென் அவர்களே.