PDA

View Full Version : நல்லவங்க



த.ஜார்ஜ்
29-12-2009, 10:53 AM
அம்மா அப்பா இருந்தபோது மாலதி இந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள்தான். அப்போதெல்லாம் இந்த சித்தி எவ்வளவு பிரியமாயிருந்தாள். அழகழகாய் டிரஸ் வாங்கித் தருவாள். நிறைய இனிப்புகள் செய்து தருவாள்.கால் ஊனம் உணரக்கூடாது என்பதற்காக அவளிடம் அதிகம் அக்கறைக் காட்டுவாள். அப்போதெல்லாம் சித்தி வீட்டுக்கு வர ரொம்ப சந்தோசமாயிருந்தது.

இப்போது அதே சித்தி எப்படியெல்லாம் மாறிப்போனாள். ஆச்சரியமாயிருக்கிறது.

ஐந்தாண்டுக்கு முன் சுனாமி இவளை அனாதையாக்கி விட்டுப் போக சித்தி இவளை வேலைக்காரியாக்கிக் கொண்டாள். மாலதி என்கிற அழகான பெயரை ‘ நொண்டி சவமே’ என்று மாற்றி கூப்பிட்டாள்.

“ஏண்டி சவமே.. எத்தனை தடவை கேட்கிறேன்.தண்ணீ எடுத்திட்டு வந்தியா”

“இல்ல. மாவரைச்சிட்டு எடுத்து வரேன் சித்தி. ஏன் சத்தம் போடறீங்க?”

“திமிரு பிடிச்ச மூதேவி.. என்னடி சொல்ற.. சத்தம் போடறேனா.. வேளாவேளைக்கு சாப்பிட கிடைக்குதில்ல.அப்படிதான் சொல்லுவ.கொழுப்பு. நீ ஏன் பேச மாட்ட.தெருவில கிடந்த நாய்களை நான் எடுத்து வளத்தேன் பாரு.என்னைச் சொல்லணும்.. என்னா பாய்ச்சல் பாயிறாம்மா..”

காரண காரியமில்லாமல் சித்தி மூச்சிரைக்க கத்துவாள்.இடையிடையே நாலு கெட்ட வார்த்தைகளும் எட்டிப்பார்க்கும். இதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கேட்டு பழகிப் போயிற்று.

மாலதியை அழவைப்பதில் சித்திக்கு அத்தனை சிரமம் இல்லை.அவளது நொண்டிக் காலைப்பற்றி நக்கலாக நாலு வார்த்தை .போதும்.அது போதும் மாலதி துவண்டு போவாள்.

இதெல்லாம் செய்து விட்டு பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நல்ல பெயர் சம்பாதிப்பது சித்திக்கு கை வந்த கலை.

“இத நான் எங்கடி போய் சொல்ல. இந்த பாவி மகள நான் அம்மா இல்லாத குறை தெரியாம வளர்க்க படுற பாடு தெரியலை. மூதேவி என்ன சொல்லுது தெரியுமா? அவ சொத்தெல்லாம் எடுத்திட்டு வெளியேத்த துடிக்கிறேனாம்.. சண்டாளி.. என்னடி பெரிய சொத்து. பிச்சை காசு. இவளை துரத்த எனக்கு ரொம்ப நேரமா ஆவும்.ஏண்டியம்மா நீயே சொல்லு நான் அத்தனை கொடுமைக்காரியா..?”

அன்றும் அப்படிதான் நடந்தது.

சித்தியும் சித்தப்பாவும் ஒரு கல்யாண வீட்டிற்க்கு போயிருந்தார்கள்.சாயுங்கால நேரத்தில் வேலையெல்லாம் முடித்து படுத்திருந்தாள்.அழைப்பு மணி கூப்பிடவே எழுந்து வந்தாள்.ராமசாமி டெய்லர் தைத்த துணிகளைக் கொண்டு வந்திருந்தான்.அந்த அப்பாவி இவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே நீட்ட இவள் வாங்குமுன்னே கைநழுவ விட்டான்.சுதாரித்துக்கொண்டு எடுப்பதற்கு இருவருமே குனிய இருவரின் மண்டை மோதிக்கொண்டன.இவளது நெற்றிப்பொட்டு அவனுக்கும் வந்திருந்தது.

அவள் திகைத்து நிற்க அவன் வெளிறிப்போய் வெளியேறிய போது....
வாசலில் சித்தியும் சித்தப்பாவும் வந்திருந்தார்கள்.

சித்தி வார்த்தைகளையும் ,சித்தப்பா பெல்டையும் அவிழ்த்தார்கள்.

“கேடுகெட்ட சிறுக்கி. நாங்க என்ன பாடுபட்டு உன்னை ஆளாக்கி விடறோம். நீ கண்ட பயலுககூட கூத்தடிக்கிறியா..”

வெளியே ஊர்ஜனம் வேடிக்கைப்பார்க்க குன்றிப் போனாள் மாலதி.

“வேண்டாம்.இவர்களோடு வாழ வேண்டாம்.இனி வாழ்ந்து என்ன ஆகப் போகிறது.”

இரவு.ஏழு மணியிருக்கும்.அடுக்களையில் யோசித்துக் கொண்டே இருந்தவள் அரவம் கேட்டு நிமிர்ந்தாள்.சித்தப்பா!

“அடிபட்டது ரொம்ப வலிக்குதாடா..”என்று தொடக்கூடாத இடத்தில் தொட்டு அவர் தடவியதும் அவளுக்குப் புரிந்தது. ஆபத்து .. ஓடு... ஓடிவிடு..

தடாலென்று கீழே விழுந்த மாதிரி புரண்டு கதவை திறந்து வெளியே பாய்ந்தாள்.கிடைத்த பஸ்ஸில் ஏறினாள்.ஏற்கெனவே திருடி வைத்திருந்த காசு இருந்தது.

இறங்கிய இடத்துக்கு பெயர் என்னவென்று தெரிந்திருக்க வில்லை.கையில் ஐம்பத்தினாலு ரூபாயும் சில சில்லறைகளும்.... விஷமருந்து எங்கே கிடைக்கும்?

அட.. பின்னாலே வருகிற இவனிடம் கேட்கலாமா..?

“சார் பக்கத்தில மருந்து கடை இருக்குமா?”

“மருந்து கடைதானே.வா நான் அந்த பக்கம்தான் போறேன்”

ரோட்டிலிருந்து இடப்புறமாய் பிரிந்த கிளை சாலையில் திரும்பினான்.எட்ட இருந்த மதுபான கடைக்கு அடையாளம் காட்டும் வழிகாட்டி பலகையை கடந்து போனான். சற்று உட்புறமாக பெரிய புளிய மரமிருந்தது. வெளிச்சம் அதிகம் இல்லை. பம்ப் ரூம் மாதிரி இருந்த மறைவிடத்தை உற்று நோக்கினான்.

“வாம்மா அங்கதான் கடையிருக்கு” என்று அவன் சொன்னபோது மருண்டாள்.கத்த வேண்டும் என்று தோன்றியபோது காதோரமாய் ஓங்கி அறைந்தான்.மயக்கம் போல வந்தது.கீழே விழப்போனவளை அவன் அணைத்து இழுத்துக் கொண்டு போனான்.

கான்டிராக்டரிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு மனோகர் புறப்பட்டபோது மாலை மணி ஆறு.கால்போன போக்கில் நடந்தான்.வீட்டுக்கு பூவும் இனிப்பும் வாங்கிப் போகும் சுப்பிரமணியைப் பார்த்து பெருமூச்சு விட்டான்.

அவசரமில்லாமல் நகரசபை பூங்காவில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்தான்.இருட்டியதும் எழுந்து வெளியேறினான்.வழியிலிருந்த மதுபானக்கடையை பார்த்ததும் குடிக்க ஆசை எழுந்தது.வேண்டாம்.இன்று ஒரு நாளாவது குடிக்காமல் போனால் பாலு சந்தோசப்படுவான். இப்போது இருக்கிற ஒரே துணை அவன்தான்.அற்புதமான எழுத்தாளன்.

ஹோட்டலுக்குப் போய் நிறைய சாப்பிட்டான்.பாலுவுக்கு ஏதாவது வாங்கிப் போக வேண்டும்.பூரி அவனுக்கு உயிர்.வாங்கினான். நன்றாக இருட்டி விட்டது.

ஊருக்குப் போகும் அந்த கிளை சாலையில் திரும்பும் போது மெல்லிய விசும்பல் கேட்டது.சட்டென்று நின்றான்.புளிய மரத்துக்குப் பின்னால் நிழலாய் ஒரு உருவம் தெரிந்தது.

“ஏய்.. யாரங்கே..” என்றான். நிழல் அசைந்தது. ஓ.. பொம்பளையா.. அட அவள் என்ன செய்கிறாள்.. தூக்கு மாட்டிக்கொண்டு_

..தொங்கப் போனவளை ஓடிப் போய் பிடித்தான்.இவனை உதறிவிட்டு ஓடினாள். கால்கள் வேகமாக ஓட ஒத்துழைக்க வில்லை.இவன் பிடித்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தான்.”யாரு நீ” என்றான்.

“விடு என்னை சாக விடு...”

ஏன்? மனோவுக்குப் புரியவில்லை.களைத்து போயிருந்தாள். உடம்பெல்லாம் காயம் பட்டிருந்தது.பாலுவுக்கு வாங்கி வைத்திருந்த பூரியை அவளிடம் தந்தான்.முரண்டு பிடித்தாள்.

“என்னை சாகவிடு..”

மனோவுக்கு கோபம் வந்தது. “ஏய் ஓழுங்கா சாப்பிடு.”

“பொறுக்கி நாய்ங்க” என்று தொடங்கி சில மட்டமான வார்த்தைகளால் ஆண் வர்க்கத்தை சபித்தாள்.கேட்டுக் கொண்டு பேசாதிருந்தான். கோபமெல்லாம் அடங்கியபின் அவன் விசாரணக்கு சொல்ல ஆரம்பித்தாள்..

“என் பெயர் மாலதி....”

இனி மீதி கதை நடக்க போகும் இடம் எனது அறை. மனோ அவளை இங்குதான் அழைத்து வந்திருக்கிறான்.

“பாலு என்ன செய்றது. நீ ஒரு வழி சொல்லு. நீதான் பெரிய எழுத்தாளனாச்சே” என்று வந்ததிலிருந்தே துளைக்கிறான். எனக்கு வேண்டா வெறுப்பாயிருந்தது.தேவையில்லாமல் ஒரு பிரச்சனையை கொண்டு வந்திருக்கிறான்.. நான் உண்டு என் வேலை உண்டு என்று நிம்மதியாய் இருக்க விட மாட்டான் போலிருக்கிறதே.சே..

காலையில் பால்கார பையன் அதிகம் பால் வாங்கியதும் எட்டிப் பார்த்து கண்ணடித்தான். “ஜமாய்ங்க”

எனக்கு சுரீரென்றது.ஓ.. இவர்கள் வேறு மாதிரி அர்த்தப்படுத்திக் கொள்வார்களோ.சீக்கிரமே இவர்களை வெளியேற்றி விட வேண்டும். நம் மானம் போய் விடும்.

பிரம்மச்சாரி எனக்கு வீடு தர அடம்பிடித்த மாமி எதிர் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.சாந்தி அதாவது பக்கத்து வீட்டு என் சாந்தி ‘அட இவர் எப்படி முழிச்சார்’ வியந்தாள். மனோவைக் கண்டதும் வியர்த்தாள். அவனை அவளுக்குப் பிடிக்காது.குடிக்கிறானாம்.

“போலிசுக்குப் போ. இல்லேன்னா எப்படியாவது அவ வீட்டுல கொண்டு விட்டுட்டு வந்திரு” என்று மனோவிடம் சொன்னதும்..

“முடியாது. அந்த வீட்டுக்கு நான் போமாட்டேன். என்னை நிம்மதியா சாக விடுங்க..” அவள் கத்திய கத்தலில் பக்கத்து வீட்டு சண்முகம் புரிந்திருப்பார் ‘இந்த பயல்கள் அந்த பெண்ணை ஏதோ செய்கிறார்கள்.’

எனக்கு மானமே போனது.

“சத்தம் போடாதே முடமே.” என்று அதட்டியதற்கு மனோ முறைத்தான். சற்று நேரத்தில் எப்படியோ மோப்பம் பிடித்து வீட்டுக்கார மாமி வந்தார்.’இதுக்குதான் உங்களை மாதிரி ஆளுகளை குடி வைக்குறதில்லை. இது சரிப்படாது.உடனே வீட்டை காலி பண்ணிடுங்க.”

அவளை சமாதானப்படுத்தி நான் நல்ல பையன் என்று பெயரெடுக்க மிகுந்த சிரமமாகிதான் விட்டது. சாந்தி_ என் சாந்தி.. ஒத்துழைத்தாள்.

“ஏண்டா.. அதை பார்த்தா பாவமாயிருக்குடா.. நம்ம கூடவே ஒரு வேலைக்காரியா இருந்திட்டு போகட்டுமே..” யாரையும் லட்சியம் பண்ணாமல் மானோ சொல்ல..

“உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு.”

“அப்ப நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். அப்ப எல்லாம் சரியாயிடுமில்ல.”

“டேய். அறிவு கெட்டவனே. என்னடா பேசிற.. இதென்ன சினிமா கதையா. கிறுக்குதனமா பேசிட்டு இருக்க. அவ.. அவ..யாரோ... என்னவோ.. ஏற்கெனவே கெட்டு போனவடா..”

“ நானும் பெரிய யோக்கியன் இல்ல மச்சான்..”

“மடையா நல்லது சொன்னா உனக்கு மண்டையில ஏறாதா..”

எதிர் வீட்டு மாமி குறுக்கிட்டாள். “ஏன் தம்பி இந்த மாதிரி பயலுகளை வீட்டுல சேர்க்கிறிங்க.”

மனோவை நான் தீர்மானமாகப் பார்த்தேன்.இவனை இனி இங்கெ வைத்திருப்பது சரியில்லை. “ சரி மனோ உன் முடிவு அதுதான்னா எக்கேடாவது கெட்டு போ. ஆனா எங்கூட உன்னை வச்சிருக்க முடியாது”
சொல்லிவிட்டு மாமியை ஓரக்கண்ணால் பார்த்தேன். என்னை நல்ல பையனாக ஏற்றுக் கொண்ட சலனம் உணர முடிந்தது.

மனோதான் துவண்டு போனான்.

“கவிதையெல்லாம் எழுதுவ. பெரிய சீர்திருத்தவாதி, சமுதாய அக்கறையுள்ளவன்னு நினச்சிட்டேண்டா.. ப்ச்.. சரி இந்த தேசத்தில எங்களுக்கு ஒதுங்க ஒரு இடம் கிடைக்காமலா போயிரப் போகுது. வாரேன்.”

முகத்தில் அடிக்காத குறையாக சொல்லிவிட்டு மாலதியை கூட்டிக் கொண்டு சட்டென்று இறங்கிப் போனான்.

அவனை வெளியேற்றிய பெருமிதத்தில் நான் சாந்தியை- என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்கு தந்திருக்கும் சாந்தியை காதலுடன் திரும்பிப் பார்த்தேன்.

அவள்....

எச்சிலைக் கூட்டிச் சேர்த்து என் முன்னால் தரையில் துப்பிவிட்டுப் போனாள்.

கா.ரமேஷ்
30-12-2009, 05:18 AM
பெரும்பாலும் சமூக சீர்திருத்தங்களும்,போதனைகளும் அடுத்தவர்களுக்கு மட்டும்தான்.. தனக்கென்று வரும்போது தள்ளி நிற்க்கும் இந்த நாயகர்களை போன்றவர்களுக்கு சாட்டையடி... அருமை ...

சின்ன இடறல் சித்தப்பாவின் வன்மத்தை புரிந்த அவளுக்கு ஒரு குடிகார காமுகனின் வன்மம் புரியாமல் போனது இங்கே ஆச்சர்யபட வைக்கிறது...

சிவா.ஜி
30-12-2009, 05:23 AM
முகமூடிகள் கிழிக்கப்படும்போது.....அதன் பின்னான முகம்...விகாரமாய் தெரிகிறது. சாந்தி காறி உமிழ்ந்ததில் தவறேயில்லை.

குடிகாரனாயிருந்தாலும், அவனுள் இருக்கும் மனிதம் கறைபடவில்லை. உடல் தடுமாறினாலும் உள்ளம் தடுமாறா நல்லவன்.

மனிதர்களின் பல முகம் காட்டும் கதை. நல்லாருக்கு நண்பரே. வாழ்த்துகள்.

சுகந்தப்ரீதன்
10-01-2010, 09:15 AM
நிகழ்வுகளை கோர்வைகளாக காட்சிபடுத்தும் உங்கள் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த சிறுகதை என்று சொல்லலாம்..!!

தங்களின் அழுக்குபடிந்த மனக்கண்ணாடி கொண்டே மற்றவர்களை உற்றுநோக்கும் சமுதாய மனிதர்களை ஆங்காங்க காட்சிபடுத்தி விதமும் கடைசியில் காதலி காறித்துப்பி காதலை மறுத்தவிடமும் நன்று..!!

ஜார்ஜ் நீங்க ஒரு தேர்ந்த காதாசிரியர்தான் போலிருக்கு... வாழ்த்துக்கள்..!!

த.ஜார்ஜ்
12-01-2010, 02:35 PM
சுகந்த பிரீதன்
வாழ்த்துக்கு நன்றி.
வார்த்தைகளை அழகாக கோர்த்திருக்கிறீர்கள்.

சரண்யா
13-01-2010, 02:02 AM
கதைக்குள் பல நிகழ்வுகள்.எழுத்துகளால் நல்லவங்க தெரிந்தார்கள்...
கா.ரமேஷ் அவர்கள் சொல்லியது போல் தான் தோன்றியது...
வாழ்த்துகள் த.ஜார்ஜ் அவர்களே..

பா.ராஜேஷ்
13-01-2010, 09:24 AM
அற்புதம் ஜார்ஜ். கதைக்கும், தலைப்புக்கும், பாத்திரங்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கின்றன. சீர்திருத்தம் சொல்வதற்கும் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

jayashankar
13-01-2010, 09:56 AM
நன்றாக எழுதியிருக்கும் கதை.

தன் களத்தை விட்டு அந்தப் பகம் இந்தப் பக்கம் பார்க்காமல், சமுதாயத்தில் வெறும் பேச்சில் மட்டுமே விழிப்புணர்ச்சி செய்து வரும் பலருக்கு சாட்டையடியாக எழுதப்பட்ட கதை.

அனைத்துப் கதாபாத்திரங்களும் அருமையாக சித்தரிக்கப்படுள்ள விதமும் பாராட்டுக்குரியது.

சாந்தி அவர்கள் தரையில் துப்பாமல் பாலுவின் முகத்தில் துப்பினாலும் தகும்.

நன்றிங்க ஜார்ஜ், நல்லக் கதை

த.ஜார்ஜ்
13-01-2010, 04:35 PM
அன்பு ஜெயசங்கர்
ந்ன்றி நண்பரே.

உங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

தாமரை
13-01-2010, 07:23 PM
முகமூடிகள் கிழிக்கப்படும்போது.....அதன் பின்னான முகம்...விகாரமாய் தெரிகிறது. சாந்தி காறி உமிழ்ந்ததில் தவறேயில்லை.

குடிகாரனாயிருந்தாலும், அவனுள் இருக்கும் மனிதம் கறைபடவில்லை. உடல் தடுமாறினாலும் உள்ளம் தடுமாறா நல்லவன்.

மனிதர்களின் பல முகம் காட்டும் கதை. நல்லாருக்கு நண்பரே. வாழ்த்துகள்.

சாந்தி காதலியாய் இருப்பதால் காறி உமிழ்கிறாள்..

மனைவியாய் இருந்திருந்தால்?

பல பெண்கள், அனைவரின் மேலும் அன்பும் பாசமும் நேசமும் காட்டும் ஒருவனைக் காதலிக்கிறார்கள்..

கல்யாணத்திற்கு அப்புறம் அத்தனையும் தமக்கு மட்டுமே என அவனை அடக்கி ஆள ஆரம்பித்து விடுகிறார்கள்.

சித்தி - ஊருக்கு நல்லவளாக நடிக்கிறாள்
சித்தப்பா - சித்திக்க் நல்லவராக நடிக்கிறார்

மனோகரன் - யாருக்கும் நல்லவனாக நடிக்கலை, அதனால் மனம் யாரின் மீது இரக்கப் படுகிறதோ அந்த மாலதிக்கு நல்லவனாக இருக்கிறான்.

பாலா - தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லவனா நடிக்கிறான்.

சாந்தி - பெண்ணின் உணர்வை புரிந்து கொள்ளவில்லையே என காறி உமிழ்கிறாள். இவள் யாருக்கு நல்லவளாக நடிக்கிறாள்?

அக்கம் பக்கத்தவர் - தம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் நாங்க எல்லாம் கௌரவமான குடும்பமாக்கும் என நடிக்கிறார்கள்..


தன்னுடைய மனசாட்சிக்கு நல்லவங்களா யார் இருக்காங்க என தேடிப்பார்க்கிறேன்..

எந்தப் பிக்கலும் பிடுங்கலும் இல்லாம இருக்கும் மனோகர் மட்டுமே தெரிகிறான்.. நாளைக்கு அவன் யாருக்கு நல்லவனா நடிக்கப் போகிறானோ தெரியலை.



இனி மீதி கதை நடக்க போகும் இடம் எனது அறை. மனோ அவளை இங்குதான் அழைத்து வந்திருக்கிறான்.

பாதிக்கதையை ஒரு நடையில் சொல்லிட்டு கிளைமேக்ஸை சுய புராண மாடலில் மாத்தி எழுதி இருப்பது கொஞ்சம் புத்மையாய் இருந்தாலும்

எச்சிலைக் கூட்டிச் சேர்த்து என் முன்னால் தரையில் துப்பிவிட்டுப் போனாள்.

அப்படின்னு கட்டையா முடிச்சி, உங்க உணர்வுகளை கட் பண்ணினது கதையை தொங்கல்ல விட்டுடுது..

அதுவுமில்லாம கதையில ஒன்றிற்கு மேற்பட்ட நல்ல நல்லவங்க வர்ரதால (சாந்தி, மனோகர்) நல்லவங்க என்ற நக்கலான தலைப்பு, கொஞ்சம் சிக்கலாயிடுது ஜார்ஜ்.

நீங்க எடுத்த எல்லோரும் யாரோ சிலர் தம்மை நல்லவங்கன்னு சொல்லணும் என்பதற்காக நடிக்கிறாங்க. அந்தக் கட்டாயம் இல்லாதவங்க மட்டும், தங்கள் மனசாட்சிப்படி நல்லவங்களா இருக்காங்க என்கிற கருத்து முழுமையா வெளிப்படலை.

முடிஞ்சா ஒரு மீள்பார்வை பாருங்களேன்

த.ஜார்ஜ்
18-01-2010, 02:53 PM
அன்பு தாமரை செல்வன்
வணக்கம்.
இந்தப் பக்கம் மீண்டும் வந்தமை மகிழ்ச்சி தருகிறது.

இப்போதெல்லாம் ஆரோக்கியமான விமர்சனங்கள் தமிழ் மன்றத்தில் வைக்கப்படுவது வரவேற்புக்குரியது. அதில் ஒன்று இதுவும்.
இது மாதிரி விமர்சனங்கள்தான் ஒரு படைப்பாளிக்கு தன்னை தீட்டிக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகிறது என்று நான் நினைக்கிறேன்.
அதற்கு நன்றி.

படைப்பாளி சொன்னதையும், சொல்லாததையும் கூட உணர்த்தி விடுகிறீர்கள்.
நிறைய மெனக்கெட்டிருக்கிறீர்கள். 'மோதிர விரலின் குட்டு'எனக்கு பிடித்திருக்கிறது.
நான் எல்லாவற்றையுமே மீள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
தொடர்ந்து குட்டுங்கள். நன்றி