PDA

View Full Version : திறப்போம் நம் மனக் கதவுகளை...!

செல்வா
22-12-2009, 07:25 PM
மனங்கள் மயங்கும்
மனிதர்கள் கசங்கும்
சந்தை வீதியில்
சூரியன் சுட்டெரிக்கும்
காலை வேளையில்
கையில் விளக்குடன்
மனிதனைத் தேடினான் ஒருவன்….!

மாடடைக்கும் கொட்டிலில்
மார்கழிக் குளிரிரவில்
'மனிதன் இருக்கிறான்
மனம் மட்டும் மாறட்டும்'
எனப் பிறந்தான் ஒருவன்…!

அடித்தால் அடி உதைத்தால் உதை
வெட்டினால் வெட்டு
என்று வன்முறை வளர்த்த தேசத்தில்

ஒரு கன்னத்திற்கு மறுகன்னத்தையும்
மேலாடை கேட்டால் உள்ளாடையையும்
கொடுத்துவிடச் சொன்ன தனிமனிதன்…!

உன் கண்ணிண் உத்திரத்தை நீக்கிவிட்டு
பிறன் கண்ணின் துரும்பைப் பார் என்றவன்

இதுவரை பாவம் செய்யாதவன்
எறியட்டும் முதல் கல் என்று
எவரையும் தீர்ப்பிடாதவன்.

உனக்கென்ன வேண்டுமென கேட்கிறாயோ
அதையே பிறனுக்கும் கொடுக்கச் சொன்னவன்!

தேவாலயங்களைத் துறந்து விட்டு
தேகாலயங்களைத் திறக்கச் சொன்னவன்…!

மதத்தின் மதத்தை மிதித்து
மனிதத்தை மதித்தவன் …..!

அவன் ஒரு ஏழை

அவன் ஒரு தொழிலாளி

அவன் ஒரு சாதாரணன்…

உன் எதிரிலேயே
தெருவில் அலைந்து திரியும்
வழிப்போக்கன்…!

மாளிகையும் மஞ்சள் விளக்குகளும்
மல்லிகை மெத்தையும் மஞ்சமும்
கொஞ்சமும் தேவையில்லை யவனுக்கு…!

நொறுங்கி விட்ட இதயங்களை
பொறுக்கிச் சேர்க்க….!

பிரிந்து விட்ட மனங்களை
இணைத்துச் சேர்க்க…!

இனமென்றும் மொழியென்றும்
வீடென்றும் நாடெனறும்
மதமென்றும் ...
கருகிய மனங்களைக் கட்டிக் கோர்க்க…!

வருகிறான் மீண்டும்....

வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்குண்டு
கிழிந்து நைந்த
கந்தலாடை மனங்களால்
படுக்கை விரிப்போம்..!

பிறக்க இடமின்றி
ஒவ்வொரு கதவாகத் தட்டிய படியே..
வருகிறான்....

திறந்து வைப்போம் நம் மனக் கதவுகளை…!

மீண்டும் பிறக்கட்டும் மனிதம் -நம்
மனங்களில்…..!

இனியக் கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்….!

அறிஞர்
22-12-2009, 08:23 PM
கிறிஸ்துமஸுக்கு ஏற்ற கவிதை.. அருமை செல்வா

மனித நேயம் ஒவ்வொருவர் வாழ்விலும் பிறக்கட்டும்.
மற்றவரை ஏற்றுக்கொள்ளும் தன்மை இன்னும் வளரட்டும்.

ஜனகன்
22-12-2009, 08:56 PM
காலத்திற்கு ஏற்ற கவிதை, ஒவ்வொரு வார்த்தையும் நியம்.இறைவன் அளித்த சிறந்த பரிசு வாழ்க்கை, அதை ஒற்றுமையுடனும்,சந்தோசமாகவும் வாழ பழகிக்கொள்வோமாக.

செல்வா
23-12-2009, 03:43 AM
கிறிஸ்துமஸுக்கு ஏற்ற கவிதை.. அருமை செல்வா

மனித நேயம் ஒவ்வொருவர் வாழ்விலும் பிறக்கட்டும்.
மற்றவரை ஏற்றுக்கொள்ளும் தன்மை இன்னும் வளரட்டும்.

வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா...

காலத்திற்கு ஏற்ற கவிதை, ஒவ்வொரு வார்த்தையும் நியம்.இறைவன் அளித்த சிறந்த பரிசு வாழ்க்கை, அதை ஒற்றுமையுடனும்,சந்தோசமாகவும் வாழ பழகிக்கொள்வோமாக.

நன்றி ஜனகன்.

அக்னி
23-12-2009, 06:57 AM
வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்குண்டு
கிழிந்து நைந்த
கந்தலாடை மனங்களால்
படுக்கை விரிப்போம்..!

இந்த வரிகள் ஆழமும் அழகுமாய் மிளிர்கின்றன.

கட்டில் கூட இல்லாமற் பிறந்தவரை,
பகட்டில் பிறக்கவைக்கின்றது உலகம்...

அதற்காக,
அலங்காரங்களே தேவையில்லை என்று ஒதுக்கிவிடவும் கூடாது.
இந்த அலங்காரங்கள் எத்தனையோ குடும்பங்களின் உயிர்காக்கும் தொழில் என்பதையும் மனதிற்கொள்ள வேண்டும்.

அளவு மீறாத அலங்காரங்களோடு,
அழகாய்க்கொண்டாடுவோம்,
நத்தார் திருநாளை.

அனைத்து உறவுகளுக்கும்,
“நத்தார், புதுவருட நல்வாழ்த்துகள்”

அர்த்தக் கவிதைக்குப் பாராட்டுக்கள் செல்வாவுக்கு...

பாரதி
29-12-2009, 02:40 PM
மனங்களை வன விலங்குகளாக்கியவர்களிடம் இந்த வார்த்தைகள் எடுபடுமா..? எடுபட வேண்டும் என்பதே நமது விருப்பம்.

விழா சிறப்பே நடந்து முடிந்தது. புத்தாண்டு முடிந்ததும் அடுத்த வருடத்திற்கு தேவை என மரங்கள் கட்டப்படும், விளக்குகளை அணைத்து.

மனமும் மரமாகி விட்டதாலோ என்னவோ, கதவை திறக்க சொல்லி இருக்கிறீர்கள்.

அம்மரத்தின் ஈரம் காயாமல் இருக்கட்டும்.

அவ்வப்போது செல்வாவின் விரல்களில் கவிதைகள் பூக்கட்டும்.

சிவா.ஜி
30-12-2009, 04:47 AM
அடைக்கப்பட்ட மனக்கதவுகள் திறக்கட்டும், அன்று சாதரணனாய் கொட்டிலில் ஜனித்த மனிதம்...ஒவ்வொரு வீட்டிலும் ஜனிக்கட்டும்.

மதத்தின் மதம் மிதித்த......ஆழமான வரிகள் செல்வா. அர்த்தமுள்ள வரிகளுக்கு அண்ணனின் பாராட்டுக்கள்+வாழ்த்துகள்.

கா.ரமேஷ்
30-12-2009, 04:54 AM
நல்ல கிருஸ்துமஸ் கவிதை தோழரே... வாழ்த்துக்கள்..

அமரன்
02-01-2010, 08:22 AM
எத்தனைகாலம்தான் அன்பென்ற மழையிலே..

வந்த புதிதில் நீ எழுதிய கவிதைக்கு சாம்பவியின் பின்னூட்டம்.

அந்த மாதிரியே இந்தக் கவிதையும் புதுப் பரிணாமம் எடுத்து.

அழுக்கான மனங்களில்(உம்) ஆண்டவன் அவதரிக்கிறான்.
வளர்ந்து மனங்களையும் மனிதர்களையும் சுத்திகரிக்கிறான்.

தொட்டில் குழந்தை சொல்லும் இன்னொரு சேதி.

ஆனால்,
அழுக்குகள் கூட தெய்வீகமாக இருக்கட்டும்
என்பதே அதன் அடித்தட்டு இரகசியம்.

வாழ்த்துக்கள் பங்காளி. தொடர்ந்து பங்களி.

செல்வா
05-01-2010, 08:43 AM
இந்த வரிகள் ஆழமும் அழகுமாய் மிளிர்கின்றன.

கட்டில் கூட இல்லாமற் பிறந்தவரை,
பகட்டில் பிறக்கவைக்கின்றது உலகம்...

அதற்காக,
அலங்காரங்களே தேவையில்லை என்று ஒதுக்கிவிடவும் கூடாது.
இந்த அலங்காரங்கள் எத்தனையோ குடும்பங்களின் உயிர்காக்கும் தொழில் என்பதையும் மனதிற்கொள்ள வேண்டும்.

அளவு மீறாத அலங்காரங்களோடு,
அழகாய்க்கொண்டாடுவோம்,
நத்தார் திருநாளை.

அனைத்து உறவுகளுக்கும்,
“நத்தார், புதுவருட நல்வாழ்த்துகள்”

அர்த்தக் கவிதைக்குப் பாராட்டுக்கள் செல்வாவுக்கு...

நன்றி அக்னியாரே...
உமக்கும் எனது வாழ்த்துக்கள்.

மனங்களை வன விலங்குகளாக்கியவர்களிடம் இந்த வார்த்தைகள் எடுபடுமா..? எடுபட வேண்டும் என்பதே நமது விருப்பம்.

விழா சிறப்பே நடந்து முடிந்தது. புத்தாண்டு முடிந்ததும் அடுத்த வருடத்திற்கு தேவை என மரங்கள் கட்டப்படும், விளக்குகளை அணைத்து.

மனமும் மரமாகி விட்டதாலோ என்னவோ, கதவை திறக்க சொல்லி இருக்கிறீர்கள்.

அம்மரத்தின் ஈரம் காயாமல் இருக்கட்டும்.

பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி அண்ணா...

அடைக்கப்பட்ட மனக்கதவுகள் திறக்கட்டும், அன்று சாதரணனாய் கொட்டிலில் ஜனித்த மனிதம்...ஒவ்வொரு வீட்டிலும் ஜனிக்கட்டும்.

மதத்தின் மதம் மிதித்த......ஆழமான வரிகள் செல்வா. அர்த்தமுள்ள வரிகளுக்கு அண்ணனின் பாராட்டுக்கள்+வாழ்த்துகள்.

நன்றி அண்ணா....

நல்ல கிருஸ்துமஸ் கவிதை தோழரே... வாழ்த்துக்கள்..

நன்றி கா.ரமேஷ்

எத்தனைகாலம்தான் அன்பென்ற மழையிலே..

வந்த புதிதில் நீ எழுதிய கவிதைக்கு சாம்பவியின் பின்னூட்டம்.

அந்த மாதிரியே இந்தக் கவிதையும் புதுப் பரிணாமம் எடுத்து.

அழுக்கான மனங்களில்(உம்) ஆண்டவன் அவதரிக்கிறான்.
வளர்ந்து மனங்களையும் மனிதர்களையும் சுத்திகரிக்கிறான்.

தொட்டில் குழந்தை சொல்லும் இன்னொரு சேதி.

ஆனால்,
அழுக்குகள் கூட தெய்வீகமாக இருக்கட்டும்
என்பதே அதன் அடித்தட்டு இரகசியம்.

வாழ்த்துக்கள் பங்காளி. தொடர்ந்து பங்களி.

நானும் அந்தக் கவிதையைத் தேடினேன்...
மன்றத்தின் மின்னணுப் பிழையில்
காணாமல் போனதில் அதுவும் ஒன்றென நினைக்கிறேன்..

வாழ்த்துக்களுக்கு நன்றி...!

இன்பக்கவி
23-01-2010, 03:47 PM
ரொம்ப நல்லா இருக்கு...
நல்லா எழுதி இருகின்றீர்கள்...
கிறிஸ்து பிறப்புக்கு அருமையான கவிதை..

செல்வா
29-01-2010, 03:00 PM
நன்றி கவி.

இளசு
01-02-2010, 07:56 PM
தட்டுங்கள் திறக்கப்படும் என்றவன்
தட்டுமுன்னே -
திறந்தே வைத்திருப்போம்..

அழகான சிந்தனை.. அழகான கவிதை..

விதை நன்று...
மரமும்..!!

வாழ்த்துகள் செல்வா..