PDA

View Full Version : அன்பு மகளுக்கு அம்மாவின் பிறந்தநாள் வாழ்த்துகீதம்
18-12-2009, 10:31 AM
நிலவென்றொரு பெயர்
தமிழுக்கு உண்டாம்;

நிலவின் தன்மையும்,
தமிழின் இனிமையும்,
நிழலாய் நல்லொழுக்கமும்,
நீங்காத நகையுணர்வும்
நிலைகொண்ட உனக்கிட்டேன்,
அப்பெயரினை, அன்பு மகளே!

வெண்ணிலா!

சொல்லவும் உன்பெயர் வெல்லமடி!
உன் உள்ளமோ,
பாசத்தின் வெள்ளமடி!

என்னைத் தாயாக்கிய பெண்ணே,
நீயும் தாயாகிறாய்,
என்னைத் தாலாட்டும் தருணங்களில்!

கணினிப்பாடம் கற்பிக்கிறாய் எனக்கு,
கண்டிப்பான ஆசிரியையாய்!

கணிதம் கற்றுக்கொள்கிறாய் என்னிடம்,
கவனம் சிதறா மாணவியாய்!

தலைவலித்தைலம் தடவும்
தளிர்விரல்களில் காண்கிறேனடி,
உன்னை ஓர் தாதியாய்!

குழம்பிய மனநிலையிலும்,
குமுறி அழும்போதும்,
இதமாய் அணைத்து, கண்ணீர் துடைத்து,
இதுவும் கடந்துபோகுமென்றே
ஆறுதல் சொல்கிறாய்,
அனைத்தும் அறிந்த தோழிபோல்!

பிறர் என்னைப் பரிகசித்தாலும்
பொறுக்கமாட்டாமல்
பாய்ந்தெழுகிறாய், என்
பாதுகாவலனென பதவியேற்று!

சுட்டித் தனம் செய்யும்
குட்டித்தம்பியிடம்
அம்மாவை வருத்தாதேயடா என்று
அவ்வப்போது அறிவுரைக்கும்
ஆசானாகவும் ஆகிறாய்!

பள்ளியிலே சிறப்புற்று
பெற்றவரை முன்னிறுத்தி
பெருமிதத்தில் எனையாழ்த்தி
பெற்ற பலனைப் பெறச்செய்கிறாய்!

'இவளல்லவோ பெண்!' என்று
அத்தனைப் பேரும் உரைக்கக்கண்டு
பெறுகிறேனடி, பெண்ணே,
உன்னால் பேரின்பம்!

இத்தனையும் செய்துமுடித்தபின்
போனால் போகிறதென்று
ஒருநாளுக்கு ஓராயிரம் முறை
அம்மா, அம்மா என்றழைத்து,
என் செல்ல மகளுமாய்
வலம் வருகிறாய்!

எங்கிருந்தோ வந்தான்,
பாரதிக்கோர் கண்ணன்;
என் வயிற்றில் வந்துதித்தாய்,
எனையாள்கிறாய் உன் அன்பால்!

பதினாறாம் ஆண்டில்
பாதம் பதிக்கும் உனக்கு
பதினாறு பேறும்
தவறாமல் சேரும் என்றே
வாழ்த்துகிறேன் கண்ணே!
பாசப்பைங்கிளியே!
பல்லாண்டு நீ வாழி!

குணமதி
18-12-2009, 11:51 AM
அருமை.

ஆண்குழந்தைக்காய் அங்காந்து இருப்போர் அறிய வேண்டிய செய்தி!

ஜனகன்
18-12-2009, 01:01 PM
தாய் மகள்மேல் கொண்ட பாசத்தை உண்மைகதைபோல் மெருகூட்டி கவிதை வடிவில் இஸ்வாரசியாமாய் தந்தமை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்

அமரன்
18-12-2009, 08:27 PM
வரம் தரும் தேவதையே
வரமாய்....... சிலருக்கு!

இருவரும் பாக்கியசாலிகள்.

சகோதரிக்கும் மகளுக்கும் வாழ்த்துகள்.

கீதம்
18-12-2009, 09:57 PM
பின்னூட்டங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி, குணமதி, ஜனகன் மற்றும் அமரன் அவர்களே. நாளை பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் என் அன்புமகளுக்காய் எழுதியது. இக்கவிதையில் கண்டவை எதுவும் மிகையில்லை. அத்தனையும் அளவிட முடியா உண்மைகள். நம்புங்களேன்.

அறிஞர்
18-12-2009, 10:42 PM
அருமையா தாய்-மகள் உறவை... தங்களின் வரிகளில் காண்கிறேன்...

தாயுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம்

samuthraselvam
19-12-2009, 07:43 AM
இன்று பிறந்த நாள் கொண்டாடும் வெண்ணிலவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

கீதம் உங்களின் கவிதை வரிகளில் வெண்ணிலாவின் நற்குணங்கள் தெரிகிறது.... வாழ்த்துக்கள்....

கலையரசி
19-12-2009, 10:38 AM
பின்னூட்டங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி, குணமதி, ஜனகன் மற்றும் அமரன் அவர்களே. நாளை பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் என் அன்புமகளுக்காய் எழுதியது. இக்கவிதையில் கண்டவை எதுவும் மிகையில்லை. அத்தனையும் அளவிட முடியா உண்மைகள். நம்புங்களேன்.

தாயைப் போல் பிள்ளை
நூலைப் போல் சேலை
என்பதை உண்மையாக்கிவிட்டாள் உங்கள் பெண்!

கீதம்
21-12-2009, 03:20 AM
அருமையா தாய்-மகள் உறவை... தங்களின் வரிகளில் காண்கிறேன்...

தாயுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம்

வாழ்த்துக்கு என் சார்பிலும் என் மகளின் சார்பிலும் நன்றி அறிஞர் அவர்களே.

கீதம்
21-12-2009, 03:24 AM
இன்று பிறந்த நாள் கொண்டாடும் வெண்ணிலவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

கீதம் உங்களின் கவிதை வரிகளில் வெண்ணிலாவின் நற்குணங்கள் தெரிகிறது.... வாழ்த்துக்கள்....

தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி சமுத்திரசெல்வம் அவர்களே! இருமுறை வாழ்த்தியுள்ளீர்கள். இரண்டையும் வெண்ணிலாவிடம் சேர்ப்பித்துவிட்டேன்.

கீதம்
21-12-2009, 03:26 AM
தாயைப் போல் பிள்ளை
நூலைப் போல் சேலை
என்பதை உண்மையாக்கிவிட்டாள் உங்கள் பெண்!

ஈன்றபொழுதினும் பெரிதுவக்கிறேன் இன்று. தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி கலையரசி அவர்களே.

இளசு
21-12-2009, 08:46 PM
அன்பு கீதம்,

என்ன எழுதவெனத் தோணாமல் சமைந்தேன்..

அத்தனை உணர்வு வெள்ளம் என்னுள்..

அன்பு மகளுக்கு இதைவிடவும் பிறந்தநாள் பரிசளிக்க இயலாது.

மிகுந்த மகிழ்விலும் கண்கள் பனிக்கும்...

இனிப்பான பனித்தலுடன் வாழ்த்துகிறேன் உங்கள் அன்புமகளையும்
மகளுக்கேற்ற தாயா அல்லது தாய்க்கேற்ற மகளா என எண்ணும் வண்ணம் திகழும் உங்களையும்..

சிவா.ஜி
22-12-2009, 04:15 AM
அன்பு மகளுக்கு மிகச் சிறந்த பரிசு. இதேபோன்ற அன்பு தேவதை ஒருத்தி எங்கள் வீட்டிலும் துள்ளி விளையாடுகிறாள். மகளின் பாசத்துக்கு இணையேயில்லை.

உங்கள் கவிதை வரிகளில் காணும் தாயின் பாசம் நெஞ்சை நெகிழ வைக்கிறது. தங்கள் அன்பு மகளுக்கு என்னுடைய இதயப்பூர்வ வாழ்த்துகள். கவிதையின் தாயான உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் கீதம்.

கீதம்
22-12-2009, 10:20 AM

அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி இளசு மற்றும் சிவா.ஜி அவர்களே. உங்களைப் போன்றோரின் ஆசிகளுடன் என் மகள் வாழ்வில் மேலும் உயர்வாள் என்பது திண்ணம். உங்கள் அன்புக்கு நன்றி.

அக்னி
22-12-2009, 12:29 PM
வெண்ணிலா,
பல்லாண்டு பலதையும் ஆண்டு மகிழ்ந்து சிறந்து உயர்ந்து
வாழ வாழ்த்துகின்றேன்...
கீதமான தாய்,
இதைக் கண்ணாரக் கண்டு வியந்து நிறைந்து பெருமையுடன்
நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்...

முதலில் வந்த பொழுதில்
தாய்க்கு வலி தந்த குழந்தை,
பிறகு வரும் பொழுதுகளிலெல்லாம்,
தாயைப் பூரிக்க வைப்பதுதான்,
தாய் அனுபவித்த வலிக்கான
நிவாரணி...

அழுகை, உதை, மழலை மொழி
ஆனந்தம் தாய்க்கு
‘அம்மா’ என்றழைக்கும்வரை...

முதல் அடி, முதல் அ, முதல் வெற்றி
முதல்..,
நல்நிலை அடையும் வரை
தாயின் ஆனந்தம்
தாயின் கவனிப்பு நிறைந்த ரசிப்பில்...

நல்நிலை அடைந்தபின்
தாய்க்கு ஆனந்தம்,
தாய்க்குத் தாயாகினால் மட்டுமே...

என்பதை மிக அழகாகச் செதுக்கி நிற்கின்றது கவிதை.

இது ஒரு தாயின் வாழ்த்துப் பா மட்டுமல்ல..,
ஒவ்வொரு தாயினதும் மனப் பிரதிபலிப்பு...

இந்தக் கவிதையை வாசிக்கையில்,
ஓர் தாயின் மனம் மகிழ்ந்தால்,
அது பிள்ளைக்கு வரம்...
இந்தக் கவிதையை வாசிக்கையில்,
ஓர் தாயின் மனம் ஏங்கினால்,
அது பிள்ளைக்குச் சாபம்...

மீண்டும்.
தாய்க்கும், சேய்க்கும்
பாராட்டுக்கள் பலப்பல...
வாழ்த்துகள் விண் முட்டும்வரை...

ஐந்து நட்சத்திரங்களும், சிறு இ-பண அன்பளிப்பும் வழங்கி,
மகிழ்வுடன் கௌரவிக்கின்றேன்.

கீதம்
22-12-2009, 09:38 PM
பெருமகிழ்வில் திக்குமுக்காடிப்போகிறேன் அக்னி அவர்களே. வாழ்த்துப்பாவிற்கும், ஐந்து நட்சத்திரம் மற்றும் இ-பண அன்பளிப்புக்கும் அளவிட முடியாத நன்றிகள். இந்தப் பிறந்தநாளை நானோ என் மகளோ என்றுமே மறக்க இயலாது. முகம் அறியா நண்பர்களிடமிருந்து வந்த வாழ்த்துகள் கண்டு நெகிழ்ந்து நன்றி கூறுகிறேன். அன்புடன் கீதம்.

சொ.ஞானசம்பந்தன்
25-12-2009, 02:54 AM
ஆதர்ச மகள் கொடுத்து வைத்த தாயார்
சொ.ஞானசம்பந்தன்

கீதம்
28-12-2009, 05:43 AM
ஆதர்ச மகள் கொடுத்து வைத்த தாயார்
சொ.ஞானசம்பந்தன்

தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி. அன்புடன் கீதம்.

கலைவேந்தன்
10-08-2012, 08:34 AM
நிலா மங்கையின் குறும்புக்கவிதையின் பின்னூட்டத்தின் பிரதிபலனாய் இத்திரிக்குள் நுழைய கிடைத்த வாய்ப்பினை எண்ணி வியக்கிறேன்.

எனக்கும் ஓர் மகளுண்டு. இந்திரா என்று பெயர்கொண்டு. நீங்கள் இங்கே அனுபவித்து உய்த்துணர்ந்த அத்தனைப் பெருமைகளையும் என் துணைவியும் என்மகளில் அனுபவிக்கிறாள். கல்லூரி இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் வாசிக்கும் அந்த சுட்டிப்பெண் யோசிப்பில் மிகக் கெட்டி.

இங்கே வெண்ணிலாவின் தாய்மையைக்கண்டு வியந்தே நிற்கிறேன்.

தாய் மகளாவதும் மகள் தாயாவதும் மிக அரிதான செயல்களென்பேன். எத்துணை பேருக்கு இத்தனை அரிய வாய்ப்பு கிடைக்குமென்றே வியந்து நிற்பேன்.

இங்கே வளர்ந்த மகளின் பாசத்தைக் கண்டேன். அங்கே குட்டிப்பூவின் குறும்புகளை ரசித்தேன். எவ்வண்ணம் பாராட்டுவது என மயங்கி நிற்கிறேன்.

தாய் மகளின் இந்த அரவணைப்பு மிக்க பாசம் என்றும் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறையை யாசிப்பேன்..

வாழிய அம்மகள்..! வாழிய இத்தாய்..!!

கீதம்
13-08-2012, 11:07 AM
தங்களது பின்னூட்டம் கண்டு மிகவும் மகிழ்ச்சி கலைவேந்தன். தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

பெண்பிள்ளைகள் தாயுடன் ஒரு தோழி போல் பழகுவதென்பது பெற்றவளுக்குக் கிடைத்த வரமென்றுதான் சொல்லவேண்டும். அந்த வரத்தைத் தரும் தேவதையைப் பெற்றவர்களுள் தாங்களும் ஒருவர் என்பதை உங்கள் வரிகளில் வழியும் பெருமிதம் மூலம் உணர்கிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

A Thainis
13-08-2012, 03:48 PM
அன்பு மகளுக்கு அம்மாவின் பிறந்த நாள் வாழ்த்து பண், சிறப்பு தாயின் அன்பு அளவிடமுடியாது என்பதற்கு இக்கவிதை ஒரு வாசிப்பு நல்ல கவிதைக்கு நலமான வாழ்த்துகள் கீதம்.

jayanth
15-09-2012, 11:45 AM
நிலவென்றொரு பெயர்
தமிழுக்கு உண்டாம்;.......
...........

அப்பெயரினை, அன்பு மகளே!

வெண்ணிலா!

சொல்லவும் உன்பெயர் வெல்லமடி!
உன் உள்ளமோ,
பாசத்தின் வெள்ளமடி!

பதினாறாம் ஆண்டில்
பாதம் பதிக்கும் உனக்கு
பதினாறு பேறும்
தவறாமல் சேரும் என்றே
வாழ்த்துகிறேன் கண்ணே!
பாசப்பைங்கிளியே!
பல்லாண்டு நீ வாழி!

இப்பதிவு பதித்து ஏறக்குறைய மூன்றாண்டுகள் நிறைவுறுந்தறுவாயில் தனது பத்தொன்பதாவது

பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கக் காத்திருக்கும்

"பெண்நிலவான வெண்நிலவுக்கு"

என்னுடைய இனிய வாழ்த்துக்கள்.

நிலவுக்கு கவிதை பதித்த தங்கை கீதமிற்கு மற்றுமொரு வாழ்த்து...

கீதம்
17-09-2012, 12:13 AM
அன்பு மகளுக்கு அம்மாவின் பிறந்த நாள் வாழ்த்து பண், சிறப்பு தாயின் அன்பு அளவிடமுடியாது என்பதற்கு இக்கவிதை ஒரு வாசிப்பு நல்ல கவிதைக்கு நலமான வாழ்த்துகள் கீதம்.

அன்பான வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி தைனிஸ்.

கீதம்
17-09-2012, 12:14 AM
இப்பதிவு பதித்து ஏறக்குறைய மூன்றாண்டுகள் நிறைவுறுந்தறுவாயில் தனது பத்தொன்பதாவது

பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கக் காத்திருக்கும்

"பெண்நிலவான வெண்நிலவுக்கு"

என்னுடைய இனிய வாழ்த்துக்கள்.

நிலவுக்கு கவிதை பதித்த தங்கை கீதமிற்கு மற்றுமொரு வாழ்த்து...

மருமகளுக்கான வாழ்த்தை அவளிடம் சேர்ப்பித்துவிட்டேன். மிகவும் நன்றி ஜெயந்த் அண்ணா.

Sasi Dharan
20-09-2012, 12:12 PM
பூவே பூச்சூடவா... இந்த நெஞ்சில் பால் வார்க்க வா??
என்ற அழகான இசைஞானியின் பாடல் நினைவுக்கு வருகிறது...
பொதுவாக பெண் குழந்தைகள் அப்பா செல்லமாகவும்
ஆண் குழந்தைகள் அம்மா பிள்ளைகளாக இருக்கும் என்றும் சொல்வார்கள்...
உங்க பெண் உங்களை தாயாக தாங்குவது.... உங்க கவிதை போலவே இன்னொரு அழகுதான்!!!

ஜானகி
20-09-2012, 12:59 PM
வெண்ணிலவில் கீதமாக, கீதமே
நிலாவின் குளிர்ச்சியாக, உயிராக,
இதமாக, பதமாக, குதூகலமாக,
சுகம் பல கண்டு வாழ...வாழ்த்துக்கள் !

கீதம்
25-09-2012, 09:00 AM
பூவே பூச்சூடவா... இந்த நெஞ்சில் பால் வார்க்க வா??
என்ற அழகான இசைஞானியின் பாடல் நினைவுக்கு வருகிறது...
பொதுவாக பெண் குழந்தைகள் அப்பா செல்லமாகவும்
ஆண் குழந்தைகள் அம்மா பிள்ளைகளாக இருக்கும் என்றும் சொல்வார்கள்...
உங்க பெண் உங்களை தாயாக தாங்குவது.... உங்க கவிதை போலவே இன்னொரு அழகுதான்!!!

மிகவும் ரசனையானப் பின்னூட்டத்துக்கும் அழகிய பாடல் பகிர்வுக்கும் நன்றி Sasi Dharan.

கீதம்
25-09-2012, 09:01 AM
வெண்ணிலவில் கீதமாக, கீதமே
நிலாவின் குளிர்ச்சியாக, உயிராக,
இதமாக, பதமாக, குதூகலமாக,
சுகம் பல கண்டு வாழ...வாழ்த்துக்கள் !

உங்கள் இதமான வாழ்த்து கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி ஜானகி அம்மா.