PDA

View Full Version : குறள் யாப்போம் - ஈறு தொடங்கி!



Pages : 1 [2] 3 4

கீதம்
30-06-2011, 10:47 PM
உண்டுடுத்தல் காணுங்கீழ் ஓரா வடுக்காணும்
கண்டறிஞர் கூறியதைக் காண்.

இக்குறளின் பொருள் அறிய விரும்புகிறேன் குணமதி அவர்களே.

குணமதி
01-07-2011, 03:50 AM
இக்குறளின் பொருள் அறிய விரும்புகிறேன் குணமதி அவர்களே.

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். - என்பது குறள் (1079)

இதன் பொருள்:

பிறர் நன்றாக உடுப்பதையும் சுவையாக உண்பதையும் கீழ் குணமுடையவன்/ள் காணுமாயின், அவற்றைப் பொறாமல் அவரிடத்துக் குற்றமில்லாதிருக்கவும் ஒரு குற்றத்தைப் படைத்துக்கூற வல்லவன்/ள் ஆம் என்பதாகும்.

இக்குறளின் கருத்தையே யான் எழுதிய குறளில் கூறியிருக்கின்றேன்.

உண்டுடுத்தல் காணுங்கீழ் ஓரா வடுக்காணும்
கண்டறிஞர் கூறியதைக் காண்.

இதன் பொருள்:

பிறர் நன்றாக உடுப்பதையும் சுவையாக உண்பதையும் கீழ் குணமுடையவன்/ள் காணுமாயின், ஆராய்ந்துணராது அவற்றைப் பொறாமல் அவரிடத்துக் குற்றமில்லாதிருக்கவும் ஒரு குற்றத்தைப் படைத்துக்கூறும் என்று அறிஞர் ஆய்ந்தறிந்து கூறியதை உணர்க என்பதாகும்.

குணமதி
01-07-2011, 04:21 AM
பெறுதற் கரியதோர் பேறெனவே கற்றேன்
குறுகத் தறித்த குறள்.

M.Jagadeesan
01-07-2011, 05:57 AM
குறள்கண்ட செம்மொழி எம்மொழி இம்மொழியைத்
தாய்மொழியாக் கொண்டதெம் பேறு.

குணமதி
02-07-2011, 01:08 AM
பேறுபெற்றார் தாய்த்தமிழ் பெற்றார் திருக்குறளும்
வேறுயார் பெற்றாரிப் பேறு.

M.Jagadeesan
02-07-2011, 10:39 AM
பேறுகளுள் எல்லாம் பெறர்கரிதே மக்களாகும்
வேறெதுவும் உண்டோ இணை.

கீதம்
03-07-2011, 01:42 AM
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். - என்பது குறள் (1079)

இதன் பொருள்:

பிறர் நன்றாக உடுப்பதையும் சுவையாக உண்பதையும் கீழ் குணமுடையவன்/ள் காணுமாயின், அவற்றைப் பொறாமல் அவரிடத்துக் குற்றமில்லாதிருக்கவும் ஒரு குற்றத்தைப் படைத்துக்கூற வல்லவன்/ள் ஆம் என்பதாகும்.

இக்குறளின் கருத்தையே யான் எழுதிய குறளில் கூறியிருக்கின்றேன்.

உண்டுடுத்தல் காணுங்கீழ் ஓரா வடுக்காணும்
கண்டறிஞர் கூறியதைக் காண்.

இதன் பொருள்:

பிறர் நன்றாக உடுப்பதையும் சுவையாக உண்பதையும் கீழ் குணமுடையவன்/ள் காணுமாயின், ஆராய்ந்துணராது அவற்றைப் பொறாமல் அவரிடத்துக் குற்றமில்லாதிருக்கவும் ஒரு குற்றத்தைப் படைத்துக்கூறும் என்று அறிஞர் ஆய்ந்தறிந்து கூறியதை உணர்க என்பதாகும்.

குறளறிமுகத்துக்கும் ஐயம் தெளிவித்ததற்கும் மிகவும் நன்றி குணமதி அவர்களே.

குணமதி
03-07-2011, 04:29 AM
பேறுகளுள் எல்லாம் பெறற்கரிதே மக்களாகும்
வேறெதுவும் உண்டோ இணை.

இணையிலா ஈகம் இயற்றியும் ஈழத்
தணையில் அழிவை அறி.

M.Jagadeesan
03-07-2011, 09:43 AM
அறியாதார் கண்ணும் உளதாம் அறிந்தார்க்கு
அச்சாணி அன்னதோர் சொல்.

குணமதி
04-07-2011, 08:34 AM
'சொல்'லென்றார், சொல்லதே சொன்னவர் யாரெனச்
சொல்லிற்றே சொல்லினொலிப் பால்.

M.Jagadeesan
05-07-2011, 05:42 AM
பாலுக்கு ஏங்கும் குழந்தை குறளின்முப்
பாலுக்கு ஏங்குகிறேன் நான்.

குணமதி
05-07-2011, 11:45 AM
நானென தென்னும் நனிதன் முனைப்பதூஉம்
போனதற வென்றே பொலி.

M.Jagadeesan
05-07-2011, 12:32 PM
பொலிவுடன் மின்னுகின்ற பொன் இரும்பின்
வலிமைக்கு ஈடாமோ காண்.

குணமதி
06-07-2011, 03:43 AM
பொலிவுடன் மின்னுகின்ற பொன் இரும்பின்
வலிமைக்கு ஈடாமோ காண்.

முதலடியில், பொலிவுடன் மின்னுகின்ற பொன்இரும்பின் - மூன்று சீர்களே உள்ளன. 'பொன்' - ஓரசையாக உள்ளதால் ஒரு சீராக இயலாததைக் காண்க. திருத்துக. நன்றி.

M.Jagadeesan
06-07-2011, 04:04 AM
பொலிவுடன் மின்னுகின்ற தங்கம் இரும்பின்
வலிமைக்கு ஈடாமோ காண்.

பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

குணமதி
07-07-2011, 07:32 AM
காண்பதே மெய்யா? கசடற நன்றுசாவி
யாண்டும் தெளிதல் அறிவு.

M.Jagadeesan
08-07-2011, 02:13 AM
அறிவே கடவுள் அறிவே உலகென்னும்
தேருக்கு அச்சாணி ஆம்.

குணமதி
08-07-2011, 08:22 AM
ஆமென ஒப்பினும் அஞ்சி மறுப்பினும்
போமோபோர்க் குற்றம் புகல்.

M.Jagadeesan
08-07-2011, 12:36 PM
புகலிடம் கொண்டவன் வீடு அதைஎன்றும்
நீங்காது நிற்றல் அழகு.

குணமதி
10-07-2011, 03:16 AM
புகலிடம் கொண்டவன் வீடு அதைஎன்றும்
நீங்காது நிற்றல் அழகு.

வீடு அதைஎன்றும் - என்றிருக்கும் மூன்றாம் சீரும் நான்காம் சீரும் சேர்த்தெழுதின்,
வீ டதையென்றும் - என்றாகும்; மூன்றாம் சீர் ஓரசையாகிவிடும்.
திருத்தும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி.

M.Jagadeesan
10-07-2011, 03:27 AM
வீடு அதைஎன்றும் - என்றிருக்கும் மூன்றாம் சீரும் நான்காம் சீரும் சேர்த்தெழுதின்,
வீ டதையென்றும் - என்றாகும்; மூன்றாம் சீர் ஓரசையாகிவிடும்.
திருத்தும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி.

புகலிடம் கொண்டவன் வீடதை என்றும்
நீங்காது நிற்றல் அழகு.

குணமதி
10-07-2011, 04:44 PM
புகலிடம் கொண்டவன் வீடதை என்றும்
நீங்காது நிற்றல் அழகு.

மா முன் நேர் உள்ளது. திருத்துக.

தொடரும் அடுத்த குறள்:

குற்றம் உணர்ந்துக் குறுகித் திருந்துநர்
உற்றநல் மாந்தர் உரை.

M.Jagadeesan
11-07-2011, 09:15 AM
மா முன் நேர் உள்ளது. திருத்துக.

தொடரும் அடுத்த குறள்:

குற்றம் உணர்ந்துக் குறுகித் திருந்துநர்
உற்றநல் மாந்தர் உரை.

புகலிடம் கொண்டவன் வீடதை எப்போதும்
நீங்காது நிற்றல் அழகு.

குணமதி
11-07-2011, 11:47 PM
புகலிடம் கொண்டவன் வீடதை எப்போதும்
நீங்காது நிற்றல் அழகு.

குற்றம் உணர்ந்துக் குறுகித் திருந்துநர்
உற்றநல் மாந்தர் உரை.

M.Jagadeesan
12-07-2011, 02:21 PM
உற்றநல் மாந்தர் உரைத்த உரையெல்லாம்
கற்றுணர்தல் நன்றென் றறி.

குணமதி
13-07-2011, 10:01 AM
அறிய அறிய அறியாமை கண்டே
நெறிநின்று வாழ்வது நேர்.

M.Jagadeesan
15-07-2011, 02:24 AM
நேர்மையும் உண்மையும் நெஞ்சிலே கொண்டிங்கு
ஊர்மெச்ச வாழ்வீர் உயர்ந்து.

குணமதி
17-07-2011, 03:47 AM
துள்ளித் திரிந்தவப் பள்ளிப் பருவத்தை
உள்ளிடின் ஊறும் உவப்பு.

M.Jagadeesan
18-07-2011, 06:26 AM
உவப்பிலே துள்ளுவதும் துன்பத்தில் சோர்தலும்
கொள்ளார் அறிவுடையார் காண்.

குணமதி
19-07-2011, 12:00 PM
காணற் கரியதோர் காட்சி கவினழகில்
பூணும்வான் வில்லாம் புகல்.

M.Jagadeesan
19-07-2011, 12:29 PM
கல்மேல் பொறித்த எழுத்தாம் அறிவுடையார்
சொல்லிய சொல்லென்று சொல்.

innamburan
19-07-2011, 08:19 PM
காலையிலே கஞ்சி தண்ணி. அதி
காலையிலே காபித்தண்ணி.

innamburan
19-07-2011, 08:22 PM
'காலையிலே கஞ்சி தண்ணி. அதி
காலையிலே காபித்தண்ணி.'
=> ரத்து
பதிலாக:

சொல்லி திரிவதெல்லாம் பொய்யுமல்ல.
அல்லித்தண்டெல்லாம் தாமரையும் அல்ல.

M.Jagadeesan
20-07-2011, 01:20 PM
'காலையிலே கஞ்சி தண்ணி. அதி
காலையிலே காபித்தண்ணி.'
=> ரத்து
பதிலாக:

சொல்லி திரிவதெல்லாம் பொய்யுமல்ல.
அல்லித்தண்டெல்லாம் தாமரையும் அல்ல.


Innamburan அவர்களே! தங்களுடைய ஆர்வம் பாராட்டத்தக்கது. இந்தத் திரியை முதலில் இருந்து படித்துப் பாருங்கள். குறளின் யாப்பிலக்கணம் நன்கு விளங்கும். அதன்பிறகு தங்களுடைய படைப்புகளைத் தாருங்கள்.
நன்றி!

குணமதி
21-07-2011, 01:02 AM
இன்னம்பூரர்க்கு,

மரபுவழி குறள் எழுதும் பகுதி இது.
உங்கள் குறட்பாவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
நன்றி.

குணமதி
21-07-2011, 01:12 AM
கல்மேல் பொறித்த எழுத்தாம் அறிவுடையார்
சொல்லிய சொல்லென்று சொல்.

சொல்லாத தில்லையே சொல்லில்இஞ் ஞாலத்தே
நில்லுங் கருத்தே நிவப்பு.

M.Jagadeesan
21-07-2011, 01:46 AM
புதுமைக்கு ஆதரவு நல்குவீர் என்றும்
பழமை மறவாது போற்று.

குணமதி
21-07-2011, 08:18 AM
போற்றலும் தூற்றலும் போக்கி அவரவரும்
ஏற்றபணி ஆற்றல் சிறப்பு.

M.Jagadeesan
21-07-2011, 10:15 AM
சிறப்பெல்லாம் செல்வர்க்கே சொந்தமல்ல மான்விழியாய்
சேற்றிலும் தாமரைகள் உண்டு.

குணமதி
22-07-2011, 04:05 AM
உண்டுண்டு பாலையிலும் ஊற்றுநீர் ஓர்கசிவும்
கண்டிலமே வன்னெஞ்சர் கண்.

கீதம்
28-07-2011, 03:07 AM
வன்னெஞ்சர் கண்ணூறும் தீஞ்சொற்கள் யாவுமே
நன்னஞ்சா மென்றெண்ணி விலக்கு.

M.Jagadeesan
28-07-2011, 06:33 AM
வன்னெஞ்சர் கண்ணூறும் தீஞ்சொற்கள் யாவுமே
நன்னஞ்சா மென்றெண்ணி விலக்கு.


இறுதிச்சீர் நேர் அல்லது நேர்பு அசையில் முடியவேண்டும். கவனிக்கவும்.

கீதம்
28-07-2011, 06:59 AM
வன்னெஞ்சர் கண்ணூறும் தீஞ்சொற்கள் யாவுமே
நன்னஞ்சா மென்றெண்ணி விலக்கு.


இறுதிச்சீர் நேர் அல்லது நேர்பு அசையில் முடியவேண்டும். கவனிக்கவும்.

சுட்டியதற்கு நன்றி ஐயா.

திருத்தியுள்ளேன், சரியா என்று கூறுங்கள்.

வன்னெஞ்சர் கண்ணூறும் தீஞ்சொற்கள் யாவுமே
நன்னஞ்சா மென்று விலக்கு.

M.Jagadeesan
28-07-2011, 07:39 AM
திருத்தியமைக்கு நன்றி!

M.Jagadeesan
29-07-2011, 03:06 AM
விலக்குக தீநட்பை நல்லோர் தொடர்பு
நலம்பயக்கும் என்றே நவில்.

குணமதி
02-08-2011, 08:50 AM
நவில்தொறும் நூல்கள் நனியுரைக்கும் காக்கப்
பயில்தொறும் நல்லறம் பண்பு.

M.Jagadeesan
05-08-2011, 12:38 AM
புன்மை தவிர்த்திடுக நம்மை வெறுப்போர்க்கும்
நன்மையே செய்வோம் நயந்து.

குணமதி
05-08-2011, 03:25 AM
துடிப்பும் துணிவும் துவளா உளமும்
முடிக்கும் வினையை முனை.

M.Jagadeesan
06-08-2011, 12:24 PM
முனைந்து வினையாற்ற வெற்றி உனைத்தேடி
நித்தமும் வந்திடும் காண்.

குணமதி
07-08-2011, 02:23 AM
வந்திடுங்காண் வாழ்வு வளநலந் தோயவே
முந்தி முனைந்துழைக்க மூளு.

M.Jagadeesan
11-08-2011, 12:52 AM
மூள்க பகுத்தறிவுத் தீஎங்கும் அத்தீயில்
மாள்க மடமைகள் வெந்து.

குணமதி
11-08-2011, 12:04 PM
வெந்தான் தமிழ்போற்றி வேந்தனவன் நந்தியென்பர்
எந்தவகைப் பற்றோ இது.

M.Jagadeesan
19-08-2011, 04:54 PM
இதுமுறையோ நீதியோ தெள்ளுதமிழ் வள்ளுவனின்
சின்னம் மறைத்த செயல்.

குணமதி
20-08-2011, 01:49 AM
செயலென்ற சொல்லே சிறப்பென்றார் பேச்சில்
மயங்கா தியங்குதல் மாண்பு.

M.Jagadeesan
27-08-2011, 03:24 AM
மாண்புடைய மக்களைப் பெற்றவர் இல்லத்தில்
யாண்டும் மகிழ்வே அறி.

குணமதி
27-08-2011, 06:28 AM
அறிந்திருந்தும் தன்னலத்தால் ஆழழிவுக் கேகும்
செறிசிறுமை மாந்தர் பதர்.

கீதம்
27-08-2011, 11:21 PM
பதரெனத் தூற்றப் படுவார் அவைமுன்
உளறித் திரியுமுன்மத் தர்.

M.Jagadeesan
28-08-2011, 01:25 AM
உன்மத்தர் ஏற்றமும் நன்மனத்தர் தாழ்வும்
நினைக்குங்கால் நெஞ்சில் வலி.

குணமதி
28-08-2011, 04:29 AM
வலிவு நிலையென்றே வாழ்நெறி மீறல்
நலிவளித்து வீழ்த்தும் நக.

M.Jagadeesan
29-08-2011, 01:58 AM
நகத்தின் நிறமோ பவளம் அவள்முகமோ
காலையில் பூத்த மலர்.

கலைவேந்தன்
29-08-2011, 03:59 AM
மலரன்ன ஒர்முக மென்மனம் ஈர்த்தே
அலரவைத் திட்டதோர் முள்.

கீதம்
30-08-2011, 02:11 AM
மலரன்ன ஒர்முக மென்மனம் ஈர்த்தே
அலரவைத் திட்டதோர் முள்.

அலரவைத்ததா? அலறவைத்ததா? விளங்கவில்லையே...:confused:

கலைவேந்தன்
30-08-2011, 05:16 AM
அலர வைத்தது. அதாவது தெளிவு பெற வைத்தது.

முகத்தைப் பார்த்து மலர் என்று எண்ணி ஈர்க்கப்பட்ட மென்மையான மனமானது தெளிவினைப்பெற அம்மலரில் இருந்த ஒரு முள் உதவியது என்று பொருள் படும்படி எழுதி இருக்கிறேன்..!

நன்றி கீதம்..!

குணமதி
01-09-2011, 02:10 AM
வருக, வருக கலைவேந்தனாரே!
யாப்பறிந்தார் வருகை மகிழ்வளிக்கின்றது.

///மலரன்ன ஒர்முக மென்மனம் ஈர்த்தே
அலரவைத் திட்டதோர் முள். ///

முள்மலர் கள்ளி முழுநிலவு காருவா
அள்ளும் அழகென் றறை.

M.Jagadeesan
01-09-2011, 03:01 AM
அறைகூவல் செய்கின்றேன் மாநிலத்தீர் நெஞ்சில்
கறையில்லா மானிடரைக் காட்டு.

குணமதி
02-09-2011, 11:31 AM
காட்டும் விளக்கமும் கற்ப தெளிதாக்கும்
கூட்டும் தெளிவெனக் கூறு.

M.Jagadeesan
02-09-2011, 12:06 PM
கூறுக நம்மொழி தேனினும் நன்றென
தேறுக அம்மொழியைக் கற்று.

குணமதி
03-09-2011, 02:20 AM
கற்றும் உரைத்தும் கசடகற்றார் வாழ்க்கை
முற்றும் பதரா முணர்.

M.Jagadeesan
03-09-2011, 04:42 AM
உணர்வும் உயிரும் கலந்தற்றே அன்னை
அணைப்பில் பருகிய பால்.

குணமதி
03-09-2011, 05:38 PM
பால்வேறு பாடுசரி பாதி பெறத்தடையா?
ஏல்மனமிங் கில்லாத தேன்?

M.Jagadeesan
04-09-2011, 06:07 AM
தேனென்றும் பாலென்றும் கன்னலென்றும் சொல்லுவர்
மான்விழியார் வாயின் அமிழ்து.

கலைவேந்தன்
04-09-2011, 07:30 AM
அமிழ்தினு மேவிய தாமவள் செவ்வாய்
தமிழவள கூறிடுங் கால்.

M.Jagadeesan
04-09-2011, 08:02 AM
காலெல்லாம் காலல்ல மற்றவர் நன்மைக்காய்
நாளெல்லாம் ஓடுவதே கால்.

கலைவேந்தன்
04-09-2011, 08:55 AM
காலன் கணக்கினை யாரறி வார்மிகச்
சீலனும் காணுமவ் வூழ்.

M.Jagadeesan
04-09-2011, 03:27 PM
ஊழினை வெல்வதரி தென்பார் மடியுடையோர்
அவ்வூழை வெல்வாரும் உண்டு.

குணமதி
05-09-2011, 03:03 AM
உண்டோ இலையோ உருவிலையோ நெஞ்சிற்கே
உண்மையாய் வாழ்தல் உயர்வு.

M.Jagadeesan
05-09-2011, 03:50 AM
உயர்வோ சரிவோ பழங்கூழோ கஞ்சியோ
உண்மையே என்றும் உரை.

கலைவேந்தன்
05-09-2011, 06:07 AM
உரைத்தது சீர்மிகின் பேர்வரும் தீய
துரைத்திடின் மானம் கெடும்.

M.Jagadeesan
05-09-2011, 06:52 AM
கெடுமதி வேண்டற்க அம்மதி உன்னைக்
கடுநரகில் தள்ளும் அறி.

கீதம்
06-09-2011, 04:36 AM
இரண்டு நாட்களில் ஈரைந்து குறள்கள்! குணமதி அவர்கள் ஏற்றிய தீபத்தில் எண்ணெயிட வந்தார் ஜகதீசன் அவர்கள். இருவரின் இருப்பால் இனிதே ஒளிர்ந்துகொண்டிருந்த இத்திரி, கலைவேந்தனின் வருகையால் களைகட்டி நிற்கிறது. மூவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

குணமதி
06-09-2011, 04:09 PM
இரண்டு நாட்களில் ஈரைந்து குறள்கள்! குணமதி அவர்கள் ஏற்றிய தீபத்தில் எண்ணெயிட வந்தார் ஜகதீசன் அவர்கள். இருவரின் இருப்பால் இனிதே ஒளிர்ந்துகொண்டிருந்த இத்திரி, கலைவேந்தனின் வருகையால் களைகட்டி நிற்கிறது. மூவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.


கெடுமதி வேண்டற்க அம்மதி உன்னைக்
கடுநரகில் தள்ளும் அறி.

அறிந்துணர்ந்து பாராட்டும் அம்மையார்க் கெங்கள்
செறிநன்றிச் சேருமெனச் செப்பு.

M.Jagadeesan
07-09-2011, 01:08 AM
செப்பின் கலப்பால் மிளிரும் நகைபோல
கொப்புடைய பெண்டிர் துணை.

குணமதி
07-09-2011, 10:35 AM
பெண்டிர் துணைநலம் பெற்றவர் வாழ்வினில்
கண்டிப்பாய் வென்றிடுவார் காண்.

கீதம்
11-09-2011, 12:32 AM
காண்பதெலாம் மெய்யென்றும் காணா விடிற்பொய்யென்
றுந்தூற்றல் பேதைமை காண்.

M.Jagadeesan
12-09-2011, 01:17 AM
காண்பவர் பித்தனென ஏசுகிறார் உன்னுடைய
மான்விழியால் தாக்குண்டேன் யான்.

குணமதி
13-09-2011, 04:28 AM
யானென தென்கின்ற எண்ணம் அகற்றலே
ஞானத்திற் குய்த்திடுமாம் நன்று.

M.Jagadeesan
14-09-2011, 11:31 AM
நன்றே நினைந்து நன்றே புரிவார்க்கு
என்றும் இறையருள் உண்டு.

குணமதி
15-09-2011, 04:13 AM
உண்டுடுத் தூர்திரிதல் ஒன்றேவாழ் வென்றிருப்பார்க்
குண்டுகொல் மாந்த உணர்வு?

M.Jagadeesan
18-09-2011, 01:33 PM
உணர்வாக என்னுள் இயங்கும் தமிழே
பிணமாவேன் நீயின்றி நான்.

குணமதி
19-09-2011, 03:42 AM
நீயின்றி நானா? நினைக்க நடுங்குகிறேன்
போயினையேல் பொன்றும் உயிர்.

M.Jagadeesan
20-09-2011, 03:45 AM
உயிருண்ணும் கூற்று வரினும் தமிழ்ப்
பயிருக்கு வேராய் இரு.

குணமதி
20-09-2011, 04:24 AM
இருந்தோம் இயன்றவரை எல்லார்க்கும் துன்பில்
மருந்தானோம் என்றல் மகிழ்வு.

M.Jagadeesan
20-09-2011, 10:13 AM
மகிழ்க பிறரை மகிழ்வி இதுவே
அகிலத்தார் கண்ட நெறி.

குணமதி
21-09-2011, 01:13 AM
இனிதையும் இன்னா ததையும் இயல்பாய்
உனியேற்பர் சான்றோர் உறின்.

M.Jagadeesan
21-09-2011, 02:55 AM
உறியேறி வெண்ணெய் திருடிய கள்வன்
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

குணமதி
21-09-2011, 10:56 AM
வாழ்வா ரெனப்படுவார் வாரம் மிகதிகழ்வார்
ஆழ்ந்தறிந்தார் கூறல் அறி.

(வாரம் = அன்பு)

M.Jagadeesan
21-09-2011, 11:40 AM
அறிவும் திருவும் ஒருங்கே அமைதல்
இறைவன் திருவருள் ஆம்.

குணமதி
23-09-2011, 01:14 AM
ஆமாமாம் என்றே அனைத்தையும் ஒப்பிடுவார்
ஏமாறல் எங்கும் எளிது.

M.Jagadeesan
26-09-2011, 03:58 AM
எளியரென யாரையும் எள்ளற்க குன்றும்
உளியால் தகருமே காண்.

குணமதி
26-09-2011, 10:55 AM
காணிற் களிப்பில் கழிமிகத் தோய்வாள்
கோணியிதழ் எள்ளல் குறும்பு.

M.Jagadeesan
26-09-2011, 12:25 PM
குறும்பு இழைக்கும் குழந்தையெனும் பேற்றைப்
பெறுவதே இல்லறத்தின் மாண்பு.

குணமதி
28-09-2011, 03:14 AM
உன்னால் இயல்வ துலகுக் களிப்பதுயர்
தொண்டென்றார் தோயத் துணி.

M.Jagadeesan
29-09-2011, 10:14 AM
துணிவைத் துணையாகக் கொண்டோர்க்கு உண்டோ
அணிவகுத்து வாட்டும் இடர்.

குணமதி
30-09-2011, 02:15 AM
துணிவைத் துணையாகக் கொண்டோர்க்கு உண்டோ
அணிவகுத்து வாட்டும் இடர்.

கொண்டோர்க்கு உண்டோ - சேர்த்தெழுதினால் 'கொண்டோர்க் குண்டோ' என ஆகும்: தளை தவறாகும். திருத்தும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.

M.Jagadeesan
30-09-2011, 02:59 AM
துணிவைத் துணையாகக் கொண்டவர்க் குண்டோ
அணிவகுத்து வாட்டும் இடர்.

குணமதி
01-10-2011, 03:03 AM
இடரிடையூ ரின்னற் கிடைமுறியாத் திட்பத்
தொடர்வினை வெற்றி தொடும்.

M.Jagadeesan
01-10-2011, 04:41 AM
தொடும்தோறும் சுட்டெரிக்கும் தீயைப்போல் உன்னை
விடும்தோறும் வாட்டும் நினைவு.

குணமதி
02-10-2011, 11:10 AM
நினைவால் மகிழ்வுடன் நீள்தொடராய்த் தாக்கும்
இனைவும் தருகின்றாய் ஏன்?

M.Jagadeesan
03-10-2011, 01:54 AM
ஏனென்ற கேள்வி உனக்குள் எழுமாயின்
வானமும் உன்வசம் ஆம்.

குணமதி
03-10-2011, 12:43 PM
ஆமென்றே ஒப்பல் அனைத்தையும் நாமெளிதில்
ஏமாற வைத்திடும் ஏது.

M.Jagadeesan
07-10-2011, 04:50 AM
ஏதுக்குப் பேராசை மானிடர்காள் போதுமென்ற
நல்மனமே பொன்செய் மருந்து.

vseenu
07-10-2011, 08:36 AM
இது இருந்தா தான் உலகத்தில பிரச்சனையே இல்லையே. பகிர்வுக்கு நன்றி.

குணமதி
08-10-2011, 03:25 AM
இது இருந்தா தான் உலகத்தில பிரச்சனையே இல்லையே. பகிர்வுக்கு நன்றி.

கருத்துரைக்கு நன்றி ஐயா.


ஏதுக்குப் பேராசை மானிடர்காள் போதுமென்ற
நல்மனமே பொன்செய் மருந்து.

துன்பத்தும் துவளாத் துணிவும் தொய்விலா
வென்வினையும் வேண்டும் விழை.

M.Jagadeesan
08-10-2011, 04:16 AM
விழைதலும் செல்விருந்து பேணலும் காதில்
குழையணிந்த பெண்டிர்க் கழகு..

குணமதி
09-10-2011, 10:46 AM
குழைவும் குனிவும் குறிக்கோளில் போக்கும்
விழைவாம் இழிவாழ்வை வேட்டு.

M.Jagadeesan
09-10-2011, 12:25 PM
வேட்டுக என்றும் புதுமையை வாழ்க்கையில்
நாட்டுக வெற்றியை ஆய்ந்து.

குணமதி
10-10-2011, 03:42 AM
ஆய்ந்தான் அறிந்தான் அதன்பின்னும் தேரானேல்
ஓய்ந்தொழியும் பேதை உணர்.

M.Jagadeesan
12-10-2011, 01:48 AM
உணர்வற்ற பிண்டமாய் வாழ்தலினும் செத்துப்
பிணமாய்க் கிடப்பதே மேல்.

குணமதி
12-10-2011, 03:17 AM
மேல்கீ ழெனப்பிரித்தார் மேலிருக்க வஞ்சகமாய்
நூல்மனுவில் நுட்பம் நுழைத்து.

M.Jagadeesan
15-10-2011, 06:00 AM
நுழைத்தது ஏதும் நிலைக்காது யாரும்
உழைக்காது உண்பது தீது.

குணமதி
15-10-2011, 09:07 AM
தீதையும் நன்றையும் தேர்வது நம்வினையால்
யாதொன்றும் ஆய்ந்தே இயற்று.

M.Jagadeesan
15-10-2011, 04:31 PM
இயற்கையின் மிக்கது உண்டோ முயன்றால்
இயற்கையும் உன்னைத் தொழும்.

குணமதி
15-10-2011, 04:58 PM
தொழுங்கையுள் குண்டும் தொகவழிக்கத் தூங்கும்
முழுக்கவனத் தோடொன்னார் மோது.

M.Jagadeesan
18-10-2011, 01:08 AM
மோதும் அலைகளைப்போல் வாழ்க்கையில் இன்பதுன்பம்
தொய்வின்றி நித்தம் வரும்.

குணமதி
18-10-2011, 01:20 AM
வருமின்ப துன்பமெலாம் வாழ்க்கையின் கூறாம்
வருந்தல் மகிழ்தலுமவ் வாறு.

M.Jagadeesan
24-10-2011, 05:50 AM
ஆறெனவே செல்வம் அணிதிரண்டு வந்தாலும்
மாறாத உள்ளமே மாண்பு.

குணமதி
24-10-2011, 11:43 AM
புன்னகையும் நல்லியல்பும் பூத்தவர் எல்லார்க்கும்
இன்னினியர் ஆதல் இயல்பு.

M.Jagadeesan
24-10-2011, 12:32 PM
இயல்பாகும் சான்றோர்க்கு நல்லொழுக்கம் என்றும்
செயலொன்றே சீர்மை தரும்.

குணமதி
25-10-2011, 03:37 AM
தரும்பொருளால் வாழ்வதுவும் தன்மான வாழ்வோ
அருமுழைப்பில் வாழ்தல் அறம்.

M.Jagadeesan
25-10-2011, 03:46 AM
அறம்பொருள் இன்பம் உரைத்த குரிசில்
திறம்கண்டு போற்றல் கடன்.

குணமதி
25-10-2011, 11:39 AM
கடனென்ப யார்க்கும் கனிவன்பின் ஈன்றோர்
இடர்நீக்கிப் பேணல் இனிது.

M.Jagadeesan
26-10-2011, 12:49 AM
இனிதாகும் இல்லறம் நற்றுணைவி இன்றேல்
தனியே இருத்தல் நலம்.

குணமதி
26-10-2011, 05:08 AM
நலம்விளையும் கோவிலுக்கோர் நல்விளக்கு மாட்டின்
பொலம்பொருளும் சேருமெனல் பொய்.

M.Jagadeesan
28-10-2011, 01:32 AM
பொய்யென்று சொல்லற்க மக்களின் நம்பிக்கை
அண்ணா மலைதீபம் காண்.

குணமதி
28-10-2011, 02:24 AM
காண்வணிகப் பந்தம் கடவுள் தொடர்பாமோ?
ஈண்டுதுளிக்(கு) ஈட்ட பெரிது.

M.Jagadeesan
28-10-2011, 04:34 AM
பெரிதென எண்ணி மலையற்க ஊக்கத்தால்
மாமலையும் தூளாகும் நம்பு.

குணமதி
28-10-2011, 10:05 AM
புத்துணர்வும் நல்லுளமும் பூக்குமேல் எந்நாளும்
ஒத்துவரும் வெற்றியென ஓது.

M.Jagadeesan
28-10-2011, 02:06 PM
ஓதுக வள்ளுவரின் நற்குறளை நாடோறும்
தீதகற்றி நன்மை தரும்.

குணமதி
28-10-2011, 03:35 PM
தரும்பொருளும் தாழ்வும் தகவில் நடிப்பும்
அரும்பெறல்ஒப் போலைக்(கு) அறி.

(ஒப்போலை = VOTE)

M.Jagadeesan
29-10-2011, 02:09 AM
அறிந்தோம் அனைத்துமென எண்ணற்க இவ்வுலகில்
கற்றதெல்லாம் கண்ணீர்த் துளி.

குணமதி
29-10-2011, 03:22 PM
துளியே பலசேர்ந்தால் துட்குறு வெள்ளம்
தெளிமாந்தர் ஒன்றிணையின் சேர்ந்து.

M.Jagadeesan
29-10-2011, 04:41 PM
சேர்ந்திழுத்தால் தேர்நகரும் என்பதுபோல் எல்லோரும்
ஒற்றுமையாய் பாடுபடல் நன்று.

குணமதி
30-10-2011, 03:52 AM
நன்று விளைவதும் நம்மால்தான் தீதுமென
அன்றுரைத்த உண்மை அறி.

M.Jagadeesan
31-10-2011, 12:42 AM
அறிந்தோர்கண் தோன்றும் அறியாமை வானூர்
மதியின்கண் காணும் மறு.

குணமதி
31-10-2011, 04:15 AM
மறுப்பும் மனமொப்பும் மாசிலா அன்பின்
உறுப்பாம் உலகத் துரை.

M.Jagadeesan
31-10-2011, 04:36 AM
உரைநூல் அனைத்தும் பரிமேல் அழகனின்
நல்லுரைக்கு ஈடோ தெளி.

குணமதி
31-10-2011, 04:52 AM
தெளிந்தார் தொடர்பும் தெளிதமிழ்த் தோய்வும்
அளிகளிப் பீடில் லறை.

M.Jagadeesan
31-10-2011, 06:27 AM
அறைந்தார்க்கு மற்றொரு கன்னம் கொடுத்தல்
மறைதந்த மாமன்னன் வாக்கு.

குணமதி
31-10-2011, 11:09 AM
அறைந்தார்க்கு மற்றொரு கன்னமும் கொடுத்தல்
மறைதந்த மாமன்னன் வாக்கு.

கன்னமும் கொடுத்தல் - விளம் முன் நிரை யாக உள்ளது. திருத்துக.

M.Jagadeesan
01-11-2011, 06:03 AM
கன்னமும் கொடுத்தல் - விளம் முன் நிரை யாக உள்ளது. திருத்துக.


அறைந்தார்க்கு மற்றொரு கன்னம் கொடுத்தல்
மறைதந்த மாமன்னன் வாக்கு.

குணமதி
01-11-2011, 11:58 AM
குளிர்மழை வீட்டில் குழந்தைகளின் ஆட்டம்
களிப்பளிக்கும் காலமிதே காண்.

M.Jagadeesan
03-11-2011, 02:21 AM
காண்பதுவும் கேட்பதுவும் அற்றார்க் குதவுதல்
மாண்புடைய மக்கள் கடன்.

குணமதி
03-11-2011, 03:14 AM
மாண்புடைய மக்கள் கடன்மறந்தார் ஆள்வாரும்
தூண்ஊழற் கென்னே துயர்!

M.Jagadeesan
03-11-2011, 03:47 AM
துயரமெல்லாம் நில்லாது ஓடிவிடும் நெஞ்சில்
முயற்சியென ஒன்றிருந்தக் கால்.

குணமதி
03-11-2011, 08:27 AM
காற்கடுகிச் சூறையிடும் காரி மிகப்பொழியும்
சீற்றமியற் கைக்கெனவே செப்பு.

M.Jagadeesan
03-11-2011, 09:40 AM
செப்புமொழி எல்லாமே செந்தமிழுக் கொப்பாமோ
இப்புவியில் இல்லையெனக் கூறு.

குணமதி
03-11-2011, 04:04 PM
கூறுகூ றாக்கிக் கொடுங்கொடுமை ஈழத்தே
ஊறுதணிப் பாருண்டோ உன்னு.

M.Jagadeesan
04-11-2011, 12:20 AM
உன்னுங்கால் நெஞ்சம் கொதிக்குதே தென்னிலங்கை
ஆளும் மகிந்தனைக் கண்டு.

குணமதி
04-11-2011, 03:53 AM
கண்டதுமே நெஞ்சம் கவர்ந்தவள் கெண்டைவிழி
தண்டலில் கொல்லுமுயிர் தாக்கு.

M.Jagadeesan
04-11-2011, 04:10 AM
தாக்கினாலும் தாங்கலாம் மற்றொருவர் கோபித்து
நாக்கினால் திட்டா வரை.

குணமதி
04-11-2011, 06:14 AM
வரையறிந்த வாழ்வு வருந்தீங்கை நீக்கும்
கரையறிந்து சேரும் கலம்.

M.Jagadeesan
04-11-2011, 07:29 AM
கலம்மூழ்கிப் பேரிழப்பு வந்தாலும் என்றும்
கலங்காத நெஞ்சம் பெறு.

குணமதி
04-11-2011, 11:17 AM
பெறுதலிலை ஈதல் பெருமைதரும் வாழ்க்கை
இறுதிவரை ஏந்தும் இசை.

M.Jagadeesan
04-11-2011, 12:57 PM
இசையுடன் வாழ்தலைக் கொள்மின் வசைவரின்
அன்றே உயிர்விடுதல் நன்று.

குணமதி
05-11-2011, 02:24 AM
நன்றதும் அல்லதும் நம்மால் விளைபவே
என்றுறென்றும் நன்றாற்ற எண்ணு.

M.Jagadeesan
05-11-2011, 03:31 AM
எண்ணுக ஏழையரை சோறு ஒருபிடி
உண்ணக் கொடுத்தல் நலம்.

குணமதி
05-11-2011, 11:36 AM
கொடுத்தல் நலமேயாம் கூனிப் பெறுதல்
எடுத்த பிறவிக் கிழிவு.

M.Jagadeesan
05-11-2011, 01:51 PM
இழிவல்ல ஏற்பது வள்ளுவர் யாத்த
இரவதி காரத்தைக் காண்.

குணமதி
06-11-2011, 01:41 AM
காணின் இயலாரை காக்கும் உறுப்பிலரைப்
பேணிடற் கேஇரவாம் பேசு.

பேசுவார் மற்றவர்க்கே பேரிர வச்சம்
ஆசற் றிரவுக்(கு) அடுத்து.

M.Jagadeesan
06-11-2011, 06:53 AM
அடுத்தடுத்துத் துன்பங்கள் சேர்ந்து வரினும்
எடுத்த கருமம் முடி.

குணமதி
06-11-2011, 03:43 PM
முடிவுபயன் தேர்ந்து முயற்சியள வாய்ந்து
ஒடியா திடையில் உழை.

M.Jagadeesan
08-11-2011, 12:33 AM
உழைப்பவர்க்கே இவ்வுலகம் சொந்தம் பிறர்தம்மை
ஏமாற்று வோர்க்கில்லை வாழ்வு.

குணமதி
08-11-2011, 02:43 AM
வாழ்வழிபல் பாழ்செய்யும் வல்லவணுக் கேட்டுலையேன்
சூழ்தீங் கறிந்துணர்ந்தும் சூது.

M.Jagadeesan
08-11-2011, 05:56 AM
சூதினையும் மேனிமினுக்கி நம்பொருள் நாடுகின்ற
மாதரையும் தீண்டாமை நன்று.

குணமதி
08-11-2011, 09:52 AM
நன்றெண்ணி நன்மையே நன்காற்றின் பார்தொழபேர்
நின்று நிலைக்குமிதே நேர்வு.

கீதம்
08-11-2011, 07:49 PM
வாழ்வழிபல் பாழ்செய்யும் வல்லவணுக் கேட்டுலையேன்
சூழ்தீங் கறிந்துணர்ந்தும் சூது.

இக்குறளின் பொருள் விளக்குமாறு வேண்டுகிறேன் ஐயா.

குணமதி
09-11-2011, 01:50 AM
இக்குறளின் பொருள் விளக்குமாறு வேண்டுகிறேன் ஐயா.

வாழ்வழிபல் பாழ்செய்யும் வல்லவணுக் கேட்டுலையேன்
சூழ்தீங் கறிந்துணர்ந்தும் சூது.

இக்குறளைக் கீழ்க்காணுமாறு பிரித்துப் படித்தால் பொருள்கொள்ளல் எளிது.

வாழ்வு அழி பல் பாழ் செய்யும் வல்ல அணுக் கேட்டு உலை ஏன்?
சூழ் தீங்கு அறிந்திருந்தும் சூது.

வாழ்வை அழிக்கின்ற பலவகைக் கெடுதிகளையும் செய்யும் கேடான ஆற்றலுள்ள அணுஉலை ஏனோ? சூழவிருக்கும் (விளையவிருக்கும்) தீமைகளை அறிந்திருந்தும் அணுஉலையைக் கொண்டு வருவது சூதாக (வஞ்சகமாக) உள்ளது.

M.Jagadeesan
09-11-2011, 04:34 AM
நேர்வும் வளைவும் இயல்பாகும் வாழ்க்கையைத்
தேர்வுசெய்தல் மாந்தர் கடன்.

குணமதி
09-11-2011, 03:39 PM
கடன்பட்டும் கல்வி கனிந்தளித்தார் பெற்றோர்
திடத்தோடு பேணல் தெருள்வு.

M.Jagadeesan
10-11-2011, 09:19 AM
தெருளொடு செல்வம் கலந்தது போலும்
அருளொடு அன்பியைந்தக் கால்.

குணமதி
10-11-2011, 10:49 AM
காலிற் கழகு கடுகல் உதவுதற்காம்
ஆலிற் ககன்றநிழ லாம்.

M.Jagadeesan
10-11-2011, 12:55 PM
ஆமென்ற சொல்லே அனைத்தையும் ஆக்குமெனில்
ஓமென்ற சொல்லெதற்கு கூறு.

குணமதி
11-11-2011, 04:32 AM
கூறுகூ றாக்கிக் கொடுமைபல ஈழத்தில்
ஊறுநூ றுன்னா உலகு

M.Jagadeesan
12-11-2011, 12:02 AM
உலகின் இயக்கம் உயர்ந்தோர் மாட்டே
அலகைகள் ஓலம் தவிர்

குணமதி
12-11-2011, 04:08 AM
தவிர்த்திடு தீங்கு தமிழ்க்கு முயன்றே
குவித்திடு ஆக்கம் அதற்கு.

M.Jagadeesan
14-11-2011, 03:23 AM
குவித்திடும் செல்வத்தால் யாதுபயன் உந்தன்
குணத்தால் உனக்குப் புகழ்.

குணமதி
14-11-2011, 10:00 AM
புகழ்போற்றல் நோவ இகழ்ந்தெள்ளல் மாற்றா
திகழ்நெஞ்சம்`ஏந்தல் திறம்.

M.Jagadeesan
15-11-2011, 04:20 AM
திறமும் உரமும் உடையாரை எள்ளல்
புலியின்வால் தொட்டிழுத் தற்று.

குணமதி
15-11-2011, 10:18 AM
உண்மையுடன் நேர்மை உழைப்போ டுதவுமனம்
கொண்டாரே தெய்வமெனக் கூறு.

M.Jagadeesan
15-11-2011, 12:54 PM
கூறுக உண்மையை கூறுக இன்சொல்லை
வேறெதுவும் வேண்டாம் உயிர்க்கு.

குணமதி
16-11-2011, 03:45 AM
குற்றம் பொறுக்க! கொடிதாம் இரண்டகம்
முற்றும் ஒறுத்தல் முறை.

M.Jagadeesan
16-11-2011, 04:46 AM
முறையோடு இல்லறம் செய்க வளங்கள்
நிறைவாகும் வாழ்வில் நிதம்.

குணமதி
16-11-2011, 10:30 AM
தம்மரும் பெற்றோரைத் தாம்போற்றின் தாழ்வின்றித்
தம்மகவு போற்றும் தமை.

கீதம்
18-11-2011, 05:43 AM
வாழ்வழிபல் பாழ்செய்யும் வல்லவணுக் கேட்டுலையேன்
சூழ்தீங் கறிந்துணர்ந்தும் சூது.

இக்குறளைக் கீழ்க்காணுமாறு பிரித்துப் படித்தால் பொருள்கொள்ளல் எளிது.

வாழ்வு அழி பல் பாழ் செய்யும் வல்ல அணுக் கேட்டு உலை ஏன்?
சூழ் தீங்கு அறிந்திருந்தும் சூது.

வாழ்வை அழிக்கின்ற பலவகைக் கெடுதிகளையும் செய்யும் கேடான ஆற்றலுள்ள அணுஉலை ஏனோ? சூழவிருக்கும் (விளையவிருக்கும்) தீமைகளை அறிந்திருந்தும் அணுஉலையைக் கொண்டு வருவது சூதாக (வஞ்சகமாக) உள்ளது.

இப்போது புரிந்துகொண்டேன். மிகவும் நன்றி ஐயா.

M.Jagadeesan
18-11-2011, 10:06 PM
மையிருட்டுக் கூந்தல் மலர்முகம் மெல்லிய
கைவிரல்கள் காந்தள் மலர்.

குணமதி
20-11-2011, 10:18 AM
மலர்முகம் மான்விழி மாசிலா அனபில்
இலரொப் பிவளுக் கியம்பு.

M.Jagadeesan
21-11-2011, 03:57 AM
புருவமோ வில்கண்கள் வண்டையொக்கும் மற்று
உருவமோ ரம்பை அறி.

குணமதி
21-11-2011, 03:54 PM
அறிஞர் அணுவுலைக்கு ஆலவட்டம் காட்டல்
நெறியாமோ மக்களுயிர் நீப்பு?

M.Jagadeesan
21-11-2011, 11:20 PM
புரியாமல் பேசுகிறார் மின்சக்தி யின்றேல்
எரியுமா மின்விளக்கு இங்கு.

Dr.சுந்தரராஜ் தயாளன்
19-02-2012, 12:14 PM
இங்கு வருவது இன்பம் தருகிறது
தங்கு தடையிலைநீ தங்கு

M.Jagadeesan
19-02-2012, 01:36 PM
தங்கும் புகழுக்கு ஏங்கிடுக மற்றெல்லாம்
தங்காது நீங்குமே காண்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
20-02-2012, 03:19 AM
காண்பதும் பொய்யாகும் காட்டிடுவார் மெய்யாகும்
வீண்பழியே மிஞ்சுமெனும் போது

M.Jagadeesan
20-02-2012, 04:08 AM
போதுமென்ற உள்ளமே பொன்செய்யும் மாமருந்து
போதிமரம் சொன்னதே அன்று.

Dr.சுந்தரராஜ் தயாளன்
20-02-2012, 06:05 AM
அன்றுசொன்ன அம்மருந்தை அப்படியே ஆகடியம்
நன்றுசெய்வர் நம்தலைவர் இன்று

கீதம்
20-02-2012, 06:52 AM
இத்திரியை மீண்டும் மேலெழுப்பியதற்கு ஜகதீசன் ஐயாவுக்கும் Dr.சுந்தரராஜ் தயாளன்அவர்களுக்கும் நன்றி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
21-02-2012, 03:33 PM
இத்திரியை மீண்டும் மேலெழுப்பியதற்கு ஜகதீசன் ஐயாவுக்கும் Dr.சுந்தரராஜ் தயாளன்அவர்களுக்கும் நன்றி.

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் நான்செல்வேன் நன்கு

:):)

M.Jagadeesan
22-02-2012, 12:44 AM
இன்று நமதுள்ளம் பொங்கும் புதுவெள்ளம்
மன்றத்தின் பத்தாண்டு பார்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
22-02-2012, 01:09 AM
பத்தாண்டு பார்த்திடும் பன்மலராம் மன்றத்தின்
புத்தாண்டைப் போற்றினேன் யான்

:aktion033::aktion033::aktion033:

M.Jagadeesan
22-02-2012, 01:30 AM
யானெனது என்னும் செருக்கறுக்க அஃதொன்றே
வானுலகு செல்லும் வழி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
22-02-2012, 02:07 AM
செல்லும் வழியினிலே சேரிருக்கும் சோர்விருக்கும்
வெல்லுமோர் மேல்வழியே அஃது

susibala.k
22-02-2012, 03:01 AM
அஃதென்பது யாதெனின் முப்பொழுதும் முயற்சியே
உயிர் மூச்சாய்க் கொளல்

M.Jagadeesan
22-02-2012, 03:10 AM
சுசிபாலா அவர்களின் முயற்சிக்கு நன்றி. குறள்வெண்பா இலக்கணம் பயின்றபின் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும். மன்றத்தின் பழைய திரிகளைப் பார்க்கவும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
22-02-2012, 03:32 AM
அஃதென்பது யாதெனின் முப்பொழுதும் முயற்சியே
உயிர் மூச்சாய்க் கொளல்
சுசிபாலா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். குறள் வெண்பாவின் பொது இலக்கணத்தில் உங்கள் கவி வரவில்லை என்றாலும் "குறட்டாழிசை" என்று இதனைக் கொள்ளலாம். ஐயா கூறுவதைப்போல் வெண்பா திரிகள் இருந்தால் அதில் சற்று பயிற்சி செய்யுங்கள். ஒருவாரம், பத்து நாட்களுக்குள் நீங்கள் குறள் வெண்பா இயற்றி விடலாம் :)

susibala.k
22-02-2012, 08:35 AM
சுசிபாலா அவர்களின் முயற்சிக்கு நன்றி. குறள்வெண்பா இலக்கணம் பயின்றபின் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும். மன்றத்தின் பழைய திரிகளைப் பார்க்கவும்.

ஐயா அவர்களின் அறிவுரைக்கு நன்றி , முயற்சித்து விட்டுக் கூடிய விரைவில் திரும்பி வருகிறேன் .வாழ்த்துக்கள் !!!

susibala.k
22-02-2012, 08:41 AM
சுசிபாலா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். குறள் வெண்பாவின் பொது இலக்கணத்தில் உங்கள் கவி வரவில்லை என்றாலும் "குறட்டாழிசை" என்று இதனைக் கொள்ளலாம். ஐயா கூறுவதைப்போல் வெண்பா திரிகள் இருந்தால் அதில் சற்று பயிற்சி செய்யுங்கள். ஒருவாரம், பத்து நாட்களுக்குள் நீங்கள் குறள் வெண்பா இயற்றி விடலாம் :)

ஐயா அவர்களின் அறிவுரைக்கு நன்றி !! முறையான பயிற்சிக்குப் பின் வருகிறேன்.!!!!

M.Jagadeesan
23-02-2012, 12:42 AM
அதுவென்றும் இதுவென்றும் ஆயிரம்பேர் சொல்வார்
எதுவென்று ஆய்தல் கடன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
23-02-2012, 01:47 AM
கடன்பட்டு கஞ்சியும் இல்லா உழவர்
உடன்மரித்துப் போகின்றார் இன்று

Dr.சுந்தரராஜ் தயாளன்
23-02-2012, 02:03 AM
அதுவென்றும் இதுவென்றும் ஆயிரம்பேர் சொல்வார்
எதுவென்று ஆய்தல் கடன்.

தளை தட்டுகிறது, சரி செய்யுங்கள் ஐயா

M.Jagadeesan
23-02-2012, 02:19 AM
அதுவே சரியென்று ஆயிரம்பேர் சொல்வார்
எதுவென்று ஆய்தல் கடன்.

M.Jagadeesan
23-02-2012, 02:27 AM
இன்று வருமோ மறுநாள்தான் வந்திடுமோ
என்று வருமோஅக் கூற்று.

Dr.சுந்தரராஜ் தயாளன்
23-02-2012, 03:19 AM
அதுவே சரியென்று ஆயிரம்பேர் சொல்வார்
எதுவென்று ஆய்தல் கடன்.
மிகவும் அருமை ஐயா :)

Dr.சுந்தரராஜ் தயாளன்
23-02-2012, 03:21 AM
கூற்றுவன் வந்தும்மைக் கூட்டியே செல்லுமுன்
கூற்றிடும் கூற்றெல்லாம் கூறு

M.Jagadeesan
23-02-2012, 04:08 AM
கூறுவது நம்கடன் ஏற்பதும் தள்ளுவதும்
ஊரார் கடனென்று கொள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
23-02-2012, 05:50 AM
கொள்வதைக் கொள்ளுங்கள் கொள்ளாத தைத்தள்ளு
உள்ளத்தில் உள்ளதே உய்வு

M.Jagadeesan
23-02-2012, 06:12 AM
உய்வுண்டோ பொய்த்துறவு பூண்டு இழிசெயலைத்
தொய்வின்றி செய்யும் மகற்கு.

Dr.சுந்தரராஜ் தயாளன்
23-02-2012, 07:48 AM
மகற்கென நாம்செயும் மாண்பு முதியோர்
அகத்தில் அடங்கி விடல்

M.Jagadeesan
23-02-2012, 09:19 AM
அடங்கிவிடல் நன்றாகும் கொள்ளையர்க்கு மீறின்
தொடங்கிவிடும் அன்னார்தம் சாவு.

Dr.சுந்தரராஜ் தயாளன்
23-02-2012, 09:29 AM
சாவுக்கு அஞ்சியே சாமியிடம் வேண்டாமல்
நாவுக்குப் பூட்டிடுதல் நன்று

M.Jagadeesan
23-02-2012, 01:11 PM
சாவுக்கு அஞ்சியே சாமியிடம் வேண்டாமல்
நாவுக்குப் பூட்டிடுதல் நன்கு


நாவுக்குப் பூட்டிடுதல் நன்று

என இருப்பின் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.

Hega
23-02-2012, 02:19 PM
நல்லதொரு திரி இது..

இதோ என் முயற்சியாய் .. தவறெனில் திருத்துங்கள்.


நன்கு பழகினும் நல்லதல்லதை
நயத்துடன் விலக்கி் நீ செல்




இப்படி எழுதுவது சரியா ஐயா..

Dr.சுந்தரராஜ் தயாளன்
23-02-2012, 02:36 PM
நாவுக்குப் பூட்டிடுதல் நன்று

என இருப்பின் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
உண்மைதான்...நன்று என்பதே சிறப்பு...மாற்றிவிட்டேன் ஐயா :)

M.Jagadeesan
24-02-2012, 12:47 AM
நன்றுள்ளி நாம்செய்யும் ஒவ்வொன்றும் பின்நமக்கு
என்றுவரும் என்றெண்ணல் தீது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
24-02-2012, 05:52 AM
தீதுதரும் பீடி,சிகார் தீயகுடி சேர்த்துவிடும்
போதுவரும் பூர்ணநிம்ம தி

M.Jagadeesan
24-02-2012, 06:48 AM
தீதுதரும் பீடி,சிகார் தீயகுடி சேர்ந்துவிடும்
போதுவரும் பூர்ணநிம்ம தி

பீடி,சிகார்,குடி ஆகியவை நிம்மதி தரும் என்பது கருத்துப் பிழையல்லவா?சிந்திக்க வேண்டுகிறேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
24-02-2012, 08:03 AM
பீடி,சிகார்,குடி ஆகியவை நிம்மதி தரும் என்பது கருத்துப் பிழையல்லவா?சிந்திக்க வேண்டுகிறேன்.

தீதுதரும் பீடி,சிகார் தீயகுடி சேர்ந்து விடும்போது வரும் பூர்ண நிம்மதி என்று படியுங்கள் அய்யா, அப்போது கருத்துப் பிழை இல்லை அல்லவா?:)
சேர்ந்து என்பதை வேண்டுமானால் சேர்த்து என்று மாற்றிவிடுகிறேன் .

M.Jagadeesan
24-02-2012, 02:39 PM
இறுதிச் சீர் " மதி " என்று வருமாறு குறளை மாற்றி அமைக்கவும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
24-02-2012, 03:05 PM
இறுதிச் சீர் " மதி " என்று வருமாறு குறளை மாற்றி அமைக்கவும்.

சரி..அதுவும் சரியே...இதோ:

தீதுதரும் பீடி,சிகார் தீயகுடி சேர்த்துவிடும்
போது வரும்நிம் மதி

Dr.சுந்தரராஜ் தயாளன்
28-02-2012, 09:46 AM
மதியுடை நற்பெரியோர் மாண்புமிகு அய்யா (jagadeesan)
எதனால்விட் டீர்இத் திரி?

M.Jagadeesan
28-02-2012, 11:41 AM
திரியை விடவில்லை தள்ளியே வைத்தேன்
எரியூட்டி இன்புறுவேன் காண்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
28-02-2012, 03:10 PM
திரியை விடவில்லை தள்ளியே வைத்தேன்
எரியூட்டி இன்புறுவேன் காண்.


காண்பதற்கு இத்திரியோர் கைபிடிக்கும் தீப்பந்தோ
யாண்டும் எரியூட் டிட!?

M.Jagadeesan
29-02-2012, 04:46 AM
இடலும் தொடலும் எதற்கு மனத்தை
அடக்குதலே காதல் சிறப்பு.

Dr.சுந்தரராஜ் தயாளன்
29-02-2012, 08:22 AM
சிறப்புடன் சீர்மிகுநல் சிங்கார வன்னி
பறந்தலை ஆனதே பார்

M.Jagadeesan
01-03-2012, 03:36 PM
பார்வையோ அன்றிக் கணையோ எதுமிகக்
கூர்மை எனநீ உரை.

Dr.சுந்தரராஜ் தயாளன்
02-03-2012, 09:42 AM
உரைப்பதற் கென்னுண்டு? உண்மையில்பார் வைதான்
விரைவாகக் கூர்மை மிகும்
:)

M.Jagadeesan
02-03-2012, 02:59 PM
மிகுந்தவை எல்லாம் நலிந்தோர்க் குதவி
அகமகிழ்தல் சான்றோர் கடன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
02-03-2012, 04:16 PM
கடன்பட்டுக் கல்வி கடனாகக் கற்றால்
கடனே கடனாதல் காண்

M.Jagadeesan
07-03-2012, 10:41 AM
காண்டங்கள் ஏழுகொண்ட கம்பனின் காவியம்போல்
யாண்டுளதோ நூலொன்று செப்பு.

Dr.சுந்தரராஜ் தயாளன்
07-03-2012, 12:01 PM
செப்புதற்கு ஏதுளவோ தேர்ந்திட்ட இவ்வுலகில்
ஒப்புதற் காமோ அது
:)

M.Jagadeesan
10-03-2012, 06:03 AM
அதுஓர் அழகிய காவியம் கம்பன்
செதுக்கிய சிற்பமென்றே சொல்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
10-03-2012, 08:40 AM
சொல்லொடு சொல்சேர்த்துச் சொற்சிலம்பம் ஆடியே
சொல்கிறான் சந்தத்தில் சொல்
:)